இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 31(b)) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 23-06-2024

Total Views: 4433

"இப்போ உண்மை தெரிஞ்சிடுச்சு. இனி மறைச்சு செய்யணும் அவசியமில்லை. நேரடியாவே இந்த கல்யாணத்தை நிறுத்தி, தமிழை என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன். இன்னைக்கு நிச்சயம் தானே நடக்கப்போவுது. அதெப்படி கல்யாணம் வரை போகுதுன்னு பார்க்கிறேன்" என்ற தெய்வானைக்கு அத்தனை பேரும் தன்னை அருவருப்பாக பார்க்கின்றனரே என்று கொஞ்சமும் பயமோ, பதட்டமோ, குற்றவுணர்வோ கொள்ளவில்லை. மாறாக... தான் நினைத்ததை முடிப்பேன் என்று ஒருவித திமிருடன் நின்றிருந்தார்.

தெய்வானை பேசி முடிய மணி அவரை ஓங்கி அறைந்திருந்தார்.

"ஏய்" என்று அதற்கும் அசராது தெய்வானை எகிறி வர,

"இதை எப்பவோ செய்திருக்கணும்" என்றவரை, விலக்கி தெய்வானையின் முன் வந்த தமிழ்...

"அப்போ இதெல்லாம்... ஒரு பொண்ணை அசிங்கப்படுத்த நீங்க பண்ண காரியம், நான் உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்கணுங்கிறதுக்காகவா?" என்றதோடு, "அவளை கூட விடுங்க. உங்களைப் பொருத்தவரை அவள் யாரோ! ஆனால் பூர்வி? நீங்க பார்க்க பிறந்து வளர்ந்த உங்க அண்ணன் பொண்ணு தானே? நாம் செய்யும் தவறால் அவளோட வாழ்வும் பாதிக்கப்படும் கொஞ்சமும் யோசனை இல்லையா?" எனக் கேட்டு, "சுயநலம்..." என இழுத்து, "இப்போ இந்த செக் வெண்பாவை நான் கல்யாணம் செய்துகிட்டால் என்ன செய்வீங்க? உங்களால் என்ன செய்ய முடியும்?" என்றவன்...

அஸ்வின் மற்றும் சண்முகத்தை பார்த்து... தன்னிரு கரம் சேர்த்து குவித்து,

"மன்னிச்சிடுங்க. எங்க வீட்டு ஆளால இப்படியொன்னு நடக்கும் நாங்களே எதிர்பார்க்கல" என மன்னிப்பு வேண்டினான்.

தெய்வானையை பற்றி தெரிந்திருந்தாலும், அவர் இந்தளவிற்கு தரம் தாழ்ந்து நடப்பார் என்பதை எதிர்பாராது, நடந்த நிகழ்வில் அதிர்ந்திருந்த சண்முகம், தமிழின் மன்னிப்பில் சுயம் மீண்டு...

"இருக்கட்டும்ப்பா. யாரோ செய்ததுக்கு நீயேன் மன்னிப்பு கேட்கணும்" என்று பெருந்தன்மையாக பேசி தான் பெரிய மனிதன் என்பதை காட்டினார்.

"சாரி மாமா!" அஸ்வினிடம் கேட்கும்போது தமிழின் குரல் முற்றிலும் உடைந்து போனது.

அஸ்வின் வேகமாக தமிழை இழுத்து அணைத்திருந்தான்.

அங்கு நடந்த பேச்சுக்களில் வெண்பாவுக்கு ஒன்று தெரிந்தது. தனக்கும் தமிழுக்கும் இன்று நிச்சயம் ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்பது.

இந்நிலையில் அதனை எண்ணி அவளால் மகிழக்கூட முடியவில்லை.

தேவராஜூம், மணியும், பூபேஷிடம் மன்னிப்பு வேண்டிட... அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"அதான் உண்மை தெரிஞ்சிடுச்சேப்பா. விடுங்க" என்றுவிட்டான். கசந்த முறுவலோடு.

தனம் வெண்பாவின் அருகில் சென்று அவளின் கன்னம் துடைத்து,

"ஒன்னுமில்லைடா. எல்லாம் சரியாப்போச்சு. நடந்தது கஷ்டமா இருக்கும். தேவையில்லாததை அப்போவே மறந்திடனும்" என்று தேறுதலாக பேசினார். பூர்வியும், வர்ஷியும் வெண்பாவின் இருபுறமும் நின்று ஆறுதலாக அவளின் கரம் பற்றிக்கொண்டனர்.

வர்ஷினியால் தன் தாயின் இழி செயலை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரை பார்ப்பதையே தவிர்த்தவளாக இருந்தாள்.

அஸ்வினின் அணைப்பில் நின்றிருந்த தமிழ், 

"எனக்கு மொழியை இப்போவே கட்டிக்கணும். சம்மதம் சொல்லுங்க" எனக் கேட்டான்.

தமிழ் தன் தாய் தந்தையிடம் கூட கேட்கவில்லை.

