இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 38 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 05-06-2024

Total Views: 13752

அபிலாஷா தன் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது. ப்ரதீப் முதற்கொண்டு தன் தோழமைகளிடம் கூட பேச மறுத்தாள். அறையில் இருந்து வெளி வருவதே அரிதாக இருக்க சுகந்தி வந்து வந்து அன்பை பொழிவது போல இன்னும் நந்தன் மீது கோபத்தை ஏற்றி கொண்டு இருந்தார் முகில் சொன்னதற்க்கிணங்க…

சுகந்தியின் செய்கைகளை பார்த்தே அவரின் நோக்கம் புரிய அவருக்கு கிடைக்கும் சொத்தில் சம பங்கு தனக்கும் வேண்டுமே.. என்று ரூபவதியும் தேடி வந்து உணவு கொடுப்பது ஆறுதல் சொல்வது என்று எப்போதும் அவள் அறைக்கு வந்து சென்றவாறு இருந்தார்.

நந்தன் மீது கோபம் இருந்தாலும் யாரிடமும் அவள் விட்டு கொடுக்க நினைக்கவே இல்லை இதுவரையில்… அதை அறிந்து கொண்ட முகில் ‘தான் தான் ஏதாவது செய்து இருவரையும் முழுதாக பிரிக்க வேண்டும்.’ என்று திட்டமிட்டவன் அதன்படிக்கு அபிலாஷாவிற்கு தெரியாமலேயே அவள் பெயரில் விவாகரத்து பத்திரம் தாயார் செய்த முகில் விவாகரத்திற்கான காரணமாக நந்தனுக்கும் சந்தியாவிற்கும் தகாத உறவு இருப்பதாகவும் அதனால் அபிலாஷா வயிற்றில் வளர்ந்த கருவை நந்தனே திட்டமிட்டு அழித்ததாகவும் அதனால் அபிலாஷாவிற்கு நந்தனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும் குறிப்பிட்டு நந்தனுக்கு அனுப்பி இருந்தான்.

ஏதோ தன்னை தவறாக புரிந்து கொண்டு சிறிய கோபத்தில் வீட்டை விட்டு சென்றிருக்கிறாள். சீக்கிரம் தன் மனைவி தன்னை புரிந்து தன்னோடு வந்து விடுவாள் என்று காத்திருந்த அபிநந்தனுக்கு அவள் அனுப்பியதாக வந்த விவாகரத்து பத்திரம் அதிர்ச்சி என்பதை விட மொத்தமாக இடிந்து போனான் அபிநந்தன்.

“அப்போ என்னை நீ நம்பினது அவ்வளவு தான் இல்லையா லாஷா?” மனதோடு வெம்பியவனின் அனுமதி இன்றி கன்னம் தொட்டது அவனின் விழி நீர்.

பார்வதி அக்சயா அதிர்ந்து “இப்போவே அவங்களை என்னனு கேட்காம விட மாட்டேன். என்ன நினைச்சிட்டு இருக்காங்க அவங்க?” என்று பொறுமிய அக்சயா எட்டுமாத கருவை சுமந்து நின்றவளுக்கு மூச்சு வாங்க

“அச்சு நீ டென்ஷன் ஆகாதே அமைதியா இரு.” என்று பதறிப் போனார் பார்வதி.

“அண்ணிக்கு ஃபோன் பண்ணி கேட்குறேன் அண்ணா.. என்ன ஏதுன்னு நான் அவங்ககிட்ட பேசுறேன்.” என்று அக்சயா ஃபோனே எடுக்க

“தேவையில்லை அச்சு…” என்று என்றான் கரகரப்பை மறைக்க முயன்ற குரலுடன்..

“ஏன்னா?” என்று அலுத்தவள் “சரி நான் அவர்கிட்ட பேசுறேன். அன்னைக்கு உன் பக்கமும் நியாயம் இருக்குனு அம்மா சொன்னப்போ அதை காதுல வாங்காம போனாருல்ல அவரோட ஃப்ரண்ட் பண்ணின காரியத்தை அவர்கிட்டயே கேட்குறேன்.” என்று ப்ரதீப்பிற்கு அழைக்க போக

“அச்சு ஒரு நிமிஷம் இரு. ஏற்கனவே ப்ரதீப் லாஷாக்காகவும் நீ எனக்காகவும் உங்களுக்குள்ளேயே வாதாடி மனஸ்தாபம் வந்து ப்ரதீப் இப்போ அவங்க வீட்ல தான் தங்குறாரு. உன்கிட்ட சரியா பேசுறது கூட இல்ல. இதுல இதை சொல்லி இன்னும் உங்களுக்குள்ள பிரச்சினையை அதிகப் படுத்த வேண்டாம் டா… விடு.” என்று விட்டேத்தியாக அபிநந்தன் பேச 

“அப்போ தப்பு பண்ணாம நீ ஏன் அண்ணா தண்டனை அனுபவிக்கனும்?” என்று கேட்ட தங்கையை பார்த்து வெற்று புன்னகை சிந்தி தன் கண்ணீர் மறைக்க முயன்ற நந்தன் அந்த விவாகரத்து காகிதங்களை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான் அபிநந்தன்.

