இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு (இறுதி அத்தியாயம்)...47 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 09-06-2024

Total Views: 17011

இந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு இனிவரும் நாட்களில் எனக்கு நிம்மதியை கொடு என்று இறைஞ்சும் குரலில் கண்களில் வலியுடன் நின்ற தன் கணவனைப் பார்த்த பூச்செண்டிற்கு இதயத்தை இறுக்கிப் பிழிந்தது போல் வலி‌ எந்த அளவு மனம் உடைந்திருந்தால் இந்த வார்த்தையும் இந்த எண்ணமும் தோன்றும் என்று எண்ணியவள் தன்னை பிரிவதால் அவனுக்கு நிம்மதி கிடைக்கும் என்றால் அந்த நிம்மதிதானே எனக்கு வேண்டும் என்று எண்ணியவளாய் தனது துயரங்கள் அனைத்தையும் தொண்டைக் குழிக்குள் விழுங்கி கொண்டு தானும் கையெழுத்திட்டு அவனிடம் நீட்டினாள்.


வீட்டினர் யாருக்கும் இதில் உடன்பாடு இல்லை… இருவரிடமும் எவ்வளவோ பேசிப் பார்த்தனர்… வேதனையும் குழப்பமும் தீரும்வரை சில காலம் பிரிந்து வேண்டுமானாலும் இருங்கள் ஆனால் இந்த கொடுமை வேண்டாம் என்று மன்றாடிப் பார்த்தனர்… சிலை என அமைதியானாள் பூச்செண்டு… கற்பாறையாய் இறுகி நின்றான் தரணி… வரமாய் ஒரு வாரிசு கிடைத்திருக்கும் சூழலில் இப்படி ஒரு கொடுமையா என்று அழுதார் பாட்டி. தரணியிடம் யாராலும் கடிந்து கோபம் கொள்ள முடியவில்லை… அவனது நிதானமும் பொறுமையும் குணமும் அனைவருக்கும் தெரியும்… தன் மனைவியை எப்படி நேசித்தான் என்பதும் தெரியும். அவனே மனம் உடைந்து இந்த முடிவை எடுத்ததில் பூச்செண்டின் மூளையற்ற செயல்கள் அனைவரையும் மேற்கொண்டு வாதிட முடியாமல் தடுத்தன. அன்றே அங்கிருந்து கிளம்பி இருந்தான் தரணி.


“உன்னைத்தேன் மலை மாதிரி நம்பி இருக்கேன் முகிலு… நீயும் மீராவுந்தேன் மாப்ள மனசை மாத்தணும்… இவ புள்ள பெக்கறதுக்கு முன்ன ரெண்டு பேரும் சேர்ந்துரணும்…” மல்லிகாவின் கதறலில் கண்கள் கலங்கித்தான் தாங்களும் அடுத்த மூன்று நாட்களில் பெங்களூர் வந்து சேர்ந்தனர் இருவரும். 


ஆனால் முகிலனோ மீராவோ அப்படி ஒன்றும் நடந்ததாக கூட காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போன்றே இருந்தனர். தரணியிடமும் வழக்கமான அணுகுமுறைதான்… சில விஷயங்களை ஆறப்போடுவதும் அமைதி காப்பதும் மாற்றங்களுக்கான வழிமுறைகளை வகுக்கும். நீதிமன்றங்களில் நிறைந்து நிற்கும் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை பொறுமையற்ற அணுகுமுறையும் உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவேசமும் அமைதியாக அமர்ந்து பேசி ஆராயும் தன்மை இல்லாததாலுமே மொத்தமாய் தூக்கி எறியும் மனப்பாங்கு பெருகிப் போய் உள்ளது. தன் நண்பனைப் பற்றி முற்றும் அறிந்தவன் முகிலன். வெளியில் பகிராது தனக்குள்ளேயே போட்டுக்கொண்ட அழுத்தங்கள் மொத்தமாய் உடைந்து வெளிப்பட்டதால் தோன்றிய பூதாகர வெளிப்பாடுதான் இந்த செயல் என்பது அவனது நம்பிக்கை.


