இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 24-06-2024

Total Views: 2011

இதரம் -15


"அவளைத் தொட்டீங்க இந்த ஒலக்கையை எடுத்து என் வயித்துல அடிச்சு ஒங்க புள்ளையை உருத் தெரியாம அழிச்சுடுவேன் "ஆங்காரியாய் தலைவிரிகோலத்துடன் கையில் இருந்த உலக்கையை தன் வயிற்றுக்கு அருகில் வைத்தபடி நின்றிருந்தாள் மலர்க்கொடி . 

பாலனுக்கு உயிரே நடுங்கிப் போனது. இருந்திருந்து இத்தனை வருடங்கள் கழித்து அவன் பெயர் சொல்ல ஒரு வாரிசு உருவாகி இருக்க அது அழிய தானே காரணம் ஆவதா எனப் பதறினான். 

"சத்தியமேட்டுக்கு நா அப்படி செய்ய மாட்டேன்டி. ஒலக்கையை கீழ போடுடி."பதற்றமாய் கத்தினான் அவளின் கணவன் . 



மலரோ ஆத்திரம் அடங்காமல், "போ வெளியே அப்புறம் எதுக்கு இங்க வந்த.? அவ உன்னை மயக்குறாளா, சொல்லு .அவளை இப்படியே கொளுத்தி விடுறேன். அநாதைச் சிறுக்கிக்கு என் புருஷனை பங்கு போடணுமோ ஏன்டி ***** "என கத்தியபடி மல்லியின் முடியைக் கொத்தாகப் பற்றி இழுத்தாள். 


"அவ உன் கூடப் பொறந்தவடி இப்படி பேசாதடி" பக்கத்து வீட்டு பெண் வெண்ணிலாவின் நாத்தனார் மன்றாடினாள். 


"இவளா... இந்த சனியனை பெத்ததால தான் எங்கப்பனாத்தா செத்தாங்க .ஏதோ எடுபிடிக்கு ஆவறாளேனு வச்சிருந்தா என் குடும்பத்தை கெடுக்க வர்றா நாசமா போறவ. நீ எல்லாம் ஏன்டி உசுரோட இருக்க, சாவுடி" என்று படார் படாரென அவளின் முதுகிலேயே அடித்தாள்.


எந்த தவறும் செய்யாமல் இத்தனை பேச்சுக்கள் வாங்குவது தன்னை அமிலத்தில் முக்கியெடுத்தது போல உணர்ந்தாள் மல்லி. ஆக்ரோஷமாக அக்காவின் பிடியில் இருந்து வெளியே வந்தாள். 



அதற்குள் அந்த பெண் வெண்ணிலாவின் கணவனுக்கும் மணியக்காரருக்கும் தகவல் அனுப்பி விட்டாள். விஷேஷத்திற்கு சென்றவர்கள் தவிர மற்றவர்களை எல்லாம் கையோடு அழைத்து வந்துவிட்டாள். 






இங்கோ மல்லி நிமிர்ந்து கலைந்து கிடந்த கூந்தலை சரி செய்து கொண்டை போட்டவள்," வெளியே போடி" என்றாள் அழுத்தமாக. 



மலர்க்கொடி ஒரு கணம் திகைத்தவள் பின் "நான் ஏன்டி போகணும்?" என்று ஆங்காரியாய் கேட்க


"இது என் வீடு. கொடக்கூலிக்கு நாந்தேன் இருக்கேன். இனி ஓ ஒறவும் வேணாம், ஒண்ணும் வேணாம் இந்தா உன் புருஷன் கட்டின தாலி" என்று வெடுக்கென்று பிய்த்து அவள் முகத்திலேயே விட்டெறிந்தாள் மல்லி. 



அவனோ திகைத்துப் பார்க்க, அவனை அருவறுப்பாகப் பார்த்து விட்டு ," நீயி என்னை பொறுத்தவரைக்கும் செத்துப் போயிட்ட. அக்காளை நம்பல நானு ,ஆனா ஒன்னைய நம்புனேன் மனசார நம்புனேன். என் தலையில கல்லைப் போட்டுட்டல்ல. நல்லா இரு நல்லா இரு... புள்ள பொண்டாட்டினு நல்லா இரு. ஏ மூஞ்சியில முழிச்சுடாதீங்க இனிமே" என்று கத்திட மணியக்காரர் வந்தார் வேகமாக. 


