இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 06-06-2024

Total Views: 10858

அத்தியாயம் 20

பளாரென்று விழுந்த அறையில் அஞ்சனாவிற்கு தலையே சுழன்றது. மீண்டும் மீண்டும் இடைவெளியே இல்லாது அறை விழுந்த வண்ணம் இருக்க திரு தான் "அத்தை! என்ன பண்ணுறீங்க?" என்று சிவகாமியைப் பிடித்து இழுத்து கேள்வி கேட்டான்.

"விடுடா திரு. இன்னைக்கு இவள என்கையாலயே கொண்ணு போட்டாத்தான் என்னோட ஆத்திரம் அடங்கும். என்னடா பேசுறா இவ. எமன்ங்கிறா.. இந்திரன்னு சொல்லுறா. பையித்தியம் பிடிச்சுடுச்சா இவளுக்கு. இதுலாம் எப்படி நடைமுறைக்கு ஒத்துவரும்னு எனக்குப் புரியல. ஏதோ கனவுன்னு தான் நடந்ததுன்னு நான் இன்னமும் நினைச்சுட்டு இருக்கேன். நிஜமாவே வந்தவன் இந்திரனா? இப்போ வரைக்கும் அந்த கேள்வியே எனக்குள்ள ஓடிட்டு இருக்கு. இதுல இவ எமனை காதலிக்கிறேன்னு சொல்லுறா. அந்த காதல் இவளோட வாழ்க்கையை அழிச்சுடுமே. அது ஏன் இவளுக்கு புரியல. அவங்க அப்பாவோட ஆசையை கருக்கிட்டாளே. இவ எப்படி நல்லா இருப்பா. நல்லாவே இருக்க மாட்டா. ஐயோ உன் மாமாவோட ஆத்மா இதைப் பார்த்துட்டு இருக்குமே டா. அவர் தாங்க மாட்டாரே. அடியே! என் புருசனோட கடைசி ஆசையை கூட நிறைவேத்தி வைக்க முடியாத பாவியா என்னை நிக்க வச்சுட்டல. இந்த பாவம் உன்னை சும்மாவே விடாது. இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்ப" சிவகாமியின் ஆவேசப் பேச்சினை, "பொறுமையாய் இருங்க அத்தை" என்ற திருவின் பேச்சு இன்னும் உசுப்பேற்றியது.

 "என்ன பொறுமையாய் இருக்கணுமா? உன்னால எப்படிடா பேச முடியுது. உன் மனசைத் தொட்டுச் சொல்லு இப்போ நீ சந்தோஷமா இருக்கயா?"

 "என்னைப் பத்தின பேச்சு இப்போ எதுக்கு அத்தை"

"எதுக்கா? இவ உன்னை ஏமாத்திருக்கா டா. நீ மனசு உடைஞ்சு போயிருப்பயே டா. என்னால அதைத் தாங்கிக்க முடியல. அதுக்கு காரணம் இவதான. இவ எதுக்கு பூமிக்குப் பாரமா உயிரோட இருக்கணும். என் கையாலே உன் மாமா போன இடத்துக்கு போய் சேர்ந்துடட்டும்" மீண்டும் அடிக்க வர, "அத்தை வேண்டாம்‌. நாம இருக்குறது கோவில்ல இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம்" என்றான் திரு.

"இவ்வளவு நடந்த பின்னாடியும் உன்னால எப்படிடா இவ்வளவு அமைதியாய் இருக்க முடியுது"

