இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 18-06-2024

Total Views: 6647

மறுநாள் காலை  ஊருக்கு கிளம்பி வந்தாள் . கடற்கரையில், ஷாப்பிங் மாலில், இதோ இப்போது விமான நிலையத்தில் என்று பலப் புகைப் படம் எடுத்தாள் . தனக்காக அல்ல. அவனுக்கு அனுப்ப. அனுப்பினாள் . பார்த்து விட்டான். ப்ளூ டிக் வந்தது. அவனே அழைக்கட்டும் என  காத்திருந்தாள் ஆர்வத்துடன். அவள் அழைக்கிறாளா பார்ப்போம் என்று அவனும் காத்திருந்தான் ஆங்காரத்துடன். 

ஊருக்கு திரும்பி வந்தததும் மாலையில் அவன் கடைக்குச் சென்றாள் . அவனுக்கு என்ன நிறம் பிடிக்கும்? அந்த வர்ண ஆடையை போட்டுக் கொள்ளலாம்.

"ச!@ இதுவரைக்கும் அது கூட கேட்டு தெரிஞ்சுக்கலையே  மக்கு, தன்னைத் தானே திட்டிக் கொண்டே அன்று கோவிலுக்கு போட்டுச் சென்ற ஆடையைப் போட்டுக் கொண்டாள் . அவனுக்கு அந்த உடை  பிடித்திருந்தது போலும். கண்கள் மின்ன ஆர்வமாகப் பார்த்தாரே ? அக்கறையுடன் அலங்காரம்  செய்து கொள்ளும் மகளை அவ்வபோது வந்து பார்த்துக் கொண்டிருந்தார் அன்னை . ஏனெனில் அவள்  வயதுக்கு ஏற்றபடி அலங்காரம் செய்து கொள்ளும் ரகம் இல்லை. காதில் சின்ன வைரத்தோடு. கையில் ஒரு பிளாட்டினம்  பிரேஸ்  லெட் . கழுத்தில் தெரியும்படிக்கு ஒரு ஷார்ட் செயின். அதில் தெரியாத படிக்கு ஒரு தங்க டாலர்.  இதற்கு மேல் நெற்றியில் சிறிய கோபுர வடிவ பொட்டு . லேசாக  லிப்ஸ்டிக். வேறு எதுவும் இருந்ததில்லை. கண்ணுக்கு மை  இட்டு, நெற்றி உச்சியில் குங்குமம் வைத்து மகள் படு ஜோராக இருந்தாள் . 

"மாம்! போயிட்டு வரேன்"

"பாய்  டா  செல்லம். ஆல் தி பெஸ்ட்"

"மாம் நான் போகறது  என்னோட ஹஸ்பண்ட் பாக்க. நோட் போர்  எனி இன்டெர்வியூ "

"அப்படியா. அப்ப  பெஸ்ட் ஆப் லக்"

"ஓகே மாம் நீங்க  அடங்க மாட்டீங்க . எனி வே தேங்க்ஸ்"

உதடு பழிப்பு காட்டிவிட்டு கார் கீயுடன் புறப்பட்டாள். மனம்முழுதும் அவனே தான் நிறைந்திருந்தான் . 

"பார்த்த ஒடனே என்ன சொல்லுவாரு? ரொம்ப மிஸ் பண்ணி இருப்பாரோ? சட்டுனு கட்டி புடிச்சுட்டாருன்னா என்ன பண்ணறது?"

கேட்ட மனமே, "என்ஜாய் பண்ணு "அறிவுரை சொல்லியது. அவனை காணப் போகும் சந்தோஷத்தில் அவன் எதிர்மறையாக திட்டி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கவில்லை. செந்தில் தான் எதையும் செய்வானே . இவள் யோசித்திருக்க வேண்டும். 

முகம் சிடு சிடுவென்றிருந்தது. ஊருக்குச் சென்ற நாளில் இருந்து அவள் தனக்கு அழைக்கவில்லை. அவ்வளவுதான் தன்  நிலைமை. அன்று அவள் வண்டி விபத்துக்குள்ளானது. என்னுடைய அவளுக்குத் தேவை இருந்தது. தன்னை உபயோகப் படுத்திக் கொண்டாள் . அதற்கு தான் கேட்டதால் சோறு வாங்கி கொடுத்தாள் . இப்போது? அதன் தேவை இல்லையே? மனம் என்னும் சாத்தான் ஏதேதோ சொல்லிக் கொடுத்தது. கடையில்  வேலை பார்த்த விடலைப் பையனுக்கு என்று அவள் ஆசையாக கொடுத்த முத்தம் அந்த நேரம் மறந்து விட்டது. அதையே அவளை பார்த்ததும் முகம் காட்டியது. 

