இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...46 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 07-06-2024

Total Views: 15545

ப்ரீ ஃபைனல் எபிசோட்:

படுக்கையில் கவிழ்ந்து படுத்திருந்தவனின் முதுகில் மெல்லிய பூக்குவியலை அள்ளி வைத்ததுபோல் இதமான ஸ்பரிசம்… உறக்கத்திலும் தன்னிச்சையாய் இதழ்கள் புன்னகைக்க மெல்ல கண்விழித்தான் தரணி. தலையை மெல்ல நிமிர்த்தி முதுகோடு கன்னம் பதித்து முழுமையாய் அவன்மேல் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த குட்டி மொட்டினை ஒரு கையால் பிடித்து வலிக்காது திரும்பி பட்டென இடம் மாற்றி தன் நெஞ்சில் போட்டு மல்லாந்து படுத்துக் கொண்டான். கருகருவென கழுத்திற்கு கீழ் விரிந்து கிடந்த நெகுநெகு கேசத்தை சீர்படுத்தி ஒழுங்கு செய்து இளம்பிறை நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.


“குட் மார்னிங்ப்பா…” அழகான மழலைக் குரலில் சிரித்தாள் அவன் மகள் பூந்தளிர்.


“குட் மார்னிங் மயிலி…” உறக்கம் கலைந்து வெளிவந்த கரகர குரலோடு மென்மையாய் அணைத்துக் கொண்டான். பூந்தளிருக்கு மூன்று வயது முழுமையாய் பூர்த்தி அடைந்து விட்டது… தகப்பனும் மகளும் அணைத்து படுத்தபடி இருக்க அறைக்குள் ஓடி வந்தான் முகிலனின் மகன் நான்கு வயது ரிதன் பிரணவ்.


அவர்களைப் பார்த்தவன் “அப்பா… சித்தப்பாவும் பாப்பாவும் திரும்பவும் தூங்க ஆரம்பிச்சுட்டாங்க…” சத்தமிட்டபடியே மீண்டும் வெளியே ஓடினான். ரிதன் தற்போது எல்கேஜி படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் பேச ஆரம்பித்தபோது தரணியை எப்படி அழைப்பது என்று நண்பர்கள் இருவருக்கும் விவாத மேடையே அமைக்கும் அளவிற்கு பெரிய வாக்குவாதமே நடந்தது.


“மீரா என் தங்கச்சி… இவன் என் தங்கச்சி பையன்… என்னை மாமானுதான் கூப்பிடணும்…” இவன் தன் வாதத்தைக் கூறே “டேய்… முட்டாப்பயலே… அவளை நீ தங்கச்சியா நினைக்கலாம்… ஆனா பூச்செண்டு என் அத்தை மக… என் பையனுக்கு சித்தி முறை… அப்புறம் நீ எப்படி மாமா ஆவ…?” முகிலன் தன் வாதத்தை எடுத்து வைக்க குடும்ப உறுப்பினர்களின் ஏகோபித்த ஓட்டுக்களுடன் முகிலனின் வாதம் வெற்றி பெற்றது. தான் அவனுக்கு சித்தப்பா முறைதான் என்பதை ஒத்துக் கொண்டான் தரணி.


ரிதனின் கணீர் குரலில் மீண்டும் கண் விழித்த தரணி “உன் அண்ணன் போட்டுக் கொடுக்கப் போயிட்டான்… இனி எந்திரிக்கிறதை தவிர வேற வழியில்ல மயிலி…” என்றபடியே தன் மகளை நெஞ்சில் இருந்து இறக்கி எழுந்து அமர்ந்தான்.


பிங்க் நிற காட்டன் ஃபிராக்கில் குட்டி ஏஞ்சல்போல் ஜொலித்தாள் அவன் செல்ல மகள். கண்களை படபடத்து சிரித்த மகளை கண்ணிமைக்காமல் பார்த்தான். அவளைப் போன்றே மயிலிறகுக் கண்கள்… தன்னை வசியப்படுத்தி வீழ்த்திய அதே விழிகள்… சிரிப்பும்கூட அவள்தான்… தன்னவளின் மாற்று பிம்பமாய் இருந்த மகளை மீண்டும் அள்ளி எடுத்து கன்னங்களில் முத்தமிட்டு “நீ கிளம்பி தயார் ஆகிட்டியா செல்லம்… அப்பாதான் லேட்டா…?” என்று கேட்க “பெரியம்மா என்னை ரெடி பண்ணிட்டாங்கப்பா.. நீங்க சீக்கிரம் கிளம்புறீங்களா… லேட் பண்ணினா பெரியப்பா திட்டுவார்…” தன் மகளின் அழகான கொஞ்சு மொழியில் இன்றெல்லாம் மயங்கி கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.


