இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 28) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 15-06-2024

Total Views: 8760

உனக்கென்றே உயிர் கொண்டேன் 28

வெண்பாவுக்கு முதல் நாள் பணி அனுபவம் நல்லபடியாகவே அமைந்தது.

மனதில் உற்சாகமிருந்தாலும் எட்டு மணி நேரம் தாண்டிய வேலை, உடலை சோர்வுற வைத்தது.

"இன்னும் கிளம்பலையா?"

சுமன் கேட்டிட சிறு சிரிப்பை காட்டி...

"இதோ" என்றவளாக அலைபேசியை எடுத்து அஸ்வினுக்கு அழைத்திட, சுமன் நகராது அவளை பார்த்தபடி நின்றுவிட்டான்.

அவனுக்கு வெண்பாவை பார்த்ததும் பிடித்துப்போனது. வெண்பா அழகு என்பதைத் தாண்டி அவளின் புன்னகை முகம் அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடும். அதோடு அவளது நீண்ட கூந்தல் பார்ப்பவரை ஒரு கணம் வியக்க வைத்த அந்த பின்னலில் கட்டுண்டுப்போகச் செய்திடும். அப்படித்தான் சுமனுக்கும் வெண்பாவை பார்த்த கணம் பிடித்தது.

தாமதிக்காது அதனை சொல்லிடவும் துணிந்துவிட்டான்.

"அண்ணா வொர்க் முடிஞ்சுது!"

அஸ்வினிடம் பேசினாலும் வெண்பா சுமனைத்தான் ஆராய்ந்து பார்த்தாள்.

அவனின் ரசனை அவளின் ஆராய்வை கவனிக்கத் தவறியது. ஆனால் வெண்பா அவனின் விழியின் மொழியை சரியாக விளங்கிக்கொண்டாள்.

முன்பு போல எந்தவொரு ஆணின் ஈர்ப்பான பார்வையும் அவளை பதைப்பிற்கு உள்ளாக்குவதில்லை. வயதில் முதிர்வோ அல்லது பக்குவமோ அந்தந்த படிநிலைகளில் அதையெல்லாம் கடந்து வரத்தான் வேண்டுமென்று நிதர்சனத்தை புரிந்து வைத்திருந்தாள்.

அதனால் சுமனை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராகத்தான் இருந்தாள்.

இருப்பினும் இப்படி வேலைக்கு வந்த முதல்நாளே இப்படியொன்றை எதிர்கொள்வோமென அவள் நினைக்கவில்லை.

அஸ்வின் எதிர்பக்கம் என்ன கூறினானோ...

"ஓகேண்ணா... நீங்க பாருங்க. நான் ஆபீஸ் பஸ்ஸில் போய்க்கொள்கிறேன்" என்று அழைப்பைத் துண்டித்தவள்,

"என்கிட்ட ஏதும் பேசனுமா சுமன்?" எனக் கேட்டிருந்தாள்.

"எஸ்" என்றவன், "உங்களை பிடித்திருக்கு. வீட்டில் எனக்கு பெண் பார்த்துட்டு இருக்காங்க. நான் உங்க வீட்டில் பேச சொல்லட்டுமா?" என எவ்வித மறை வார்த்தைகளுமின்றி கேட்டிருந்தான்.

"நீங்க ரொம்ப பிராக்டிகல் டைப். உங்க பேச்சிலே தெரியுது" என்ற வெண்பா, "அதனால் நான் உங்களுக்கு நிறைய விளக்கம் கொடுக்க வேண்டியதிருக்காது நினைக்கிறேன்" என்றதோடு, "அம் எங்கெஜ்ட்" என்றாள்.

"ஹோ" என்ற சுமனுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், "அம் சாரி" என்று உண்மை புரிந்து நகர்ந்திருந்தான்.

ஆனால் வெண்பாவுக்குத்தான் மனம் அழுத்தம் கொண்டது. இனியும் தமிழுடனான கண்ணாமூச்சி ஆட்டம் வேலைக்காகாது. நேரடியாக சீக்கிரம் சொல்லிட வேண்டுமென முடிவெடுத்தாள்.

வீட்டிற்கு வந்ததும் தமிழுக்கு தகவல் அனுப்ப புலனம் திறந்தவள், அவன் அனுப்பியிருந்த புகைப்படம் கண்டு இதழ் விரித்தாள்.

"நான் மகேஷ் அண்ணாக்கு கொடுத்தால், அவங்க உங்களுக்கு கொடுத்திட்டாங்களா?" என கேள்வி கேட்டு அனுப்பியவள், குளியலறைக்குள் புகுந்து வெளியில்வர, தமிழ் இன்னும் அதனை பார்த்திருக்கவில்லையெனக் காட்டியது.

