இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 24-06-2024

Total Views: 1911


பாகம்-17
 ஏனோ அன்று பூரணிக்கு பாரிஸில் உள்ள கந்தசாமி கோவிலுக்குப் போக வேண்டும் போல இருந்தது. சற்று தூரம் தான். இருந்தாலும் அவருக்கு அந்தக் கோவிலின் அமைப்பு மிகப் பிடிக்கும். சரவணப் பொய்கை குளக்கரையில் அமர்ந்தால் மனதின் பாரம் எல்லாம் ம(றை)றந்து விடும்.சென்னை என்றாலே கூட்டம் தான். ரங்கநாதன் தெருவாவது சில நாட்களில் தப்பிக்கும்.பாரிஸ் எல்லா  நாட்களும் கூட்டமாகத்தான் இருக்கும். பூக்கடை போலீஸ் ஸ்டேஷன், என் எஸ் சி போஸ் ரோடு, குறளகம், ராமகிருஷ்ணா ஸ்வீட்ஸ், நாராயண முதலி தெரு, செல்லும் பாதை எங்கும் ஜன நடமாட்டம். எந்தப் பொருளும் எளிதில் வாங்கி விடலாம். அபோது இருந்த மான் மார்க் குடைகள் கடையை இப்போதும் பார்க்கிறாள்.
பூரணி  வேலைக்குச் சென்ற நாளில் காலையில் சீக்கிரமே கிளம்பி சில தோழிகளுடன் சேர்ந்து ஏதேதோ சந்துகளில் நுழைந்து செல்வார்கள். ஒரு வழியே  எப்படியும் குறைந்தது நான்கு ஐந்து கிலோமீட்டராவது இருக்கும். தோழிகள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் செல்லும்போது எந்தத் தூரமும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கவலைகள் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த நேரம் மறக்கடித்துவிடும். அல்லது மலையளவு பிரச்சனையும்  தோழிகளின் "ப்ச்! பார்த்துக்கலாம் ப்ரீயா வுடு" என்ற வார்த்தைகளில் சின்னதாகப் போய்விடும்.
அதேப்  போல இப்போது சொல்வதற்கு எந்தத் தோழியும் இருக்கவில்லை. அந்தக் காலங்களில்  நான்கு ரூபாய் ஐஸ்க்ரீம் கொடுத்த சந்தோஷத்தை இப்போது இந்தப் பார்ஷ் கார் பிரயாணம் தரவில்லை. மனம் முழுவதும் பாரம் அழுத்தியது.
முந்தைய நாள் இரவு, மகள் தானாகவே வந்து  பேசினாள்  நடந்ததைச் சொன்னாள். தொழிலை விட்டு விட்டு வர வேண்டும் என்று செந்தில் சொன்னது பூரணியாலும் ஒத்துக்  கொள்ள முடியவில்லை. ஜீரணிக்கவே முடியவில்லை. கணவனின் தொழிலைத் தூக்கி நிறுத்த இருப் பெண்களும் எத்தனை கஷ்டப்பட்டார்கள்? அந்த நேரத்தில் லிங்கத்தின் உதவி மட்டும் இருந்திருக்காவிட்டால்? இருந்த பல தொடர்புகளைப் பயன்படுத்தி மிகவும் கடினப்பட்டுத்தான் நிரஞ்சனா இந்த நிலையில் இருக்கிறாள். செந்திலுக்கு என்ன தெரியும் அவள் செய்த தியாகங்களும், பட்ட கஷ்டங்களும்? பாஸ்கர் என்ற ஆணின் துணை இல்லாமல் அவளால் சாதித்திருக்க  முடியுமா? சிரிக்க வேண்டிய இடங்களில் சிரித்து, தள்ளியே நிற்க வேண்டிய இடங்களில் ஒதுங்கி எத்தனை எத்தனை  கஷ்டங்கள்? லிங்கம் பிரதீப் இருவரும் பணத்திற்கு துணை நின்றார்கள். பாஸ்கர் மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொண்டான். கணவனிடம் வேலை செய்த ஊழியர்கள், சம்பளம் இல்லாமலேயே சில மாதங்கள் வேலை செய்திருக்கிறார்கள். மகளிடம் எதையுமே பேசாமல் ஆணாதிக்கம் செலுத்த எப்படி அவரால் முடியும்?
