இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 18-06-2024

Total Views: 5911

காதலொன்று கண்டேன்!

தேடல்  26

அவனுக்காக..


தன் நிமிர்வான நடையுடன் அலுவலகத்துக்குள் நுழைந்த தீக்ஷிதா மொத்த இடங்களையும் பார்வையிட்டு தன் கேபினுக்கு திரும்புகையில் எதிர்ப்பட்ட பையனின் மீது அவளின் பார்வை ஒரு கணம் அழுத்தமாய் படிந்து மீள மறக்கவில்லை.

பையனோ அவளைக் கண்டாலும் எந்த வித எதிர்வினையுமின்றி தன்னிடத்திற்கு வந்தமர அவனின் செய்கையில் அவளின் கடையிதழ் விரிந்திற்று.

"குட் மார்னிங் யாழினி." என்று சிறு புன்னகையுடன் பெண்ணவளுக்கு காலை விளிப்பை கூறியவனுக்கு மனதளவில் அவளுடன் நெருங்கிப் போன உணர்வு.

"குட் மார்னிங் சார்.." என்றவளோ பதிலாய் அவனுக்கு ஒரு புன்னகையை சிந்த இப்போது அவர்களின் அலுவலக நேரம் இப்படி ஆரம்பமாவது வாடிக்கையாய் இருந்தது.

அதன் பின் அவர்களின் குழுவில் அனைவரும் வந்திட தத்தம் வேலையில் மூழ்கிப் போயினர்,அனைவரும்.

தற்செயலாய் திரும்பிய யாழினிக்கு பையன் கையை உதறிக் கொண்டு எழுந்திடுவது புலப்பட வழிந்தோடிய உதிரத்தைக் கண்டதும் பதறி விட்டாள்,அவள்.

"சார் என்னாச்சு..?" பதறிக் கொண்டு அவள் கேட்க அவளின் பதட்டம் நிறைந்த குரல் கேட்டு ருத்ராவின் தலையும் நிமிர்ந்தது.

"ஒன்னுல்ல நா பாத்துக்கறேன்.." என்ற படி மூலையில் இருந்த நீர்க்குழாயுடனான கழுவும் தொட்டியை நெருங்கிட பதறிக்கொண்டு பையனின் பின்னூடு நகர்ந்திருந்தாள்,யாழினி.

"என்னாச்சு சார்..?" கையைக் கழுவிக் கொண்டிருந்தவனின் முதுகின் பின்னே நின்ற படி குரல் கொடுத்தவளின் பாதங்களோ எம்பி நின்றிருக்க அவனின் காயத்தை எட்டிப் பார்க்க முயன்று தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன,விழிகள்.

"ஒன்னுல்ல யாழினி..சின்னதா ப்ளேட் கீறிடுச்சு.." என்றவன் கூறி முடிக்கும் முன்னமே கீழாய் தன்னைக் கையை செலுத்தி அவனின் கரத்தை இழுக்க பையனவனுத் திரும்பி இருந்தான்.

ஆட்காட்டி விரலில் இருந்து உள்ளங்கை வரை கோடாய் காயமிருக்க இன்னும் அடங்காத குருதி சொன்னது,காயத்தின் ஆழத்தை.

"இவ்ளோ பெரிய காயம்.." கேட்டுக் கொண்டு ஆராயும் முன்னே அவளின் பிடியில் இருந்து கையை உருவிக் கொண்டான்,பையன்.

நிச்சயம் பெண் ஸ்பரிசத்தினால் வந்த தயக்கம் இல்லை.புறங்கையில் வெம்மையின் காரணமாய் வெடித்திருந்த கொப்பளங்கள் அவளுக்கு அறுவறுப்பை தந்திடுமோ என்கின்ற கலக்கம்.

"லூசா சார் நீங்க..? கைய காட்டுங்க.." திட்டியவளின் முகத்திலும் கோப ரேகைகள் தெரிய மீண்டும் பற்றிய கரத்தை இழுக்க முயன்று துவண்டான்,பையனவன்.

