இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 21-06-2024

Total Views: 5761

இதரம் -14


"மேரேஜ் நடந்திடுச்சா?" என்று அதிர்வாய் நேத்ரா கேட்க 


"ம்ம்ம் நடந்திடுச்சு."என்றாள் விரக்தி சிரிப்புடன் 


"அப்புறம் இங்க சீனியர் கூட..." நேத்ராவிற்கு குழப்பமாய் இருந்தது. 


மாறனும் அதைப்பற்றி அன்று கேட்கவில்லை. மணியக்காரர் மல்லி கணவனோடு இல்லை திரும்பி வந்து விட்டாள் என்று மட்டும் கூறியிருந்தார். மாறனின் திருமணத்திற்கு அவன் பத்திரிக்கை வைக்க வந்தபோது. 


'ஏன்?' என்ற கேள்விக்கு," இன்னொரு நாள் பேசலாம் தம்பி" என்று முடித்துக் கொண்டார் அவரும். 



அந்த இன்னொரு நாள் திருமாறன் தேவமல்லி திருமணம் நடந்தேறிய பிறகு கூட வரவே இல்லை. மல்லியிடம் அதைப் பற்றி கேட்கவும் இல்லை மாறன். முதல் திருமண பந்தத்தில் இருந்திருந்தால் நிச்சயம் மணமேடை ஏறியிருக்க மாட்டாள் என்பது அவனது எண்ணமாக இருந்தது. 


"ஏன் டாக்டர் சார் அதைப் பத்தி எங்கிட்ட நீங்க எதுவுமே கேட்கல?" என்று சந்தேகமாய் கேட்க 


"மணியக்காரர் கிட்ட என் மேரேஜ்க்கு இன்வைட் பண்ண வந்திருந்தேனே அப்போதே கேட்டேன் ஏன் மல்லி தனியா இருக்கான்னு. அவர் தான் உன் மேரேஜ் முடிஞ்ச மறுநாளே நீ திரும்பி ஊருக்கே வந்துட்டன்னு சொன்னார். உன் டிவோர்ஸ் பத்தி கேட்டதுக்கு பஞ்சாயத்தில் ஏதோ சைன் வாங்கிட்டதா சொன்னார், நானும் வேற டீடெய்ல் கேட்கலைம்மா. உன் கிட்டே பொறுமையா பேச நினைச்சேன்டா பட் அதுக்கப்புறம் ஏதேதோ நடந்திடுச்சு" என்றான் ஒரு வித சங்கடத்துடன். 



"ஏ வாழ்க்க போன தெசை ஒங்களுக்கு தெரியுமின்னு நெனைச்சிருந்தேன். மணியக்காரு பெரியப்பா கூட ஒங்க கிட்ட அதை பத்தி பேசிட்டதா சொன்னாரு, அந்த தைரியத்துல தான் அப்படி ஒரு பழியை தூக்கிப் போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." என்றவள்," அதுக்கான காரணம்...." எனும் போதே பேசாதே என்று தடுத்துவிட்டான் நேத்ரா இருப்பதினால். 


"அதுக்கான காரணம் என்னவா இருக்கும். சீனியர் உங்க மேல வச்ச லவ் தெரிஞ்சிருக்கும்" என்றாள் நேத்ராவும். 


"அதே தான் நேத்ரா. அந்த லவ் மட்டும் தான் எங்களை ஒன்னா சேர்த்தது. தட்ஸ் இட்"என முற்றுப்புள்ளி வைத்து விட்டான் அவ்விஷயத்திற்கு. 


நேத்ராவிற்கும் தெரியும் அது காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று. ஆனால் தெரிய வேண்டாம் என்று மாறன் நினைக்கையில் அதைத் தோண்டி துருவ விரும்பவில்லை அவளும். 



"என்னாச்சு தேவா ஏன் அங்கிருந்து வந்த?" என்று மாறன் கேட்கவும். 


