இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 24-06-2024

Total Views: 3780

     ஐஸ்வர்யா முரளியை பார்க்க அவனோ அமைதியாக அவளை தான் பார்த்து இருந்தான். 

    " நான் உன் வாழ்க்கையில் வந்தா அது உனக்கு கஷ்டமாக இருக்குமா?..." என்றாள் அமைதியான குரலில். 

     அவள் முரளியை பார்க்கும் போதே ஹரிஷான்த் கே கே அங்கிருந்து எழுந்து சென்று இருந்தனர். 

     "ஏய் ரியாமா என்ன பேச்சு பேசுற அவன் சும்மா சொல்லிட்டு போறான் நீ என் கூட இருந்தால் அதைவிட சந்தோஷம் வேற எதுவும்  எனக்கு இருக்காது. ஆனால் இப்ப நீ அதை பத்தி எதுவும் யோசித்து வறுத்தப்படாமல் எப்பவும் போல கலகலப்பாக இரு இப்படி அமைதியாக பேசினால் நல்லா இல்லடா" என்றான். 

    " தேங்க்ஸ் முரளி அப்பா சொன்னது போலத்தான் நீ இருக்க" என்றாள் புன்னகையுடன். 

    " என்ன சொன்னார்" என்றான் அவள் முகத்தை ஆவலாக பார்த்து. 

    " நீ ரொம்ப நல்ல பையனாம் நல்லா என்னை பார்த்துக்கொள்வாய் என்று சொன்னார்."  

     " ஓஓஹே அப்புறம் என்ன சொன்னார்" என்று கேட்டுக்கொண்டே அவளின் தட்டில் இருந்த உணவை ஸ்பூனில் எடுத்து ஊட்டிவிட்டான். 

     இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஹரிஷான்த், கே கே " பயபுள்ள அதுக்குள்ள கவுந்துட்டான்" என்று கூறி சிரித்துக்கொண்டனர். 

      "அப்புறம் உனக்கு எந்த வேலையும் இருக்காது சமைக்கிறது துவைக்கிறது என்று எல்லா வேலையும் அவனே செய்திடுவான்.  ஏன் உனக்கு சாப்பாடு கூட அவனே ஊட்டிடுவான் இப்படி ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரன் உனக்கு கிடைத்து இருக்கான் அதனால் அவனை பத்திரமாக பிடிச்சு வச்சுக்கே என்று சொன்னாங்க" என்றாள் புன்னகையுடன். 

     " ஓஓஹே சரியாதான் சொல்லியிருக்காங்க, பத்திரமாக பிடிச்சு வச்சுக்க சொன்னாங்களே எங்க வச்சுக்கணும் என்று சொன்னாங்களா" என்றான் அவள் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டு கேட்டான் முரளி. 

     அவனின் பார்வையும் கேள்வியும் ஐஸ்வர்யாவை  என்னவோ செய்ய அவள் முகம் சிவந்தது. 

    அதை கண்ட முரளி " ரியா..." என்று காதலுடன் டேபிள் மீது இருந்த அவள் கை மீது தன் கையை வைத்து மென்மையாக அழுத்தம் கொடுக்க சட்டென்று ஒரு கரம் அவனின் கை மீது பட்டென்று அடிவிழுந்தது. 

     "ஆஆ..." என்று சிறு சத்தத்துடன் தன் கையை இழுத்துக்கொண்டு யார் என்று பார்க்க அங்கு ஹரிஷான்த் கே கே நின்று இருந்தனர். 

     "டேய் இவனைப்போய் நல்லவன் என்று என் தங்கச்சியை  விட்டுட்டு போனா என்ன பண்ணிட்டு இருக்கான் பார்த்தியா  அம்பி என்று நினைச்சா ரெமோவா இருக்கான்" என்றான் ஹரிஷான்த். 

     நண்பனின் பேச்சில் முரளியின் முகம் சிவந்தது அதை கண்ட கே கே  "டேய் மச்சான் முகம் எப்படி சிவக்குது பாருடா" என்றான். 

   " என்ன பண்ணுறது  தங்கச்சிக்கு தான் வெட்கப்படத்தெரியலை மச்சானாவது வெட்கப்படுவதை பார்க்கலாம்" என்றான் ஹரிஷான்த். 