இதற்குள் வேகமாய் அறைக்குள் நுழைந்த முகிலன் “இன்னும் மகளையே கொஞ்சிட்டு உட்கார்ந்து இருக்கியாடா நீ… உன்னை நகத்துறது னதான் எனக்கு பெரிய பாடா இருக்கு… தளிர்குட்டி நீ இங்கே இருந்தா உன் அப்பன் கிளம்ப மாட்டான்… ஹாலுக்கு போய் அண்ணா கூட விளையாடு…” என்று கூற உடனே தலையசைத்து படுக்கையில் இருந்து குதித்து வெளியே ஓடி இருந்தாள் பூந்தளிர்.


மடியில் தலையணையை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த தரணியை முறைத்தவன் “இப்போ கிளம்பினாதான்டா சரியா இருக்கும்… சீக்கிரமா குளிச்சிட்டு வா..” அவன் மடியில் இருந்த தலையணையை பிடுங்கி எறிந்து அவன் முதுகை பிடித்து நகர்த்த “நான் கண்டிப்பா வரணுமா முகில்… தளிரை கூட்டிட்டு போன்னு சொல்றேன்ல… என்னை ஏன்டா கட்டாயப்படுத்துற…? எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்லடா…” சங்கடமான முகத்துடன் கூறியவனை ஊன்றிப் பார்த்தவன் “நம்ம வீட்டு பெரியவங்களுக்கு அப்புறம் என்னடா மரியாதை இருக்கு…? உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ வந்துதான் ஆகணும்… சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும்… உனக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது…? என் கோபத்தை கிளப்பாம பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வெளியே வர்ற…” என்றவன் வேகமாய் வெளியேறி இருக்க ஒரு நீண்ட பெருமூச்சுடன் சலிப்பாய் எழுந்து குளியறைக்குள் நுழைந்தான் தரணி.


தனது ஆறு மாத மேலடிட்ட வயிற்றுடன் ட்ராலி சூட்கேஸை நகர்த்திக் கொண்டு வந்தாள் மீரா. “இருடி.. நான்தான் வருவேன்ல…” செல்லமாய் தன் மனையாளை கடிந்தபடியே லக்கேஜ்களை எடுத்து முன்னறையில் வைத்தான் முகிலன். ரிதனும் தளிரும் கைகோர்த்தபடி மகிழ்ச்சியாய் முன்னே ஓட முகிலனும் தரணியும் டிராவல் பேக்குகளை இழுத்தபடி பின்னே நடக்க வீட்டை பூட்டிக்கொண்டு மீராவும் அவர்களை பின்தொடர்ந்தாள். அனைவரும் காரில் ஏறி தவசிபுரம் நோக்கி பயணப்பட்டு இருந்தனர்.


ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் குழந்தைகள் துள்ளி குதித்தபடி வந்தனர். முகிலனம் மீராவும்கூட ஏதேதோ சிரித்துப் பேசியபடி வர தரணியின் முகத்தில் மட்டும் ஒருவித இறுக்கம். அமைதியாக கார் ஓட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்தான். மாலை அனைவரும் ஊர் வந்து சேர்ந்தனர். ஊரே திருவிழா கோலாகலத்தில் வண்ணமயமாக காட்சி அளித்தது. செழுமைக்கும் அழகுக்கும் நேர்த்திக்கும் எப்பொழுதும் குறைவற்ற ஊர் தவசிபுரம். இப்போது கூடுதல் பொலிவாய் அனைத்து வீடுகளும் சுண்ணம் பூசப்பட்டு வாசலில் சாணி கரைத்து தெளித்து நேர்த்தியாய் கரைகட்டி விதவிதமான கோலங்களுடன் கண்களுக்கு இன்னும் கூடுதல் குளுமையை சேர்த்தது.


தவசிபுரத்தின் பிரதானமாய் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அடுத்து வரும் இரண்டு நாட்கள்தான் மாவிளக்கு, ஊர்பொங்கல், பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற முக்கிய நிகழ்வுகள். வீட்டின் பரந்த வாசலில் காரை கொண்டு போய் நிறுத்தி இருந்தான் தரணி. காரின் ஹாரன் சத்தத்திலேயே வேகமாக வாசலுக்கு ஓடி வந்தார் பாட்டி. 


