இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -56 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 14-06-2024

Total Views: 12525

அவள் அழுதுக் கொண்டே சம்மதம் சொல்வது கஷ்டமாக இருந்தாலும், காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் டீ ஒன்றை வரவழைத்து அருந்தினான்.

அந்த ஒரு நிமிடம் சற்று அசால்ட்டாக இருந்துவிட.. நிலாவின் காதை உரசிச் சென்றது ஒரு அருவாள்.

ஏற்கனவே நந்தன் கொடுத்த அதிர்ச்சியில் பீதியில் இருந்தவள், இந்த அருவாள் வேறு மேலும் பீதியைக் கிளப்ப, “ஆஆஆஆ...” சத்தமாக கத்தியே விட்டாள்.

அடுத்த நிமிடம் அங்கு பத்துக்கும் மேற்பட்ட அடியாட்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து விட.. நிலாவை இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான் நந்தன்.

“எனக்கு பயமா இருக்குங்க போய்டலாம் வாங்க.. அவங்க உங்களை ஏதாவது பண்ணிடுவாங்க வாங்க.” 

“ச்சீ அழுது தொலையாம சத்த நேரம் வாயை மூடு.” என்றவன் ரவுடிகளில் ஒருவன் அசந்த நேரம் நாற்காலியை தூக்கி அடிக்க, அதில் ஒருவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

ஒருவனை அடிக்க தான் நிதானம் தேவை, அடிக்க தொடங்கியப் பின் அந்த நிதானம் தேவையில்லை.. ஒவ்வொருவரையும் பந்தாடினான்.

நந்தனை தொடவே அவ்வளவு யோசித்தவள், இப்போது அவனின் முதுகோடு ஒட்டியே நின்றாள். அவளின் அழுத்தம் உணர்ந்தவனின் முகத்தில் அவ்வளவு கலவரத்திலும் புன்னகை பூத்தது.

“வியா ஒன்னும் இல்ல கண்ணை திறந்து பாருடி.”

“பயமா இருக்குங்க, நம்ப இங்க இருந்து போய்டலாம்.” என அவன் மார்போடு அணைத்துக் கொண்டு அழுதாள்.

“ஒன்னுமில்ல, அதான் நான் அடிச்சிட்டேன்ல, இனி வரமாட்டாங்க. பயப்படாம வா உன்னைய வீட்டுல விட்டுடறேன்." என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு இரண்டு போலீஸ் ஜீப்புகள் வந்து நின்றது

“சார் ஒன்னுமில்லயே” என அவனை நோக்கி வேகமாக வந்த சரஸ்வதி என்ற பெண் காவல் அதிகாரி நந்தனின் மார்பில் நிலா சாய்ந்து நிற்பதை கண்கள் இடுங்கப் பார்த்தாள்.

“ரொம்ப பயந்துட்டா இவளை வீட்டுல விட்டுருங்க சரஸ்வதி. நான் அவன்ங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறேன்.” என தன்னிடம் இருந்து பிரித்து சரஸ்வதியின் கையில் நிலாவை கொடுக்க, அவள் மீண்டும் நந்தனிடமே ஒட்டிக் கொண்டாள்.

“எனக்கு பயமா இருக்கு, நீங்களே கொண்டு போய் விடுங்க.” என அழ.

“முதல்ல அழறதை நிறுத்து, இந்தக் காலத்துல பொண்ணுங்க எப்படி போல்டா இருக்காங்க. நீயும் தான் இருக்கியே எதுக்கு எடுத்தாலும் அழுதுட்டு, எரிச்சலைக் கிளப்பாம கிளம்பு.” என்றான் கடுமையாக. அவனுக்கு நிலாவின் மீது கையை வைக்கப் பார்த்தவர்களின் கையை உடைத்து எறியும் வரை ஆத்திரம் அடங்காது.

அவனைப் பொறுத்த வரையிலும் நிலாவை காயப்படுத்துவதாக இருந்தாலும், அடிப்பதாக இருந்தாலும் அழ வைப்பதாக இருந்தாலும் அதை அவன் தான் செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்கு அந்த உரிமையை எப்போதும் கொடுக்க மாட்டான்.

நந்தனின் கோவத்தில் பயந்து இருந்தவள் மேலும் அரண்டுப் போக அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே சரஸ்வதியுடன் நடந்தாள்.

“ஏய் அங்க என்ன பார்வை, இங்கப் பார்த்து வண்டியில ஏறு..” நந்தனை நிலாப் பார்க்கும் பார்வையை அரவே வெறுத்த சரஸ்வதி அவள் மீது கோவமாக பாயிந்தாள்.

