இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 26) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 10-06-2024

Total Views: 12550

உனக்கென்றே உயிர் கொண்டேன் 26

வெண்பாவின் காதல் அஸ்வினின் மூலமாக தெரிந்த அடுத்த நொடி, சண்முகம் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. தேவராஜிற்கு அழைத்துவிட்டார்.

தேவராஜ் தோட்டத்தில் காற்றாட அமர்ந்திருக்க... உடனடியாக அழைப்பை ஏற்றிருந்தார்.

"சொல்லுங்க மாமா!"

சண்முகம் தடுமாறிட...

"உங்க முடிவு எதுனாலும் எங்களுக்கு சரிதான் மாமா" என்றார் தேவராஜ்.

அடுத்து சண்முகம் எதையும் யோசிக்காது அஸ்வினிடம் சொல்லிய அனைத்து காரணத்தையும் அவரிடமும் கூறினார்.

அச்சமயம் தமிழ் தேவ்ராஜ்ஜுடன் தான் இருந்தான். தமிழ் அருகிலிருப்பதை அவரிடம் சொல்லி ஸ்பீக்கர் ஆன் செய்திருந்தார் தேவா.

சண்முகத்தின் தயக்கம் உணர்ந்தவன், தந்தைக்கு கண்காட்டிவிட்டு தானே பேசினான்.

"என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு மொழியை கொடுங்க. நிச்சயம் ஒரிடத்தில் கூட, அவள் வருந்த விட்டுவிடமாட்டேன்" என்றான். அந்த குரலிலிருந்த அழுத்தம், திடம் சண்முகத்தின் கலக்கம் யாவற்றையும் விரட்டியிருந்தது.

எவ்வித தடுமாற்றமுமின்றி சம்மதம் வழங்கினார்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமா" என்று தேவராஜ் சொல்ல...

"அஸ்வின், பூர்வி திருமணம் அன்றே தாலி கட்டி முடிந்ததும்... தாம்பூலம் மாதிரி மாத்திக்கலாம் தேவராஜ். உறுதிபடுத்திக்கிட்டால் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இது பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு உரித்தான பயம். உங்களுக்கும் புரியும் நினைக்கிறேன்" என்றார் சண்முகம்.

தேவராஜ் தமிழை ஏறிட அவன் கண்களை மூடி திறந்தான்.

"எங்களுக்கும் சம்மதம் மாமா" என்று தேவாராஜ் நிறைவாக சொல்ல...

"மொழியிடம் நான் பேசிக்கொள்கிறேன் தாத்தா. இப்போதைக்கு நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்" என்றான் தமிழ்.

"அம்முகிட்ட சொல்லாமல் எப்படிப்பா... எப்படியிருந்தாலும் தாம்பூலம் மாத்திக்க முதல் சொல்லியாகணுமே?" எனக் கேட்டார் சண்முகம்.

"நிச்சயம் சொல்லணும் தாத்தா..." என்று இடை நிறுத்திய தமிழ், "நீங்க சொல்லி அவள் சம்மதம் சொல்றதைவிட, நான் என் நேசத்தை சொல்லி அவள் ஒத்துக்கணும் நினைக்கிறேன். அதுதான் நன்றாகவும் இருக்கும்" என்றான்.

தமிழ் தன்னுடைய காதலுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான் என்பது பெரியவர்கள் இருவருக்கும் புரிந்தது. தேவராஜ் மகனுக்கு காட்டாது புன்னகைத்துக்கொண்டார். அதே புன்னகை சண்முகத்திடமும். தமிழின் வேண்டுகோளுக்கு சரியென ஒப்புக்கொண்டார்.

"எதுக்கும் உங்க தங்கச்சி ஏதும் பிரச்சினை பண்ணாமல் பார்த்துக்கோங்க தேவராஜ்" என்று சொல்லி சண்முகம் வைத்துவிட்டார்.