"இவ்ளோ பெரிய காயம்..ஒன்னுல்லன்னு கைய கழுவிகிட்டு இருக்கீங்க..அறிவிருக்கா இல்லயா..?" திட்டிய படி இழுத்து வந்து அவனை அமர வைத்து மருந்து போட்டு முதலுதவி செய்ய அங்கிருந்த அனைவரும் அவனைச் சூழத் தான் நின்று கொண்டிருந்தனர்.

"போதும் யாழினி..அது ஆறிடும்.." என்றவனுக்கு வசை பாட முயன்ற நாவை அடக்கி அழுத்தமாய் அவள் பார்த்த பார்வையில் பையனவனுக்கு ஏதோ ஒரு புது வித இதம்,வெடித்துப் பிளந்திருக்கும் நிலத்தில் முதல் தூறல் தருவதைப் போல்.

இதுவரை தந்தையையும் தோழனையும் தவிர யாராயினும் அவனின் கரத்தைப் பற்றி யோசிக்கத் தான் செய்வார்கள்.பெரும்பாலான பொழுதுகளில் புறங்கையில் கொப்புளங்கள் நிறைந்திருக்க சில சமயங்களில் அவை வெடித்து குருதி வழிந்து கொண்டிருக்கும்.அதற்கென களிம்புகளை உபயோகிக்க முன்பை விட குறைந்திருந்தாலும் முற்றாய் இல்லாமல் போனது இல்லை.

இன்றும் அதே போல் இருக்க அவள் எதுவும் பாராது அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டது பையனுக்குள் சில பல விதைகளை தூவி விட்டிருந்தாலும் அது அவனுக்கு புரிந்ததா என்பது கேள்விக்குறி தான்.

விழிகளால் முறைத்துக் கொண்டு அவனுக்குத் திட்டிய படி மருந்திட்டு கட்டுப் போட்டவளின் அக்கறை அவனுக்கு அத்தனை இனிக்க பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவனைக் கண்டால் மற்றையவர்கள் தலை சுற்றிப் போவார்கள்.

பையனின் குணம் அப்படியே.பெரிதாக யாரினது புத்திமதியை காதில் வாங்கிக் கொள்ளாதவனுக்கு யாரேனும் திட்டினால் அத்தனை கோபம் வரும் என்று அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் தானே இந்த உடன் பணிபுரிபவர்கள்.சில இடங்களில் நிதானமாகிப் போனாலும் பையனும் அடங்காத கோபம் வருபவர்களில் ஒருவனே.

"கொஞ்ச நேரத்துக்கு பேசாம இருங்க..கர்ணன் கொஞ்சம் சார பாத்துக்கோங்க.." பையனிடம் அதட்டலாகவும் கர்ணனிடம் பணிவாகவும் மொழிந்து விட்டு நகர்ந்தவள் ஏனோ வித்தியாசமாய்த் தான் தோன்றினாள்,பையனின் விழிகளுக்கு.

வித்தியாசங்களோ விருப்பங்களுக்கான விதை என்பதை அவன் அந்த நொடி உணரவில்லை என்பதே சத்தியமான உண்மை.

காலை இடைவேளையிலும் சரி மதிய உணவுக்கான இடைவேளையிலும் சரி சிற்றுண்டிச் சாலைக்கு வரமாட்டேன் என முரண்டு பிடித்தவனை மிரட்டி அழைத்துச் சென்றவளின் செயலை விட அவளின் சொல்லைத் தட்டாது கேட்டு நடந்த பையனின் செயல் தான் அதிர்வு.

"கார்த்திக் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..அவன யாரு திட்டுனாலும் அவனுக்குப் புடிக்காது..வேலைல பிழ வந்துச்சுனா அவனோட இன்னொரு மொகத்த பாக்க வேண்டி வரும்..எல்லாரோட கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டான்..அந்த தாட்டும் அவனுக்கு இல்ல..ரொம்ப அழுத்தமான கேரக்டர்..ஸோ பீ கேர்ஃபுல்.." அன்றொரு நாள் இதோ அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவன் கூறிய வார்த்தைகள் தான் செவியோரம் எதிரொலித்தன.யாழினி தவிர்த்து மற்றையவர்களுடன் அவன் நடந்து கொள்ளும் முறையும் அதற்கு விதி விலக்கல்ல.