"இன்னும் வேலை முடியல போல" என நினைத்தவள், பூர்விக்கு அழைத்து, அவள் விடுதி சென்றுவிட்டாள் என்பதறிந்து சில நிமிடங்கள் பேசிவிட்டு வைக்க, செவ்வந்தி இரவு உணவிற்கு அழைத்தார்.

உணவு முடித்து படுக்கையில் விழுந்தவள், இன்னமும் தமிழிடமிருந்து சிறு தகவலும் இல்லையென்றுதும் கால் செய்து பார்க்க, அழைப்பை ஏற்காது துண்டித்திருந்தான்.

அப்போதுதான் வர்ஷினியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

தான் சொல்லியதில் வர்ஷினி அப்பட்டமாக முகத்தில் பயத்தைக் காட்டினாலும், அதனை கண்டுகொள்ளாது...

"கொஞ்சம் திடமா இரு வர்ஷி" என்றவனாக தனதறைக்குச் சென்றான்.

தன்னை இலகுவாக்கிக்கொண்டு கட்டிலில் விழுந்தவன், அவள் அனுப்பிய தகவலை படித்து விட்டு அவளுக்கு அழைத்தான்.

அவனின் அழைப்பிற்காகவே காத்திருந்ததைப்போல், முதல் ஒலியிலேயே ஏற்றிருந்தாள்.

"என்ன பாஸ் ரொம்ப பிஸியா?" எனக் கேட்டாள்.

தமிழும் வெண்பாவின் மனதை அவள் மூலம் வெளிப்படையாக அறிவதற்கு நடந்த நிகழ்வுகளை... அதாவது தெய்வானை வர்ஷினிக்கு தன்னைக் கேட்டதை மட்டும் கூறினான்.

பட்டென்று வெண்பாவின் முகம் சுருங்கிப்போனது. அவளிடமிருந்து எவ்வித சத்தமுமின்றி இருக்க...

"மொழி" என அழைத்திருந்தான்.

எப்போதும் அக்குரலுக்கு, அவ்விளிப்பிற்கு பனியாய் உருகி சிலிர்ப்பவள், கல்லாய் இறுகி இருந்தாள்.

"லைனில் இருக்கியா?"

"ஹான்... ஆங்... இருக்கேன்."

வெண்பாவின் தடுமாற்றமும், குரல் மாற்றமும் அவனுக்கு விளங்க, குரல் அழைப்பினைத் துண்டித்து, காணொளி அழைப்பு விடுத்தான்.

எடுக்கத் தயங்கியவள், சட்டென்று கலங்கிவிட்ட கண்களை அழுந்த துடைத்தவளாக, திரையை தொட்டு அவனுக்கு முகம் காட்டினாள்.

தமிழ் தன் கூர் விழிகளை அவளின் அல்லி விழிகளோடு நேர்கொண்டு பதிக்க... தன் வீச்சு தாங்காது இமை தாழ்த்தினாள்.

"அழுதியா?"

"ஹான்..." விலுக்கென விழி உயர்த்தி அவனது முகம் பார்த்தவள், மீண்டும் முகம் தாழ்த்தி இல்லையென தலையசைத்தாள்.

"என்னை பார்க்கணும் மொழி. என் கண்ணை." அழுத்தமாகக் கூறினான்.

மெல்ல அவன் சொன்னதை செய்தாலும், அவனின் ஊடுருவும் பார்வை அவளை நிலையின்றி அலைபாய வைத்தது.

"அவங்க கேட்டாங்கன்னு தான் சொன்னேன்..." அழுத்தத்தில் அடர்த்தியாய் மொழிந்தான்.

சடுதியில் கலங்கிய அவள் மனம் அமைதி கொள்ள... விழிகளில் அலைப்புறுதல் நிலை பெற்றது.

"நீங்க என்ன சொன்னீங்க?"

"என்ன சொல்லணும்?"

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

"தெரியல!"

"தெரியலையா?"

சுமன் விருப்பத்தை சொல்ல முயன்றது, வெண்பாவை காதலை தமிழிடம் எப்படியும் சொல்லிட வேண்டுமென முடிவெடுக்க வைத்திட்டாலும்... இப்போது அவனிடம் அதைப்பற்றி பேசிடவே நா எழவில்லை. நெஞ்சுக்குழி படபடத்தது. கைகளின் ஈரம் அவளின் அவஸ்தையை கூட்டியது.