தெய்வானை செய்யவிருக்கும் பிரச்சினையால் தான் அன்று தமிழ், வெண்பா திருமணமே நடக்கவிருக்கிறது என்பதை அக்கணம் அறிந்தோர் யாருமில்லை.

தமிழுக்கு தன்னுடைய காதல் பெற்றவர்களின் சம்மதத்தோடு திருமண பந்தத்தில் கை கூடவிருப்பது பெரும் மகிழ்வை கொடுத்தது.

அக்கணத்தை தன்னுடைய மனதில் சிம்மாசனமிட்டு ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பவளிடம் கடக்க நினைத்தவன், சற்றும் தாமதியாது வெண்பாவுக்கு அழைத்துவிட்டான்.

மகனின் முகத்தில் விரவிய மகிழ்ச்சியை கண்ட தேவராஜுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்டது. இதைவிட வேறென்ன வேண்டும் அவருக்கு. தெய்வானை பேசிய அனைத்தையும் மகனின் புன்னகையில் தூக்கி தூரம் வைத்துவிட்டார்.

மகனின் சந்தோஷம் தன்னையும் தொற்றிக்கொண்ட மகிழ்வோடு வீட்டிற்குள் சென்றார்.

"ஹலோ..." உறக்க கலக்கத்தில் ஒலித்தது வெண்பாவின் குரல்.

"தூங்கிட்டியா?"

"நாள் முழுக்க அலைந்தது செம டயர்ட் தமிழ்."

வெண்பா தன்னுடைய பெயரை சொல்லிடவுமே அவள் முழு நினைவில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட தமிழ்...

"ம்ம்ம்... டைட் ஸ்லீப்" என்று வைத்திருந்தான்.

அதிகாலை கண் விழித்த வெண்பா, தமிழ் இரவு அழைத்திருப்பதை பார்த்துவிட்டு,

"என்ன பேசினோம்?" என்று யோசனை செய்திட... ஒன்றும் நினைவிற்கு வரவில்லை.

'அச்சச்சோ... தூக்கத்தில் ஏதும் உலறிட்டனோ?' என்ற கேள்வி மண்டையில் உதிக்க படப்படத்துப்போனாள்.

அந்த பதட்டத்தில் கால் டூயூரேஷனை கவனிக்கத் தவறியிருந்தாள்.

"அவங்க ஏதும் முக்கியமானது சொல்லியிருப்பாங்களோ?" 

நினைத்த நொடி வேகமாக தமிழுக்கு அழத்தவள், அவன் எடுத்ததும்...

"நைட் என்ன பேசினோம் சீனியர்?" என்று அவள் கேட்ட வேகத்திலேயே, 'பயபுள்ள எதையாவது உலறிட்டமோன்னு நினைத்து பயப்படுது' என்று கண்டுகொண்ட தமிழ் சீண்டிப்பார்க்க நினைத்தான்.

"லவ் யூ!"

"ஹான்..." வெண்பாவின் கருமணிகள் தெறித்து வெளியே உருண்டோடிடும் அளவிற்கு அவளது விழிகள் அகண்டு விரிந்தன.

"ஸ்...சீ...ஸ்னியர்..." அவள் திணறி மருகிட...

தமிழிடம் அடக்கப்பட்ட சிரிப்பு.

"நீங்க தான் ஜூனியர் சொன்னீங்க!"

"நானா?"

"எஸ்..." அழுத்தமாக அவன் மொழிந்திட...

"இல்லை... இருக்காது" என்று சிணுங்களாக மொழிந்திட்டாள் வெண்பா.

"ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃபிரம் யூ வெண்பா." கரடுமுரடாக ஒலித்திட்ட தமிழின் குரலில் வெண்பாவின் கண்ணீர் சட்டென்று கன்னத்தை நனைத்திட்டது.