ஆறு மாதமாக ஒரு தலையாக நந்தனை விரும்புகிறாள். அதை பார்வையிலும் சரி, உடல் மொழியிலும் சரி பல தடவை அவனுக்கு உணர்த்த முயற்சி செய்திருக்கிறாள். அவனிடம் நேருக்கு நேர் நின்று காதலிக்கிறேன் என்று சொல்ல பயமாக இருந்தது. அதற்கு காரணம் நந்தன் உஷாவிற்கு பிறகு எந்த பெண்ணையும் அவன் அருகில் கூட நெருங்க விட்டதில்லை. இது ஊர் உலகிற்கே தெரியும். 

இப்போது நிலா அவனை அணைத்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்ததும் பத்தி எரியாதா? என்ன?

நிலவின் பார்வையில் என்னக் கண்டானோ.

“சரஸ்வதி”

“சார்”

“நீங்க அகியுஸ்டை கூட்டிட்டு ஸ்டேஷன் கிளம்புங்க, நான் அவளைக் கொண்டுப் போய் விட்டுக்கறேன்.”

“இல்லை சார் நீங்க தானே...”

“நான் சொன்னதை செய்ங்க.” என்றவன் காரை விடுத்து தன்னுடைய ராயல் என்பீல்டை எடுக்க, நிலா சிறிது நேரம் கூட தாமதிக்காமல் ஓடிச் சென்று அவன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

இன்னும் அவள் உடலில் நடுக்கம் மிச்சமிருந்தது. வரும் போது ரயில் போகும் அளவிற்கு விலகி அமர்ந்து வந்தவள், இப்போது காற்றுக் கூட இடைவெளி கொடுக்க மாட்டேன் என அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள்.

பெரிய கலவரமே நடந்து முடிந்திருக்க, அதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் விசில் அடித்தவாறு வண்டியை ஓட்டினான்.

“வியா.?”

“ம்”

“இப்போ யாரும் பார்க்க மாட்டாங்களா..?”

“ஹா" என விழித்தவள் அவனை விட்டு சட்டென்று விலகப் போக அவள் கையை பிடித்து இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டான் நந்தன்.

அவள் இருந்த மனநிலையில் அதற்கு மேல் விலகவும் உடலில் தெம்பு இல்லாததால் அவனோட ஒட்டிக் கொண்டாள்.

நந்தனின் நல்ல நேரமோ, நிலாவின் கெட்ட நேரமோ அவர்கள் இருவரும் வண்டியில் வரும் அழகை வளவனும் யுகியும் சேர்ந்தேப் பார்த்து விட்டனர்.

வளவனின் புதுக் கம்பெனி துவக்க விழாவிற்காக.. யுகியும் வளவனோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான் அப்போது தான் நந்தனையும் நிலாவையும் பார்த்தது.

“பார்த்தியாடா இவளை. நேத்து நான் ஒத்த வார்த்தை சொன்னதுக்கு அந்த குதி குதிச்சிட்டுப் போனா, இப்போ எப்படி அவன் மேல சாய்ஞ்சிட்டுப் போறாப் பாரு.”

“வளவா?”

“நிலாகிட்ட இதை எதிர்பார்க்கலடா நம்பள நம்ப வெச்சி துரோகம் பண்ணிட்டாள்ல..”

“டேய் ரிலாக்ஸ்டா”

“அவ இருந்த நிலைமையைப் பார்த்து உனக்கு கோவம் வரலையாடா..?”

“வருது தான் அவன் பூனையை மிரட்டிக் கூட அவளை இந்த மாதிரி பண்ண வெச்சிருக்கலாம்ல. உனக்கே தெரியும் அவன் விசியத்துல பூனை எந்த அளவுக்கு இறங்கிப் போவான்னு, பார்த்துக்கலாம் விடு.”

“ஆமாடா இவ சின்ன பாப்பா பாரு மிரட்டறதுக்கு. நீ அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வராத யுகி, இருக்கற டென்ஷன்ல உன்னைய அடிச்சிடப் போறேன்.” என்றவன் காரை கண்ட மேனிக்கு ஓட்டினான்.

“இவ்வளவு வேகமா போகாதடா.”

“அப்படியாவது அடிப்பட்டு சாகறேன்.” என்றான். தங்கை செய்த நம்பிக்கை துரோகத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நந்தனை வேண்டாம் என்றதே அவள் நலனுக்காக தானே. அதை புரிந்துக் கொள்ளாமல் அவனிடமே சென்று சிக்கிக் கொண்டவளை என்ன என்று சொல்வது மண்டை வெடித்துவிடும் போல் வேதனையாக இருந்தது.

“வளவா காரை ஓரமா நிறுத்து நான் டிரைவ் பண்றேன்.”

“ஒரு மண்ணும் வேண்டா மூடிட்டு உக்காரு.” என்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டு வாசலின் முன் நின்றது.

