இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 11-06-2024

Total Views: 5794

பாகம்-9

மறு  நாள் காலை,

ஏதேதோ   கற்பனைகளை அனுபவித்தவள் அப்போதுதான் எழுந்து கொள்ள மனமில்லாமல் எழுந்து காபி குடிக்கத்  தொடங்கினாள் .இயற்கையை அனுபவித்தாள் . சிட்டுக்  குருவிகள் கத்தி  கொண்டிருந்தன. உருவத்திற்கு மீறிய குரல் தான். நிரஞ்சனாவின் மனதின் குரலுக்கு  உடலும் உதடும்  தபேலா வாசித்தது. சிட்டுக் குருவியின் ரீங்காரத்திற்க்கா? அல்லது வேறு  ஏதாவது விஷயமா?வம்பு கேட்பது  எனக்குப் பிடிக்காது. ஆனால் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமே.இதோ நான் இல்லை. அவளே  சொல்வாள்.

அவன் போன் அழைத்தது. அவள்தான் .  அழைப்பை ஏற்றான்.
"குட் மார்னிங் செந்தில்" குரல் சாதாரணமாக  இருந்தது.
"குட்  மார்னிங் நிரஞ்சனா" 
 "என்ன இவ்ளோ காலையிலேயே  கூப்டுருக்கீங்க? எனி ப்ராப்லம்? எல்லாம் சரி தானே?" குரலில் சற்று பயம் இருந்தது.
"ஏங்க நாம் ரெண்டு பேரும் பார்த்தாலே, பேசினாலே பிரச்சனையாத்தான் இருக்கணுமா? சந்தோசமா எதுவும் இருக்காதா?"  இயல்பாகப் புன்னகைத்தாள் . 
"அதுவும் சரி தானே"அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. 
"சரி! சாரி! சொல்லுங்க" கண்களைத் துடைத்து தூக்கத்தை விரட்டினான் .
"சரியா? சாரியா? அவனிடம் ஏனோ பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. 
"ரெண்டுமேத் தான்" 
அவன் பதிலுக்கு அவள் மெல்லியதாகப் புன்னகைத்தாள்  .
அண்ணன் காலையிலேயே யாரிடமோ கடலை வறுத்துக் கொண்டிருந்தான்.  தங்கைகள் குறுகுறுவென ஆவலாகப் பார்த்தும் பார்க்காதது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
"அது சரி! எதுக்கு கால் பண்ணீங்க? சொல்லவே மாட்டேங்கறீங்களே".
"ஓ ! சாரி ! தேங்க்ஸ்" மெல்லிய புன்னகையுதிர்த்தாள் .
"சாரியா? தாங்க்ஸா? "  அவன் குரல் ஸ்டைலாக இருந்தது. 
"கால் பண்ண விஷயத்தை சொல்லாததுக்கு சாரி. நேத்து நீங்க பண்ண உதவிக்கு தேங்க்ஸ்" தெளிவாக்கினாள் .
"அவ்வளவுதானா?" அவனின் ஆழ்ந்த குரல் மயக்கியது.
 அவன் முகத்தை பார்க்க விரும்பியவள் வீடியோ காலுக்குமாற்றினாள் .
கட் பனியனிலிருந்தான் .தலை கலந்திருந்தது.
"என்னங்க  இது இப்படி சட்டுனு வீடியோ கால் போட்டுடீங்க?"
"ஏன்?"கையிலிருந்த காபியை உறிஞ்சினாள்.அது அவள் முகத்தையே சில நொடிகள் மறைத்து விட்டது.நிலவை  வானம் மறைப்பது போல.எனக்குத்  தோன்றவில்லை. அவனுக்குத்  தோன்றி இருக்கலாம்.
"மூஞ்சி அசிங்கமாயிருக்கு.அதான்" தலையைக் கோதியபடி சொன்னான்.அவனுக்கு சற்று கூச்சமாக  இருந்தது.இவளுக்கு ரசிப்பாக இருந்தது. அதுவே முகத்தில் சிறு புன்னகையைக் கொடுத்தது.
