இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 27) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 14-06-2024

Total Views: 7590

உனக்கென்றே உயிர் கொண்டேன் 27

தனக்கு முன் மேசை மீது வெண்பாவால் வைக்கப்பட்ட கேண்டியை பார்த்ததும்... சற்று முன் அவளது வேலைக்கான படிவத்தில் கண்ட பெயரிலும், அவள் யாரென கண்டு கொண்ட மகேஷுக்கு, அவள் சொல்லாமலே தன்னை அண்ணாயென அழைத்தற்கான காரணம் விளங்கிற்று.

அதுவரை மனதில் பல அலைகழிப்புகள் இருந்தபோதிலும் அவற்றை புறம் ஒதுக்கியவன்,

"வெண்பா" என அழைத்து, அவள் நின்று திரும்பிட "மொழி வெண்பா" என அர்த்தத்தோடு வினவிட... சிறு புன்னகையில் ஆமோதித்தாள்.

நொடியில் மகேஷிடம் உற்சாகம்.

இருக்கையிலிருந்து எழுந்து அவளின் அருகில் வந்தவன்...

வெண்பா கதவின் பிடியில் கை வைத்தபடி பக்கவாட்டாக நின்றிருக்க,

"உன்னோட ஹேர் கவனிக்கவே இல்லை. இல்லைன்னா நேம் வச்சு அப்போவே கெஸ் பண்ணியிருப்பேன்" என்றான். விரிந்த புன்னகையோடு.

"இப்பவும் நானா சொல்லாமல் தான் என்னை கண்டுபிடிச்சிருக்கீங்க" என்றவள், "உங்க பிரண்ட் என்னைப்பற்றி எல்லாம் சொல்லியிருக்காருன்னு தெரியுது" என்றாள்.

"ம்க்கும்... சொல்லிட்டாலும்" என்ற மகேஷ், "அவனுக்கு நீ இங்கு ஜாயின் பண்றது தெரியாதா?" எனக் கேட்டான்.

எதற்கு கேட்கிறான் என புரிந்து...

"ம்ம்ம் சொன்னனே! அவங்களுக்கு நீங்க இங்க ஒர்க் பண்றது ஸ்ட்ரைக் ஆகியிருக்காது" என்றாள்.

"ம்ம்ம்..." கொட்டிய மகேஷ், "நீ என்னை பார்த்ததும் கண்டுபிடிச்சிட்ட... என்னை பார்த்திருக்கியா?" எனக் கேட்டான்.

"இல்லையே... சீனியர் அடிக்கடி சொல்லுவார். காலேஜில் பூபேஷ் அண்ணா அளவுக்கு இங்கு நீங்க மட்டும் தான் ரொம்ப க்ளோஸ் அப்படின்னு. அப்பப்போ உங்களோட பிக் காட்டியிருக்காங்க" என்றவள், "உங்களுக்கும் அவங்களுக்கும்...?" என கேள்வியாய் இழுத்திட்டாள்.

"நோ... நோ..." என்றவன், "வந்திடுமோன்னு தான் பயமா இருக்கு" என்றான்.

"ஹோ" என்ற வெண்பாவுக்கு அடுத்து எதுவும் கேட்டால், முதல் நாளே அதிக உரிமை எடுத்தது போலாகிவிடுமென,

"ஓகே..." என்று முடிக்க முடியாது பார்க்க,

"அண்ணாவே சொல்லலாம்" என்றான் மகேஷ்.

"ஓகேண்ணா... லீவிங் டைம் பார்ப்போம்" என்று வெண்பா சென்றிட, மகேஷ் அதுவரை காட்டிய உற்சாகம் வடிந்தவனாக தளர்ந்து இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

அவனால் வர்ஷினியின் கூற்றை ஏற்கவே முடியவில்லை. அவனது வீட்டில் அவனுடைய விருப்பத்திற்கு மாற்றில்லை. அப்படியிருக்கையில் வர்ஷினி சொல்வதை அவனால் ஏற்கமுடியவில்லை.

இப்படி ஒன்றின் மூலம் தான் தங்கள் திருமணம் நடக்க வேண்டுமாயென்ற ஆதங்கம்.

அத்தோடு வர்ஷினி சொல்வதை அவனால் கற்பனையிலும் நினைத்திட முடியவில்லை. 

