இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -60 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 21-06-2024

Total Views: 8253

நேத்து பிரச்சனை நடந்தப் பின் நிலாவிடம் யாரும் பேசாததால் அவள் சாப்பிடவே இல்லை.

இன்று சாப்பிட செல்லலாம் என்று வெளியே நின்றவளுக்கு வளவனின் வார்த்தைகள் நெஞ்சில் குத்தீட்டியாக பாய சாப்பிடும் எண்ணமே இல்லாமல் உள்ளே சென்று முடங்கி விட்டாள்.

வளவன் நந்தன் வீட்டிற்கு செல்ல, நந்தனோ வளவனின் வீட்டிற்கு செல்ல கையில் தட்டை எடுத்துக் கொண்டு எதிரில் வந்தான்.

இரு சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்ததுப் போல் ஒருவரை ஒருவர் விரோதியை பார்த்துக் கொள்வது போல் பார்த்தனர்.

“நீயலாம் எனக்கு ஒரு ஆளா..?” என்ற பார்வையுடன் நந்தன் வளவனை கடக்க,

“இவனுக்கு இன்னும் திமிரு கூடிப் போச்சுடா.”

“அதுலாம் உன் தங்கச்சி கொடுக்கற இடம் அப்படி தான் கூடிப் போகும் அவ எதுக்கு இடம் கொடுக்கறா?”

“ஓ எப்போமே என் பூனை பூனைன்னு சொல்லுவ இப்போ என் தங்கச்சி ஆயிட்டாளா..? என்னடா தட்டுல எடுத்துட்டு எங்க வீட்டுக்குப் போறான்?”

“ஹா உன் அருமை தங்கச்சி சாப்பிடாம கிடப்பான்னு அக்கறையில தூக்கிட்டுப் போறான்.” இதை சொல்லும் போதே யுகியின் குரல் தடுமாறியது.
இதெல்லாம் அவன் செய்தது. பூனை சாப்பிடாமல் இருந்தால் இவன் வயிறு நோகுமே இன்று அதையே நந்தன் செய்யும் போது.. நிலா தன்னை எளிதாக விட்டுக் கொடுத்து விட்டாள் என்ற கோவம் அவள்மேல் இன்னும் அதிகமானது.

நந்தன் நிலாவின் வீட்டினுள் புகுந்தவன். ராஜி புலம்பியபடியே வீட்டை பெருக்கிக் கொண்டிருப்பதை பார்த்து நின்று விட்டான்.

நந்தன் இப்படி வந்து நிற்பான் என கனவா கண்டார்.

“தம்பி.”

“அவளைப் பார்க்கணும்”

“ரூமுல தான் இருக்கா’

“ம்ம்” என்றவன் நிலாவின் அறைக் கதவைத் தட்ட அதுவோ திறந்து தான் இருந்தது.

சட்டென்று உள்ளே பாயிந்து கதவை அடைத்துக் கொண்டான்.

இப்படி கல்யாணத்திற்கு முன்பு வருவதும், ஒரே அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்வது சரியில்லை பார்ப்பவர்கள் கண் காது மூக்கு வைத்து ஊர் உலகத்தில் பத்தாக செய்தி பரப்பி விடுவார்கள். ‘கல்யாணம் முன்னாடியே எல்லாம் முடிஞ்சி அவ மாசமா இருப்பா போல அதான் அவசர அவசரமா கல்யாணம் பன்றாங்க’  என்பது வரைக்கும் போய்விடும். இதை யார் அவனிடம் சென்று கூறுவது.

அப்படியே சொன்னாலும், “எவன் பேசுனா எனக்கு என்ன?”  என்று விடுவான். ராஜிக்கு தான் தலை இடியாக இருந்தது.

நிலா தரையில் படுத்து அழுதுக் கொண்டிருக்க,

“இவ ஒருத்தி டிசைன் டிசைனா அழுவா.. அழுறதுல போட்டி வெச்சா இவ ஜெயிச்சி பி எச்டி வாங்குனாலும் சொல்றதுக்கு இல்ல, ஏய் எந்திரிடி..” என அதட்ட.

அவன் குரலில் அம்பாக பாயிந்து எழுந்து விட்டாள்.

“நீங்க..”

“என்ன நீங்க?”

“இல்லை இங்க”

“என்ன இங்க.?”

“இங்க எப்படி வந்தீங்க.?”

“கால்ல தானு மொக்க காமெடி பண்ணட்டுமா ச்சீ போய் முதல்ல மூஞ்சை கழுவிட்டு வா.”