தனிமையும் அமைதியும் அவனுக்கு தேவை என்று கருதியே அவனுக்கான இடைவெளியை கொடுத்து ஒதுங்கி நின்றனர் இருவரும். அவனும் வழக்கம்போல் பணிக்கு செல்வதும் வீட்டில் மற்றவர்களுடன் சகஜமாக இருப்பதும் ரிதனுடன் வழக்கம்போல் விளையாடி மகிழ்வதுமாக நாட்களை சாதாரணமாகத்தான் நகர்த்தினான். ஆனால் விவாகரத்துவரை விஷயம் விபரீதம் அடைந்திருப்பதை தன் பெற்றோரிடம் தெரியப்படுத்தாமல் தவிர்த்தான். விபரம் அறியாதவர்கள் பெருமகிழ்ச்சியுடன் தங்கள் மருமகளை ஊரில் சென்று பார்த்து வந்தனர். ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியுள்ளதால் தங்களுடனே இருத்திக் கொண்டதாக மற்றவர்களும் சொல்லி சமாளித்தனர். இப்படியே நாட்கள் நகர பூச்செண்டுக்கு நான்கு மாதங்கள் முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கியிருந்தது.


இடைப்பட்ட நாட்களில் இருவரும் ஒருவருடன் ஒருவர் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முயலவில்லை… ஏனென்று யாரும் கேட்டுக் கொள்ளவும் இல்லை… இந்த இடைப்பட்ட நாட்களில் தனிமையும் பிரிவும் அமைதியும் தரணிக்கு என்ன கற்றுக் கொடுத்ததோ ஆனால் பூச்செண்டிற்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தவறுகளும் அதற்கான தண்டனைகளும்தான் மனிதனை செம்மைப்படுத்தி சீராக்கிக் கொள்வதற்கான சூத்திரங்கள். தன் கணவன் கொடுத்த தண்டனையை தனக்கான சூத்திரமாக மாற்றிக் கொண்டாள் பூச்செண்டு. தேவையற்ற கவலைகளையும் அழுத்தங்களையும் மனதில் ஏற்றாமல் தன்னை இலகுவாக்கினாள். தன் கணவன் தன் மேல் கொண்ட காதலின் பரிசான தனது குழந்தையை ஆரோக்கியமாய் உருவாக்கி பெற்று எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனம் முழுக்க நிரம்பியிருந்தது.


கணவனின் இந்த விலகலையும் பிரிவையும் தன்மேல் அவன் கொண்டுள்ள அபரிமிதமான காதலின் வெளிப்பாடாகத்தான் நேர்மறையாக ஏற்றுக் கொண்டது அவள் மனம். குழந்தையை சுமந்திருக்கும் இந்த சமயத்தில் கணவனின் அருகாமையும் அன்பும் பெண்கள் ஏங்கி விரும்பும் விஷயங்கள் என்றாலும் தன் ஆசைகளை அணைகட்டி நிறைவாகவே வலம் வந்தாள் பூச்செண்டு. எங்கே மகள் உடைந்து விடுவாளோ கர்ப்பம் கலைந்து விடுமோ வேறு ஏதேனும் முடிவு எடுத்து விடுவாளோ என்றெல்லாம் பெற்றவர்களும் மற்றவர்களும் பயந்து இருக்க அவளோ நான் அனைத்தையும் கடந்து நிற்கிறேன் என்பதை தனது நடவடிக்கையின் மூலம் காட்டிக் கொண்டாள். அவளது பேச்சிலும் செயலிலும் நிறைய மாற்றங்கள்.