"நான் பார்த்தா என்ன?அதோட நீங்க ஒன்னும் அசிங்கமா எல்லாம் இல்ல. நல்லாத்தான் இருக்கீங்க" அவன் கன்னம் கிள்ளி சொல்லி இருந்திருக்கலாம். ஒன்னும் செய்ய முடியாதே!🤔
அவள் முகத்தில் எந்த செயற்கையும் இல்லை. வெட்கமுமில்லை. 
இயல்பாகவே இருந்தாள் .
"தேங்க்ஸ் வேண்டான்னா வேற என்ன வேணும் சொல்லுங்க"அவன் விட்டதை அவள் தொடர்ந்தாள் .
"ஏதோ வெயில்ல நின்னு வேலை செஞ்சதுக்கு ஒரு சின்ன ட்ரீட் கிடைக்குன்னு நினச்சேன்" அன்று தன் அறையில் நின்று விடாப்பிடியாக விவாகரத்து கேட்டவனா இவன்? அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. முகத்திலும் குரலிலும் அந்த எண்ணம் தெரிந்து விடாமல் இருக்க சற்று கடினப்பட்டாள் . தொழிலில் எளிதாக மாற்றிக் கொள்ளக் கூடியவள் இவனிடம் உண்மையாகவே இருக்க விரும்பினாள் . அதனால் தான் இந்த தடுமாற்றம்.
"அதுக்கென்ன? என்னங்க போலாம்?  ஜி  ஆர் டி  ல கிராமத்து சமையல் ஸ்பெஷல் போட்டுருக்காங்க, ராடிசன் ல ப்ராமின்ஸ் புட் போட்டுருக்காங்க. மத்சயாவுல பப்பே  பிரேக் பாஸ்ட் உண்டு. பாட்டி  வீட்டு சமையல் ரொம்ப நல்லா  இருக்குன்னு நிறைய பேர் சொல்லறாங்க. இல்ல நீங்க  எங்க சொல்லறீங்களோ அங்க போலாம். பட் எனக்கு வெஜ் மட்டும்தான்  உங்களுக்கு என்ன வேணுமோ சாப்பிடுங்க"
"இன்னிக்கு சனிக் கிழமை. நான் அசைவம் சாப்பிட்டா என்ன பெத்த அம்மா நாளைக்கு என்னய வச்சு கறிக் கொழம்பு செஞ்சுடும்.  ஏதோ பிராமண சாப்பாடு சொன்னீங்களே அதுவே சாப்பிடலாம்"
"இன்னிக்கு ஜிம் போகல?" அவன் தான் கேட்டான்.
"இல்ல!"
"ஏன்?" கேட்டபடியே கட்டான வீடியோ காலுக்கு மீண்டும்  வந்தான்.
"நீங்கதானே காரணம்" புருவம் சுளித்தாள் .குரல் குறையாகச் சொன்னாலும் கண்களை  அவன் சரியாக பாரக்கவில்லையே 😍
"நான் என்ன பண்ணேன் ?"அவனுக்குப்  புரியவில்லை.
"ஏதேதோ நினைவுகள். என்ன பத்தி  உங்கள பத்தி. நம்மள பத்தி"
"என்ன நினைவுகள் ?" ரேணுகா அண்ணன் கையில் தேநீரை கொடுத்து விட்டுச் சென்றாள் .
"காப்பியா?"
"இல்ல டீ " சொல்லிக் கொண்டே ஒரு  மிடறு விழுங்கினான்.
"மார்னிங் காபி இல்லையா?"
"மத்தவங்களுக்கு காபி. எனக்கு டீ  தான்" அவள் பதில் சொல்ல விரும்பவில்லை. புரிந்தது. 
"காபி புடிக்காதா?"