இருப்பினும் மகளிடம் தன்  ஆதங்கத்தை கொட்டி விடக் கூடாது. அது அவள் மன நிலையைப் பாதிக்கலாம். அதே சமயம் அவளையும் சரி படுத்த வேண்டும். அவள் கணவனையும் சரி படுத்த வேண்டும்.
"சரி அதிருக்கட்டும், அதுக்கு நீ என்ன  சொன்ன?"
"என்னால அந்த நேரத்துல எதுவுமே சொல்ல முடியலமா, அந்த அதிர்ச்சிலேர்ந்து என்னால வெளிலையே வர முடியல. இது எல்லாம் அவரு முன்னாடியே சொல்லி இருந்தா நான் இந்தக் கல்யாணத்துக்கு  ஓகே சொல்லி இருந்திருக்கவே மாட்டேன்" மகளின் ஆதங்கம் புரிந்தது.
"ஆனா  அவரைப் புடிச்சுதானே கல்யாணம் பண்ணிகிட்ட ?"
"அதுக்குன்னு? அவரு என்னோட உசுரு கேட்டா  குடுக்கலாம். ஆனா இந்த வேலை! அது என்னோட குழந்தைமா. அதை  எப்படி யாருக்கோ கொடுக்க முடியும்? 
இப்போது எத்தனையோ சிங்கிள் மாதர் டைவர்ஸ் பண்ண அம்மாக்கள்  இல்ல ? நானும் என்னோட குழந்தைய  சிங்கள் பாரெண்டா இருந்து வளர்த்துக்கறேன். என்னோட குழந்தைக்கு அப்பா வேணாம்" மகளின் மன வலி புரிந்தது.
"குழந்தைக்கு அப்பா வேணாம். ஆனா   உனக்கு ஹஸ்பண்ட் வேணுமே?"
"அதுக்கு என்னைத் தொழிலை விட்டுட்டு போகச் சொல்லறீங்களா?"
"வேணாம். கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்.  நீ அவரைக் காதலிக்கறத்தானே?"
தலை குனிந்து கொண்டது. "எஸ் மாம்"
" அப்ப என்ன அவரையும் காதலிக்க வை. உன்ன காதலிச்சா உன் சம்பந்த பட்ட எல்லாமே அழகா தெரிய  ஆரம்பிச்சுடும்"
"நோ அம்மா ! நீ சொல்லறது எல்லாம் மத்தவங்களுக்கு எப்படியோ செந்திலுக்கு நிச்சயம் ஒத்து வராதது. அவரு இன்னும் 1980ஸ்லேர்ந்தே வெளில வரல. வீட்டுல மாவாடிகிட்டு ஒட்டடை அடிச்சுகிட்டு இருக்கற  பொண்டாட்டி தான் வேணுமாம்.என்னால அப்படி இருக்க முடியாது. உங்களுக்குத் தெரியும்தானே"
சில நொடி மௌனம்...
"அவசர கோலம் அலங்கோலம். நான் புரிஞ்சுக்கிட்டேன். தப்பு பண்ணிட்டோம். வெளில வர முடியாது. நீங்க எல்லாரும் வேண்டான்னு சொன்னபோது  அவருதான் வேணுன்னு விடாப்பிடியா நான்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தண்டனை எனக்குத்தான். நானே அனுபவிக்கிறேன்"
"நீ இவ்ளோ சீக்கிரமா தோல்வியா ஒதுக்குவியா?"
"மாம் ப்ளீஸ்"
"இல்ல நிரன்ஜனா! வாழ்க்கைல எதுவா  இருந்தாலும் போரடிப் பாக்கணும். அவரு அப்படி சொன்னா  நாம அப்படியே விட முடியாது. இதுல உன்னோட வாழ்க்கை மட்டும் இல்ல. அவங்க வீட்டுல இருக்கற வேறு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையும் சம்பந்த பட்டிருக்கு. வீட்டுக்கு வந்த மருமக விவாகரத்து பண்ணிட்டு போயிட்டான்னா அத்தனை சுலபத்துல அந்தப் பொண்ணுங்களுக்கு பையன் கிடைக்க மாட்டான். செந்தில் ஆம்பிளை இல்லை  அதனாலதான் பொண்ணு மாலையை அவுத்து  வச்சுட்டு அப்படியே போயிட்டான்னு சொல்லுவாங்க"
" அதுக்கும் அவங்களோட கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"பணக்கார வீடுகள்ல இருக்கற மாதிரி இல்ல நிரஞ்சனா. சாதாரணப்பட்டவங்க வீட்டுல எங்க சாக்கு கிடைக்கும்னு தேடிகிட்டு இருப்பாங்க"
