இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 25) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 06-06-2024

Total Views: 14796

உனக்கென்றே உயிர் கொண்டேன் 25

தெய்வானை அப்படியென்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும்.

தமிழ் கால் மேல் காலிட்டு இருக்கையின் கையில் தன் கை குற்றி தாடையை நீவியவாறு தெய்வானையையே பார்த்திருந்தான்.

'இவென்ன இப்படி பார்த்திட்டு இருக்கான்' என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், இன்று கடைகளில் வெண்பா, தமிழுக்கு இடையேயான நெருக்கம் கண் முன்னே வந்துபோக, 'கேட்டிட வேண்டியது தான்' என்ற முடிவில் நேரடியாகவே விஷயத்தை கேட்டிருந்தார்.

"வர்ஷிக்கு உன் பையன் தமிழை கட்டிக்கொடுண்ணா?"

தெய்வானை கேட்டிட, தமிழின் காதல் தெரிந்த அனைவரும் அவனது முகம் பார்க்க, வர்ஷினி வெளிப்படையாகவே  தன்னுடைய உள்ளங்கையை உச்சியில் வைத்து வாய் பிளந்தாள்.

"என்னண்ணா எதுவும் சொல்லமாட்டேங்கிற?"

தேவராஜ் தமிழை ஏறிட...

"உங்க தங்கச்சி உங்ககிட்ட கேட்கிறாங்க... நீங்க தான் பதில் சொல்லணுப்பா" என்றான் தமிழ்.

அவனது பதிலுக்கு பின்னால் பெரும் புயல் ஒளிந்துள்ளது என்பதை அவனை பெற்றவர்களுக்கும், அவனுடன் பிறந்தவளுக்கும் நன்கு புரிந்தது.

இப்போது இப்பேச்சி வேண்டாமென நினைத்த தேவராஜ், மனைவியை பார்த்துக்கொண்டே...

"பூர்வி கல்யாணம் முடியட்டும். பிறகு பேசிக்கொள்ளலாம்" என்றார்.

"இப்போ முடியுமா? முடியாதா? சொல்லு" என்று தெய்வானை தன் பிடியில் நின்றார்.

குடும்பத்திற்குள் இதனால் ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என நினைத்த மணி,

"வர்ஷினிக்கு இப்போ என்ன வயசாச்சுன்னு அவளுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிற?" என பல வருடங்களுக்கு பின்னர் மனைவியின் முகம் பார்த்து நேரடியாகக் கேட்டார்.

"எல்லாம் கல்யாணம் பண்ணுற வயசு தான்" என்று முகத்தை வெட்டியதோடு "நான் உன்கிட்ட கேட்கிறேன். பதில் சொல்லுண்ணா?" என்றார் தெய்வானை.

"பெத்த அப்பனா என் பொண்ணு கல்யாணத்தை பற்றி பேசுவதற்கு முன் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா?" எல்லாம் இவள் இஷ்டமா என்று மணிக்கு கோபமாக வந்தது.

"ம்க்கும்... பொல்லாத அப்பா" என்று உதட்டினை சுளித்த தெய்வானை,

"பதில் சொல்லுண்ணா" என்று தேவராஜிடம் கேட்டதோடு, "என்ன தனம் உனக்கு சம்மதம் தானே?" என்று தனத்திடம் வினவினார்.

அவர் சட்டென்று தன்னை கேட்பாறென்று எதிர்பார்க்காத தனம் தடுமாறித் தயங்கி...

"இதில் என்னோட விருப்பமுன்னு எதுவுமில்லைங்க அண்ணி. எல்லாம் தமிழோடு விருப்பம். அவன் முடிவு" என்றிருந்தார்.

"சூப்பர் ம்மா" என்று பூர்வி சொல்லிட, தமிழின் விசில் சத்தம் வீட்டை நிறைத்தது.

"இன்னைக்குத்தான் தமிழுக்கு அம்மாவா பேசியிருக்கீங்க" என்று தனத்திடம் சொல்லிய தமிழ்,

"நீங்க எவ்வளவு நேரம் எப்படி கேட்டாலும் உங்க அண்ணன் உங்களுக்கு ஏற்ற பதிலை சொல்லப்போவதில்லை" என்றான்.

"என்னண்ணா அவனை பேசவிட்டு வேடிக்கை பார்க்குற? எனக்கு நீ சரி சொல்லித்தான் ஆகணும். வர்ஷினிக்கு உன் மகனை கட்டிக்கொடுத்தே ஆகணும். நீ சொல்லி உன் மகன் கேட்கமாட்டானா? உன் பேச்சை அவன் மீறிடுவனா?" என நயமாக வார்த்தையால் கிடுக்கிப்பிடி போட்டார்.