அவன் கையில் இருந்த தட்டைப் பார்த்துக் கொண்டே எழுந்து சென்று நந்தன் சொன்னதை செய்து வந்தாள்.

“இந்தா சாப்புடு”

“எனக்கு வேணா..”

“உனக்கு வேணுமா வேண்டாம்னு கேட்டனா?”

“இல்லை” என தலையை ஆட்டினாள் பதில் சொல்லவில்லை என வாயை பிடித்து கடித்து விடுவானே.

அவள் தலை ஆட்டும் போதே அவள் அருகில் அமர்ந்து இட்லியில் ஒரு துண்டை பியித்து அவள் வாயில் திணித்து விட்டான்.

நந்தன் ஊட்டி விடுகிறானா? அவன் நிலையில் இருந்து இறங்கி வந்து தனக்கு ஊட்டி விடுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்க, அதே சமயம் யுகியும் தன்னை இப்படி தானே கைக்குள் பொத்தி பொத்தி வைத்திருந்தான் என மனம் கலங்கவும் செய்தது.

“இன்னும் என்னடி?”

“யுகி பேச மாட்டிக்கிறான்.”

“உன் அண்ணன் கூட தான் பேசல.”

“அண்ணா கோவத்துல இருக்கான் ரெண்டு நாள் போனா பேசிடுவான்.”

“அது மாதிரி தான் அவனும்” என கடைசி வாய் வரைக்கும் அள்ளிக் கொடுத்து வாயை துடைத்து விட்டவன்.

“ஒழுங்கா சாப்புட்டு உடம்பைப் பார்த்துக்கோ அப்போ தான்..” என்று அவள் காதில் எதையோ சொல்ல சோகத்தையும் மீறி வெட்கத்தில் அவள் கன்னக் கதுப்புகளில் சிவப்பேறியது.

அவளின் வெட்கத்தை உருத்துப் பார்த்தவன், “போய் குளிடி” என அங்கிருந்து சென்று விட்டான்.

அன்று மாலை மாப்பிள்ளை வீடாக மார்த்தி, மணிமேகலை, நந்தன், ஷாலினி நால்வரும் சேர்ந்து நிலாவின் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்கு வருவதை நந்தன் நிலாவிற்கு அழைத்து சொல்லி விட்டான்.

“ஹேய் வியா”

“ம்ம்”

“இன்னைக்கு ஈவினிங் நமக்கு பத்திரிக்கை அடிக்கிறதைப் பத்தி பேச உங்க வீட்டுக்கு வரோம்.”

'ஆமா இது ஒன்னு தான் குறைச்சல்.' என நினைத்துகொண்டவள்,

“எல்லோருமா?” என்றாள் ஆவலாக. கண்டிப்பாக யுகி வந்தால் அவனிடம் பேசி சமாதானம் செய்து விடலாமே என்ற ஆவலில்.

“நீ நினைக்கற ஆளு வரல, தாலிக் கட்டப் போறவனைப் பத்தி யோசிடி.” என அழுத்தமாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

மாலை அனைவரும் வந்து நிற்க, 

“வாங்க அண்ணா, வாங்க தம்பி வாம்மா” என அனைவரையும் அழைத்து அமர வைத்தவர் நிலாவிடம் குடிக்க காபியையும் பலகாரத்தையும் கொடுத்து அனுப்பினார்.

“எங்க ராஜி வளவன் இல்லையா?”

“மேல ரூமில தான் இருக்காண்ணா இதோ கூப்பிடறேன்.” என்றவர் பாதி மாடிப் படி ஏறி அங்கிருந்து கத்தினார்.

“வளவா வளவா...”

“என்னமா..?”

“வாடா எல்லோரும் வந்துருக்காங்க.”

“இதுவேறயா வரேன் போ” என்றவன் கழட்டி வைத்த சட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு கீழே வந்தான்.

காபி கொடுத்துக் கொண்டிருந்த நிலாவிற்கு யுகி வரவில்லையே என கவலையாக இருக்க, முகம் வாடிப் போன பயிர் போல் ஆகிவிட்டது.

அதை கவனித்த நந்தனுக்கு முகம் ஏனோ இரும்பாக இறுகிப் போனது.

அறையில் இருந்த வந்த வளவன் பொதுவாக வாங்க என ஒற்றை அழைப்பு விடுத்துவிட்டு, ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க.

“அப்புறம் சொல்லுங்க மாமா என்ன விஷயம்?”