அவன் அவளது பெயரை அடிக்கடி சொல்லியதே கிடையாது. என்றோ அத்தி பூத்தார் போல் மொழி என்று விளித்திடுவான். அதில் அத்தனை உணர்வுகள் குவியல்களாய் நிறைந்திருக்கும். அவனின் அத்தகைய மென்னழைப்பு பல ஜாலங்களை அவளுள் தோற்றுவித்திடும். தூரத்தில் இருந்தாலும் கூட, வெண்பா என்று அழைத்ததில்லை. இன்று வெண்பா என சொல்ல தன்னிலை இழந்து வருந்தினாள்.

"சீ...னியர்... அது... நான், வந்து..."

"எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு வேலையிருக்கு. பின்னர் பேசிப்போம்" என்று கூறியவனின் செவிகளில் அவளின் தழுதழுப்பு மெல்ல கேட்டிட...

"ஹேய்..." என்றவன், "அம் ஜஸ்ட் கிட்டிங்'டாம்மா" என்றான்.

"நிஜமா!"

"ஹ்ம்ம்..."

"கொஞ்ச நேரத்தில் பயம் காட்டிட்டிங்க சீனியர்" என்று சொன்னவள், 'இதுதான் சாக்கென்று நீங்க சொல்லியது நிஜமென சொல்லிடலாமா?' என ஒரு கணம் மட்டுமே யோசித்தாள்.

பின்னர், 'அண்ணா கல்யாணம் முடியட்டும்' என்று நினைத்துக்கொண்டாள்.

"அழ வச்சிட்டனா?"

வெண்பாவிடம் பதிலில்லை.

"சாரி." எவ்வித ஈகோவுமின்றி பட்டென்று மன்னிப்பு வேண்டியிருந்தான்.

"இட்ஸ் ஓகே சீனியர். ஜஸ்ட் ரேக்கிங் மாதிரி தானே இது. பட் ஷாக் ஆகிடுச்சு" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட மனமின்றி, இதைப்பற்றி ஆரம்பித்தாயிற்று அப்படியே பேச்சினை நீட்டித்து காதலை சொல்லிவிடலாம் என எண்ணினான்.

"யாரையும் லவ் பன்றியா?"

"ஹான்!"

தமிழ் இப்படி கேட்பானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய காதலை அவன் உணருகின்றான் என்று அவள் அறிவாள். அப்படி இருக்கையில் அவனது இக்கேள்வி அவளை எதற்கென்று அலைக்கழித்தது.

"சொல்ல விருப்பமில்லைனா விடு" என்றவன்,

"பட் நான்" என்று ஆரம்பிக்க...

அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் இல்லையென்றால் தானே தன் காதலை சொல்லிடுவோமென அவன் பேச வருவதை கவனியாது...

"தாத்தா கூப்பிடுறார். அப்புறம் கால் பன்றேன் பாஸ்" என்று படபடவென கூறி வைத்திட்டாள்.

இணைப்புத் துண்டிக்கப்பட்ட  அலைபேசியை முகத்திற்கு நேரே உயர்த்தி பிடித்தவன்...

"இந்த ஜென்மத்தில் நீ அவகிட்ட சொல்லப்போவதில்லை" என வைத்திட்டான்.

இருப்பினும் இருவருக்குமிடையேயான அர்த்தமற்ற சிறு சிறு உரையாடல்களையும் இன்பமாய் ரசித்திட்டான்.

தமிழ் எஸ்டேட்டிற்கு செல்ல கிளம்பி ஆயத்தமாகி வர, 

அவனின் அலைபேசி கேட்டு நின்றாள் வர்ஷினி.

"எதற்கு?" எனக் கேட்டுக்கொண்டே அவளிடம் கொடுத்தவன், உணவு மேசையில் சென்று அமர்ந்தான்.

புலனம் திறந்து மகேஷின் எண்ணிற்கு தமிழ் அனுப்பியதைப்போல் கோவிலுக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியிருந்தாள்.

என்னவென்று வாங்கி பார்த்தவன்,

"என்னாச்சு?" எனக் கேட்டான்.