"என் பேச்சை தமிழ் கேட்பான், கேட்கமாட்டாங்கிறது அடுத்து. முதலில் நான் ஏன் அவன் விருப்பத்துக்கு மாறா நடந்துக்கணும்?" என தெளிவாகக் கேட்டார் தேவராஜ்.

தெய்வானைக்கு அவர்களின் மறைமுக மறுப்பு ஆத்திரத்தை உண்டாக்கியது.

எப்படியும் அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டுமென்று என்ன பேசிகிறோமென அறிந்து முறையற்று பேசினார்.

"வயசுப்பையன் வளர்ந்த வீட்டில் உடன் வளர்ந்த எம் பொண்ணை வெளியிலிருந்து வந்து எவன் கட்டிப்பான்?"

"தெய்வானை?"

மேலோட்டமாக சொல்லிய தெய்வானையின் பேச்சில் ஆயிரம் உள் அர்த்தங்கள் இருக்கவே மணி கொதித்துவிட்டார்.

"அவங்க வந்து உன்னையும் உம் பொண்ணையும் நாங்க பார்த்துக்கிறோம்... இங்கவே இருங்கன்னு கூப்பிட்டாங்களா? நீ செய்த முட்டாள் தனத்துக்கு யாரை காரணகர்த்தா ஆக்குற?" என்று முகத்தில் அடித்தார் போல் கேட்டார்.

"பெத்த பொண்ணு... உடன் பிறந்த அண்ணன் மகன்... எப்படி உன்னால் இப்படி பேச முடியுது?" என்று மணி அத்தனை கோபமாகக் கேட்டும் தெய்வானையிடம் சிறு பிரதிபலிப்பு இல்லை.

"ஏன் உன் தங்கச்சி மவனுக்கு உன் பொண்ணை கட்டிக்கொடுக்கணும் ஆசை உனக்கில்லையா?" மணியின் வாயினை அடைக்க நினைத்து கேட்டார் தெய்வானை.

'இதற்கு மேல் சொல்லாமல் இருப்பது சரிவராது... இப்பேச்சு தெய்வானையை மிருக்கமாக்கிக் கொண்டிருக்கிறது' என நினைத்த மணி...

"தமிழ் வேறொரு பொண்ணை விரும்புறான். அது தெரிந்தும் குருட்டுத்தனமா ஆசைப்பட நான் ஒன்னும் முட்டாளில்லை" என்றார்.

"அட்ராசக்க... அதுதான் சங்கதியா? நினைச்சேன்" என்று முகத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டிய தெய்வானை...

"அந்த வெண்பா தானே?" என்று தமிழின் முகம் பார்த்தார்.

"அதான் வீட்டிலும், கடையிலும் அந்த தாங்கு தாங்குறானே! கூடப்படிச்சதலா இருக்குமோன்னு, இருக்காதுன்னு தெரிந்தும் நினைத்தேன்" என்றவர், "எப்படி அவளை நீ கட்டுறன்னு பார்க்கிறேன்" என்று இருக்கையிலிருந்து எழுந்து தமிழின் முகத்திற்கு நேரே விரலை நீட்டி சபதம் போல் கூறினார்.

"நீ பேசுறது கொஞ்சமும் சரியில்லை தெய்வா!" மணி சத்தமாகக் கூறினார்.

"மாமா" என்று மணியை அமைதிப்படுத்திய தமிழ், "அவங்க என்கிட்ட நேரடியா பேசட்டுமுன்னுதான் இவ்வளவு நேரம் வாய் திறக்காது அமைதியாக இருந்தேன்" என்றான்.

"இப்போ என்ன பேசப்போற நீ?" என்ற தெய்வானை, "நீயென்ன பேசினாலும், அந்த வெண்பாவை எப்படி ஓரங்கட்டி எம் பொண்ணு கழுத்துல உன்னை தாலிக்கட்ட வைக்கணும் எனக்குத் தெரியும்" என்றார்.

"ஆஹான்..." என்ற தமிழ்,

"உன்னை எப்போவாவது பூர்வியை பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து வேறு பார்வையில் பார்த்திருக்கிறேனா?" என வர்ஷியிடம் வினவினான்.

வர்ஷினியின் தலை இல்லையென ஆடியது.