உடனே அப்பேச்சினை மாற்ற முயற்சித்தவளாக...

"மகேஷ் அண்ணாக்கு நான் கொடுத்த கேண்டி நீங்க எதுக்கு வாங்குனீங்க?" என்று அவனின் விழிகள் சந்திக்காது வினவினாள்.

"மொழியோடது எல்லாம் தமிழுக்குத்தான்" என்று நொடியும் கடக்காது சொல்லிட... வெண்பாவின் நீண்ட இமைகள் புருவ உச்சியை தொட்டு விரிந்தது.

"என்ன... என்ன சொல்ல வறீங்க?"

"மொழிக்கு தமிழை புரியுமே!"

அவளுக்கு அய்யோ என்றிருந்தது.

இதற்கு அந்த மூன்று வார்த்தையை தானே வெளிப்படையாக சொல்லிவிட்டால் என்ன என்று தோன்றிய கணம்... அது அத்தனை எளிதல்ல... அவன் கண் பார்த்து உன்னால் சொல்ல முடியாதென அவளின் மனமே அவளுக்கு எதிராய் நின்றது.

"என்ன புரியலையா?"

"ஆங்..."

"சரி நேரில் பார்க்கும்போது நானே விளக்கமா புரியுற மாதிரி சொல்றேன்" என்றவன், அவளின் தடுமாறும் நயனங்களை உள்வாங்கியபடி இணைப்பை முறித்திருந்தான்.

வெண்பாவுக்குத்தான் இருக்கும் படபடப்பு அதிகமாகியது. 

தமிழின் பேச்சுக்கள் யாவும் அவளை ஒருவித குழப்பத்தில் ஆழ்த்தியது என்பதே உண்மை.

காதலில் பொருந்தும் பல கோணங்கள் நட்பிலும் பொருந்துமே! அத்தகைய குழப்பமே அவளிடம்.

மண்டையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

*******

அடுத்த நாளே தமிழ் மணியையும் தேவராஜ்ஜையும் கூட்டிக்கொண்டு மகேஷின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.

மகேஷ் ஏற்கனவே தன் தாய், தந்தையிடம் விஷயத்தை சொல்லியிருக்க அவர்களுக்கும் சம்மதம் தான். ஆனால் தெய்வானை என்ன சொல்வாரோ என்கிற கவலை. அதனை மறைக்காது பெரியவர்கள் இருவரிடமும் பகிர்ந்துகொண்டார் மகேஷின் தந்தை ராஜன்.

"புள்ளைங்க சந்தோஷத்துக்காக சிலதை ஏற்று கடந்து வருவோம் ராஜன்." தேவராஜ் சொல்லிட, ராஜனும் அவர் மனைவி சகுந்தலாவும் சரியெனும் விதமாக தலையசைத்தனர்.

"தெய்வானைகிட்ட நான் பேசிட்டு சொல்றேன். பக்குவமா எடுத்து சொன்னால் புரிஞ்சிக்கக்கூடிய ஆள் தான்" என்ற தேவராஜின் கூற்றை மணியால் ஏனோ ஏற்க முடியவில்லை.

"நாங்களே வேணுன்னா வந்து பேசுறோம்." சகுந்தலா கூறிட, தேவராஜ் மறுத்தார்.

"முதலில் நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால்" என்று இழுத்து நிறுத்திய மணி, "முகத்துக்கு நேரே தெய்வானை ஏதும் சொல்லிட்டால் ரெண்டு குடும்பத்துக்கும் வலியாகும். அது நம்ம பசங்க வாழ்க்கையை பாதிக்கும். தெய்வானையிடம் நாங்க மொத பேசுறோம்" என்றார்.

அவர்களுக்கும் அது சரியெனப்பட ஒப்புக் கொண்டனர்.

சில நிமிடங்களில் விடைபெற்று வீட்டிற்கு வந்தவர்கள் தெய்வானையிடம் பேச சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தனர். தெய்வானையின் பேச்சுக்கு பயந்து தேவராஜ்ஜே சற்று தயங்கத்தான் செய்தார்.

"நான் சொல்லட்டுமாப்பா?"

"அது சரிவராது தமிழ்."

தமிழ் கேட்டிட மறுத்தவர், மணியை ஏறிட்டார்.

கண் மூடி திறந்த மணி,

"வர்ஷினிக்கி மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன்" என்று பட்டென்றுக் கூறினார்.

இவர்கள் வந்தது முதல் கண்டு கொள்ளாது தொலைக்காட்சியில் பார்வையை பதித்திருந்த தெய்வானை, மெல்ல திரும்பி மணியை பார்த்தார்.