அடுத்த நாள் காலை அபிநந்தன் வெளி வர “நந்தா எங்கப்பா கிளம்பிட்ட? சாப்பிடலையா நேத்துல இருந்து நீ எதுவும் சாப்பிடாம இருக்க…” பார்வதி அழைக்க

“வேண்டாம் ம்மா பசிக்கல…” என்று ஒற்றை வார்த்தையில் அவன் முடிக்க 

“ஆஃபீஸ் போறீயா நந்தா? அதுவும் இவ்வளவு சீக்கிரம்?” என்றிட

“இல்லம்மா இன்னைக்கு ஆஃபிஸ் போகல…” என்று சொல்ல

“அண்ணா… என்ன ண்ணா முடிவு பண்ணிருக்க? அது வந்து அண்ணி அனுப்பின டைவர்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் கிழிச்சு போட்டிடு ண்ணா… நாம அண்ணிக்கிட்ட பேசலாம்.” அக்சயா சொல்ல

“இல்லடா… நான் சைன் பண்ணிட்டேன்.” உணர்வு துடைத்த முகத்துடன் அபிநந்தன் சொல்ல பார்வதி அக்சயா அதிர்ந்து பார்த்தனர்.

“நந்தா.. ஏன்ப்பா இப்படி ஒரு அவசர முடிவு. அபி தான் ஏதோ புரிஞ்சுக்காம பண்ணினா நீயும்… வேண்டாம் நந்தா..‌” பார்வதி எடுத்துச் சொல்ல

“இல்ல ம்மா… நானும் லாஷாவும் ஒரு வருஷத்துக்கு மேல வாழ்ந்திருக்கோம். இத்தனை நாள்ல அவ என்கிட்டே ஒன்னுகூட அது வேணும் இது வேணும்னு கேட்டதே இல்ல. இப்போ முதல் முறை அவ என்கிட்டே இருந்து இதை கேட்டிருக்கா…” விரக்தி சிரிப்போடு கையில் இருந்த காகிதத்தை காட்டினான் அபிநந்தன். 

“அவ கேட்டதை நல்லபடியா நிறைவேத்தி கொடுக்கனும்.. அது என் கடமை இல்லையா?’ என்றவனை பார்க்க ஒரு பக்கம் பாவமாகவும் மறு பக்கம் கோபமாகவும் இருந்தது அக்சயாவிற்கு. 

“இதோ பாரு அச்சு… இதுவரை நடந்தது எல்லாம் ஓகே. இனிமே எனக்கு சப்போர்ட் பண்ணி ப்ரதீப்கிட்ட சண்டை வளர்க்காத.. நீ பேசாட்டி அவரும் லாஷா பத்தி உன்கிட்ட பேச மாட்டாரு. எங்களை காரணம் சொல்லி நீங்க சண்டை போட்டுக்காதீங்க… எனக்கு அது இன்னமும் வேதனையா இருக்கு.” என்றவன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் நடைமுறைகளை காண வழக்கறிஞரை பார்க்க சென்றான்.

அங்கும் கூட ‘அனைத்து தவறுகளும் தன் மீது தான்… லாஷா இனியாவது என்னிடம் இருந்து விடுதலை பெற்று நலமாக வாழட்டும்.’ என்று சொல்ல வழக்கறிஞரே அவனை எப்படிப்பட்ட பிறவி இவன் என்று ஆச்சரியமாக பார்த்தார்.

அபிநந்தன் மூலமாக விவாகரத்து நோட்டீஸை பெற்ற அபிலாஷா துயரத்தின் எல்லையை அடைந்தாள்.

ஏற்கனவே தன் உயிரில் உருவான கரு கலைந்து உடலளவிலும் மனதளவிலும் காயம் கொண்டவள் தன் கணவன் துரோகம் செய்ததாக தன்னை வருத்திக் கொண்டு யாரையும் தன்னை நெருங்க விடாமல் யாரோடும் தானும் நெருங்காமல் இருக்க இந்நிலையில் தன்னை விவாகரத்து செய்து விட்டு அவனின் தோழியான சந்தியாவை திருமணம் செய்து கொள்ள போகிறான்.

