இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -52 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 09-06-2024

Total Views: 13780

“ஏண்டா இப்படி பண்றீங்க? உங்க ரெண்டுப் பேருக்கும் அறிவே இல்லையா? நீங்க என்ன தான் பொத்தி பொத்தி வெச்சாலும் நந்து அண்ணா முடிவு பண்ணிட்டா தூக்கிட்டுப் போய்க் கூட தாலிக் கட்டிடும். மூடிட்டு உங்க வேலையை மட்டும் பாருங்க, நடக்கணும்னு இருந்தா யாராலையும் மாத்த முடியாது.” என இருவரையும் எரிப்பது போல் பார்த்து விட்டுச் சென்றாள் ஷாலினி.


அவள் சொல்வதும் சரி தானே நந்தன் நிலா தான் வேண்டும் என்று முடிவு செய்தப் பிறகு அதை யாரால் தடுக்க முடியும்.

“டேய் எருமை மாடே, நான் அவளுக்கு சோறு கொடுக்க தான் வந்தேன் என்னோமோ நான் வேவுப் பார்க்க வந்த மாதிரி பேசி வெச்சிருக்க.”

“நான் பார்த்துக்கறேன்னு தாண்டா சொன்னேன்.”

“இனி வாயைத் தொறக்காத சாமி உனக்கு புண்ணியமா போவும்.” என்றவன், “ஒரு பங்சனை நிம்மதியாக என்ஜோய் பண்ண முடியுதா..?“ என்று கீழே விழுந்த உணவை சுத்தம் செய்துவிட்டு சாப்பிட சென்றான்.

வெளியே வந்த நிலாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. இதுநாள் வரையிலும் எதற்கும் கட்டுப்பாடு விதிக்காத அம்மாவும், அண்ணனும் இன்று தனியாக விட்டு செல்லவே யோசிக்கிறார்கள், “அப்படி என்ன தப்பு செஞ்சேன்?” என்று அவளை அவளே கேட்டுக் கொண்டவளுக்கு கதறி அழ வேண்டும் போல் இருந்தது.

அவர்கள் பாதுகாக்க பாதுகாக்க தான் நந்தனைப் பார்க்க வேண்டும், அவனுடன் பேச வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது. கண்களால் மண்டபத்தை ஒரு சுற்று சுற்றினாள்.

அவன் இருப்பது போன்ற அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

வளவன் சாதாரணமாக விட்டிருந்தாலே நிலா நந்தன் பக்கம் திரும்பிருக்க மாட்டாள். நிலாவை நந்தனிடம் இருந்து பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவனிடம் நிலாவை நெருங்க வைத்துக் கொண்டிருந்தனர்.

நிலாவின் மனதில் இப்போதும் கூட நந்தனின் மீது காதல் என்பது துளியும் இல்லை என்று நினைக்கிறாள். ஆனால் எதிர்காலம் சிறிய துளியைக் கூடப் பெருவெள்ளமாக மாறும் என அவள் அறியவில்லை.

அன்று இரவு வீட்டிற்கு கிளம்பும் போது மணி 12 க்கு மேல் ஆகிவிட்டது. மண்டத்தில் இருந்து கோவமாக போன நந்தன் வீட்டிற்கு தான் போயிருப்பான் என அனைவரும் நினைத்திருக்க, அவனோ எங்குச் சென்றான் என்றே தெரியவில்லை.

“மார்த்தி நந்துவைக் காணான்டா எங்க போனானோ போன் பண்ணிப் பாரு.”என கிருஷ்ணம்மாள் வீடே அலற கத்தினார்.

“அவன் என்ன சின்னக் குழந்தையா ஆயா..? வந்துருவான்.” என்ற யுகியை மார்த்தியும் கிருஷ்ணம்மாளும் ஒரு சேர முறைத்தனர்.

“அவன் கிடக்கறான் நீ ராசாவுக்கு போனைப் போடு.” என்றார் வேகமாக. மார்த்தியும் நந்தனுக்கு அழைத்துப் பார்க்க அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“என்னாச்சிடா?”

“போன் சுவிட்ச் ஆப்ம்மா”

“ஐயோ பையன் எங்க போனான்னு தெரியலையே?” என வீடே அதிர அதிர ஒப்பாரி வைக்க..

