Total Views: 12423
மூன்று மாதங்கள் சரியாக வட்டி கொடுத்தவர்கள் பிறகு வருமானம் இல்லை என்று நாளை தருகிறேன் என்று கூறி அனுப்பினர். இதுவே தொடர்கதையாகியது அப்படியே வட்டி தொகை கொடுத்தாலும் முழுவதும் கொடுக்காமல் சிறு தொகை மட்டுமே கொடுத்தனர்.
இதனால் வருமானம் குறைந்தது வந்த பணத்தில் வீட்டு வாடகை வீட்டு செலவிற்கே பத்தாமல் போனது இதனால் வெளியே செல்வது நின்றது ஆறு வயதை நெருங்கிக்கொண்டு இருந்த இளவரசன் வெளியே அழைத்து செல்லும்படி அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
சில சமயங்களில் லலிதா எதாவது சொல்லி சமாதானம் செய்வார் இல்லை என்றால் அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று வருவார்.
அப்போதும் அங்கு விற்கும் பொருட்களை வாங்கி தரச்சொல்லி அடம் செய்வான். பணம் இருந்தபோது கோதண்டம் மகன் கைகாட்டுவது அனைத்தும் வாங்கிக்கொடுத்ததின் விளைவு இப்போது அவனின் அடம்பிடிக்கும் குணத்திற்கு காரணம்..
அடம் அதிகமாகும் வேலையில் சில சமயங்களில் கோதண்டமே அல்லது லலிதாவே அடித்து இளவரசனை அடக்க நேரிட்டது.
ஒரு கட்டத்தில் சுத்தமாக வட்டி தருவதை நிறுத்தியிருந்தனர். கோதண்டம் சென்று கேட்டபோது "உன்கிட்ட வாங்கிய கடனை திருப்பி கொடுத்துவிட்டோம்" என்று கூறியவர்களை அதிர்ந்து பார்த்தார் கோதண்டம்.
நண்பர்களிடம் கேட்டபோது "உன்னிடம் சில ஆயிரங்கள் வாங்கியிருந்தோம் அதையும் திருப்பி கொடுத்துவிட்டோம்" என்றனர்.
"சில ஆயிரங்களா இல்லை சில இலட்சம்" என்று கோதண்டம் கணக்கை சொல்ல
அதை கேட்ட நண்பர்கள் சிரித்துவிட்டு "நாங்கள் வாங்கிய பணத்திற்கு என்ன சான்று உன்னிடம் இருக்கு" என்று கேட்டனர்.
ஆம் பள்ளி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் எந்த சான்று இல்லாமல் பணத்தை அவர்களிடம் கொடுத்து இருந்தார் கோதண்டம்.
பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள் என்ற போர்வையில் கோதண்டம் எடுத்து வரும் பணத்தை இவர்கள் தானே செலவு செய்தனர். தாய் தந்தை கடையில் அமர்ந்து வேலை செய்ய சொன்னதை நண்பர்கள் இடம் கூறியபோதும் எங்கே தங்கள் செலவுக்கு கோதண்டம் கொண்டு வரும் பணம் நின்றுவிடும் என்றே கோதண்டத்தை கடையில் அமராதபடி செய்தனர்.
திருமணம் முடிந்தபோதும் கடையில் உட்கார ஆரம்பித்த கோதண்டத்தை பேசிப்பேசியே மீண்டும் தங்களுடன் வரும்படி செய்தனர். தாய் தந்தை இறந்த போது இன்னும் அவர்களுக்கு வசதியாக போனது ஏனெனில் கோதண்டத்தின் மனைவிக்கும் வெளியுலகம் தெரியாது என்று அறிந்தவர்கள் கோதண்டத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரைத்து அனைத்தும் விற்று வட்டிக்கு கொடுத்தால் நிறைய வருமானம் வரும் என்று கூறி கரைத்தனர்.
"வெளியிடங்களில் கூட வேண்டாம் எங்களிடம் கொடுத்தாலே நாங்கள் மாதம் வட்டி தருகிறோம்" என்று கூறவே நண்பர்கள் தனக்கு நல்லதைத்தான் செய்வார்கள் என்று நினைத்து அனைத்தும் செய்து இருந்தான் கோதண்டம்.