தமிழ் கேட்டதன் பொருளில் தெய்வானை ஆடிப்போனார் என்று தான் சொல்ல வேண்டும்.

பூர்வியை பார்க்கும் கண்ணோட்டமென்றால், வர்ஷியை சகோதரியாக பார்க்கின்றானா?

தனம், தேவராஜுக்கு கூட தமிழ் வர்ஷியை சகோதரியாக பார்க்கிறான் என்பது சற்று அதிர்வாகத்தான் இருந்தது. மணிக்கும்.

இப்போது புரிந்தது தமிழ் வர்ஷியை கண்டிப்பதிலும், அவளை கொட்டுவதிலும் உள்ள உரிமையின் காரணம்.

தமிழின் காதல் தெரியும் முன்பு வரை மணியும் வர்ஷியை தமிழுக்கு கட்டினால் நல்லாயிருக்குமென்று நினைத்திருக்கிறாரே! தன் நினைப்பை எண்ணி தற்போது வருந்தினார்.

இவ்வளவு நேரமும் வெண்பாவை அவன் விரும்புவதால் தான் வர்ஷியை மறுக்கிறான் என்று நினைத்திருந்த மணி, அகிலாண்டத்திற்கு கூட, தமிழ் வெண்பாவை நேசிக்கவில்லை என்றாலும் வர்ஷிக்கு அவனின் பதில் நோ தான் என்பது புரிந்தது.

அகிலாண்டத்திற்கு வெண்பா குறுக்கே வராமலிருந்திருக்கலாம் என்ற சிறு எண்ணமும் மறைந்திருந்தது. 

தெய்வானையிடம் அப்படியொரு அதிர்வு. இருப்பினும் தன்னை நொடியில் மீட்டிருந்தார். பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க அவர் சாதாரண மனிதரில்லையே! தெய்வானையாயிற்றே!

"என்ன தமிழ் உறவுமுறை மாற்ற முயற்சி செய்றீயோ? விடமாட்டேன். யாரோ ஒருத்திக்காக உறவுகளை பகைச்சிக்காதே! ஒழுங்கா வர்ஷினியை கட்டிக்க சம்மதம் சொல்லு" என்று கிட்டத்தட்ட மிரட்டும் தொனி அவரிடம்.

"உங்களுக்கு இப்படியெல்லாம் சொன்னால் புரியாது" என்ற தமிழ்,

"அப்பா, அம்மா" என்று ஒரு சேர விளித்து, "நான் வெண்பாவை கட்டிப்பதில் உங்களுக்கு விருப்பமின்மை இருக்கா?" எனக் கேட்டான்.

தன்னுடைய உள்ளத்து விருப்பத்தைக்கூட தனது பெற்றோர் தானாக உணர்ந்துகொள்ளும்படி தான் தன் காதலை காட்டிக்கொடுத்தான். இப்படி நேரடியாக இல்லை.

இப்போது நேர்பட கேட்டிட பெற்றோர் இருவருமே வெண்பாவுக்கு முழுமனதாக சம்மதம் வழங்கினர்.

அடுத்து பூர்வியிடமும் கேட்டு சம்மதம் பெற்றவன்,

"வீட்டோட பெரிய மனுஷி நீங்க. உங்க சம்மதமும் எனக்கு முக்கியம். நீங்க சொல்லுங்க?" என அகிலாண்டத்திடம் கேட்டான்.

அகிலாண்டம் தனக்குத் துணையாகத்தான் பேசுவாரென்று எதிர்பார்த்த தெய்வானையின் எண்ணத்தை அகிலாண்டம் பொய்யாக்கினார்.

"உன் சந்தோஷம் தான் முக்கியம் தமிழு."

மகளின் முறைப்பை எல்லாம் அகிலாண்டம் கண்டுகொள்ளவே இல்லை.

"தேன்க்ஸ் பாட்டி" என்ற தமிழ்,

"இவங்க தான் என் குடும்பம். இவங்க சம்மதம் எனக்கு போதும். இதில் மாமா கூட வெளியாள் தான்" என்றான்.

தமிழை மணியால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனின் பேச்சில் புன்னகைக்கவே செய்தார்.

"என்ன பிரிச்சு பேசறியா? உன் வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கேன்னு பேசிப்பாக்குறியோ?" என்ற தெய்வானை, "வர்ஷியை நீ கட்டிக்க, நான் எந்த எல்லைக்கும் போவேன்" என்றார்.