"பேசணும் அத்தான். என் கால், மெஸேஜஸ் எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை" என்றாள். கலங்கிவிட்ட கண்களோடு.

"ஹ்ம்ம்" என்ற தமிழ் வர்ஷினியிடம் மேற்கொண்டு என்னவென்று கேட்டுக்கொள்ளவில்லை. அவனுக்கு அவளிடம் கேட்பதைவிட நண்பனிடம் கேட்டுக்கொள்வது எளிது.

தமிழ் காலை உணவு முடித்து வெளியேற மகேஷ் அழைத்திருந்தான்.

"என்னடா மெசேஜ் அனுப்பியிருக்க? எதுக்கு? ஆபிஸ் கிளம்பிட்டேன் மச்சான். ஈவ்வினிங் மீட் பண்ணலாமா?" எனக் கேட்டு "நானும் உன்கிட்ட பேசிட்டு, தேவா அப்பாகிட்ட பேசனும்டா" என்றான்.

வர்ஷினி ஏதோ பிரச்சினை பண்ணுகிறாள் என்று நொடியில் யூகித்துவிட்டான் தமிழ்.

"சரிடா" என்ற தமிழ் மீண்டும் வீட்டிற்குள் சென்று,

தெய்வானை எங்கென்று பார்த்துவிட்டு,

"மகேஷ் ஈவ்வினிங் வரேன்னு கால் செய்தான்" என வர்ஷினியிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

வெண்பா அறக்கப்பறக்க முதல் நாள் வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"நேற்று தானே மெயில் வந்தது சொன்னாய்? இன்னைக்கே ஜாயின் பண்ணனுமா?" வெண்பாவுக்கு உணவினை ஊட்டிக்கொண்டே சண்முகம் கேட்டார்.

"அதான் ஆர்டர் அனுப்பிட்டாங்களே தாத்தா ஜாயின் பண்ணனுமே! டிலே பண்ணக்கூடாது" என்றாள்.

"சுருளி அண்ணா ஸ்கூட்டி க்ளீன் பண்ணிட்டிங்கலா?" என்று கேட்டுக்கொண்டே பையினை எடுத்து வெண்பா தோளில் மாட்டிட...

"ஸ்கூட்டியில் போகப்போறியா?" என்று அதிருப்தியை காட்டினான் அஸ்வின்.

"ம்ம்ம்" என்றவள் துள்ளி குதித்தவளாக வெளியில் ஓட,

"ட்ரெயின் தான் வசதியா இருக்கும். ஒன் அவர் டிராவல். ஸ்கூட்டிலாம் வேண்டாம்" என்று மறுத்தான்.

"நீங்க எதுவும் சொல்லலையா தாத்தா" என்று அவரையும் கடிந்தான்.

"அவள் தான் நல்லா டிரைவ் பண்ணுவாளே! பின்ன எதுக்கு கவலைப்படுற நீ" என்று தாத்தாவும் வெண்பாவை வழியனுப்ப வெளியில் செல்ல... அஸ்வின் தமிழுக்கு அழைத்துவிட்டான்.

"ஹாய் மாம்ஸ்... என்ன காலையிலே என் ஞாபகம்?"

"வெண்பா ஜாப் ஜாயின் பண்ணப்போகிறாள்."

"ஹ்ம்ம்... தெரியும் மாமா! கொஞ்சம் முன்னால் மெசேஜ் பண்ணியிருந்தாள்."

"ஸ்கூட்டியில் போவேன்னு சொல்லிட்டு இருக்காள். நான் சொல்லிட்டேன் கேட்கமாட்டேன்கிறாள். லாங் டிரைவ். டயர்ட் ஆகிடுவாள். இவள் ஒழுங்கா போனாலும், எதிர இருக்கவங்க இழுங்கா வரணுமே! அதுவும் ஈவ்வினிங் இவ்வளவு தூரம் தனியா" என்று தன் கவலையை கூறினான்.