"ஏத்தா அந்த புள்ளைய நிம்மதியா இருக்க விட மாட்டீகளா...? ஏ வீட்டுல என்னத்துக்கு கரைச்ச பண்றீக கெளம்புங்க மொதோ. ஏ வெண்ணிலா மல்லியை கூட்டிக்கிட்டு போம்மா" என்று சத்தமிடவும் நிறை மாத வயிற்றுடன் சென்றாள் மலர்க்கொடி .



"இந்தா மலரு ஒரு நிமிஷம் கேட்டுக்க. நாளைக்கு பஞ்சாயத்து கூடுது. உம்புருஷனை அடிக்காம விட்டதுக்கு காரணம் நீயி புள்ளைத்தாச்சின்னு தான். இது மல்லி சம்பந்தப்பட்ட விஷியம். பஞ்சாயத்துக்கு உன் குடும்பமே வந்தாகணும். வரலைன்னா என் ஊருக்குள்ள வந்து என் தம்பி மகளை முறை தவறி கூப்புட்டான்னு டேசன்ல புகார் எழுதி தந்துடுவேன். என்ன வாரிகளா?" என்று கோபமாய் கேட்க மலர்கொடி தலையை மட்டும் ஆட்டிச் சென்றாள் கணவனோடு. 


மறுநாளே ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. மலர்க்கொடி பக்கத்து ஊர் என்பதால் அந்த ஊரின் தலைவரும் நாலைந்து பெரிய மனிதர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். 



மலர்க்கொடியின் புகுந்த வீடும் வந்து நின்றது. 


மலர்க்கொடி நிறைமாத வயிற்றுடன் தன் அக்கா கனகாவின் அருகில் அமர்ந்திருந்தாள் தலையை சாய்த்து. 



"ஏதோ பொண்டாட்டின்னு உரிமையா வந்துட்டான் என் சகல. அதுக்குப் போய் பஞ்சாயத்து கூட்டலாமா மணியக்காரரே.?"என்று கனகாவின் கணவன் கேட்க


"இந்த ஆறு மாசமா எங்கே போயிருந்தியானாம் உன் சகலலல...? உரிமை கொண்டாட வராம. இப்பதான் பொண்டாட்டி கண்ணுக்குத் தெரிஞ்சாளோ?" என்று அதட்டினார் அவர். 


"சரி அதான் வந்துட்டாங்களே, அவன் என்ன விட்டுட்டா போறோமுனு சொல்லுதான். தாலி கட்டிட்டேன், வச்சு குடும்பம் பண்றேன்னு தான் சொல்றான்." என்று அதற்கும் பேச



"என்ன மலரு நீ என்ன சொல்ற?"என்றதும் அவளோ அயர்ந்து போய்," எம்புருஷன் ஆசைப்பட்ட மாதிரியே  அவளோடவும் இருந்துட்டுப் போகட்டும்" என்றாள். 



"நேத்து அந்த ஆட்டம் ஆடுனியாம்? இப்ப என்ன பம்முற... கேட்க நாதியில்லாதவன்னு தான அந்த அடி அவளை அடிச்சு போட்ட" என்று வெண்ணிலா வெடுக்கென்று கேட்டு விட்டாள். 


"இந்தாம்மா வெண்ணி பேசாம இரு. நாந்தான் பேசுறேன்ல." என்ற ஊர்த்தலைவர்," ஏத்தா மல்லி நீ என்ன சொல்ற. உன் சம்மதம் தான் எங்களுக்கு முக்கியம். யாருக்கும் பயப்பட வேண்டாம். நாங்க இருக்கோம் உனக்கு" என்று கூறவுமே மல்லி பஞ்சாயத்தில் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு,"அவங்களுக்கு வேணும்னா நான் பங்கு போட வந்தவளா தெரியலாம். ஆனா எனக்கு அந்த எண்ணம் துளியுமில்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் நேத்தே அந்தாளுக்கும் எனக்குமான ஒறவு முடிஞ்சு போச்சு. தாலியை அத்துப் போட்டது போட்டதாவே இருக்கட்டும். புதுசா என்னை அங்க சேக்காதீங்க. நான் இந்த ஊர்க்காரியா இங்கேயே எம்பொழப்பை ஓட்டிக்கிறேன். இல்ல அவன் கூடதேன் வாழனுமின்னா இம்பிட்டு அரளிவெதையை அரைச்சு நீங்களே தந்துடுங்க, நா சந்தோஷமா போய்ச் சேருறேன். ஒண்டிக்கருப்பு மவளுக்கு இனி ஒடம்பெறந்தவங்கன்னும் ஆரும் வேணாம். ஒன்னும் வேணாம். இந்த உசுரு இருக்க வரை என் பொழைப்பை பாத்துக்க எனக்குத் தெரியும். தயவு செஞ்சு இவங்க என் வாழ்க்கையில் வந்து தலையிடாம இருந்தாலே போதும்" என்றாள் கண்ணீரோடு. 