“ஹேய்… பெரியாச்சி…” என்று கோரஸாய் கத்தியபடி ரெண்டு வாண்டுகளும் குதித்து ஓட “என் பவுனு தங்கம் ரெண்டும் வந்துடுச்சா…” ஆசையாய் கூறி இருவரையும் இரு கைகளில் தழுவி மாறி மாறி முத்தமிட்டார் பாட்டி. இதற்குள் மற்றவர்களும் வெளியே வந்து ஆளாளுக்கு குழந்தைகளை மாறி மாறி அள்ளிக் கொண்டும் முத்தமிட்டு கொண்டும் இருந்தனர்.


“என்ன மாப்ள… சம்பந்தி நாளைக்கு ரிட்டயர் ஆகுராராம்… விருந்து இருக்காம்… வர முடியாத சூழ்நிலைன்னு சொல்லிட்டாகளே…” தரணியிடம் வருத்தப்பட்டுக் கொண்டார் மாணிக்கவேல்.


“ஆமா மாமா… பிள்ளைகளை பார்க்கணும்னு அவங்களும் ஆசையாதான் இருந்தாங்க… சூழ்நிலை அப்படி… இனி அப்பா ஃப்ரீதான்… நினைச்ச நேரம் எல்லாம் எல்லார்கூடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க…” பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தான் தரணி.


“செத்தவடம் எல்லாரும் ஒறங்கி எந்திரிங்க… ரவைக்கு கோவிலுக்கு போகணும்…” என்ற பாட்டியின் குரலில் முகிலனும் மீராவும் ரிதனை அழைத்துக் கொண்டு மாடி ஏறி தரணி மட்டும் மாடியை பார்த்து ஒருவித அமைதியுடன் நின்றிருந்தான்.


“ஏன் சாமி… நீ மட்டும் ஏன் நிக்கிற…? பிள்ளையை கூட்டிட்டு அறைக்கு போ…” என்றார் பாட்டி.


“அத்தையை காணோமே…” என்றான் கண்களை சுழற்றியபடி.


“மூணாவது வருஷமா தீச்சட்டி எடுக்கிறாள்ல… நாலு நாளைக்கு முந்தியே கையில காப்பு கட்டியாச்சு… கோவில்லதேன் இருக்கா‌… ரவைக்குதேன் வீட்டுக்கு வருவா…”


சரி என்றவன் மனமே இல்லாமல் மாடி ஏறினான். மகளுடன் அறைக்குள் நுழைந்தவன் வெறுமையாக இருந்த அறையில் கண்களை சுழற்றி சோர்வாய் படுக்கையில் சாய்ந்தான்.


“அப்பா… எனக்கு தூக்கம் வரல… நான் பெரியாச்சிகிட்ட போகட்டுமா…” பூந்தளிர் ஆசையாய் கேட்க “ம்…ஆச்சியை அங்கேயும் இங்கேயும் ஓட வைக்கக் கூடாது… சரியா…” என்றவனிடம் “ஓகேப்பா…” என்றவள் துள்ளி குதித்து மீண்டும் வெளியே ஓடி இருந்தாள்.


படுக்கைக்கு எதிரே மாட்டப்பட்டிருந்த மிகப்பெரிய புகைப்படத்தில் அவனது கண் பதிந்தது. அவனும் அவனவளும் அழகாய் சிரித்தபடி கொள்ளை கொண்டது புகைப்படம்… தன்னவளையே விழி அகற்றாமல் பார்த்தவன் ஆயாசமாய் கண்மூடிக் கொண்டான்… அயர்ச்சியில் சிறிது நேரத்தில் உறங்கியிருந்தான்… பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கிய நேரத்தில் ஒரு கையை அவன் கழுத்தோடு போட்டு ஒரு காலை தூக்கி அவன் வயிற்றுக்கு மேலே போட்டு அவனது மூக்கினில் ஈர இதழால் உரசி குறுகுறுப்பு செய்த குட்டி வாண்டின் சேட்டையில் கண்விழித்தவன் அந்த பூ முகம் கண்டு அகலமாய் புன்னகைத்தவாரே இறுக்கி அணைத்து இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட, ம்க்கும்… தொண்டையை செருமும் ஓசையில் முத்தமிட்டபடியே தலையை திருப்பினான் தரணி.


எதிரில் அவன் தர்மபத்தினி… அவளை முறைத்தபடியே தன் மகனுக்கு இன்னும் ஒரு முத்தமிட்டான்… ஆம்… அவன் முத்தமிட்டது அவனது இரண்டு வயது மகன் பூவரசனுக்கு.


தரணியை பிரதி எடுத்தது போன்றே உருவில் அச்சு அசலாய் தந்தையைப் போன்றே அவன் மகன்.