"ஒரு வேள இவருக்கு யாழினி மேல ஏதாச்சும் அட்ராக்ஷனோ..?" யோசித்த படி பின்னே நடந்தான்,அவன்.

                 ●●●●●●●

அலுவலக நேரம் முடிந்திட வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தவனை தீக்ஷிதாவின் பிரத்தியேக காரியதரிசி வந்தழைத்திட இருவிரல் கொண்டு நெற்றியின் ஒரு பக்கமாய் தேய்த்த படி கேபினுக்குள் நுழைந்தவனை கூர்மையாய் அளவெடுத்தது,தீக்ஷிதாவின் பார்வை.

விழிகளை மறைத்திருந்த கறுப்பு நிற குளிர் கண்ணாடி அவளின் பார்வையை அவன் உணர தடையாய் இருக்க எப்போதும் போல் இறுகிய தோற்றத்துடன் அவளுக்கு முன்னே நின்றிருந்தான்,பையன்.இமைகள் அடிக்கடி அணையிட்ட விழிகளில் எப்போதும் போல் எந்த வித உணர்வும் இல்லை.

"மிஸ்டர்.கார்த்திக் ரைட்.."

"யெஸ் மேம்.." என்றவனின் குரலே அவளுக்கு ஒட்டாத் தன்மையை உணர்த்திற்று.

"உங்கள என்னோட பி ஏ வா அப்பான்ட் பண்ண சொல்லி சொல்லிருந்தேன்..பட் நீங்க முடியாதுன்னு சொன்னீங்கன்னு கேள்வி பட்டுச்சு..கென் ஐ க்னோ தி ரீசன் ப்ளீஸ்..?" வழமைக்கு மாற்றமாய் பணிவான குரலில் கேட்க அதற்கு அசரும் ரகம் இல்லை,பையனவன்.

"ஐ அம் நாட் இன்ட்ரஸ்டட் மேம்.." அடுத்த கணமே சுருக்கமாய் பதில் சொல்ல அவனின் ஆளுமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை,அவளால்.

அந்த நிமிர்வும் தைரியமும் பையனின் உருவத்துக்கு மேலாய் அவனுக்கு அழகு சேர்ப்பது போல் தோன்றிற்று,அவளுக்கு.

"ஓகே..மிஸ்டர்.கார்த்திக் இப்டி ஒரு நல்ல ஆப்பர்சுனிடிய மிஸ் பண்ணிட்டீங்கன்னு தான் ரீசன் கேட்டேன்..எனிவே,யுவர் டீடெய்ல்ஸ் ப்ளீஸ்..?" பையனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் துளிர் விட்டிருக்க அதை மறைத்துக் கொண்டு அழுத்தமாய் கேட்டவளுக்கு பதில் சொல்லும் எண்ணமில்லை,பையனுக்கு.

"இப்போ ஆஃபீஸ் டைம் முடிஞ்சிருச்சு மேம்..ஸோ ஐ வோன்ட் டு லீவ்..உங்க கொஷ்டின்ஸ நாளக்கி கேளுங்க.." தீர்க்கமாய் மொழிந்து விட்டு அவன் வெளியேறிட அவனின் முதுகை வெறித்தவளின் இதழ்கள் "இன்ட்ரஸ்டிங்" என உச்சரித்துக் கொண்டன.

தன் பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு வந்த பையனுக்கு ஏனோ அவளின் கேள்விகள் எரிச்சலையும் கோபத்தையும் கிளப்பி விட்டிருக்க அது அவனின் நடையில் வெளிப்பட்டது.

அதே நேரம்,

தன் முன்னே வந்து நின்று கொண்டிருந்த சஞ்சீவுக்கு கல்லை எடுத்து அடிக்கத் தோன்றியது,யாழினிக்கு.

அன்று பேசியதற்கே இன்னும் கோபம் தீரவில்லை.இதில் இன்று கடந்து செல்லும் போதும் "கருவாச்சி" என சீண்டி விட்டுப் போயிருக்க எக்கச்சக்க கோபம் அவன் மீது.