"இல்ல டீதான் பிடிக்கும்"
"பட்  நான் அப்டி இல்ல. ஐ  லவ் காபி "
"தெரியும்" 
"எப்படி ?காபி மக் பார்த்துட்டு சொல்லறீங்களா?
"ஆமா "
சில நொடிகள் அமைதி. அதற்கு மேல் என்ன பேச? தெரியவில்லை இருவருக்கும்.
"நம்மள பத்தி என்ன?" இந்த முறை அவள் விட்டதை அவன் தொடர்ந்தான். அவனுக்கு நிச்சயம் பதில் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் தன்னைப் பற்றி என்ன யோசித்திருப்பாள் ? நிச்சயம் நல்ல விதமாக இருக்க முடியாது . அவனே நம்பினான்.
"ஒண்ணுமில்ல சும்மா தான்"அவன் நினைத்ததற்கு மாறாக அவளிடம் இப்போது வெட்கம்  வந்திருந்தது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரசித்தான்.
 சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் இறுதியில் அந்த பிராமண சாப்பாடு புட் பெஸ்டிவலுக்குச் செல்ல முடிவெடுத்தார்கள். இவள் ஏற்கனவே டேபிள் புக் செய்திருந்தாள் . வெளியில் நிறைய கும்பல் இருந்தது. இருந்தாலும் இவர்களின் இடம் சற்று ஒதுங்கி இருந்ததால் எந்த தொந்தரவும்  இல்லை. பெரிய ஹோட்டல் என்பதாலும் யாரும் சத்தமாக பேசக் கூட இல்லை. இவர்களும் அந்த நாகரீகத்தை பார்த்துக் கொண்டார்கள். ஏதோ வீணை இசை சன்னமாக ஒலித்தது. தேக்கு மர டேபிள். வித விதமாக போட்டோக்கள். ஏசி இருந்தது. உடம்பை குத்தும் அளவிற்கு குளிர் இல்லை. உடலை தழுவும் குளிர் காற்றாக வந்தது.  முதலில் வருபவர்களுக்கு நிச்சயம் அந்த சூழ்நிலை சொர்க்கம்  என்றே உணர வைக்கும். அந்த பெரிய இடத்திற்கும் வெளி உலகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
அவன் சாதாரணமாகத் தான் உடை அணிந்திருந்தான். இவள் குர்தியும்  பலாஸோவும் அணிந்திருந்தாள். அவளின் உடையும், செருப்பும், தோரணையும் அவள் நாகரீக மங்கை என்றுக் காட்டியது. 
ஒதுக்கப் பட்ட இடம் என்ற போர்ட் வைக்கப் பட்டிருந்த இடத்திற்கு ஒருவர் அழைத்துச் சென்றார்.இவர்களை மஹாராணி, மஹாராஜாவைப் போல நடத்தினார். 
நாற்காலியைக் கூட அவரே நகர்த்தி இவர்களை வசதியாக அமர வைத்தார்.
பல பேர் அங்கே இருந்தார்கள். யாரோ குழந்தைக்கு பிறந்த நாள் விழா போலும். ஸ்பீக்கரில் சொன்னார்கள். பிறகு பிறந்த நாள் விழா பாட்டு  ஒலித்தது. அவர்கள் குடும்பம் தவிர அங்கே இருந்தவர்கள் அனைவரும் கூட சேர்ந்து கை  தட்டினார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். சில நிமிடங்கள் அந்த இடம் வேறு மாதிரி மாறி இருந்தது. அந்த குழந்தைக்கு பரிசுகளை வாங்க கை  கொள்ளாமல் பையும் நிறைந்தது. விழா முடிந்ததும் சுற்றி நோட்டமிட்டான் செந்தில்.இவர்களின் டேபிளுக்கு அடுத்து இருந்தவர்கள் சற்று வயதானவர்கள். ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் வாய் ஓயாமல். வயதானாலும் அவர்களுக்குள் ஒரு காதல் இருந்தது. இன்னும் சற்றுத் தள்ளி இருந்தவர்கள் காதலர்களாம் . அதை வாயாலும் காட்டிக் கொண்டிருந்தார்கள். கால்களாலும் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்த நிரஞ்சனா கண்டும் காணாதது போல இருந்து கொண்டாள் .காலால்  சில்மிஷம் செய்து கொண்டிருந்தவர்களைப்  பார்த்த  செந்திலுக்குத் தான்  ஏதோ ஒரு மாதிரி ஆகி விட்டது. முகத்தை திருப்பிக் கொண்டான்.