 'என்னவாக இருக்கும்?வந்த நேரம் சரி இல்லையோ?' யோசித்தாள் . இவளைப்  பார்த்த பின்பும் முகம் மலரவில்லை. ஆனால் அவனுக்கும் சேர்ந்து இவளுக்கு அகம் மகிழ்ந்தது அவனைப் பார்த்ததும் அதுவே முகத்திலும் தெரிந்தது .

பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு புது ஆடைகளை எடுத்துக் கொண்டாள் .

அன்று பார்த்த பெண் இவளிடம் சினேகமாக புன்னகைத்தாள் . 

"வாங்க மேடம்! என்ன வேன்டும்? " இவள்தான் முதலாளி என்பது அங்கே யாருக்கும் தெரியாது. 

"இல்ல! உங்க சாரத் தான் பாக்க வந்தேன்"

"ஓகே மேடம். வெயிட் பண்ணுங்க அவரு வந்ததும் நீங்கப்  போங்க" சொல்லி விட்டு ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலை வைத்து விட்டுப் போனாள் .

அவள் உள்ளே நுழையும்போதே யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். அவன் அறைக்கு வெளியே இவள் காத்திருந்தாள். பார்த்தான். உள்ளே அழைக்கவில்லை. இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பொறுமையாக போன் பார்த்துக் கொண்டு வெளியில் காத்திருந்தாள்  . சில நிமிடங்கள் கழித்து  அவர் சென்றதும் இவள் தானே உள்ளே நுழைந்துக் கொண்டாள் .

"ஹாய்  செந்தில்"

"வணக்கம்! சொல்லுங்க. என்ன விஷயம்?  என்ன சாப்படறீங்க?அமரும்படி எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினான் " ஏதோ பார்மலாகப் பேசியது போல இருந்தது.

"செந்தில்! ஏன் ஒரு மாதிரி பேசறீங்க?"

"இல்லையே! நான் நார்மலாத்தான் பேசறேன்"

"இல்ல. நீங்க  ரொம்ப பார்மலா பேசறீங்க"

"உங்ககிட்ட வேற என்ன மாதிரி பேசணும்? எனக்கு உங்ககிட்ட பர்சனலா பேச எதுவும் இல்லையே ?"

"எதுவும் இல்லையா? எங்கிட்ட பர்சனலா பேச முடியாதுன்னா வேற யாருகிட்ட பேச முடியும்?"

"ப்ளீஸ் எனக்கு நிறைய வேலை இருக்கு. வந்த விஷயத்தை பத்தி மட்டும் பேசறீங்களா?"

"வந்த விஷயமா? பேசறேன். நீங்க என்ன கட்டிபுடிச்சுக்கணும் முத்தம் கொடுக்கனுன்னு வந்தேன். உங்களுக்கு வேணா எங்கிட்ட பர்சனல் பேச எதுவும் இல்லாம இருக்கலாம். பட்  எனக்கு இருக்கு.இன்னும் நிறையா இருக்கு"

"பெர்சனலா பேசணுமா? எப்படி, கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்து கட்டில்ல உருளணும். அதானே. ஆம்பிளைங்க எங்களுக்குத்தான் செக்ஸ் தவிர வேற எதுவும் தெரியாதே? இப்ப என்ன ?"

கோபத்தில் அவன் முகம் சிவக்க, அவமானத்தில் இவள் முகம் சிவந்தது. இதே வார்த்தைகள் அன்று அவள் சொன்னதுதான். இன்று கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. ஆனால்  அன்று அவள் சொன்னது இவனுக்காக அல்லவே? அது எப்படி அவனுக்குத் தெரியும்? அவன்தான் எதையுமே தெரிந்து கொள்ளும் எண்ணத்திலேயே இல்லையே ? 