அதிலும் வேண்டுமென்று பேரூந்து நிறுத்தத்தின் எதிர்ப்புறம் வந்து நின்று அவளை நக்கலாய்ப் பார்க்க எகிற முயன்றவளை அடக்கி வைத்திடும் போது ஜீவன் போதுமென்றாகி விட்டது,ருத்ராவுக்கு.

"அவன் தான் வேணும்னே கலாய்க்கிறான்னு தெரிதுல..நீ அமைதியா இரேன்டி..நீ கோபப்பட்றத பாத்து தான் அவன் வேணும்னே அப்டி நடந்துக்குறான்.."

"அது தான் முடியல..அவன் மேல ஏறி மிதிக்கனும்னு தோணுது.." கடுப்புடன் கூறுகையில் கார்த்திக்கின் கார் வர வண்டியில் ஏறிக் கொண்டனர்,இருவரும்.

அவள் வண்டியில் ஏறிக் கொண்டதும் சஞ்சீவின் முகத்தில் அப்பட்டமான மாற்றம்.அவன் விழிகளே அவள் கார்த்திக்குடன் செல்வதை விரும்பவில்லை என்று எடுத்துக் காட்ட கோபத்தில் அவளுக்கு திட்டித் தீர்த்தன,அவனிதழ்கள்.

மறுநாள் காலை,

காலையில் எழுந்து கதவைத் திறந்து வாசலை பெருக்கி விட்டு உள்ளே வந்த கார்த்திக்கின் கரங்களில் தடிப்புடன் கொப்புளங்கள் வந்திருக்க யோசனையுடன் தன் மேனியை ஆராய்ந்தவனுக்கு வீங்கித் தடித்திருந்த கொப்புளங்களையும் ஆங்காங்கே வழிந்த குருதியையும் கண்டு நிலமை புரிந்திட மருத்துவமனைக்கு செல்வது உசிதம் என தோன்றிற்று.

அரிதாய் இவ்வாறு நடக்க அதன் பொழுது கட்டாயம் மருத்துவமனைக்கு வர வேண்டும் என மருத்துவர் கூறியிருக்கவே இந்த முடிவு.

வேகவேகமாய் முகத்தை கழுவிக் கொண்டு உடையை மாற்றிக் கொண்டு தயாராகியவனுக்கு  ஏதோ ஒத்துக் கொள்ளாததால் இவ்வாறு நடந்திருக்கும் என ஊகிக்க முடிந்தது.

ஷர்ட்டை போட்டுக் கொண்டிருக்கும் போதே தேகம் வெப்பமாகி வியர்க்கத் துவங்கிட இவ்வாறு நடந்தால் அடுத்தது தலை சுற்றல் வரும் என தெரிந்தவனோ தந்தையை எழுப்பிட மாத்திரைகளில் விளைவால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவருக்கு அத்தனை எளிதில் விழிப்பு தட்டவில்லை.இலேசாக விழி திறந்து பார்த்தவருக்கும் பையனின் நிலை புரிய வாய்ப்பில்லையே.மாத்திரைகளின் வீரியம் அப்படி.

வியர்வை அதிகமாகிட தலை கிறுகிறுத்துக் கொண்டு வர சோபாவில் அமர்ந்தவனின் அலைபேசியில் இருந்து அஜய்க்கு அழைப்பு போய்க் கொண்டிருந்தாலும் மறுமுனையில் ஏற்கப்படவில்லை.

கண்கள் இருட்டிக் கொண்டு வர ஆழமாய் சுவாசித்த படி கீழே சரிந்தவனின் முகம் சோபா முனையில் இடித்துக் கொள்ள கொப்புளங்கள் உடைந்து குருதி வழிந்திற்று.

அரை விழி சொருகலுடன் யாழினிக்கு அழைப்பெடுக்க அவள் ஏற்றாலும் ஏதும் சொல்லும் முன்னே மயக்கமாகியிருந்தான்,பையன்.

பையனின் அழைப்பை ஏற்றவளுக்கு மனம் நெருட நேரத்தைப் பாரத்தவளுக்கு இந்த அதிகாலையில் அவன் அழைப்பெடுத்திருந்தது ஒரு வித பதட்டத்தை உண்டாக்கியிருந்தது.