     "அண்ணா" என்று சினுங்களாக  அருகில் அமர்ந்திருந்த கே கே தோள் சாய்ந்து தன் முகத்தைக் மறைத்தாள் ஐஸ்வர்யா. 

     அவளின் முதுகை தட்டிக்கொடுத்தான் கே கே. 

    ஹரிஷான்த் முரளியை அணைத்து விடுவித்து கண்களால் நன்றி சொன்னான் என்றால் நண்பனின் நன்றி எதற்கு என்று அறிந்தவனாக நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் அவனும் கண்களால் பதில் கூறினான். 

    அதன் பிறகு அவர்கள் நாட்கள் இன்னும் அழகாக சென்றது.  வாரவிடுமுறை நாட்களில் நண்பர்கள் மூவரும் ஐஸ்வர்யாவையும் அழைத்து வருவார்கள்.  சினிமா பார்க் பீட்ச் என்று சுற்றுவார்கள்.  அதில் சிறிது நேரம் மட்டும் இருவரையும் தனியாக பேசவிட்டு விலகி செல்வார்கள். 

    அப்போது அவர்கள் பேச்சு காதல் பேச்சாக இல்லாமல் பொதுவான பேச்சுக்கள் தான் இருக்கும். அவளின் கைகளை மட்டுமே பிடித்து பேசுவான்.   காதலர்களுக்கான எல்லைக்குள் செல்லாமல் நண்பர்கள் என்ற நிலையில் மட்டுமே நடந்து கொண்டனர் இருவரும். 

    நாட்கள் வேகமாக சொல்ல ஐஸ்வர்யா இப்போது நான்காவது வருடம் படித்துக்கொண்டு இருந்தாள். 

     கே கே, முரளி இருவரும் ஊருக்கு செல்வது குறைவு தான்.  முடிந்த அளவு குடும்பத்தினர் உடன் வீடியோ காலில் பேசுவார்கள்.  பணியில் தங்கள் திறமையை வெளிப்படுத்த முழுமூச்சுடன் வேலை செய்து கொண்டு இருந்தனர். 

     கே கே புதிதாக ஒரு செயலியை (app) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தான்.  அவனுக்கு இரு நண்பர்களும் உதவி செய்து கொண்டு இருந்தனர். 
 
     அந்த வார இறுதியில் ஐஸ்வர்யாக்கு பிறந்த நாள் வந்தது.  நண்பர்கள் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சில ஏற்பாடுகள் செய்தனர். 

     எப்போதும்  அவள் காலையில் எழுந்து வரும்போது தான் குடும்பத்தினர் கேக் வெட்டச்செய்து வாழ்த்து சொல்லுவார்கள்.  இந்த முறை நண்பர்கள் பிளான் செய்தபடி முன் தின இரவு ஐஸ்வர்யாவுக்கு தெரியாமல் ஹரிஷான்த் வீட்டிற்கு வந்து இருந்தனர்.  

    ஐஸ்வர்யா இரவு உணவு உண்டு தூங்கச்சென்ற பிறகு அனைவரும் சேர்ந்து ஹாலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டு இருந்தனர்.  இரவு பதினொன்று நாற்பத்தைந்து தாண்டியதும் முரளியிடம் அவளை சென்று அழைத்து வரச்சொன்னான் ஹரிஷான்த். 

     அவளின் தாய் தந்தை அண்ணன்கள் இருக்கும் போது எப்படி  செல்வது என்று முரளிக்கு தயக்கமாக இருந்தது. அஷ்வன்த் ஹரிஷான்த்தின் அண்ணன் முரளியின் கை பிடித்து அழைத்து சென்று தங்கையின் அறை முன் நிறுத்திவிட்டு மச்சான் பார்த்து என் தங்கச்சி மேக்கப் இல்லாத முகத்தை பார்த்து பயந்திடப்போகிறாய் என்று விட்டு சென்றான். 

   முரளியே என்னது மேக்கப் இல்லாத முகமாம் அவள் எப்ப மேக்கப் போட்டு இருக்கா? எப்பவும் சிம்பிளாக தானே இருப்பாள் என்று குழம்பியவன் மெல்ல கதவை தட்டினான். 

    உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை இன்னும் கொஞ்சம் வேகமாக தட்ட அப்போதும் எந்த பதிலும் இல்லை.  மெல்ல கதவை திறக்க கதவு திறந்து கொண்டது.  எட்டி பார்த்தவன் கண்களுக்கு மங்கிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் குழந்தை போல்  பெரிய டெடி பொம்மையை அணைத்துக்கொண்டு  படுத்து இருந்த தோற்றம் ஓவியமாக மனதில் பதிந்தது. 

    மெல்ல அருகில் சென்றவன் காற்றில் அசைந்தாடி முகத்தில் உறவாடிக்கொண்டிருந்த முடிக்கற்றையை மெல்ல ஒதுக்கி காதின் பின் விட்டவன் விரல்கள் அவளின் கன்னத்தில் கோலம் போட்டன. 

     நல்ல தூக்கத்தில் இருந்தவள் அவன் கையை தட்டிவிட்டு மீண்டும் டெடி பொம்மைக்குள் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள். 

     அவளின் செயலை ரசித்தவன் மெல்ல அவள் காதோரம் குனிந்து  "ரியா" என்று அழைத்தான். 

     "ஊம்ம்..." என்று மெல்லிய ஓசை அவளிடம் இருந்து வந்தது.   "ரியா எழுந்திருடி" என்று மீண்டும் குரல் கொடுக்க 

      "அம்மா எனக்கு தூக்கமாக வருது இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று சினுங்களாக வந்தது அவள் குரல். 

    இதற்கு மேல் எப்படி எழுப்புவது என்று புரியாமல் இருந்தவன் மணி பதிரெண்டை நெருங்கவும் குனிந்து அவள் கன்னத்தில் தன் ஈர இதழை அழுத்தமாக பதித்தான். 

      ஈர இதழின் பரிசத்தில் தூக்கம் கலைந்தவளின் காதுமடல் உரச "ஹாப்பி பர்த்டே டு மைடியர்  ஏஞ்சல்" என்ற குரலில் கண் திறந்து பார்த்தவளின் முன் முரளி நின்று இருந்தான். 

    வேகமாக படுக்கையில் இருந்து எழுந்தவள்  "முரளி... நீ.. எப்படி... இங்க.."  என்று வார்த்தைகள் திக்கின. 

      மீண்டும்  "ஹாப்பி பர்த்டே டு மைடியர் ஏஞ்சல்"  என்று கூறிக்கொண்டே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு செயினை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட்டான்.  

    அப்போது தான் அவளுக்கு தன் பிறந்த நாள் என்று நியாபகம் வந்தது.  முரளி போட்டுவிட்ட செயின் எடுத்து பார்க்க அதில் இதயவடிவில் டாலர் இருக்க  அதை தன் கையில் வாங்கியவன் திறந்து காட்ட அதில் இருவரும் எடுத்த செல்ஃபி போட்டோ இருந்தது. 

     அதனை கண்கள் விரிய பார்த்தவளின் கன்னத்தில் மீண்டும் ஈர இதழை பதித்தான்.  ஐஸ்வர்யா அவனை முறைத்து பார்க்க அவனே அவளின் தாடையை பிடித்து நெற்றி கண்கள் மூக்கு கன்னம் என்று முத்தங்கள் வைத்தான்.  அவனை தள்ளிவிட மனம் நினைத்தாலும்  ஏனோ செயல்பட கைகள் எழும்பவில்லை.   

      அவனின் முத்தத்தில் கண்கள் தானாக மூடிக்கொள்ள கைகள் அவனின் சட்டையை பிடித்து கொண்டது.  அவளின் செயலை சம்மதமாக எடுத்துக்கொண்டவனின் பார்வை அவளின் உதட்டின் மீது பட மெல்ல அவளின் இதழ் மீது தன் இதழ் பதித்தான்.   

    அந்நேரம் கதவு தட்டும் ஓசை கேட்க சட்டென்று இருவரும் விலகி கதவை பார்க்க அது முழுமையாக மூடியிருந்தது.  இருவரும் ஆசுவாசமூச்சை விட்டனர். 

     அவளை ஒரு முறை முழுவதும் ஆராய்ந்தவன் அவளுக்கு போட்டு விட்ட செயின் லாக்கெட் திறந்து இருக்க அதை லாக் செய்தவன்

     அவளை கதவை நோக்கி செல்லுமாறு சைகை செய்தான். ஐஸ்வர்யா வேகமாக அவன்  அணிவித்த செய்னை தன் சட்டைக்குள் மறைத்துக்கொண்டு சென்று கதவை திறந்தாள். 