“ஏய் கிழவி இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கற? அவன் என்ன செத்தா போய்ட்டான்?”


“டேய், யுகி.. சாவடிச்சிருவேன்டா உன்னைய” என ஆள் ஆளுக்கு கத்த.

“என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஷாக் ஆகறிங்க, அவனே நாலுப்பேரை கண்டுபிடிச்சிக் கொடுக்கிற இடத்துல இருக்கான். அவனைக் காணலன்னு ஒப்பாரி வெச்சா சத்தம் போடாம இடுப்புல தூக்கி வெச்சிக் கொஞ்சவா செய்வாங்க? எல்லோரும் போய் படுங்க எங்கையாவது சுத்திட்டு காலையில வருவான்.” என்று கோவமாக சொல்லிவிட்டு நிற்காமல் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

மனம் கேக்காமல் மேலும் நான்கு முறை அழைத்துப் பார்த்தார் மார்த்தி. இருந்தும் அழைப்பு போகாமல் போக்கு காட்ட, மனமே இல்லாமல் தூங்கச் சென்றார். 

எப்போதுமே தந்தைக்கு பெண் பிள்ளைகளின் மீது தான் பிடித்தம் இருக்கும் மார்த்தி கொஞ்சம் வித்தியாசமாக நந்தனின் மீது உயிரையே வைத்திருந்தார். அவன் பிறந்து அப்பா என்று அழைத்ததும் அவர் அடைந்த உவகைக்கு அளவேயில்லை. இன்று அந்த பிள்ளையைக் காணவில்லை என்றதும் கலங்கி விட்டார். 

போக்குவரத்து இல்லாத சாலையில் காரை நிறுத்திவிட்டு காரின் பேனட்டில் படுத்திருந்தவன் வானில் தெரிந்த நிலாவை வெறித்துப் பார்த்தான். 

அந்த நிலாதான் அவன் பக்கம் இல்லை இந்த நிலாவாவது அவன் காண தன் நிலை நிறுத்தப்படும் என்று பார்த்தால், அதுவும் நந்தன் பார்க்கக் கூடாது என மேகத்தின் பின் சென்று மறைந்து கொண்டது. நிலைத்த கண் நிலைத்தே இருந்தது நந்தனுக்கு. 

நிலா விஷயத்தில் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறான். அதை தவறு என்று அவன் மனமும் ஒப்புக்கொள்கிறது. அனைவரிடமும் ஒரு மன்னிப்பு கேட்டு இறங்கி வந்து பேசியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அவன் அகந்தையை விட்டு இறங்கி வர வேண்டுமே, சிறு வயதில் இருந்தே யாருக்காகவும் இறங்கி வந்ததில்லை, இதுவரைக்கும் சாரி என்று யாரிடமும் சொல்லியதில்லை. 

சொல்லி சொல்லிப் பழகியிருந்தால் மன்னிப்பு என்ற வார்த்தை வாயில் வரும் அப்படின்னா என்ன? என்றுக் கேப்பவன் எப்படி இறங்கி வந்து மன்னிப்பு கேட்பான்? 

வானில் நிலா மேகத்தின் பின் மறைவதும் எட்டிப் பார்ப்பதுமாக இருக்க, நந்தனின் இறுகிய முகத்தில் மெல்லிய முறுவல் வந்துப் போனது. அதை ரசித்தான். அவனவளே எட்டிப்பார்ப்பது போல் இருந்தது. 

அவளும் அப்படி தானே நந்தனைக் கண்டால் ஒன்று கதவின் பின்னலோ இல்லை யுகியின் பின்னலோ மறைந்து தானே எட்டிப்பார்ப்பாள். அவளை நினைக்கும் போது மலையளவு கோவம் இருந்தாலும் பனிப் போல் விலகுவதை உணர்ந்தவன். 

“ஹா.. ரெடியா இருடி இந்த நந்தன் யாருன்னு இனி தான் பார்க்கப் போற, நான் முடிவு பண்ணிட்டேன் இந்த நந்தனுக்கு நிலாதான்னு.” என்று சத்தமாக சொன்னவன், பேனட்டை தட்டி எழுந்து அமர்ந்தான்.


Leave a comment


Comments 1

  • P Priyarajan
  • 3 weeks ago

    👌👌👌💕💕💕


    Related Post