இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -50 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 05-06-2024

Total Views: 17227


“என்ன ச்சீ, அவன் அப்படி தானே பண்றான், எல்லாரும் இருக்கும் போதே கேவலமா நடந்துகிட்டவன் தானே. இங்க கவனிக்க ஆள் இல்லைன்னு என்ன வேணாலும் பண்ணுவான். அப்புறம் நான் எங்கப் போய் மாப்பிள்ளை தேட..?” 

“நீ யோசிக்கற அளவுக்கு போகாது.. நான் பார்த்துக்கறேன் விடு.” என்ற யுகி கீழே இறங்கி சென்றவன், நிலாவை தேடி அவள் கையைப் பிடித்துக் கொண்டான். 

"என்னடா.?" 

“சும்மா தான், இவ்வளவு நேரம் கோவமா இருந்தேன்ல அதான் எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சி.” என்க 

அவன் தலையை கலைத்து விட்டவள்.. “இன்னும் நீ பேபி தாண்டா” என அழகாக சிரித்தாள். 

அவள் சிரிப்பில் தன்னை மறந்து ரசித்து நின்றான். உள்ளம் பதறியது. இந்த சிரிப்பு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று தானே அவன் மனம் அடித்துக் கொள்கிறது. 

வெள்ளை ரோஜாவைப் போல் தூய்மையானவள். மனதளவில் யாருக்குமே கெடுதல் நினைக்காதவள், நந்தன் கையில் இவளைக் கொடுத்தால் குரங்கு கையில் கிடைத்த பூ மாலைப் போல் ஆராதிக்க தெரியாமல் பிய்த்து எறிந்து விடுவான். 

ஆராதிக்க தெரிந்த ஒருவனிடம் தான் நிலாவை சேர்க்க வேண்டும் என்பது தான் வளவன், யுகியின் விருப்பம். அதை நினைக்கும் போது, ​​'உன்னை விட யார் அவளை தாங்கிட முடியும்?' என மனசாட்சி கேள்வி கேக்க.. அவனுள் தடுமாற்றம் எழுந்தது. 

"டேய் யுகி." 

“ஹா” 

“எவ்வளவு நேரம் கூப்புடறது என்னடா ஆச்சி.?” 

“சும்மா” 

“என்னமோடா இப்போலாம் நீ மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி சுத்திட்டு இருக்க, இது சரியில்லை பார்த்துக்கோ.” 

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ மட்டும் அவன் பக்கம் சாயாம இரு. அவனுக்கு பயந்து அவன் சொல்றதுக்குல்லாம் தலையை ஆட்டமா இருந்தா போதும்.” 

யாரை சொல்கிறான் என புரியவும் அமைதியாக நின்றாள். 

நிச்சியம் நல்லபடியாக தான் நடந்துக் கொண்டிருந்தது. ஆக ஆக மார்த்தாண்டத்தின் உடலில் நடுக்கம் ஏற்படத் தொடங்கியது. 

'இன்னும் கொஞ்ச நேரத்துல நந்து என்னய பார்ப்பானே, என்ன பதில் சொல்றது. தெரிஞ்சே அந்த புள்ளய பாழுங் கிணத்துல தள்ளுறதா..?' என்று உள்ளுக்குள் குமைந்துக் கொண்டே வெளியே நந்தனையும் நிலாவையும் மாறிப் பார்த்தார். 

மார்த்தாண்டம் காதலுக்கு எதிரி இல்லை, ஷாலினியின் காதலை பெற்றவர்கள், பிள்ளை என மற்றவர்கள் எதிர்க்கும் போது மகளின் காதலுக்கு கொடி பிடித்தவர். 

இன்று மகனின் காதலைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார். அவனின் கோபம், தான் தான் உயர்ந்தவன் என்ற அகந்தை, யாரையும் மதிக்காத குணம் இவை அனைத்தையும் கண்டு தான் அஞ்சுகிறார். பூந்தளிரைப் போன்று மென்மையாக இருப்பவளைப் பிடித்து நாயின் கையில் கொடுத்தால் அது குதறி தள்ளிவிடும், அந்த பயம் தான் அவருக்கு அவர் பெண்ணைப் பெற்றவர் தானே. 

