இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 29) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 18-06-2024

Total Views: 7458

உனக்கென்றே உயிர் கொண்டேன் 29

காலமும், நேரமும் யாருக்கும் காத்துக்கொண்டு நிற்பதில்லை. தன் பணியை கடமை தவறாது செய்பவர்களில், அவர்களே வல்லவர்கள்.

இப்போதும் அப்படித்தான் தன் பணியை சீரும் சிறப்புமாக செய்து கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கான நாட்களின் நீளம் வெகு விரைவிலேயே குறைந்தது.

இதற்கிடையில் திருமண வேலைகள் கட்டி இழுத்திட... ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தனர்.

வீட்டின் ஆன் பிள்ளையாய் தமக்கையின் முதல் குழந்தையையும், தன்னுடைய பூர்விக்காக ஒவ்வொன்றையும் தமிழே முன்னின்று பார்த்து பார்த்து செய்தான்.

அதில் அவனது கால்கள் ஓரிடத்தில் நிற்காது சுழன்று கொண்டே இருந்தது.

அந்த வேகம் அழைப்பிதழ் வந்ததும் இன்னும் அதிகரித்தது. 

இதில் தெய்வானையின் மீதும் ஒரு கண் வைத்தவனாக இருந்தவனுக்கு வெண்பாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

நாட்கள் நெருங்கிட தானே நிச்சய விஷியத்தை வெண்பாவிடம் சொல்வதாகக் கேட்டிட, 

"நிச்சத்திற்கு இறுதி நொடியாக இருந்தாலும், என் மூலம் அவள் சம்மதம் தெரிவிக்க வேண்டும்" எனக்கூறிவிட்டான்.

காதலாக ஒன்றிணைவதையே அவன் விரும்புகிறான் என்பதை புரிந்து கொண்டவர்களும் அவன்போக்கில் மௌனமாக இருக்கின்றனர்.

வெண்பாவுடன் ஏதாவதொரு காரணத்தில் தினமும் பேசுபவனுக்கு, காதலை சொல்லிட மட்டும் அத்தனை எளிதாக வரவில்லை.

நடுவில் ஒருநாள் குன்னூர் சென்று பூபேஷுக்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு வந்திருந்தான். பூர்வியும் அலைப்பேசியில் அழைத்திருந்தாள்.

அகிலாண்டம் கூட தனத்துடன் இணைந்து ஆர்வமாகக் கல்யாண வேலைகளை பார்த்தார். இதில் பெருத்த ஆர்ச்சரியம் தெய்வானையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது தான்.

தெய்வானையின் அமைதிதான் சற்று யோசிக்க வைத்தது. பின்னர் அவரும் வேலைகளில் ஈடுபட, அந்த யோசனையும் பின்னுக்கு சென்றது.

வர்ஷினி இப்போதெல்லாம் தெய்வானையின் மீதான பயத்தை தள்ளி வைத்துவிட்டு மகேஷுடன் காதல் வானில் பறவையாய் சுற்றித் திறிந்தாள்.

மகேஷுக்கு அவள் மீதான கோபம் இருந்தபோதும், அவை யாவும் அவள் தன்மீது வைத்துள்ள காதலின் முற்றிய நிலையென உணர்ந்து புறம் ஒதுக்கினான்.

பூர்வி பணியில் நோட்டீஸ் பீரியட் முடிந்து, வேலையிலிருந்து விலக்கு பெற்றுவிட்டாள்.

இன்றைய தினம் தான் பணி மற்றும் விடுதி வாசம் முடிந்து வீடு வந்து சேர்ந்திருக்க... இன்னும் நான்கு நாளில் திருமணம். பூர்விக்கு இந்த நாட்கள் அஸ்வினுடனான திருமண கனவு அடங்கிய பேச்சுக்களோடு வண்ணமயமாகவே கழிந்தது.

இதில் அதீத பரபரப்போடு நாட்களை கழித்தது தமிழ் தான். சண்முகமும் வயதானவர், அஸ்வினோ மாப்பிள்ளை... அவனுடைய திருமண வேலைகளை அவனே செய்வதா என, மாப்பிள்ளை பக்க வேலைகளையும் தமிழே முன்னின்று செய்தான்.