"நீங்க போன பெறகு மேடையில போய் ஒக்காந்தேன். அங்க மாப்பிள்ளை "


"ஓடிப் போயிட்டாரா?" என்று நேத்ரா ஆர்வம் தாளாமல் கேட்க


"அப்புறம் எப்படி மேரேஜ் நடந்திருக்கும் அறிவாளி?"என மாறன் கிண்டலாய் கேட்க


"மாப்பிள்ளை ஓடியிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். எனக்கு மாப்ளையாக வேண்டியவன் தன் புது பொண்டாட்டி கூட சிரிச்ச மொகமா நின்னானே."


"தேவா...?!" 


"மேம்?!" என்று நேத்ரா மாறன் இருவரும் அதிர


"ஆமா நின்னான். எம்பக்கத்தில் மாப்ளையா இருந்தது யார்னு நெனைச்சீங்க?, எங்கக்கா புருஷன்." என்றாள் வேதனையாக. 


"என்னம்மா?" என்று சங்கடமாய் அவன் கேட்க 


"நெசம் டாக்டர் சார்.  ஒரு நிமிஷம் உசுரே ஆடிருச்சு எனக்கு, சட்னு அங்கே இருந்து எழுந்திரிச்சுட்டேன். கத்தினேன் கதறினேன் என் பேச்சு எதுவும் எடுபடலை அங்க. மணியக்காரு பெரியப்பா, வெண்ணி அக்கான்னு அத்தனை பேரும் எனக்கு ஆதரவா நின்னாங்க. மலரக்கா கழுத்துல கத்தி வச்சு மெரட்டின மாதிரி மெரட்டுறா. நீ கட்டிக்கலைனா அதே இடத்தில் வேறொருத்தி வருவா எனக்கு சக்களத்தியான்னு சொல்லி கதறுனா. அப்படியே மேடையை விட்டு எறங்கினேன். ஈவு இரக்கம் இல்லாதவன்னு என் அக்காங்க எல்லாம் பேசினாங்க." என்று அன்றைய நாளை விளக்கினாள். 

மணமகனாகத் தன் அக்கா கணவனைக் கண்டு நெஞ்சம் பதறிப் போனாள் மல்லி. 


"அக்கா!" என சரிந்தவளை பார்த்த மலரோ கிஞ்சித்தும் இரக்கமின்றி,"கல்யாணம் நடந்தாகணும் மல்லி. இல்ல நானும் உங்கூடவே வாழாவெட்டியா வந்திடுவேன்." என்று மிரட்டினாள்.


"நான் எப்படிக்கா இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்? மாமா நீங்களாவது சொல்லுங்களேன் " என்று அழுதவளை," மணவறையில் போய் உட்கார்றீயா இல்ல நா தாம்புகயித்தில் தொங்கவா?" என மிரட்ட சலனமேயின்றி எழுந்து சென்று அமர்ந்தாள் மல்லி. 



திருமணம் நடந்தேறிவிட்டது. 

'அக்காவின் வீட்டில் ஓரகத்தியாய் இனி சொந்தத்தோடு சொந்தமாக வாழப் போகிறோம்' என்றெண்ணி வந்தவளுக்கு சக்களத்தியாக வாழ வழிவிட்டாள் அவள். 


ஆம் அக்காவின் கணவருக்கு இரண்டாந்தாரமாய் வாக்கப்பட்டு விட்டாள் தேவமல்லி. 


தனக்கென  அக்கா ஒருவரும் பேசவில்லை என்ற எண்ணமே நெஞ்சை அறுத்தது. 


'ஏமாற்றி திருமணம் செய்து வைக்க இவளுக்கு எப்படி மனது வந்தது.?'என்று மனக்குமுறலோடு நிமிர, அங்கே அக்காவின் கொழுந்தன் புது மனைவியோடு மகிழ்ச்சியாக நின்றிருந்தான். 


'எந்த ஜென்மத்தில் யார் குடியை கெடுத்தேன் ஏன் எனக்கு இந்த வாழ்க்கை?, பேசாமல் செத்து தான் போயிடலாமா?' என மனவேதனையுடன் பார்க்க எல்லாச் சடங்கும் நடந்தேறியிருந்தது. 