அந்த பணத்தை வாங்கி ஆட்டோக்கள் வாங்கி ஓட்டிக்கொண்டு அவர்கள் வாழ்வதற்காக அழகான ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்தனர் நண்பர்கள் என்ற போர்வையில் இருந்த துரோகிகள்.
அனைத்தும் இழந்தது அப்போது தான் உணர்ந்தார் கோதண்டம். மனைவியிடம் சொன்ன போது லலிதாவிற்கு தாங்கள் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைத்து வேதனை பட மட்டுமே முடிந்தது.
அடுத்து என்ன என்று யோசித்த லலிதாவிற்கு தோன்றியது என்னமோ சாந்தி தான் அவரிடம் சொல்லலாம் என்று கோதண்டத்திடம் சொன்ன போது அவர் மறுத்து விட்டார்.
அடுத்தடுத்த நாட்களில் கோதண்டம் தன்னை தேற்றிக்கொண்டு வேலைக்கு செல்ல முடிவு செய்து சென்றவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதுவரை வேலை செய்தது இல்லை என்றதுமே யாரும் வேலை கொடுக்கவில்லை. அடுத்து இவர்கள் குடும்பம் பற்றியும் இவரை பற்றியும் தெரிந்தவர்கள் அவரை வேலை இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர்.
லலிதா தன்னிடம் இருந்த சிறு சிறு நகைகளை விற்று வீட்டு செலவுகளை சமாளித்து வந்தாள். ஆனால் வீட்டு வாடகை கொடுக்கமுடியவில்லை. வீட்டு ஓனரிடம் அட்வான்ஸ் தொகையில் கழித்து கொள்ள சொல்ல அவரும் இவர்கள் நிலை கண்டு மூன்று மாதம் அமைதியாக இருந்தவர் நான்காம் மாதம் வாடகை கொடுத்தே ஆகவேண்டும் இல்லை என்றால் வீட்டை காலி செய்யச்சொல்லிவிட்டார்.
ஆனால் அடுத்த மாதம் வாடகை கொடுக்கமுடியாமல் போக வீட்டை விட்டு வெளியே இப்போதே சொல்லுங்கள் என்று உடைமைகளை வெளியே எடுத்து வைக்க கணவன் மனைவி இருவரும் கூனிக்குருகி போயினர்.
ஆனால் ஆறு வயதில் இருந்த இளவரசனுக்கும் என்ன புரிந்ததோ அவனும் தாயின் புடவையை கெட்டியாக பிடித்துக்கொண்டு தலைகுனிந்து நின்றான்.
அந்த நேரத்தில் தான் காரில் வந்து இறங்கினர் சாந்தி, வீரராகவன் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு காது குத்து விழாவுக்கு அழைக்க வந்தவர்கள் தாய் வீட்டிற்கு சென்றபோது அங்கு அனைத்தும் மாறி இருப்பதை கண்டு விசாரித்த போது அக்கம் பக்கத்தினர் அனைத்தும் சொல்லி அவர்கள் இப்போது இருக்கும் வீட்டின் முகவரி சொல்லி அனுப்பினர்.
காரில் அங்கு செல்லும்போதே அழுத சாந்தியிடம் சமாதானம் செய்தவர் அவர்களிடம் எதுவும் கேட்கவேண்டாம் நம்ப வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறி சமாதானம் செய்து கொண்டு வந்தவர்களுக்கு அவர்கள் நின்ற கோலம் கண்டு சாந்தி கண்ணீர் விட்டார் என்றால் வீரராகவன் கண்கள் கூட கலங்கியது.
வேகமாக சென்றவர் அங்கு பேசிக்கொண்டு இருந்த வீட்டு ஓனரின் முன் சென்று நின்றவர் எவ்வளவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்த கத்தை பணத்தை எடுக்க அதை கண்ட வீட்டு ஓனரும் எவ்வளவு என்று சொல்ல அவர் சொன்ன பணத்தை கொடுத்தவர்கள் மனைவியிடம் அவர்களை அழைத்து உள்ளே சொல்லுமாறு கண் ஜாடை காட்டினார்.