"பிணத்துக்கிட்ட வேறென்ன அத்தை எதிர்பார்க்க முடியும். விடுங்க அவ்வளவுதான்" அவனது மனநிலை என்னவென்று அவன் சொல்லிவிட்டான். காதலித்தது அவன் தவறில்லை. அந்தகன் உள்ளே நுழையாமல் இருந்திருந்தால் திருவின் காதல் கல்யாணத்தில் முடிந்திருக்கும். அழகான வாழ்க்கையை அவர்கள் இருவரும் நிச்சயம் வாழ்ந்திருப்பார்கள். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்னும் போது அவன் நொறுங்கிவிட்டான். அதை கோபமாய் வெளிப்படுத்தக் கூட அவனுக்குத் திராணி இல்லை. அவ்விடம் விட்டு போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அத்தை அஞ்சனாவை அடித்து வைக்க மனம் அவனுக்குத் தாங்கவில்லை. அதனாலேயே தடுத்தான். அவ்வளவு உணர்வுகளையும் ஆழப் புதைத்துவிட்டு நிமிர்ந்தவனின் பார்வையில் குற்றச்சாட்டு இருந்தது. அது அஞ்சனாவினை சுட்டது.

அந்தகன் அவனாவே திரும்பி வரணும்னு நினைச்சு திருவோட மனசை காயப்படுத்திட்டேன் என்று நினைத்தவள் "என்னை மன்னிச்சுடுங்க மச்சான்" என்று காலில் விழப் போக, அவள் விழாமல் தடுத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டான் அந்தகன்.

 "அந்தகா" அவள் மனதார அழைக்க "யார் காலிலும் நீ விழ வேண்டாம் அஞ்சனா. எனக்கதில் விருப்பம் இல்லை" அவனது குரலில் பிடிவாதம் நிரம்பியிருந்தது.

 "திரு மனசை கூறு போட்டுட்டேன் அந்தகா. அந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேக்குறது தான் சரி"

"யாரும் யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்க வேண்டாம் அஞ்சனா. உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாமல் நான் ஆசையை வளர்த்துக் கிட்டது என்னோட தப்புதான். இதுக்கான தண்டனையை நான் அனுபவிச்சுக்கிறேன். நீங்க சந்தோஷமா இருங்க. அது போதும். சாரதி வாடா. அன்னைக்கே அவங்க சொன்னதை நாம நம்பியிருக்கணும் நம்பாதது நம்ம தப்புதான். வா போகலாம். இதுக்கு மேல இங்க இருக்க முடியும்னு எனக்குத் தோணலை. என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போ" என திரு  சொல்லவும் சாரதி அஞ்சனாவைப் பார்த்து, "கல்யாணத்துக்கு சரின்னு சொல்லாமல் இருந்துருக்கலாம்ல" என வலியோடு சொல்லிவிட்டு அவனை கூட்டி அங்கிருந்து அகன்றான் சாரதி.

சிவகாமி இருவரையும் பார்த்தாள். அந்தகனின் அந்த தோற்றத்தில் அவளுக்குப் பயமில்லை. ஆனால் அவன் எமன் என்பது மனதை நிரடியது. 

"திரு தான் உனக்கு மாப்பிள்ளைன்னு உன் அப்பா முடிவு பண்ணியிருந்தாரு. அவர் ஆசையை நீ இப்போ நினைச்சாலும் நிறைவேத்தி வச்சு அவருக்கு ஆத்ம சாந்தி தரலாம். முடிவா என்ன சொல்லுற?" பல்லைக் கடித்து சிவகாமி வினவ, முடியாதுன்னு தான் சொல்ல முடியும் அம்மா. மனசுக்குள்ள அந்தகன் மட்டும் இருக்குறப்போ என்னால எப்படி திரு கூட வாழ முடியும்‌. அதனால தான் தான் திருகிட்ட, அத்தைகிட்ட உண்மையை சொன்னேன். அத்தை நம்புனாங்க. திரு கடைசி வரைக்கும் நம்பவே இல்லை. அதுதான் நான் பேசாமல் இருந்துட்டேன். அது தப்புதான். நான் இன்னைக்கு இங்க வந்துருக்க கூடாது தான். ஆனால் திரு, சாரதியோட உயிரைக் காப்பாத்தணும்னே இங்க வந்தேன். ஐயாவோட ஆசையை நிறைவேத்த முடியலைன்னு எனக்கும் வருத்தம் தான். என் ஐயா என் மனசை புரிஞ்சுக்குவாங்க அம்மா. நீங்களும் புரிஞ்சுக்கோங்க" அவள் தெளிவாக சொன்னாள்.

