இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம்-13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 21-06-2024

Total Views: 3945

இதரம் -13


மல்லியின் திருமணம் நடந்ததா  இல்லையா என்று மாறன் மல்லி இருவரும் நேத்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். 


"முதல் நாள் ராத்திரி சாப்பாட்டை குடுத்துட்டு இவர் கிட்ட பேசினேன் டாக்டரம்மா. எம்மனசுல இருந்ததை சொன்னேன்." என்றதும் மாறன் அன்றைய இரவிற்கு தாவினான். 

"ஒங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் சார்." என்றாள் மல்லி. 


"ம்ம்ம், சொல்லு மல்லி" என்றபடியே மாத்திரை ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது எனக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். 


"ஏதோ ஒன்னு பெருசா எழக்கப் போறேனோன்னு தோனுது சார்!"என்றதும் எண்ணிக்கையை விட்டு விட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் ஒரு விதமான கலக்கத்துடன் . அவள் இயல்பாய் தன் பதற்றத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள். 

ஒரு வேளை தன் மீது ஈர்ப்போ அதைத்தான் இப்படி சொல்கிறாளோ என்று காதல் கொண்ட மனது நப்பாசையை வளர்த்தது. 


ஆனாலும் அவள் வாயால் அதை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துப் பேசினான். 

"அப்படி எல்லாம் நினைக்காதே ஜஸ்ட் நார்மலா இரு" என்றான். 


"நீங்க படிச்சவங்க, ஏதாவது தீர்வு சொல்வீங்கனு தான் கேட்க வந்தேன்." என்று மேசையில் இருந்த மாத்திரை டப்பாவை நீட்டினாள். 


'என்னைப் போட்டு சாகடிக்காதடி' மனதினுள் அவளோடு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான். அவளோ நடத்தையில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தாள். 


"டாக்டர் சார்... என்னவோ உள்ளுக்க கெதக்குன்னுது. இந்தா வராத வராதன்னு சொல்லிச் சொல்லியே இந்த நாளும் வந்திடுச்சு. காலையில கல்யாணம் இப்ப என்னன்னா போகவே வேணாமின்னும் தோணுது ஆனாலும் அக்கா எதிர்பார்த்து நிப்பாளேனு நெஞ்சு அடிச்சுக்குது."



"இது கல்யாண படபடப்பு மல்லி. காலையில் கல்யாணம் ஆனதும் என்னை யார்னு கேட்ப நீ!" என்றான் கிண்டலாக. ஆனாலும் மனம் உள்ளூர சோர்ந்தது அவள் பேசிய விஷயத்தில். 


"போங்க சார் கிண்டல் பண்றீங்க. நானே இனி எப்ப இந்த ஊருக்கு வர முடியுமோனு நெனைச்சுக்கிட்டு கெடக்கேன்."என்றாள் ஏக்கமாய். 


"ஏன் மறுவீடு அது இதுனு வந்து தானே ஆகணும்?" 


கலகலவெனச் சிரித்தவள்," இங்க எனக்கு விருந்தாக்கிப் போட எங்கப்பாம்மாவா இருக்காங்க. இனிமேட்டுக்கு எல்லாம் இங்கின வர முடியாது. வீட்டைக் கூட எங்கல்யாணத்துக்குனு அக்காங்க வித்துட்டாங்க. என் பங்கு பணத்துல தான் கல்யாணமே நடக்குது"என்றாள். 


"அப்போ உங்கக்காவா நடத்தி வைக்கலையா!?" என வியப்புடன் கேட்டான். 


"நடத்தி வைக்கா இப்பத்தான், அவ எல்லாம் எச்சிக் கையால கூட காக்கா ஓட்ட மாட்டா. காசுபணம் செலவு பண்ணி எனக்கு கலியாணம் பண்றாளாக்கும். நெனப்புத்தான் போங்க. இதுவே அவ கொழுந்தன் என்னிய புடிச்சுக் கேட்டதால தான் நடக்குது. இல்லாங்காட்டி எனக்கு நல்லது பண்ண கூட அவளுக்கு மனசு வருமாட்டுக்கு." என்று சலித்தவளை வாஞ்சையுடன் பார்த்தான். 



