இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 30) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 22-06-2024

Total Views: 5771

உனக்கென்றே உயிர் கொண்டேன் 30

ரயில் நிலையத்தில் வைத்து புடவையை வெண்பாவிடம் தமிழ் கொடுத்திருந்தான்.

பைக்குள் என்னவென்று பார்த்தவள் புடவையின் அழகில் "வாவ்" என்று மலர்ந்து உச்சரித்தாள்.

"அப்போ அன்னைக்கு எடுத்தது?"

வெண்பா கேள்வியாக இழுக்க...

"பூர்வி, மாம்ஸ் மேரேஜ் அப்புறம் குட்டியா ஒரு ஃபங்க்ஷன் இருக்கு" என்றான்.

"என்னது? யாரும் என்கிட்ட சொல்லலையே!" என்றவளிடம்,

"நடக்கும்போது தெரியும். நான் சொல்லாம நீ யாருக்கிட்டவும் கேட்கக்கூடாது" என்று சிரித்தவன், அவள் எதிர்பாராத தருணம்... ரயிலும் அசைந்து நகர... ஒற்றை கண்ணடித்து மறைந்திருந்தான்.

இப்போது அந்த நொடியை நினைத்தாலும் அவள் மனம் சில்லென்று நனைந்தது.

அதன் தாக்கத்தில் கையில் வைத்திருந்த புடவையை வருடிக் கொண்டிருந்தவளின் அருகில் வந்த பூர்வி...

"என்ன வெண்பா... தூங்கலையா? காலையில் சீக்கிரம் எழணுமே!" என்றவாறு மெத்தையில் அமர்ந்தாள்.

"இதோ... தூங்கணும் அண்ணி" என்றவள், "பூபேஷ் அண்ணாவை கூட்டிட்டுவர சீனியர் போயிருக்காங்க. வந்தும் ஒரு வெல்கம் கொடுத்துட்டு வரேன். நீங்க படுங்க" என்றாள்.

"ம்ம்ம்..." 

விடிந்தால் அஸ்வின் மற்றும் பூர்வியின் திருமணம். சற்று முன் தான் பெண்ணழைப்பு முடித்து, பெரியவர்களுக்குள் நிச்சயம் போல் சம்மந்தம் கலந்து, உறவினர்கள் கலைய, வீட்டு பெரியவர்கள் விடியலில் நடக்க இருக்கும் திருமணத்திற்கான வேலையை கவனிக்க சென்றிட, புது தம்பதிகளுக்கு போட்டோ ஷூட் நடந்தது.

அஸ்வின் மற்றும் பூர்வியை மேடையில் ஏற்றிய புகைப்படக் கலைஞர் பல கோணங்களில் நிற்க வைத்து இருவரையும் ஒருவழி செய்ததைவிட கீழே அமர்ந்து, தமிழ், வெண்பா, மகேஷ், வர்ஷினி என நால்வரும் அவர்களை படுத்தியப்பாட்டில் புகைப்படக்காரரின் விழி பிதுங்கியது.

சிரிப்பும் கொண்டாட்டமுமாக அந்த நேரம் கழிய,

"பூர்வியை சீக்கிரம் தூங்க விடுங்கடா. அப்போதான் தாலி கட்டுற நேரம் முகம் பிரகாசமா இருக்கும்" என்று தனம் அகிலாண்டத்துடன் வந்து அதட்டிய பின்னரே அவர்களை விட்டனர்.

'இந்த பெரியம்மாவுக்கு பயப்படுவாங்க தெரிஞ்சிருந்தால்... முன்னமே கூட்டியந்திருக்கலாம்.'

அஸ்வினுக்கு முன் புகைப்படக்காரர் தனத்தை கையெடுத்துக் கும்பிட்டவராக தனக்கான அறைக்குள் வேகமாக ஓடி மறைந்தார். அந்தளவிற்கு இவர்கள் படுத்தி வைத்தனர். அவ்வளவு கலாட்டாவாய் அந்நொடிகள் நகர்ந்திருந்தன.