அதில் சண்முகத்துக்கு தமிழை இன்னும் அதிகம் பிடித்திட, அஸ்வினுக்கு அவனுடனான நெருக்கம் அதிகரித்தது.

திருமண நாள் நெருங்கிவிட்டதால், தமிழுக்கு நிற்க கூட நேரம் கிடைக்கவில்லை. கல்யாணம் முடித்து மாலை வரவேற்பு... அவர்களின் எஸ்டேட்டிலே மேடை, பந்தல் என அமைக்க ஏற்பாடு செய்திருக்க, அந்த வேலை அவனை முழுமையாக இழுத்துக் கொண்டது.

தமிழின் அலைச்சலைக் கண்டு, 

"வரவேற்பையும் மண்டபத்திலே வைத்திருக்கலாம்" என தனம் புலம்பித் தள்ளினார்.

"நம்ம சொந்தமெல்லாம் பத்திரிக்கை வைக்கும்போதே, எதுக்கு அம்புட்டு தொலைவில் கல்யாணமுன்னு கேட்டாங்க. அதுக்காகத்தான் வரவேற்பு இங்க வைக்க வேண்டியதாகிப்போச்சு. அதெல்லாம் தமிழ் சமாளிப்பான். நீ கவலைப்படாதே" என்று தேவராஜ் தேற்றிய பின்னரே தனம் சற்று அமைதியாகினார்.

அன்று மதிய உணவின் போது... தமிழ் சாப்பிட்டுக் கொண்டிருக்க,

பூர்வி அவனிடம் வந்து ஒரு கவரை கொடுத்தாள்.

"என்னதுக்கா?"

"வெண்பா நிச்சய புடவை தமிழ்!"

"அக்கா அது தெரியுது. நானும் நீங்களும் தானே எடுத்தோம். இப்போ ஏன் கொண்டு வந்து கொடுக்குறீங்க? அன்னைக்கு தட்டில் வைத்துதானே கொடுக்கணும்?" என்று சந்தேகமாகக் கேட்டான்.

"வெண்பாவுக்கு மேட்சிங் பிளவுஸ் ஸ்டிச் பண்ண வேண்டாமா? இப்படியே கொடுத்தால் எப்படி கட்டிப்பாள்?" என்றாள் பூர்வி.

"ஹோ...! அவக்கிட்ட கேளுங்க!"

"ஹான்..."

அப்போது அங்கே வந்த வர்ஷினி, 

"இதுகெதுக்கு ஆர்கியூ பண்றீங்க? எப்படியும் வெண்பாகிட்ட சொல்லணும் தானே! தானா அதுக்கான நேரம் அமையும் அப்படின்னு வெயிட் பண்ணால், ஒன்னும் நடக்காது" எனக்கூறி, பூர்வியின் கையிலிருந்த கவரை வாங்கி, தமிழின் கையில் திணித்து...

"இப்போவே போய் மீட் பண்ணுங்க. லவ் சொல்லுங்க. அப்படியே லவ் கிஃப்ட்டா, நிச்சய புடவையை கொடுங்க" என்றாள்.

"ம்ம்ம்..." பூர்வி மெச்சுதலாய் மண்டையை ஆட்டினாள்.

"எனக்கும் வர்ஷி சொல்றது சரின்னு படுது தமிழு?" அவர்களின் பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்த தனம் கூறிட, அவனுக்கும் சொல்லியாக வேண்டிய நிலை. இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ளது.

தமிழ் வெண்பாவிடம் காதல் சொல்லி அவள் சம்மதத்தை நேரடியாக பெற்றால் மட்டுமே, அவர்களுக்கான நிச்சய வேலையை திடமாக நடத்திட முடியும்.

"சரிம்மா" என்றவன், அலைபேசியை எடுத்திட...

வெண்பாவே சரியாக அந்நேரம் அவனுக்கு அழைத்திருந்தாள்.

