இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -59 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 21-06-2024

Total Views: 5876

“உன்கிட்ட தான் பேசறேன் நந்து எனக்கு என் பூனை வேணும், உன்னால அவளை ஒழுங்கா பார்த்துக்க முடியாது யார் மேலையோ இருக்க கோவத்தை அவ மேலதான் காட்டுவ.. அவ பூ மாதிரி கொஞ்சம் வேகமா மூச்சி இழுத்து விட்டாலே வாடிப் போய்டுவா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. நீ வேண்டாம்னு ஒதுங்கிட்டின்னா அவ உன் பக்கமே வரமாட்டா.” என யுகி நந்தனுக்கு புரிய வைத்துவிடும் வேகத்தில் பேசிக் கொண்டிருக்க, அவனோ தயிர் சாப்பாட்டில் வழிந்த தயிரை வழித்து நக்கிக் கொண்டிருந்தான்.

“டேய் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.“

இடது கை சுண்டு விரலால் காதை குடைந்த நந்தன்.

“ஆயா...” என்றான் சத்தமாக.

யுகியே அவன் பூனைக்காக இறங்கி வந்து பேசினாலும், நந்தன் பேசும் எண்ணத்தில் இல்லை.

“என்ன ராசா..?”

“அவ தான் என்னோட பொண்டாட்டின்னு ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லிட்டேன்ல.“

“அந்த எழவு தான் எல்லோருக்கும் தெரியுமே.”

“அப்புறம் எதுக்கு? தேவையில்லாம எல்லோரும் சலம்பிட்டு இருக்காங்க, ஓவரா சலம்புனா யாரு என்னன்னு பார்த்துட்டு இருக்க மாட்டேன், போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.” என்றவன் யுகியை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகரப் போக, அவன் குறுக்கே வந்து நின்ற யுகி.

“என்னைய கொன்னாலும் பரவால, எனக்கு என் பூனை வேணும்.”

“தெருவுல சுத்தும் போய் புடிச்சிக்க சொல்லு ஆயா.” என்றவன் தட்டை எடுத்துக் கொண்டுப் போய் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு சென்று விட்டான்.

அவன் பூனை, அவன் பூனை என்று சொல்லும் போதே கன்னத்தில் நாலு அப்பு அப்ப வேண்டும் போல் இருந்தது.

“யாருடா உன் பூனை? அவ என்னோட பொண்டாட்டி” என கத்தி சொல்ல தான் ஆசை எதற்காகவோ அடக்கிக் கொண்டான்.

அன்றைய நாள் யாருக்கு மோசமோ இல்லையோ நிலாவிற்கு படு மோசமாக விடிந்து முடிந்தும் விட்டது.

சூரியனின் செங்காலை கதிர்கள் பூமியை ஆரத்தழுவும் முன்பே நிலாவிற்கு முழிப்பு வந்துவிட்டது. மெல்ல எழும்பி வெளியே வந்தவள், வீடே இருள் சூழ்ந்திருக்க, வாசலில் இருந்த மரத்தில் குயில் கூவும் சத்தமும் செல்லம், பறவைகளில் அலை அலையாக கீச்சல் சத்தமும் மனதை லேசாக்குவது போல் இருக்க.. வெளியே இருந்த கல்மேடையில் அமர்ந்து விட்டாள்.

தூக்கம் தான் வரவில்லையே தவிர துக்கம் டன் கணக்காக வந்து மனதை அழுத்தியது.

“ஹோய்.”

“ஹாஆ...”

“ஏய் எதுக்குடி கத்துற.?“

“நீங்களா.. நான் பயந்தே போய்ட்டேன்.”

“இந்நேரத்துல தூங்காம இங்க என்ன பண்ற.?”

“தூக்கம் வரல”

“நேத்து நடந்ததுக்கா?”

“இல்ல இல்ல”

“அப்போ கவலை இல்லையா?”

“இதுதான் நடக்கும்னு முன்னாடியே தெரியும்ல.”

“அதனால கவலையில்லையா?” என்றவன் அவளை நெருங்கி அமர..

நிலாவின் இதயதுடிப்பு பல மடங்காகியது.

அவளின் தோளை சுற்றி கையைப் போட்டவன், “சொல்லுடி” என்றான் ரகசியக் குரலில்.

“நீங்க தூ.. தூங்க.. தூங்கலையா..?”

“ஒருவழியா கேட்டு முடிச்சிட்டப் போல.. தூக்கம் வரலையே.” என்றவன், “என்ன பேச்சை மாத்தி விடறியா? எனக்கேவா.? கவலை இல்லைன்னுட்டு நைட் முழுக்க அழுதுருப்ப போல..”

“ம்ம்..”

“எதுக்கு அந்த நாய் பேசலைன்னா?”

“எந்த நாய்?” என்று புரியவில்லை அண்ணனும் தம்பியும் மாறி மாறி ஒருவரை ஒருவர் நாய் என தாக்கிக் கொள்கின்றனர். நல்ல அண்ணன் நல்ல தம்பி என நினைத்துக் கொண்டவள்.

“அப்படிலாம் இல்ல” என்றாள்.

