இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 08-06-2024

Total Views: 9608

பகுதி 13


நந்தனாவிற்கு புகுந்த வீடு ஓரளவு பிடிபட்டு இருந்தது. விசு ஏற்கனவே பரிச்சயமானவன். அவன் மூலம் வீட்டினர் அனைவரை பற்றியும் ஓரளவு தெரியும் என்பதால் புது இடத்தில இருப்பது போன்ற உணரவின்றி வளைய வந்தாள்.


பார்கவிக்கு சீமந்தம் முடிந்து அன்று பிறந்த வீடு சென்றிருந்தாள். விசேஷம் முடிந்து வீடு ஒரு சுகமான களைப்பில் இருந்தது. தனது அறையில் இருந்து வெளியே வந்த நந்தனா மீனாவை தேடினாள். அவள் கீழே இல்லை என்றானதும் சரி அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பார் என்று உத்தேசித்து. வீட்டினர் அனைவருக்கும் மாலை பலகாரம் தயாரிக்க ஆரம்பித்தாள். 


பணியாரம் செய்யலாம் என்று வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் அறிந்த வெங்காயத்தை போட்டது தான் தாமதம் அவளுக்கு அப்படியே உமட்டிக் கொண்டு வந்தது. அடுப்பை அணைத்து விட்டு உணவறையின் அருகில் இருந்த தொட்டிக்கு ஓடினாள்.


அவரது அறையில் இருந்து அப்போது தான் வெளியே வந்த காசிநாதன் இவள் நிலையை பார்த்ததும் "விசு... மீனா... அபீ...." என்று வீட்டினரை சத்தம் போட்டு அழைத்தார்.


அவர் குரல் கேட்டு பதட்டத்துடன் வந்தனர் அனைவரும். நந்தனாவை தாங்க ஓடினான் விசு. அவள் குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் மீனா.

அவள் சற்று ஆசுவாச படவும் அருகில் ஆறுதலாக உட்கார்ந்த அபிராமி "இன்னைக்கு சாப்பிட்டது எதுவும் ஆகலையோ? எல்லாமே நல்லா தானே இருந்துச்சு ...." என்றார் யோசனையாக.

"சாப்பாடா இருக்காது அத்தை. ஏன்னா எழுந்தப்போ ஒன்னுமே இல்லை. சரி எல்லாருக்கும் பணியாரம் செய்யலாம்னு வெங்காயம் வதக்க ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் தான்." என்று தீனமான குரலில் சொன்னாள் நந்தனா.

"இதுக்கு தான் பழக்கம் இல்லாத வேலையெல்லாம் செய்ய கூடாது. உன்னை யாரு சமைக்க சொன்னா?" என்று கிண்டலாக கேட்டான் விசு.

மீனா கொடுத்த எலுமிச்சை சாறை பருகியபடி அவனை முறைத்தாள் நந்தனா.

யோசனையுடன் அவளை பார்த்த அபிராமி "நந்தா நீ எப்போ கடைசியா குளிச்சே?" என்றார்.

"ச்சே ச்சே என்ன மா அவளை பார்த்து இப்படி கேட்டுடீங்க? தினம் ரெண்டு வாட்டி தேச்சு தேச்சு குளிப்பா.. இங்க வந்தே ரெண்டு சோப்பு காலினா பார்த்துக்கோங்க." என்று மீண்டும் அவனை வாரினான் விசு.

அவன் தலையில் தட்டிய மீனா "இது அது இல்லை." என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

"அப்போ எது" என்று யோசனையில் புருவம் சுருக்கியவன் "ஓ.... ஓ...." என்று புரிதலில் இழுத்துவிட்டு பரவசத்துடன் நந்தனாவை பார்த்தான் அவள் பதிலுக்காக.

"நம்ம வீட்டுக்கு வந்த பிறகு இல்லை அத்தை." என்றாள் நந்தனா வெட்கம் மிகுந்த குரலில்.

"நந்து..."என்று அவள் அருகில் செல்ல இருந்த விசுவை பின் இழுத்த மீனா "பப்ளிக்..பப்ளிக்..நீ முதல்ல போய் டெஸ்ட் வாங்கிட்டு வா" என்று அவனுக்கு வேலை கொடுத்து அனுப்பினாள்.

ஆசுவாசமாய் நந்தனாவை விட்டுவிட்டு உள்ளே சென்று சமையல் வேலையை தொடர்ந்தாள் மீனா.

"எனக்கு தெரியவே இல்லை அத்தை. ஆனா அந்த வெங்காயம் வாசம் அப்படியே..." என்று சொல்லி சிலிர்த்தாள் நந்தனா.

"சிலருக்கு அப்படி தான். சமையல் வாசமே ஒத்துக்காது. எனக்கு தேவா உண்டாயிருந்தப்போ அப்படி தான். நீ ஒன்னும் பயப்படாதே." என்று சமாதானமாக சொன்னார் அபிராமி.