"இதுவும் உம்மேல உள்ள அக்கறைனு நினைச்சுக்கோ மல்லி. என்னதான் உன் வருங்கால ஹஸ்பண்ட்க்கு உன்னைப் பிடிச்சிருந்தாலும் பணம், நகை, சீர்வரிசைனு எதிர்பார்க்காம உன்னைக் கேட்டு இருக்காங்களே அதுக்கு உன் அக்கா கூட காரணமா இருக்கலாம் இல்லையா?!" என்றான் சமாதானமாக.

"நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் டாக்டர் சார்." என்றாள் நம்பிக்கையுடன். 


"ஏதாவது ஹெல்ப் வேணுன்னா கேளு" என்றதற்கு சரியென்று தலையசைத்தாள். 


"சரிங்க டாக்டர் சார் நான் போய் மிச்ச மீதியை எடுத்து வைக்கிறேன். மூணாவது அக்கா வாரேன்னு அப்பவே ஃபோன் போட்டா" என்று பாத்திரத்தை எடுத்துக் கொண்டவள் பெருமூச்சுடன்," தெனப்படி பழக்கம் உங்களுக்கு சோறு குடுக்கணும்'னு... இப்ப இதையும் மாத்திக்கணும். முடிஞ்சா கல்யாணத்துக்கு வாங்க சார்." என்ற கோரிக்கையையும் வைத்துவிட்டு கிளம்பினாள். 


திருமாறன் அவள் செல்லும்வரையில் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். 


'பாவம் நல்ல பெண்.இனியாவது நன்றாக வாழ வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான். 


மனசாட்சி இடித்துரைத்தது அவள் பால் கொண்ட காதலை. 



"காதலா?!, விடை இல்லை அவனிடத்தில். நிரம்ப பிடித்தது அவளை. அவள் காட்டும் அக்கறையை பிடித்தது, வேளா வேளைக்கு மறவாமல் உணவளிக்கும் அன்னபூரணியாய் அவளைப் பிடித்தது. தன்னலம் பேணாத பேதையவளை ஒரு சகமனிதியாய்ப் பிடித்தது' என பிடித்த அத்தனைக்கும் தக்கக் காரணம் சொல்லிக் கொண்டான். இல்லையில்லை மனதை அடக்கி அப்படிச் சொல்ல வைத்தான். காரணம் அவனது செல்வ செழிப்பு, வீட்டு மனிதர்கள். பழகுவதில் கூட தராதரம் பார்க்கும் பெற்றவர்கள், செல்வத்தின் உச்சாணி கொம்பில் இருக்கும் தனவான்களின் மகனையும், மகள்களையும் கைப்பிடித்த உடன்பிறந்தோர்கள், அந்த ஆலமரத்தில் தான் மட்டும் தனித்து விழுந்த விழுதைப் போல இருப்பதை எண்ணி கவலை கொண்டான். 



'இனி யோசித்து என்ன பயன் அவளுக்கே திருமணம் ஆகப் போகிறது. இனிமேல் நம் வாழ்வைப் பார்ப்போம், தன் பெற்றோர் கொடுத்த கெடு முடிந்து ஊருக்குத் திரும்ப தயார் ஆனான். அதற்கு முன் 'அவளின் திருமணத்திற்கு சென்று வர வேண்டும்' என்று எண்ணியபடி உறங்கிப் போனான். 


மறுநாள் காலையில் எழுந்தவனுக்கு அருகில் இருந்த பொங்கலின் மணம் நாசியில் நுழைந்தது. மெலிதாய் ஒரு புன்சிரிப்பு அவனிடத்தில். 


'டாக்டர் சார் சாப்பாடு வச்சுட்டேன்' மல்லியின் குரல் எங்கோ அசரீரி போல ஒலித்தது. 


'தினசரி பழக்கமா போயிட்டு போலவே!' என்று நினைத்தவன் வெளியே வந்தான். 


காலையில் ஐந்து மணிக்கு மல்லி கிளம்பியதாக தகவல் கிடைத்தது பக்கத்து வீட்டு வெண்ணிலா மகனிடம் இருந்து. 


