இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 09-06-2024

Total Views: 10792

பகுதி 14


காலை ஒன்பது மணி போல பிறந்தான் தேவா பார்கவியின் மகன். பிள்ளையை எடுத்து வந்து பெரியவர்களிடம் காண்பித்துவிட்டு அறைக்கு அழைத்து வர இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று சொல்லி சென்றான் தேவா.

மூவரும் எல்லோருக்கும் விவரம் தெரிவித்தபடி மருத்துவமனை உணவகத்திலேயே உண்டுவிட்டு பேரனை கொஞ்சும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர்.

பதினோரு மணி போல அறைக்கு அழைத்து வர பட்டனர் தாயும் சேயும். அறையில் வந்தவுடன் மீனாவை தேடினாள் பார்கவி. 

"அக்கா எங்கே அத்தை?"

"நேத்து என்னோட தான் வந்தா. ஆனா வீட்டுல வேலை இருக்குல்ல. அதான் நான் அப்புறம் வர சொல்லி அனுப்பி வச்சுட்டேன். இப்போ வந்திடுவா." என்றபடி பேரனை கொஞ்சினார் அபிராமி.

பார்கவி அறைக்கு வந்த தகவலை அவர்கள் குடும்ப பகிரி (வாட்சாப்) குழுமத்தில் அனுப்பிய தேவா குழந்தையின் பட்டு கால்களை மட்டும் புகைப்படம் எடுத்து பகிர்ந்தான்.

அமரன் விவரம் பகிர்ந்த அரை மணி நேரத்தில் கையில் இரு பெரிய பைகளுடன் வந்தான்.

தேவா அவனை கேள்வியாக பார்க்கவும் "நம்ம கடையில் இருந்து பாப்பாவுக்கு துணி எடுத்துட்டு வந்தேன். பிறந்த குழந்தைக்கு நிறைய துணி தேவை படுமாமே. போன வாரம் ஒரு வாடிக்கையாளர் பேசிட்டு இருந்தப்போ கேட்டேன். அப்போவே நல்லா போறது எல்லாத்துலயும் கொஞ்சம் எடுத்து வச்சுட்டேன். நம்ம குட்டிக்காக. பார்கவி பார்த்துட்டு சொல்லு. இது போதுமா இன்னும் வேணுமான்னு." என்று விளக்கம் தந்தான்.

அவன் நீட்டிய பைகளை வாங்கியபடியே "எத்தனை எடுத்திட்டு வந்தீங்க தம்பி?" என்றார் மாலா.

"ஒரு நூறு செட் இருக்கும் அத்தை." என்று அசால்டாக சொன்னான்.

"என்னது நூறா? இது வளருற குழந்தை தம்பி. இதுல இருக்குறது எல்லாம் ஒரு முறை போட்டாலும் போட்டு முடிகிறதுக்குள்ள சின்னதாகிடும்." என்று விளக்கினார் மாலா.

"ஓஓ அப்படியா... சரி நீங்க எது வேணுமோ பார்த்துட்டு எடுத்துக்கோங்க. மத்தது திருப்பி கடையில வெச்சிடலாம். தேவா நீ அப்புறம் கடைக்கு வந்து குட்டிக்கு வேற என்ன தேவையோ எடுத்துக்கோ. நம்ம குழந்தைகள் பிரிவுல எல்லாமே இருக்கு. இல்லைனாலும் சொல்லு. டீலர் கிட்ட சொல்லி வர வெச்சிடலாம்."

அயர்வில் எதுவும் சொல்லாமல் அமைதியாக படுத்தபடியே சிரித்துக் கொண்டு இருந்தாள் பார்கவி. 

"என்ன பாரு?" என்று வாஞ்சையாக கேட்டான் தேவா.

"இல்லை அமர் மச்சான் இவ்ளோ பேசுவாங்களா? சின்ன குழந்தை மாதிரி இருக்காங்க." என்றாள் மெல்லிய குரலில்.

"பின்ன? நம்ம வீட்டு இளவரசனுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி?" என்று மகனை பெருமையாக நோட்டம் விட்டவன் அவனை தூக்கி அண்ணனிடம் நீட்டினான்.

தயக்கத்துடன் மறுத்தான் அமரன்.

"வேண்டாம் தேவா. பழக்கம் இல்லையில. ஏடாகூடமா புடிச்சி அவனுக்கு வலிக்க போகுது. நீ வச்சுக்கோ நான் தடவி பார்த்துக்கறேன்."

"நான் மட்டும் என்ன பத்து பிள்ளை தூக்கி இருக்கேனா? இன்னைக்கு இவனை தூக்கினது தான் முதல். நீ பிடி. ஒன்னும் ஆகாது." என்று தேவா வற்புறுத்திக் கொண்டு இருக்கும் போதே அறையின் கதவு திறந்து மீனா உள்ளே வந்தாள். 

