இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 16-06-2024

Total Views: 7430

அத்தியாயம் 22

தன் முன்னே இருந்தவன் இந்திரன் என்பதை அறிந்தவன் "நீங்க இந்திரன் தானே கோவில்ல பார்த்தேன். என்னை சுத்தி என்ன நடக்குது எனக்கொன்னும் புரியல. நான் செத்துட்டேனா?" என்று கேட்டான்

"இல்லை மானிடா. நீ இன்னும் மரணிக்கவில்லை. நீயேன் மரணத்தினை துணைக்கழைக்க வேண்டும். நீயொன்றும் தவறிழைக்கவில்லையே. தவறு செய்தது உன் மாமன் மகள். அவளுக்குத்தான் தண்டனை தர வேண்டும்" இந்திரன் பேசியதும் உடனே மறுத்தவன் "நீங்க என்ன நினைச்சு என்னை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்கன்னு எனக்குப் புரியுது. அது ஒருகாலும் நடக்காது. எனக்கு அவ மேல கோபம், வருத்தம், ஆதங்கம்னு எல்லாம் இருக்கு அதுக்காக நான் நேசிக்குற அவளை எந்த நிலையிலும் நான் காயப் படுத்த மாட்டேன்" என்றான்.

"இதெல்லாம் அந்த பெண்ணிற்குப் புரியவில்லையே மானிடா"

"அவள் மனசுக்குள்ள வேறொருத்தன் இருக்கும் போது அவ என்னைப் புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லையே"

"அப்படியெனில் அஞ்சனா உனக்கு வேண்டாமா?"

"அவளுக்குத் திருமணம் ஆகிடுச்சு. இதுக்கு மேலயும் அவளை நினைக்குறது மகா பாவம். நான் அந்த பாவம் பண்ண விரும்பல"

"நீ இந்த இந்திரனிடம் பேசுகிறாய் என்பதை மறந்து பேசிக் கொண்டிருக்கின்றாய் மானிடா. இயமனைப் பற்றி நீ அறிய மாட்டாய். அவன் இப்படித்தான் சாதாரண மானுடப் பெண்களின் மீது மையல் கொண்டு அவர்களின் கற்பினை கவர்ந்து பின் அவர்களை அப்படியே விட்டுவிட்டு எமலோகத்திற்கு வந்துவிடுவான். நன்றாக யோசனை செய். உன் மாமன் மகளை நீ அப்படியொரு நிலையில் வைத்துப் பார்க்கத்தான் ப்ரியப்படுகிறாயா?"

"என்ன சொல்லுறீங்க. எமன் அப்படிப்பட்டவரா?"

"பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை"

"நீங்க சொல்லுறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. எதுவா இருந்தாலும் அவளோட விருப்பம் எதுவோ அது படியே நடக்கட்டும். நான் அவளை தொல்லை பண்ண மாட்டேன்"

இந்திரன் பொறுமை பறக்க, அதற்குள் அவசரமாக வந்த அக்கினி அவனை அணுகி இந்திரன் பற்றியும் தாங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டம் பற்றியும் எடுத்துச் சொல்லினான். 

இணக்கமான அவனின் பேச்சில், இமைக்காத அவனின் பார்வையில் திருவின் மூளை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கத் தொடங்கியது. அவனும் அவர்களுடைய சதிவேலையில் பங்கெடுத்துக் கொண்டான். 

----------------------

அந்த வனத்தில் அந்தகன் அஞ்சனா இருவரது வாழ்க்கையும் மிகுந்த காதலோடு நகரத் தொடங்கியது. என்னதான் காதலாகி அவன் கசிந்துருகினாலும் அவனது கடமையையும் சரிவர நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தான். அவன் அதற்காக எமலோகம் செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவனது எமகிங்கரர்களே அவனைத் தேடி வந்துவிடுவார்கள். அவனும் பணியினை தவறாது முடித்துவிட்டு வருவான். 

அன்றும் அப்படித்தான் அவன் வெளியே கிளம்ப எத்தனிக்கும் போது சட்டென சோர்வு ஆட்கொள்ள வாசலிலேயே தேங்கி நின்றான்.

"அந்தகா! என்ன ஆச்சு அஞ்சனா" பதறிப் போய் கிட்டே வர, "எதுவும் இல்லை அஞ்சனா" என்றான் இவன். அவனுக்குள்ளுமே குழப்பம்.