அதற்குள் எழுந்து முடிந்ததை சமைத்து வைத்து விட்டு கிளம்பியிருக்கிறாள் என்பதே நெஞ்சை அடைத்தது அவனுக்கு. 

"ஏன்கா இங்கெல்லாம் காலையில் தான் பொண்ணழைப்பு பண்ணுவாங்களா?" வெண்ணிலாக்காவிடம் தன் சந்தேகத்தை விசாரிக்க


அவரோ," அதெல்லாம் இல்ல  டாக்டர் தம்பி, மொதநாத்தே போயிருவாக. மல்லி போகப் போறது பக்கத்து ஊரு தானே, அதான் காலையில வந்து அழைச்சுக்கிறோம்'னு சொல்லிட்டா கனகா. சொன்னபடி அஞ்சரை மணிக்கெல்லாம் வந்து கூட்டிட்டுப் போனாக. உங்களை எழுப்ப நெனைச்சேன். மல்லி தான் வேணாம்'னு சொல்லிட்டா. இப்ப கலியாணத்துக்கு தான் கெளம்புறோம் எல்லாரும் நீங்க வாரீங்களா தம்பி?" என்று கேட்க 


"நான் முகூர்த்த நேரத்துக்கு வந்திடுவேன் க்கா" என்றான் அவன். 


"சரிங்க தம்பி, இங்க எல்லாரும் வேனு பேசி இருக்கோம். நீங்களும் ஊருக்கு கெளம்புறீகனு மணியக்காரர் சொன்னாரு?" என்று அடுத்த விஷயத்திற்கு அவர் தாவ


"ஆமாம்கா. இங்க இனி வேற டாக்டர் வருவாங்க. கவர்மென்ட் மூலமா வரவச்சிருக்கோம். இனி நோ கவலை உங்களுக்கு" என்றான் சின்ன சிரிப்புடன். 


"வாரவகளும் ஒங்கள மாதிரியே சிரிப்பு மாறாம வேலை பார்த்தா போதும் தம்பி "என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.


*******


சர்வ அலங்காரத்தில் அமர்ந்திருந்தாள் தேவமல்லி. 


மணப்பெண்ணுக்கே உரிய களையும், பூரிப்பும் அவளை அழகாக காட்டியது. அதே நேரத்தில் அவளது அக்காவின் முகத்தில் சிடுசிடுப்பும், அதை மறைக்க அவள் எடுத்துக் கொண்ட சிரத்தையும் நன்றாகவே தெரிந்தது. 


"ஏன்க்கா ஒரு மாதிரி இருக்க?, அத்தை எதுவும் சொல்லிடுச்சா...?"என வெள்ளந்தியாய் கேட்டவளை முறைக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை அவளால். 


"அதெல்லாம் ஒண்ணுமில்ல பேசாமத்தான் இரேன்" என அதட்டியவள்," கல்யாணம் முடியற வரைக்கும் அமைதியா இருக்கணும் மல்லி."என்றாள். 


"நான் என்னத்தக்கா பேசப் போறேன்?" என்றவள்," ஒரே ஒரு சந்தேகம் கேட்கணும் அதுக்கு மட்டும் பதில் சொல்லேன்" என கெஞ்சுதலாக கேட்க


"சீக்கிரம் கேளு, எனக்கு வேலை கெடக்கு" என்று எரிச்சலுடன் பேசினாள் அவள்.


"என்னவும் நெனைக்காத, அது வந்து நான் தப்பா எல்லாம் நெனைக்கலை. இருந்தாலும் மனசுக்குள்ள உறுத்துதுக்கா அதான் கேட்கிறேன்." 

"ப்ப்ச் என்னன்னு சொல்லு மல்லி. தொணதொணத்துட்டு இருக்க" என எரிந்து விழ


"இல்லக்கா உன் கொழுந்தனுக்கு என்னைய நெசமாலுமே புடிச்சுருக்கா. புடிச்சுத் தான் கட்டிக்க சம்மதம் சொன்னாவளா?" என்று ஒரு வழியாக மனதில் உறுத்தியதை கேட்டுவிட ,அவளின் அக்கா முகம் மாறிப் போனது. 


