இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 25-06-2024

Total Views: 2734

பாகம்-18

  நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கோபத்தோடு கிளம்பியவன் முகம் முழுவதும் சிவந்திருந்தது. மனம் முழுவதும் அத்தனை கோபம். ஆத்திரம். நிரஞ்சனா தனக்கு உடன் பிறந்தவள் இல்லை. ஆனால் அதற்கும் மேலாக மனதில் அவளுக்கு அவன் இடம் கொடுத்திருந்தான். அன்னைக்கு அடுத்த படி அவன் இந்த உலகத்தில் மிகவும் நேசிப்பது அவளைத்தான்.  அதனாலேயே ஒற்றை பிள்ளையாக இருந்தாலும் அவனுக்குப் பெண்களை பற்றிய பல விஷயங்களும் தெரிந்திருந்தது. வந்த கோபத்தை  அடக்க முடியாமல் கை முஷ்டியை இறுக்கி  மூடிக் கொண்டு வந்து கொண்டிருந்தவன் கார் சிக்கனலில் வந்து நின்றது. மனம் முழுவதும் அத்தனை கோபம். அது எப்படி அவள் தன்னிடம் எதுவும் பேசாமல் இருப்பாள் ? இந்நேரம் அவன் வீட்டில் இருந்திருந்தால் ஒரு அறை முழுக்க இருக்கும் சாமான்கள் உடைந்து போய் இருக்கும். இதற்குக் காரணமான செந்திலை நினைத்த நேரத்தில் அத்தனை ஆத்திரம். அவனின் உயிரை அழ வைத்தவனாயிற்றே.
 "எதுக்குடா அவள அழ வைக்கற?" காலரைப்  பிடித்துக் கேட்க வேண்டும். மூஞ்சியில் சரமாரியாகக் குத்து விட வேண்டும் போல இருந்தது. அவன்தான் காரணமா? இருவருக்கும்  என்ன பிரச்சனை எதுவுமே தெரியாமல் அவன்தான் காரணம் என்று மனம் சொல்வதை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி அவனை அடித்து உதைக்க முடியும். அப்படியே ஏதாவது செய்தாலும் என்ன பயன்? அவள் அவனைக் காதலிக்கிறாள். அவனைத் திருத்த வேண்டும். ஆனல் என்ன காரணத்திற்க்காக? தெரியாது. அவன் என்ன செய்தாலும் அவளுக்காகப் பொறுத்துக் கொள்ள வேண்டும். எப்படித்தான் அவள் மனம் அவனையே சுற்றி வருகிறதோ?அவளுக்காகவாவது தன்னையும் தன்  கைகளையும் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் இப்போதைக்குத் தான். 'அவள் கண்ணீருக்கு அவன்தான் காரணம் என்று மட்டும் தெரியட்டுமே ? அப்ப இருக்குடி ஒனக்கு' மனதிற்குள் கறுவிக் கொண்டிருந்தான். 
மனம் தான் கொதித்துக் கொண்டிருந்தது.வெளியில் வெயில் அவ்வளவாக இல்லை. மழை வருவது போல லேசாக இருட்ட ஆரம்பித்தது. வெளிக்காற்று வேண்டும் போல இருந்தது. டையை இளகி விட்டு ஜன்னலைத்  திறந்தான். அங்கே சில பெண்கள் சாலையைக் கடக்க வந்து நின்றார்கள். அவர்கள் அருகே வந்து தான் அவன் காரும்  சிக்கனலில் நின்றது.இவர்களுக்குச் சிகப்புக் குறியும் சாலையைக் கடக்க மனிதனின்நடைக் குறியும் காட்டப் பட்டது.அதுவரை அங்கேதான் அந்தப் பெண்கள் நின்றிருந்தார்கள். அவர்களை ஒட்டி  நின்றதாலோ என்னவோ அதில் ஒருத்தியின் துப்பட்டா இவன் முகத்தில் பட்டு விட்டது. அவசரமாகப் பிடித்து இழுத்துக் கொண்டாள். அவளின் வயிறு வரை தொங்கி கொண்டிருந்த ஐடியில் அவள் பெயரும் முகமும் பார்த்தவனுக்கு ஆச்சரியம். ஆம்! அது அவனின் கண்ணழகி தான்.நிமிர்ந்து முகம் பார்த்தான். வேறு ஒருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு  சாலையைக் கடந்து விட்டாள். அந்த நொடி அவள் ஏன் தன்  கையைப் பிடித்துக் கொள்ளவில்லை என்ற எண்ணம் தோன்றியது. 
