இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -58 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 21-06-2024

Total Views: 6903

உடைந்த லத்தியை தூக்கிப் போட்டு விட்டு கலைந்த தலையை நீவிக் கொண்டவன் துண்டை எடுத்து வியர்த்த வியர்வையை துடைத்துக் கொண்டான்.

இன்னும் கோவம் ஆறவில்லை. அவள் பயந்து முதுகிற்கு பின் நடுங்கியவாறு நின்றது இன்னும் கண்களை விட்டு அகலமாட்டேன் என அடம்பிடித்தது.

தன்னைக் கண்டு மட்டும் பயந்தவளை இன்று யாரோ ஒருவன் பயப்பட வைத்து விட்டானே என்ற கோவமா, இல்லை தன்னவள் தன்னை தவிர வேற யாருக்கும் பயப்படக் கூடாது என்ற அகந்தையா தெரியவில்லை ஏதோ ஒரு கோவத்தில் கண் மண் தெரியாமல் அடித்தான்.

“சார்”

“ம்ம்”

“அந்தப் பொண்ணை... சாட்சி சொல்ல வர சொல்லணும்.”

“ஒரு தேவையும் இல்லை. இவங்க மேல பெண்டிங்ல கிடக்கற கஞ்சா கேசை போட்டுவிடு. இல்லனா ராப்பரி கேஸை போட்டு விட்டுடு, இதுங்களை என்ன பண்ணனனும்ன்னு நான் பார்த்துக்கறேன்.” என்றான்.

அந்த பெண் அவ்வளவு என்ன முக்கியம்? என்று தான் அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது.

சரஸ்வதி சாப்பிட வந்த பெண்ணிடம் தகராறு செய்திருப்பார்கள் என்று தான் நினைத்திருந்தாள். நந்தன் அவளின் மீது காட்டும் அக்கறையில் யோசனையில் நெற்றி சுருங்கியது.

அங்கிருந்த ஏட்டுவிடம் சென்றவள், “சார் நீங்க நந்தன் சார் கூட தானே இருப்பிங்க அந்த பொண்ணு யாருனு தெரியுமா.?”

“ரெண்டு தடவைப் பார்த்துருக்கேன் சரசு. சாரோட வீட்டுக்கு பின்னாடி இருக்காங்க. பக்கத்து வீட்டுப் பெண்..” என்றதும் சரஸ்வதிக்கு கொஞ்சம் ஆசுவாசம் ஆனது.

“ஹப்பா முறை பொண்ணு எதுமில்ல. இப்படி லவ் சொல்லாம காலத்தை ஓட்டிட்டு இருந்தா இடையில ஆயிரம் பேர் வர தான் செய்வாங்க சீக்கிரம் சொல்லிடனும்.“ என எண்ணிக் கொண்டாள்.

வீட்டின் முற்றத்தில் கீழே ராஜி அமர்ந்திருக்க, அவரின் தோளில் கையை வைத்து ஆதரவாக பக்கத்தில் அமர்ந்திருந்தார் மணி.

மகனின் செயலில் எப்போதும் தோன்றும் அதிருப்தி தான்.

“அவன் என்ன வேணா சொல்லிருக்கட்டும், உனக்கு அவனை பத்தி தெரியாதா? அவனோட முரட்டு குணத்துக்கும் உனக்கும் செட்டாகாது நிலா குட்டி, சொன்னா புரிஞ்சி அவன்கிட்ட பேசு.” என தன்மையாக எடுத்து சொல்லிக் கொண்டிருக்க,

“ஏன் அத்தை நான் உங்க வீட்டு மருமகளா வரதுல உங்களுக்கு விருப்பம் இல்லையா? நீங்களும் ஆயா மாதிரி ஜாதி பார்க்கறீங்களா?” என கேட்டு விட ராஜி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“ஏய் ராஜி என்ன பண்ற?”

“நம்ப என்ன சொன்னாலும் கூறுக் கெட்டவ எப்படி பேசிட்டு திரியுறா பாருங்க அண்ணி.”

“இங்க பாரு நிலா, உங்க அண்ணன் எங்க வீட்டு மாப்பிள்ளையா வரும் போதே இந்த ஜாதி பிரிவு எல்லாம் உடைஞ்சிப் போச்சி. இப்போ நான் சொன்னது உன் நல்லதுக்கு தான் கேக்க விருப்பம் இருந்தா கேளு இல்லனா விட்டு தள்ளு.”

“விட்டுட்டேன் நீங்க கல்யாண வேலையைப் பாருங்க.” என்று அவளது அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

“என்ன ராஜி நீயே உடைஞ்சி உக்கார்ந்தா மாப்பிள்ளையை என்ன பண்றது? இதெல்லாம் நடக்கும்னு நம்ப முன்னாடியே நினைச்சது தானே.”

“அது நந்து தம்பி தான் ஏதாவது பண்ணும்னு நான் நெனச்சேன் அண்ணி. இப்போ இவள்ல வெட்டிட்டு நிற்கரா. அவன் வேற வேண்டாம்னு ஒத்துக்கிட்டானா அப்புறம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான் நாளைக்கு இவ யாருமில்லாம நிக்கணும்ல அண்ணி. அதை நெனச்சி தான் கவலையா இருக்கு. அம்மு வாய் மட்டும் தான் படபடன்னு பேசுவாண்ணி மத்தப்படி குழந்த மாதிரி.” என அழுக.

“ஆமா இப்போ தான் புதுசா நிலாக்குட்டியைப் பார்க்கறேன் பாரு. நிலா குணத்துக்கு நந்து செட்டாக மாட்டான்னு தான் இவ்வளவு தூரம் எல்லோரும் குறுக்க விழுந்து தவிக்கிறோம்.”