"எதுவும் இல்லைன்னா முகம் எதுக்கு இவ்வளவு வாடிப் போயிருக்கு. நீ முதல்ல உள்ள வா"

"இல்லை.. நான்.."

"பேசாத உள்ள வா" அவளே இழுத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத்தாள்.

அவனது நெற்றியினை வருடியவள் "கொஞ்ச நேரம் அமைதியாய் படுத்துரு" என்று சொல்ல அவளுக்குக் கட்டுப்பட்டு அவன் படுத்தே இருந்தான். 

அவன் ஓய்வெடுக்கட்டும் என்று நினைத்து அஞ்சனா எழப் போக அவளையும் இழுத்துக் கொண்டு இறுக்கிய படி படுத்தான் அவன். 

"அந்தகா" குழைந்த குரலில் அவள் அழைக்க "அந்தகனுக்கு அஞ்சனா வேண்டும்" வேட்கையுடன் ஒலித்தது அவன் குரல்.

அவனோடு ஒண்டிக் கொண்டவளை அணைத்து அவன் பாணியில் அவளிடம் அவன் வேண்டுவன அனைத்தையும் பெற்றுக் கொண்டான். சற்று முன்னர் அவனை ஆட்கொண்ட சோர்வெல்லாம் அவளின் அருகில் காணாமல் போய்விட தெம்பு வரப்பெற்றவனாய் மாறிப்போனான் அவன். 

அவனது முகத்தில் மீண்ட பொலிவினை கண்டவள் நெற்றியில் இடித்து முத்தமிட்டாள். 

"இப்போத்தான் உன்னை பார்க்க நல்லா இருக்கு"

"அஞ்சனாவின் அணுகுமுறையில் அந்தகனின் முகத்தில் பொலிவு மீண்டுவிட்டது போல" அவன் சீண்ட, "எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்" வெட்கத்தோடு சொன்னாள் அவள்.

"நாம் விரைவில் நமது லோகத்திற்கு செல்ல வேண்டும் அஞ்சனா"

"சரி அந்தகா. எப்போ வேணும்னாலும் நாம போலாம். எனக்கும் நம்ம உலகம் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு"

"அப்போ இப்பவே போயிட்டு வரலாம் வா"

"இப்பவே வா.. "

"ஆம்"

"இப்படியே வா.." அவள் கேட்டதும் அவன் அவளைப் பார்த்து மையலாய் இதழ் விரிக்க அதன் பின் அந்த இதழ்கள் அவளது இதழ்களோடு சென்று சேர்ந்ததில் எமலோகம் செல்லலாம் என்ற விஷயமே இருவருக்கும் மறந்து போனது. 

'அஞ்சனா! உன் அருகில் நான் அனைத்தையும் மறந்து ஆவி கரைந்து நிற்கிறேன்‌. எதென்னை விட்டுச் சென்றாலும் நீயென்னை விட்டுப் போகாக் கூடாது அஞ்சனா‌. உன்னை மறந்து நான் ஒரு நொடி கூட உயிர் வாழ மாட்டேன். மரணத்தின் தேவன் என்றும் மடியேந்தி உன்னிடம் வினவுவது அதொன்றே. நீ எனக்கு வேண்டும். என்னவளாய் எப்போதும் என்னருகிலே இருக்க வேண்டும். நான் செய்த பாவத்திற்கு ஈசன் என்ன தண்டனை தரப் போகிறாரோ தெரியவில்லை. அதை நினைக்கையில் இப்போது எனக்குள் பயம் வந்துவிட்டது. சர்வேசா! இவளை மட்டும் என்னிடம் இருந்து பிரித்து விடாதீர்கள். பிரித்து விடாதீர்கள்' அவளது மேனியில் புதைத்திருந்தாலும் அவனது புத்தியில் இவ்வளவும் ஓடிக் கொண்டிருந்தது. 

அதில் அவன் தேகம் இறுக்கம் கண்டுவிட, அதை உணர்ந்த அஞ்சனா அவனிடம் இருந்து பிரிந்து எழுந்து அவன் முகம் பார்த்தாள். தவறு செய்த மழலையாய் அவனும் அவள் முகம் பார்த்தான்.

"என்ன எமா? எதுக்கு உனக்கு இவ்வளவு சங்கடம்"

"ஏதோ தவறு நேர்வதைப் போல எனக்குப் படுகிறது அஞ்சனா"

"எமனுக்கு எதுக்கு இந்த கலக்கம் கூட நான் கூட இருக்கும் போது"

"தெரியவில்லை"

"நீ ஏதாவது தப்பு பண்ணயா?"