“என்ன தெரியாத மாதிரி கேக்கற? நந்துக்கும் நிலாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருந்தோம்ல.”

“பண்ணிருந்தோம்ல, நீங்க பண்ணிருந்திங்க.” என வளவன் நந்தனை வெறுப்பாகப் பார்க்க.

அவனோ இவன் பேசுன எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

“அதான் பண்ணிட்டோம்ல விடு.. இப்போ பத்திரிக்கை அடிக்கணும் இவங்களுக்கும் உங்களுக்கும் ஒரே மண்டபத்துல கல்யாணம் வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.”

“அதான் எல்லாமே நீங்களே முடிவு பண்ணிட்டிங்கள அப்புறம் எதுக்கு என்கிட்ட சொல்றிங்க?”

“என்ன வளவா இது பட்டுபடாமலும் பேசிட்டு இருக்க.. நீ அவளோட அண்ணன்.”

“ஓ அது இப்போ தான் உங்களுக்கு தெரியுதா..? கல்யாணத்துக்கு என் சம்மதம் வாங்கணும்னு தோணலையா..?”

இப்போதும் கூட நந்தன் வளவன் பக்கம் திரும்பாமல் இருக்க, மீண்டும் சண்டை வந்துவிடுமோ என பயமாக இருந்தது நிலாவிற்கு.

அவளது கண் யுகி வருவானா? மாட்டானா? என வாசலையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இவர்களின் பேச்சை காதுக் கொடுத்து. கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அப்பா... யார் சம்மதமும் எனக்கு தேவையில்லை நீங்க கல்யாணத்துக்கு பண்றதை பண்ணுனா முறைப்படி நடக்கும், இல்லனா நாளைக்கே கூட்டிட்டுப் போய் ரெஜிஸ்டர் பண்ணிடுவேன்.” என எழுந்து நின்றவன், “ஏய் உன் கிட்ட பேசணும் வெளியே வா” என்றான்.

அந்த 'ஏய்' நிலா தான் என அங்கிருப்பவர்களுக்கு புரிந்தது. வளவன் அவன் பேச்சில் பல்லைக் கடித்தான்.

நந்தன் கூப்பிட்டு நிலா போகாமல் இருப்பாளா? அவன் பின்னாலையே போனாள்.

நந்தன் வீட்டிற்கு பின்புறம் யாரும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றவன், நிலா வந்ததும் அவளை இழுத்து தாடையை இறுகப் பிடித்தான்.

“நான் நல்லவனா இருக்கணும்னு நினைச்சாலும் விட மாட்டீங்க போல. அவன் வரலைன்னு வாசல வாசலப் பார்க்கற.. அந்த அளவுக்கு அவன் முக்கியமானவனா போய்ட்டானா..? இனி உன் பார்வை அவன் பக்கம் திரும்புச்சி உன்னைய ஒன்னும் பண்ண மாட்டேன், அவன ஒன்னுமில்லாம ஆக்கிடுவேன் அதுக்கு சாம்பில் பார்க்கறியா..?”

“வேண்டாம் “ என அவள் தலையை அசைக்க.

“நந்தன் சொன்னா செய்வான் தெரியும் தானே”

“ம்ம்”

“ஒழுங்கா இரு, அந்த யுகி பக்கம் உன் பார்வை போச்சி அப்புறம் சொன்னதை செஞ்சிடுவேன். எனக்கும் தம்பியால ஒரு புரோஜனமும் இல்ல.” என்றவன் அவளை எலும்பு நொறுங்கும் அளவிற்கு அணைத்து விடுவித்தான்.

நிலாவின் பார்வைக் கூட அடுத்தவர்களை நோக்கக் கூடாது. அவனை மட்டுமே பார்க்க வேண்டும் அவனைப் பற்றியே நினைக்க வேண்டும், நிலாவின் சிந்தனை முழுவதும் நந்தனாக மட்டும் தான் இருக்க வேண்டும். அதற்கு அவன் என்ன செய்தான் என்று தான் தெரியவில்லை.

அதற்குள் நந்தனிற்கு அழைப்பு வந்துவிட, நாக்கை மடித்து ஒரு விரலை நீட்டி எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் போனதும் தான் இழுத்த மூச்சை விட்டாள் நிலா.

‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி டிசைன் டிசைனா பிரச்சனை பன்றான். இவனோட வாழ்க்கை எப்படி இருக்குமோ தெரியலையே’ என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறியது.


Leave a comment


Comments


Related Post