 முதலில் மெனு கார்டை வாங்கி அவள்தான் பார்த்தாள் . பிறகு அவன் பார்க்கப் போனபோது அவள் பார்க்க வேண்டாம் என்று தடுத்து விட்டாள் .
 "முதல்ல சாப்பிட்டு அப்புறம்"
"ஏன் ?"
"ரேட் பார்த்துட்டு நீங்க வேண்டான்னு சொல்லிட்டா?" 
அவள் ரொம்ப சாதாரணமாகத் தான் சொன்னாள்.அவள் அறிந்த வகையில்  பாஸ்கர் அப்படித் தான் சொல்வான். 
"எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு காபி ஐநூறு ரூபாய்க்கு தாங்குமா" என்று கேட்டிருக்கிறான். பாஸ்கர் தோழன் என்றால் செந்தில் கணவன். அவன் மனம் வருந்தி விடுமோ என்று நினைத்தவள் அவளே அவனை நோகடித்துவிட்டாள்  அவளுக்குத் தெரியாமலேயே . தெரியாமலேயே செய்திருந்தாலும்  அதற்கான தண்டனையை அவன் கொடுக்கத்தான் போகிறான். அவனுக்கு அவள் தன்னை மட்டப்  படுத்துவது போல இருந்தது. விட்டுவிட முடியுமா?
செந்திலின் மனதிற்குள் அது என்ன விதமான  உணர்வு என்றுப்  புரியவில்லை. அதை அவன் புரிந்து கொள்ளும்போது அவனின் வார்த்தைகள் அவளை நிச்சயம் நோகடிக்கும். உங்கள் யூகம் சரிதான். அவனுக்கு வந்த உணர்வு இயல்பாக  ஆண்களுக்கே வருவதுதான். அவள் அவனை ஆள்வதாக உணர்ந்தான். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளிடம் காட்டிக் கொள்ள விரும்ப வில்லை. முதல் முறையாக மனைவியுடன் வெளியில் வந்திருக்கிறான். பொழுதை இனிமையாகவே கழிக்க விரும்பினான். அதனால் தன்  எண்ணத்தை கடினப்பட்டு மாற்றிக் கொண்டான். இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும்தான் சாப்பிட்டார்கள். நேரம் போனதே தெரியவில்லை. 
"உங்களுக்கு ஸ்பூன்ல சாப்பிட வந்தா சாப்பிடுங்க. இல்லன்னா கஷ்டப்பட வேணாம் செந்தில்" வெளியில் சும்மா சொன்னாலும் அவனுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்று அழகாய் சொல்லிக் கொடுத்தாள் . அவனும் அதையே செய்தான். முதலில் சற்று சிக்கலாகத் தான் இருந்தது. ஆனால் அதையே அவள் திருத்திக் கொடுத்தபோது சுலபமாக மாறிவிட்டது. அதுவே வடையைக்  கூட  அவள் ஸ்பூனில் விண்டு சாப்பிட்ட போது   இவனுக்குச்சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. அது மட்டுமா எல்லாவற்றையுமே  மிகவும் பாந்தமாக சாப்பிட்டாள் . 
பசிக்கு அள்ளி வாயில் போட்டு வேலைக்கு ஓடிப் பழக்கப் பட்டவனுக்கு இந்த மாதிரி அமர்ந்து சாப்பிடுவது பெரிய விஷயம்தான். ட்ரீட் என்பது அவனையும் அறியாமல்  வந்து விழுந்த வார்த்தை தான். ஆனால்  அதையே உண்மையாகக் கொண்டு அவள் அழைத்தபோது அவனுக்கு மறுக்கத்  தோன்றவில்லை. 