"உங்களுக்கு வேறெப்படி என்னுடைய மறுப்பை புரிய வைப்பது?" என்ற தமிழ், அலைபேசியை எடுத்து அஸ்வினுக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்ற அஸ்வின்...

"வீட்டிக்கு எப்போ போனீங்க தமிழ்?" எனக் கேட்டான்.

ஸ்பீக்கர் ஆன் செய்த தமிழ், அஸ்வின் கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு...

"எனக்கு மொழின்னா ரொம்ப இஷ்டம் மாமா. அவளை ரொம்ப பிடிக்கும். கட்டிக்கொடுக்குறீங்களா?" என எவ்வித பூச்சு வார்த்தைகளுமின்றி கேட்டிருந்தான்.

"சபாஷ்..." என்றிருந்தாள் பூர்வி.

"சும்மா இரு பூர்வி. தெய்வானை காதில் விழுந்தாக்கா தமிழுகிட்ட ஏறுற காளியாத்தாவை இங்க நம்மகிட்ட இறக்கிடுவாள்" என்று பேத்தியை அடக்கி நடப்பதை கவனிக்க வைத்தார்.

"நீங்க எப்போ இம்புட்டு நல்லவங்களா ஆனீங்க பாட்டி. இது நீங்க இல்லையே?" வர்ஷி சந்தேகமாக இழுத்திட...

"பாட்டி மாறியதே சந்தோஷம். எதுக்கு காரணம்" என்று பேச்சை முடித்தாள் பூர்வி.

"அதுவும் சரிதான்" என்ற வர்ஷியும் மற்றவர்களிடம் பார்வையை பதித்தாள்.

தமிழ் இவ்வாறு கேட்டதில் அஸ்வின் அதிர்ந்தானோ இல்லையோ? தெய்வானை அதிர்ந்து... ஆத்திரம் தலைக்கேற "ஏய்" என்று கத்தியிருந்தார்.

"உஷ்ஷ்..." என்று சுட்டு விரலை வாயில் வைத்து இருபக்கமும் தலையசைத்த தமிழ்...

"இப்போவே கட்டிக்கொடுக்கணும் இல்லை மாமா. உங்க மேரேஜ் முடிந்து கொஞ்ச நாள் போகட்டும்" என்றான் எதிர்பக்கம் மௌனமாக இருந்த அஸ்வினிடம்.

தமிழ் சொல்லியதில் அதுவரை அங்கு என்ன நடக்கிறது? தமிழ் திடீரென இப்படி கேட்கக் காரணம் என்ன? என ஆராய்ந்தபடி அமைதியாக இருந்த அஸ்வின் பட்டென்று சிரித்துவிட்டான்.

"சிரிச்சா என்ன அர்த்தம்?"

"ஹான்... சம்மதம்ன்னு அர்த்தம்."

"அப்போ ஓகே" என்ற தமிழ், "இப்போ உங்க சம்மதம் வேணும் இருந்துச்சு. கேட்டேன். மொழிகிட்ட நானே சொல்லிப்பேன்" என்றதோடு, "அப்பா தாத்தாவிடம் பேசுவாங்க" என தேவராஜுக்கும் சேர்த்து சொல்லியவனாக வைத்துவிட்டான்.

அடுத்து தெய்வானைக்கு எப்படி வாதத்தை வைக்க வேண்டுமென்றே தெரியவில்லை.

தன் பேச்சினாலே தமிழ் அவர்களிடம் தன் விருப்பத்தை சொல்லிவிட்டானே என்று உள்ளுக்குள் தெய்வானை எரிமலையாய் வெடித்தார். தமிழின் முன்பு அதனை வெளிக்காட்டிட முடியாது அடக்கினார்.

"இதுக்கு பிறகும் இனி இந்தப்பேச்சை பேசமாட்டிங்கன்னு நம்புறேன்" என்று தெய்வானையிடம் அழுத்தமாக உரைத்த தமிழ்,

"மாமாகிட்ட சொன்னதை கவனிச்சங்க தானே? தாத்தாவிடம் பேசிடுங்க" என்று தந்தையிடம் சொல்லியவனாக சென்றுவிட்டான்.

தமிழ் சென்ற பின்னரும் மற்றவர்களின் நிலையில் மாற்றமில்லை.

கனத்த மௌனம் அங்கு.

"எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறது மச்சான். எனக்கு வேலை கிடக்கு. நான் கிளம்புறேன்" என்று எழுந்துகொண்ட மணி மகளிடம் வருகிறேன் என்று சொல்லி வெளியேறினார்.

