இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 31(a)) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 23-06-2024

Total Views: 3987

உனக்கென்றே உயிர் கொண்டேன் 31 (a)

அதிகாலை நான்கரை ஆறு முகூர்த்தம்.

மூன்றை நெருங்கும் வேளையில் நலங்கு வைத்து, மணமக்களுக்கு திருமண ஆடை கொடுப்பதற்காக, சண்முகம் அஸ்வினின் அறைக்கும், தனம் பூர்வியின் அறைக்கும் சென்று எழுப்பிக் கூட்டி வந்தனர்.

அஸ்வினுடன் உறங்கிக்கொண்டிருந்த தமிழ், சோம்பல் முறித்தவனாக எழுந்து அமர,

"பூபேஷ் நைட் ரூமுக்கு வரல போல?" என்ற அஸ்வின் சண்முகத்துடன் மேடைக்கு சென்றான்.

அங்கு பூர்வியும் "அம்மு நைட் ரூமுக்கு வரலையா?" என தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, "அம்முவை எங்கன்னு பாரு வர்ஷி" என்று சொல்லி தனத்துடன் சென்றாள்.

முகூர்த்தம் ஐந்தரைக்கு மேல் என்பதால், மிக நெருங்கிய உறவுகள் மட்டுமே, அதாவது இரவு மண்டபத்தில் தங்கிய சொந்தங்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

மணமக்கள் இருவருக்கும் பந்தகாலிட்டு, காப்பு கட்டி, நலங்கு வைத்து முடிய...

தமிழ் தன் நண்பனையும் தன்னவளையும் காணவில்லை என்று மண்டபத்தை அலச நகர்ந்தான். இருவருக்கும் மாற்றி மாற்றி அழைப்பு விடுத்தபடி. 

வெண்பாவின் அலைப்பேசி பூர்வியின் அறையில் ஒலிக்க,

"அத்தான்" என்று ஏற்ற வர்ஷி, "வெண்பா இங்கில்லை அத்தான். மொபைல் மட்டும் இருக்கு. நான் மண்டபம் முழுக்க பார்த்திட்டேன். இங்கிருக்கும் ரூம்களில் பார்க்கலான்னு வந்தேன்" என்று ஒரே மூச்சாக சொல்லியவளிடம்...

"நானும் வரேன்" என்று தமிழும் அங்கு செல்ல, ஒரு அறைக்கு முன் வர்ஷினி அதிர்ந்து நின்றிருந்தாள்.

தமிழ் அவளை கண்டு அங்கு வர, பூர்வியின் அறையிலிருந்து வெளிவந்த தெய்வானை, தமிழுக்கு முன் வர்ஷினியை அடைந்து என்னவென்று பார்க்க... தமிழும் அருகில் வந்து சேர்ந்தான்.

பாதி திறந்திருந்த கதவு வழியாக,

அவ்வறையின் கட்டிலில் வெண்பாவும், பூபேஷும் ஒன்றாக படுத்திருந்த காட்சி தென்பட்டது.

இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப்போலிருந்தது.

வர்ஷினிக்கு இருந்த அதிர்வு தமிழுக்கு இல்லை போலும். அவன் கதவினை திறந்துகொண்டு உள்ளே நுழைய,

"அய்யோ... அய்யோ... இந்த கூத்து எங்க நடக்கும்" என்று இமைக்கும் நேரத்தில் தெய்வானை வாயிலும், மார்பிலும் கத்திக்கொண்டு அழைத்திட, அப்போதுதான் நலங்கு முடித்து, கையில் புடவை அடங்கிய தட்டுடன், பூர்வியை அவளது அறைக்கு அழைத்து வந்த உறவு பெண்கள் அனைவரும் விரைந்து வந்து அக்காட்சியை கண்டுவிட்டனர்.

"அடியாத்தி இதென்னடி இது..." என்று ஆரம்பித்து, வெண்பாவும், பூபேஷும் ஒன்றாக படுத்திருப்பதைக் கண்டு ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச... தமிழ் ஸ்தம்பித்து நின்றான்.

இருவரையும் எழுப்பி விடவே தமிழ் உள்ளே அடி வைத்தான்... தெய்வானை அதற்குள் கூட்டத்தை கூட்டிவிட்டார்.

அவர் மேலும் கத்திக்கொண்டே இருக்க...

"ம்மா சும்மா இருங்கம்மா" என்று வர்ஷினி அவரை அடக்க பார்த்தும் முடியவில்லை.

