இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 11-06-2024

Total Views: 9806

அத்தியாயம் 21

ஒருசேர மனநிறைவும் மகிழச்சியும் இருவர் முகத்திலும் வியாபித்திருந்தது. ஈசனின் அருளோடு நடந்த திருமணத்தால் இருவரது மனமும் உவகையின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்த காதல் இயமன் மீதே வருமென்று முதன்முதலாக பயந்து மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது யாராவது சொல்லியிருந்தால் அவளுக்கு நிச்சயம் வெறுப்போடு கலந்த சிரிப்பு வந்திருக்கும். ஆனால் இன்று அவனில்லாத நிலையை எண்ணிப் பார்க்கக் கூட அஞ்சுபவளாக இருந்தாள். காதல் ஓர்வித மாயம் தான். அதன் பிடியில் சிக்குண்ட போதே அது அவளுக்குப் புரிந்து போனது. இயமன் அந்தகனாய்... கந்தவர்வனாய்.. அவளுக்கு அறிமுகம் ஆன போது அவனது காதலில் விழுந்தே அவளும் காதல் செய்தாள். மருத்துவமனையில் எருமை கத்திய வேளையில் பயந்து ஓடியவள் பின் அவனைத் தேடி வரும் போது சனியோடு இயமன் பேசியதை அறிந்து முதலில் சினந்தாள். பின் அவன் காதல் புரிந்து அவள் உணர்வும் புரிந்து அவன் பேரில் அதீத ப்ரியத்தினை வளர்த்துக் கொண்டாள்.

அன்று இந்திரன் இயமனிடம் அவளுன்னை வெறுக்கும் படி செய்துவிடுவேன் என்று வீராப்பாய் சபதம் செய்கையில் இவள்.. என்ன செய்யக் காத்திருக்கின்றானே என்ற பதட்டத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் அவன் அந்தகன் போலவே வந்து நிற்பான் என்று அவள் நினைக்கவே இல்லை. அந்த உருவத்தினை வெறுப்பாய் பார்க்க அவள் எவ்வளவு கஷ்டப்பட்டால் என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும். 

"என்ன சிந்தனை? அஞ்சனா!"

"ஒன்னும் இல்லை"

"செல்லலாமா?"

"எங்கு? எமலோகத்திற்கா?"

"அதுதானே நமது இருப்பிடம். அங்கே உனக்கு பூரண உரிமை உள்ளது தேவி அஞ்சனா"

"அங்க வேணாம்"

"பின் எங்கு செல்வதாக உத்தேசம்" விஷமத்தோடு வினவி வைத்தான்.

"கொஞ்ச நாளைக்கு இந்த அந்தகனை நான் சாதாரணமானவனா நினைக்கணும். அவன் கந்தர்வனும் இல்லை எமனும் இல்லை. என் கணவன்னு நான் உணரனும். அதுவரைக்கும் இந்த எமன்கிற பதவியை தள்ளி வச்சுட்டு.."

"உன்னை மட்டும் கவனிக்க வேண்டுமா அஞ்சனா. இது நன்றாக இருக்கிறதே. வா" என்று முடித்து வைக்க "எங்கே?" என மீண்டும் கேட்டாள்.

"நீ சொன்னது போல் சாதாரணமான வாழ்க்கை வாழ்வதற்கு" எனச் சொல்லி இயமன் அவளை அழைத்துச் சென்றான். 

அவ்வூரிலிருந்து சற்று தள்ளியிருந்த அடர்ந்த வனத்தில் உள்ளே ஒரு குடில் இவர்களின் வருகைக்காக காத்திருந்தது. அவளை அழைத்து அங்கே நிறுத்தியவன்,

"இந்த அந்தகன் உன்னிடம் யார் என்று.."

"ப்ச் சுயவிளக்கமா. அதெல்லாம் வேண்டாம் அந்தகா. நான் அன்னைக்கு சொன்ன மாதிரி எப்பவும் என்னை விட்டு போகாமல் இரு அது போதும்" என்றாள் இவள் அவனைத் தடுத்து.