சாந்தியும் அழுகையை அடக்கிக்கொண்டு கை பிடித்து அண்ணன் அண்ணியை அழைத்து சென்று தண்ணீர் எங்கு இருக்கு என்று தேடிச்சென்று எடுத்து வந்து இருவரிடமும் கொடுத்தார் சாந்தி.
பேச முயன்ற அண்ணனை இப்போது எதுவும் பேசவேண்டாம் என்று சொன்ன சாந்தி வெளியே வந்து காரில் இருந்து பைகளை எடுத்துச்சென்று கொண்டுவந்த பலகாரங்களை பிள்ளைகளுக்கு கொடுத்தவர் பின் தன் அண்ணன் அண்ணிக்கு கொடுக்க இருவரும் மறுத்தனர். அவர்களை வற்புறுத்தி கொஞ்சம் உண்ண வைத்தார்.
அந்த நேரத்தில் வீரராகவன் அங்கு லாரி டிராவல்ஸ் நிறுவனம் எங்கு இருக்கிறது என்று விசாரித்து காரில் சென்று பேசி கையுடன் அழைத்து வந்துவிட்டார். வீட்டினுள் வந்தவர் சாந்தியிடம் அனைத்து எடுத்து வைக்க சொல்ல ஆளுக்கொன்றாக எடுத்து வைக்க லாரியுடன் அழைத்து வந்த இரண்டு வேலையாட்கள் அவற்றை லாரியில் ஏற்றினர்.
அடுத்த இரண்டு மணிநேரத்தில் காரில் ஏறி அனைவரும் வீரராகவன் ஊர் நோக்கி சென்றனர். அவர்கள் பின் சாமான்கள் ஏற்றிய லாரியும் சென்றது.
லாரி டிராவல்ஸ் செல்லும் போதே தனது தந்தைக்கு அழைத்து கூறிய வீரராகவன் தங்களது ஓட்டு வீட்டில் சமான் வைக்க அறையை ஒதுக்குமாறு கூறி வைத்து இருந்தார்.
கலாவதியும் தாயும் இறந்த பிறகு அந்த வீட்டில் இருக்க முடியாமல் பக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடி போகிவிட்டதால் பழைய வீட்டை வயலில் விளையும் பொருட்கள் வைக்க பயன்படுத்தி கொண்டு இருந்தனர்.
கார் வீட்டின் முன் வந்து நின்றதும் காரின் ஒலி கேட்டதும் உள்ளே விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளைகள் வேகமாக வெளியே வந்தபோது தாய் தந்தையுடன் புதிதாக வந்தவர்களை கண்டு அப்படியே நின்று விட்டனர்.
சாந்தியும் வீரராகவனும் காரில் இருந்து இறங்க தயங்கியவர்களை அழைத்து கொண்டு இருந்தனர்.
இறங்கி நின்ற லலிதாவின் பின் நின்று மெல்ல எட்டிப்பார்த்த விழிகளைத்தான் முதலில் கண்டான் கார்த்திகேயன். அழகிய அந்த பெரிய கண்கள் அவனை கண்டு மீண்டும் தன் தாயின் பின் ஒளிந்து கொள்ளவதும் பின் மீண்டும் எட்டிப்பார்ப்பதுமாக இருந்தது.
அதை கண்ட கார்த்திகேயன் முகம் புன்னகை பூத்தது. மெல்ல கை அசைத்து வா என்று அழைத்தான். அந்த நேரம் சுப்பிரமணியன் ரங்கசாமியும் வந்து அழைக்கவே உள்ளே வந்தனர். அவர்கள் பின்னே ஒளிந்து ஒளிந்து உள்ளே சென்றாள் கயல்விழி.