அவ்வளவு சத்தத்துக்கும் இருவரும் அசைந்து கொடுக்கவில்லை.

"தமிழ்" என்று பூர்வி அருகில் வர,

"மயக்கத்தில் இருக்க மாதிரி தெரியுது பூர்வி" என்றான் தமிழ்.

அதற்குள் சத்தம் கேட்டு அஸ்வின் பக்கமிருந்த ஆண்கள் கூட்டமும் அங்கு வந்திருந்தது.

"என்னாச்சு?" சண்முகம், தேவராஜூடன் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னால்வர, வெண்பாவை எழுப்பிட பூர்வி முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

"இது மாப்பிள்ளையோட தங்கச்சில?" ஒருவர் கேட்டிட...

"ஆமாம்" என்ற மற்றொருவர், "இதென்ன அசிங்கம்? இன்னும் கொஞ்ச நேரத்துல வேறொருத்தன்கூட நிச்சியத்தை வச்சுக்கிட்டு... இன்னொருத்தனோட" என்று அவர் முடிக்குமுன் அஸ்வின் அவர் மீது பாய்ந்திருந்தான்.

"என்ன என்னைய அடிக்க வரியா? இல்லாததையா சொன்னோம்" என்று அவரும் எகிறிட...

"கொஞ்சம் வாயை மூடுங்க" என்று தமிழ் கத்தியதில் அவ்விடம் அமைதியாகியது.

தெய்வானைதான் அக்கறையில் புலம்புவதைப்போல் புலம்பிக் கொண்டிருந்தார்.

"இப்படியொருத்தி மீதா எங்க வீட்டு பிள்ளைக்கு ஆசை வரணும்? இப்படி குணம் சரியில்லாம இருப்பான்னு தெயாமப்போச்சே..." என்று அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டேப்போக...

"அப்பா இன்னும் ஒருவார்த்தை அவங்க பேசினாங்கன்னா நான் கண்டிப்பா அறைஞ்சிடுவேன்" என்று வெடித்தான் தமிழ்.

"இது ஆவேசப்படுற நேரமில்லை கண்ணு. மொத புள்ளைங்க முகத்துல தண்ணியை தெளிச்சு எழுப்பு" என்று அகிலாண்டம் சொல்ல, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தனம் கொடுத்தார்.

தெய்வானை அதிகமாக பேசியதிலே மகளின் சூழ்ச்சியை அகிலாண்டம் கண்டு கொண்டார்.

தமிழும், பூர்வியும் இருவரையும் தண்ணிர் தெளித்து எழுப்பிட... கண்களை சுருக்கி எழுந்தமர்ந்த பூபேஷ்... நெற்றியை பிடித்துக்கொண்டான்.

"தலை வலிக்குதுடா தமிழ். கல்யாணத்துக்கு டைம் ஆச்சா?" எனக் கேட்டபடி தலையை உயர்த்த... கூட்டமாக அவ்விடமிருந்ததை கண்டு அதிர்ந்து எழுந்து நின்றான்.

எழுந்து திரும்பிய வேகத்தில் தான், தனக்கருகில் வெண்பா உறங்கியிருந்திருக்கிறாள் என்பதே அவனுக்குத் தெரிந்தது.

அப்போதுதான் இமை பிரித்த வெண்பா, அங்கிருப்பவர்களைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.

"ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறதைப்பாரு?" என்ற தெய்வானையை தேவராஜ் முறைத்த போதும், அவர் வாயினை மூடவில்லை.

"இப்படிப்பட்ட பொண்ணு உனக்கு வேணுமா தமிழு?" இப்போது தெய்வானை தமிழிடமே நேரடியாகக் கேட்டிருந்தார்.

அஸ்வின் வெண்பாவின் அருகில் ஓடிச்சென்று அமர்ந்து அவளின் முகம் துடைத்து என்ன நடந்ததென்று விசாரிக்க...

பூபேஷ் மற்றும் வெண்பா இருவருக்குமே தேநீர் குடித்த நினைவு மட்டுமே இருந்தது.

"ஒண்ணுமே பண்ணல தமிழு." பூபேஷுக்கே கண்கள் கலங்கி விட்டிருந்தது.

எப்படியான பாரதூரமான பழியில் இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.

"ம்ப்ச்... புரியுதுடா" என்ற தமிழ் பூபேஷின் தோளில் தட்டிக்கொடுக்க, வெண்பா தமிழை ஏறிட்டு சிவந்த விழிகளோடு இருபக்கமும் இல்லையெனும் விதமாக தலையசைத்தாள்.