"ஒருவேளை நானுன்னை பிரிந்தால் என்ன செய்வாய்?"

"இறந்து எமலோகத்துக்கே வந்துடுவேன். அங்க வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் அந்தகா"

'மரணதேவனின் பார்வை பட்ட உன்னை மரணம் தீண்டாது. நான் செய்தது விதி மீறல் அஞ்சனா. நிச்சயம் அதற்கு தண்டனை உண்டு‌. அந்த தண்டனை சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' அவன் நெற்றிச் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்க "ஏய் எமா என்ன யோசிக்குற?" அவள் கேட்டதும் "பிடித்திருக்கிறதா அஞ்சனா" என்றான்.

"ரொம்ப பிடிச்சுருக்கு. ஆனால் காட்டுக்குள்ள இருக்கோம் ஏதாவது விலங்கு வந்துடுச்சுன்னா என்ன பண்ணுறது?"

"உன் மணவாளனை யாரென்று நினைத்தாய்?"

"ஆமால நீ எமன்ல. அதை மறந்துட்டேன்"

"மறக்க வேண்டும் என்றுதான் இவ்விடம் வந்ததே"

"என்ன சொல்லுற புரியல"

" நீதானே சொன்னாய். இயமன் நான் என்பதை மறந்து போக வேண்டும் என்று. சொன்னது போலவே மறந்துவிட்டாய் அல்லவா. அதைச் சொன்னேன்"

"ஓஹோ.. அதெல்லாம் சரி. எனக்கு பசிக்குது எமா"

"எனக்கும் மிகவும் பசிக்கின்றது. சமைத்து தருகிறாயா?"

"என்ன வேணும்"

"அன்றுப் போல் சமைத்தாலும் சரி இல்லை. உனக்கு பிடித்ததாக வேறு ஏதாவது சமைத்து தந்தாலும் சரி நான் சாப்பிடுவேன்"

"எல்லா பொருளும் இருக்கா.." அவள் கேட்டதும் அவன் சக்தியினால் அங்கு அத்தனை பொருட்களும் வந்த வண்ணம் இருந்தது.

"போதும் எமா. இதுக்கு நீ சமைச்சே வரவழைச்சுருக்கலாம்"

"அதில் உன் கைமணம் இருக்காதல்லவா"

"இப்படிலாம் பேசுறதுக்கு எங்க இருந்து கத்துட்டு வந்த. ஆச்சர்யம்தான் போ"

"காதலென்னும் மூன்றெழுத்தில் விழுந்த உடன் இதெல்லாம் தன்னாலே வந்துவிடுகிறது அஞ்சனா"

"பசிக்குதுப்பா சாமி. உன் சொற்பொழிவு எல்லாம் அப்பறம் கேக்குறேன்" என அவள் உள்ளே நுழைந்துவிட

"அடுத்து நீ கேட்பது சொற்பொழிவாய் இருக்காது அஞ்சனா" சொல்லவும் அவளோ தன்னைக் கட்டுப்படுத்தி கவனிக்காதது போல் இருக்க அவன் அவளை விட்டுவிட்டு சின்னச் சிரிப்புடன் வெளியே வந்தான். வாசலில் அவன் எருமை நின்றிருக்க, "அட வந்துட்டயா?" என்றான் இவன்.

"தங்களுக்காக நான் அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க தாங்கள் முன்னதாகவே வந்துவிட்டீர்களா. தேவி எங்கே?"

"உள்ளே சமைத்துக் கொண்டிருக்கிறாள்"

"வந்ததும் தேவிக்கு வேலை வைக்கிறீர்களா.. தேவி தேவி" என்றபடி வாயிலிலே கத்த, உள்ளிருந்து அவள் வேகமாக ஓடி வந்தாள்.