"சே  என்ன எனக்கு மூளை மழுங்கித் தான் போச்சா?"
 அந்த நொடியில்அவள் பெயரும் அவள் வேலை பார்க்கும் இடமும் அறிந்து கொண்டான்.
'அது என்ன? யாரோ ஒரு பெண்.தன்னுடைய அத்தனை கோபத்தையும் கட்டுப் படுத்த முடியுமா?' கோபம் மறைந்து புண் முறுவலாக மாறியது அவன் முகம். 
அன்று முழுவதும் அவளின் ஆரஞ்சு மஞ்சள் துப்பட்டாவும், குட்டியாக மேலெழுந்த தொப்பை மீது இருந்த ஐடிகார்டும் அவனைப் பித்தம் கொள்ளச் செய்தது. 
===============================================================================================
தனக்கு உடன் சேர்ந்து பாடுவது யார்?  திரும்பிப் பார்த்தார் பூரணி. வேறு  யாரோ அல்ல. அவர் சம்பந்தி மீனாட்சிதான்.  இருவருமே தன்னை மறந்த நிலையில்  இருந்தார்கள்.
கந்த சஷ்டி கவசம் பாடி முடித்து விட்டுச் சாமியை விழுந்து கும்பிட்டு இருவரும் சேர்ந்தே வெளியில் வந்தார்கள்.
"எப்படி இருக்கீங்க சம்பந்தி?" மீனாட்சி தான் கேட்டார்.
அவர் கேட்டதில் இருந்தே பூரணிக்குப் புரிந்துவிட்டது. அவர் மகன் இவரிடம் எதையும் சொல்லவில்லை என்று.
"சம்பந்தின்னு சொல்லிட்டேனா ? சொல்லலாம்தானே?" 
மிகவும் அப்பாவியாக இருந்தார்.
"ஏழை குடி முழுதும் வாழ அருள் புரிய சிங்கார வேலவன் வந்தான்" ஆனந்த பைரவியில் பாபநாசம் சிவனின் வரிகள் பூரணிக்கு, தானே நினைவில் வந்தது நின்றது.
மகளின் குறையை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டு கருணை காட்டுபவர் தானே இறைவன்!
"எங்க  இந்த வார்த்தையை  உங்க வாயிலேர்ந்து கேக்காம போய்டுவேனோன்னு நான் பயப்படாத நாளில்லை சம்பந்தி" பூரணி மீனாட்சியின்  கைகளைப் பிடித்துக் கொண்டார்.
"அதுக்கென்னங்க. நாம சம்பந்தி தானே? நீங்க என்ன மீனாட்சின்னே கூப்பிடுங்க. உங்கள விடச் சின்னவளாத்தான்  இருப்பேன் "
"நீங்களும் என்ன பூரணின்னே கூப்பிடலாம். நான் உங்க விடப் பெரியவளாத்  தான்  இருப்பேன். ஆனாலும் பரவால்ல" மீனாட்சியைப் போலவே பேச முயன்றார் பூரணி.
அவரே மீனாட்சியிடம், "நீங்க எங்க போகணும்? வாங்க நானே கார்ல விட்டுடறேன்"
"பரவால்ல! நீங்கப் போங்க. நான் இன்னும் காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்"
"ஓ! நீங்க மட்டும் தனியா போகல்லான்னு பாக்கறீங்களா? என்னைக் கூப்பிடமாடீங்களா?"
"அதுக்கென்ன பூரணி அம்மா ? அம்பாள் கூப்பிட்டா  வரப்  போறீங்க"
"அப்பவும் நீங்கக் கூப்பிட மாட்டீங்க இல்ல ?"
'எத்தனையோ பெரிய பணக்காரியாக இருந்தாலும் இத்தனை எளிமையாகப் பேசுகிறாரே! 'ஆச்சர்யமாக இருந்தது மீனாட்சிக்கு.
காளிகாம்பாள் கோவிலுக்கும் இருவருமே சேர்ந்தே சென்றார்கள். அடித்த வெய்யிலுக்கு காரின் குளிர்ச்சி இதமாக இருந்தது. மீனாட்சிக்கு இதுதான் முதல் முறை சொகுசு கார் பயணம். அண்ணனின்  காரில் பயணம் செய்தவள் தான் எப்போதாவது. ஆனால்  இது  வேறு மாதிரியாக இருந்தது. 