"ம்ம்ம்... உங்க ஆளே கூப்பிட்டாச்சு. மீட் பண்ணனும் சொல்லிடுங்க" என்றாள் வர்ஷினி.

தமிழ் பூர்வியை ஏறிட, அவளும் கண் மூடி தலை அசைக்க... அழைப்பை ஏற்றவனாக தள்ளிச் சென்றான்.

"ஹாய் சீனியர்! பிஸியா?"

வெண்பா எடுத்ததும் இவ்வாறு கேட்டிட, அவள் ஏதோ முக்கியமாக பேசப்போகிறாள் என்பதை யூகித்த தமிழ்,

"ஆல்மோஸ்ட் பிஸி வொர்க் எல்லாம் முடிஞ்சிருச்சு" என்றான்.

"ஃபைன் பாஸ்" என்றவள், "மீட் பண்ணனுமே?" எனக் கேட்டாள்.

"எப்போ?"

"இப்போ!"

"எங்கே?"

"கார் மியூஸியம்!"

"ஹ்ம்ம்... வரேன்" என்று வைத்திட்டான். உடனே தனம் மற்றும் பூர்வியிடம் சொல்லிவிட்டு கிளம்பியும் இருந்தான்.

அன்று சுமன் ப்ரொபோஸ் செய்ய விழைந்ததிலிருந்து, வெண்பா தமிழிடம் காதலை சொல்லிட முயற்சிக்கிறாள். ஏனோ இதயத்தின் படப்படப்பின் முன்னே அவனிடம் சொல்லிட தைரியம் வரவில்லை.

இன்று சொல்ல வேண்டுமென்று இருந்தாலும், வேறொரு காரணத்திற்காக அவனை அழைத்திருந்தாள்.

முக்கால் மணி நேரத்தில் கார் மியூசியம் வந்து சேர்ந்த தமிழ் அதன் முன்னால் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அமர்ந்தவாக்கிலே வெண்பாவுக்கு அழைத்திட அலைப்பேசியை எடுக்க, அவனுக்காக அங்கிருந்த மரத்தடியில் காத்திருந்த வெண்பா அவனை கண்டதும், அருகில் வந்து அவன் பின்னால் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

"உள்ள இருப்பன்னு நினைச்சேன்" என்றவன், சட்டைப்பையில் எடுத்த அலைபேசியை வைத்தவனாக, "வேறெங்கும் போகணுமே?" எனக் கேட்டான்.

'ம்ம்ம்... வாழ்க்கை முழுக்க இப்படியே உங்கக்கூட...' மனதில் நினைத்தவள், "நேரா போங்க" என்றாள்.

அங்கிருந்து நூறு மீட்டர் இடைவெளியில் வண்டியை நிறுத்தக் கூறினாள்.

தமிழும் வண்டியை நிறுத்திவிட்டு, முன்னிருந்த கட்டிடத்தை தலை உயர்த்தி பார்த்திட...

"ஜூவெல் ஷாப்?" என்றான். கேள்வியாக.

"ம்ம்ம்... வாங்க!"

"உனக்கு ஏதும் வாங்கப்போறியா?" எனக் கேட்டபடி அவளுடன் இணைந்து நடந்தான்.

"இல்லை" என்றவள் டைமண்ட் பிரிவிற்கு அழைத்துச் சென்றாள்.

"ஹை பட்ஜெட்டா?" என்றவன் சிப்பந்தி 
 காட்டிய இருக்கையில் அமர, அவனருகில் அமர்ந்த அவளும்,

"கப்பில் ரிங்ஸ் காட்டுங்க" என்றாள்.

தமிழ் வெண்பாவையே பார்த்திருக்க,

"அண்ணா, அண்ணிக்கு" என்றாள்.

"அதுக்கெதுக்கு மேடம் என்னை கூப்பிட்டிங்க? எனக்காக வெயிட் பண்ணாமல் நீயே எடுத்திருந்தால் இந்நேரம் வீட்டிற்கே போயிருக்கலாம்" என்றான்.