"அவளுக்கு பிள்ளை இல்லைன்னு தான் உன்னை கட்டி வச்சோம். இல்லாட்டி அந்த மனுசனுக்கு வேற பொண்ணு தேடுறேன்னா அவ மாமியாக்காரி. வேற ஒருத்தி வந்து இவ வாழாவெட்டி ஆவறதுக்கு நீயே சக்களத்தியா வந்தா ஒண்ணுக்குள்ள ஒண்ணா போயிடும்'னு தான் கட்டி வச்சோம்" என்றார்கள் மற்ற அக்கா இருவரும் . 


மறுவீட்டிற்கு என தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தவளுக்கு அவள் மனதை படித்தது போல 


கனகா வந்து"ஊருக்கு மறுவீடெல்லாம் போவல, அதான் வீட்டை வித்தாச்சே எல்லாம் இங்கினயேதான்" என மலர்க்கொடியின் அதாவது அவள் வாக்கப்பட்ட வீட்டிற்கே அழைத்துச் சென்று விட்டனர். 


"மணியக்காரர் வெண்ணி அக்கா எல்லாரும் மனசே ஆவாம தான் கெளம்பி போனாங்க சார். மலரக்கா வீட்டுல ஒன்னு ரெண்டு தடவை இருந்திருக்கேன். ஆனா அன்னைக்கு நான் அநாதை மாதிரி... ப்ப்ச் மாதிரி என்ன அநாதையா தான் நின்னேன்." என்றாள் வேதனையாக. 


மேலும் அவளேத் தொடர்ந்து, "மொதராத்திரினு அலங்கரிச்சு ஒக்கார வச்சிருந்தா அக்கா. அப்போ கூட வேணாம்க்கானு கெஞ்ச கெஞ்ச ரூமுக்குள்ள அனுப்பி விட்டா." என்றதுமே மாறனின் தாடை இறுகியது. தன் மனப் போராட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது மல்லிக்கு 



"உள்ளே போன அஞ்சு நிமிஷத்துல வெளியே ஒரே சத்தம். அடிச்சு புடிச்சு ஓடிப் போய் பார்த்தா மலரக்கா மயங்கி கீழே விழுந்து கெடந்தா. தமிழ் அக்கா தான் கத்தி கூப்பாடு போட, ஒடனேயே ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போயிட்டாங்க. அவ மாமியாரு வேணும்னே நடிக்கிறா'ன்னு அதுக்கு ஒரு பாடு பேசுச்சு. எனக்கு அதெல்லாம் பெருசா தெரியல. மொத ராத்திரி எதுவும் நடக்கலை. நாம இங்கருந்து எங்கேயாவது இதை சாக்கு வச்சு ஓடிடனும்னு நெனைச்சுக்கிட்டே நாலு துணிமணியை மட்டும் எடுத்து வச்சேன்." என்று நிறுத்திட 


"எங்கே போக ப்ளான் பண்ண மல்லி?" அதிர்வாய் மாறன் கேட்கவும், மீண்டும் ஓர் இகழ்ச்சி புன்னகை அவளிடத்தில். 


"நான் போக நினைக்க முன்னாடியே அவங்களே அனுப்பிட்டாங்க" என்றவள்," ஆஸ்பத்திரியில் இருந்து வந்த அக்கா நல்ல சேதியோட வந்தா. ஆமா மாசமா இருக்கறதா டாக்டர் சொன்னாங்களாம். வீட்டுல ஒரே கொண்டாட்டம். அவ்வளவு நேரம் திட்டுன மாமியாரு கூட அவளை கொஞ்ச ஆரம்பிச்சுடுச்சு. காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா நான் வந்த நேரம் நல்ல சேதி வந்திடுச்சுனு சொல்ல மலரக்கா மொகத்தைப் பார்க்கணுமே அப்பா என்னை ஒரு அசிங்கத்தைப் பார்க்கிற மாதிரி பார்த்தா." என்று சிரித்துக் கொண்டாள் மல்லி. 