"வா மீனா. " என்று தேவா அண்ணன் பக்கம் திரும்ப அவன் முகம் இறுகி இதற்கு முன் இருந்த இயல்பு தன்மையின்றி இருப்பதை பார்த்தான். மீனாவிடம் அவன் பார்வை சென்றது. அவள் இயல்பாக பார்கவியை நலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள்.

"போங்க கா. நான் உங்க மேல கோவமா இருக்கேன்." 

"ஏன் கவி?"

"பின்ன ஏன் வீட்டுக்கு போனீங்க?"

"நான் வீட்டுக்கு ஏன் போனேன்னு உனக்கு தெரியும் தானே? ஆமாம் குட்டிக்கு என்ன துணி போட்டிருக்கே? தேவா நான் கொடுத்துட்டு போன பையை பார்க்கவே இல்லையா?" என்று திருப்பினாள் மீனா.

பிள்ளையை தொட்டிலில் கிடத்திவிட்டு மீனா வைத்து சென்ற பையை பிரித்தான் தேவா. அதில் சில குழந்தை துணிமணி இருந்தன. அழகிய வேலைப்பாடுகளுடன்.

கையில் எடுத்து பார்த்த தேவா ஆச்சரியமாக கேட்டான் "நீயே தெச்சியா மீனா?"

"ஆமாம். பார்த்து பார்த்து தெச்சு வெச்சா நீ பிள்ளைக்கு வேற ஏதோ டிரஸ் போட்டு விட்டு இருக்க?" என்று பொய் கோபத்துடன் நொடித்தாள் மீனா.

"அதுக்கென்ன இப்போவே மாத்திடலாம்." என்று பிள்ளையிடம் சென்ற தேவாவை தடுத்தார் மாலா.

"இருங்க மாப்பிள்ளை. நம்ம வீட்டுல முதல் நாள் பழசு போடுறது தான் பழக்கம். இதையெல்லாம் நாளைக்கு போட்டுக்கலாம்."

யோசனையுடன் மீனாவை பார்த்தான் தேவா. அவளோ அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு "சித்தி இந்த பையில உங்களுக்கு சாப்பாடு இருக்கு. இதுல கவிக்கு பத்திய சாப்பாடு இருக்கு." என்று அடுத்த விஷயத்திற்கு சென்றுவிட்டாள்.

இன்னும் சில நிமிடங்கள் பேசியவள் "சரி கவி நீ ஓய்வெடுத்துக்கோ. அப்புறம் பார்க்கலாம்" என்று கிளம்பிவிட்டாள். அவள் பின்னேயே அமரனும் கிளம்பிவிட்டான்.

அவர்கள் இருவரும் சென்றபின் தான் தேவா உணர்ந்தான். இருவருமே குழந்தையை தூக்கவில்லை. பார்கவியை பார்த்தான். அவள் முகமும் யோசனையில் சுருங்கி இருந்தது.

************

குழந்தைக்கு முப்பதாம் நாள் காப்பு கட்டி பெயர் வைக்கும் வைபவம் நடத்தினார்கள். மகனுக்கு மித்ரன் என்ற பெயரை தேர்ந்து எடுத்திருந்தனர். 

பார்கவியின் தாய் வீட்டில் நடந்த இந்த வைபவத்திற்கு புகுந்த வீட்டினர் எல்லோரும் வந்திருந்தனர். அபிராமி பேரனுக்கு தங்கத்தில் காப்பு செயின் இடுப்பு கொடி என்று எல்லாமே வாங்கி வந்து போட்டார். 

அவர்கள் பங்கிற்கு அமரன் மீனா ஜோடியும் விசு நந்தனா ஜோடியும் விளையாட்டு பொருட்கள் அது இது என்று கை நிறைய பரிசு பொருட்களுடன் வந்திருந்தனர்.

எல்லாமே இவர்களே செய்துவிட்டால் நாங்கள் என்ன செய்வதாம் என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டார் மாலா.

எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது பார்கவியின் முகம் தெளிவாக இல்லாதது கண்டு தேவாவிடம் பேசினாள் மீனா.

"என்ன தேவா. கவி ஏன் ஒரு மாதிரி இருக்கா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை மீனா. நீ விடு."

"ப்ச் சொல்லு தேவா."

"சொன்னா மட்டும்?"

"தேவா..."

"அவளுக்கு இப்போ நம்ம வீட்டுக்கு வரணுமாம்."

"சரி வரட்டும் அதுக்கு என்ன இப்போ. அத்தை கிட்ட சொன்னா நல்ல நாள் பார்த்து சொல்ல போறாங்க."

"வந்து? அவ எப்படி உடம்பையும் பார்த்து பாப்பாவையும் பார்ப்பா?"