"கழுத்து வசதியா வச்சுக்கோங்க"
 அடுத்து கைக்கும் ராஜாவுக்கு வைப்பது  போல ஒரு குஷன் திண்டு வந்தது. இவளுக்குக் கூச்சமாக இருந்தது. 
புடவை முந்தானையை போர்த்திக் கொண்டாள். 
பூரணி மனதில் 'எப்படி பேசுவது என்ன பேசுவது பேசுவது' என்று  ஓட்டம் போய்க் கொண்டிருந்தது. ட்ரைவர் இருக்கிறார். லிங்கத்தின் ஆள்தான். நாம் பேசுவது எதையும் கவனிக்க மாட்டார்தான். இருந்தாலும் பூரணிக்கு சங்கடமாக இருந்தது."செந்தில் நல்லா இருக்காரா?"
"ஆ! ரொம்ப நல்லா  இருக்கான்"
"புதுசா ஏதோ கடை திறந்திருக்காருன்னு நிரஞ்சனா சொன்னா. கங்கிராஜுலேஷன்ஸ்"
"ரொம்ப நன்றிங்க" 
"உங்க பொண்ணுங்க எப்படி இருக்காங்க?பெரியவ பேரு  என்ன?"
"பெரியவா ரேணுகா. சின்னவ பவித்ரா"
"என்ன பண்றாங்க?"
"பெரியவ படிச்சு முடிச்சுட்டு பேங்க் பரீட்சை எழுதறவங்களுக்கு பாடம் எடுக்கறா. சின்னவ காலேஜ் கடைசி வருஷம்"
சற்று அமைதி.
"நிரஞ்சனா எப்படி இருக்கா?"
கோவில் வந்திருந்தது.
"வாங்க! சாமி பார்த்துட்டு பேசலாம்" பூரணி அழைக்க இருவரும் இறங்கி கொண்டார்கள்.
மகனே பேரழகு என்றால் அன்னை கேட்கவும் வேண்டுமா? ஒற்றை கால் மடித்து அமர்ந்திருந்தவள் உள்ளத்தை  அள்ளிக் கொண்டாள்.  இளமையில் ஏதோ ஒரு அழகு என்றால் திருமணத்திற்குப் பிறகு சுமாலியின் அழகு. பிள்ளை பெற்றதும் வேறொரு மாதிரியான அழகு. பெண்கள் எப்போதுமே அழகுதான். சிறு பெண்ணாக, கன்னியாக, சுமங்கலியாக, தாயாக, பாட்டியாக. ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தார்கள். இரு பெண்களுமே சேர்ந்து அந்தப்  பேரழகியை ரசித்தனர். அனுபவித்தனர். இருவரின் மனதிலும் பிள்ளைகளின் வாழ்வு நல்ல விதமாக இருக்க வேண்டும் என்பதே வேண்டுதலாக வந்தது. பெற்றவர்கள் எப்போதுமே அப்படித்தான். கடவுள் நேரிலேயே வந்து நின்றாலும், தனக்கு என வேண்டத்  தெரியாதவர்கள். மகள் தீர்க்கச் சுமங்கலியாக மன  நிறைவோடு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் பூரணி. மீனாட்சி, மகனின் வாழ்க்கை சீராக வேண்டும், மகள்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆக வேனும் என்று வேண்டிக் கொண்டாள். வேண்டுதல்களுக்கா  பஞ்சம்? நீண்டுக் கொண்டேதான் இருக்கும். 
இந்தக் கோவில் மூணாயிரம் வருஷத்து பழமையான  கோவில். சிவாஜி ராஜா  கூட இங்க வந்துருக்காராம். முன்னாடி எல்லாம் இந்தச் சாமி ரொம்ப  கோபமா இருந்துச்சாம். ஆதி சங்கரர் தான் இந்த அம்மனை  சாந்தமா மாத்தினாராம்.இந்த அம்மனை பார்த்தா கோபக்காரியா இருந்தான்னா நம்பவே முடியல இல்லை ? மீனாட்சி சொல்லச் சொல்ல ரசித்துக் கேட்டார் பூரணி.
"அடடே ஒரு மினி விக்கிப்பீடியாவே பக்கத்துல நடந்து வருதே" லேசாகச் சிரித்துக் கொண்டே கூறினார் பூரணி.
"என்ன சம்பந்தியமா? ஏதோ தெரிஞ்சதை சொன்னேன் "மீனாட்சி  முகத்தில் தெரிந்தது சிறு வெட்கம். 
