இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -62 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 22-06-2024

Total Views: 6383

அடுத்த படி ஏறி இருந்தால் கடையின் உள்ளே வந்திருக்கலாம் அதற்குள் திரும்பிய நந்தன்,

“சரஸ்வதி ஜீப்ல என்னோட கண்ணாடியை வெச்சிட்டு வந்துட்டேன் போய் எடுத்துட்டு வரிங்களா?”

“ஓகே சார்“ என்றவள் நந்தன் தனக்கு வேலைக் கொடுத்து விட்டான் என்ற சந்தோசத்தில் துள்ளிக் கொண்டு கீழே சென்றாள்.

அவள் வருவதற்குள் கடைக்குள் வந்தவன் தன் குடும்பத்திடம், “கல்யாணம் நடக்கற சமயம் வரைக்கும் எனக்கும் இவளுக்கும் கல்யாணம்ன்னு எங்க டிபார்ட்மென்ட்ல யாருக்கும் தெரிய வேண்டாம். என்னோட ஒர்க் பண்ற லேடி போலீஸ் வந்துருக்காங்க பார்த்து நடந்துக்கோங்க.” என அன்பாக சொல்லவில்லை அதிகாரமாக சொல்லியிருந்தான்.

அனைவரின் கண்ணும் அவனுக்கு பின் வந்த சரஸ்வதியை தான் நோக்கியது.

நிலா அவளை கண்கள் சுருங்கப் பார்த்தாள். ”இந்த போலீஸ் தானே அன்னிக்கு என்னைய மிரட்டுனா, இவர் கூட தான் வேலைப் பாக்குதா..” என்ற எண்ணம் மட்டும் தான் வேற எதுவும் தோன்றவில்லை.

சரஸ்வதி உள்ளே வரும்போதே நிலாவைப் பார்த்துவிட,

“இதென்ன சார் தங்கச்சி கல்யாணத்துக்கு பக்கத்து வீட்டுப் பொண்ணுலா வந்துருக்கு? அதோட பார்வையே சரியில்ல சொல்லி வைக்கணும்.” என எண்ணிக் கொண்டே கண்ணாடியை நந்தனிடம் கொடுக்க, அவளை குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான்.

அதேபோல் குடும்ப உறுப்பினர்களையும் சரஸ்வதிக்கு அறிமுகம் செய்து வைத்தவன் வேண்டும் என்றே நிலாவை அறிமுகபடுத்தவில்லை. அவளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“சரி வாங்க சாப்புட்டு வந்து மீதி டிரசை எடுத்துப்போம், மணி இப்போவே 1.30 ஆகிடுச்சு.”

“இவ்வளவு நேரமும் எடுக்கலையா.?”

“ஷாலு மட்டும் ஒரு புடவை எடுத்துருக்கு மத்த யாரும் எடுக்கல..” என பேசிக்கொண்டே வெளியே நடக்க, அவருக்கு பின் அனைவரும் நடந்தனர்

“வாங்க சரஸ்வதி சாப்புட்டு வந்து உங்க சிஸ்டருக்கு டிரஸ் எடுப்போம்.”

“அது நீங்க பேமிலியோட.”

“அதனால என்ன வாங்க..” என அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல.

நிலாவை அங்கு யாருமே கண்டுக் கொள்ளவில்லை. அவர்களின் விலகல் நெருஞ்சி முள்ளாக மனதை குத்தியது.

ஆண்கள் பகுதியில் இருந்து வந்த யுகி நிலா மட்டும் தனியாக நிற்பதைப் பார்த்து சுற்றி சுற்றிப் பார்த்தான்.

“எல்லோரும் சாப்பிடப் போயிருக்காங்க.” என்றாள் எங்கோப் பார்த்துக் கொண்டு.

நிலாவிடம் நேரடியாக பேச முடியாமல் அருகில் இருந்த கடையில் வேலை செய்யும் பையனிடம்.

“அவங்க சாப்பிடப் போனா நீயும் போகணும்னு தெரியாதா..?”

“சார் நான் இப்போ தான் சாப்புட்டு வந்தேன்.”

“சொன்னதை செய் வா போய் சாப்பிடலாம்.”

“சார் டிப்சை இப்படிலாம் கொடுப்பீங்களா? வாங்க சார் போலாம்.” என்றதும் நிலாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக் கொண்டாள்.

“உன்னைய யார் மேன் கூப்பிட்டா?”

“நீங்க தானே வா போலாம், வா போலாம்னு சொன்னிங்க.”

