இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 21-06-2024

Total Views: 4226

அந்த வாரம் கடந்து இருக்க AHKK சாப்ட்வேர் சொல்யூஷன் கம்பெனி திறக்கும் நாளும் வந்து இருந்தது.   அதிகாலையில் எழுந்து குளித்து இளம் ரோஜா வண்ணத்தில் அழகிய சுடிதார் அணிந்து கொண்டு  கண்ணாடியின்  முன் நின்று தன் அழகிய கண்களுக்கு மேலும் அழகு சேர்க்க ஐப்ரோ பென்சில் கொண்டு கண்களுக்கு மை தீட்டினாள் கயல்விழி.

     இருபுருவங்களுக்கு மத்தியில் சிறு கருப்பு நிற பொட்டு வைத்தவள் தன் நீண்ட பின்னியிருந்த கூந்தலை முன் புறம் எடுத்து போட்டு கண்ணாடியில் உடலை திருப்பி திருப்பி பார்த்து எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துக்கொண்டு இருந்தபோது லலிதா குரல் கொடுத்தார்.

    "கயல் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க டைம் ஆச்சு பஸ் வந்திடும் வா சீக்கிரம் சாப்பிடு" என்று அழைக்க

    "இதே வரேன்மா" என்று கூறிவிட்டு கட்டில் மீது இருந்த துப்பட்டாவை எடுத்து இருபக்கமாக போட்டு கொண்டே அறையில் இருந்து வெளியே வந்தாள்.

      மகளின் அழகில் ஒரு கணம் மலைத்துத்தான் போனார் லலிதா.   சிவப்பு நிறமும் இல்லை கருப்பு நிறமும் இல்லை சராசரி நிறத்தில் இருந்தவள் சிறு ஒப்பனையிலே தேவதையாக தெரிந்தாள்.

     தாய் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை கண்ட கயல்விழி

    "அம்மா... அம்மா..." என்று அழைத்த பின்னே நினைவுக்கு வந்தார். அவரின் நினைவில் சில காட்சிகள் வந்து போயின கடவுளே எந்த தடையும் இல்லாமல் நீதான் பார்த்து கொள்ளவேண்டும் என்று நினைவில் இருந்தவரை மகளின் அழைப்பில் கலைந்து வேகமாக இட்லியை தட்டில் வைத்து மகளிடம் கொடுத்தார்.  

     கயல்விழி வேகமாக உண்டு கொண்டு இருக்கும் போது வெளியே இருந்து வந்த கோதண்டம் மகளின் அருகில் வந்து 

     "கயல்மா வேலைக்கு கிளம்பிட்டியா?...  நான் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாண்ட் வரை கூட்டிட்டு போகவா?..." என்றார்.

     கயல்விழியே காதுகேளாதவள் போல் சாப்பிட்டு முடித்தவள்  

      "அம்மா நான் கிளம்பறேன்" என்று தன் பேக் எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

     "பத்திரம் கயலு"  என்று வழியனுப்பி விட்டு உள்ளே வந்தபோது கோதண்டம் கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். 

     "நீங்க சாப்பிடுறிங்களா?..." என்று கணவரிடம் கேட்டார் லலிதா.

     " ஏன் லலிதா நீயாவது  சொல்லலாம் இல்லையா கயல் கிட்ட என்னிடம் பேசச்சொல்லி அதான் அவள் அத்தான் கூட வந்துட்டான் இல்லையா" என்றார்.  இதுவரை மகளிடம் அப்பாவிடம் பேசு என்று ஒரு வார்த்தை கூட சொல்லாத மனைவியின் மீது ஆதங்கத்துடன் கேட்டார்.

      "தப்பு பண்ணால் வருடங்கள் போயிட்டா நீங்க பண்ண தப்பு இல்லாமல் போய் விடுமா இல்லை அதனால் ஒரு குடும்பமே பத்து வருஷம் பட்ட கஷ்டம் இல்லாமல் போய் விடுமா?..." 

       "ராஜா மாதிரி வாழவேண்டிய பிள்ளை அனாதை மாதிரி வாழ்ந்த பத்து வருஷம் தான் இல்லை என்று போயிடுமா" என்று கேள்விகள் கேட்ட லலிதாவிற்கு பதில் அளிக்காமல் அமைதியாக எழுந்து வெளியே சென்றுவிட்டார் கோதண்டம்.