"சரி மச்சான் நான் போயிட்டு காலையில் வரேன்" என்று மகேஷ் எழ,

"இங்கவே இருடா. எதுக்கு அலைச்சல். இப்போவே டைம் லெவன் ஆச்சுதே" என்றான் தமிழ்.

"நான் ட்ரெஸ் ஏதும் கொண்டுவரலடா. அதுவுமில்லாமல் மார்னிங் அம்மாவை கூட்டிட்டு வரணும். அப்பா வேறொரு ஃபங்ஷனுக்கு போகணும்" என்று மகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... பூபேஷிடமிருந்து தமிழுக்கு அழைப்பு வந்தது.

"நான் வரேன்" என்ற தமிழ்,

"பூபேஷ் இன்னும் பத்து நிமிடத்தில் ஸ்டேஷன் ரீச் ஆகிடுவானாம். உன்னை ஸ்டேஷனில் விட்டு, அவனை பிக்கப் பண்ணிக்கிறேன் வா" என்று மகேஷிடம் சொல்லியவன், வெண்பாவை பார்த்து தலையசைத்து வெளியேறினான்.

"இந்நேரம் எங்க தமிழு?"

மண்டபத்தில் நெருங்கிய உறவுகளைத்தவிர மற்றவர்கள் சென்றிருக்க... இவர்களின் கொட்டத்தையெல்லாம் ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தெய்வானை வாயிலை நெருங்கிவிட்டவனின் அருகில் வந்து கேட்டார்.

அவரின் பார்வை வெண்பாவின் மீது அடிக்கடி வன்மமாக படர்வதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

என்னதான் தமிழ், வெண்பாவின் நெருக்கம் பார்ப்பவர்களுக்கு தவறாக தெரியாத வகையில் கண்ணியமாகவே இருந்தபோதிலும், தெய்வானைக்கு தன்னுடைய மகளின் இடமென்கிற எரிமலை உள்ளுக்குள் வெடிக்கக் கனன்று கொண்டுதான் இருந்தது.

தமிழின் முகம் ஆராய்வை காட்டிட, சட்டென்று முகபாவத்தை மாற்றியவர், புன்னகையை வலிய முகத்தில் தாங்கியிருந்தார்.

"மகேஷை ஸ்டேஷனில் டிராப் பண்ணிட்டு வரேன் அத்தை" என, காரணம் சொல்லிய தமிழ் மகேஷுடன் சென்றிட...

உள்ளே வந்த தெய்வானை, இன்னமும் வெண்பாவும், வர்ஷினியும் சிரித்து பேசியபடி அமர்ந்திருப்பதைக் கண்டு அதட்டி அனுப்பி வைத்தார்.

அவருக்கு அவருடைய திட்டம் நடக்காமல் போய்விட்ட ஏமாற்றம். மகேஷை வைத்து அவர் திட்டம் தீட்டியிருக்க... அவனோ கிளம்பியிருக்க ஏமாந்து நின்றார் தெய்வானை.

மகேஷ், வர்ஷினி திருமணம் பற்றி அவர் அமைதியாக ஒப்புக்கொண்டதற்கு பின்னால் பெரும் திட்டம் ஒன்றையே வைத்திருந்தார் அவர்.

எப்போது தமிழ் வெண்பாவின் மீதான தன் விருப்பத்தைக் கூறினானோ? அப்போதே அவர் பல வற்றை யோசித்து சரியாக கட்டம் கட்டினார்.

முதலில் நேரடியாக வெண்பாவிடம் பேசி அவளை துரத்திவிட வேண்டுமென நினைத்தவர், வெண்பா தமிழை காதலிக்கும் நிலையில் தன்னுடைய பேச்சுக்கு பயந்து அவள் சென்றிடுவாள் என நினைப்பது முட்டாள்தனமாக தெரிய அதனை கைவிட்டார்.