இதில் தான் செய்வதற்கோ பேசுவதற்கோ ஒன்றும் இல்லை என்றாலும் வீட்டிற்கு அடுத்த வாரிசு வரப்போகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அங்கேயே இருந்தார் காசிநாதன்.

அமரன் மண்டபத்தில் இருந்து அப்படியே கடைக்கு சென்று இருந்தான். தேவா பார்கவியுடன் சென்று இருந்தான். இன்று அவனும் அங்கேயே தங்குவது என்று பேசி இருந்தனர். மாதம் ஏறிவிட்ட மனைவியை பிரிந்து இருக்க அவனுக்கு விருப்பம் இல்லை. 

விசு வேண்டியது வாங்கி வரவும் இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பிவிட்டு மற்ற மூவரும் காத்திருந்தனர்.

கால் மணி நேரம் கழித்து வெளியே வந்த இருவரின் முகங்களுமே சொன்னது சந்தோஷ செய்தியை.

அவர்களை வாழ்த்திவிட்டு பால் பாயசம் செய்தாள் மீனா. அவள் தந்ததை சாப்பிட்டு விட்டு அன்னையிடம் சுபச்செய்தி சொல்ல சென்றாள் நந்தனா.

"அம்மா"

"சொல்லுமா" இன்று காலையில் தான் பார்த்து பேசி இருந்தனர். இப்போது மகள் அழைக்கவும் என்னவென்று புரியவில்லை ராஜேஸ்வரிக்கு.

"அம்மா" என்று மீண்டும் இழுத்தாள் நந்தனா. அவளுக்கு சொல்ல வெட்கம் பிடுங்கி தின்றது. ஒரு வேளை அத்தையை சொல்ல சொல்லி இருக்க வேண்டுமோ என்று யோசித்தாள்.

அதற்குள் பதறிவிட்டார் ராஜி.

"சொல்லுமா ஏதாவது பிரெச்சனையா? யாராவது உன்னை ஏதாவது சொல்லிட்டாங்களா?" பதட்டத்துடன் கேட்டார் அவர். அவர் குரலில் இருந்த பதட்டம் அவர் அருகில் இருந்த அம்பிகாவின் கவனத்தையும் ஈர்த்தது.

"அய்யோ ஏன் மா இப்படி எப்போவுமே சண்டைக்கு தயாரா இருக்க? பாட்டியாக போற. இனிமேலாவது நிதானமா இரு." என்று பட்டென்று சொன்னாள் நந்தனா.

"என்ன சொன்ன கண்ணா?"

"நிதானமா இருக்க சொன்னேன்." என்றாள் நந்தனா குறும்பு தலை தூக்க.

"ஏய்... அதுக்கு முன்னாடி என்ன சொன்னே?" பொறுமையிழந்து கேட்டார் ராஜி.

"பாட்டி ஆக போறேன்னு சொன்னேன். பக்கத்துல இருக்குற கொள்ளு பாட்டிகிட்ட சொல்லு. தெம்பா இருக்க சொல்லி. வேலை குடுக்க ஆள் வருது."

அவளை மீண்டும் சொல்ல சொல்லும் போதே ஸ்பீக்கரை ஆன் செய்திருந்தார் ராஜி.

"அட என் கண்ணே... நீ பெத்து மட்டும் கொடு. நான் ஜம்முனு வளர்த்து கொடுத்திடுறேன்." என்று பூலாங்கிதத்துடன் சொன்னார் அம்பிகா. இருக்காதா பின்னே அவர்கள் குழந்தைக்கே ஒரு குழந்தை வரப் போகிறதே.

"உங்க அத்தை கிட்ட சொல்லு நந்தா. பார்கவி பார்க்குற டாக்டர் தான் நமக்கும். நாளைக்கே போய்ட்டு வரலாம்." என்று அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தார் ராஜி.

"அவங்களுக்கு தெரியும் மா. விசு நாளைக்கு பார்க்க ஏற்பாடும் செஞ்சிட்டார்."

"ஓஓ. அவங்களுக்கு சொல்லிட்டு தான் எங்களுக்கு சொல்றியா?" சுதி குறைந்து கேட்டார் ராஜி. இது ஒரு வித உரிமை பிரெச்சனை. எல்லா தாய்மாருக்கும் மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் அவர்களுக்கு தான் தான் முதல் என்ற எண்ணம்.

"உக்கும் எனக்கே அவங்க தான் சொன்னாங்க." என்று சொன்ன நந்தனா நடந்ததை விவரித்தாள்.

"ஓ.. அப்போ சரி. சமையல் வாசம் பிடிக்கலைன்னா சமைக்காதே." என்றார் ராஜி.

"அது எப்படி ராஜி. ஒரு கூட்டு குடும்பத்துல இருந்துகிட்டு செய்யாம இருக்க முடியும். நீ வேணும்னா இங்க வந்துடுறியா நந்து கண்ணா? கொஞ்சம் மசக்கை சரியானதும் போவே?" என்று கொஞ்சலாக கேட்டார் அம்பிகா.