நந்தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்க.. மார்த்தி உள்ளுக்குள் பதறிப் போனார். கடைசியாக ஒரு பெண் நலுங்கு வைத்துக் கொண்டிருக்க, “போகாதே வேண்டா, நிலாவும் உன்னோட புள்ளை மாதிரி தானே.” என உள்ளம் பதறினாலும், அவரை மீறி கால்கள் தானாக அனைவருக்கும் முன் சென்று நின்றது. 

நந்தன் அவனுடன் வந்த போலீஸ்காரர்கள் அனைவரையும் சாப்பிட வைத்து அனுப்பி விட்டார். அவனுடைய கல்யாணம் விஷயம் டிபார்ட்மென்ட்டில் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“அப்பா என்ன பண்றீங்க? நகருங்க நான் அவங்களை போட்டோ எடுக்கணும்.” என யுகி கத்தியும் கூட மார்த்தாண்டம் கேக்கவில்லை. 

ஏதோ சொல்லிக் கொடுத்த கிளிப் பிள்ளைப் போல பேச ஆரம்பித்தார். 

“எல்லோருக்கும் வணக்கம், என்னோட மகள் ஷாலினி நிச்சியம் நல்லபடியா முடிஞ்சிடுச்சி. இந்த நல்ல நேரத்துல உங்களோட இன்னொரு நல்ல விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோசம். அது என்னனா என்னோட முதல் மகன் ஆசிஸ்டன்ட் கமிஷனருமான நந்தனுக்கு நேரடியாக கல்யாணம் முடிவாகிடுச்சி. பொண்ணு வேற யாரும் இல்ல நம்ப ஷாலினி மாப்பிள்ளையோட தங்கச்சி நிலவியா தான். கூடிய சீக்கிரம் கல்யாணப் பத்திரிகை உங்களை தேடி வரும்.” என்றதும். யாருக்கு பைத்தியம் பிடித்ததோ இல்லையோ வளவனுக்கும் யுகிக்கும் பிடித்து விட்டது. 

“யாரைக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க நீங்க என்ன சொன்னாலும் கேக்கற வளவனும், நிலாவும் எப்போவோ செத்துப் போய்ட்டாங்க. எங்களுக்குன்னு எந்த ஆசப் பாசமும் இருக்கக் கூடாதா? எங்களுக்குன்னு தனி விருப்பு வெறுப்பு இருக்காதா? யாரை கேட்டு என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தீங்க? அவளை இப்படியே வெச்சி வீட்டோட இருந்தாலும் இவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்." என வளவன் கதை குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் படபடப்பு வந்து விட்டது. 

"உன் விருப்பத்தை யாருடா கேட்டா?" என நந்தன் கை சட்டையை மடக்கி விட்டுக்கொண்டே முன்னால் சண்டைக்கு வர, அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுக்கப் பார்த்தனர், 

“அம்மா அம்மு ரெண்டு பேரும் வாங்க போலாம், இவன் அடங்க மாட்டான்.” 


“மாப்பிள்ளை கொஞ்சம் பொறுமையா இருய்யா.” 

“இதுக்கு மேல என்ன பொறுமையா இருக்கறது? 

“அவன் இவன்னு சொன்ன பல்லைத் தட்டிக் கையில கொடுத்துடுவேன்.” என மீண்டும் நந்தன் எகிற.. பயத்தில் நிலா வளவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் 

“இருங்கப்பா பெரியவீங்க எதுக்கு இருக்கோம்.” என ஒரு குரல் வர. 

"யார் பேசினாலும் இதுதான் என் முடிவு." என்ற நந்தனும், 

“அம்முவை இவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன், இவனுக்கு ஊர் உலகத்துல பொண்ணே சிக்கலையா என் தங்கச்சி தான் கிடைச்சாளா?” என வளவனும் மீண்டும் கத்திக் கொண்டனர் 

“நீ முடிவு பண்ணிட்டாப் போதுமா?” என யுகி கேக்க 

“அவ என்னைய வேண்டாம்னு வேற சொல்லுவாளா? என நிலாவின் முன் சென்று நின்றவன், தலை குனிந்து அழுதுக் கொண்டிருந்தவளின் தாடையை ஒருவிரலால் மேலே தூக்கிக் கேக்க.. 

அவளை தன் மறுகைக்கு மாற்றிக் கொண்டான் வளவன். 

“சொல்லுடி உன்னைய தான் கேக்கறேன்.” என நந்தன் ஒவ்வொரு முறையும் கேக்கும் போதும், முன்பு கேட்டதை விட வார்த்தைக்கு அழுத்தம் கூடிக் கொண்டேப் போனது. 