சண்முகத்தை சந்தித்து பேசினால், அடுத்த நொடி தமிழுக்கு விஷயம் தெரிந்துவிடும். அதன் பின்னர் இவ்வீட்டில் தான் இல்லாமல் போய்விடும் என்று பலவாறு யோசித்தே இறுதியாக ஒரு முடிவை செயலப்படுத்த சரியான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

'எப்படியும் இந்த மகேஷ் பய காலையில் கல்யாணத்துக்கு வருவான் தானே... அடிக்கிற ஒரே அடியில் ரெண்டு மாங்காயும் சிதறனும்' என தனக்குள் சொல்லிக்கொண்டவராக தனம் இருந்த அறைக்குள் சென்று முடங்கிவிட்டார்.

அவர் சொல்லிய இரண்டு மாங்காய், ஒன்று வெண்பா மற்றொன்று மகேஷ்.

அவருக்கு தமிழிடமிருந்து எப்படி வெண்பாவை பிரித்திட வேண்டுமோ... அதேபோல் இப்போது வர்ஷினியிடமிருந்து மகேஷை பிரித்தாக வேண்டும். அதற்காகவே தனது திட்டத்திற்கு அவர் மகேஷை தேர்வு செய்திருந்தார்.

மண்டபத்தில் ஆட்கள் இல்லாது குறைந்தபட்ச உறவினர்களோடு முடித்துவிடலாமென்று இந்த இரவினை எதிர்பார்த்து தெய்வானை காத்திருக்க... அவருக்கோ மகேஷ் சென்றுவிட்டதில் சப்பென்று ஆகியிருந்தது. அதனால் உள்ளுக்குள் குமுறும் தன் கோபத்தை காட்டிக்கொள்ளாமல் இருக்கவே மேலும் அமைதியாக இருந்தார்.

தெய்வானைக்கு தான் செய்யவிருக்கும் காரியத்தால் பூர்வியின் திருமணம் நிற்பதற்கு பல சாத்தியக்கூறுகள் இருந்திட... அதற்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

இப்போதோ, அவருக்கு இருக்கும் வாய்ப்பு, பூர்வியின் மணம் முடிந்த பின்னர், தமிழின் நிச்சயம் நடக்கவிருப்பதற்கு முன்னர்... இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் மட்டுமே. 

'அதுவரை இந்த தமிழு அந்த வெண்பாவிடம் காதலை சொல்லிவிடக் கூடாது' என வேண்டிக்கொண்டு கண்களை மூடி படுத்திருந்தார். அதற்காகவே, தமிழ் திரும்பி வரும்போது வெண்பா அங்கேயே இருந்து பேசிவிடக் கூடாதெனவே அறைக்கு போகச்சொல்லி விரட்டியிருந்தார்.

என்ன தான் இதுவரை தெய்வானை அமைதியாக இருந்தாலும், அகிலாண்டத்தால் தன்னுடைய மகளையே நம்ப முடியவில்லை. தெய்வானையை அவருக்கே தெரியாது கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

தெய்வானை அமைதியாக படுத்துவிட்டாலும், அவரின் முகத்தில் தென்படும் மெல்லிய பதட்டத்தை அகிலாண்டம் குறித்துக்கொண்டார்.

'ஏதோ வேலை பார்க்கிறாள்' என நினைத்த அகிலாண்டம், 'நாளைக்கு இவளைவிட்டு கண்ணை அகற்றவேக் கூடாது' என எண்ணிக்கொண்டார்.

ஆனால் நடக்க வேண்டுமென இருப்பது நடந்துதானே ஆகும்.