எருமையின் தோற்றத்தில் மிரண்டு விழித்தவள் இயமனின் சிரிப்பில் தன்னைச் சமாளித்துக் கொண்டு எருமையைப் பார்த்து புன்னகை செய்தாள்.

"பிரபு வந்த உடனே தங்களை வேலை வாங்குகிறார். தாங்கள் முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே தேவி"

"பாவம் எமன். அவனை திட்டாத. நான்தான் பசிக்குதுன்னு செஞ்சுட்டு இருக்கேன்"

"இவரைப் போய் பாவம் என்கிறீர்களா தேவி. இந்த காதல் வந்த பிறகு தான் இவரிடம் இத்தகைய மாற்றம் எல்லாம். தங்களை காணும் முன் வரை அவரைக் கண்டாலே நானெல்லாம் அஞ்சி நடுங்குவேன் தேவி. கண்கள் தீப்பொறி போல் எந்நேரமும் ஜொலித்துக் கொண்டிருக்கும். இப்போதும் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறது தங்களின் மீதுள்ள மையலால்"

"போதுமடா உன்னிடம் இதையெல்லாம் அவள் கேட்டாளா. அவளுக்கே அனைத்தும் தெரியும்"

"நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் வேலையை முடிச்சுட்டு வர்றேன்" அவள் உள்ளே ஓடிவிட, இயமனோ உள்ளே வந்துவிடாதே என்பது போல் பார்த்துவிட்டு உள்ளே வந்தான். அங்கு எருமையோ இதன்பின்னரும் தமக்கிங்கில்லை வேலை என்றுணர்ந்து சென்றுவிட்டது.

அடர்ந்த வனம்

அது தந்த தனிமை..

அந்தகனும் அவளும்...

அதுவும் அவள் அவனுக்கு மட்டும் உரிமையானவளாய். 
இப்படியொரு பொழுதிற்காகத்தானே அவன் காத்திருந்தான். அந்த பொழுது கனிந்து கையில் இருக்கையில் அனுபவிக்காது எருமையோடு எவனாவது பேசுவானா? 

ஆகையால் உள்ளே வந்தான் இயமன். அவளோ சமையலறையில் முதுகு காட்டி இருக்க அவளுக்கு உதவுவதாய் சொல்லிக் கொண்டு அவன் நுழையும் முன்னரே அவள் அனைத்தையும் முடித்துவிட்டாள்.

"நான் உதவி செய்யலாம்" என்று வந்தேன் ஏமாற்றம் ததும்ப இயமன் பேச, அவனது பாவனையில் அவள் சிரித்து விட்டாள்.

"நீ என்ன வேலை செய்வன்னு எனக்குத் தெரியும் அந்தகா"

"அதற்கான உரிமை எனக்கிருக்கிறதல்லவா. எத்தனை நாட்கள் நான் நம் நெருக்கத்தின் இதத்தினை நினைத்து தகித்திருப்பேன் தெரியுமா? இன்றென் அருகில் நீ நிற்கையில் உள்ளுள் அத்தனை விதமான உணர்வுகளும் கட்டவிழ்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அது அமைதி கொள்வது உன் மூலம் மட்டுமே" பேசியபடியே நெருங்கி நின்றவன் அவளை சேர்த்தணைக்கும் முன் அவனது வாய்க்குள் அவள் உணவு கவளத்தினை திணித்திருந்தாள்.

அவளை விழுங்க காத்திருந்தவன் இப்போது அவள் ஊட்டிய சாதத்தினை விழுங்கினான் அவளையே அர்த்தத்தோடு பார்த்தபடி.

"எமா!" அந்த வீச்சினை தாள மாட்டாமல் அவள் அழைத்து வைக்க அது அவனது பார்வையில் இன்னும் உஷ்ணத்தினைத்தான் ஏற்றியது. விழுங்கிய உணவின் சுவையோடு அதை விழுங்கச் செய்தவளையும் விழுங்கிக் கொண்டிருந்த இயமன் அவளது பார்வைக்குப் புதியவனாகத் தென்பட்டான். அவனது உணர்வுகளை பார்வையாலேயே கடத்தி அவளையும் கிளர்ந்தெழச் செய்தான் அந்த மாயக்காரன். உயிர்களை கவர்ந்து செல்லும் அந்தகன் அவளது உயிரையே கவரும் பொருட்டு பார்த்து வைக்க அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது அவளே அவன் மீது சாய்ந்திருந்தாள். 