விசித்ராவும் கூட அவ்வப்போது அழைத்து நலம் விசாரிப்பாள். அத்தோடு அவர்களது பேச்சு நின்றுவிடும்… தரணியை பற்றியோ வேறு விபரங்கள் பற்றியோ இருவருமே தெளிவாக தவிர்த்துவிடுவர். முகிலன் மீராவிடம் கூட இதே எல்லைக் கோடுதான். சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல் அனைவருமே அவளைச் சுற்றி தரணியால் இடப்பட்ட நெருப்பு வளையத்தை தாண்டி வரவும் இல்லை… அதனை அவள் அனுமதிக்கவும் இல்லை. அவளுக்கு அந்த நெருப்பின் தகிப்பும் வெம்மையும் தேவையான ஒன்றாய் போனது. இதோ ஐந்து மாதங்கள் தொடங்கி பாதி நாட்கள் கடந்துவிட்டன. ஒருநாள் அனுசுயா தரணிக்கு அழைத்திருந்தார்.


“பூச்செண்டுக்கு இது அஞ்சாம் மாசம் தரணி… ஏழாம் மாசம் அவங்க வீட்ல வளைகாப்பு பண்ணுவாங்க… அஞ்சாம் மாசம் நாம வளையல் போட்டு சமைச்சு போடணும்… அதுதான் நம்மளோட முறை… அவ உடம்பு இருக்கிற நிலைமையில நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்து பண்ண முடியாது… அங்கேயே இதை பண்ணிடலாம்னு அப்பா நினைக்கிறார்... ஞாயிற்றுக்கிழமை நம்ம எல்லாருக்குமே சௌகரியமா இருக்கும்… அதனால வர்ற ஞாயிற்றுக்கிழமை பண்ணிடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்…”


அனுமதியாக இல்லாமல் தகவலாக அவர் கூற தரணியால் மறுப்பாக எதுவும் பேச முடியவில்லை. சரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான். முகிலன் மீராவிற்கும் முறையாக அழைப்பு கூறினர் அவனது பெற்றோர். தவசிபுரத்திற்கும் அழைத்து விபரம் தெரிவித்து இருந்தனர். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வந்த தரணி வீட்டிற்குள் நுழைந்தபோது முகிலனும் மீராவும் ஊருக்குச் செல்ல தயார் நிலையில் இருப்பது தெரிந்தது. தன்னிடம் இது பற்றி ஒரு வார்த்தைகூட கூறவில்லையே என்று முதன் முறையாக மனதில் ஓரம் ஒரு வலி. அதனை காட்டிக் கொள்ளாது அமைதியாக தன் அறைக்குள் நுழைந்து குளித்து முடித்து வெளியே வந்தான் தரணி.


“நாங்க ஊருக்கு கிளம்புறோம் தரணி… நாளைக்கழிச்சு என் அத்தை பொண்ணுக்கு ஒரு சின்ன ஃபங்க்ஷன் இருக்கு… நாங்க கண்டிப்பா இருந்தாகணும்… போன வாரமே ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணிட்டேன்… செவ்வாய்க்கிழமை வந்துடுவோம்…” எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் வெகு சாதாரணமாய் முகிலன் கூற அவனது வார்த்தைகள் தரணிக்கு பெரும் வலியை கொடுத்தன. பதில் ஏதும் கூறாமல் தன் நண்பனையே ஊன்றிப் பார்த்தான் தரணி.


“உன் பங்குக்கு நீயும் காய்ஞ்சு போன புண்ணை கீறி பாக்குறியாடா…” அவனது கண்களிலும் குரலிலும் அத்தனை வலி.


“நான் சரியாத்தானேடா சொன்னேன்… விவாகரத்து நோட்டீஸ்ல ரெண்டு பேருமே கையெழுத்து போட்டுட்டீங்க… நீ வந்த வேகத்துக்கு அப்பவே ஃபைல் பண்ணி இருப்ப… அப்புறம் உனக்கு உரிமை இல்லாத ஒருத்தியை உன் மனைவின்னு எப்படி சொல்ல முடியும்…? இப்போ அவ என் அத்தை மகள்னு அடையாளத்தோட மட்டும்தானே இருக்கா… எப்படியும் நீ வரப் போறது இல்ல… உன் அப்பாகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு இருப்ப… நான் எதுவுமே தப்பா சொல்லலையே…” புன்னகை மாறாமல் பேசியவன் தோள்களை ஏற்றி இறக்க ஏனோ உள்ளுக்குள் துடித்துப் போனான் தரணி.