பல வருடங்களுக்குப் பின்னர் கணவரை நேருக்கு நேர் பார்க்கும் பார்வை அது.

தமிழின் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.

வர்ஷினிக்கு எங்கே தான் காதலிப்பதை சொல்லி விடுவார்களோ என்று கிலி பிடித்தது. தெய்வானை யார் இருக்கிறார்கள் என்றும் பாராது கையை நீட்டிடுவார். பயத்தில் கன்னத்தில் கை வைத்து மூடிக்கொண்டாள்.

"என்னாச்சு வர்ஷி?"

அவளுக்கு அருகில் நின்றிருந்த தனம் அவளை உலுக்கிக் கேட்டிட,

"ஹான்... ஒண்ணுமில்லை அத்தை" என்று நடப்பதை கவனம் வைத்தாள்.

அகிலாண்டம் மகளை அவதானித்தபடி ஆராய்ந்து கொண்டிருந்தார்.

தெய்வானை மேலே சொல் என்பதைப்போல் மணியையே பார்த்திருக்க...

"அவங்களா விருப்பப்பட்டு கேட்கிறாங்க. நல்ல குடும்பம். நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க. பழக்கமானவங்களும் கூட. அதைவிட பையன் நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்தவன்" என்றார் மணி.

அப்போதுதான் வர்ஷினிக்கு மூச்சே வந்தது.

அவள் எண்ணப்படி வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டால் எப்படியும் தனது காதல் தெய்வானைக்கு தெரிய வரும் என்று அறிந்தும் அப்படியொரு திட்டம் போட்டவளுக்கு, இக்கணம் தான் காதலிக்கும் விஷயம் அன்னைக்கு தெரிந்துவிடுமோ என அத்தனை அஞ்சினாள். ஆனால் அதைப்பற்றியே சொல்லாது, அவர்களாகக் கேட்பதைப்போல் மணி சொல்லியதில் அப்படியொரு ஆசுவாசம் வர்ஷினியிடம்.

"பையன் யாருன்னு சொல்லாம இந்த விவரம் எதுக்கு?" தெய்வானை நொடித்துக்கொண்டார்.

தேவராஜ் சொல்லியதுமே தெய்வானை ஆடத் தொடங்கிடுவாரென்ற... அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிய தெய்வானை, பொறுமையாக மணி சொல்வதை கேட்பதே பெருத்த ஆச்சரியமாக இருந்தது.

தமிழுக்கு மட்டும் அவரின் இந்த அமைதியை ஏனோ ஏற்க முடியவில்லை.

"தமிழோடு ஃபிரண்ட் மகேஷ்!" தேவராஜ் சொல்லிட, தெய்வானை சில கணங்கள் அனைவரையும் ஒரு சேர ஏறிட்டு பார்வையை சுழற்றினார்.

"நல்ல இடம். நம் கண் பார்வையில் வர்ஷி இருப்பாள் அண்ணி." வாய் திறந்த தனம், தெய்வானையின் பார்வையில் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

"உறுதியா தெரிஞ்சுப்போச்சு... என் ஆசை நடக்காதுன்னு. வீம்பு புடிச்சு என்ன ஆவப்போகுது. ஏதோ பார்த்து செய்யுங்கள்" என்று எவ்வித வாதமும் செய்யாது, அவர்களின் விருப்பத்தை ஏற்று சம்மதம் சொல்லியவராக சேலை தலைப்பை விரித்து இடையில் சொருகியவராக எழுந்து சென்றுவிட்டார்.

தனம் நம்ப முடியாது தெய்வானை சென்ற பின்பும், அத்திசையையே பார்த்திருந்தார். மற்றவர்களுக்கும் அதே நிலை தான்.

தமிழ் மட்டுமே, தாடையை நீவியவனாக, 'நம்ப முடியலையே' என்று மனதில் நினைத்தான்.

தெய்வானை அமைதிக்கு பின் பெரிய திட்டம் ஒன்றுள்ளது என்று மட்டும் தமிழுக்கு ஸ்திரமாகத் தோன்றியது.

'தன்னை மீறி எதுவும் நடக்காது' என்று நம்பியவன், அக்கணம் தெய்வானையின் சம்மதத்தை ஏற்கவே செய்தான்.

"என்னால நம்பவே முடியலங்க. அண்ணியோட இந்த அமைதி..." தனம் வாயில் கை வைத்திட,

"அவள் என் முகம் பார்த்து பேசுனதையே நம்ப முடியாமல் நானிருக்கேன்" என்றார் மணி.