அந்த தருணம் இயமன் தேகத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பு அவளையும் சேர்த்து சிலிர்க்க வைத்தது. அவர்களின் தனிமைக்கு எந்தவித இடையூறும் இல்லாதபடி அந்த கானகத்து அமைதி கைகொடுக்க வாழ்வியலின் அடுத்தக் கட்டத்தினை இருவரும் சேர்ந்தே கொண்டிருந்தார்கள். 

-----------------------------------

 "மதினி நீங்க இப்படி உக்காந்துருக்கது சரியே கிடையாது. எங்க அண்ணன் ஆசையை விட என் மருமகளோட ஆசைதான் எனக்கு முக்கியம். உண்மையிலேயே எனக்கு இந்த கல்யாணம் நடந்ததுல ரொம்ப சந்தோஷம் தான். நம்ம வயசுக்கு நாமதான் பக்குவமா நடந்துக்கணும்"

 "உனக்கு என்னோட கவலை புரியாது லட்சுமி. அவ நம்ம ஊர்ல ஒருத்தனையோ நம்மளைப் போல இருக்குறவனையோ விரும்பியிருந்தால் மனசார அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருப்பேன். ஆனால் அவ விரும்புனது உசுரை எடுக்குறவனை. அவனோட இவ வாழ்வு எப்படி நல்லா இருக்கும்"

 "மதினி அது எமனோட வேலை"

 "அந்த வேலையால பாதிக்கப்படப் போறது என் பொண்ணுன்னு உள்ள கிடந்து அடிக்குது"

 "எப்பவும் நாம நினைக்குறது நான் நடக்கும் மதினி. நீங்க ஏற்கனவே அவ நல்லா இருக்கக் கூடாதுங்கிற மாதிரி பேசிட்டு வந்துருக்கீங்க. இனியும் அவளைப் பத்தி நினைச்சீங்கன்னா அதுவே அவளைப் பாதிக்கும்னு எனக்குத் தோணுது. அவ விரும்புனவன் அவளை கைவிட மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

 "நீ இந்த இந்திரனை மறந்துட்டு பேசுற. அவன் முகத்தில எவ்வளவு கோபம் இருந்ததுன்னு நான் பார்த்தேன். அந்த கோபத்தை நினைச்சுத்தான் நான் பயப்படுறேன்"

 "அவளை அவ புருஷன் பார்த்துக்குவான். நீங்க கவலைப்படாதீங்க. இந்திரன் நினைச்சாலும் கூட அவங்க இரண்டு பேரையும் பிரிக்க முடியாது.." லட்சுமி முடிவாக சொல்ல அந்த இந்திரனோ தன் உடன்பிறப்புகளோடு கூடி இயமனையும் அவனது அஞ்சனாவையும் பிரிக்க திட்டம் தீட்டியிருந்தான்.

-----------------------

 "டேய் திரு. இதென்ன இப்படி இடிஞ்சு போய் உக்காந்துருக்க. நீ உன்னை தேத்தித்தான் ஆகணும்"

 "தேத்திக்கிறேன். நீ போ" சாரதியிடம் சொன்னவன் அதை செயல்படுத்தத்தான் முனையவே இல்லை.

 "இந்த நிலைமையில நான் உன்னை விட்டுப் போக மாட்டேன் திரு"

 "ஏன்டா நான் செத்துப் போயிடுவேன்னு பயமா இருக்கா. அதெல்லாம் சாக மாட்டேன். நீ கிளம்பு நான் தனியா இருக்கணும்"

 "இல்லை நான் இங்கேயே இருக்கேன்"


 "போயிடு சாரதி" அழுத்தமாக சொல்லவும் அவன் எழுந்து வெளியே சென்றான்.