ஆம். முகில் அப்படி சொல்லித்தான் அந்த நோட்டீஸை கொடுத்தான். “அப்போ நான் உங்களுக்கு வேண்டவே வேண்டாமா நந்தன்? நானே உண்மைய புரிஞ்சு வரனும் அதுவரை காத்திருப்பேன்னு சொன்னீங்க? அப்போ இது தான் நீங்க எனக்கு கொடுத்த கால அவகாசமா? பரவாயில்ல நந்தன் நான் உங்க வாழ்க்கையை விட்டு விலகிட்டா நீங்க சந்தோஷமா இருப்பீங்க அப்படித்தானே நந்தன்?” ஒருவருக்கொருவர் ஒன்று போல ஒன்றாக யோசித்தார். ஆனால் தவறாக…

‘தான் இல்லை என்றால் நந்தன் மகிழ்வாக இருப்பான்.’ என்று மீண்டும் மீண்டும் தோன்ற அவன் அனுப்பியதாக நினைத்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டாள் அபிலாஷா.

இதை அபியின் வழக்கறிஞர் கோபாலன் மூலம் கேள்வியுற்ற ப்ரதீப் முதலில் அபிக்கு அழைத்து “என்ன இது? எதையும் பேசி சரி பண்ணிடலாம் அபிஷா… அதை விட்டு இப்படி அவசரமா டைவர்ஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன?” என்று கடிந்து கொள்ள

“எனக்கு தேவையில்லை ப்ரதீப். பட் நந்தனுக்கு இந்த டிவோர்ஸ் தேவை தான்…” என்று மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட அடுத்து அழைத்தது அக்சயாவிற்கு.

அவளும் தெளிவாக எதுவும் சொல்லாமல் “உங்க ஃப்ரண்டும் தானே சைன் பண்ணி கேஸ் கோர்ட்க்கு போயிருக்கு. எங்க அண்ணனை மட்டும் நீங்க எப்படி கேள்வி கேட்கலாம்?” என்று அவளும் கத்த இந்த நேரத்தில் அக்சயாவின் கோபத்தை தூண்டும் படி அவளிடம் எதுவும் பேசாதே என்று பத்மாவதி ஒரு பக்கம் சொல்ல மொத்ததில் ப்ரதீப்புக்கு தான் மண்டை காய்ந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் கோர்ட்டில் இவர்கள் வழக்கு வரவிருக்கும் நிலையில் ஜெனி மற்றும் கீர்த்தனா உடன் அபி வீட்டிற்கு வந்தாள் சந்தியா. அவளுக்கு அபியின் வீடு தெரியாது என்று அவளின் தோழிகள் துணையோடு வந்திருந்தாள்.

சந்தியாவை பார்த்து அபி முகத்தை திருப்பி கொள்ள இது தெரிந்தது தான் என்று ஏளனமாக சிரித்துக் கொண்டாள் சந்தியா.

“நான் கூட உன்னை என்னவோனு நினைச்சேன் அபிலாஷா… ஆனா நீயும் சாதாரண மனுஷப் பிறவி தான் இல்லையா அதான் உனக்கும் சந்தேகம்ன்ற பேய் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சிடுச்சு.” என்று வந்ததுமே காட்டமாக துவங்கினாள் சந்தியா.

“எனக்கு சந்தேக பேய் பிடிச்சிருக்கா… பேசுங்க… உங்க தப்பை மறைக்க என் மேல பழி போட வந்திருக்கீங்க இல்லையா சந்தியா?” அபியும் குறையாத காட்டத்தோடு பேச இடையில் இருந்த ஜெனியும் கீர்த்தனாவும் யாரை அமைதிப் படுத்த என்று புரியாமல் நின்றிருந்தனர்.