"அதெப்படி ப்ரெக்னென்டா இருந்தது கூட தெரியவில்லையா உங்க அக்காவுக்கு?" நேத்ரா மருத்துவராய் கோபம் கொள்ள 


"அவளுக்கு பெரிய மனுஷி ஆனதுல இருந்தே ரெண்டு மாசத்துக்கு ஒருக்க, மூணு மாசத்துக்கு ஒருக்க தான் வரும். ஒரு தடவை ஒரு வருஷம் கழிச்சு ஆனா. அதனால தான் பிள்ளை பிறக்கவும் பெரச்சனையா இருந்துச்சு. அதுக்கு வைத்தியம் கூட பார்க்க நாந்தான் காசு குடுத்தேன். திருவிழாவுல தீ மிதிச்சது கூட அதுக்குத்தான் டாக்டர் சார்." என்றாள். 


"ம்ம்ம்" என்ற நேத்ராவிற்கு பாராத மல்லியின் அக்கா மேல் அத்தனை ஆத்திரம் வந்தது. 


"மறுநாள் விடியல்ல தமிழ் அக்கா வந்து மலருக்கு நீ இங்க இருக்கிறது புடிக்கலைடி. அதனால வெள்ளென இங்கருந்து கெளம்புனு நாலு மணிக்கு உசுப்பி விட்டா. எனக்கும் புரிஞ்சுது நான் வந்தது எதுக்கு?, புள்ளை பெத்துக் குடுக்க! அதான் அவளே மாசமா இருந்தாளே, பெறகு நானெதுக்கு வேண்டாத பொருளானு எனக்குமே தோனுச்சு. அப்புறம் எங்க ஊரு மொத பஸ்க்கு அனுப்பி விட்டுட்டு தான் மத்த வேலை பார்த்தா தமிழு. அதுக்கப்புறம் மணியக்காரர் கிட்டவே வாடகைக்கு வீடு புடிச்சு தர சொல்லி, அங்கேயே தங்கி இருந்தேன். காட்டுவேலை வீட்டுவேலை'னு பழையபடி போச்சு வாழ்க்கை. அத்தனை நாள்ல ஆறுதல் சொல்லக் கூட ஒருத்தியும் வரல அங்க என் கிட்ட." என்று சொல்ல 



கைப்பாவையாய் மல்லியை அவர்கள் ஆட்டி வைத்தது புரிந்தது மாறனுக்கு. 


"அவங்களுக்காக நீங்க இவ்வளவு விட்டு தந்திருக்கணுமா...?" மாறன் ஆதங்கமாய் கேட்க 

 "அவங்களை எல்லாம் வேத்தாளாவா நான் நெனைச்சேன். கூட பொறந்த பொறப்புக. நம்மளை விட்டுடுவாங்களா'ன்னு ஒரு எண்ணம். நான் ஒருத்தி தான் அங்க இருக்கேன். பெத்தவங்க இல்லாட்டியும் மூணு அக்காங்க இருக்காங்க, நமக்கு ஏதாவது ஒன்னுன்னா வந்து நிக்க மாட்டாங்களானு நெனப்பு. ஆனா அவளுங்களே என் வாழ்க்கைக்கு தீம்பா வந்து நிப்பாளுகன்னு கனவுலயும் நினைக்கல நானு. என்னைப் பெத்துப் போட்ட மகராசி இருந்திருந்தால் என்னை விட்டுருப்பாளானு அவ்வளவு துக்கம் எனக்குள்ள எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இத்தோட விட்டாங்களேனு மனசைத் தேத்திக்கிட்டு பழையபடி வாழ்ந்தேன். அப்பவும் தான் என்னை விட்டாங்களா... இல்லையே...ஆறு மாசம் கழிச்சு எனக்கு எமனா வந்து நின்னானே அவன்." என்றாள் வேதனையின் சுவடு மாறாமல். 