தமிழுக்கும் புரிந்தது. அவனது கவலைக்கான் காரணம். அவனுக்கும் சிறு பயம் தான். இந்த பயம் விந்தையானது. நமக்கு அதிகம் பிடித்த ஒன்றின் மீது பயம் தானாக ஒட்டிக்கொள்ளும்.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கும் மேல்.

"நான் பேசுறேன் மாமா" என்று தமிழ் வைத்திட, அஸ்வின் தங்கையிடம் சென்றான்.

அதற்குள் தமிழ் வெண்பாவுக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தான்.

"கிளம்பிட்டியா?"

"டூ மினிட்ஸ் பாஸ்."

"எப்படி போற?" தானாகக் கேட்டு அறிவதைப்போல் கேட்டான்.

"ஸ்கூட்டி..."

"ஹோ" என்ற தமிழ், "உன் ஆபீஸ் பஸ் வருமே! பிடிக்கலன்னா ட்ரெயினில் போகலாமே! இல்லைன்னா மாமா பேக்ட்ரி போவாங்களே? மார்னிங் அவரோட போ. ஈவ்வினிங் ஆபீஸ் பஸ்ஸில் வந்திடு" என்றான்.

அவனின் பேச்சினை என்றுமே அவள் மீறியது இல்லையே! இதில் மட்டும் மீறிடுவாளா என்ன?

அவ்வளவு நேரம் அஸ்வின் சொல்லி கேட்காதவள், தமிழ் சொல்லியதும் ஒப்புக்கொண்டவளாக,

"ஸ்கூட்டியை காராஜில் நிறுத்திடுங்க சுருளி அண்ணா" என்றதோடு, "என்னை ஸ்டேஷனில் டிராப் பண்ணிடுங்கண்ணா" என்றாள் அஸ்வின்.

"யாரும்மா ஃபோனில்...?"

"தமிழ் தாத்தா" என்றவள், "இவ்வளவு தூரம் ஸ்கூட்டியில் தனியா வேண்டாம் சொல்றாங்க" என்றாள்.

"அஸ்வினும் அதேதானே சொன்னான்?" உள்ளுக்குள் பேத்தியின் மனதை கண்டு புன்னகைத்தவராகக் கேட்டார். 

"என்னவோ அவங்க சொன்னா எதையும் மீற முடியுறதில்லை தாத்தா" என்றவள் அஸ்வினின் பார்வையை முகம் சுருக்கி தாங்கியவளாக மன்னிப்பு வேண்டினாள்.

"எல்லாம் சொல்றவங்க சொன்னாதான் கேட்பாங்க தாத்தா" என்ற அஸ்வின், வெண்பா சண்முகத்தை தன் கூற்றில் அதிர்ந்து பார்த்ததை கண்டு சிரித்தவனாக காரில் ஏறினான்.

"தாத்தாகிட்ட மாட்டிவிட பாக்குறீங்களா அண்ணா?" முன்பக்கம் அஸ்வினின் அருகில் ஏறி அமர்ந்து வெண்பா கேட்டிட... அஸ்வின் சிரித்தானே தவிர ஒன்றும் சொல்லவில்லை.

"நானே இன்னும் சீனியர் விஷயத்தை தாத்தாவிடம் சொல்லலையேன்னு கில்டில் இருக்கேன் அஸ்வின் அண்ணா" என்றாள்.

"எப்படியும் சொல்லணுமே அம்மு?"

"ம்ம்ம்... இப்போ தாத்தாக்கும் அவங்களைப்பற்றி கொஞ்சம் தெரியுமே அண்ணா. ரிஜெக்ட் பண்ண வாய்ப்பில்லைன்னு தோணுது. உங்க மேரேஜ் முடியட்டும் சொல்லிடுறேன்" என்றாள். இவர்கள் அனைவரின் சம்மதமும் தன்னுடைய காதலுக்கு கிட்டிவிட்டது எனும் உண்மை அறியாது.