"இப்போ கூப்பிட்டதுல என்ன குறைஞ்சி போயிட்டிங்க நீங்க?" என்று சற்று சத்தமாகவேக் கேட்டவள், "பார்த்து ரெண்டு வாரம் ஆவுதேன்னு இதை சாக்கு வச்சு கூப்பிட்டால் ரொம்பத்தான் சலிச்சிக்கிறாங்க" என்று மெல்ல முணுமுணுத்தாள்.

அவ்விடம் ஆழ்ந்த அமைதியில் இருந்ததால், அவளின் மெல்லிய குரலும் அவனின் செவி நுழைந்திருந்தது. அவளுக்கு முகம் காட்டாது மற்றைய பக்கம் திரும்பி நீண்டு இதழ் விரித்து அகம் மலர்ந்தான்.

"பூர்வி சைஸ்?"

வெண்பா உம்மென்று இருக்க, அவனே பேசினான்.

"அன்னைக்கு நகை எடுக்கப்போனப்போ நோட் பண்ணினேன்" என்றவளிடம் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவழித்து பொடி வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ஜோடி மோதிரத்தை இருவரும் சேர்ந்து தேர்வு செய்தனர்.

தமிழ் தன்னுடைய வாலட்டை கையில் எடுக்க... அவனின் கரத்தை தடுத்து பிடித்தவள்,

"பாஸ் ப்ளீஸ்... நான் கொடுத்துக்கிறேன்" என்று கண்கள் சுருக்கிக் கூறினாள்.

தமிழ் முறைக்க...

"இது நாம ரெண்டு பேரும் சேர்ந்து கிஃப்ட் பண்ணப்போறது தான்" என்றவள், "நீங்க அன்னைக்கு கொடுத்த பணமும் சேர்த்து தான்" என்று தன்னுடைய வங்கி அட்டையை அவனிடம் அவள் நீட்ட...

"அது நான் உனக்காகக் கொடுத்தது" என்றான்.

"ஆங்... அப்போ அதை என்னவும் செலவு செய்ய எனக்கு ரைட்ஸ் இருக்குல?"

அவள் இன்னமும் அவனின் கரத்தை விடவில்லை.

விரிந்த இதழையும், சுருங்கிய விழிகளையும், தன் கையை பிடித்திருக்கும் அவளின் கரத்தையும் மாற்றி மாற்றி பார்த்தவன், மற்றொரு கரத்தால் அவள் நீட்டிக்கொண்டிருந்த அட்டையை வாங்கினான்.

கடவுச்சொல் எண்ணினை சொல்லியவள்,

"பே பண்ணிட்டே இருங்க. இதோ வந்திடுறேன்" என்று அவர்கள் இருந்த தளத்திற்கு கீழ் தளம் சென்றாள்.

அவள் செல்வதை எங்கென்று பார்த்திருந்த தமிழிடம்,

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்று அவர்கள் எடுத்த மோதிரங்களுடன் நகர்ந்த ஊழியர், சில பல நிமிடங்களில், தமிழிடம் அட்டையை உபயோகிக்கும் கருவியை காண்பிக்க, அவன் அட்டையை இழுத்து, வெண்பா சொல்லிச்சென்ற எண்களை அழுத்திட... அவள் சொல்லியபோது கவனிக்காத ஒன்றை அப்போதுதான் கவனித்தான். அவனுள் ஆயிரம் மத்தாப்பு ஒன்றாக வெடித்து சிதறியது.

கடவுச்சொல்லுக்கான எண்கள் தமிழின் பிறந்தநாள். அவன் பிறந்த நாள் மற்றும் மாதத்தினை கடவு எண்ணாக வைத்திருந்தாள்.

தமிழுக்கு அந்த நொடியே அவளை தன் கை வளைவிற்குள் இழுத்து நிறுத்தி காதலை சொல்லிட வேண்டுமென்கிற பேராவல்.

பில் முடித்து அவன் கீழே வேகமாக வர, அவளும் சென்ற வேலை முடித்து மேலேறிக் கொண்டிருந்தாள்.

"முடிஞ்சுதா?"

வெண்பா கேட்டிட ம் என்றவன்,

"எங்கப்போன?" எனக் கேட்டான்.