“குட்டி தங்கம்… நீ நான் அக்கா மூணு பேரும் நைட் எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறம் சத்தம் இல்லாம கிளம்பி ஓடிடலாமா…?” தன்னவளை அழுத்தமாய் பார்த்தபடியே கூற “ஐயோ… தப்பு… சாமி கண்ண குத்திடும்… கம்பம் எடுக்காம ஊருக்கு போகக்கூடாது…” முற்றும் அறிந்தவன் போல் மழலை குரலில் பேசிய மகனின் வார்த்தைகளில் சொக்கினாலும் “குழந்தைகிட்ட என்னவெல்லாம் சொல்லி வெச்சிருக்கு மொத்த கூட்டமும்…” என்று முணங்க


“அரசு… கீழே போய் அம்மாச்சி பால் ஆத்தி வச்சிருப்பாங்க… குடி… நானும் அப்பாவும் பின்னாடி வர்றோம்…” கட்டளையும் அக்கறையுமாய் கூறிய பூச்செண்டிடம் தலையாட்டி அவன் ஓடி இருக்க கதவை தாழிட்டு வந்தவள் அவன் எதிரில் நின்று இடுப்பில் கை வைத்து முறைக்கத் தொடங்கினாள்.


“எப்பேர்ப்பட்ட சுயநலம்… நீங்க பிள்ளைங்க மட்டும் தப்பிச்சு ஓடணும்… நான் இங்கே எல்லார்கிட்டயும் சிக்கிக்கிட்டு சீக்கி அடிக்கணும்… அப்படித்தானே…” கண்களை உருட்டி விழித்து கோபமாய் சத்தமிட “ஆமா… நேர்த்திக்கடன்னு சொல்லி என்ன வேணாலும் பண்ணுவாங்க… அதுக்கு நீயும் ஆமாம் சாமி போடுவ… உன்னையும் தூக்கி தலைல வச்சுக்கிட்டு போகணுமோ… நீ எப்படியோ போ… இன்னைக்கு ராத்திரி எல்லாரும் அசந்ததுக்கு அப்புறம் சத்தம் இல்லாம என் பிள்ளைங்களோட ஊரை விட்டு ஓடறேனா இல்லையா பார்…” அவன் சவால் விட வேகமாய் அவனை நெருங்கி நின்றவள்


“மாமு… இப்படி எல்லாம் பேசாதீங்க… சாமிக்கு நேத்திக்கடன் பண்றதை மன நிறைவோட பண்ணனும்… நமக்காகத்தானே எல்லா வேண்டுதலும்… ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க…? தெய்வ குத்தம் வேணாம்… போதும் பட்டது எல்லாம்… எல்லாத்தையும் மன நிறைவா பண்ணிட்டு நிம்மதியா ஊருக்கு போகலாம்…” கெஞ்சலும் கொஞ்சலுமாய் மென்மையாய் அவன் தலை வருடியபடி கூற வழக்கமாய் அவளிடம் ஆட்டம் காணும் மனம் நெருக்கமாய் மனைவியின் வாசத்தில் கிறக்கத்தை ஏற்படுத்த அவளை இடுப்போடு அணைத்து வயிற்றில் அழுத்தமாய் முத்தமிட்டான் தரணி.


“அப்போ இன்னைக்கு என்னை சிறப்பா கவனிப்பியா…?” ஒரு மார்க்கமாய் கண்கள் கிறங்க ஆழ்ந்த குரலில் கேட்டவனை தலையில் வலிக்காமல் குட்டியவள் “ஊரே சுத்த பத்தமா இருக்கு… கம்பம் எடுக்கிற வரைக்கும் இதெல்லாம் தப்பு…” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டவளை “பத்து நாள் ஆச்சுடி பாவி…” என்றபடி அவளை இழுத்து மெத்தையில் போட்டு கழுத்தில் புதைந்தான்.


 அவனை வேகமாய் விலக்கி எழுந்தவள் “கிணத்து தண்ணீரை ஆத்து வெள்ளமா கொண்டுட்டு போயிடும்… ஊருக்கு போய் எல்லாம் பார்த்துக்கலாம்…” சிரித்தபடியே அவன் கையை பிடித்து இழுத்து குளியலறை நோக்கி நகர்த்தினாள்.


“குளிச்சிட்டு சீக்கிரமா வாங்க மாமு… கோவிலுக்கு கிளம்பணும்…” அவள் குரலை கேட்டபடியே முன்னேறி நடந்தவன் வேகமாய் திரும்பி அவளை இழுத்து இறுக்கி அணைத்து அவசர முத்தங்களை அள்ளி தெளித்து அவளிடம் செல்ல அடிகளையும் வாங்கிக் கொண்டே குளிக்க ஓடினான்.


நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி பேனாவை அவள் கையில் திணித்தவனுக்கு இன்று இரண்டு குழந்தைகள்… அதன்பின் என்னதான் நடந்தது..? அதை பார்ப்பதற்கு முன் இப்போதைய பிரச்சனை என்ன…? அதை பார்ப்போம்.


தரணிக்கும் பூச்செண்டிற்கும் இடையே பிரச்சனை பூதாகரமாகி நின்ற காலத்தில் வேதனையோடு கோவிலில் சென்று விழுந்த மல்லிகா பிரச்சனைகள் முடிந்து சுமூகமானால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தீச்சட்டி எடுப்பதாக வேண்டுதல் வைத்தார். அதன்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்… பூந்தளிர் பிறந்து ஒரே வருடத்தில் பூவரசனும் உருவாகி பிறக்கும் தருவாயில் குழந்தை பேறின்போது பூச்செண்டு மரண வாசல்வரை சென்றுவிட தாயும் சேயும் நலமுடன் திரும்பினால் குழந்தைக்கு சேத்தாண்டி வேஷம் போட்டு ஊர் சுற்றி வருவதாக மற்றொரு வேண்டுதலையும் வைத்தார் மல்லிகா. 


பூவரசனுக்கு இப்போது இரண்டு வயது… இம்முறை வேண்டுதலை நிறைவேற்றி விட குடும்பம் மொத்தமும் முனைப்புடன் இருக்க ஒற்றை கோவனத்துடன் உடல் முழுக்க ஈரச் சேற்றை பூசிக்கொண்டு ஊர் முழுக்க தன் மகன் பவனி வருவதில் தரணிக்கு கிஞ்சித்தும் உடன்பாடு இல்லை.


“எந்த காலத்திலடி இருக்கீங்க… என்ன மாதிரியான வேண்டுதல் இது…? நீ வேணா உடம்பு பூரா சேத்தை பூசிக்கிட்டு ஊர்வலம் போக வேண்டியதுதானடி… என் பையன்தான் கிடைச்சானா…” என்று அவன் பூச்செண்டிடம் எகிற


“ஓஓ… பொண்டாட்டி ஊர்வலம் போனா தப்பில்ல… பையன் மட்டும் பதுவிசா இருக்கணும்… நான் ஊரான் பெத்த புள்ள… அவன் நீங்க பெத்த புள்ள… இம்புட்டுத்தானா நீங்க என்மேல வச்சிருக்கற பிரியமும் அன்பும்… நீங்க மாறிட்டீங்க மாமு…” என்று அவளும் பதிலுக்கு கத்தி சத்தமிட்டு சீத் பூத்தென்று மூக்கை உறிஞ்ச ஒரு வழியாய் அவளையும் சமாதானப்படுத்தி வேறு வழி இன்றி தானும் சமாதானமானான் தரணி.


ஊரில் விசேஷம் ஆரம்பிக்கும் முன் குல மண்டகப்படி ஒவ்வொரு நாளும் நடக்க பெங்களூர் சென்ற மாணிக்கவேல் மருமகனுக்கு நேரில் அழைப்பு சொல்லி பூச்செண்டையும் பூவரசனையும் தன்னுடனே அழைத்து கிளம்பி இருந்தார். என்னதான் ஒத்துக் கொண்டு ஊருக்கு வந்தாலும் தன் மகன் சேற்றை பூசி ஊர்வலமாக நடப்பதை பார்க்க பிடித்தம் இல்லாமல்தான் அங்கே வருவதைக்கூட தவிர்க்க முயன்று இப்பொழுதுவரை திண்டாடுகிறான். அதனால் ஏற்பட்ட கோபமும் எரிச்சலும் னதானே ஒழிய மனைவியின் மேல் காதல் பெருகித்தான் கிடக்கிறது… இதோ தாயுடன் கோவிலில் இருந்த மனையாட்டியும் வீடு வந்து சேர்ந்து கொஞ்சி கெஞ்சி சரிசெய்துவிட்டாள்.


இடையில் என்னதான் நடந்தது…?


வாழ்க்கையே வெறுத்து பிரியும் நிலைக்கு ஆளான இணைகள் எந்த சூழலில் ஒன்று சேர்ந்தனர்…?


பார்க்கலாம்… அடுத்த அத்தியாயமான இறுதி அத்தியாயத்தில்…



Leave a comment


Comments


Related Post