மணமேடை வேலை முடிய மண்டபமே நிசப்தமாகியிருந்தது. அனைவரும் உறக்கத்திற்கு சென்றிருந்தனர். சமையல் கூடம் மட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அக்கணம் தான் வெண்பா பூர்வியிடம் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

ஹாலினை கடந்து தான் தமிழிருக்கும் அறைக்கு செல்ல வேண்டும். தமிழ் சென்று அதிக நேரமாகியிருந்ததால், அவன் பூபேஷை அழைத்துக்கொண்டு வந்திருப்பானென அவனது அறைக்கு செல்ல ஹால் பக்கம் வர, அப்போதுதான் தமிழ், பூபேஷ் இருவரும் மண்டப வாயிலை கடந்து உள்ளே நுழைந்தனர்.

"ஹேய் வெண்பா!"

பூபேஷ் அழைத்திட அவர்களுக்கு பக்கவாட்டில் முன்னே சென்றவள் திரும்பி பார்த்து... புன்னகையோடு அவனை நெருங்கினாள்.

"எப்படியிருக்கீங்க மேடம்?" எனக்கேட்டுக்கொண்டே பூபேஷ் அவளை தோளோடு அணைத்து விடுவிக்க...

"ஈவ்வினிங்கே வந்திருக்கலாமே'ண்ணா?" எனக் கேட்டாள்.

பூபேஷுக்கு வர முடியாத சூழல், அவன் தற்போது வந்திருப்பதே, விடியல் முகூர்த்தத்தில் பூர்வி, அஸ்வின் திருமணம் முடிந்ததும் ஏற்பாடாகியிருக்கும் நண்பனின் நிச்சயத்திற்காகவே.

அதனை பூபேஷ் சொல்ல முற்பட தமிழ் லாவகமாக பேச்சினை மாற்றிவிட்டான்.

"சாப்பிட்டியாடா?"

"ம்ம்ம்" என்ற பூபேஷ், "நான் இன்னும் அஸ்வின் ப்ரோவை பார்க்கலையே!" என்க...

"வா போவோம்" என்ற தமிழ்...

"நீயென்ன இந்நேரம் இங்க?" என வெண்பாவிடம் வினவினான்.

"அண்ணாவை கூட்டிட்டி வந்திருப்பீங்க... பார்க்கலான்னு உங்க ரூமுக்கு தான் வந்தேன்" என்றவளும் அவர்களுக்கு முன் நடந்தாள்.

"இன்னும் சொல்லலையாடா நீ?"

பூபேஷ் மிகமிக மென் குரலில் கேட்டு தமிழின் இடையில் இடித்தான்.

"சர்ப்ரைஸ்" என தமிழ் கண்ணடித்தான்.

"தாலி கட்டுறதுக்கு முன்னாடியாவது லவ்வை சொல்லிடுவியாடா?" என்றான் பூபேஷ்.

"கலாய்க்கிறியா மச்சி?" என்ற தமிழ் நண்பனின் கழுத்தைச்சுற்றி கையை போட்டு தன்னோடு நெருக்கியவனாக, அவனது வயிற்றில் மெல்ல குத்தினான்.

"அய்யோ... விடுடா" என்று பூபேஷ் கத்த, வாயினை கை கொண்டு அடைத்தான் தமிழ். 

திரும்பி பார்த்த வெண்பா,

"விளையாடுறீங்களா? தூங்குறவங்க முழிச்சிக்கப்போறாங்க" என திரும்பி நடந்தாள்.

"காலேஜில் எம்புட்டு கெத்து நீ? காதலிக்கிற பொண்ணுகிட்ட லவ்வை சொல்ல நாலு வருசத்துக்கு மேல திணறுற" என்று மேலும் சீண்டிய பூபேஷ், இம்முறை அவனின் கையில் சிக்காது வெண்பாவின் அருகில் ஓடிவிட்டான்.

"என்னண்ணா?"

"அடிக்கிறான் வெண்பா!"

தமிழை பார்த்த வெண்பா,

"நீங்க என்ன பண்ணீங்க?" எனக் கேட்டாள்.