"யாரும்மா?" என்றதும்," வேற யாரு உறுத்தா தாலி கட்டிட்டு அப்புறம் பொண்டாட்டி மசக்கையினு போனானே ஒரு படுபாவி அவந்தான்" என்றாள் விரக்தியாக 

மாறனுக்கோ,' அவள் சொல்லும் போதே இன்னும் எத்தனை வேதனையை அனுபவித்தாளோ தெரியவில்லையே!' என்று மனதே பாரமானது என்றால் நேத்ராவிற்கு,' தான் எல்லாம் வரம் வாங்கி இருப்போம் போல இந்த விஷயத்தில்' என நினைத்துக் கொண்டாள். 

*******

ஆறு மாதங்களுக்கு பிறகு :


மல்லி மணியக்காரர் ஏற்பாடு செய்து கொடுத்த வீட்டில் தங்கி இருந்தவள், தன் இயல்பு வாழ்விற்கு திரும்பியிருந்தாள். 

வெண்ணிலா வீட்டுப் பக்கமே தான் இருந்தது அவளின் வீடும். ஒரு தாய் வயிற்றில் பிறக்கா விட்டாலும் பாதுகாப்பாய் வெண்ணிலாவும் அவள் குடும்பமும் இருந்தது அவளுக்கு. 


"மல்லி ராக்கம்மா மக வயசுக்கு வந்துட்டாளாம் புள்ள. சடங்குக்கு சொல்லி விட்ருக்காங்க போயிட்டு வரேன். எம்மவனை மட்டும் பார்த்துக்கிறியா?" என வெண்ணிலா கேட்க 


"போயிட்டு வாக்கா!" என்றவள் அவள் கையிலிருந்த இரண்டு வயது குழந்தையை வாங்கிக் கொண்டாள். 


"சித்தி!" என கையிலிருந்த புளிப்பு மிட்டாயை நீட்டினான் அவன். 


வியர்த்துப் போய் உள்ளங்கையில் பிசுபிசுப்பாய் ஒட்டியிருந்தது அவன் கையில். 


"எனக்காவண்டி வச்சிருந்தியா சாமி?" என்று வாங்கி வாயில் போடப் போனவளுக்கு அசரீரி போல திருமாறனின் குரல் ஒலித்தது,' மல்லி இன்ஃபெக்ஷன் ஆகும்' என்று. 



"கழுவிட்டு சாப்புடுறேன்யா" என்றவள் லேசாய் தண்ணிரில் கழுவி விட்டு வாயில் போட்டுக் கொண்டபடி அவனின் கையையும் பிசுபிசுப்பு போக கழுவி விட்டாள். 


'பாரேன் ஏதாவது ஒரு விஷயத்துல இந்த டாக்டர் நெனப்புக்கு வந்துகிட்டே இருக்கறதை' என்று முணுமுணுத்துக் கொண்டாள். 


குழந்தையோடு விளையாடி பேசி சிரித்து அவனை குளிக்க வைத்து அன்றைய பொழுதை அழகாய் ஓட்டினாள் தேவமல்லி. 

அந்தி சாயவும் வந்த வெண்ணிலா இரவு மீண்டும் ராக்கம்மாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று குழந்தையை வாங்கிக் கொண்டு கிளம்பினாள். 


"ஏன்க்கா பிள்ளையை விட்டுட்டுப் போனா நான் பார்த்துக்கிறேனே?" என்றதும் 

"என் அத்தை விஷேஷத்திற்கு வந்துச்சுடி அவக கூடதேன் என் புருஷன் வீட்டுக்குப் பேச்சு வார்த்தை இல்லையே. அதான் புள்ளையை தூக்கியாடி பாக்கணும்னு சொல்லுச்சு அதான் கூப்டு போறேன்" என்றாள் வெண்ணிலா. 


"சரிக்கா பார்த்து போய்ட்டு வா" என்று சொல்ல 


"உன் மாமேன் ரவைக்கு வந்திடுவாரு. நீ பயப்படாம இரு. அப்பறம் சமைக்க எல்லாம் வேணாம் ராக்கம்மாக்கா கொழம்பு, வறுவல் தந்து விடும் சாப்டுக்குவ" என்று அவசரமாய் கிளம்பிச் சென்றாள் வெண்ணிலா. 