உடனே லட்சுமியிடம் திரும்பி "வா லட்சுமி போகலாம். இனி யாரும் எக்கேடு கெட்டுப் போனாலும் எனக்குக் கவலை இல்லை" என்று சொல்ல லட்சுமி "மதினி என்ன பேச்சு பேசுறீங்க. அவளுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கா?" என்றாள் அவள்.

 "அதான் கையைப்பிடிச்சுட்டு ஒருத்தவங்க நிக்குறாங்களே இனி அவங்களே இவளைப் பார்த்துக்கட்டும்" என்று லட்சுமியை இழுத்துக் கொண்டுச் சென்றிட அஞ்சனா அவர்கள் போகும் வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். இவ்வளவு நடந்தும் அவள் அன்னையினை தடுக்கவே இல்லை. எதுவும் பேசவும் இல்லை. அவள் புதியவளாக அந்தகனுக்கு தெரிந்தாள்.

அந்தகனின் கையை உதறிவிட்டு அவள் மிருகண்டேஸ்வரின் சன்னதியில் சென்று அமர்ந்தாள். மனம் தந்தையை நினைத்து ஊமையாய் அழுதது. திருவினை நினைத்தும் தான்‌. அதைப் புரிந்துக் கொண்டு அந்தகன் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

தன்னை சமாதானம் செய்யாமல் அவன் அமர்ந்திருப்பதில் இப்போது அவளுக்குள் சினம் துளிர்த்தது. இனி அவளுக்கென்று இருக்கும் ஓர் உறவு அவன். அவனை விட்டுச் செல்ல முடியாத அளவிற்கு அவர்களுக்கு இடையே உணர்வுப் பிணைப்பு இருந்தது. அதற்கு மரியாதை தர வேண்டும் என்று இருந்தால் இவன் எனக்கென்ன வென்று இருக்கிறான் என்பதால் அவனை முறைத்துப் பார்த்தாள். அவளது கோபம் அவனுக்குப் புரிந்தது. எனினும் அவன் எழவே இல்லை. 

செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்படியா அவன் அமர்ந்திருப்பான் என்று நினைத்தவள் மிருகண்டேஸ்வரரைப் பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு அந்த கோவிலின் ஸ்தல வரலாறு நினைவுக்கு வந்தது. 

இது இயமனை ஈசன்... அதற்கு மேல் அவளால் சிந்திக்க முடியவில்லை. பட்டென்று எழுந்து அவள் நடக்க, இவன் வேகமாய் எழுந்து அவள் பின்னே நடந்தான்.

 "அஞ்சனா சற்று நில்"

நீயென்ன சொல்லுவது நானென்ன கேட்பது என்பது போல் நடந்தவள் வேகமாய் அங்கிருந்து வெளியேறப் போக, அவளது கரம்பற்றி நிறுத்தினான் அவன்.

கரத்தினை உருவ முற்பட்ட அவள் "நான் இந்த கோவிலை விட்டு போகணும். விடு அந்தகா" என்றாள் முயன்று.

 "இத்திருத்தலத்தில் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது அஞ்சனா. என்னோடு வா"

 "இங்க உன்னை உன்னை.." தடுமாறினாள் அப்பேதை.

 "ஈசன் என் உயிரை எடுத்ததை எண்ணி பார்த்தாயா? கவலை வேண்டாம். அதுதான் மீண்டும் ஈசன் எனக்கு உயிர் ஈந்து விட்டாரே. வா"

 "நான் வரலை. இவ்வளவு நேரமும் எங்க அம்மா அப்படி திட்டுனாங்க. நீ அப்போலாம் பேசுனயா. அது மட்டுமா திரு மச்சான் பாவம். அவங்ககிட்ட மன்னிப்பு கூட கேட்க விட மாட்டேன்னு சொல்லிட்டயே"

 "உன் அழகு மச்சான் காலில் நீ விழுவதை என்னால் பார்க்க இயலாது அஞ்சனா. பிறகு உன் அன்னை.. அவர் மனம் என்ன பாடுபடும் என்பதை அறிந்ததால் மட்டுமே அமைதி காத்தேன்"

 "இதுல மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை. எத்தனை நாள் உன்னைத் தேடிட்டு இருந்தேன் அப்போ எல்லாம் எங்க போன?"