"அதுக்கு தான் நாங்க இத்தனை பேர் இருக்கோமே."

"ஆமாம் ஆமாம்,. இன்னும் நீ குழந்தையை தூக்கவே இல்லை இந்த அழகுல பார்த்துப்பியாம்."

"ப்ச் தேவா... அவ முதல்ல எதுக்கு அங்க வரணும்னு சொல்றா? அதை சொல்லு."

"இங்க அவங்க அண்ணி ஏதோ பேசிட்டே இருக்காங்களாம். விடு மீனா. இன்னும் ரெண்டு மாசம் தானே. அப்புறம் அவளும் கொஞ்சம் தெளிஞ்சிட்டா கூட்டிட்டு போகலாம்." என்றான் தேவா மழுப்பலாக.

இவர்கள் பேசுவதை கவனித்த அபிராமி அங்கே வந்து என்ன விஷயம் என்று கேட்டார்.

"அத்தை நாம கவியை இப்போவே நம்ம கூட கூட்டிட்டு போகலாமா?" பட்டென்று கேட்டாள் மீனா.

மருமகளை யோசனையாக பார்த்தார் அபிராமி. இப்படியெல்லாம் முடிவு எடுப்பவள் இல்லை அவள். முறைகளுக்கு மாறாக ஏதாவது செய்தால் பிரச்சனை என்று ஒதுங்கியே தான் இருப்பாள். பார்வையை அங்கே இருந்த எல்லோர் மீதும் சுழலவிட்டார். எதையோ இழந்தது போல இருந்த பார்கவியின் முகமும் வேண்டா வெறுப்பாக வேலைகள் செய்து கொண்டு இருந்த அவள் அண்ணியின் முகமும் பட்டன. அனுபவம் மிக்கவர் அவருக்கு புரிந்துவிட்டது.

"சரி செய்திடலாம். நீங்க யாரும் பேசாதீங்க. நான் பார்த்துக்குறேன்." என்றுவிட்டு சென்றார்.

மறுநாளே பார்கவியும் குழந்தையும் அவர்கள் வீட்டிற்கு வர ஏற்பாடு செய்துவிட்டார். மகளை விட்டு தருவது போல இருக்கும் என்று தோன்ற மாலா மறுத்துப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக அபிராமி நினைத்ததை சாதித்துவிட்டார்.

பிள்ளையுடன் வந்த பார்கவிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள் மீனா.

"மீனா கா."

"என்ன கவி?"

"இந்தாங்க பிடிங்க. அங்க வச்சு என்னால எதுவும் சொல்ல முடியலை. ஆனா நீங்க இவனை தூக்காம இருந்தது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துது தெரியுமா?" என்று பிள்ளையை நீட்டினாள் பார்கவி.

"பைத்தியம் நான் தூக்காம இவர் வளர்ந்திடுவாரா? வீணா எதுக்கு ஒருத்தருக்கு பேச இடம் கொடுக்கணும்னு இருந்தேன். குடு என் செல்லத்தை." என்று வாங்கிக் கொண்டாள்.

பிள்ளையை சில நிமிடங்கள் கொஞ்சியவள் "கவி ஒன்னு செய்யலாமா? நான் இவனை பார்த்துக்கறேன். நீ சமையலை பார்த்துக்கோ." என்று ஐடியா தந்தாள்.

"ஆசை தோசை. பிள்ளையை என்னிடம் கொடு. நீங்க ரெண்டு பேரும் போய் வேற வேலையை பாருங்க. என் பேரனை நான் பார்த்துக்குறேன்." என்று கை நீட்டினார் அபிராமி.

"அப்போ சித்தப்பா நான் வேடிக்கை பார்க்கவா?" என்று போட்டிக்கு வந்தான் விசு. 

இவர்கள் போட்டாபோட்டியை வேடிக்கை பார்த்த பார்கவி கலங்கிய கண்களுடன் "இதுக்கு தான் சொன்னேன். பாருங்க. எல்லாருமே ஆசையாய் பாக்குறாங்க. நம்ம பிள்ளையை போட்டியாவோ கடமையாவோ பாக்குற எடத்துல என்னால இருக்க முடியலைங்க." என்றாள் தேவாவிடம்.

"புரியுது. ஆனா உங்க அம்மா மனசு கஷ்டப்படுமேன்னு இருக்கு."

"இருக்கலாம். ஆனா அவங்களும் அண்ணியை தடுக்கலையே. அவங்க பேசுனப்போ என்னை தானே அமைதியா இருக்க சொன்னாங்க. என்னால முடியலை. அதனால வந்துட்டேன்."

"சரி விடு. இனி எதையும் யோசிக்காம உடம்பை பார்."





Leave a comment


Comments


Related Post