தோற்றுப் போன மனநிலை அவனது. அதை பரிதாபமாக பார்ப்போர் மத்தியில் இருந்து விலக வேண்டும் என்பதில் அவன் இப்போது கவனமாக இருந்தான். இப்போது உயிர் வாழ்வதில் கூட அவனுக்கு விருப்பம் இல்லை. அவ்வளவு பாரமாக இருந்தது. 

இதிலிருந்து விடுதலை வேண்டும் என்று அவன் நினைத்து மாறி மாறி உத்திரத்தினையே பார்த்துக் கொண்டிருந்தான். நேற்றைய இரவின் கற்பனைகள் எல்லாம் அவனைப் பார்த்து பல்லிளிப்பது போல் இருந்தது. அந்த அவமானம் தாளாமல் அருகே இருந்த அலமாரியில் இருந்து ஒரு புடவையை எடுத்தான். அதையும் அவளுக்காக வாங்கி வைத்திருந்தான். அதிலயே சுருக்கிட்டு தன் உயிரை போக்க நினைத்து அவன் செயல்படுத்தினான்‌.

அவளது புடவை தலைப்பில் சிக்குண்டு காலம் முழுக்க வாழ வேண்டும் என்ற பேராசை நிறைவேறவில்லை. இப்போதோ அந்த தலைப்பிலேயே சிக்கி உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறான். அந்த நிமிடம் அவனுக்கு அன்னை நினைவில் வரவில்லை. அவளது பாசம் ஞாபகமில்லை. நிறைவேறாத ஆசை மட்டுமே கண் முன் இருந்தது. அதன் கனம் தாளாமலேயே மொத்தமாய் முடித்துக் கொள்ளப் போகிறான்.

இருக்கையை தள்ளிவிட அவனது உடல் கீழ் நோக்கி சென்ற மாத்திரத்திலே கழுத்து இறுக ஆரம்பித்தது. கண்கள் மேல் நோக்கி சொறுகி ஆவி அலறித் துடிக்க.. சட்டென்று அவன் உடல் லேசாகி மேல் நோக்கி மிதந்தது. கண்டத்தில் இருந்த இருக்கம் காணாமல் போயிருக்க கண்களோ அகல விரிந்தது.

நடந்துக் கொண்டிருந்த அந்த மாற்றத்தினை அவனால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. காற்றில் பறக்கின்றோம் என்பதையே அவன் மனம் நம்ப மறுத்தது. அவனது கழுத்து புடவை தலைப்பில் இருந்து விடுபட்டு இப்போது அவன் மேல் நோக்கி பறந்தான். அதில் பயந்து கண்ணை மூடியவன் மீண்டும் கண்களைத் திறக்கும் போது பளீரென்ற ஒளி அவன் கண்களை கூசச் செய்து மீண்டும் மூட வைத்தது.

அந்த இடத்தின் பிரகாசம் அதன் தோற்றம் இதெல்லாம் அவனுக்கு ஆச்சர்யத்தினையும் பயத்தினையும் சேர்ந்தே தந்தது. செத்துப் போன உடனே சொர்க்கத்துக்கு வந்துடலாமோ அவன் அப்போது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே அப்படியான காட்சிகள் தான் அவனுக்குத் தெரிந்தது.

அவனது வேடிக்கையை அப்போது தடை செய்தது ஒரு குரல். 

 "வா மானிடா உன்னை யாம் எதிர்பார்த்தோம்" அதிலே அடித்துப் பிடித்து அவன் திரும்பிப் பார்க்க ஒட்டு மொத்த தேஜஸையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவனாய் அவன் அமர்ந்திருந்தான் அரியாசனத்தில். அவன் இந்திரன். இனி அவன் என்ன செய்யக் காத்திருக்கின்றானோ?


காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post