"மேடைக்குப் போற நேரத்துக்கு என்னத்த பேசிட்டு இருக்கவ?, ஏன்டி வம்பாடு பட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சா எகத்தாளம் பேசுறவ" என்றபடி ஆங்காரியாய் முறைக்க 


மல்லியோ பதறிப் போய்," அப்படி எல்லாம் இல்லக்கா ஏதோ மனசுல பட்டுச்சு கேட்டுட்டேன். நீங்க எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்கா" என்றாள். 


"அந்த நெனப்போட போய் மேடையில் உட்காரு, என்ன நடந்தாலும் வாயைத் தெறக்கக் கூடாது நீயி" என்று விழிகளை உருட்டி முறைத்து சொல்ல, மல்லி அமைதியாகிப் போனாள். 



என்னவோ குரங்கை கயிற்றில் கட்டி அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்டுவிப்பது போலத்தான் அவளுக்கு தெரிந்தது அக்காள்களின் நடவடிக்கைகள். 

"என்னடி ரெடியாயிட்டிங்களா ?, வெளியே மணியக்காரர் வந்திருக்காரு. கூடவே அந்த டாக்டரும்.." என்றதும் மல்லியின் முகம் வெகுவாய் மலர்ந்து விட்டது. 


"டாக்டருமா...!?,ஊருக்குப் போறேன்னு சொன்னாரு" என்று மனதில் தோன்றிய மகிழ்ச்சியுடன் கேட்க


"என்ன என்ன சிப்பானினு கேட்கிறேன். பல்லம்புட்டும் தெரியுது இப்பத் தான். பொண்ணா லட்சணமா ஒக்காரு" என்று எச்சரித்த மூத்த அக்கா கனகா," மணியக்காரர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு பேசாம வந்து உட்காருற அந்த டாக்டர் கிட்ட பல்லைக் காட்டி பேசாம வந்துடணும். புரியுதா?" என சொல்ல

"சரிக்கா!" என்று தலையாட்டினாள். 



"பணம் ஏதும் வச்சுக் குடுத்தா எங்கிட்ட குடு. நாளைய பின்ன விஷேஷமின்னா அவருக்கு திருப்பி செய்யணும்" என்று சொல்லவும் அதற்கும் சரியென்றே தலையாட்டி வைத்தாள். 


"இப்ப போ" என்று அனுப்ப முயல அதற்குள் திருமாறனும், மணியக்காரரும் வந்துவிட்டனர். 


திருமாறனைக் கண்டதும் முகமும் அகமும் மலர்ந்துவிட்டது அவளுக்கு.



"வரமாட்டீக, இந்நேரம் ஊருக்குப் போயிருப்பீங்கனு நெனைச்சேன் சார்." என்றாள். 


"எம்புட்டு ஒத்தாசை பண்ணி இருக்க ஒங்கலியாணத்துக்கு வராமலா மல்லிபுள்ள.?"என்ற மணியக்காரர் 


"ஏம்மா மலரு, இந்த சங்கிலியை ஒந்தங்கச்சி கழுத்துல போடுத்தா!" என்று நீட்ட ,'அது ஏழு சவரனாவது இருக்கும்' என்று கணக்கிட்டாள் மல்லியின் அக்கா. 


"ஆத்தி மணியக்காரரே இம்புட்டு பெரிய சீரை எதிர்பார்க்கல போங்க!" என்றவள் செயினை பார்த்தபடி இருந்தாள். 


"அடப் போட்டு விடும்மா... நம்ம டாக்டருக்கு சோறாக்கி குடுத்துச்சுல்ல, அதுக்கு அவங்க அம்மா அனுப்பி விட்ருக்காங்க ஒன்பது சவரன்." என்றதும் அக்காமார்கள் வாயைப் பிளந்தனர். அதே சமயம் ,'இத்தனை சீர் செய்யும் அளவிற்கு இவள் என்ன செய்தாள்?' என்ற சந்தேகமும் எழுவதை தடுக்கமுடியவில்லை. அதை திருமாறன் உணர்ந்தானோ இல்லையோ மணியக்காரர் உணர்ந்தார். 