"சரி ! விடுங்க. நீங்க ஏதோ கோபத்துல இருக்கீங்க போல.இப்ப  எதுவும் பேச வேணாம். ஊருலேர்ந்து உங்களுக்கும் உங்க தங்கச்சிங்களுக்கும் கொஞ்சம் ட்ரெஸ் வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க"

"இல்ல நிரஞ்சனா. நான் இன்னிக்கே இதை  பேசணும். இனிமே நாம இந்த மாதிரி அடிக்கடி சந்திக்கறது நல்லதில்லை" அந்த பையை தொடக்  கூட இல்லை. 

"ஏன்?" அவளுக்கு புருவம் நெருங்கி இருந்தன.

"நமக்குள்ள என்ன உறவு?"

"அது!"

"பிரண்ட்ஸா? கணவன் மனைவியா?"

அவளிடம் மௌனம். "காதலிக்கறேன்" சொல்ல வெட்கமாக இருந்தது. அதை அவன் வேறு விதமாக எடுத்துக் கொண்டான்.

"பார்த்தீங்களா? உங்களுக்கும் தெரியல. அன்னிக்கு நாம சந்திச்சதுக்கப்புறம் நான் நிறைய யோசிச்சேன். எனக்கும் விடை தெரியல. நமக்குள்ள என்ன உறவு?"

"ஏன் வேற எந்த உறவும் இருக்கக் கூடாதா? லவ்வர்ஸ்?"

"லவ்வா ! ஓகே! காதலிக்கலாம்.  காதலுக்கு அப்புறம்? கல்யாணம். கல்யாணதுக்கு அப்புறம் குழந்தைங்க?"

'ஏதோ தவறாகச் சொல்லப் போகிறான்' மனம் உஷார் படுத்தியது.

"இங்க பாருங்க நிரஞ்சனா. எனக்கு சுத்தி வளைச்சு பேசப் பிடிக்காது. அப்படி பேசவும் தெரியாது. அன்னிக்கு நீ கொடுத்த அந்த ஒரே ஒரு முத்தம். என்ன பைத்தியமாகிடுச்சு. இது வரைக்கும் எந்த பெண்ணையும்  கண்ணால கவனிச்சுப் பார்த்தது கூட கிடையாது. நான் பார்த்த ஒரே பொண்ணு நீதான். பார்த்ததும் புடிச்சுது.  கல்யாணம் பண்ணதும் உன்ன தான். காதலிக்கறேனான்னு கேட்டா  பதில் தெரியல. பட் எனக்கு நீ வேணும். காலம் பூரா நீ வேணும். காலைல நீ கொடுக்கற டீ  லேர்ந்து ராத்திரி படுக்க உன்னோட நெஞ்சு வரைக்கும் எல்லாம் வேணும். ஆனா நீன்னா  நீ  மட்டும்தான் வேணும். என்னோட பொண்டாட்டியா மட்டும்"

குரலில் காதல் அன்பு, ஏக்கம் எதுவுமில்லை. ஏதோ ஒரு அதிகாரம் இருந்தது.

"அப்டின்னா?"

"இந்த பிசினஸ் வேணாம். யாருகிட்டையாவது கொடுத்துடு . எனக்கு பொண்டாட்டியா மட்டும் நீ வா. நீ, நான்,எங்க அம்மா, நம்ம குழந்தைங்க...என்னோட வீட்டுல"

"இது என்ன எண்ணம்? நீங்க என்ன சொல்லறீங்க. இது என்னோட பிசினஸ் இல்ல. என்னோட குழந்தை. நான் பெத்த குழந்தை. உங்களுக்கும் எனக்கும் பிறக்கப் போற  குழந்தைக்கு முன்னாடி இதுதான் என்னோட முதல் குழந்தை. இப்பதான் அந்த குழந்தை உக்கார ஆரம்பிச்சிருக்கு. இன்னும் தவழ்ந்து நின்னு,நடந்து, வளர்ந்து  பெரிய ஆளா(க்)கணும்.  உங்களோட இந்த கடைய மூடிட்டு வாங்கன்னு சொன்னா  நீங்க ஒத்துக்குவீங்களா? இல்லை  அப்படி சொல்லறது சரியா இருக்குமா? நீங்க  எத்தனையோ கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கற மாதிரிதான் எனக்கும் என்னோட பிசினஸ்.  அதை என்னிக்கும் யாருக்காகவும் என்னால விட முடியாது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சரி. நான் தான் இந்த தொழிலை நடத்துவேன். ஏற்கனவே எங்கப்பாவோட பிஸ்னஸ்., அத நானும் எங்க அம்மாவும் தொலைச்சுட்டோம். என்னவோ ஈஸியா வேற யாருகிட்டையாவது கொடுத்துடுன்னு சொல்லறீங்க?" கண்களில் கண்ணீர் முட்டியது.