      லலிதாவிற்கு தன் மகள் கணவரிடம் பேசாமல் இருப்பது வருத்தம் தான் இருந்த போதும் அனாதையாக  அசிங்கப்பட்டு ரோட்டில் நின்றவர்களை கூட்டி வந்து கௌரவமாக வாழவைத்த குடும்பம் இப்படி இருப்பதற்கு தன் கணவனின் எதையும் சிந்திக்காமல் செயல்படும் குணம் தானே காரணம் அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தையை கேட்டுத்தானே தான் அவ்வளவு எடுத்து கூறியும் கார்த்திகேயனை ஊரைவிட்டு போகவைத்தது.  அந்த ஒரு காரணமே அவரையும் கணவனிடம் தேவைக்கு மட்டுமே பேசவைத்து இருந்தது.

    அவர் மனமோ முருகா போதும் உன் விளையாட்டு இனிமேலாவது எல்லா பிரச்சனையும் முடித்து அந்த பிள்ளையை குடும்பத்துடன் சேர்த்து வை என்று வேண்டிக்கொண்டது.

     அந்த முருகனே அவ்வளவு சீக்கிரத்தில் என் விளையாட்டை முடித்து விடுவேனா என்று புன்னகை செய்துகொண்டு அடுத்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தார்.

     வேகமாக பஸ் நிற்கும் இடத்திற்கு வந்த கயல்விழி சுற்றி பார்த்தாள்.  இருபது பேருக்கு மேல் நின்று கொண்டு இருந்தனர் ஆண்கள் பெண்கள் என்று  அதில் அமிர்தவள்ளியை தேடினாள்.  இன்னும் வந்து இருக்கவில்லை.

   அன்று அமிர்தவள்ளியை வீட்டில் விட்டதோடு சரி அதன் பிறகு அவளிடம் பேசுவதில்லை.  அவள் வந்து இரண்டு மூன்று முறை பேசியபோதும் அமைதியாக அங்கிருந்து சென்று விடுவாள்.

     சுற்றி பார்த்தவளின் பார்வை ஓரிடத்தில் நின்றது.  அங்கே கார்த்திகேயன், அன்பு, முரளி நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.  கார்த்திகேயனின் முதுகு மட்டுமே தெரிந்தது திரும்பி நின்று பேசிக்கொண்டு இருந்தான்.  அவனின் எதிர்புறமாக நின்று இருந்த முரளி அன்பு இவள் அவர்களை பார்த்ததும் புன்னகை செய்தனர்.  இவளும் புன்னகை செய்தாள்.

    முரளி பார்மல் உடையில் இருக்க அன்பு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பிளைன் சட்டை அணிந்து இருந்தான்.   கார்த்திகேயன் ஜீன்ஸ் பேண்ட் வெள்ளை சட்டையில் கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தான்.  அவனின் தலைமுடி கழுத்தை தாண்டி கீழே படர்ந்து இருக்க காற்றில் ஆடிய முடிகளை தன் விரல்கள் கொண்டு அடிக்கடி கோதிக்கொண்டு இருந்தான்.

    அவன் முன் சென்று அவனின் அழகை ரசிக்கத்தான் மனம் ஆசைப்பட்டது ஆனால் அவனின் அந்த உதாசினப்பார்வை கண்முன் வர தன்னை கட்டுபடுத்திக்கொண்டு நின்று இருந்தாள்.  இருந்தபோதும் அவன் ஒரு முறையாவது திரும்பி தன்னை பார்ப்பான் என்று ஓரப்பார்வையில் அவனை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.

      அந்த நேரம் தன் பைக்கில் தங்கையை ஏற்றி வந்த சரவணன் வண்டியை அங்கிருந்த கடைக்காரரிடம் சொல்லி ஓரமாக நிறுத்திவிட்டு வந்தவன் கயல்விழியின் அருகில் வந்து  "ஏன் கயல் தனியாக வந்த  எங்க கூட வந்து இருக்கலாம் இல்லையா?..." என்று கேட்டான்.