அவளோ அதற்கு பதில் சொல்லாது,

"கார் மியூசியம் ஆப்போசிட் ஒரு பார்க் இருக்கே போகலாமா?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்" என்றவனுள் ஒரு மின்னல்.

'மேடம் சொல்லப்போறாங்க.' தான் சொல்ல வேண்டும் என்பது மறந்து மனதிற்குள் படு உற்சாகமானான்.

பூங்காவினுள் நுழைந்ததும் முன்னவே, ஆள் அரவமின்றி இருந்த பகுதியின் கல்மேடையில் அமர்ந்தனர்.

சொல்ல வேண்டுமென தைரியத்தை இழுத்து பிடித்து அமர்ந்திருப்பவளுக்கு, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்திட அவஸ்தை கூடிப்போனது.

தன்னவளின் படப்படப்பையும், தவிப்பையும் கண்டும் காணாமல் ரசித்தவன், அவ்விடத்தை பார்வையால் மேய்ந்தபடி அவள் சொல்லும் நொடிக்காக தவமிருந்தான்.

'இது வேலைக்கு ஆகறதுக்கில்லை' என்றவள், தன் ரத்தம் ஓட்டம் அதிகரிப்பதை குறைக்க... 

"நான் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரேன்" என்று அவன் வாய் திறப்பதற்குள் வேகமாக எழுந்து நடந்திருந்தாள்.

"என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?" செல்லும் அவளின் பின் உருவத்தை வெறித்தவனாகக் கேட்டிட, 'உனக்கில்லையா அந்த தயக்கம்?' எனக்கேட்டது அவனின் மனம்.

மனதிற்கு பதில் சொல்லாது, பூங்காவை விட்டு வெளியில் சென்று, எதிரே கார் மியூசியம் அருகில் நிற்கும் ஐஸ்க்ரீம் வண்டியை நோக்கி வெண்பா செல்ல... சாலையை கடந்திட பயந்து ஒரு அடி முன் வைப்பதும், இரு அடி பின் வைப்பதுமாக அவள் பாதத்தில் கபடி நடத்திக்கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு, மூளையில் பளிச்சிடல்.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து விருட்டென எழுந்து நின்றிருந்தான்.

இப்போது புரிந்தது. அன்றைய நிகழ்வும் காட்சி சிதறலாக விழி வழி அவனின் அகம் நிறைத்தது.

வெண்பாவின் பின் உருவமும், நீண்ட பின்னலும், எப்போதும் எதையோ காட்டிக்கொடுத்திட மனதை தூண்டுவதற்கான காரணம் இன்று புரிந்தது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு, இதே இடத்தில் அவள் சாலையை கடக்க தடுமாறிய போது, அவளின் முகம் கூட காணாது, அவளுக்கு சாலையை கடந்திட அவன் உதவியதும், நண்பர்கள் அதற்கு கேலி செய்து சிரித்ததும், வெண்பாவின் நீண்ட பின்னலை ஆச்சரியமாக விழிவிரித்து பேசியதும் நினைவு வந்தது.

அதன் பின்னரும் நண்பர்கள் குழு அடிக்கடி அந்நிகழ்வை நினைவு கூர்ந்து அவனை கேலி செய்திருக்க... நன்றாகவே நினைவில் இருந்தது. அந்நாளும், அத்தருணமும்.

அந்நிகழ்வு உள்ளுக்குள் மகிழ்வை கொடுக்க, புன்னகையோடு அவளருகில் சென்று கரம் பற்றி சாலையை கடந்து அழைத்துச் சென்றான்.

அன்று யாரோ ஒரு பெண்ணுக்காக உதவி எனும் அடிப்படையில் செய்தவன்... இன்று தன்னவள் என்கிற அதீத உரிமையில் செய்தான்.

"இன்னமுமா ரோட் க்ராஸ் பண்ண தடுமாறுற நீ?" எனக் கேட்டவன், ஐஸ்க்ரீம் வாங்கி அவளின் கையில் கொடுத்தான்.