மல்லியும்  சமைக்கும் வேலை இல்லாது போகவே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க, அவன் வந்து நின்றான். 



"எப்படி இருக்க மல்லி...?"என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் நெஞ்சில் கைவைத்து விட்டாள். 


தனக்கு தாலியைக் கட்டி விட்டு இந்த ஆறு மாத காலமாய் இருக்கிறாளா இல்லையா என்று பாராதவன்  திடீரென வந்ததில் நெஞ்சம் பதறியது அவளுக்கு. 


அப்போதும் கூட 'மலருக்கு பிரசவ நேரமோ?, இல்லையே இன்னும் மாதம் ஆகவில்லையே ஒரு வேளை எதுவும் அவளுக்கு உடல் நலமில்லையோ?!' என்று தான் எண்ணினாள். 


"என்னடி கேட்டுக்கிட்டே இருக்கேன் அப்படியே நிக்கிற.? தண்ணி கொண்டா. ரவைக்கு இங்கனதேன் அரிசியை கூடப் போடு "என்று சட்டமாய் கட்டிலில் அமர்ந்தான் பாலன். 


மரியாதையின்றி அவன் அழைக்கவுமே புருவமுயர்த்தியவள்," இங்க எதுக்கு வந்தீங்க?" என்றாள் அமர்த்தலாக.


"இதென்ன கேள்வி?, நா ஓ புருஷன்..." எனும் போதே நைட்டியின் மேல் போட்டிருந்த துப்பட்டாவை சரி செய்தபடி,"எழுந்திருங்க முதல்ல. வெளியே போங்க இங்கருந்து" என்று மரியாதையாகவே சொல்ல 



"என்ன மல்லி இத்தனை நாளும் உன்னைப் பார்க்க வராத கோவமா?" என அவளருகில் செல்ல முற்பட 

அவனை பார்வையாலேயே தள்ளி நிறுத்தியவள்," பக்கத்துல வந்தீங்க அவ்வளவு தான். மரியாதை குடுக்கிறப்பவே காப்பாத்திக்கிடுங்க அம்புட்டு தான். ஒங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்ல. மொதல்ல கெளம்புங்க இங்கருந்து. பொழுதடஞ்ச நேரத்துல நீங்க வந்தது தப்பு" என்று தன்மையாகவே உரைக்க 


"ஏன் நா வரக் கூடாது. நா உரிமைப்பட்டவன்டி. நா வராம பின்ன வேற யாரு வருவா. போ போய் இந்த கூடாரத்துணியை கழத்தி எறிஞ்சுட்டு நல்ல சீலையா பாத்து கெட்டிக்கிட்டு வா. பூ வாங்கியாந்துருக்கேன் தலையில வைய்யி . என்ன பார்க்கிற ஓஓஓ வேற யாரும் வருவாங்களோ யாரு அந்த சங்கிலி வளவி எல்லாம் குடுத்தானே அந்த டாக்டரா.?" என்று எள்ளலாய் சிரித்தபடி வினவ 


"வெளியே போடா பரதேசி நாயே!" என்று ஆங்காரியாய் அவதாரமெடுத்தாள் மல்லி. 


"இந்தாருடி. ஒனக்கும் ஒங்கக்காளுக்கும் நாந்தான் புருஷன். ரெண்டு பேரும் ஒழுங்கா இருக்கப் பாருங்க. இனிமே கஞ்சிதண்ணிக்கு நாங்குடுக்கிறேன். ஆக்கிப் போட்டு எனக்கு பொண்டாட்டியா இரு. அவ அங்க இருக்கட்டும் நீ இங்க இரு. நா வந்து போயிக்கிறேன். உங்கக்காவும் அமைதியா கெடப்பா என்ன நாஞ்சொல்றது?" என்று கேட்க


"வெளக்கமாத்தை எடுக்கங்காட்டியும் வெளியே போயிரு. இல்ல மானமருவாதியை கெடுத்துப்புடுவேன் நானு" என்று கத்தவும் அவளை அவன் நெருங்கவும் சரியாக இருந்தது. 


..... தொடரும். 





Leave a comment


Comments


Related Post