நந்தன் கேட்டு இதுவரைக்கும் இல்லை என்று அவள் சொன்னதே இல்லை. அதை பயன்படுத்தி தான் இப்போது மிரட்டிக் கொண்டிருந்தான். 

இன்று அண்ணனும் யுகியும் முக்கியமா? நந்தன் முக்கியமா? என்ற நிலை வரும் போது யார் பக்கம் நிற்க வேண்டும் என தெரியாமல் தடுமாறினாள். அவளைப் பொறுத்த வரைக்கும் மூன்று பேரும் வேணும். ஆனால் நந்தனைக் காட்டிலும் யுகி, வளவன் ஒரு படி மேல் தான் எப்போதும்.

“அவ எதும் பேசாம இருக்கும் போதே தெரியல.. உன்னை கண்டாலே அவளுக்கு பிடிக்கல, பயத்துல எங்க பின்னாடி வந்து ஒளிஞ்சிக்கிறா, இதுல கல்யாணம் ஒரு கேடு.”

“ஏய் வார்த்தையை அளந்து பேசு. இல்ல போலீஸ் அடியை காட்ட வேண்டியிருக்கும்.” என்றவன் பேச்சு வளவனிடம் இருந்தாலும் பார்வை நிலாவை பிரித்து கூறுப் போட்டுக் கொண்டிருந்தது.

“போலீசா இருக்கறேன்னு திமிரா இருந்தா போதாது. பிடிக்காதப் பொண்ணை வற்புறுத்தக் கூடாதுன்னு பேசிக் மேனர்ஸ் வேணும். இதெல்லாம் நான் சொல்லித் தர வேண்டியிருக்கு.” என வளவனும் நந்தனும் ஒருவருக்கு ஒருவர் வாய் சண்டைப் போட்டுக் கொண்டனர்.

மொத்த மண்டபமே யாரை தடுக்க? யாரைப் பிடிக்க? என ஒரு கூட்டம் நிற்க. இவர்கள் சண்டையில் தங்களுக்கு சோறு கிடைக்குமா? கிடைக்காதா? என ஒருக் கூட்டம் நின்றது.


“இது சாதாரணப் பிரச்சனை தான் நாங்களே பேசித் தீர்த்துக்கறோம் நீங்க எல்லோரும் சாப்பிடப் போங்க.. யுகி எல்லோரையும் சாப்பிடக் கூட்டிட்டுப் போ.” என மணிமேகலை முன் வந்து சொல்ல யுகி நகர மாட்டேன் என்று விட்டான்.

“போடா.”

“இங்க இருந்து என்னைய தொறத்தப் பார்க்காதம்மா. பூனையை விட்டு இன்ச் கூட நகர மாட்டேன்."

“உன்னையிலா” என்று பல்லைக் கடித்துக் கொண்டே, “வந்து பேசிக்கறேன்.” என்றவர், “வாங்க போலாம்” என அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்று விட்டார்.

அதில் முக்கால்வாசிப் பேர் சென்றுவிட, கால்வாசிப் பேர் நடக்கும் சண்டையை வேடிக்கைப் பார்க்க நின்றுக் கொண்டனர்.

இப்போதும் கூட நந்தனின் கூர்விழிகள் நிலாவை வெட்டி கூறுப் போட்டுக் கொண்டிருந்ததை நிலாவும் உணரத் தான் செய்தாள்.

‘அண்ணனை எதிர்த்து கைப் பிடிக்கும் அளவிற்கு நந்தன் ஒன்றும் அவளை உருகி உருகி காதலிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே குடும்பத்திற்காக கஷ்டப்பட்ட வளவனை கஷ்டப்படுத்தி விட்டு எந்த நம்பிக்கையில் நந்தனை கைப் பிடிப்பாள். அதுவும் இல்லாமல் அவனைக் கண்டாலே பயத்தை தவிர வேறு உணர்வுகள் அவ்வளவு எளிதாக வர மாட்டேன் என்கிறது. இவ்வாறு இருக்கும் போது அவனுடன் செல்ல சுத்தமாக விருப்பமில்லாததால் குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லை


Leave a comment


Comments 1

  • P Priyarajan
  • 4 weeks ago

    Intha nandhuva vaichi seiyanum 👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍😍😍😍😘


    Related Post