யுகிக்கும் நிலாவின் செயலில் கோவம் தான் அதற்காக அண்ணனே ஆனாலும் வளவனிடம் கூட அவன் பூனையை விட்டுக் கொடுக்க மாட்டான்.

அவர்களுக்கு முன்பு சென்று விட வேண்டும் என வேகமாக காரை ஓட்டி வந்தான்.

நந்தனின் வண்டி வீட்டிற்கு வரும்போது அவர்களை வாசலிலேயே எதிர்க் கொண்டனர் வளவனும் யுகியும்.

வண்டி நின்றப் பின்னும் நிலா இறங்காமல் இருக்க, “வீடு வந்துடுச்சி இறங்குடி.” என்றான்.

“அதுக்குள்ளவா?” என்றவளை திரும்பிப் பார்த்தவன், “பார்த்து இரு வரேன்” என வண்டியை திருப்பப் போக குறுக்கே வந்து நின்றான் வளவன்.

அப்போது தான் வளவனையும் யுகியையும் பார்த்த நிலாவிற்கு இந்த நாள் இன்னும் என்ன என்ன அதிர்ச்சியை வைத்திருக்கிறதோ என தோன்ற.. நந்தனையும் பாவமாக பார்த்தாள்.

அவளுக்கு மட்டும் தெரிய போனை ஆட்டிக் காட்டினான் நந்தன்.

“உன்னைய எவ்வளவு நம்புனோம் பூனை, இப்படி காலை வாரி விட்டுட்டில, என்ன எங்களை கொன்னுடுவேன்னு மிரட்டுனானா சொல்லு..” நிலா விசியத்தில் நந்தனை கணிப்பதில் சிறந்தவன் யுகி. நந்தன் இப்படி எதுவும் சொல்லி மிரட்டாமல் நிலா தானாக அவனிடம் சென்று மாட்ட மாட்டாள்.

நந்தனைப் பார்த்துவிட்டு யுகியைப் பார்த்தவள், “இல்லை” என்று தலையை ஆட்ட.

“அப்புறம் எதுக்கு அவன் கூட போன..?"

"நான் அவ்வளவு சொல்லியும் என்னைய மீறி பார்க்கப் போயிருக்கனா, என் வார்த்தைக்கு மதிப்பு இல்லைன்னு தானே அர்த்தம்.” என யுகி ஆரம்பித்ததை வளவன் முடித்து வைத்தான்.

“அண்ணா”

“தயவு செஞ்சி கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.”

“ரோட்டுல நின்னு எதுக்குடா கத்திட்டு இருக்கற, இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் கப்பல் ஏறணுமா? எதா இருந்தாலும் உள்ளே வந்து பேசுடா.” என்றார் ராஜி.

“நீ சும்மா இரும்மா. இதுக்கெல்லாம் காரணம் நீ தான் இவனுக்கு நீ கொடுக்கிற இடத்துல தான் இந்த ஆட்டம் ஆடுறான்..”

“மரியாதையா பேசு” என நந்தன் கைக் காப்பை முறுக்க.

“உனக்கு என்னடா மரியாதை.? பொண்ணு கொடுக்க முடியாதுன்னு சொல்லியும் அவ தான் வேணும்னு நாக்கை தொங்கப்போட்டு அவ பின்னாடியே லோ லோன்னு அலையிற, உனக்கு மரியாதை ஒன்னு தான் கேடா?” என வளவன் வார்த்தையை விட.. நந்தன் எட்டி வளவனின் சட்டையைப் பிடித்து விட்டான்.

“ஐயோ விடுங்க.”


“அடிடா பார்க்கலாம் நீ அடிச்சா நானும் திருப்பி கொடுக்கற அளவுக்கு உடம்புல தெம்பு இருக்குடா, மேல கை வை." என்றதும் நந்தன் வளவனின் கன்னத்தில் ஒரு குத்துவிட.

அதே அடியை அடுத்த நொடியே திருப்பி தந்திருந்தான் வளவன். இருவரும் கட்டி புரண்டு சண்டைப் போட்டுக் கொண்டனர். யுகி இருவரையும் பிரிக்க முயன்று இருவரிடமும் அடி வாங்கிக் கொண்டு நின்றான்.

அந்த சண்டையை ஊரே வேடிக்கைப் பார்த்தது.

“தம்பி விடுங்க எல்லோரும் வேடிக்கைப் பார்க்கறாங்க.” என ராஜி கூட இருவரையும் விலக்க முயன்று தோற்றார்.

“ஐயோ!!! இப்போ விடறிங்களா? இல்லையா?" முதல் முறை நந்தனின் முன் நிலாவின் குரல் சத்தமாக வந்தது.

“நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்கன்னு விரும்பறேன். வீட்டு மாப்பிள்ளையை இப்படி தான் அடிப்பீங்களா..?”என கோவமாக நிலாவின் குரல் வர, வளவனின் கை தானாக விலகிக் கொண்டது.