அவள் சொல்லிய நொடி, எப்படி அவளால் இதனை சாதாரணமாக, இத்தனை எளிதாக சொல்ல முடிகிறதென்று அதிர்வாய் நினைத்தாலும், அவை யாவும் தன் மீது கொண்ட காதலுக்காக, தன்னை சேர்வதற்காக அவள் கூறுகிறாள் என்று பொங்கி வந்த கோபத்தை அடக்கி, அவளை ஏதும் திட்டாது விட்டாலும்... அடுத்து அவளிடம் கோபத்தை காட்டாமல் இருக்க முடியாதென்று அவனுக்கே திண்ணமாகத் தெரிந்திட, வர்ஷினியின் ஒரு அழைப்பையும் ஏற்காது, அவளின் புலனம் தகவலுக்கும் பதிலளிக்காது இருக்கிறான்.

மகேஷுக்கு பூர்வியின் திருமண நேரத்தில் தன்னுடைய காதலைப்பற்றி பேச்செடுக்க வேண்டுமா என ஆயாசமாக வந்தது.

அவ்னுக்கு வர்ஷினி வேறு வழி யோசித்திடவே நேரம் அளிக்கவில்லை.

உன் அம்மா ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்று, வர்ஷினியின் பிடிவாதத்தில் தமிழின் காதலை மகேஷ் சொல்லிய போது, அது தனக்கும் தெரியுமென்றாலும், வர்ஷினி மகேஷை இவ்விஷயத்தில் படுத்தி வைத்திட்டாள்.

தலையை பிடித்துக்கொண்டவனுக்கு சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

மாலை தமிழிடம் நேரில் சந்திக்கலாம் என்று சொல்லியவன், அதற்கு மேல் மனதின் அலைப்புறுதலில் தவித்திட முடியாதென்று விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

மகேஷ் நேராக வந்தது தமிழிருக்கும் தேயிலை தோட்டத்திற்குதான்.

எஸ்டேட்டில் சரிவாக அமைந்திருக்கும் தோட்டத்திற்கு அருகிலேயே சமதள மேட்டிலிருக்கும் தேயிலைகளை சுத்திகரித்து பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் தண்டவாளம் போல் நீண்ட சல்லடையில் நர்த்தனமாடிக்கொண்டிருந்த தேயிலைகளை பார்த்துக்கொண்டிருந்த தமிழின் அருகில் வந்து நின்றான் மகேஷ்.

மகேஷ் மேட்டுப்பாளையம் வந்ததும் ரயில் நிலையத்தில் வைத்தே தமிழுக்கு அழைத்து இருக்குமிடம் தெரிந்துகொண்டவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

"விஷயம் ரொம்ப பெருசு போல?"

தன்னிடம் வர்ஷினியைப் பற்றி பேச விழைகிறானென்று மகேஷ் காலையில் பார்க்க வேண்டுமென சொன்னதிலேயே யூகித்திருந்த தமிழுக்கு, இப்படி ஆர்பரிப்போடு வந்து நிற்பவனை கண்டதும் அப்படித்தான் கேட்க வைத்தது.

"முடியல மச்சான். கொஞ்சம் கூட புரிஞ்சிக்கமால் படுத்தி வைக்கிறாள்." நெற்றியை தேய்த்தவனாக ததும்பும் மனநிலையில் சுற்றம் கருதாது சொல்லியிருந்தான்.

தமிழ் தன்னுடைய பார்வையை தங்களை சுற்றியிருக்கும் பணியாளர்கள் மீது வீசியவன்,

"வெளியில் பேசுவோம்" என்று ஆலையை கடந்து வெளியில் வந்து விட்டது ஒரு மரத்திற்கு கீழிருக்கும் பாறையின் மீது அமர்ந்தான்.

"இப்போ சொல்லு? அதென்ன இருக்குமிடம் கூட பார்வையில் படாது கொதிக்கிற?" எனக் கேட்டான்.

"ரெண்டு நாளைக்கு முன்ன வீட்டில் என்ன நடந்துச்சு?"

மகேஷ் கேட்டிட, அவனை பார்வையால் துளைத்த தமிழ்...

"வர்ஷி சொல்லியிருப்பாளே?" என்றான்.

"சொன்னாள்" என்ற மகேஷ், "இப்போவே கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்றாடா?" என்றான். இடையில் கைகளை குற்றியவனாக.