கல்லூரி நாட்களில் இது போன்று நடந்திருப்பதால் அதை குறிப்பிடுகிறானென எண்ணிய வெண்பா,

"அதென்னவோ இந்த பயம் மட்டும் போக மாட்டேங்குது" என்றபடி ஐஸ்க்ரீமை சுவைத்தாள்.

மீண்டும் சாலையை கடந்து பூங்காவிற்கு வந்து அமர்ந்தனர். ஐஸ்க்ரீம் தீரும் வரை இருவரிடமும் பேச்சில்லை.

வெண்பாவே துவங்கினாள்.

"இன்னும் ரெண்டு மூணு நாள் தான்'ல? அப்புறம் இந்த பரபரப்புலாம் அடங்கிடும்" என்றவள், "ஜாப் ரொம்பவே இண்ட்ரெஸ்ட்டிங்கா போகுது பாஸ்" என்றதோடு சுமன் திருமணத்திற்கு முன் மொழிந்ததையும் கூறினாள்.

அவளுக்கு அவனிடம் காதலை சொல்வதற்கு முன் மனதை இலகுவாக்கிட எண்ணி பலவற்றை பேசினாள்.

சுமன் விஷயம் கூறும்போது மட்டும் தமிழின் பார்வையில் உஷ்ணம் கூடியது.

'இவளை சிங்கிளா விட்டால், நான் மிங்கிள் ஆக முடியாது. எங்கிருந்துடா வருவீங்க?' என்று மனதோடு அலறினான்.

தான் எடுத்துக் கூறியதும் சுமன் விலகி விட்டதாக வெண்பா சொல்லிய பின்னரே தமிழ் சாதாரணமாகினான்.

பேசிக்கொண்டே தன்னுடைய பையிலிருந்து ஒன்றை எடுத்து தமிழின் கையில் மாட்டிவிட்டாள்.

அதிக தடிமனில்லா பிளாட்டினம் காப்பு. அதன் மையத்தில் ஒற்றை வெண்ணிற கல்.

"ஹேய்... என்னது?" என ஆச்சரியமாகக் கேட்டவன், மற்றைய கையால் காப்பினை முறுக்கி மேலும் கீழுமாக இறக்கி, அழகு பார்த்தான்.

"ரொம்ப நல்லாயிருக்கு மொழி" என்றவனின் சந்தோஷம் அவனது முகத்தில் தெரிந்தது.

"என்னோட பர்ஸ்ட் டூ மன்த்ஸ் சேலரிலே வாங்கியது. அதில் உங்களுக்குத்தான் ஏதும் வாங்கணும் தோணுச்சு. கூடவே ஒன்னு சொல்லணும்" என்று அவனின் முகம் பார்த்தவள்...

"இதுல ஒன்னு இருக்கு. அது என்னன்னு சரியா கண்டுபிடிச்சிட்டிங்கன்னா... நான் சொல்ல நினைக்கிறது உங்களுக்கு புரியும்" என்றதோடு, "என் மனசும்" என்று மெல்லிய ஒலியில் மொழிந்திருந்தாள்.

தமிழுக்கு நன்றாக புரிந்தது. காதலை நேரடியாக சொல்லிட முடியாது... இப்படி சொல்கிறாள் என. அவனோ காப்பினை பலவாறு ஆராய்ந்துவிட்டான். ஒன்றும் புலப்படவில்லை.

"அவசரமில்லை பாஸ். வீட்டுக்கு போயிட்டு நிதானமாகவே பாருங்க. இப்போ லேட் ஆகுது. என்னை ஸ்டேஷனில் டிராப் பண்ணிடுங்க" என்று எழுந்தாள்.

"ட்ரைக்ட்டா சொல்லலாமே?" என்றபடி தமிழும் எழ,

"உங்களுக்கு புரியுதுல சீனியர்?" என அவனது விழியோடு விழிகள் முட்டி வினவினாள்.

அன்று ஒருநாள் அவன் கேட்டது. பதில் சொல்லிடத்தான் இருவரிடமும் தடுமாற்றமும்.