“அப்போ முடிவே பண்ணிட்டியா?”

“ஆமா.. நேத்து அவர் வேண்டா நீ தான் வேணும்னு உன் பின்னால நின்னதுக்கு நீ எனக்கு என்ன செஞ்ச? என்னமோ நான் ஓடிப் போய்டப்போற மாதிரி ஆள் மாத்தி ஆள் என்னைய காவல் காக்கல..”

“அதுக்காகவா இவனை கல்யாணம் பண்ணிக்கற.?”


“அதுக்குன்னு இல்லை, அவரை எனக்கு பிடிச்சிருக்கு.”

“ஓ இதே வாய் தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி இவனை மட்டும் கட்டி வெச்சிடாதீங்கன்னு அழுதது மறந்துப் போச்சா?” 

“அது அப்போ”

“ரெண்டு நாள்ல லவ் வந்துடுச்சா?”

“ஏன் வரக்கூடாதா?”

“நல்லா பேசற.. கடைசியா கேக்கறேன் இவன் தான் வேணுமா?”

“ஆமா ஆமா ஆமா...”

“அவன் வேணும்னா இந்த அண்ணன் உறவு என்னைக்கும் உனக்கு இல்லாமலே போய்டும் பராவாயில்லையா?” இந்த வார்த்தை சொல்லும் போது உடைந்து விட்டான் வளவன்.

சாப்பாட்டிற்கே வழியில்லாத காலத்தில் கூட தங்கையின் பசியாற்ற துடித்தவன், அவனுக்காக செய்துக் கொண்டதை விட நிலாவிற்காகப் பார்த்து பார்த்து செய்தது தான் அதிகம். பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை இன்று யாரோப் போல் எடுத்து எறிந்து பேசவும் மனம் விட்டுப் போனவன்,

“சொல்லும்மா” என்றான் உடைந்தக் குரலில். வெளியே சொல்லு சொல்லு என்று நின்றாலும் உள்ளே, 'சொல்லிடாத அம்மு உன்னைய விட்டு என்னால வாழ முடியாது. நீ என்னோட உயிர், அவன் உனக்கு வேண்டாம்மு.' என கதறிக் கொண்டிருந்தான்.

“ம்ம் பரவாயில்ல எனக்கு இவர் மட்டும் இருந்தா போதும். எந்த உறவும் அவசியமில்லை என்னோட லைப்பை நான்தான் டிசைட் பண்ணுவேன்.” பட்டென்று வந்து விழுந்தது வார்த்தை.

ராஜியே இதை எதிர்பார்க்கவில்லை. நந்தனுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணினரே தவிர, உறவை முறித்துக் கொள்ளும் அளவிற்கு நிலா பேசுவாள் என்று நினைக்கவில்லை.

“எந்த உறவும் வேண்டாமா அம்மு?” இதைக் கேக்கும் போது அழுதே விட்டான்.

முதல் முறை தங்கை எதிரில் நின்று எதிர்த்துப் பேசுகிறாள். பார்க்க அழகாக தான் இருக்கிறது ஆனால் பேசுவது அவனை ஆயிற்றே.. ஒவ்வொரு அணுவையும் தேடி தேடி சென்று தாக்கியது வலி.

“சரிம்மா இனி உன் விசியத்துல தலையிட மாட்டேன் போதுமா? அம்மா அவ இஷ்டப்படி இருக்கட்டும் இனி அவளுக்கும் எனக்கும் எதுவுமில்லை. என்ன பண்ணணுமோ பண்ணிடு கல்யாணம் பண்ணி எப்படியோ போகட்டும்.” என்று சொல்லியவன் நந்தனை பார்த்து, “சொன்ன மாதிரியே செஞ்சிட்டல.. நீ ஜெயிச்சிட்ட நான் தோத்துட்டேன்.” என அங்கிருந்து செல்ல.. வளவன் சொன்னது யாருக்கும் புரியவில்லை.

“யுகி நான் சொல்றதை நீயாவாது..” என சொல்லி முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் யுகி என்கின்ற யுகேந்திரன்.

அவன் பூனை.. அவனுக்கு மட்டும் தான் சொந்தம், இதுநாள் வரையிலும் அவளுக்காக ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து அசைத்திருக்கிறான். ஏதாவது ஒன்றில் என் பூனை காயப்பட்டிரக் கூடாது என அவளுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறான். அவளுக்காக சொந்த அண்ணன் கூடக் கூட வருடக் கணக்கில் பேசாமல் இருக்கும் நல்லவன், அவனால் நிலாவின் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


Leave a comment


Comments 1

  • P Priyarajan
  • 2 weeks ago

    Waiting for nxt epi😍😍😍😍😍💕💕💕💕💕💕


    Related Post