"இப்போவே மீன்ஸ்?"

"டூ ஆர் திரீ டேசில்." அத்தனை ஆயாசம். மகேஷின் குரலில்.

"கல்யாணம் பண்ணிக்க சொல்றது மட்டும் உன்னோட பிரச்சினை மாதிரி தெரியலையே?" தமிழ் தாடையை நீவினான்.

தமிழிடம் மறைக்க ஒன்றுமில்லை... நடந்ததை அப்படியே கூறினான் மகேஷ்.

தெய்வானை வர்ஷினிக்கு தமிழை கேட்டு பெரும் விவாதம் நடந்த அன்றே வர்ஷினி மகேஷுக்கு அழைத்து அனைத்தும் சொல்லிவிட்டாள்.

"தமிழ் தான் முடியாதுன்னு சொல்லிட்டானே! நீயெதுக்கு பயப்படுற?" மகேஷ் சாதரணமாகத்தான் இருந்தான். வர்ஷினி அளவுக்கு அவனிடம் எவ்வித பதட்டமும் இல்லை.

"அத்தான் மறுத்தாலும்... அம்மாவோட முடிவு மாறல... மாறாது" என்று அழுத்தமாக மொழிந்தாள் வர்ஷினி.

"தமிழை மீறி உன் அம்மாவால் ஒன்னும் செய்திட முடியாது." வர்ஷினியின் பயத்தை அப்போதும் மகேஷ் லட்சியம் செய்யவில்லை.

"அச்சோ மகி... உனக்கு புரியலையா? அவங்க தெய்வானை.தான் நினைத்ததை கண்டிப்பா நடத்திக் காட்டுவாங்க" என்றாள்.

"புரிஞ்சிக்காமல் பேசுறது நீதான் வர்ஷி. தமிழ் வெண்பாவை லவ் பண்ணாம இருந்தாலும் கூட உன்னை கல்யாணம் செய்துக்கமாட்டான். இதில் அவன் வெண்பாவை உயிரா நேசிக்கும்போது எப்படி நடக்கும்?" எனக் கேட்டான்.

"அம்மா என்னவும் செய்வாங்க!"

அவள் தெய்வானையின் மீது வைத்துள்ள பயத்தை ஓரளவு உணர்ந்துகொண்டான்.

"இப்போ என்ன? உனக்கும் எனக்கும் க்ளயாணம் நடக்கணும். அவ்வளவு தானே?" எனக்கேட்ட மகேஷ், "எங்க வீட்டில் சொல்லி தேவராஜ் அப்பாவிடம் பேச சொல்றேன். மத்ததை பூர்வி அக்கா கல்யாணம் முடிந்ததும் பார்த்துக்கலாம்" என்றான்.

"இது ஒத்து வராது மகி." பட்டென்று சொல்லியிருந்தாள்.

"வேறென்னபண்ணனும்?" 

அவள் ஏற்கனவே ஒரு முடிவெடுத்துவிட்டு தன்னிடம் பேசுவதை அக்கணம் புரிந்து அமைதியாக வினவினான்.

 "ரெண்டு நாளில் பண்ணிக்கலாம். எப்பவும் போல கோவிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வரேன். கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க அம்மா முன்னாடி போய் நிற்கலாம்" என்றாள்.

எதற்கு இந்த அவசரமென்று மகேஷுக்கு சுத்தமாக புரியவில்லை.

"விளையாடாத வர்ஷி. எங்க வீட்டுல சம்மதம் தான். தேவராஜ் அப்பா பேசினால் உங்க அம்மாவும் ஓகே சொல்ல வாய்பிருக்கும்போது... இப்படி யாருக்கும் தெரியாமல் எதுக்கு கல்யாணம் பண்ணனும்?" எனக் கேட்டான். ஆதங்கமாக.

"அம்மா யார் பேச்சையும் கேட்கமாட்டங்க மகி. மாமா சொன்னாலும். தமிழ் அத்தானுக்கு கட்டி கொடுக்கலனாலும், என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கவே மாட்டாங்க" என்றாள்.

"சரி... இப்படித்தான் கல்யாணம் அப்டிங்கிறப்போ... கொஞ்ச நாளாகட்டும். பண்ணிக்கலாம்" என்றான்.