"நீ இப்படிலாம் அவனை நம்பக்கூடாது" என்றவன், தாங்கள் நிற்பது மணமகன் அறைக்கு முன்னால் என்று கதவிலிருந்த பலகை வைத்து கண்டு கொண்டவனாக தானே கதவினை தட்டினான்.

அதற்குள் தமிழும் வெண்பாவின் பக்கம் வந்திருந்தான்.

"ரொம்ப டயர்டா தெரியுறிங்க!" என்றவள் தமிழின் நெற்றியில் கலைந்திருந்த முன்னுச்சி கேசத்தை ஒதுக்க தானாக உயர்ந்துவிட்ட கரத்தினை சடுதியில் கீழிறக்கியிருந்தாள். வேகமாக முன் திரும்பியும் கொண்டாள்.

தமிழ் பூஞ்சாரலாய் பூத்த புன்னகையை கொடுப்புக்குள் ஒளித்தான்.

அஸ்வின் கதவினை திறந்திட...

"ஹாய்" என்ற பூபேஷை, யாரென்று தெரிந்திடாத போதும், வரவேற்கும் விதமாக சிரிப்போடு தலையசைத்தான் அஸ்வின்.

பூபேஷின் ஒரு பக்கம் வெண்பாவும் மறுபக்கம் தமிழும் அவனது கையினை பிடித்துக்கொண்டு...

"திஸ் இஸ் பூபேஷ்" என்றிட...

"என்னடா பயங்கரமா இன்ட்ரோ கொடுக்குறீங்க? ஏதும் சொல்லி வச்சிருக்கீங்களா?" என விழிகளை உருட்டிக் கேட்டான் பூபேஷ்.

"இல்லையே... இல்லைவே இல்லை" என்று தமிழ், வெண்பா இடவலமாக தலையாட்டிட...

"அப்படிலாம் ஏதுமில்லை வாங்க" என்று சத்தமாக சிரித்தபடி உள்ளே அழைத்துச்சென்றான் பூபேஷ்.

"தூங்கிட்டிங்களா மாமா?" தமிழ் கேட்டிட,

"பூர்வி பேசிக்கிட்டு இருந்தாள்" என்று அலைபேசியை காண்பித்தான்.

"அப்போ அக்கா இன்னும் தூங்கலையா? போய் பார்க்கலாமா? மார்னிங் பிஸி ஆகிடுவாங்கல" என்றான் பூபேஷ்.

"ம்ம்ம்... நீ கூட்டிட்டு போ வெண்பா" என்று அஸ்வின் சொல்ல...

"போயிட்டு இந்த ரூமுக்கே வந்திடுடா" என தமிழ் படுக்கையில் குப்புற விழுந்தான்.

"என்னாச்சு சீனியர்?" வெண்பா பதறியவளாக தமிழின் அருகில் வர, அவளின் முகத்தில் அத்தனை பதட்டம்.

"ஹேய் மொழி..." என்றவன் எழுந்து அமர,

அவன் மொழி சொல்லி அஸ்வின் முதல்முறை கேட்கிறான். அந்த விளிப்பில் ஆயிரமாயிர கணக்கில் கொட்டிக்கிடந்த காதலை உள்வாங்கிய அஸ்வினுக்கு... ப்பா என்றிருந்தது. ஒரு நொடி உடல் சிலிர்த்து அடங்கியது என்று சொல்லலாம்.

"லேட் நைட்... ஜஸ்ட் ஸ்லீப்பி டயர்ட். அவ்வளவு தான்" என்ற தமிழின் பேச்சு இலகுவாக வரவே பதட்டம் நீங்கி பூபேஷை கூட்டிக்கொண்டு பூர்வியின் அறைக்குச் சென்றாள் வெண்பா.

அஸ்வின் தன்னுடைய தொடையில் கை முட்டி குற்றி, உள்ளங்கையில் முகம் தாங்கியபடி தமிழையே குறுகுறுவென்று பார்த்திருந்தான்.