"அதெப்புடிடி கூடப் பொறந்தவளை விடுவோம்"ஓடி வந்து அவள் மீது விழுந்து ஒப்பாரி வைத்தாள் தமிழ்மணி. 

கனகாவும் மலரை விட்டுவிட்டு தங்கையை கட்டிக் கொண்டு அழ, மல்லி கல்லென இறுகி நின்றாள். 


'ஒங்க பசப்பு தெரியாதாடி?' என்று நினைத்த வெண்ணிலா மல்லியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். 


"அவளே மேலு நொந்து கெடக்கா தள்ளிப் போங்க நீ ஒக்காரு புள்ள" என்று அங்கிருந்த கருங்கல்லில் அமர வைக்க பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனது. 


பாலன் மல்லியோடு தான் வாழ்வேன் என்று உறுதியாக நிற்க, மல்லியோ மறுப்பு காட்டி நிற்க, மலர்க்கொடியின் நிலை தான்  ரெண்டும்கெட்டான் நிலையாகிப் போனது. 



கணவன் அவன் முதல் நாளில் போட்ட போடில் இடிந்து போயிருந்தாள்.
பிள்ளையை வைத்து மிரட்டியவளிடம்," அவ கூட வாழ விடலை. இந்த புள்ளையே என்னுது இல்லைனு சொல்லிடுவேன் எல்லார் முன்னிலையிலும். நான் கேட்டேனாடி அவளைக் கட்டிக்கிறேன்னு நீயும் உங்கக்கா தங்கச்சியும் சேர்ந்து தானே கட்டி வச்சிங்க. நீ மாசமா இருக்கன்னதும் மரியாதையா விலகி நின்னேன் தானே நானு. அப்புறம் தெனத்துக்கும் அவளோட சேர்த்து வச்சு பேசுனது யாரு.? நீதானே!. இப்ப அதை நான் நெசமாக்கப் போனதும் கொடையுதோ உள்ளுக்குள்ள. சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டது நீயி. அவ எம்மனசுல பொண்டாட்டியா பதிஞ்சு போயிட்டா. நீ குறுக்க நின்னா அப்புறம் சங்கதி வேற மாதிரி ஆகிப் போகும். பஞ்சாயத்துல நா பேசிக்கிருவேன். நீ வாயை திறந்த, இல்ல ஒப்பாரி வச்சியோ பெறகு மூணாவதா ஒருத்தியை கட்டி குடும்பம் நடத்திட்டு போய்கிட்டே இருப்பேன்" என்று எச்சரிக்கை விடுத்திருக்க, அதையும் கனகாவிடம் தெரிவித்து மல்லியை தன் முடிவில் இருந்து மாற விடாதே என்று மன்றாடியிருந்தாள் மலர்க்கொடி. 


கனகா பாலன் பேசியதை மட்டும் மல்லியிடம் சொல்லி கர்ப்பிணி பெண்ணை பழிதீர்த்து விடாதே என்று கெஞ்சியிருந்தாள்.



'என்னைய நெசத்துக்கும் உங்கக் கூடப் பொறந்தவளா நெனைக்கலையா நீங்க?' என்று வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கியபடி சரியெனத் தலையாட்டியிருந்தாள். 



பஞ்சாயத்து எத்தனை நீண்ட பொழுதிலும் மணியக்காரர் பாலனோடு மல்லியை வாழ வைக்க உறுதியாக மறுத்து விட்டார். 


"அந்தப் புள்ளைக்கு நல்லது கெட்டது பார்க்க நானிருக்கேன். அதுக்குப் புடிக்கல அதனால தீத்து விடுங்க இந்த உறவை. கோர்ட்டுக்கே போய் நின்னாலும் அவனைத் தான் உள்ள தூக்கி வைப்பாங்க பார்த்துக்கிடுங்க" என்றதும் பாலன் மீண்டும் மறுக்க


அவனின் ஊர்த்தலைவரோ ," சம்பந்தப்பட்ட புள்ளை வாழ மறுத்திடுச்சு பாலா. இனி எங்க கையில எதுவுமில்லை. பழையபடி அங்க போய் நின்னா ஊர்க்கார பயலுகளே உன்னைத் தூக்கிப் போட்டு மிதிப்பானுக. வாங்கிக்க. நம்மூர் ஆளுங்க சப்போர்டுக்கு ஊர் சார்பா யாரும் வர மாட்டோம்" என்றார் முடிவாக. 