மகேஷுக்கு யாருக்கும் தெரியாமல் செய்துகொள்வதில் உடன்பாடில்லை. தற்சமயத்திற்கு வர்ஷினியின் பிடிவாதத்தை குறைப்பதற்காக அவ்வாறு கூறினான். ஆனால் வர்ஷினி தன் பிடியில் அடமாக நின்றாள்.

தெய்வானை ஏதேனும் செய்தாவது தமிழை வர்ஷினியின் கழுத்தில் தாலி கட்ட வைத்து விடுவேனென்று அகிலாண்டத்திடம் கத்திக் கொண்டிருந்ததை கேட்டவளுக்கு மகேஷை உடனடியாக திருமணம் செய்தால் மட்டுமே தன்னுடைய தாயின் எண்ணத்திலிருந்து வெளியேற முடியுமென்று மனதில் ஆழமாக அழுத்தம் கொடுக்க மகேஷிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாள்.

"கல்யாணம் பண்ணிக்கிட்டால் மட்டும் உங்க அம்மா ஏத்துப்பாங்களா வர்ஷினி?" அப்படியொரு இறுக்கம் அவனிடம்.

"நிச்சயம் ஏத்துக்கமாட்டங்க."

"அப்புறம் எதுக்கு இப்படி திருட்டுத்தனமா?" என ஆத்திரமாகக் கேட்டவன், "எங்க வீடு, உன் வீட்டில் உன் அம்மா தவிர்த்து மற்றவர்களின் சம்மதத்தோடாவது நம் கல்யாணம் நடக்கணும்" என்றான்.

"நான் காதலிக்கிற விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான். அவங்களுக்கு தெரிவதற்கு முன் நம்ம கல்யாணம் நடந்திருக்கணும். நாம் கல்யாணம் பண்ணிக்கிட்டால், அத்தான், வெண்பாவுக்கும் அம்மா பிரச்சினை கொடுக்கமாட்டங்க" என்றாள்.

"நீ நினைத்தது நடக்கணும் என்பதற்காக எதாவது சொல்லிட்டு இருக்காதே வர்ஷினி" என்றவன், "உனக்கென்ன உங்கம்மா தமிழுக்கு உன்னை கட்டிவைக்க ஏதும் திட்டம் போடுவாங்கன்னு தானே பயம். நான் நாளைக்கு என் அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்து நம் லவ் விஷயத்தை பேசுறேன் சரியா. அதுக்கு அப்புறமும் உங்கம்மா ஒத்துக்கலைனாலும், நம்மை ஏத்துக்குறவங்க முன்னிலையில் நம் கல்யாணம் நடக்கும்" என்றான்.

மகேஷ் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வர்ஷினி தன் பிடியிலிருந்து இறங்குவதாக இல்லை. அவளுக்கு தெய்வானையின் மீதான பயம் அவ்வாறு பேச வைத்தது.

இதைவிட உச்சம்...

"நீ இப்போ கல்யாணம் பண்ண சம்மதிக்கலன்னா, நான் உன்னால பிரெக்னென்ட்டா இருக்கன்னு சொல்லிடுவேன். அதுக்கு அப்புறம் என் அம்மா அத்தானை கட்டிக்க சொல்லி தொல்லை பண்ணமாட்டாங்கல?" என்றாள்.

இருவரின் காதலையும் தரமிறக்கும் செயலல்லவா இது. 

மகேஷுக்கு ஆத்திரமாக வந்தது.

"அறிவிருக்காடி உனக்கு?"

"அப்போ கல்யாணம் செய்துக்கலாம் வா. இதுக்கு கல்யாணம் பெட்டர் தானே?" எனக் கேட்டாள்.

மகேஷுக்கு எதிலாவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

"என் அம்மா வாயடைக்க இதுதான் ஒரேவழி மகி. ஒன்னு நம்ம கல்யாணம் இல்லை... இப்படி சொல்லணும்" என்றாள்.

வர்ஷினி புரிந்துக்கொள்ளாது பேசுவது மகேஷுக்கு எரிச்சலைக் கொடுக்க, அவளை திட்டிவிடுவோமோ என்று அஞ்சியே அதற்கு பின்னர் அவளிடம் பேசவில்லை. அவளின் எவ்வித அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை.

அதனாலே வர்ஷினி தமிழின் எண்ணிலிருந்து மகேஷுக்கு தகவல் அனுப்பினாள்.