"என்னப்பா ஆளாளுக்கு சும்மா இருந்தாக்கா எப்படி?

"தங்கச்சி பண்ண இழி செயலுக்கு, அண்ணன் கல்யாணத்தை நிறுத்திடாதீங்க.

"நம்ம பொண்ணை இப்படிபட்ட குடும்பத்தில் எப்படி கொடுக்கிறது?" என்று ஆளாளுக்கு நரம்பின்றி பேசிட...

"இந்த குடும்பமே வேணாம் அண்ணா. தலை முழுகு" என்றார் தெய்வானை. தேவராஜிடம்.

"அண்ணி... இப்போ என்ன நடந்துப்போச்சு. நம்ம பிள்ளைங்கள நாமலே நம்பலனா எப்படி?" என்று தனம் வெண்பாவின் மீது தவறு இருக்காதென்று பரிந்து பேசிட...

"நேரில் பார்த்தும் நம்ம தமிழு வாழ்க்கையை நாசமாக்க நினைக்கிற நீயெல்லாம் ஒரு அம்மாவா" என்று தெய்வானை கேட்டு முடிக்குமுன்...

"நீங்களும் ஒரு மனுஷியா? இதே உங்க பொண்ணுன்னா இப்படி செய்திருப்பீங்களா?" என வெடித்து, தெய்வானையின் முன் விரல் நீட்டி அத்தனை கோபமாகக் கேட்டிருந்தாள் பூர்வி.

அங்கிருந்த அனைவருக்கும் பூர்வியின் இந்த கோபமும், தெய்வானை பார்த்து அவள் வினவிய கேள்விக்கான பொருளும் புரியாது பார்த்தனர்.

வெண்பாவின் மீது தண்ணீர் தெளித்த பூர்வி, பாட்டிலை மேசையில் வைத்திடும் போதுதான் அங்கிருந்த தேநீர் கோப்பகளை கவனித்தாள். தெய்வானை அதனை கொண்டு வந்ததும் நினைவுக்கு வந்தது.

அவர் முன்பு எப்போதாவது இதுபோன்று உபசரிப்பு செய்திருந்தால்... இந்நேரம் அவர் மீது பூர்விக்கு சந்தேகம் வந்திருக்காதோ?

நொடியில் யூகித்துவிட்டாள்... அவரின் திடீர் அமைதி, ஒட்டுதல், மகேஷ் வர்ஷி திருமண சம்மதம் என அனைத்துக்கு பின்னாலும் இப்படியொரு வலுவான திட்டத்தை வைத்திருந்திருக்கிறார் என்பதை.

"ஏய்! என்ன? நீ கை நீட்டி கேள்வி கேக்குற அளவுக்கு நான் என்ன செய்ய பண்ணேன்?" என்று தெய்வானை சீறினார்.

"என்ன பண்ணீங்களா? இன்னமும் நடிக்கிறீங்க நீங்க?" என்ற பூர்வி, அங்கிருந்த தேநீர் கோப்பைகளை காண்பித்தாள். அதில் இரண்டு கோப்பைகள் காலியாக இருந்திட... ஒன்று ஏடு படிந்து காய்ந்திருந்தது. அது பூர்வி குடிக்காமல் வைத்துவிட்டு சென்றது.

அப்போதுதான் வெண்பாவுக்கும், பூபேஷுக்குமே தேநீரின் நினைவு வந்தது. அதை குடித்த நொடி தன்னிலை இழந்து சரிந்திருந்தனர்.

"இதென்னடி வம்பா இருக்கு? பேசிக்கிட்டு இருக்கீங்களேன்னு கொண்டு வந்து கொடுத்தேன். அதுக்கு என்னையவே நீ காரணம் காட்டுவியா?" எனக் கேட்ட தெய்வானை, "இன்னும் தாலியே ஏறல. அதுக்குள்ள நாத்தனாரு பண்ணுற தப்பை மறைக்க பாக்குற" என்றார்.

"இப்படி சொந்தபந்தமெல்லாம் கூடியிருக்குன்னு தெரிஞ்சும், ரா முழுக்க ஒருத்தனோட..."

"உங்களுக்கும் ஒரு மக இருக்காள். மறந்துட்டு பேசாதீங்க" என்று உருமினான் அஸ்வின்.

வெண்பாவின் கன்னத்தில் வரியாக கண்ணீர் இறங்கியது.

"போதும்மா... போதும்." சண்முகம் கையெடுத்துக் கும்பிட்டார்.