 அவள் உணர்வுகளை புரிந்து கொள்ள அவன் தயாராக இல்லை.

"நீங்க இந்த விஷயத்தை முதல்லயே சொல்லி இருந்தா நான் கண்டிப்பா உங்கள கல்யாணம் பண்ணி இருந்திருக்க மாட்டேன்" முகத்தை திருப்பிக் கொண்டாள் .

அவள் கண்ணீர் அவனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. கை  நீட்டி கண்ணீரை துடைக்கவுமில்லை. அதை  அவள் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், " ப்ளீஸ் அழாதே என்று கூடவா அவனால் சொல்ல முடியாது?"

"இந்த பிசினஸ்னால தானே நம்ம கல்யாணம் நின்னு போச்சு?"

"இல்ல! எனக்கு வேண்டாதவங்க பண்ண வேலை அது"

"சரி! எப்படி இருந்தா என்ன? என்ன பொறுத்தவரைக்கும் என்னிக்குமே இந்த பிசினஸ் உன்னையும் என்னையும் சேரவே விடாது. நம்ம குடும்ப வாழ்க்கைக்கு எதிரி உன்னோட தொழில்"

"என்ன இப்படி பேசறீங்க?"

"அப்டி இல்ல நிரஞ்சனா. அன்னிக்கு நாம ஹோட்டல்ல  சந்திச்சதுக்கப்புறம் எனக்கு  என்னவோ மாதிரி இருந்தது "

அவனின் எண்ணம் அவளுக்குப் புரிந்து விட்டது.

"என்னோட எந்த நடவடிக்கை உங்களை  டாமினேட் பண்ணற மாதிரி இருந்துச்சு? டேபிள் புக் பண்ணதா? சாப்பாடு ஆர்டர் பண்ணினதா? இல்லை  பில் பே  பண்ணதா? எது? இல்ல.. !உங்களோட பர்மிஷன் இல்லாம முத்தம் கொடுத்ததா? இத்தனை நாட்களாக எந்த முத்தம் அவளை ரசிக்க வைத்ததோ இப்போது அதையே இப்போது அவளுக்கு அவமானமாக இருந்தது.

"சோ! இது எல்லாத்துக்கும் என்னோட பிசினஸ் தான் காரணம். நாங்க பொண்ணுங்க அடுத்த லெவல் பத்தி  யோசிக்கவேக் கூடாது. எப்பவுமே உங்களுக்கு கீழே தான்  இருக்கணும். அப்படித்தானா?"

"ஆமாம்! என்னிக்குமே ஒரு பொண்ணு ஆம்பிளைக்கு கீழ தான் இருக்கணும் நிரஞ்சனா"

"எப்படி? காலைல  எழுந்து தலைக்கு குளிச்சுட்டு உங்களுக்கு சுட சுட காபி போட்டுகொண்டு வந்து கொடுத்து நாள் முழுக்க அடுப்படில நின்னு, ஒரு அழுக்கு  நைட்டி போட்டுக்கிட்டு, டீவி சீரியல் பார்த்துகிட்டு, அக்கம் பக்கத்துல வம்பு  பேசிக்கிட்டு, அந்த  மாதிரி ஒரு பொண்ண நீங்க எதிர்பார்த்தீங்கன்னா அது என்னால முடியாது செந்தில்" 

 "நானா? இல்ல உன்னோட பிஸினஸ்ஸா ? நீதான் முடிவெடுக்கணும்" தெளிவாக உரைத்து விட்டான்.

இவள் பதில் சொல்லவில்லை. வெளியேறிவிட்டாள் . 

என்ன நடக்கும்? பார்க்கலாம்..


Leave a comment


Comments


Related Post