"இல்லை பாட்டி இப்போதைக்கு வேண்டாம். ரொம்ப முடியலைன்னா வர்ரேன்." என்றாள் நந்தனா. அவளுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே விசுவை பிரிந்து இருப்பது எப்படி என்று இருந்தது. கூப்பிட்டால் அவனும் அங்கே வருவான் தான். இப்போது தேவா சென்று இருப்பது போல. ஆனால் அது ரொம்பவும் தேவை என்றால் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

இரவு வீடு வந்த அமரன் இருவருக்கும் வாழ்த்து சொன்னான். பார்கவியும் தேவாவும் ஏற்கனவே பேசி வாழ்த்தி இருந்தனர். நாளை நேரில் வருவதாக சொன்ன பார்கவியை தடுத்தார் அபிராமி. ஏற்கனவே அலைச்சல். இதில் இன்னும் அலையாதே. என்றுவிட்டார். 

இரவு உணவு முடிந்து அனைவரும் பேசிக் கொண்டு இருந்தபோது மீனாவின் போன் அடித்தது. பார்த்தால் தேவா தான்.

"மீனா பாருக்கு வலி எடுத்துவிட்டது. நாங்க ஹாஸ்பிடல் போறோம்." என்று சுருக்கமாய் சொல்லி வைத்துவிட்டான் அவன்.

விவரத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட மீனா விரைவாக தன்னறைக்கு சென்று சில பொருட்களை எடுத்து வந்தாள்.

கீழே அபிராமியும் பரபரப்பாக தயாராகி இருந்தார். 

"அங்க நாங்களே பார்த்துக்குறோம். ஆம்பளைங்க நீங்க வந்து என்ன செய்ய போறீங்க? எதாவது வேணும்னா தேவா இருப்பான்." என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

"வந்துட்டியா மீனா? வா போகலாம்" என்றவர் நந்தனாவிடம் திரும்பி "முன்ன பின்ன ஆகலாம். நீ போய் தூங்கு முழுச்சிகிட்டு இருக்காதே. காலையில எதுவும் சமைக்காதே. நான் மீனாவை அனுப்பி வைக்கிறேன். விசு பார்த்துக்கோ பா." என்றுவிட்டு கிளம்பினார்.

இருவரும் மருத்துவமனையை அடைந்து விசாரித்து மகப்பேறு பகுதிக்கு சென்றனர். அங்கே தேவாவுடன் சுந்தரமும் மாலாவும் இருந்தனர். 

"அவளை உள்ளே கூட்டிட்டு போய் இருக்காங்க." என்று பொதுவாக சொன்ன தேவா மீனாவை சற்று தள்ளி அழைத்து சென்றான்.

"ரொம்ப பயமா இருக்கு மீனா. அவ பாவம் வலியில கஷ்டப்படுறா. உள்ள வர சொல்லி என்னை கேட்குறா. ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு." என்று புலம்பினான். சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒளிவு மறைவின்றி பேசி பழகி இருந்தனர்.

"புரியுது தேவா. ஆனா இப்படி யோசிச்சு பார். அவ வலி தாங்கி உங்க ரெண்டு பேருக்காகவும் ஒரு குழந்தையை பெத்து எடுக்க போறா. நீ அதுக்கு உன்னோட பயத்தை கொஞ்சம் ஒதுக்கி வச்சு அவளுக்கு துணையா இருக்கனும் தானே."

"அதில்லை மீனா. அவ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியும்னு தோணல."

"தேவா... குழந்தை பேறுல உன்னால பகிர்ந்துக்க முடிஞ்சதே இந்த கடைசி சில மணி நேரங்கள் தான். அதை தவற விட்டுட்டு பின்னால வருத்தப்படாதே. நீ உள்ள போனா அவளுக்கு முன்னாடி நீ பாப்பாவை தூக்கலாம் தெரியுமா? அந்த வாய்ப்பை ஏன் தவற விடுறே?" என்று ஏதேதோ பசி அவனை சமாதானம் செய்தாள் மீனா.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் தேவாவை உள்ளே அழைத்து சென்றார். குழந்தை பிறக்க காலை ஆகிவிடும் என்றும் சொல்லி சென்றார்.

நால்வரும் வெளியே காத்திருக்க தொடங்கினர். சில மணி நேரம் ஆகியும் தகவல் இல்லாததால் அங்கிருந்தவர்களுக்கு கேன்டீனில் காபி வாங்கி வந்து கொடுத்தாள் மீனா.

"மீனா. நீ வீட்டுக்கு போ. விடிஞ்சா நந்தனாவை பார்க்கணும். ராத்திரியே சரியா அவளுக்கு சாப்பாடு நிக்கலை. உன் கஷாயத்தை காலையில போட்டு கொடுத்திட்டு எதாவது சாப்பிட சொல்லு. இங்க பாப்பா பிறந்த பிறகு சொல்றேன்." என்று அனுப்பி வைத்தார் அபிராமி.




Leave a comment


Comments


Related Post