“நான் யாரை சொன்னேன்னு அவங்களுக்கு தெரியும்.”

“அதான் சார் எனக்கு தெரியுது வாங்க போலாம்.” என யுகியின் கையைப் பிடித்து விட்டான்.

“டேய் போடா அடிச்சிகிடிச்சிப் புடப் போறேன்.”

“ஏன் சார் இவ்வளவு கோபப்படறீங்க? நீங்க கூப்புட்டதும் சாப்பிட வரலைன்னா. அதான் இப்போ வரேன்ல வாங்க போலாம்.” என்றதும் நிலா பக்கென்று சிரித்துவிட,

வெகுநாள் கழித்து அவளது சிரிப்பைப் பார்த்தவன், “நான் உன்னைய சொல்லல. நீ உன்னோட வேலையைப் பாரு.“ என கையை எடுத்துவிட்டு முன்னால் நடக்க பின்னாலையே போனாள் நிலா.

ஜவுளிக்கடைக்கு பக்கத்துக் கடை தான் ஹோட்டல். அங்கு செல்லும் வரைக்கும் கூட நிலாவின் முகத்தில் அந்த சிரிப்பு மிச்சம் இருக்க, போலீஸ்காரன் கண்ணிற்கு நிலாவின் சிரிப்பும் தப்பவில்லை அவள் யுகியின் பின் வந்ததும் கவனிக்க மறக்கவில்லை. ‘நேற்று அவ்வளவு சொல்லியும் இன்று அவனுடன் சிரித்து பேசும் அளவிற்கு போயிருக்கா..’ என கோவத்தில் முகம் இறுக அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் சாதாரணமாக அமர்வது போல் சரஸ்வதி அமர்ந்து விட எழுந்துப் போ என சொல்ல முடியாமல் தள்ளி அமர்ந்துக் கொண்டான்.

வளவன் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டவன் நிலாவைப் பார்த்து, “இதெல்லாம் தேவை தான் உனக்கு.”என கண்களால் சொல்ல, அதையும் புரிந்துக் கொண்ட நிலா தோளை உலுக்கிக் கொண்டு மணிமேகலையின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

“யாருக்கு என்ன வேணுமோ ஆடர் பண்ணிக்கோங்க ஏம்மா சரஸ்வதி பேரு தான் சரஸ்வதி பார்க்க அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க.” என்ற கிருஷ்ணம்மாளுக்கு நந்தன் கல்யாணம் விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்று சொன்னதில் அவ்வளவு சந்தோசம், இதை வைத்து நிலாவை எந்த அளவிற்கு காயப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு காயப்படுத்திவிட வேண்டும் என நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“பாட்டி சும்மா சொல்லாதீங்க.”

“நான் எதுக்கும்மா சும்மா சொல்லப்போறேன், உண்மையா தான் சொல்றேன். இன்னைக்கு முழுக்க எங்களோட இருக்கியா..?”

“எதுக்கு பாட்டி.?”

“என் பேரனோட வந்துருக்க, நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தி மாதிரி தான். என்னோட பேத்தி கல்யாணத்துக்கு துணி எடுக்கறோம், எப்படியும் துணி எடுக்க நைட் ஆகிடும் அதுவரைக்கும் கூடவே இரு..”

வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் சரஸ்வதிக்கு கிருஷ்ணம்மாள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் போது அதை வேண்டாம் என்று சொல்ல அவள் என்ன முட்டாளா..?

“ஆயா அவங்களுக்கு நிறைய வேலை இருக்கு..”

“ஒருநாள் தானே ராசா நாளைக்கு போய் அந்த வேலையை செஞ்சிகிடட்டும்.”

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை பாட்டி, நான் இருக்கேன்.“ என்றாள் முகம் முழுவதும் பூரிப்புடன்.

கிருஷ்ணம்மாள் செய்த காரியம் அங்கிருந்த யாருக்குமே பிடிக்கவில்லை இருந்தாலும் அமைதியாக இருக்க காரணம் வெளியாள் முன் கேவலப்படுத்திடக் கூடாதே என்று தான்.

‘யாரோ என்னமோ பேசிக்கோங்க எனக்கு கவலையே இல்ல’ என்பது போல் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க. யுகியும் அதை தான் செய்து கொண்டிருந்தான்.

போலீஸ்காரன் புத்திக்கு எல்லாமே சந்தேகமாக தானே இருக்கும்.