“நான் வரமாட்டேன்னு உன்கிட்ட சொன்னேனா…? அதோட விவாகரத்துன்னு கோர்ட்ல உத்தரவு வர்ற அந்த நொடி வரைக்கும் அவ என் மனைவிதான்… காட் இட்…” அழுத்தமாய் கூறியவன் “ட்ரெயின் டிக்கெட்டை கேன்சல் பண்ணிடு… நாம கார்லதான் போறோம்…” என்றபடியே சோபாவில் அமர்ந்திருந்த ரிதனை ஒரு கையிலும் தனது டிராவல் பேக்கை ஒரு கையிலும் எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே செல்ல கணவனும் மனைவியும் ஒரு அர்த்தப் பார்வையுடன் அமைதியாக பின்னே சென்றனர்.


வீட்டோடு முடித்துக் கொள்ளும் சம்பிரதாயமான நிகழ்வு என்பதால் குடும்பத்தினரை தவிர யாரும் அழைக்கப்படவில்லை. தழைய தழைய பட்டுப் புடவையும்… தலைநிறைய மல்லிகைப் பூவும்… மேடிட்ட வயிறும்… தாய்மைக்கே உரித்தான பொலிவும்… சற்று சதைப்பிடிப்பான உடலும்… கைகள் நிரம்ப கண்ணாடி வளையலும்.. இரு கன்னங்களிலும் சந்தனப் பூச்சுமாய் கூடத்தின் நடுவே அமர்ந்திருந்தவளை அகலாத பார்வை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் தரணி. கவலையின் சுவடோ கண்களில் கலக்கமோ வேதனையான வார்த்தைகளோ எதுவும் இன்றி கன்னம் வலிக்க சிரித்தபடி வாய் ஓயாது பேசியபடி வெகு சாதாரணமாய் இருந்தவளை தரணி மட்டுமல்ல மீராவும் கூட ஆச்சரியமாகத்தான் பார்த்தனர்.


வீட்டினரும் கூட தரணியிடம் எவ்வித வித்தியாசத்தையும் பிரதிபலிக்கவில்லை. அன்றைய இரவு பெரியவர்கள் அனைவரும் வளைகாப்பு குழந்தைப்பேறு என்ற பல்வேறு விஷயங்களை பேசியபடி அமர்ந்திருக்க பூச்செண்டினை தனியே அழைத்துக் கொண்டு மொட்டைமாடிக்கு சென்றிருந்தாள் மீரா.


“ஏன்க்கா… ரெண்டு மாடி ஏற வச்சிட்டீங்க… நார்மல் டெலிவரிக்கு எல்லா எக்சர்சைஸும் நான் பண்ணிட்டு தான் இருக்கேன்…” மூச்சு வாங்க தன் வயிற்றை ஒரு கையால் பிடித்தபடியே கலக்கமற்ற சிரிப்புடன் பேசியவளை ஆராய்ச்சியாய் பார்த்தாள் மீரா.


“நீ சந்தோசமா இருக்கியா பூச்செண்டு…?”


“என்னை பார்த்தா எப்படி தெரியுது…?” இரு கைகளையும் விரித்துக் காட்டி பளீரென சிரித்தவளை புரியாமல் பார்த்தாள்.


“அண்ணன்கூட ஏதாவது பேசினியா…?”