     "இல்லை மாமா டைம் ஆச்சு நீங்க கிளம்பி இருப்பிங்க என்று நினைத்து விட்டேன் அதான்" என்றாள் தயக்கத்துடன் ஏனெனில் அவர்கள் கிளம்பவில்லை என்று அவளுக்கு தெரியும் இருந்தும் வேண்டுமென்றே தான் அழைக்காமல் வந்தாள் கயல்விழி.

    " நாளையில் இருந்து மூன்று பேரும் ஒன்றாகவே வரலாம் நீ தனியாக நடந்து வரவேண்டாம்" என்று சரவணன் கூற தலையாட்டினாள்.

      அமிர்தவள்ளி வந்ததும் தேடியது கார்த்திகேயனைத்தான் கண்டதும் அவனிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தாள்.

      அந்த நேரத்தில் கம்பெனி பஸ் வந்து விடவே அனைவரும் ஏறிக்கொண்டனர்.   முதல் நாள் என்பதால் அனைவரும் பஸ்சில் வந்து இருந்தன சில இருக்கைகள் மட்டுமே காலியாக இருக்க பெண்கள் மட்டும் அமர்ந்து கொள்ள ஆண்கள் நின்று கொண்டனர்.

   முரளிக்கு கம்பெனி கார் கொடுத்து இருந்தது அதை அவன் இன்னும் பயன்படுத்தவில்லை இன்று எடுத்து கொள்வதாக கூறியிருந்தான் அதனால் நண்பர்கள் உடன் பஸ்சில் வந்தான். 

   அன்பழகனும் முன்தினமே பணியாளர்கள் இடம் அனைத்தும் கூறிவிட்டு வந்தததால் பஸ்சில் நண்பர்கள் உடன் சொல்ல நினைத்து தாமதமாக செல்கிறான்.

    கார்த்திகேயன் ஒரக்கண்ணால் விழியை பார்த்தான் அவளே அவளின் அருகில் அமர்ந்த அமிர்தவள்ளியை முறைத்துவிட்டு இருவருக்கும் இடையே இடைவெளி விட்டு தள்ளி அமர்த்தாள்.

      எட்டு வயதில் சண்டையிட்டால் செய்யும் குழந்தைத்தனங்களை இப்போதும் செய்யுறா ஆள் தான் வளர்ந்து இருக்கா என்றவனின் பார்வை அவளின் உடலில் ரசனையாக படிந்தது.

    அவனின் பார்வை உள்ளுணர்வு சொல்லியதோ என்னவோ சட்டென்று நிமிர்ந்து பார்க்க அவனே தான் நிற்கும் இடத்தில் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து

   "ஏய் நீ பரமேஸ்வரி தானே?..." என்று கேட்டான்.

    அவளும் ஆமாம் அத்... என்றவள் சட்டென்று வாய்மூடி பின்னால் திரும்பிப்பார்க்க அவளைத்தான் முறைத்துக்கொண்டு இருந்தாள் கயல்விழி.

     அத்தான் என்று சொன்ன முகத்தில் இன்னொரு தழும்பு வாங்கவேண்டிருக்கும் என்று கண்ணாலே ஜாடை காட்டினாள் கயல்விழி.

      பரமேஸ்வரியே தன் நெற்றியில் இருந்த தழும்பை தொட்டு பார்த்துவிட்டு தலைகுனிந்து அமர்ந்து கொண்டாள்.

     "விழி அழகிக்கு பொருத்தமாகத்தான் பேர் வச்சு இருக்காங்க கண்ணாளே மிரட்டுறா என்று தனக்குள் சிரித்துக்கொண்டவன் மீண்டும் பரமேஸ்வரியிடம் பேச்சு கொடுத்தான்.

    " ஏன் பரமேஸ்வரி அத்தான் கேள்வி கேட்டா பதில் கூட. சொல்லமாட்டியா?..."  என்றான்.


     "அது... அது... வந்து... என்று பின்னால் திரும்பப்பார்க்க

      " நான் இங்க இருக்கும்போது நீ திரும்பி யாரை பார்க்கிற" என்றான்.