மகேஷ் சொல்லிட தமிழுக்கு வர்ஷினி மகேஷ் மீது கொண்டுள்ள காதலின் அளவு தெரிந்தது.

"உன்னை எங்க கட்டிக்க முடியாதோங்கிற அவளோட பயம் மகேஷ் இது. அத்தையிடம் அவளுக்கு அளவுக்கு அதிகமான பயமிருக்கு. அதில் தான் என்னன்னு புரியாமல் உளறியிருக்காள்" என்றான் தமிழ்.

"அது எனக்கும் புரியுது தமிழ். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி" என்றான்.

"நான் அப்பாவிடம் பேசிட்டு உங்க வீட்டில் பேச சொல்றேன்" என்றான்.

"சாரிடா மச்சான். அல்ரெடி அக்கா மேரேஜூக்கு அலைஞ்சிட்டு இருக்க. இதுல எங்க காதல் வேற" என்றான். வருத்தமாக.

"ம்ப்ச்... என் மச்சான் கல்யாணப்பேச்சு எனக்கும் சந்தோஷ் தான்டா... இதென்ன வேத்து ஆளாட்டம்" என்ற தமிழ், வர்ஷினி தவிர்த்து பலவற்றை பேசி மகேஷை ஓரளவு சமாதானம் செய்தான்.

"எனக்கென்னவோ அல்டாப்பு பெரிய பிளான் பண்ணுதுன்னு தோணுது மச்சான். அதான் வர்ஷி இவ்வளவு அவசரமா முட்டாள் மாதிரி ஏதேதோ தின்க் பன்றாள்" என்றான் மகேஷ்.

"திரும்பவுமாடா?" என்ற தமிழ், அப்பேச்சினை விடுக்க...

"மொழியை பார்த்தியா?" என பேச்சினை மாற்றினான்.

"செம பொண்ணு மச்சான். உனக்கு ஏத்த மாதிரி" என்ற மகேஷ் அலுவலகத்தில் நடந்ததை அவனோடு பகிர்ந்துகொண்டான்.

"ஏன் சொல்லல?"

"பர்ஸ்ட் எனக்கே ஸ்ட்ரைக் ஆகலடா. மார்னிங் ஆபிஸ் வந்துட்டேன்னு அவள் மெசேஜ் பண்ண பிறகு தான் நினைவு வந்தது. எப்படியும் நீ யாருன்னு பார்த்ததும் கண்டுபிடிச்சி அவளே உன்கிட்ட பேசிடுவான்னு தெரியும். அதான் எதுவும் சொல்லிக்கல" என்று விளக்கம் கொடுத்தான்.

"ம்ம்ம்" என்ற மகேஷ், தன்னுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து வெண்பா கொடுத்த கேண்டியை எடுத்து தமிழிடம் நீட்டினான்.

அதனை பார்த்ததுமே...

"உனக்கு கொடுத்தாளா?" எனக் கேட்டவன், மகேஷின் கையிலிருந்து எடுத்து தன் சட்டை பையில் வைத்துக் கொண்டான்.

"அது எனக்கு கொடுத்தது?" மகேஷ் முறைத்துக்கொண்டு சொன்னான்.

"அதுக்கென்ன?" தமிழ் சாதாரணமாக தோளினை ஏற்றி இறக்கினான்.

"ஒண்ணுமில்லை" என்ற மகேஷ், "பார்த்துக்கோ மச்சான். மண்டை வெடிக்குது" என்று அங்கிருந்து கிளம்ப,

"வர்ஷியிடம் பேசு. பார்த்துக்கலாம்" என்று அனுப்பி வைத்தான் தமிழ்.

சட்டை பையில் வைத்த மிட்டாயை எடுத்து தன்னுடைய உள்ளங்கையில் வைத்த தமிழ் அதனை புகைப்படம் எடுத்து தன்னவளுக்கு அனுப்பி வைத்தான். சிறு புன்னகையோடு.

அடுத்து வீட்டிற்கு வந்த தமிழ் தேவராஜ்ஜிடம் பேசி, அப்போதே மணியிடம் பேச அழைத்துச் சென்றான்.

மணிக்கு வர்ஷினி காதலிக்கிறாள் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவருக்குத்தான் தெரியுமே வர்ஷினி தெய்வானை மீது வைத்திருக்கும் பயம் எப்படியானது என்று. அந்த பயத்தால் தானே அவரிடமே கூட அவள் தள்ளி நின்றது.