பாலன் வேறு வழியின்றி பாண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தான். மல்லியின் பக்கமே வரமாட்டேன் என்று. 


"இவ்வளவு தான் சார் நடந்துச்சு. பெறகு ஒருத்தரும் எம்பக்கம் எட்டிப் பார்க்கலை. அப்புறம் ஆம்பளைப் பிள்ளை பிறந்ததா வெண்ணிலாக்கா தான் சொல்லுச்சு ஒரு நாள். எனக்குப் போய் பார்க்கிற எண்ணமில்லை. நானும் போகலை. அப்புறம் தான் உங்க கலியாணத்துக்கு வந்து என்னென்னவோ நடந்திடுச்சு" என்றாள் மல்லி பெருமூச்செறிந்தபடி. 


நேத்ரா அவளைக் கட்டிக் கொண்டு," யூ ஆர் கிரேட் மேம்!" என்று நெகிழ்ந்து போனாள். மாறன் இருவரையும் பார்த்து புன்னகைத்தவன்," உங்க ரெண்டு பேரையும் பார்த்தா தான் சிஸ்டர்ஸ் போல இருக்கீங்க" என்றான். 



நேத்ரா சட்டென சுதாரித்து," இதுல நீங்க சீனியரை லவ் பண்ண சீனே வரலையே?"என்று முனைப்புடன் கேட்க 


 மல்லியோ புன்னகை மாறாமல்,"காதல் பண்றதுனா எப்படினு சொல்லுங்களேன் டாக்டரம்மா?" என்றதும் 


"இந்த ப்ரபோஸ் ஐ மீன் உங்க லவ் சொல்லனும் தானே நீங்க. அப்போ தானே அவருக்கும் நீங்க லவ் பண்ணது தெரியும். அதைக் கேட்கிறேன்"என்றாள். 


"நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எனக்குத் தெரியாது டாக்டரம்மா. ஆனா இவங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது தெரிஞ்சுக்கிறதில் எனக்கு ஒரு ஆர்வம். அங்க வேலை பார்த்த டீச்சர்களுக்கு சமைச்சு தந்தேன். அவங்க என்ன கேட்கிறாங்களோ அதை மட்டும் தான் செய்வேன். ஆனா இவங்களுக்கு எது புடிக்கும் புடிக்காது, எந்த காய் உடம்புக்கு சேரும் சேராது. எந்த காய்கறியை எப்படி வறுத்தா பொரிச்சா பிடிக்கும்'னு சாப்பிடுற அளவு வச்சு முகத்தை வச்சே உணர்ந்துப்பேன். அது தான் அன்பு காதல்னா ஆமா அவங்க மேல எனக்கு கொள்ளை கொள்ளையா காதல் இருக்கு." என்றாள். 


"அப்புறம் ஒரு விஷயம் நேத்ரா. ஊருக்கே ட்ரீட்மெண்ட் பார்க்கிற எனக்கு ஃபீவர்னா மேடம் கசாயம் வைக்க, கோழி சூப் வைக்கன்னு அலப்பறை பண்ணுவாங்க. அந்த வெள்ளந்தியான அன்பு தான் என் தேவாவோட காதல்." என்று மல்லியைப் பார்த்தபடி சிலாகிக்க 


நேத்ரா சிரித்தபடி,"நான் கிளம்புறேன். டியூட்டிப் பார்க்கணும்" என்று நாகரீகமாக வெளியேறினாள். 


ரொம்ப கிறுக்குத்தனம் பண்ணிப்புட்டேனோ என்று அசடு வழிய 


காதலில் இதெல்லாம் சாதாரணமப்பா என கண்சிமிட்டினான் கள்வனவன். 


மாறா என்று நாணம் கொண்டவளை ரசனையோடு பார்த்திருக்க வைஷாலியின் விழிகள் அதனை வன்மமாகப் பார்த்திருந்தது.





...... தொடரும். 








Leave a comment


Comments


Related Post