“அத்தை அண்ணா தான் நிலாவை ஏதாவது சொல்லி மிரட்டிருப்பான். அவனைப் பத்தி உங்களுக்கு தெரியும்ல விடுங்க. நான் இருக்கும் போது நிலாவை அப்படிலாம் விட்டுட மாட்டேன்.” என்று ராஜியின் கையை அழுந்தப் பற்றி சொல்ல அவரும் சற்று ஆசுவாசம் ஆனார்.

வீடே கலையிழந்து காணப்பட்டது, நிலா அறைக்குள் முடங்கியவள் அழுது அழுது ஓயிந்தாள்.

யுகியின் எண்ணிற்கு அழைத்தால் அது தடைச் செய்யப்பட்டிருந்தது. வாட்சப்பிற்கு சென்றால், அங்கும் தடை எல்லா சமூக வலைதளத்திலும் நிலாவை தடை செய்திருந்தான்.

அதைப் பார்த்ததும் அடங்கி இருந்த அழுகை பொங்கி வந்தது.

பிறந்ததில் இருந்து யுகி ஒருநாளும் இவ்வாறு செய்ததில்லை. இன்று அவன் செய்யும் செயல் மரண வலியைக் கொடுத்தது. இதற்காக தானே நந்தனின் பக்கமே திரும்பாமல் இருந்தாள்.

யுகி ப்ளீஸ் ஒரு தடவை போனை எடுடா என கடைசி முயற்சியாக கூகுள் பே-வின் மூலம் செய்தி அனுப்பினாள்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரண நொடிகள் தான். பிடித்தவர்கள் பேசாமல் போனால் ஏற்படும் வலி என இப்போது தான் தெரிந்துக் கொண்டாள். யுகி சமாதானம் செய்துவிட முடியும் வளவனை தான் சமாளிப்பது கடினம் என்று எண்ணிருந்தவளுக்கு அவை அப்படியே தலைகீழாக மாறவும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தலையணை கூட பாரமாகியது படுத்திற்கும் பஞ்சு மெத்தை முள்ளாக குத்த.. இதயம் தாளம் தப்பி துடித்தது.

“யுகி நான் பண்ணது தப்பு தான் அதுக்காக என்னை ஒதுக்கிடாதடா. நீ இல்லாம என்னால ஒரு நாள் கூட நிம்மதியா மூச்சு விட முடியாது.” என ஏங்கி ஏங்கி அழுதாள்.

நந்தனின் எண்ணமே எழவில்லை. அவனைப் பற்றிய எண்ணங்களில் லயிக்க வேண்டியவளோ, அவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் கவலையில் மூழ்கியிருந்தாள்.

நிலா அனுப்பிய செய்தியைப் பார்த்த யுகி சிவந்த கண்களை துடைத்துக் கொண்டான்.

அழுதிருக்கிறான் என அவன் சிவந்த கண்களே சொல்லாமல் சொல்லியது.

இதுதான் முதல் முறை அவனாக நிலாவிடம் பேசாமல் இருப்பது. சின்ன தலைவலி என்றாலே அவள் முகச் சுளிப்பை வைத்து கண்டுக் கொள்ளும் அன்பாளன் அவன். எப்படி இவ்வுளவு பெரிய விஷயத்தை கண்டுபிடிக்காமல் விட்டான் என்று தெரியவில்லை. அவள் செய்தது நம்பிக்கை துரோகம் தானே விரோதியை மன்னிக்கலாம் துரோகியை எப்படி மன்னிக்க முடியும்.

‘உன் பூனைக்கு அந்த பாகுபாடுலாம் உன்கிட்ட இல்லையே, உயிரை கொடுடா யுகி எனக்கு வேணும்’ என்றால் உடனே கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து எடுத்துக்கோ பூனை என்பவன் அவன். அவள் செய்த தவறை மன்னிக்க முடியாதா என்ன? 

நிலா எந்த அளவிற்கு வேதனைப் படுகிறாளோ அதைவிட ஒரு படி மேல் தான் யுகி வேதனைப் படுவானே தவிர, அவளிடம் பேசாமல் இருப்பதை நினைத்து சந்தோசப்பட மாட்டான்.

“யுகி.”

“அம்மா”

“சாப்பிட வா..”

“பசிக்கல”

“என்ன பசிக்கல? மதியமும் சாப்பிடவேயில்ல.அதெப்படி ரெண்டு நேரமும் பசிக்காம இருக்கு.”

“பசிக்கலன்னு சொல்றேன்ல” என்று கோவமாக அருகில் இருந்த பொருளை தள்ளி விட, அது தரையில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதில் சில்லு சில்லாக உடைந்தது.

“யார்மேல இருக்கற கோவத்துல இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.?”

“எனக்கு உன் பெரிய மவன் மேல தான் கோவம், இப்போ என்ன பண்ணப்போற?

“நான் என்னடா பண்ணனும்?”

“அப்போ எதுக்கு கேக்கற? பசிச்சா சாப்பிடப் போறேன்.” என்றவனின் சத்தத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தனின் கை ஒரு நொடி நின்று மீண்டும் செயல்பட்டது.

“எவ்வளவு சத்தம் போடறேன் கொஞ்சமாவது உறைக்குதா பாரு..?”என்றவன், “எல்லாம் உன்னால தான்டா, எதுக்குடா அவளையே நாய் மாதிரி சுத்தி சுத்தி வர? ஊர் உலகத்துல உனக்கு பொண்ணே கிடைக்கலையா?" என்றான். கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் நந்தனிடம் இன்று தான் பேசுகிறான் அதும் அவன் பூனைக்காக.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், யுகி தன்னிடம் பேசியதும் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.


Leave a comment


Comments


Related Post