அஸ்வினால் தங்கையிடம் உண்மையை சொல்ல முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தபோதிலும், தமிழுக்காக அமைதி காத்தான்.

அஸ்வின் கோயம்புத்தூர் சென்று அவள் பணியில் சேரவிருக்கும் அலுவலகத்திற்கு முன்பே அவளை இறக்கிவிட்டான்.

"ஈவ்வினிங் முடிந்தால் வரேன் அம்மு. இல்லைன்னா, ஆபீஸ் பஸ் ஆர் ட்ரெயினில் ஏறிட்டு இன்பார்ம் பண்ணு" என்றவன், தங்கைக்கு வாழ்த்துக்கூறி சென்றான்.

வெண்பா உள்ளே சென்றிட, ஏதோ எண்ணத்தில் உழன்றவனாக அவளுக்கு முன்பு திறந்திருந்த மின்தூக்கியில் நின்றிருந்தான் மகேஷ்.

பார்த்ததும் அவன் யாரென்று வெண்பாவுக்கு தெரிந்திருந்தது. தமிழின் நண்பனென்று. தமிழ் புகைப்படம் காட்டியிருக்கிறான்.

"ஹாய்" என்று வெண்பா கையசைத்தபடி மின்தூக்கியில் ஏறிட, மகேஷின் நிலையில் மாற்றமில்லை.

"என்னாச்சு இவங்களுக்கு?" என நினைத்தவள், தான் போக வேண்டிய தளத்திற்குரிய பொத்தனை அழுத்திட, சில நிமிடங்களில் தளம் வந்தது. மகேஷும் வெண்பா இறங்கிய தளத்தில் தான் இறங்கினான்.

அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அந்த மொத்த கட்டிடமும் ஒரே நிறுவனத்தின் பல தொழில்களை தன்னகத்தே வைத்துள்ளது.

"மகேஷ் அண்ணா!"

வெண்பாவின் விளிப்பில் தான் சுற்றம் உணர்ந்து திரும்பி பார்த்தான் மகேஷ். அவனுக்கு வெண்பா யாரென்று தெரியவில்லை. அவளுக்கு எப்படித் தன்னை தெரியுமென்றும் தெரியவில்லை.

"ஹார்டுவேர் டிப்பார்ட்மெண்ட் எங்கிருக்கு?" என்று அவள் கேட்டிட, மகேஷுக்கு கீழ் பணி புரியும் நபர் ஒருவர் இவனை அழைத்திட, வெண்பா யாரென்று கேட்க வந்தவன்,

"நியூ ஜாயினியா?" எனக் கேட்டு அதற்கு வெண்பா ஆமென்றதும், அவள் கேட்ட துறை இருக்கும் பகுதிக்கு வழி கூறினான்.

"தேன்க்ஸ் ண்ணா" என்றவள், "அதுதான் உங்க கேபினா?" என்று தங்களுக்கு நேரெதிரே 'திரு.மகேஷ் எச்.ஆர்' என கதவில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகை தாங்கியிருந்த அறையினை சுட்டிக்காட்டிக் கேட்டிவள், பின்பே உணர்ந்து தான் முதலில் பார்க்க வேண்டிய நபரே அவன் தான் என்பது விளங்கி அசடு வழிந்தாள்.

வெண்பா அண்ணா என்றழைப்பதில் அவளுக்கு தன்னை தெரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்டவன், எப்படியென பின்னர் கேட்டுக்கொள்ளலாமென நினைத்து,

"நீங்க அங்க வெயிட் பண்ணுங்க. வந்திடுறேன்" என்று தன்னுடைய அறைக்கு முன்னாலிருந்த இருக்கையில் வெண்பாவை அமர வைத்த மகேஷ், தன்னை அழைத்த நபருடன் மற்றொரு அறைக்குள் சென்று பத்து நிமிடத்தில் வெளியில் வந்தான்.