"பிராமணர்கள் இப்படி ருசிக்க ருசிக்க சாப்பிடுவார்களா? அப்பா! அந்த பருப்பு உசிலி,அக்காரஅடிசல் நிச்சயம் நாவில் கரையும் ருசி தான்" கண்ணை மூடி ரசித்தாள். 
"அப்படி ஒன்னும் பெரிய டேஸ்ட் இல்லையே?"
"ஏன் அப்படி சொல்லறீங்க?"
"எங்க  கொஞ்சம் கூட காரம் இல்ல. வெங்காயம், பூண்டு.ஒன்னும்  இல்லை. டேஸ்டும் ஆஹா ஓஹோன்னு இல்லையே?"
"இத்தாலி,  சைனீஸ் ஒவ்வொன்னு ஒவ்வொரு டேஸ்ட் . அதே மாதிரி தானே.  இதுவும். இது வேற மாதிரி ருசி"
அவள் பேச்சிலிருந்தே அவள் விதவிதமாக உண்டு  பழகியவள்  என்று புரிந்து கொண்டான். பணக்கார வர்கம். எங்கும் எதையும்  ரசிக்கலாம். ருசிக்கலாம். மனதில் ஒரு விதமான ஏளனமா வெறுப்பா ? 
"நமக்கு அதெல்லாம். தெரியாது. என்னிக்கும் கேழ்வரகு கஞ்சியும் பழைய சோறும்தான்"
"ஓ ! சூப்பர். இப்ப டாக்டர்ஸ் கூட அதானே  எடுக்க சொல்லறாங்க மார்னிங் ஹவர்ஸ்ல"
"அவங்க சொல்லறது உங்கள மாதிரி பணக்காரங்களுக்கு . எங்களை மாதிரி  ஏழைங்களுக்கு வேற ஆப்ஷனே இல்லையே?"
அவன் குத்தலாக பேசுவது அவளுக்குப் புரிந்தது.

அதற்குள் அடுத்து புளியோதரை வந்தது.
கறிவேப்பிலையும் நிலக்கடலையும் சேர்ந்து அப்பா!என்னமனம் ?என்ன ருசியை? சப்புக் கொட்டினாள் .
"இப்டி சாப்பிட்டா என்னோட ஜிம் ஐட்டம்  எல்லாம் என்ன பார்த்து நாளைக்கு கைக் கொட்டி சிரிக்க போகுதுங்க"  அவளே தான் சொன்னாள் 
"ஓ! தினமும் உடற்பயிற்சிக்கு போவீங்களா?"
"ஏங்க? ஆர்ம்ஸ் ஆம்பிளைங்களுக்குத் தான் அழகுன்னு யாரு சொன்னது? பொண்ணுங்களுக்கும் அது அழகு தான்" கையை உயர்த்திக் காட்டினாள். சட்டையை மீறி அவளின் புஜங்கள் தெரிந்தன.
"நான் தினம் போவேன்னு உங்களுக்குத் தெரியும் தானே? சரி நீங்க?" சொல்லிக் கொண்டே அவன் கப்பில்  இருந்த முந்திரியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் . அவன் எச்சில் அவளுக்கு பிடித்திருந்தது. அவனுக்குத் தான் சற்று அவஸ்தையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. மறைத்துக்  கொண்டு பதில் அளித்தான்.
"நான் அந்த மாதிரி தனியா எதுவும் போகறதில்ல. ஆனா கடைல ஏதாவது வேலை  இருந்துகிட்டே இருக்கும்"
"ம் ! உங்களுக்கும் நல்ல பாடி தான் செந்தில்"
"எப்படி கண்டுபிடிச்சீங்க?"