தேவராஜூம் இருக்கையிலிருந்து எழ,

"எனக்கு முடிவு சொல்லிட்டு போ" என ஆங்காரமாகக் கத்தினார் தெய்வானை.

"சண்முகம் மாமாவிடம் பேசிட்டு வறேன் தனம்" என்று தெய்வானையை கண்டுகொள்ளாது, தன்னுடைய முடிவு என்ன என்பதையும் மறைமுகமாக சொல்லிவிட்டு நடந்திட்டார் தேவராஜ்.

அடுத்து தெய்வானை தனத்தை திரும்பி முறைத்திட, அவரை பார்ப்பதா வேண்டாமா என தனம் கைகளை பிசைந்தார்.

"அம்மா வாங்க... நகையெல்லாம் எடுத்து வைய்யுங்க" என்று தனத்தை கூட்டிச்சென்ற பூர்வி, தெய்வானையை கண்டுகொள்ளவே இல்லை.

"அய்யோ எல்லாரும் எஸ்கேப் ஆகிட்டாங்களே! நான் என்ன பண்ண? மாட்டுனா அல்டாப்பு ஆஞ்சி எடுத்திடும்" என்ற வர்ஷியை ஏறிட்ட அகிலாண்டம்...

"நீ கொஞ்சம் தைரியமான பெண்ணா வளர்ந்திருக்கலாம்" என்றார்.

"ஏன் பாட்டி? இப்போ என் தைரியத்துக்கு என்ன குறைச்சலாம்?" 

"நீ மகேஷை விரும்புறதை சொல்லியிருந்தால்... உன் அம்மா கொஞ்சமா ஆடியிருப்பாள்" என்றார்.

"பாட்டி???" வர்ஷி விழிகளை அதிர்வில் அகட்டினாள்.

"எங்கே இப்போ போய் தெய்வாவிடம் சொல்லு பார்ப்போம்" என்றார் மிதப்பாக.

தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிட்டவள்...

"ஆளை விடுத்தா" என்று ஓடியிருந்தாள்.

தெய்வானை கோபத்தில் கொந்தளிக்கும் மனதுடன் அங்கேயே தான் அமர்ந்திருந்தார்.

அகிலாண்டம் பெருமூச்சு விட்டவராக மகளின் அருகில் சென்றார்.

தெய்வானை பார்வையை வெட்டிக்கொண்டு வெடுக்கென எழுந்து சென்றுவிட்டார்.

"காலத்தாலும் திருத்த முடியாது" என்று அகிலாண்டம் மனதால் நொந்துகொண்டார்.

வீடு பரபரப்பு அடங்கி அமைதியாகியதும் பூர்வி அஸ்வினுக்கு அழைத்துவிட்டாள்.

அதற்கு முன்னதாகவே தேவராஜ் சண்முகத்திற்கு அழைத்து பேசியிருந்தார். அவர் பெரியவரிடம் எதையும் மறைக்கவில்லை. நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார். தெய்வாவின் பேச்சு முதற்கொண்டு.

சண்முகத்திற்கு தமிழென்றால் விருப்பம் தான். உடனடியாக சம்மதமும் சொல்லியிருப்பார். தேவராஜ் தெய்வானையின் பேச்சினை சொல்லாதிருந்தால்.

"அஸ்வினிடம் பேசிட்டு சொல்றேன் சம்மந்தி" என்று வைத்திருந்தார்.

அவரின் அருகிலிருந்த அஸ்வின், அவரின் முகத்தையே பார்த்திருந்தான். தேவராஜ்ஜிடமிருந்து அழைப்பு என்றதுமே இதைப்பற்றி பேசத்தான் இருக்குமென்று விளங்கிக்கொண்ட அஸ்வினுக்கு அவரின் மௌனம் கலக்கமாக இருந்தது.

"தமிழ் மாதிரி ஒரு பையனை வெண்பாவுக்கு பார்க்கணும்" என்று தமிழின் இரண்டாவது சந்திப்பிலேயே சொல்லிய சண்முகம், இப்போது அவனே மாப்பிள்ளையாக அவர்கள் கேட்டிட எதற்கு இந்த யோசனை என்றுதான் சிந்தித்தான்.

அக்கணம் தான் பூர்வி அழைப்பு விடுத்திருந்தாள்.

"அங்க என்ன நடக்குது பூர்வி? உன் அத்தை தானே அப்படி கத்தியது?" என எடுத்ததும் சண்முகத்திடமிருந்து தள்ளி வந்து கேட்டான்.