"ஆங்" இயமன் அந்த கேள்வியில் விழிக்க "என்ன முழிக்குற தப்பு பண்ணயா?" என்று கேட்டாள் அவனின் மனைவி.

ஆம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் இயமன் மாறி மாறி தலையாட்ட.. 

"ஏதாவது ஒரு பக்கம் தலையை ஆட்டாமல் இதென்ன வித்தியாசமா ஆட்டுற? தப்புப் பண்ணியிருப்ப போலயே" குறுகுறுவென பார்த்து அவள் வினவ,

"அடியேய் இப்படிப் பார்க்காதே" என இயமன் அவளது பாதத்தின் பெருவிரலைப் பிடித்து அவனை நோக்கி இழுத்தான்.

"ப்ச்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.."

"தவறு செய்தேனா... நானா.. இல்லை அஞ்சனா நானெந்த தவறும் செய்யவில்லை. கடமையைத்தான் செய்தேன்" சொல்லிவிட்டு அவளது மூக்கினைப் பிடித்து ஆட்டி அங்கே முத்தமும் வைத்தான்.

"கடமையைச் செஞ்ச யாரும் பயப்படத் தேவையில்லை. அதையும் மீறி நீ சங்கடப் படுறேன்னா அதுல ஏதோவொன்னு இருக்கு"

"அஞ்சனா! எமலோகத்திற்கென்று சில விதிமுறைகள் உள்ளது. அதற்கு இயமனான நானும் கட்டுப்படத்தான் வேண்டும். அந்த விதியினை ஒரு முறை மீறிவிட்டேன்"

"விதிமீறலுக்கு என்ன தண்டனை எமா"

"ஈசன் கண்விழித்து நான் விதி மீறியதை அறிந்து என்ன தண்டனை வேண்டுமென்றாலும் தரலாம்"

"ஈசன் கருணாமூர்த்தின்னு எங்க ஐயா சொல்லுவாரு அந்தகா. நீ அவனை நினைச்சு எதுக்குப் பயப்படுற. அப்படி எதாவது தண்டனை குடுத்தா நான் சிவன் கிட்ட சண்டை போட்டு உன்னைக் காப்பாத்துறேன். நீ கவலைப்படாதே"

"அஞ்சனா உன்னால் இயல்பாக இதை ஏற்றுக் கொள்ளுவதைப் போல் என்னால் இதை பார்க்க இயலாது. காரணம் நான் மரணதேவன் என்னும் பதவியில் இருப்பவன். அந்த பதவிக்கு உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் நான் நடக்க வேண்டும்"

"நான் சொன்னது சொன்னதுதான். ஈசன் மட்டும் உனக்கு தண்டனை தந்தால் நான் அவனை சும்மா விடவே மாட்டேன் அந்தகா.. சும்மா சொல்லுறேன்னு நினைக்காத. நான் சொன்னதை செய்வேன்" என்றவளின் சிறுபிள்ளைத்தனமான பேச்சினை கேட்டு இயமன் லேசாய் சிரித்து வைக்க.. அங்கே இன்னொருவனும் சிரித்துக் கொண்டான். அவன் சிவன்.

சில நாட்கள் இப்படியே செல்ல..
 அன்றைய தினத்தின் முடிவில் "அஞ்சனா நாம் நம் லோகத்திற்கு செல்ல வேண்டும். நீ தயாராக இருக்கின்றாயா?" என்ற கேள்வியில் அவள் தலை தானாக ஆடியது.

"தலை மட்டும் ஆடுகின்றது. முகத்தில் எந்தவித பொலிவும் இல்லையே. இன்னும் அங்கு வர உனக்கு விருப்பம் இல்லையா? நம்மால் இங்கு வெகு காலம் இருக்க இயலாது அஞ்சனா. இந்த இயமனின் நிலையை நீ புரிந்துக் கொள்ள வேண்டும். ஈசன் தவத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் காலமிது. நான் என் இடத்தில் இல்லாது போனால் அதன் பின்.. ப்ச் கிளம்பலாமா?" என்று சொல்ல அவள் "சரி அந்தகா" என்றாள்.