"இதோ! இந்த ஷோல்டர், செஸ்ட் ஆர்ம்ஸ் பார்த்தாலே தெரியுதே?அதோட அன்னிக்கு  வீடியோ கால் பண்ண போது பார்த்தேனே?"
"சைட்  அடிசீங்களா ?"
"ஆமா ! பாக்க  செமையா இருந்தா பாக்காம இருக்க முடியுமா?" லேசாக கண்ணடித்தாள் .
"என்னை மட்டும் தானே?"  கேட்டுவிட்டான். விளையாட்டாகவே கேட்டானா ? அவளுக்கு உறுத்தலாக இருந்தது. மறைத்துக் கொண்டாள் .
"ஆனா எனக்கு சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் கிடையாது" 
அவன் முக மாறுதலைக் கண்டுக் கொண்டவன் தானே பதிலுரைத்தான் .
"அது எதுக்கு? உடம்ப நல்லா  வச்சுருந்தாலே போதும். எத்தனை கிலோ வரைக்கும் தூக்குவீங்க?"
"ஒரு கைக்கு முப்பது அதுவும்  முன்னாடி பழைய பேப்பர் கடைல வேலை பார்த்தபோது . இப்பவும் அதே இருக்குன்னு நினைக்கறேன். ஆனா மூட்டை தூக்கற பழக்கத்தை மட்டும்  விடாம வச்சுருக்கனுன்னு நினைக்கறேன்"
அவன் பேசிக் கொண்டே இருக்க சட்டென அவள் கண்களில் ஏதோ ஒரு மாற்றம். 
உண்டு முடித்து விட்டு அவன் கை  கழுவ எழுந்தான்.
" உக்காருங்க. அவங்களே வாட்டர் பௌல் கொடுப்பாங்க"
அவள் சொன்ன மாதிரியே ஒரு கண்ணாடி கப்பில் தண்ணீர் எலுமிச்சை ரோஜாப் பூ இதழ்கள் போட்டு தண்ணீர் கொடுத்தார்கள். அவள் செய்வதைப் பார்த்து அவனும் கை  கழுவிக் கொண்டான்.
பிறகு வந்த சில இனிப்புகளையும் முடித்து  விட்டு இறுதியில் 
அவர்கள் கொடுத்த பீடாவையும் வாயில் அடக்கிக் கொண்டார்கள். 
"நான் கொடுக்கறேன்" தனது  கார்டை எடுத்து நீட்டினான்.
"அப்டி எல்லாம் நான் வேண்டான்னு சொல்ல மாட்டேன். பட் இந்த ட்ரீட்  என்னோடது"
 அவள் தனது பிளாட்டினம் கார்டை கொடுத்தாள் . இயல்பாகவே மனம்  அவளின் கார்டை கணக்குப் போட்டது.
திருமணத்திற்கு முன்பு தெரியாத பல விஷயங்களை இப்போது அவளிடம்  நெருங்க நெருங்க மனம் வேறு விதமாக கணக்குப் போட ஆரம்பித்தது.
கார் பார்க்கிங்கில் அவள் வண்டியை எடுக்கும் வரை காத்திருந்தான்.
காரில் ஏறப் போனவள் சுற்றிலும் பார்த்தாள் . யாரும் இல்லை. சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஏதேதோ எண்ணங்களில் உழன்றுக் கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி.
" பேப்பர் கடைல வேலை  பார்த்த அந்த விடலை பையனுக்கு இந்த கிப்ட்" சொல்லி விட்டுக் கிளம்பினாள். அவனுக்கு அதுப்  போதவில்லை. 
"அப்ப உன் கூட லஞ்சுக்கு வந்த இந்த பையனுக்கு?" வெட்கமில்லாமல் வழிந்தான்.
அவளின் ஒற்றை முத்தத்திற்கு காத்திருந்தவனுக்கு கிடைக்குமா?
தொடரும்........


Leave a comment


Comments


Related Post