அதுவரை காதலை சொல்லிடத் தவித்துக் கொண்டிருந்த தமிழ், தங்களது நிச்சயம் அவளுக்கு ஆச்சரியமாக இருக்க வேண்டுமெனக் கருதி... நிச்சய மேடையிலேயே தெரியட்டும் என மௌனம் கொண்டான்.

"பூர்வி, மாம்ஸ் மேரேஜ் முடிந்ததும்... இன்னும் நல்லாவே புரிஞ்சிடும்" என்றவன், புன்னகையோடு அவளைக் கூட்டிக்கொண்டு, ரயில் நிலையம் வந்து, ரயில் ஏற்றி நகர்ந்த பின்னரே தான் கிளம்பி வந்தான்.

வீட்டிற்கு வந்தவன் வேகமாக அறைக்குள் நுழைந்து காப்பினை தான் முதலில் ஆராய்ந்தான்.

சில பல நிமிடங்களில் என்னவென்று கண்டு கொண்டவனுக்கு... சட்டை பையினை கிழித்துக்கொண்டு இதயம் வெளியே எம்பிக் குதிக்கும் உணர்வு. காற்றின்றி, சிறகின்றி விண்ணை முட்டி பறந்திருந்தான். நுரையீரல் மூச்சுக்குத் தவித்தது. உடலெல்லாம் புது ரத்தம் பாய்ந்த வேகத்தில் உறைந்து அவனை மொத்தமாக சில்லிட வைத்தது.

அக்கணத்தை... கரை புரண்டு ஆர்ப்பரிக்கும் மகிழ்வை... கடந்திட முடியாது அஸ்வினுக்கு அழைத்திருந்தான்.

"மாம்ஸ்..." 

தமிழின் குரலே அவனது மகிழ்ச்சியின் அளவை அஸ்வினுக்கு காட்டிக்கொடுத்தது.

"என் மச்சான் ரொம்ப ஹேப்பியா இருக்காங்க போல...?"

"நிச்சயம் இல்லாமல் நேரா கல்யாணம் பண்ணிக்கவா மாமா?" எனக் கேட்டு அஸ்வினை அதிர வைத்திருந்தான் தமிழ்.

"ரொம்ப ஸ்பீடா போறடா!"

"நாலு வருஷ லவ் மாமு. இன்னும் நேரடியா சொல்லிக்கக்கூட இல்லை. இதுதான் ஸ்பீடா?" எனக் கேட்க, அஸ்வின் சத்தமிட்டு சிரித்தான்.

"அப்போ வெண்பாகிட்ட சொல்லலையா? சொல்லாம எப்படி தமிழ்?" அண்ணனாக கவலைக்கொண்டு வினவினான்.

"அதெல்லாம் அப்படித்தான்" என்ற தமிழ், "எங்கேஜ்மெண்ட் கண்டிப்பா நடக்கும். மொழிக்கு என்னோட சர்ப்ரைஸ்" என்றவன், "நீங்க அரேஞ்மெண்ட்ஸ் மட்டும் கவனியுங்கள்" என்று உற்சாக மனதுடன் வைத்திட்டான்.

தங்கையின் காதல் தெரிந்த அஸ்வினுக்கு அவளின் விருப்பமும் இதில் அதீதம் தான் என்று தமிழின் எண்ணப்படி இது அவளுக்கு இனிய ஆச்சரியமாக இருக்கட்டுமென்று சொல்லாது இருந்திட்டான்.

பூர்வி, அஸ்வின் திருமணம் முடிந்த சில கணங்களில் யாரும் எதிர்பாராது, தமிழ் மற்றும் வெண்பாவின் நிச்சயதிற்கு பதில் பெரும் சலசலப்பு, அழுகை, பல விவாதங்கள் என அவற்றின் நடுவே அவர்களின் திருமணமே முடிந்திருந்தது.

இதற்கு சூத்திரதாரி தெய்வானையைத் தவிர வேறு யாராக இருந்திட முடியும்?

அவர் ஒன்று நினைத்து கட்டம் கட்ட, வேறொன்று நடந்து முடிந்திருந்தது.


Leave a comment


Comments


Related Post