“நான் போலீஸ்காரன்டி”

'அதுதான் ஊருக்கே தெரியுமே இதுல தனியா வேற தம்பட்டம் அடிக்கணுமா?' என மனதுக்குள் அவனை தாளித்துக் கொண்டிருக்க.

“உன் கண்ணைப் பார்த்தே நீ பொய் சொல்றியா? உண்மையை சொல்றியான்னு தெரியும். அழுதுருக்க அதும் அவனுக்காக..” என்றவனின் கை இந்த முறை நிலாவின் தாடையை அழுத்திப் பிடித்தது.

வலியில் நிலா முகம் சுளிக்க.. அவன் கண்கள் அழைப்புறியது. அவளிடம் எதையோ தேடி கிடைக்காமல் சோர்ந்தவன் சட்டென்று அவளது இதழைக் கவ்வி விட்டான்.

“ஹா... ஹும் ஹ்ம்”  என நந்தனை தள்ள முயற்சித்து தோற்றவள். அவன் செயலுக்கு தடுக்க முடியாமல் சோர்ந்து அவன் மீதே விழுந்துவிட்டாள்.

அதில் வெற்றி புன்னகை பூத்தது நந்தனுக்கு.

மூச்சுக் காற்றுக்காக அவளை விட்டு விலகியவன், அவள் முகத்தில் முத்து முத்தாக பூத்திருந்த வியர்வைப் பார்த்ததும்..

“இந்த நாள் நந்தனோட முத்தத்தில ஆரம்பிச்சிருக்கு, வாழ்த்துக்கள் தங்கம்.” என்று அவளது வியர்வையை சுண்டிவிட்டான்.

“நீங்க ஏன் இப்படிலாம் பண்றீங்க?”

“எப்படி பண்றேன்?”

“நீங்க தானே சொன்னிங்க”

“என்ன சொன்னேன்?”

“இந்த கல்யாணம் வெறும் பிளானுக்காக தான்னு, அப்புறம் எதுக்கு என்னய நெருங்கி வரீங்க.? பிளான் முடிஞ்சதும் என்னைய வேண்டாம்னு சொல்லிட்டா..”

“வேண்டாம்ன்னு சொல்லிட்டா” என்றவனின் குரலில் அப்படி ஒரு அழுத்தம்.

“அது..”

“என்ன அது? வேண்டாம்னு சொல்லிட்டா வேற கல்யாணம் பண்ணிப்பியா?” அவள் சொல்ல வந்ததை இவன் சொல்லி முடித்து விட்டான்.

“இல்லை... நீங்க..” என என்ன சொல்வது என்றே தெரியாமல் விழித்தாள்.

கழுத்தை வருடி இதழ் பதித்தவன், இப்போது அதே கழுத்தை அழுத்திப் பிடித்து, “நான் வேணும்னு சொன்னாலும் வேண்டாம்னு சொன்னாலும் உனக்கு நான் மட்டும் தான் புருஷன். நான் வேணாம்னு சொல்லிட்டேன்னு உன்னோட கண்ணு வேற எவன் பக்கமாவது திரும்புச்சி கண்ணை நோண்டி காக்காய்க்கு போட்டுருவேன் ஜாக்கிரதை.”

“ஹ... ஹ.. வலிக்குது..” என அவன் கையை விலக்க முயற்சி செய்ய.. போலீஸ்காரனின் கை அவளது உள்ளங் கையை அழுத்தமாக பிடித்திருந்தது.

கையை எடுத்தவன், “உன்னைய விரும்பி கல்யாணம் பண்ணிக்கல தான், அதுக்காக என்னோட பொண்டாட்டியை விலக்கி வைக்க மாட்டேன். பொண்டாட்டியா வந்துட்டா எல்லாமே இருக்க தான் செய்யும்.” என்றவன் எழுந்து நின்று, “நாளைக்கு ஷாலுக்கு டிரஸ் எடுக்கப் போறாங்க நம்மளும் கூடப் போய்ட்டு வந்துருவோம்.” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் இருக்க, “நான் கேட்டா பதில் வரணும்.”

“ம்ம்” என்றவளுக்கு இவனை நினைத்து எதிர்காலம் கண் முன்பு பயமுறுத்தியது.

நடைப்பயிற்சி போக வந்தவன் தான் நிலா தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவள் அருகில் வந்து அமர்ந்திருந்தான்.

இப்போது மீண்டும் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட, அவனிடம் தப்பித்தால் போதும் என அறைக்கு ஓடிவிட்டாள்.

ஒரு மனம் நந்தன் வேண்டும் என்றது இன்னொரு மனமோ உறுதி இல்லாத வாழ்க்கையை எந்த நம்பிக்கையில் அவனுடன் தொடங்க முடியும் என கவலையை உருவாக்க அவன் வேண்டாம் என்றது. கண்டதையும் யோசித்துக் கொண்டு படுத்திருந்தவள் படுத்து உறங்கிவிட்டாள்.

நந்தன் போனதும் நிலாவின் வீட்டின் முன் ஒரு ஏட்டு வந்து காவலுக்கு நின்றார்.