உள்ளே சென்று அமர்ந்தவர்களுக்கு வேலையாட்கள் டீயை எடுத்து வந்து கொடுத்து சென்றனர். தன் தாத்தாவை கேள்வியாக கார்த்திகேயன் நோக்க அதுவரை அமைதியாக இருந்தவர்களை கலைத்த நாராயணன்
"கார்த்திக்கேயா, சரவணா" என்று அழைத்து "இது உன் மாமா இது உன் அத்தை" என்று அறிமுகம் செய்ய இரண்டு பிள்ளைகளும் அவர் அருகில் சென்று "வணக்கம் மாமா வணக்கம் அத்தை வாங்க" என்று வரவேற்றனர் இரு பிள்ளைகளும் ஒரே மாதிரி. பிள்ளைகளின் வரவேற்பை தலையசைத்து சிறு புன்னகையுடன் ஏற்றவர்கள் தன் அருகில் இருந்த பிள்ளைகளை காட்டி" இது இளவரசன், கயல்விழி" என்று அறிமுகம் செய்து வைத்தார் லலிதா.
அப்போது தான் கார்த்திகேயனின் கண்ணில் பட்டான் இளவரசன் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
ரங்கசாமி தாத்தா "கார்த்திகேயா இளவரசனையும் கயல்விழியை அழைத்து கொண்டு சென்று விளையாடுங்கள்" என்றதும் கார்த்திகேயன் கயல்விழியை நோக்கி கைநீட்டினான் என்றால் சரவணன் இளவரசனை அழைத்தான்.
பிள்ளைகள் இருவரும் தயங்கி தாயுடன் ஒட்டி கொள்ள அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் லலிதா.
கார்த்திக்கேயனின் கையை தயக்கத்துடன் பற்றி கொண்டாள் கயல்விழி இளவரசனும் எழுந்து அவர்களுடன் செல்ல அங்கு இருந்த அறைக்குள் அழைத்து சென்றனர். அந்த அறையில் விளையாட்டு பொருட்கள் நிறைந்து இருந்தன. அதை கண்டு மகிழ்ந்து ஒடிச்சென்று ஒரு பெரிய பொம்மையை எடுத்து கொண்ட கயல்விழி "இதை நான் எடுத்துக்கவா?..." என்று கேட்க அந்த பேச்சில் உருகித்தான் போனான் கார்த்திகேயன்.
சரவணன் விளையாட்டு சமான்களை காட்டி பேசியபோதும் அதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த இளவரசன் சிறிது நேரத்தில் அவனும் ஒரு பொம்மையை எடுத்து விளையாட ஆரம்பித்து விட்டான்.
வெளியே கோதண்டம் தங்கள் கதை அனைத்தும் கூறினார். சிறிது நேரம் கலந்து பேசியவர்கள் இன்னும் மூன்று நாட்களில் காது குத்து விழா இருப்பதால் அது முடிந்தவுடன் கடன் வாங்கியவர்கள் இடம் சென்று பேசலாம் என்று முடிவு செய்தனர்.
அடுத்தடுத்த விழா ஏற்பாட்டு வேலைகள் இருக்கவே லலிதாவையும் கோதண்டத்தையும் தனியாக விடாமல் அவர்களுக்கும் வேலைகள் கொடுக்கவே நாட்கள் வேகமாக சென்றது.
பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் ஐவரும் ஒன்றாக விளையாடினர். கயல்விழி எப்போதும் கார்த்தியின் பின்னே பூனைக்குட்டி போல் சுற்றிக்கொண்டு "கார்த்தி" என்று அழைப்பதை கண்ட பெரியவர்கள் கயல்விழியை அழைத்து
உன்னை விட ஆறு வயது பெரியவனை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது "அத்தான்" என்று அழைக்கனும் என்றதும் அதில் இருந்து "அத்தான் அத்தான்" என்று அவன் பின் சுற்றினாள் மூன்று வயது ஆன கயல்விழி.
மூன்று வயது முடிந்து இருந்ததால் நன்றாக பேசுவாள் கயல்விழி. பெரியவர்களின் பேச்சை கேட்டு கார்த்திகேயனை மட்டுமே அத்தான் என்றாள் சரவணனை பெயரிட்டு தான் அழைத்தாள்.
கார்த்திக்கேயன் தன் தாத்தாவிடம் கயல்விழியின் பெயரின் அர்த்தத்தை அறிந்தவன் அவளை விழி என்றே அழைத்தான்.