"சரிமா! அதபத்தி எல்லாம் யோசிக்க வேண்டியது அவரு. நான் என்ன பண்ண முடியும்?
"என்ன வேண்ணா  பண்ணு. உன்னோட புருஷன் தானே?"
"என்னம்மா இப்படி பேசறீங்க?"
"பின்ன? வேற எப்படி பேச முடியும்? முதல்ல ரெண்டு பேரும்  ஒழுங்கா உக்காந்து பேசுங்க. எது சரியா வரும்? எதல்லாம் சரியா வராதுன்னு யோசிங்க. ஒத்து வந்தா  சேர்ந்து வாழுங்க. உங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரலியா ஒழுங்கா பிரிஞ்சு நில்லுங்க. பிரியறது சேரரது இந்த விளையாட்டெல்லாம் வேணாம். இன்னொரு தடவை அவர  பத்தின எண்ணமே ஒனக்கு வரக்  கூடாது. அதுவும் இல்லையா, ஒரு நல்ல  நாள் பார்த்து நானே கொண்டு போய்  அவங்க வீட்டுல விடறேன். உங்க மாமியார் கிட்டையும் பேசறன். பிஸ்னஸ் விட முடியாதுன்னு  நீயும் அவங்க கிட்ட தீர்கமா சொல்லு. அவங்க என்ன சொல்லறாங்களோ அதுப்படி முடிவெடுங்க. ரெண்டுத்துல ஏதாவது ஒன்னு நீயே முடிவெடு"
அன்னை தீர்மானமாக உரைத்து விட்டார். அன்றைய இரவும் தூங்கா  இரவாகவே முடிந்தது கணவனுக்கும் மனைவிக்கும்.
" ப்ளீஸ் உங்க கூடவே இருக்கேனே! எனக்கு வேலையைவிட நீங்கதான் முக்கியம்" என்று மனைவி ஒரே ஒரு கால் செய்திருந்தால், எந்த நேரமானாலும் ஓடி வர, அவளை அள்ளி  அணைக்க  தயாராக இருந்தான் செந்தில். 
ஏனோ அது என்  குழந்தை என்று  அவள் மன்றாடியது அவனுக்குப் புரியவில்லை. 
மறு  நாள் காலையில் தான் பூரணி கோவிலுக்குச் சென்றது. 
அதே வழியில் இப்போதும் வந்தாள் மனதின் எண்ண ஓட்டங்களுடன்.காரில் சென்றவருக்குச் சுத்தமாக அந்த இடமே அடையாளம் தெரியாமல் போய் விட்டது, தன் உருவத்தைப் போலவே. 
ஒரு வழியாகக் கூகிள் மேப்ஸ்  உதவியுடன் வந்து சேர்ந்தார்கள் டிரைவரும் பூரணியும்.
கோவிலில் பெரியதாகக் கூட்டம் இல்லை. வெளியில் பரபரப்பு இருந்தாலும் கோவிலின் உள்ளே அமைதியாக இருந்தது. மனதை மயில்இறகால் வருடிடும் அமைதி. 
 முருகன் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தார். பல வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் மனதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. "உன்ன வந்து பாக்க வைக்கறதுக்குன்னே எனக்கு ஒவ்வொவரு கஷ்டமா குடுக்கறியா?" மனமார திட்டினாள். 
திட்டும், கொண்டாட்டமும், கொஞ்சலும், கெஞ்சலும் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தானே நடக்கும்? ஒரு நொடி திட்டிய மனது, மறு  நொடி "எவ்ளோ அழகா இருக்க?" கொஞ்சியது. 
"அவரு மட்டும்தான் அழகா ? நாங்க எப்படி இருக்கோம்?" சிறு வெட்கப் புன்னைகையுடன் குட்டிப் பெண்களாய்  வள்ளி தெய்வானை கேட்டார்கள். திட்டியும் கொஞ்சியும் முடித்தவர்  வெளியில் வந்து விட்டார். நாம் மணிக்கணக்கில் நிற்கலாம். மற்றவர்கள் பார்க்க வேண்டாமா?
குளக்கரை அருகே அமர்ந்தவர்  கந்த சஷ்டி கவசம் சொன்னார் . அவள் அருகே அமர்ந்து  இன்னொரு உருவமும் முந்து முந்து முருகவேல்  முந்து... எந்தனையாலும் ... பாடியது  யார்? 
தொடரும்..........


Leave a comment


Comments


Related Post