அங்கே கடையில் புளியோதரை பொட்டலம் இருவருக்கும் வாங்கினார் பூரணி. மகளுக்குச் சேர்த்து வாங்கி கொண்டார். 
"உங்க பசங்களுக்கு மீனாட்சி?"
மொத்தமாக வாங்கி கொண்டார்.
"நிரஞ்சனாவுக்கு புளியோதரைன்னா அவ்ளோ பிடிக்கும்"
" எங்க வீட்டுல பசங்களும் அப்படித்தான். மத்தது அத்தனை விருப்பம் இல்ல. ஆனா புளியோதரை மட்டும் தனிதான்" 
இருவருமே வெளியில் இருந்த மர நிழலில் அமர்ந்துக் கொண்டார்கள்.
"மீனாட்சி! நான் எதையும் தயங்கி பேச விரும்பல. என்னோட பொண்ணு உங்க பையனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கா. ஆனா அவருக்கு மனசுல என்ன எண்ணம் இருக்குன்னு தெரியல. உண்மையைச் சொல்லணுன்னா ரெண்டு பேரும் பிரிய சம்மதன்னு சொல்லிக் கையெழுத்து போட்டது எனக்குச் சுத்தமா இஷ்டம் இல்ல. நிரஞ்சனாவுக்கும்தான். அவ உங்க பையன ரொம்ப நேசிக்கறா" 
அவரேத்  தொடர்ந்தார்.
  "நானும் சரி அவரும் சரி என்னிக்குமே நிரஞ்சனாவை பத்தி கவலை பட்டதே இல்லை. படிப்பு அவ என்னிக்குமே நம்பர் ஒன்னு இல்ல. ஆனா நல்ல படிப்பா. டான்ஸ  வெஸ்டர்ன் கத்துகிட்டா. இந்தப் பாஸ்கர் பிரதீப் தவிர வேற யாரும் ப்ரண்ட்ஸ் கிடையாது. சின்ன  வயசுலேர்ந்தே ஒன்னா  வளர்ந்தவங்க. பாலின வேறுபாடு கூடக் கிடையாது. நாங்க லவ் மேரேஜ். அதனால எந்தச் சொந்தமும் எங்களை ஏத்துக்கல. அதனாலேயே அவளும் தனியாவேத் தான் வளர்ந்தா. ஆனா இந்தப் பசங்க அவளை நல்லா  பார்த்துக்கிட்டாங்க. நாம பண்ணும்போது சரியா இருக்கற விஷயம் நம்ம பசங்க பண்ணும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா நீரு யாரையாவது லவ் பண்ணிடுவாளோ தப்பான   இடத்துல ஏமாந்துடுவாளோன்னு நாங்க  பயந்ததே இல்ல. 
 அவங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவரோட கம்பனி  போச்சு. அதுக்காக மட்டும்தான் அவ ரொம்ப கவலை பட்டிருக்கா. அதுக்காகவே பிடிவாதமா நான் ஒரு கம்பனி ஆரம்பிக்கறேன்னு ஆரம்பிச்சு இன்னிக்கு அவ  இந்த நிலைமைல நிக்கறா. அதுக்காக அவ பண்ணி இருக்கற  தியாகங்கள் அதிகம். பட்ட கஷ்டங்களும் அதிகம். அதெல்லாம் வாயால சொல்லி விட முடியாது"
இத்தனையும் வரிசையாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்,   

"உங்க பையன் அந்தத் தொழிலை விட்டுட்டு உங்க வீட்டுக்கு வரச் சொல்லறாரு" வந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு  முழுங்கி விட்டார் பூரணி. 
'அது எப்படி முதல் சந்திப்பிலேயே அவர் மகன் சொன்னதை எப்படிச் சொல்ல முடியும்? தவறாக எண்ணி விட்டால், மகளின் வாழ்வே வீணாகிவிடும்'  நொடிப்  பொழுதில் வார்த்தைகளை மாற்றிக் கொண்டார். 
"அவளுக்கு இந்தப் பிசினஸ் தான் உலகமே. அவ இதுவரைக்கும் எதுக்கும் ஆசை பட்டதே இல்ல. எந்தப் பையனையும்  ஏறெடுத்து  பார்க்கதவ மேட்ரி மோனில உங்க பையன பார்த்ததுமே  பிடிச்சுருக்குன்னு சொன்னா" 
  "உங்க வசதிக்குப் பெரிய பெரிய இடத்துலேர்ந்துலாம் வரன் வந்திருக்குமே?   வசதி  குறைவான எங்க வீட்டு  பையன அவளுக்கு  எதுக்கு பிடிச்சது?"