தன்னுடைய கேபினுக்கு சென்றவன், இரண்டு நிமிடங்களில் வெண்பாவை உள் அழைத்திருந்தான்.

"சின்ன மீட்டிங். சோ, வெயிட் பண்ண வச்சிட்டேன். உங்க டிப்பார்ட்மெண்ட் மேனேஜர் லீவ். நான் தான் உங்களுக்கு டுடே கைய்ட் பண்ணியாகனும்" என்று சொல்லிக்கொண்டே வெண்பாவிற்கு தனக்கு முன்னிருந்த இருக்கையை உட்கார கை காண்பித்தான்.

அந்நேரம் அவனது அலைபேசி ஒலிக்க சைலண்ட் செய்தவன், வெண்பாவிடம் சில காகிதங்களை நீட்டி கையெழுத்திடக் கூறினான்.

அவள் அதிலுள்ள விதி முறைகளை படித்து பார்த்து கையெழுத்து போடுவதற்குள் பலமுறை அழைப்பு வந்துவிட்டது. மகேஷ் எடுக்கவில்லை. 

மீண்டும் மறுமுறை ஒலித்திட, இம்முறை வெண்பா தலையுயர்த்தி பார்த்திட, முகம் கடுகடுக்க அழைப்பை ஏற்று...

"அம் பிஸி ரைட் நவ். தமிழுகிட்ட பேசிட்டு உன்கிட்ட பேசுறேன்" என்று கடித்த பற்களுக்கு இடையே மெல்லொலியில் சீற்றமாகக் கூறியவன் வைத்திட்டான்.

எத்தனை மெதுவாக பேசியும் வெண்பாவிற்கு கேட்டது.

மகேஷ் ஏதோ கோபத்தில் இருக்கிறான் என்பது புரிந்தது. அவன் தமிழ் என்றதில் இருவருக்கும் ஏதும் பிரச்சினையோ என நினைத்தவள் அவனுக்குத் தன்னை யாரென்றே தெரியாத நிலையில் எப்படி கேட்பதென அமைதியாக இருந்தாள்.

இந்த கோபத்தில் வெண்பாவுக்கு தன்னை எப்படித் தெரியும் என்பதை கேட்க மகேஷ் மறந்திட்டான்.

அவளுடைய ஆர்டரினை மேலோட்டமாக பார்த்தவன்,

"நான் வெளியில் காட்டினேனே... அந்த ஸ்டெப்சில் போனீங்கன்னா ஹார்டுவேர் டிப்பார்ட்மெண்ட். அங்கு சுமன் ஒருத்தர் இருப்பார். ரிப்போர்ட் பண்ணுங்க. நாளைக்கு உங்க மேனேஜர் வருவார். பார்த்திடுங்க" என்று அவள் கையெழுத்திட்ட காகிதங்களை வாங்கி பத்திரப்படுத்தினான்.

"தேன்க் யூண்ணா" என்றவள் நாக்கை கடித்து, "சாரி" என்றவளாக இருக்கையிலிருந்து எழுந்து அவன் முன் மேசையில் தன் கையை வைத்து எடுத்தவளாக திரும்பி நடந்தாள்.

என்னவென்று பார்த்த மகேஷுக்கு சட்டென்று அவள் யாராக இருக்கக்கூடுமென்று ஒரு அனுமானம்.

"வெண்பா" என்றழைத்தவன், அவள் கதவில் கை வைத்தபடி திரும்பியதும்...

"மொழி வெண்பா?" எனக் கேட்டிருந்தான்.

ஆமென்று புன்னகைத்தாள்.


    


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 3 weeks ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌 daily poda matinkala?

  • P PMKK024 @Writer
  • 2 weeks ago

    ரொம்ப நன்றி சிஸ்... இனி தினமும் போடுறேன் சிஸ். விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததில் கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது. தமாதத்திற்கு சாரி சிஸ்.


    Related Post