தேவராஜுக்கும், மணிக்கும் ச்சீ என்றானது. அவர்களால் கண் முன்னே பார்த்தும், வெண்பா மற்றும் பூபேஷை தவறாக எண்ண முடியவில்லை. ஆனால் பூர்வி சொல்வது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாதபோதும் தெய்வானை செய்தாலும் செய்திருப்பார் என்று நினைக்க முடிந்தது. தெய்வானையின் குணம் நன்கு அறிந்தவர்களாயிற்றே.

தமிழுக்கு வெண்பாவின் கண்ணீரை பார்க்க பார்க்க... அத்தனை வலியாக இருந்தது. அனைவரின் முன்பும் அவனால் அவளருகில் உரிமையாய் சென்று ஆறுதலாக நிற்க முடியவில்லை.

நண்பனாக பூபேஷின் அருகில் நிற்க வேண்டிய நிலை. தெய்வானையின் பேச்சில் அரண்டு பூபேஷ் தமிழின் கையை இறுகப்பற்றியிருந்தான்.

"உங்களோடது நாக்கா? தேள் கொடுக்கா? உங்கள் மகளென்றால் இப்படி பேசுவீங்களா?" என்று தமிழ் வெகுண்டெழ...

"எம் பொண்ணு ஏன் இப்படியொரு காரியத்தை செய்யப்போறாள்" என்ற தெய்வானை, "செய்தால் அப்போவே கொன்னுடுவேன்" என்று சொல்ல...

கோபமாக ஏதோ பேச வந்த தமிழை தடுத்த பூர்வி...

"இவங்க திட்டம் இது தமிழ். நீ ஆத்திரப்படாதே! மகேஷ், வர்ஷினி கல்யாணப்பேச்சுக்கு சம்மதிக்கிற மாதிரி சம்மதித்து, வெண்பா பெயரை எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி நிச்சியத்தை நடக்கவிடாமல் செய்ய பிளான் பண்ணியிருக்காங்க" என்றாள்.

'என்ன இது அப்படியே என் மனசை படிச்சவளாட்டம் சொல்லுறாள்!' தெய்வானை அசந்து போனார்.

"என்ன பேச்சே காணோம்?" தமிழ் முறைத்திட...

"என்ன கண்டாலே உன் அக்காவுக்கு ஆவாது. அந்த கடுப்பில் எம்மேல பழி போடுறாள்" என்று அப்போதும் தெய்வானை அசரவில்லை.

"வேண்டாம் தெய்வா. ஒரு பொண்ணா இருந்துட்டு நீயே உன் மகள் வயசுல நிக்கிற பொண்ணை தப்பாக்காட்டிட முயற்சிக்காதே!" என்றார் அகிலாண்டம்.

"என்ன அவளை நல்லவளா காட்டிட... என்னை கேட்டவளாக்கப் பாக்குறீங்களா? அவனை மயக்கினது இல்லாமல் உங்களையும் எல்லாம் மயக்கிட்டாளா? இப்படி ஒத்து ஊதுறீங்க?" என்ற தெய்வானை தன் வாயினை மூடாது, "இவ்வளவு அசிங்கப்பட்டும் எப்படித்தான் இத்தனை மனுஷங்க முன்னுக்க நிக்க முடியுதோ?" என்றார். வெண்பாவை பார்த்துக்கொண்டே.

"அதான் இத்தனை பேர் நேரில் பார்த்தோமே! ஒன்னா படுத்திருந்ததை. ஒன்னுமேவா நடந்திருக்காது?" தெய்வானைக்கு துணையாக அங்கு குரல்கள் எழும்பிட...

அங்கு பூர்வி குடிக்காது வைத்திருந்த கோப்பையை கையிலெடுத்த தமிழ்...

"இதை ஃபாரன்சிக் துறையில் கொடுத்தால், இதில் கலந்தது சர்க்கரையா இல்லை வேறெதுவுமா தெரிந்துவிடும்" என்றதோடு, "இப்போவே நான் போலீஸ் கூப்பிடுறேன்" என அலைபேசியை கையிலெடுத்தான்.

தெய்வானை அரண்டுவிட்டார்.

தெய்வானை மூன்று கோப்பையிலுமே வீரியமிக்க மயக்க மருந்தை கலந்திருந்தார். பூர்விக்காக ஒன்றில் கலக்காமல் விட்டு, அது மாறிவிட்டால் கதையே மாறிவிடுமென பூர்வியை பற்றியும் கவலைக்கொள்ளாது மூன்றிலுமே கலந்தார்.