தமிழ், மகேஷ் கூறிய எல்லாம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னான்.

"மகேஷ் ரொம்ப நல்ல பையன் மாப்பிள்ளை" என்று தேவராஜ் சொல்லிட,

தமிழுடன் சிறு வயதிலிருந்தே மகேஷை காண்கிறாரே மணி, ராஜ் சொல்லியதை ஆமோதித்தார்.

"தெய்வா என்ன சொல்லுவான்னு இருக்கு" என்றார். மணிக்கு மனைவி தானே பெரும் கவலை.

"அம்மாவா அவங்களுக்கு உரிமை இருக்குன்னா... அப்பாவா உங்களுக்கும் இருக்கு தானே" என்ற தமிழ், 

"அத்தைக்கு தெரிந்தால் சேரவிடாமல் செய்திடுவாங்களோன்னு ரொம்பவே பயப்படுறாள். நாம் இப்போ பேசி வைப்போம். அவளோட பயம் போகுமே. அம்மா என்ன செய்தாலும் என்னோட குடும்பம் பலமா இருக்குன்னு தைரியம் கொடுக்கிறோம். அவ்வளவு தான். அத்தை சம்மதிக்கிறப்போ அடுத்த நாளே கூட கல்யாணம் வச்சிக்கலாம்" என்றான்.

மணிக்கும் அதுவே சரியெனப்பட அடுத்த நாள் காலை மகேஷ் அலுவலகம் செல்வதற்கு முன்பு, மூன்று பேரும் மகேஷின் வீட்டிற்கு சென்று பேசுவோமென முடிவு செய்தனர்.

தேவராஜ் அகிலாண்டத்திடம் அதற்கு முன்பு சொல்லிட வேண்டுமென கூற,

"அத்தைக்குக்கூட நாளைக்கே தெரிவது நல்லது. தேவையில்லாமல் என்னை வர்ஷினியோடு ஜோடி சேர்க்க பிளான் பண்ணாமல் இருப்பாங்க" என்றான் தமிழ்.

"ம்க்கும்" என்ற மணி, "நாம் என்ன செய்தாலும், அவள் எண்ணம் நடக்கும் வரை அதுக்காக என்னவும் செய்வாள்" என்றார். கணவனாக மனைவியை நன்கு புரிந்து வைத்திப்பவருக்கு, மனைவியை தன்னிடம் வரவழைக்கும் சூட்சுமம் மட்டும் தெரிந்திருக்கவில்லை.

மணியை பார்த்து பேசி வீட்டிற்கு திரும்பியதும், தனத்திடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை பகிர்ந்துகொண்டதோடு, தமிழ் வர்ஷினியிடம் செல்ல தேவராஜ் அகிலாண்டத்தின் அறைக்குச் சென்றார்.

அகிலாண்டத்திற்கு ஏற்கனவே பேத்தியின் காதல் விஷயம் தெரிந்திருக்க, தேவராஜ் சொல்லியதை ஏற்கவே செய்தார்.

"உன் தங்கச்சி இதுக்கென்ன ஆட்டம் ஆடுவாளோ!" என்றார்.

"அதை அப்போ பார்த்துக்கலாம்மா" என்ற தேவராஜ்ஜுக்கும் அந்த கவலை இருக்கத்தான் செய்தது.

வர்ஷினியின் அறைக்கு வெளியிலிருந்தே தமிழ் அவளை அழைத்திருக்க, வெளியில் வந்தவளிடம் மாடி வராண்டாவில் வைத்தே பேசினான்.

"நாளை ஈவ்வினிங் போல மகேஷ் வீட்டிலிருந்து வரலாம்" என்றவன் வர்ஷினியின் அதிர்வை கவனித்து,

"உன் காதலில் நீ உறுதியா நின்னு மகேஷை விரும்புறன்னு ஒத்துகிட்டால் மட்டும் போதும்" என்றதோடு, "உன் அம்மாவுக்கு பயந்து பேக் அடிச்சிடாத" என்று அழுத்தமாக சொல்லிச் சென்றான்.

ஆனால் அப்போதே வர்ஷினிக்கு தெய்வானையை நினைத்து பயம் மலையளவுக்கு உயர்ந்தது.


Leave a comment


Comments


Related Post