அறக்க பறக்க தயாராகியவளோ கார்த்திக்கின் வீட்டுக்கு செல்வதாய் தாயிடம் கூறிக் கொண்டு ருத்ராவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி அடுத்து பத்து நிமிடங்களில் அவனின் வீட்டை அடைந்திருந்தாள்.

நேரத்துக்கு முச்சக்கர வண்டி கிடைத்திருக்க இல்லையென்றால் நடந்து வர எத்தனை நிமிடங்கள் பிடித்திருக்குமோ..?

வந்தவளுக்கு மூடியிருந்த கதவைக் கண்டதும் இன்னும் பயம் வர அழைப்பு மணியை அழுத்தினாலும் வந்து கதவைத் திறக்க யாரும் இல்லையே.

விடாது மீண்டும் மீண்டும் மணியை அழுத்திட திறக்காது இருக்கவே கதவை திறந்தவளுக்கு கூடத்தில் மயங்கி விழுந்திருந்த பையனைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது.

"சார்ர்ர்ர்ர்ர்.." எனக் கத்திக் கொண்டே உள் நுழைந்தவளுக்கு ஒன்றும் புரியாதிருக்க விழிகள் கலங்கிப் போயின.

கார்த்திக்கின் அருகே குனிந்து அவனை எழுப்ப முயல பையனிடம் இருந்து எதிர்வினை ஏதும் இல்லாதிருக்க சீரான சுவாசத்துடன் மேனி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

"ருத்ரா அஜய் சாருக்கு ஃபோன் பண்ணு.." என்றவளோ பையனின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க விழி சுருக்கினானே தவிர விழி திறந்திடவில்லை.
அவனின் நிலை கண்டு அவளின் பயம் இன்னும் கூடிற்று.

ஒருவாறு பையனை நிமிர்த்தி அமர வைத்திடவும் ருத்ரா வந்திடவும் சரியாய் இருக்க அவளின் முகத்தில் கலவரம்.

"அஜய் சார் வந்துட்டு இருக்காராம்..எப்டியும் இருபது நிமிஷம் ஆகுமாம்..அதுக்குள்ள சார ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக சொல்லி சொல்றாரு.." அவன் கூறியதை ஒப்புவித்தவளுக்கு பையனின் குருதி தேங்கியிருந்த காயங்களைக் காண்கையில் பயமாய் இருந்தது,அவனின் நிலையை எண்ணி.

"யாழினி சார எப்டி கூட்டிட்டு போறது..ஆட்டோவ வேற அனுப்பிட்டோம்.." என்க ஒரு நிமிடம் முற்றும் உறைந்து போன நிலை பெண்ணவளுக்கு.

"நீ ரோட்டுக்கு போய் ஆட்டோவ கூட்டிட்டு வா..நா பாத்துக்குறேன்.." என்றிட மறுப்பாய் தலையசைத்தவளை அனுப்பி வைத்தவளுக்கு பையனை சுமப்பது ஒன்றும் அத்தனை கடினமான விடயம் இல்லை.

எப்படியே அவனை எழுந்து நிற்க வைத்து தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவனின் மொத்த பாரத்தையும் தாங்கிக் கொண்டு நடந்தவளுக்கு எங்கிருந்து பலம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

அவள் பையனை வாசலுக்கு அழைத்து வரவும் முச்சக்கர வண்டி வந்து சேரவும் சரியாய் இருந்தது.

சில மணி நேரங்கள் கழித்து,
கண்விழித்து பார்த்தது பையனின் விழிகள் முதலில் விழுந்தது என்னவோ அழுது வீங்கிய முகத்துடன் இருந்த தந்தை தான்.

யோசனை செய்தவனுக்கு அதன் பின்னே நடந்தது ஒவ்வொன்றும் நினைவில் வர ஆதுரமாய் பார்த்தான்,தாயுமானவரை.

மகனின் கரத்தை வருடி விட்டுக் கொண்டிருந்தவருக்கு இன்னுமே அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாதிருக்க கசப்பாய் புன்னகைத்திட அவர்கள் இருவரையும் நெகிழ்வான மனநிலையுடன் உரசிக் கொண்டிருந்தன,பெண்ணவளின் விழிகள்.

தேடல் நீளும்.

2024.05.03


Leave a comment


Comments


Related Post