“பேச என்ன இருக்கு…?” என்றாள் எங்கோ பார்வையை பதித்தபடி. விரக்தியாய் பேசுகிறாளோ என்று எண்ணி அவளது தோளில் கை வைக்க அதே புன்னகையுடன் அவளை திரும்பிப் பார்த்தாள் பூச்செண்டு.


“பிரியணுங்கிற விஷயத்தை நீயும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டியா…?” கவலையுடன் கேட்டாள் மீரா.


“இப்பவே பிரிஞ்சுதானேக்கா இருக்கோம்…”


“நான் கேக்குறது…” அவள் இழுக்க “ஓ… டைவர்ஸ் பத்தி கேக்கிறீங்களா…?” கண்களை அகலமாக்கி இவளும் கேட்க மீராவும் ஆம் என்று தலையசைத்தாள்.


“நடக்காத ஒரு விஷயத்தைப் பத்தி நான் ஏன்க்கா கவலைப்படணும்…” பூச்செண்டிடம் இருந்து சீரான பதில்.


“பூச்செண்டு…”


“என் மாமு டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருப்பார்னு நினைக்கிறீங்களா…?”


“பண்ணிருக்க மாட்டார்னு நீ நம்பறியா…? அண்ணன் இவ்வளவு இறுக்கமா ஸ்டபர்னா இருந்து நான் பார்த்ததே இல்ல… இப்போ வரைக்கும் ரொம்ப நார்மலா இருக்கார். அவர் எடுத்த முடிவுல தெளிவா இருக்காருன்னுதான் எங்களுக்கு தோணுது… நீ கையெழுத்து போட்டு இருக்கக் கூடாது பூச்செண்டு…” கவலையுடன் கூறினாள்.


“மெல்லிய சத்தத்துடன் சிரித்தவள் “நிம்மதின்னு ஒரு வார்த்தை என் மாமு வாயில இருந்து வந்தது… அதுக்காகத்தான் கையெழுத்து போட்டேன். ரொம்ப நார்மலா இருக்காரா…? இருக்கட்டுமேக்கா… அவர் அப்படி இருக்கணும்னு தானே நானும் ஆசைப்படுறேன்… அவர் வேதனை எல்லாம் வடிய அவருக்கான டைமை அவர் எடுத்துட்டு இருக்கார்… ஆனா எனக்கு தெரியும்… அமைதியும் அந்த தனி அறையும் என் மாமுவை எப்படி எல்லாம் கசக்கிப் பிழியும்னு எனக்கு தெரியும்… இதோ எப்பவெல்லாம் குழந்தையோட அசைவை என்னால உணர முடியுது. இதே அசைவை மனசளவுல என் மாமு உணர்ந்துட்டுதான் இருப்பார்… எனக்கு கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும்… என் மாமுவோட ஆசையும் அதுதான்… அவ ஜனிக்கும்போது அவளை கையில ஏந்துற முதல் ஆளு அவராதான் இருப்பார். அதுவும் எனக்கு தெரியும்…” கண்களில் பளபளப்பாய் மெல்லிய கண்ணீர் கீற்றுடன் நம்பிக்கை ஒளிர பேசியவளை விழி அகற்றாது பார்த்தாள் மீரா.


“உனக்கு அண்ணன் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கா பூச்செண்டு…?”


“நான் நம்பாம…?” புருவம் உயர்த்தி புன்னகைத்தாள்.


“அப்புறம் ஏன் அவர் கூட சேர எந்த முயற்சியும் எடுக்கல..? எதுக்கு இத்தனை நாளா பிரிஞ்சு இருக்கணும்…? வெளிப்படையா பேசிடலாமே…”