அவர் காவல் காக்கிறார் என நந்தனுக்கும் அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாதவாறு நந்தன் பார்த்துக் கொண்டான்.

காலையில் சாப்பிடும் போது யுகி வளவனின் வீட்டினுள்ளே வந்தவன், “கிளம்பளாமாடா எனக்கு நேரமாகிடுச்சு.”

“உக்காரு சாப்பிட்டு போலாம் அம்மா அவனுக்கும் தட்டை வைங்க.”

“எனக்கு வேண்டா நான் வரும் போது தான் சாப்புட்டு வந்தேன்.”

“அம்மா பொங்கல் நல்லா செய்வாங்கடா சாப்புடு வைம்மா.” என்றவன் அவன் ஒரு பக்கம் அமர்ந்து சாப்பிட்டான்

யுகியின் சத்தம் கேட்டதும் ஓடிவந்த நிலா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“டேய் உன் தங்கச்சி வந்துட்டாளா?”

“ம்ம் “

“பேசுனியா?”

“ஹும்ஹும்”

“இவன் என்ன ஹும் ஹும்ஹும் னு பாட்டு பாடிட்டு இருக்கான்.” என பொங்கலை எடுத்து வாயில் வைத்தான்.

அவன் கண்ணும் நிலாவைப் பார்க்க தான் தவித்துக் கொண்டிருந்தது. அவனின் முதுகுபுறத்தில் அல்லவா அவள் நின்றாள்.

“யுகி! என்கிட்ட பேசுவியா? மாட்டியா?” என நிலா கத்த, அவள் குரலை உள்வாங்கிக் கொண்டே, “எனக்கு போதும் அத்தை.” என எழுந்து கைக் கழுவச் சென்று விட்டான்.

யாரும் பேசாமல் அனாதை போல் நின்றாள் கண்கள் நீரை சுரந்து வெளியே தள்ள மனம் கனமாகி வேதனைப் படுத்தியது.
'அவன் முடியை பிடிச்சி ஆட்டி ஏண்டா பேசலைன்னு நாலு அப்பு வை எல்லாம் சரியாகிடும்.' என மனம் சொன்னாலும் அதை செய்ய விரும்பாமல் அப்படியே நிற்க.

“வளவா அவ நேத்துல இருந்தே சாப்பிடலடா.”

“யார் சாப்புட்டா எனக்கு என்ன? சாப்பிட்டிலைன்னா எனக்கு என்ன? இனி யாரைப் பத்தியும் கவலைப்படற மாதிரி இல்லை, எப்படியோ கெட்டு சீரழிட்டும்." என்று சொல்ல ராஜி திகைத்து விட்டார்.

மகனின் வாயில் இருந்து என்ன வார்த்தை இது. சொந்த தங்கையை கெட்டு சீரழியட்டும் என்று சொல்ல முடியுமா?

“என்ன வார்த்தை சொல்ற வளவா?” என ராஜி கேட்கவும் நிலா அழுதுக் கொண்டே அறைக்குள் ஓடவும் சரியாக இருந்தது.

ராஜி கேட்ட பின்பு தான் தான் சொன்னதையே உணர்ந்தான்.

“அம்மா அது எதோ கோவத்துல..” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

“இங்கப் பாரு தம்பி அவ பண்ணது தப்பு தான், அதுக்காக அவ நாசமா போகட்டும் உன் வாயால சொல்லாத ராசா.. இந்த வூட்டோட மகராசன் நீ உன்ற வாயால இப்படி வார்த்த வந்தா அது நடந்தாலும் நடந்துடும்டா.“ என்று கண்ணீர் வடித்தார்.

“அம்மா நான்தான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன்ல விடு இனி இப்படி பேசமாட்டேன். அதுக்காக அவளை மன்னிச்சிட்டேன்னு நினைக்காத.. இனி அவ விசியத்தை என்கிட்ட சொல்லாத.”

“ஒரு அண்ணன் பேசற பேச்சாடா இது.?”

“வேற எப்படி பேசணும்?”

“நந்தன் தம்பிக் கூட கல்யாணம்னு முடிவு ஆகிடுச்சு, உங்க பத்திரிக்கையில்லையே அவங்க பேரையும் போட்டு அடிக்க சொல்லிடுங்க. ஒரே வேளையா போய்டும், அண்ணனா செய்ய வேண்டிய கடமையை மறக்காம செய் தம்பி.”

“கடமை மட்டும் தான் அதுவும் கல்யாணம் பண்ணி அனுப்பற வரைக்கும் தான், அதுக்கு மேல நீ தான் பார்த்துக்கணும்.” என்றவன் “எல்லோரையும் கூப்பிடு சேர்த்து வெச்சி பேசிடுவோம்.”

“நீ அவங்க வீட்டுக்குப் போய் கேளு.”

“அங்கலாம் என்னால போக முடியாது.”

“இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு போய் தானே ஆகணும், எதுக்கு இந்த வெட்டி வீராப்பு.” என முனவிக் கொண்டே சென்று விட்டார்.



Leave a comment


Comments


Related Post