அஸ்வின் சண்முகத்தை ஏறிட்டான்.

வெண்பாவின் மீது தவறு இல்லையென்றாலும், அவள் மீது இனி படியும் பாவமான பார்வையை போக்குவதற்கும், மறக்க வைப்பதற்கும் இந்த திருமணம் அவசியமென நினைத்த சண்முகம் சரியென தலையசைத்தார்.

ஒன்றை மற்றொன்றால் மறக்க வைத்திட முடியும் என்பதே நிதர்சனம். அதனைத்தான் தமிழும் கையில் கொண்டான்.

தேய்வானையின் முகம் விகாரமாக மாறியது.

"இனி உன்னால் ஒன்னும் செய்ய முடியாது" என்ற மணி, தெய்வானையை இழுத்துச்சென்று பக்கத்து அறையில் தள்ளி கதவினை பூட்டினார்.

சன்னல் பக்கம் வந்து, தெய்வானையை உருத்து பார்த்தவர்...

"கல்யாணம் முடிஞ்சதும் திறந்து விடுறேன். எங்கப்போகணுமோ போயிக்கோ!" என்றார்.

"அதான் எல்லாம் முடிஞ்சுதே. ஆக வேண்டியதை பாருங்க" என்று பெரியவர் ஒருவர் சொல்ல, முதலில் ஏற்பாடாகியதுப் போல அஸ்வின், பூர்வி திருமணத்திற்கு அனைவரும் தயாராகினர்.

எல்லோரும் கலைந்து செல்ல...

"நான் பேசிட்டு வரேன் மாமா" என்று அஸ்வினிடம் வெண்பாவை கண்காட்டினான் தமிழ்.

அஸ்வின் பூபேஷை தன்னுடன் கூட்டிச்சென்றான்.

"சாரிங்கண்ணா. இப்படி நடக்கும் நினைக்கல" என்று பூபேஷ் தலை கவிழ்ந்து கூற,

"உன் சிஸ்டர் பக்கத்துல நீ தூங்கியதே இல்லையா?" எனக்கேட்டு, தனக்குத் தெரிந்து நடக்கவில்லை என்றாலும், தன்னைப்போல் தனக்குள் எழுந்திருக்கும் குற்றவுணர்வை நொடியில் அஸ்வினின் வார்த்தைகளால் தூக்கி எறிந்தான் பூபேஷ்.

வெண்பா கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள். ஏனோ முன்பு போல் தமிழின் முகத்தை அவளால் ஏறிட்டு பார்க்க முடியவில்லை. நடந்த விஷயம் நெருடலாக இருந்தது.

சில கணங்கள் அவளையே ஆழ்ந்து பார்த்தவன்...

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" எனக் கேட்டான்.

விலுக்கென நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் தொலைந்து மீண்டவன்,

"ரொம்ப பிடிக்கும். காரணமில்லை. பார்த்ததும் அப்படின்னும் சொல்லமாட்டேன். உன்னோட நீண்ட பின்னல் உன்னை கவனிக்க வைத்தது. உன்னோட அழுகை, எப்பவும் சோகமா இருந்த உன்னோட முகம் உள்ள என்னவோ பண்ணுச்சு. ஒருநாள் லேப் காரிடாரில், ஐ தின்க் அஸ்வின் மாமாகிட்ட பேசிட்டு இருந்தாய்... அப்போவே என்ன பிரச்சினைன்னு கேட்டு தீர்த்து வைக்கணும்... அதுக்கு பிறகு உனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னு எனக்குள்ளே பாதுகாப்பா உன்னை பொத்தி வச்சிக்கணும் அப்படின்னு ஒரு வேகம். எனக்கு பிஜி படிக்கணும் விருப்பமில்லை. உனக்காக தான் பிஜி சேர்ந்தேன். உன் படிப்பு முடியுற வரை சொல்லக்கூடாதுன்னு நினைத்திருந்தேன். அப்புறம் பூர்வி மேரேஜ் முடியட்டும் வெயிட் பண்ணேன். அஸ்வின் மாமா தான் மாப்பிள்ளைன்னதும் உன்னை பிடிக்கும்ன்னு வீட்டில் எல்லோரிடமும் சொல்லிட்டேன். பூர்வி, மகேஷ்க்கு நான் பிஜி சேர்ந்தப்போவே தெரியும். அவங்களுக்கு முன்னாடியே பூபேஷ்க்கு தெரியும். அத்தை என் மேரேஜ் பேச்சு எடுத்ததும், அஸ்வின் மாமா, தாத்தாகிட்ட பேசிட்டேன். இன்னைக்கு மேரேஜ் முடிஞ்சதும் நம்ம எங்கெஜ் வச்சிக்கலாம் பிளான். இப்போ நான் சொன்னதையெல்லாம் உன்கிட்ட சொல்லி, நீயா எனக்கு ஓகே சொல்லணும் அப்படின்னு சின்ன ஆசை. அதனால் மத்தவங்களை உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லி வைத்திருந்தேன். லாஸ்ட் வரை உன்கிட்ட சொல்ல முடியல. உனக்கும் என்னை பிடிக்கும் தெரியும்... சோ, உனக்கு நம்ம என்கேஜ்மெண்ட் சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் நினைத்தேன். அதுக்குள்ள என்னவோ... இட்ஸ் ஓகே" என்று தான் தான் பேச பேச அகல விரித்து கொண்டே சென்ற அவளின் கண்களை ரசித்தவாறே தன் மனதின் மொத்த காதலையும் தன்னவளிடம் சேர்ப்பித்திருந்தான்.