"அது ஏன்னு அவளுக்கும் தெரியாது.  ஒரு பையன் ஒரு பொண்ணு மனசுக்குள்ள வர்றதுக்கு எந்தக் காரணமும் வேண்டாம். அப்படித் தான் நானும்  நினைச்சேன். ஆனா அவ சில விஷயங்கள் சொன்னா. பணக்கார வீட்டுல நானும் ஒரு பொருள்  தான். ஆனா இந்த மாதிரி ஆளுங்க காட்டற  அன்பு உண்மையானதா இருக்கும். என்ன பணம்தான பிரச்சனை? அதுதான்  எங்கிட்ட இருக்கே? அப்டின்னு கேட்டா"
அது தவிரவும்,
" நாந்தான் கூடப் பொறந்தவங்க யாரும் இல்லாம வளந்துட்டேன். ஆனா எனக்குப் பொறக்க போற குழந்தைகளுக்கு நிறைய சொந்தங்கள் வேணும். அவரோட தங்கச்சி பசங்க, எங்களோட பசங்க பார்க்கவே ரொம்ப நல்லா  இருக்கும்னு சொன்னா" 
" வெளியிலிருந்து பாக்கறவங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சில்லியா தெரியும். பட்  அவளை வளர்த்தவளா அவளோட அம்மாவா  அவளுக்கான ஏக்கங்கள் எனக்குப் புரிஞ்சது. நானும் சரின்னு சொல்லிட்டேன்"
சொல்லி முடித்தவர் ஒரு பெருமூச்சு விட்டார்.
"நீங்கச் சொல்லறதை பார்த்தா எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. இந்தக் காலத்துல மாமனார் மாமியாரை எக்ஸ்ட்ரா லக்கேஜுன்னு சொல்லற பொண்ணுங்களுக்கு மத்தியில இப்படிப்பட்ட ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தது பெரிய அதிர்ஷடம் தான்.  உங்க பொண்ண பத்தின கவலைய விடுங்க. நான் செந்தில் கிட்ட பேசி அவளை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு" 
இந்த வார்த்தைகளின் வீரியம்  என்ன என்பது அப்போதைக்கு மீனாட்சிக்கு புரிந்திருக்காது.
"அது எப்படி நீங்க அவ்ளோ உறுதியா  சொல்லறீங்க? செந்திலுக்கு இதுல விருப்பம் இல்லன்னா? "
"பூரணியேம்மா, என்னோட பையனும் இதுவரைக்கும் எந்தப் பெண்ணையும்  திரும்பிக் கூடப் பார்த்ததில்லை. நல்ல மார்க் வாங்கினான். என்ஜினீயரிங் படிச்சுக்கிட்டே  ஒரு கடைல வேல பார்த்தான். மனசு முழுக்க தங்கச்சிங்க பத்தித்தான் எண்ணம்.இந்தக் கல்யாணம் கூட என்னகத்ட் தான். இப்ப இல்லன்னா இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்னு ஜோசியர் சொன்னதுனாலத் தான் அவன் ஒத்துக்கிட்டான். உண்மையா சொல்லணுன்னா இத்தனை பெரிய பணக்கார வீட்டு பொண்ணு கல்யாணம் பண்ணி வர்றதில்லை எங்க வீட்டுல  யாருக்குமே இஷ்டம் இல்ல. வெளில வேலை பாக்கற பொண்ணுங்கள கையில பிடிக்கறதே ரொம்ப கஷ்டம். அதுலயும் சொந்தமா தொழில் பண்ணற பொண்ணுன்னா நம்ம வீட்டுக்கு ஒத்து வருவாளான்னு எல்லாருமே யோசிச்சாங்க. ஆனா போன்ல பேசினதுல எனக்கு நிரஞ்சனாவை ரொம்ப பிடிச்சு போச்சு. அவகிட்ட எந்த நடிப்பும் இல்ல. எந்தப் பந்தாவும் இல்ல. ஜோசியரும் அவனுக்காகவே பிறந்தவ இவன்னு சொல்லிட்டாரு. அதுக்கு முன்ன  நிறைய பொண்ணுங்க போட்டோ பார்த்தான். யாரையுமே அவனுக்குப் புடிக்கல. ஆனா உங்க பொண்ணு பார்த்துட்டு வந்தான் உடனே  கல்யாணம்ன்னு சொல்லிட்டான். எங்களுக்கே ஆச்சர்யம்தான். அவங்க சரியா கூடப் பேசல. எப்படியோ பையன் பொண்ணுக்கிட்ட விழுந்திட்டான்னு மட்டும் தெரிஞ்சது. அதுக்கு அப்புறம் நான் குறுக்காக நிக்க விரும்பல"
"பாவம் நீங்க என்னனென்னவோ நினைச்சு கல்யாணம் பண்ணீங்க. ஆனா  
என்னோட  பொண்ணு கல்யாண மேடையிலேர்ந்து  இறங்கிப் போனது தவிர்க்க முடியாததா போச்சு. நான் என்ன காரணம் சொன்னாலும் கண்டிப்பா தப்புதான்.  என்ன சொன்னாலும் உங்களுக்கு அது பெரிய அவமானம்தான்.எங்க சைட்லேர்ந்து அது ரொம்ப  பெரிய தப்புதான். சரி பண்ண முடியாததா போச்சு. அதுக்குன்னு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்" கை  எடுத்துக் கும்பிட்டார்.