அவனுக்கு அவளுடனான இந்த வாழ்க்கை அவ்வளவு பிடித்திருக்கின்றது. அவனுக்குமே எமலோகம் செல்வதில் பெரிதாக நாட்டம் இல்லை எனினும் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்ன நேரும் என்பதை அவன் அறிந்துக் கொண்டான். இந்திரனிடம் இருந்து தாக்குதல் வருமென்று அவன் எதிர்பார்த்திருந்தான் தான். ஆனால் இந்த மாதிரியான தாக்குதலை இயமன் எதிர்பார்க்கவில்லை. 

---------------------

அங்கு ஒட்டுமொத்த இந்திரலோகமும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் இருந்தது. அந்த சத்தம் நாரதனை எட்டியதில் அவனும் வந்து அங்கே எட்டியும் பார்த்தான். இந்திரன் வெற்றி மயக்கத்தில் ரம்பையின் நடனத்தில் களித்திருந்தான். 

நாரதர் வந்த பிற்பாடு இந்திரன் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க, "என்ன இந்திரா இந்த இந்திர சபைக்கு நிகராக உன் வதனம் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. என்ன விசயம்?" என்றான்.

"தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை நாரதரே. அந்த இயமன் விஷயம் தான்"

"இயமனுக்கு என்ன?" தெரிந்தும் தெரியாதது போல் வினவி வைத்தான் நாரதன். 

"இயமனுக்கும் அந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்துவிட்டது"

"என்ன? இயமனுக்குத் திருமணம் நடந்துவிட்டதா!"

"அட தேவரிஷிக்கு இதைப் பற்றி தெரியாதா என்ன? இவ்வளவு அதிர்ச்சியாக வினவி வைக்கிறீர்கள்"

"இயமன் சித்திரகுப்தனுக்கு அளித்த தண்டனையை கண்டதில் இருந்து நான் அவனிடம் எந்தவித வம்பும் வைத்துக் கொள்வதில்லை இந்திரா. ஆனால் இந்திரா நீயேன் இயமன் விஷயத்தில் இவ்வளவு கவனம் செலுத்துகிறாய். செய்து முடிக்க வேண்டிய பணி ஏராளம் இருக்கையில்"

"அவனிடம் நான் தோற்றுப் போனதை நேர் செய்ய வேண்டும் நாரதா. அதுவுமின்றி அவனுக்கு ஆணவம் அதிகம். அதை அழிக்க வேண்டும்"

"என்ன செய்து வைத்தாய் இந்திரா. ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் நீயும் சிவனின் சினத்திற்கு ஆளாவாய்"

"சிவன் சினத்துக்கு ஆளானாலும் பரவாயில்லை. நான் அந்த இயமனை  தோற்கடிக்க வேண்டும்"

"இது தேவையில்லாத வேலை இந்திரா"

"அவமானத்தின் வலி பற்றி நாரதர் அறிய மாட்டீர்கள். நான் அந்த வலியினால் துடித்தது பற்றியும் தங்களுக்குத் தெரியாது. அதுவும் அந்த பெண் அஞ்சனா என்னவெல்லாம் பேசினாள் என்று தாங்கள் அறிவீர்களா?"

"நீ விரும்பும் பெண்ணின் மீது வேறு எவர் பார்வையும் படுவதை நீ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பாயா? பின் இயமன் மட்டும் எப்படி தான் நேசிக்கும் பெண்ணினை விலக்கி வைப்பான். அதுவும் உன்னிடம் விட்டுக் கொடுத்துவிடுவான் என்று எதிர்பார்க்கலாம். அவன் அவளிற்காக அனைத்தையும் உதறித் தள்ளுவான்‌. அவளுக்காக விதியையே மாற்றி எழுதியிருக்கின்றான். அவனோடு மோதுவது உனக்கு அபாயத்தினையே தரும். வேண்டாம் இந்திரா"

"அதற்கு அவனுக்கு பலம் வேண்டுமே. அது இப்போது அவனிடத்தில் இருந்தால் தானே"

"புரியவில்லை இந்திரா நீ சொல்ல வருவது"

"அவனது பலத்தினை அவன் இழந்து வருகிறான் கொஞ்சம் கொஞ்சமாக"

"அது இயலாத காரியம்"

"இந்திரனுக்கு அது ஆகக் கூடிய காரியம்தான் தேவரிஷி"

"என்ன செய்தாய் இந்திரா?"

"அ வி ர் பா க ம்.... அவிர் பாகம்..." ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்து மொத்தமாய் அவன் சேர்த்து முடிக்க நாரதன் அதிர்ந்தே போனான். 

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post