"என்ன பிடிக்கும் தானே?"

"ஹான்..." மலங்க மலங்க விழித்தாள். அவளை ஒட்டு மொத்தமாக மூச்சடைக்க செய்திருந்தான்.

"மொழிக்கு தமிழை பிடிக்கும் தானே?"

அவன் கேட்ட பாவனையில் வெண்பாவின் தலை தன்னைப்போல் ஆமென அசைந்தது.

"அப்போ மேரேஜ்?"

"ஓகே." சத்தமின்றி ஒலித்தது அவள் குரல்.

"அம்மாவை அனுப்பி வைக்கிறேன். ரெடியாகு" என்றவன் அவளின் கன்னம் தட்டி வெளியேறினான்.

வெண்பா தான்... தான் சொல்லாமலே தன்னுடைய காதல் நிறைவேறப்போகிறது என்பதை நம்ப முடியாது உறைந்து நின்றிருந்தாள்.

வர்ஷினி வந்து தொட்ட பின்னரே நிகழ் மீண்டாள்.

அடுத்து நடக்க வேண்டிய யாவும் துரித கதியில் நடைபெற்றது.

அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த தன் வீட்டு ஆட்கள் யாவரையும் ஒருவித வஞ்சத்தோடு சன்னல் வழி பார்த்திருந்தார் தெய்வானை.

வர்ஷினி அவ்வழியே கடக்க... அருகே அழைத்தவர் கதவினை திறக்க சொல்லிட அவரை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்தவள்...

"உன்னையெல்லாம் அம்மான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு" என்று சொல்லி நகர்ந்திட்டாள்.

முதல் முறை மகளின் அவ்வார்த்தையில் சுருக்கென்ற வலியை உணர்ந்தவர், அதனை புறம் ஒதுக்கினார்.

திருமண நேரத்திற்கு வந்து சேர்ந்த மகேஷ், தமிழின் திருமணமும் ஏற்பாடாகிறது என்பதை அறிந்து என்னவென்று விசாரித்திட பூபேஷ் அனைத்தும் கூறினான்.

எதற்காக வர்ஷினி தன்னுடைய அன்னையை நினைத்து பயந்து தேவையில்லா திட்டமெல்லாம் போட்டாள் என்பது அப்போது மகேஷுக்கு புரிந்தது. அவள் மீதிருந்த சிறு வருத்தமும் அக்கணம் விலகியது.

முதலில் அஸ்வின், பூர்வியின் கழுத்தில் தாலி கட்டி, பாத விரலில் மெட்டி அணிவித்து, பல்வேறு சடங்குகள் நடைபெற்று திருமணம் நிறைவு பெற... அடுத்து தமிழ், வெண்பா திருமணம் அவர்களின் நலனை மனதார விரும்பும் பல நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்தோடு இனிமையாக நடந்து முடிந்தது.

தமிழ் அவனது மொழியின் கழுத்தில் தாலி கட்டிய தருணம், அவளின் பார்வை அவனிடமும், அவனின் பார்வை அவளிடமும், அழுத்தமாக படிந்திருந்தது. இருவருக்குமே ஒருசேர தேகம் சிலிர்ப்பைக் காட்டியது.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய இரு ஜோடியும், முறையாக முதலில் பெண்ணின் வீட்டிற்கு பயணமாகினர்.

யாரும் தெய்வானையை கண்டுகொள்ளவில்லை.

மண்டபமே காலியான பின்னர் தான், மணி வந்து தெய்வானை இருந்த அறையின் கதவை திறந்துவிட்டு, அவரின் முகம் கூட காணாது சென்றிருந்தார்.

கணவனின் உதாசீனத்தை முதல்முறை உணர்ந்தார். எப்போதுமே தன்மீது படியும் மணியின் ஏக்கமான பார்வை கொடுக்காத உணர்வை அவரின் உதாசீனம் கொடுத்தது. அதையும் தெய்வானை நொடியில் தட்டிவிட்டிருந்தார்.

'நான் இருக்க வீட்டில் என்னோடு தானே அவள் வாழனும். எப்படி வாழுறான்னு பார்க்கிறேன்' என நினைத்தவர் வீடு நோக்கி செல்ல... அவரை அனைவரும் மொத்தமாக தவிர்த்து தலை முழுகியிருந்தனர்.



    


Leave a comment


Comments


Related Post