“இந்த பிரிவை எனக்காக நான் உருவாக்கிட்டேன்க்கா… என்னை மாதிரி முட்டாளா என் பொண்ணு வந்துடக்கூடாது… நிறைய அலசி ஆராய்ஞ்சு வாழ்க்கையை கத்துக்கணும்… அதை கத்துக் கொடுக்கிற தகுதியை முதல்ல நான் வளர்த்துக்கணும் இல்லையா… அதுக்காகத்தான் இந்த இடைவெளி… நாங்க பிரிஞ்சு இருந்தாலும் எங்க உறவு முறிஞ்சு போயிடல… என் புருஷனோட முழு நம்பிக்கைக்கும் நான் ஆளாகணும்… அதுக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் நான் தனிச்சு இருக்க தயார்… ஆனா எத்தனை வருஷம் ஆனாலும் என்னை தவிர அவர் வாழ்க்கையில வேற எந்த பொண்ணும் நுழையவே முடியாது…” ஆணித்தரமாய் கூறினாள்.


“அப்போ விசித்ரா அனுப்பின போட்டோ…?”


“ஏஐல நான் உங்களுக்கு ஒரு போட்டோ ரெடி பண்ணி கொடுக்கட்டுமா…” என்று சிரித்தவள் “என் மாமுக்கு என்மேல அம்புட்டு கோபம்….” உதடு பிதுக்கி மீண்டும் சிரித்தாள்.


“அதுக்காக இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே பிரிஞ்சு இருப்பீங்க…?”


“இனி காலம்பூரா பிரியாம சேர்ந்து வாழறதுக்கு இந்த பிரிவு எங்களுக்கு தேவைப்படுதுக்கா…”


நிதானமும் தெளிவும் நம்பிக்கையும் மிளிர்ந்த அவள் பேச்சில் மீராவே அதிசயத்துப் போனாள். அவர்கள் அங்கிருந்து சென்றிருக்க ஆடாமல் அசையாமல் கண்களில் முட்டி நின்ற நீரின் பளபளப்புடன் இதழில் தோன்றிய கர்வப் புன்னகையுடன் சுவற்றுக்கு மறுபக்கம் நின்றிருந்தான் தரணி. காற்று வாங்க மேலே வந்தவனுக்கு காற்றுவாக்கில் வந்த செய்தியானாலும் அனைத்தும் தன்னவளின் ஆழமான காதலையும் நம்பிக்கையையும் சுமந்து வந்த செய்தி. அவன் மனதைப் படித்து ஒப்புவித்து சென்றுவிட்டாளே… இந்த புரிதல் னதானே அவனுக்கு வேண்டும்… அவளது இந்த தெளிவும் தீர்க்கமும்தானே அவன் எதிர்பார்த்தது… இதயம் பூரிப்பில் கனத்தது.


ஆனாலும் உடனடியாக ஓடிச் சென்று அவளை அணைத்து மகிழ்ந்து விடவில்லை. அவளை ஒவ்வொரு முறை செக்கப்பிற்கு அழைத்துச் சென்று வந்தவுடன் அனைத்து ரிப்போர்ட்களையும் அவனது வாட்ஸ் ஆப்பிற்கு தெளிவாக அனுப்பி கொண்டு இருக்கிறாரே அவனது மாமனார் மாணிக்கவேல். பிரசவம் ஆகும்வரை தொலைதூரப் பயணம் தவிர்க்கப்பட வேண்டும்… முழுமையான ஓய்வும் கவனிப்பும் அவசியம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவளை முழுதாய் அறிந்த பின்பு அவளது அணைப்பையும் குழந்தையின் அசைவையும் ஸ்பரிசித்து விட்டால் அவன் அவனாக இருக்க மாட்டான்… அந்த நெருக்கத்திற்குப் பின் அவளும் விலகி இருக்க ஒப்புக்கொள்ள மாட்டாள். மீண்டும் நிதானமாய் முடிவெடுத்து மேலும் இரண்டு மாதங்கள் காதலை சுமந்த பிரிவை விரும்பியே அனுபவித்தான் தரணி. 


வளைகாப்பினை விமர்சையாக ஏற்பாடு செய்து முன்நின்று அவன் எடுத்துச் செய்த வேலைகளில் அனைவருக்கும் அனைத்தையும் உணர்த்தியும் இருந்தான். விவாகரத்து பத்திரத்தை மாணிக்கவேல் முன்னிலையில் என்றோ கிழித்துப் போட்ட விஷயம் அன்றுதானே வெளிச்சத்திற்கும் வந்தது.