அகிலாண்டம் இவர்களின் பேச்சினை கவனித்தவராக, மகளின் திட்டம் என்னவென அவளிடமே கேட்டிடலாமென்று தெய்வானையின் அறைக்குள் சென்றார்.

"ரெண்டு நாளுக்கு முன்ன தமிழை மாப்பிள்ளையாக்கியே தீருவேன்னு சொன்ன தெய்வானையா இது?" என்ற தேவராஜ், "நல்லது நடந்தால் சரி" என அப்பேச்சிற்கு புள்ளி வைத்தார்.

"நீயென்ன உறைஞ்சு நிக்குற?"

"அத்தான் என் தலையில் கொட்டுங்களேன்!"

"ஏன்?"

"இது கனவில்லையே?"

"சேம் டவுட்" என்ற தமிழ் வர்ஷினியின் தலையில் கொட்டியிருந்தான்.

"ஆஆஆ... எதுக்கு அத்தான் வேகமா கொட்டுனீங்க?"

"வலித்தால் தானே கனவா நினைவா தெரியும்!" என்ற தமிழ், "எதுக்கும் கொஞ்சம் கவனமாவே இரு வர்ஷி" என்று சொல்லிச் சென்றான்.

தெய்வானை வழமைப்போல் இரண்டு கத்து கத்தி, மறுப்பு தெரிவித்து, மற்றவர்களின் பேச்சுக்கு எதிர்வாதம் வைத்து, இறுதியில் சரியென்று ஒப்புக்கொண்டிருந்தால் கூட இந்த கலக்கம் அனைவருக்கும் தோன்றியிருக்காது. இப்படி எடுத்ததும் அவர் சம்மதம் சொல்லியதைத்தான் நம்புவதா வேண்டாமா என்று குழம்பினர்.

"உன்னோட திட்டம் என்ன தெய்வா?"

அறைக்குள் வந்த அகிலாண்டம் மகளிடம் வெளிப்படையாகவேக் கேட்டிருந்தார்.

"இப்போதைக்கு ஒன்னுமில்லைம்மா" என்று தன்மையாகவே பதில் கொடுத்த தெய்வானை, அகிலாண்டத்தின் நம்பாத பார்வையில்...

"எப்படியும் தமிழ் வர்ஷியை கட்டிக்கப்போவதில்லை. அப்புறம் எதுக்கு அவளுக்கு வர நல்ல சம்மந்தத்தை வேண்டான்னு சொல்லணும்? வர்ஷி என் பொண்ணும்மா. அவளுக்கு நல்லது நடக்கட்டுன்னு தான் பார்ப்பேன்" என்றார்.

தெய்வானையின் கண்களில் நிச்சயம் பொய்யில்லை. தாயாக மகளின் வாழ்வு நல்லாயிருக்கு வேண்டுமென்றுதானே அவரும் நினைப்பார் என நினைத்த அகிலாண்டத்திற்கு அப்போதும் தெய்வானையின் திடீர் மாற்றத்தை நம்ப முடியவில்லை.

"இப்போதைக்கு எந்த ஏற்பாடும் வேண்டாம்மா. பூர்வி கல்யாணம், தமிழ் நிச்சயம்ன்னு அண்ணாக்கு ஏகப்பட்ட வேலை. இதில் வர்ஷி நிச்சயம் பற்றி பேச வேண்டாம். பூர்வி கல்யாணம் முடியட்டும். அப்புறம் நாள் பார்த்து பொறுமையா எடுத்து செய்வோம். மகேஷ் வீட்டில் அண்ணனை சொல்ல சொல்லிடுங்க. இப்போதைக்கு பேசி மட்டும் வச்சிப்போம்" என்ற மகளை அகிலாண்டம் ஆழ்ந்து பார்த்தார். சில நொடிகள்.

"உண்மையாவே நீ மாறியிருந்தால் சந்தோஷம் தான்" என்று அகிலாண்டம் எழுந்து செல்ல... அதுவரை சாந்தமாக இருந்த தெய்வானையின் முகம் விகாரமாக மாறியது.

'நீங்க நினைப்பதையெல்லாம் நடக்கவிட்டால் இந்த தெய்வானைக்கு என்ன மதிப்பிருக்கிறது? இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு பார்க்கிறேன். பூர்வி கல்யாணத்தில், தமிழை வர்ஷினி கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன்' என்று மனதோடு சூளுரைத்தார் தெய்வானை.


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 2 weeks ago

    Waiting marriage sambavam sis 👍👍👍👍👍

  • P PMKK024 @Writer
  • 2 weeks ago

    Thank you sis


    Related Post