சரியாக அந்நேரம் மண்டபத்தின் மேனேஜர் தமிழின் முன் வந்து தன்னுடைய அலைபேசியை காட்டிட அவனது கை நரம்புகள் புடைத்து எழும்பின.

தமிழ் அதனை அப்படியே கூட்டத்தின் பக்கம் காட்டிட...

அதுவரை வெண்பா மற்றும் பூபேஷை தவறாக பேசிய உறவினர்கள் எல்லாம் தெய்வானையை "இப்படியும் ஒரு பெண்ணா" என்று பேசினர்.

மூன்றாம் மனிதர்கள் என்றாலே இப்படித்தானே! அவர்கள் வாய்க்கு வந்ததை பேசுவர். யாரையும் கருத்தில் கொள்வதுமில்லை... உண்மை எதுவென்று ஆராய்வதுமில்லை. அவர்களுக்கு வாய்க்கு மெல்ல அவல் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

சமையல் பகுதிக்கு சென்று மூன்று தேநீர் வாங்கி வந்த தெய்வானை, இங்கு அறைக்கு வருமுன்... மாடிப்படிகளுக்கு கீழ் நின்று முதலில் இரண்டு கோப்பையில் எதையோ கலப்பதும், சிறிது யோசித்துவிட்டு மூன்றாவது கோப்பையில் கலப்பதும் நன்றாக பதிவாகியிருந்தது. அதை அவரே கொண்டு வந்து அவ்வறைக்குள் செல்வதும், சிறிது நேரத்தில் வெளி வருவதும், அவரைத் தொடர்ந்து பூர்வி வந்ததும், உள்ளே எட்டிபார்த்தபடி அவர் மறைந்து நிற்பதும், சில நிமிடங்களில் உள்ளே சென்று வெளிவந்து மற்றொரு அறைக்குள் சென்று கதவை சாற்றுவதும் ஆங்காங்கே வைத்திருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது. இங்கு நடக்கும் சலம்பல் கண்டு மேலாளர் அதனை பரிசோதித்து தன்னுடைய அலைப்பேசிக்கு மாற்றி கொண்டு வந்து காணொளியை காட்டினார்.

"இப்பவும் இது உண்மையில்லைன்னு சொல்லப்போறீங்களா?" வெகு நிதானமாக... அதே சமயம் அதிக அழுத்தத்துடன் தெய்வானியிடம் கேட்டான் தமிழ்.

"அப்படியென்ன அந்த சின்னப்பெண் மேல் உனக்கு வன்மம்?" தேவராஜ் வினவினார்.

"ஆமாம்... நான் தான் பண்ணேன்..." தெய்வானை ஆக்ரோஷமாகக் கத்தியிருந்தார்.

"நீயெல்லாம் ஒரு பெண்ணா?" அனைவரும் அருவருப்பாக முகம் சுளித்தனர்.

அதையெல்லாம் தெய்வானை கருத்தில் கொள்ளவேயில்லை. உண்மை தெரிந்த பின்னர் எதற்கு வேடமென தன் உண்மை முகத்தைக் காட்டியிருந்தார்.

"வர்ஷினி பிறந்ததிலிருந்து அவளுக்கு தமிழ் தான்னு நினைச்சிட்டு இருந்தேன். மொத்தமா அதுக்கு ஆப்பு வைத்தால் சும்மா விடுவேனா?" என்றவர், "என்னை சரிகட்டிட, எனக்குத் தெரியாமல் எம்பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க. விடுவேனா. ரெண்டு பேரையும் அசிங்கப்படுத்தி ஓரம் கட்டணும் நினைச்சு திட்டம் போட்டேன். அந்த மகேஷ் பய கிளம்பிப்போயி என் திட்டத்தில் மண்ணைப்போட்டன். அதுல இந்த பூபேஷ் வந்து மாட்டிக்கிட்டான்" என்று ஆங்காரமாக தான் செய்தது தவறே இல்லையெனும் விதத்தில் கூறினார்.

அவரின் உடல்மொழி மற்றும் வார்த்தைகளில் மற்றவர்கள் உணர்வற்று உறைந்து நின்றனர்.

'ஒரு பெண் இப்படியும் செய்வாளா?' அனைவரின் மனதிலும் ஒருங்கே உதித்த கேள்வி.

நான் இதற்கு மேலும் செல்வேன் என்பதை அடுத்த நொடி தன் பேச்சின் மூலம் காட்டினார் தெய்வானை.



Leave a comment


Comments


Related Post