"ம்ம்ம்" என்ற பூர்வி அனைத்தையும் சொல்லிட...

"தமிழோட லவ் இப்படித்தான் எங்களுக்குத் தெரியணும் இருக்கு" என்றான் அஸ்வின்.

"உங்களுக்கு ஓகேவா?"

"டபுள் ஓகே" என்ற அஸ்வின், "தாத்தா தான் ரொம்ப யோசனையில் இருக்கிறார். இன்னும் என்கிட்ட எதும் பேசல. பேசினால் தான் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியும்" என்றான்.

"தாத்தா சம்மதம் சொல்லிடனும் அஸ்வின். தமிழ் ஆசைப்படுற ஒரே விஷயம் வெண்பா மட்டும் தான். எந்த கஷ்டமும் இல்லாமல் அவன் காதல் கைகூடிடனும்" என்றிருந்தாள் பூர்வி.

"நீ சொல்றதை பார்த்தால் பல வருட லவ் போல?" அஸ்வின் போட்டு வாங்கிட நினைத்தான். தன்னுடைய தங்கை தமிழுக்காக அந்த சிறு வயதிலேயே அவனைத்தேடிச் சென்றிருக்கும்போது, தமிழின் காதல் எத்தனை ஆழமானதாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நினைத்தான்.

"ம்ம்ம்... ம்ம்ம்ம்... ரொம்ப லவ் தான். தமிழ், மொழி சொல்லி கேட்கணுமே" என்ற பூர்வி, "அந்த நேரத்தில் அவன் கண்ணே பேசும்" என்று சிலாகித்தாள்.

"ஆஹான்..."

"என்ன ஆஹான்... இதுக்கு மேல நான் எதுவும் சொல்லமாட்டேன். இது தமிழோட லவ் ஸ்டோரி. அவன் தான் சொல்லணும். நீங்க போய் தாத்தாகிட்ட சம்மதம் வாங்குற வழியப்பாருங்க" என்று வைத்திட்டாள்.

அஸ்வின் புன்னகையோடு சண்முகத்தின் அருகில் சென்று அமர்ந்தான்.

"தமிழ் மாப்பிள்ளையா வந்தால் நல்லாயிருக்கும் தாத்தா" என்று அவனே பேச்சினைத் துவங்கினான்.

"நான் தமிழை வேண்டான்னு சொல்லல அஸ்வின்" என்று நிறுத்தியவர்,

"தேவராஜ் எல்லாம் சொன்னார். அவரோட தங்கை இப்போவே இப்படி பேசுறாங்க. கல்யாணம் நடந்திட்டால்... அங்க நம்ம பொண்ணு எப்படி நிம்மதியா வாழுவாள்? அந்த அம்மா இருக்க விட்டுடுவாங்களா?" என்று கேட்டார்.

பெரியவராக... அனுபவம் மிக்கவராக நாலையும் ஆராய்ந்து பார்த்து கேட்டிருந்தார்.

"எனக்கு புரியுது தாத்தா" என்ற அஸ்வின் "அவங்க ஒருத்தருக்காக பார்த்து, அம்முவுக்கு வரும் நல்ல பையனை இழக்கணுமா?" எனக் கேட்டான்.

"புரியுது அஸ்வின்... ஆனால் அந்த அம்மா" என்றவர், "அவங்க அதே வீட்டில் இருக்கும்போது... மனசு சஞ்சலப்படுதுப்பா" என்றார்.

"தமிழை மட்டும் நம்புங்க தாத்தா" என்றான். அழுத்தமாக.

"பார்க்கலாம்" என்று சண்முகம் சொல்ல...

அஸ்வின் அவரை விடுவதாக இல்லை.

"பார்க்கலாம் இல்லை தாத்தா... கன்ஃபார்ம் பண்ணுங்க" என்றான்.

"தமிழை அந்தளவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கா?" எனக் கேட்டார். சிரிப்போடு.

"ம்" என தலையசைத்து "அம்முவுக்கும்..."  என்று அஸ்வின் சொல்லிட சண்முகத்திடம் ஆச்சரிய பாவனை.

"நம்ம அம்முவா?"

"எஸ்" என்ற அஸ்வின் தங்கையின் பக்கமிருந்து தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினான்.


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 3 weeks ago

    Semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma sis 👌👌👌👌👌👌

  • P PMKK024 @Writer
  • 3 weeks ago

    Thank you so much


    Related Post