“அபிலாஷா.. நானும் அபியும் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது இருந்து ஃப்ரண்ட்ஸ்.. ஆண் பெண் அப்படிங்கற பேதமே எங்களுக்கு அப்போ அந்த வயசுல புரியாது. அப்போ இருந்தே நாங்க நண்பர்கள் தான். அதுக்கப்புறம் அபியோட அப்பா இறந்தப்பறம் அவனோட அம்மா தங்கைனு வாழ்க்கையை சுருக்கிக்கிட்டான். அதுல அவனுக்கு ஃப்ரண்ட்னு என்னைத் தவிர யாருமே கிடையாது. அது எங்க தப்பு இல்லையே… 

நீயே யோசிச்சு பாரு. அத்தையோ இல்லை என்னோட ஃபேமிலி சர்க்கிளோ யாருமே நானும் அபியும் லவ் பண்றோம் னு சொல்லிருந்தா எதிர்த்திருக்க மாட்டாங்க. அதுலயும் என் பேரண்ட்ஸ்… அபிக்கு என்னை மேரேஜ் பண்ணி வைக்க அவங்களுக்கு ஒரு எண்ணம் இருந்தது தான். ஆனா அபி என்ன சொன்னான் தெரியுமா? நானும் அச்சுவும் அவனுக்கு ஒரே மாதிரியாம்… என்னை எப்படி மேரேஜ் பண்ணிக்க முடியும் னு திரும்ப கேட்டான்.” என்று சந்தியா சொல்ல அதிர்ந்து பார்த்தாள் அபிலாஷா.

“அப்பறம் அபிக்கு மேரேஜ் ஆகி நீயும் அவனும் வாழ்ந்திட்டு இருக்கும் போது என் வாழ்க்கையில நடந்த துன்பங்களை பகிர்ந்துக்க அடுத்தடுத்து இன்பங்களை சேர்த்துக்க ஒரு ஆறுதலான உறவு தேவை பட்டு திரும்பவும் ஒரு நண்பனா தான் அபியை தேடி நான் வந்தேன். பார்வதி அத்தை என்னையும் அபியையும் புரிஞ்சுக்கிட்ட மாதிரி தான் நீயும் எங்களை புரிஞ்சுக்கிட்ட… நண்பனை தேடி வந்த இடத்துல எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சிட்டான்னு நான் எவ்வளவு நாள் சந்தோஷப் பட்டிருக்கேன் தெரியுமா? ஆனா நீ நான் உன் வாழ்க்கையை கெடுத்திட்டதா நினைச்சிட்டு இருக்க?” என்று சந்தியா சொல்லி முடிக்க தன் தவறை உணர துவங்க இருந்தாள் அபிலாஷா. அதன் அர்த்தமாக அவள் விழிகள் கலங்கி நீரை பொழிய காத்திருக்க

“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதே அபி என் மனசுல இந்த விஷயம் உறுத்திட்டே இருக்கு.” என்று சற்று நிதானித்த சந்தியா

“உன்னை பார்த்த நொடில இருந்து லவ் பண்ணி உனக்காக தன்னோட லைஃப்ல மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க இருந்த என் அபி… இல்லல்ல… உன் நந்தன்… அவனை உன்னால சந்தேகப்பட முடிஞ்சதே என்னை கல்யாணம் பண்ணி கொடுமை பண்ணின அந்த சைக்கோவுக்கும் உனக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் அபிலாஷா?” என்று சந்தியா கேட்க அவளை செவிட்டில் அறைந்த உணர்வு அபிக்கு.

“நான் இங்க வந்து உன்கிட்ட இப்படி பேசுனேன்னு தெரிஞ்சா என்னை கொன்னு கூட போடுவான் உன் நந்தன். அந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறான். என்னை அவன் திட்டினாலும் அடிச்சாலும் ஏன் கொன்னாலும் பரவாயில்லை. என் நண்பனுக்கு எது நல்லதோ அதை பண்ணாம நான் போகமாட்டேன்.” என்று தன் கைப்பையை திறந்து ஒரு ஃபைலை எடுத்த சந்தியா அதை அபிலாஷா முன் நீட்ட அவள் கேள்வியாக புருவத்தை நெறித்தாள்.

“இது உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட். என்ன பார்க்குற? மாசாமாசம் உன்னை ஏதேதோ காரணம் சொல்லி என்கிட்ட டெஸ்ட்க்கு கூட்டிட்டு வருவானே… உன் நந்தன்.. அந்த ரிப்போர்ட்ஸ் தான்… அவனுக்கே தெரியாம எங்க ஹாஸ்பிடல் சிஸ்டம்ல இருந்து நான் உனக்காக எடுத்திட்டு வந்திருக்கேன். 

உனக்கு நம்பிக்கையான டாக்டர்கிட்ட நீயே இந்த ரிப்போர்ட் எல்லாம் கொடுத்து என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கோ என் அபி எதுக்காக உன் வயித்துல வளர்ந்த அவனோட உயிரை அழிக்க சொன்னான்னு உனக்கு புரியும்.” என்று அவள் கையில் தந்த சந்தியா நிற்காமல் அந்த இடத்தை விட்டு காலி செய்தாள்.


தொடரும்…


Leave a comment


Comments


Related Post