“மாமனாரும் மருமகனும் கூட்டுக் களவாணித்தனம் பண்ணிருக்காக… எப்படியோ நல்லது நடந்தா போதுமே…” இது பாட்டியின் அங்கலாய்ப்புடன் கூடிய பூரிப்பு.


அன்றைய இரவு பல மாத பிரிவிற்குப் பின் தனிமையில் இருவரும்… வார்த்தைகளற்ற மௌனத்திற்கு வலிமை அதிகம்… பார்வைகள் பரிமாறிக் கொள்ளும் பாஷைகளுக்கு வீரியம் இன்னும் அதிகம்… மொழிகளைக் கடந்து விழிகளின் வழியே தேக்கி வைத்த காதலனைத்தும் தீர தீர திணிக்கப்பட்டது. போதும் பொங்கி வழிகிறது என்று இதயம் சிலிர்த்து கொண்ட வேளையில் தன்னவளின் முன் மண்டியிட்டு அவளை இடுப்போடு அணைத்து அவளுக்கும் அவன் மகவுக்குமான ஒற்றை முத்தத்தை அழுத்தமாய் வயிற்றில் பதித்திருந்தான் தரணி.


சிலிர்த்து கொண்டாள் மனைவி…


சிரித்துக் கொண்டாள் மகளரசி… செல்லமாய் அவன் கன்னத்தில் பிஞ்சுக் கால்களால் உதைத்து…


கண்ணீருடன் மீண்டும் ஒரு முத்தம்… உருண்டு ஓடினாள் வேறுபுறம்… கண்மூடி அங்கேயே சாய்ந்திருந்தான் நிமிடங்கள் தாண்டி…


“மாமு…” அவன் தலை கோதியபடி வந்த மனைவியின் மந்திர வார்த்தையில் மலர்ந்து சிரித்தவன் எழுந்து நின்றான்.


“ஐ லவ் யூ பொக்கே… எந்த விளக்கமும் வேணாம்டி… எனக்கு உன்னை தெரியும்… உனக்கு என்னை தெரியும்… நம்ம பாப்பாவுக்கு நம்மை தெரியும்… இது போதும்… ஐ லவ் யூ சண்டிராணி…”


முத்தங்களுக்கு நடுவில் வார்த்தைகளும் சிதற பிரிவில் சேகரித்து வைத்த முத்திரைகள் அனைத்தையும் சத்தமாய் பதித்து அவள் தோளில் மொத்தமாய் புதைந்து கொண்டான் தரணி.


இணை பிரியா அன்றில் பறவைகளாய் யாராலும் வாழ்ந்து சலித்து விட முடியாது…


திருமண வாழ்க்கையில் இணக்கமும் வேண்டும்… பிணக்கமும் வேண்டும்…


ஊடலற்ற கூடல் ஒவ்வாமைதான் வாழ்க்கையில்…


பிரிவும் சண்டையும்கூட புரிதலின் போதிமரம்தான்…


இந்த சூட்சும மந்திரத்தை உணர்ந்தவர்களே காதலில் வென்று மோதலிலும் மோகித்து உயிர்ப்பான வாழ்க்கையுடன் உலகை வெல்வர்.


இதோ வெற்றிக் களிப்பில் தரணிதரன் பூச்செண்டு. 


தன் பூச்செண்டினை காலம் முழுக்க நாடிக்கொண்டே இருக்கும் பொன்வண்டுதான் அவன்…


அவன் சண்டிராணியோடு செல்லச் சண்டைகள் இனிவரும் நாட்களிலும் தொடரும்… காதலை மட்டுமே சாட்சியாகக் கொண்டு…


                                சுபம்


Leave a comment


Comments


Related Post