"சைட் அடிக்கிறீங்க மாம்ஸ்" என்ற தமிழ் வெட்கத்தை மறைக்க முடியாது ஒற்றை கையால் முகத்தை மூடி விரல் இடுக்கில் அஸ்வினை அரை கண்ணால் பார்த்தான்.

"நீங்க ரெண்டு பேரும் லவ்வை சொல்லிக்கணும் அவசியம் கூட இல்லை தமிழ். சின்ன சின்ன விஷியத்தில் கூட காதலை ஒருத்தருக்கொருத்தர் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க" என்ற அஸ்வின் தமிழின் தோளில் கை போட...

"மொழி என்னை லவ் பன்றான்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று ஆச்சரியமாகக் கேட்டான் தமிழ்.

"ம்ம்ம்... தெரியும்?"

"எப்போ? எப்படி?"

"இதுக்கு அம்மு தான் பதில் சொல்லணும். நீ எப்படி உன்னோட காதலை நீதான் சொல்லுவன்னு, நிச்சயத்தைக் கூட இன்னும் சொல்லாமல் இருக்கியோ... அதுபோல, அவளும் அவளோட விருப்பத்தை அவளா உன்கிட்ட சொல்லணும் இருப்பா(ள்)தானே?" எனக் கேட்டு, "சோ, அம்மு சொல்லும்போது கேட்டுக்கோ" என்று படுத்துவிட்டான்.

"எப்போயிருந்து?"

"நான் சொல்லமாட்டேன்" என்ற அஸ்வின், "படுடா... நாளைக்கு தெரிஞ்சிடும்" என்று அவனது மார்பில் கை வைத்து தள்ளி தன் பக்கம் படுக்க வைத்தவனாக அஸ்வின் உறங்கிட, சில நிமிடங்களில் தமிழும் உறங்கிப்போனான்.

அஸ்வினுடன் சாட் செய்துகொண்டிருந்த பூர்வி, அவனிடமிருந்து பதிலின்றி போகவே, தூங்கியிருப்பான் என நினைத்து படுத்துவிட்டாலும், வெளியில் சென்ற வெண்பா திரும்பி வராததால் விழித்திருந்தாள். வர்ஷினி எப்போதோ உறங்கியிருந்தாள்.

கதவு தட்டும் சத்தத்தில் வெண்பா என்று, "லாக் பண்ணல அம்மு" என்றாள் பூர்வி.

அஸ்வின் வெண்பாவை அம்மு என்று குறிப்பிட்டு, பூர்விக்கும் தனக்கு அதிகம் பிடித்துவிட்ட தன்னுடைய நாத்தனாரை செல்லாமாக அம்மு என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள்.

பூர்வி அவ்வாறு அழைக்கக்கூடாதென்று தமிழ் தன் தமக்கையிடம் பெரும் போர் ஒன்றையே நடத்தியிருந்தான்.

"மொழி சொல்லிக் கூப்பிட்டதுக்கு கூடாதுன்ன, இப்போ அம்முவும் கூடாதுங்கிற. என்னடா நினைச்சிட்டு இருக்க? தாத்தா, அஸ்வின் அப்படித்தான் கூப்பிடுறாங்க. அவங்களையும் வேணாம் சொல்லுவியா?" என்று நியாயமாக பூர்வி கேட்டிட, தமிழுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"பொஸஸிவ் ஆகுது பூர்வி" என்றவன் நெற்றியை தேய்த்துக்கொண்டான்.