 "எங்கும் போகவில்லை அஞ்சனா. உன்னருகிலேயே தான் நானிருந்தேன்"

 "பொய் சொல்லாத எனக்குப் பயங்கரமா கோபம் வருது. நீ ஏன் எமன்னு என்கிட்ட சொல்லலை. நான் வெறுத்துடுவேன்னு உனக்குப் பயம் இருந்ததா?"

"அச்சம் உனக்கு இருந்தது இயமன் பேரில். அதனால் வந்த தடுமாற்றம் அவ்வளவுதான். எனினும் நான் உன்மீது அளவிலா நம்பிக்கை வைத்தேன்"

"அதனால தான இந்திரனுக்கு அனுமதி குடுத்த"

"இந்திரனென்ன எவன் வந்தாலும் அந்தகனுக்கான இடத்தினை பறிக்க இயலாது என்பதை நான் அறிவேன். அதுவும் இந்த தற்காலிக பிரிவிற்கான காரணம் பின்னாளில் நீ அறிந்து கொள்வாய். இப்போது வா. நாம் சன்னதியினை நோக்கிச் செல்லலாம்"

"எதுக்கு?"

"அடியே வாடி. சும்மா கேள்வியா கேட்டுட்டு இருக்க. நான் சொன்னா வரமாட்டியா டி" இப்படிப் பேசியதும்

அவள் அவனை வித்தியாசமாய் பார்த்து வைக்க "உன் வட்டார வழக்கில் யாம் பேசிப் பார்த்தோம். நன்றாகத்தான் இருக்கிறது. அதுவும் இந்ந அடியே வாடி போடி இதெல்லாப் அதீத உரிமையை நல்குகிறது" என்றான் மையலுடன்.

"பின்ன என்ன அப்படியே கூப்பிடு" என அவனோடு நகர்ந்து அவள் வந்து நின்றாள். 

இப்போது அவன் இயமனாய் ஈசன் முன் நிற்கவில்லை. சாதாரண மானுடனாய் நின்றான். அவனது மனதின் ஆசையினை நிறைவேற்றும் பொருட்டு தனது சக்திகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு நின்றான். அவன் காதல் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்ற பேராசையோடு கைகூப்பி கடவுளின் முன் நின்றான்.

"இறைவா! இவளும் நானும் இணையப் போகும் இப்பந்தம் காலம் முழுமைக்கும் வேண்டும். உன் அருள் எம்மிருவருக்கும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பந்தத்திற்குள் நாங்கள் நுழைகிறோம். எம்மிருவருக்கும் காவல் நீதான். இதற்கு என்னென்ன இடைஞ்சல்கள் வருமென்று நானறிவேன். இருந்தும் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். அவளின்றி நானில்லை. அதை தாங்களும் மறக்க வேண்டாம் இறைவா!" என சொன்னவன் தன்னிடம் இருந்த அந்த தங்க நகையினை வெளியே எடுக்க

அவளது கண்கள் மின்னியது. 

"இந்த சர்வேசன் சாட்சியாக இதை உனக்கு அணிவிக்கின்றேன் அஞ்சனா. இனி நம்மை எவராலும் பிரிக்க இயலாது" எனச் சொன்ன இயமன் அதை மாதொரு பாகன் முன்னிலையிலே அவளுக்கு அணிவித்து அவன் போலவே அவளை தன் சரிபாதியாக்கிக் கொண்டான்.


 காதலாசை யாரை விட்டது..!


Leave a comment


Comments


Related Post