“நான் பேசக்கூடாதுன்னு சொன்னதும் எனக்கு தெரியாம போன்ல பேசறாளா.. இருக்கட்டும்." என்றவனுக்கு யுகியை ஏதாவது செய்தாவது நிலாவை கைப் பிடிக்க வேண்டும் என்ற வெறி தான் ஏறியது.

“நிலா தட்டைப் பார்த்து சாப்பிடு. இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு ஒரு போன் இருந்துட்டா போதும் சோறு தண்ணிக் கூட தேவைப்படாதுப் போல.. யுகி உனக்கு வேற தனியா சொல்லனுமா?” என்று மணி மிரட்டவும் யுகியும் நிலாவும் ஒரே நேரத்தில் அலைபேசியை கீழே வைத்து உணவு சாப்பிட நந்தன் கண்ணில் இருந்து எதுவும் தப்பவில்லை.

“இவளுக்கு என் பக்கத்துல யார் உக்கார்ந்தாலும் பிரச்சனை இல்லை, என்கிட்ட எவ ஈசிட்டு சுத்துனாலும் பிரச்சனை இல்ல.. எனக்கு தான் அப்போல்ல இருந்து இப்போ வரைக்கும் இவக் கிட்ட எவன் பேசுனாலும் பத்திட்டு எரியுது. இப்போகூடப் பாரு என் பக்கம் திரும்புறாளான்னு இவளை..” என்று பல்லைக் கடித்தவன், அதற்கு மேல் சாப்பிட முடியாமல் எழுந்து சென்று விட்டான்.

“நந்து சாப்பிடலையா?” 

“போதும். "

அந்த போதும் என்ற ஒற்றை வார்த்தையில் அவன் எந்த அளவிற்கு கோவமாக இருக்கிறான் என புரிந்துக் கொண்ட நிலாவிற்கு அவன் கோவம் வடியும் வடிகாலாக தன்னை தான் பயன்படுத்துவான் என நினைக்கும் போதே, விரல்கள் நடுங்கியது. அவனை நிமிர்ந்து பார்க்கவே அஞ்சினாள்.

சரஸ்வதியின் கண்கள் கூட நிலாவை தான் அளவிட்டது,

சுற்றி இருக்கும் பெண்களின் கண்கள் அங்கிருந்த வளவன் யுகியைக் காட்டிலும் காவல் உடையில் இருந்த நந்தனை தான் மொய்த்தன. அப்படி இருக்கும் போது அருகில் இருந்த நிலாவின் பார்வை இதுவரை அவன் பக்கமே திரும்பாமல் இருக்க அதுவே சந்தேகத்தை உருவாக்கியது சரஸ்வதிக்கு.

ஒன்று பிடிக்காமல் இருந்தால் பார்க்காமல் இருப்பார்கள். இல்லையென்றால் அதிதமாக பிடித்திருந்தாலும் அடுத்தவர்கள் பார்த்து விடக்கூடாது, தன்னுடைய எண்ணம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்றும் பார்க்காமல் இருப்பார்கள். இவள் அதில் எந்த விதம் என தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்று எண்ணினாள்.

நந்தனுடன் வேலைப் பார்ப்பவள் அவனைப் போல பாதியாவது இருக்க வேண்டாமா.?

நந்தன் கையை கழுவ செல்ல அவனுக்கு பின்னாலையே சரஸ்வதியும் சென்றாள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

அனைவரும் சாப்பிட்டு வெளியே வர, கைகழுவ சென்ற நிலாவின் அருகில் வந்த நந்தன். “நைட் பத்து மணிக்கு மாடிக்கு வர..”

அவன் சொன்னது அவளுக்கு மட்டும் தான் கேட்டிருக்கும்,

“இல்லங்க அது..” என்றவளுக்கு நாவுக் கூட துரோகம் செய்து வார்த்தைகளை வரிகளாக்க மாட்டேன் என முரண்டு பிடித்தது.

“சொன்னது செய்.“ கடுமையாக வார்த்தைகள் வந்து விழ.. அதற்கு மேல் மறுத்து பேச முடியவில்லை.

'சரி நிலா இன்னைக்கு கன்னம் பன்னாக போகுது பார்த்து வெச்சிக்கோ. எதுக்கும் ஆயில்மெண்டை போகும் போது வாங்கிட்டு போ..' அவளுக்கு அவளே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.

சொல்ல வேண்டிய யாரும் தான் அவளுடன் பேசுவதில்லையே.

மனம் தளரக் கூடாது என மூச்சை இழுத்து விட்டு தன்னை சரி செய்துக் கொண்டாள்.



Leave a comment


Comments


Related Post