    அங்கு இருந்தவர்கள் ஹாப்பி பர்த்டே என்று ஒரே நேரத்தில் கூறி வாழ்த்தினர். 

    சந்தோஷத்தில் ஐஸ்வர்யா கண்கள் கலங்கின. 

    அஷ்வன்த் அவளை தோளோடு அணைத்து அழைத்து சென்று அலங்கரிக்கப்பட்ட கேக் முன்பு நிறுத்தினான். 

      கண்கள் கலங்க உதட்டில் புன்னகை உடன் கேக் வெட்டி முதலில் தாய் தந்தைக்கு ஊட்டி விட்டாள் பின் அஷ்வன்த், ஹரிஷான்த் கே கே என்று ஊட்டி விட்டவள் கடைசியாக முரளி அருகில் வந்து அவனுக்கு ஊட்டி விட அவனும் அவள் கையில் இருந்த கேக்கை வாங்கி அவளுக்கு ஊட்டி விட மூன்று அண்ணன்களும் ஓஓஹே.. என்று கூச்சலிட்டனர். 

    பெரியவர்கள் இருவரும் தங்கள் அறைக்கு சென்றுவிட இவர்களின் கேலி கிண்டல் கலைகட்டியது.  

     மறுநாள்  அனைவரும் கோயில் சென்று விட்டு ஓட்டலில் உணவு உண்டு முடித்து தாய் தந்தை அஷ்வன்த் சென்றுவிட நால்வரும் எப்போதும் போல் ஊரை சுற்றினர். 

    இந்த நாள் முதல் நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறியிருந்தனர்.  சிறு தனிமை கிடைத்தால் கூட காதலில் திளைத்தனர். 

    படிப்பை முடித்து அவளும் பணியில் சேர்ந்து இருந்தாள்.  கே கே தன் முயற்சியில் சில செயலிகளை உருவாக்க அதனை ஹரிஷான்த் கம்பெனிக்கே உரிமை கொடுத்ததால் அதன் மூலம் பல கோடிகள் வருமானமும் கம்பெனியின் பங்கு சிறிதும் கிடைத்தது. முரளியும் அவனுக்கு உதவியதால் அவனுக்கும் சில கோடிகள் கிடைத்தன. 

    கே கே திறமையை கண்ட மற்ற நிறுவனங்கள் அவனை தங்கள் கம்பெனிக்கு அழைத்தனர்.  ஆனால் அவன் அதனை மறுத்துவிட்டான்.  ஆரம்பத்தில் தனக்கு உதவிய ஹரிஷான்த் கம்பெனியிலேயே இணைந்து செயல்பட நினைத்தவன் சென்னையில் கம்பெனி தொடங்குவதை பற்றி பேசினான்.  

     அவனின் முடிவுக்கு ஹரிஷான்த் தந்தையும் சம்மதம் தெரிவிக்கவும் அடுத்த சில மாதங்களில் சென்னையில் முரளியின் தந்தையின் உதவியுடன் இடம் பார்த்து கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.  சென்னையில் ஆரம்பிப்பதால் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்று  வளர்ந்து வரும் பகுதியில் கம்பெனி தொடங்கியுள்ளனர்.

    ஹரிஷான்த் கே கே அதிக அளவில் பணம் முதலீடு செய்துயிருந்தனர்.  முரளியிடம் அந்த அளவுக்கு இல்லாததால் தன்னிடம் இருந்த குறைந்த அளவு பணத்தை கொடுத்து இருந்தான். 

    இருந்தபோதும் முரளியையும் பாட்னராகவே சேர்த்து இருந்தனர்.  இப்போது கம்பெனியும் தொடங்கி விட்டார்கள். 

     நினைவுகளில் இருந்தவனை போன் மணி ஓசை கலைத்தது எடுத்து பார்க்க கார்த்திகேயன் அழைத்து இருந்தான்.  அந்த பக்கம் என்ன சொன்னானோ 

     கேன்டீனில் தானே இருக்க நானே வரேன் என்று போனை அனைத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான் முரளி. 


    

    
    


Leave a comment


Comments


Related Post