"அதுக்கு... போடா" என்ற பூர்விக்கு, "எனக்கு பயமா இருக்கு தமிழ்... நீ லவ் பண்றன்னு அவளுக்கு அடிக்ட் ஆகிட்ட. சுமூகமான உறவுக்கு இதுவே பிரச்சினையை கொடுக்கும்" என்று எடுத்துக் கூறியதோடு, "இருந்தாலும் கொஞ்சம் சைல்டிஷ்ஷாவும் இருக்குடா" என்று மூக்கினை சுருக்கி கூறிட இருவரும் ஒரேநேரத்தில் பக்கென்று சிரித்தும் இருந்தனர். அதுமுதல் பூர்விக்கு, வெண்பாவை அம்முயென்று அழைத்தால் அந்த தருணம் நினைவில் வந்து செல்லும்.

"அண்ணி... பூபேஷ் அண்ணா" என்று வெண்பா கதவை திறந்திடாது, அறைக்கு வெளியில் நின்றே சொல்லிட, விடி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க, மின் விளக்கை போட்டுவிட்டு வெளியில் வந்தாள் பூர்வி.

பக்கத்து அறையில் உறங்காது யோசித்துக்கொண்டிருந்த தெய்வானை, வெண்பாவின் குரலில், தனக்கு அருகில் படுத்திருந்த தனம் மற்றும் அகிலாண்டத்தின் உறக்கத்தை உறுதி செய்து, மெல்ல கதவினை திறந்து எட்டிப்பார்த்தார்.

"வாடா... வழி தெரிஞ்சிடுச்சுப்போல?" என்று நக்கலாகக் கேட்க, 

"சாரிக்கா" என்று பூர்வியின் கை பற்றி மன்னிப்பு வேண்டினான் பூபேஷ்.

"இப்போ சார் நிஜமா என் கல்யாணத்துக்குதான் வந்தீங்களா?" என்று கேட்ட பூர்வி, தங்களின் பேச்சினால் மெல்ல வர்ஷினி அசைந்து கொடுப்பதை கண்டு, மற்ற உறவு பெண்ணும் அங்கு உறங்குவதால்...

"அந்த ரூம் ஃபிரியா இருக்கு. அங்கு போவோம்" என்று, தெய்வானைக்கு அடுத்த அறைக்குள் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

"வீட்டுக்கே வர மாட்டேங்கிற?" பூர்வி பூபேஷின் முதுகில் மெல்ல அடித்தாள்.

"வொர்க் பிஸிக்கா..." என்றான்.

கிட்டத்தட்ட அரை  மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் பேசிக்கொண்டிருக்க, தெய்வானை மூன்று பேருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

"பேச்சு சத்தம் கேட்டுச்சேன்னு எட்டிப்பார்த்தேன். அதான் கொண்டு வந்தேன்" என்று தெய்வானை சொல்லிட,

"நல்லாயிருக்கிங்களா ஆண்ட்டி?" எனக் கேட்ட பூபேஷிடம் சில வார்த்தைகள் பேசி தெய்வானை சென்றார்.

"ஆச்சரியமா இருக்குக்கா... எப்போல இருந்து இந்த மாற்றம்?" தெய்வானை சென்றுவிட்ட திசையை பார்த்தபடியே கேட்டான்.

அவன் ஒருமுறை வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர் போட்ட அல்டாப்பில் பூபேஷ் பயந்து ஓடியதை வெண்பாவிடம் சொல்லி சிரித்த பூர்வி,

"அவனாக மாறியதை இன்னும் நம்பவே முடியல" என்றவள் நேரத்தை பார்த்துவிட்டு,

"இப்போ இதை குடித்தால் தூக்கம் வராது. நீங்க குடிங்க" என்று இருவருக்கும் எடுத்து கொடுத்த பூர்வி,

"அவனை அனுப்பி வச்சிட்டு வா அம்மு. தூக்கம் கண்ணை சுழட்டுது" என்று பூர்வி எழுந்து சென்றிட, 

வெண்பா மற்றும் பூபேஷ் இருவரும் தேநீர் பருகியபடி சில நிமிடங்கள் பேசியதை மட்டுமே நினைவில் கொண்டிருந்தனர்.







    


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 1 week ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌


    Related Post