"என்ன அசந்து போயிட்டீங்களாக்கும். டாக்டர் சார் வீட்டு வசதிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. டவுனுல பெரிய கோடீஸ்வரங்க. அவங்களுக்கு சொந்தமா நாலு காலேசு, கடைகண்ணி எல்லாம் இருக்கு" என்றார் விளக்கமாக. 


'இதெல்லாம் இப்போது தேவையா?' என்று தான் நினைத்தான் திருமாறன். 


"ம்ம்ம், நல்ல வவிசான ஆளுக தான். சந்தோஷம் டாக்டர் சார். பொறந்த வீட்டு சீரா நெனைச்சிடுகிடுதோம்." என்ற மலர் மல்லியின் கழுத்தில் செயினை போட்டு விட்டாள். 


"அம்மா அதுல மாங்கல்யத்தை சேர்த்துப் போட்டுக்க சொன்னாங்க மல்லி. இது என் சார்பா !"என்று ஒரு ஜோடி வளையலையும் கொடுத்தான். 


"நன்றிங்க டாக்டர் சார்!" என்றவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 


"ஏ புள்ள, நல்ல நா அதுவுமா அழுவக் கூடாது. இது அந்த சுப்பையா இருக்கானே அவேன் தந்துவிட்டான். அவேன் மச்சினிச்சிக்கும் இன்னைக்கு தான் கல்யாணமாம். அவன் பொண்டாட்டி எங்கிட்ட தந்து மல்லிக்கு போட்டு விட்ருங்க சித்தப்புனு தந்துச்சு." என மோதிரத்தையும் கொடுத்தவர்,"இது எஞ்சம்சாரம் தந்தது" என தோடுஜிமிக்கியை கொடுக்க, அக்காக்களுக்கு எல்லாம் உள்ளூர அத்தனை புகைச்சல். 


அனைவர் மனதிலுமே,'இம்புட்டு செய்யிற அளவுக்கு இவ என்னத்த செஞ்சாளாம். நாம கலியாணம் பண்ணி வரும்போது நூத்தியொரு ரூவா மொய் வச்சானுவ' என மனதில் பொங்கினர். 


மல்லியின் முகம் சுளிக்காத அன்புக்கு ஈடாய் வந்தது அத்தனையும் என அவர்கள் அறிய வாய்ப்பு இல்லை. 


"எல்லாத்தையும் போட்டுக் காட்டுத்தா" என்றதும்," இந்தா பெரியப்பா!" என்றவள் பரபரப்பாய் எடுத்து அணிந்து கொண்டாள். 


"நல்ல மகாலெட்சுமியாட்டம் இருக்க தாயி. நல்லா இரு நல்லா இரு" என்று மனமார வாழ்த்தினார் அவர். 


திருமாறனுக்கே அவளிடம் இருந்து கண்ணை அகற்றவியலவில்லை. 


"சரி மல்லி நாங்க கிளம்புறோம். வண்டி வந்திடும்" என்றான் திருமாறன். 

"சார், கல்யாணம் முடிஞ்சு போகலாமே?!" என்று கேட்க


"இல்லம்மா. இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். இன்னொரு நாள் நான் பேசுறேன், என் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கிறேன்." என கிளம்பி விட்டான். 


"சரித்தா அனுப்பி வச்சுட்டு வாரேன் என்ன?" மணியக்காரர் அவனோடு கிளம்பினார். 


"நீங்க இருங்க நான் போய்க்கிறேன்." என்று அவரை இருத்தி விட்டு கிளம்பினான். 


காரில் சென்று அமர்ந்தவனுக்கு செல்லவே மனதில்லை. 



சற்று நேரம் கழித்து ஒலிப்பெருக்கியில் மேளச்சத்தம் கேட்டது. அதற்கு தகுந்தாற்போல பாடலும் ஒலித்திட திருமணம் நடந்தேறிவிட்டது என பெருமூச்செறிந்தபடி அங்கிருந்து கிளம்பினான் திருமாறன். 

..... தொடரும். 









Leave a comment


Comments


Related Post