      அவள் முன்புறம் திரும்பிக்கொண்டு இந்த அத்தான் சும்மா இருக்கிற என்னை வம்புக்கு இழுத்து இன்னொரு தழும்பு வாங்கி வச்சுடுவார் போல தெரியாமல் இங்க வந்து உட்கார்ந்துட்டேன் எப்பதான் இந்த பஸ் கம்பெனி போய் சேருமோ என்று மனதில் நினைத்தவள் ஒன்னுமில்லை என்று கூறி தன் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் பேசுவது போல திரும்பிக்கொண்டாள். 

    அவனே விடுவேனா என்று  "நீ யாருக்கும் பயப்பட வேண்டாம் பரமேஸ்வரி நீ தான் என் உறவில் மாமன் பெண்ணு அதனால் உனக்கு என்னை அத்தான் என்று கூப்பிடும் உரிமை இருக்கு மத்தவங்க எல்லாம் உறவே இல்லாமல் அத்தான் என்று கூப்பிட்டால் அத்தான் ஆகிவிடுவேனா"  ஓரக்கண்ணால் கயல்விழியை பார்த்துக்கொண்டே கூறினான். 

      கயல்விழிக்கு முதலில் கோபம் வந்ததுதான் ஆனால் பரமேஸ்வரி அமைதியாக இருந்தபோது அவளிடம் பேச்சை வளர்ப்பது தன்னை வெறுப்பேற்ற என்று புரிந்தவள் பஸ்சின் ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். 

      "டேய் ஓவரா  பெர்ஃபார்மன்ஸ் பண்ணாத  எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு வாங்கப்போறா" என்று கார்த்திகேயனிடம் காதோரம் பேசினான் அன்பு. 

    "ஏன்டா அவளை விட்டு விலகி இருக்கனும் என்று சொல்லிட்டு இப்போ நீயே சீண்டி விட்டுட்டி இருக்க" என்றான் முரளி. 

    என்ன பண்ணுறது இந்த கண்ணழகி என்னை கட்டிபோட்டுட்டா அவகிட்டையே தான் இந்த மனசு ஓடுது என்று மனதில் நினைத்தவன் நண்பர்களுக்கு பதில் சொல்லாமல் ஓரக்கண்ணால் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன். 

     பஸ் நிலையத்திற்கு நண்பர்கள் உடன் வந்ததும் தேடியது அவளைத்தான்  அவள் வரவில்லை என்று அறிந்து வரும் பாதையையே பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு சிறிது நேரத்தில் வேகமாக நடந்து வந்தவளை கண்டான்.  அந்த ரோஜா வண்ண உடையில் ரோஜாப்பூவே நடந்து வருவதுப்போல் இருந்தது.  அந்த உடை அவளின் நிறத்திற்கு அவ்வளவு பாந்தமாக இருந்தது அவளையே விழியிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் பஸ்நிலையம் வந்து சுற்றி பார்க்கும் போது தான் திரும்பி நின்றிருந்தான். 

    இருபது நிமிட பயணத்தில் கம்பெனி வந்து விட அனைவரும் பஸ்சை விட்டு இறங்கி சென்றனர். 

     கயல்விழியும் பஸ்சில் இருந்து இறங்கி தன் முன் இருந்த அந்த நான்கு மாடி கட்டிடத்தை பார்த்தாள். 

     திரும்பி கார்த்திகேயனை பார்க்க அவன் நண்பர்கள் உடன் பேசிக்கொண்டு நடந்து சென்றான். 

     அவள் கண்கள் கலங்கின இதுமாதிரி ஒரு கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கவேண்டியவன் இன்றே கேன்டீனில் பணி செய்ய வந்து இருக்கிறான்.  அவள் கண்கள் அவனையே பார்த்து இருக்க சட்டென்று இவளை பார்த்தான் கார்த்திகேயன்.  சட்டென்று பார்வையை தாழ்த்திக்கொண்டு நடந்தாள். 

      அனைத்து பணியாளர்களையும் சிலர் நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தனர்.  அதில் ஒருத்தி வேகமாக மூன்று நண்பர்களுக்கும் அருகில் வந்து ஹாய் வெல்கம் என்றவள் கார்த்திகேயனை அணைத்து விடுவித்து சிரித்த முகத்துடன் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தாள். 

    அதை கண்ட கயல்விழி அதிர்வுடன் நின்றுவிட்டாள். 

     




Leave a comment


Comments


Related Post