"என்ன பூரணி அம்மா இது? மன்னிப்பு கேட்டுகிட்டு? எனக்கு உங்க நிலைமை புரியுது. ஆனா செந்தில் தான் புரிஞ்சுக்க மாட்டேங்கறான். ரொம்ப ஆசையா இருந்தான். மனசால அவனால அத மாத்திக்க முடியல. தாலி  கட்டி  பொட்டு  வைச்சதுக்கு அப்புறம்  வேற எந்தச் சடங்குமே நடக்கல. முதலிரவுல அவளுக்குப் போட மோதிரம் கூட வாங்கி வச்சிருந்தான். என்னதான் வெளில கம்பீரமா சுத்திகிட்டு இருந்தாலும் மனசால அவனும் ஒரு சாதாரண மனுஷன் தானே? உங்க பொண்ணுதான் தனக்கு மனைவின்னு முடிவெடுத்துட்டான். அதை மீறி  அவனால் வெளியே வரவும் முடியல அதே சமயம் அவள் மாலையை மண மேடையிலேயே கழட்டிட்டு போனதையும் ஒதுக்க முடியல.
எல்லாம் பணக்கார திமிருன்னு  நினைக்கறான்"
"நான் பொண்ணோட அம்மாவா  இல்லாம அவரு நிலையிலிருந்து யோசிச்சா எனக்கு அவரு நிலைமை புரியுது. நீங்கத் தான் இவ்ளோ தன்மையா பேசறீங்க. உங்க நிலமைல நான் இருந்திருந்தா முகம் கூடப் பார்த்துப் பேசி இருந்திருக்க மாட்டேன்"
"நீங்க  இவ்ளோவெல்லாம் புகழ வேண்டிய அவசியமே இல்ல. இதுல என்னோட சுயநலமும் இருக்கு. முதல் விஷயம் நிரஞ்சனா எனக்குப் புடிச்ச பொண்ணு. ரெண்டாவது என் மகனுக்கும் பிடிச்ச பொண்ணு. பேரழகி. பண்பான பொண்ணு. அத்தனை  சுலபத்துல விட்டுட முடியுமா?"
"எத்தனை அருமையாக மனம் நோகாதபடி பேசுகிறார் இவர்? அவரின் வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருந்தது.
"நான் வேண்ணா  மாப்பிள்ளை கிட்ட பேசிப் பார்க்கவா ?"
"இல்ல பூரணியம்மா! நானே அவன்கிட்ட மெதுவா பேசறேன். அவன் கொஞ்சம் முன் கோபக்காரன். சட்டுனு மூஞ்சில அடிச்ச மாதிரி தூக்கி எறிஞ்சு பேசிடுவான். ஆனா மனசுல எதையும் வச்சுக்க மாட்டான்"
பூரணி முகம் கவலையாகவே இருந்தது. இன்னும் தெளியவில்லை.
"நீங்க  அவளைப் பத்தி கவலைப்படாதீங்க. அவனே  வேண்டான்னு சொன்னாலும் நான் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு  போறேன். சரியா?"
"மீனாட்சி சொன்ன விதத்தில்  ஒரு நொடி சிரிப்பு வந்தாலும்,
 "இல்ல சம்பந்தி. என்னதான் இருந்தாலும் மாப்பிள்ளையோட...."
"சரி! முதல்ல நான் பேசறேன். அப்புறம் என்னோட அண்ணனைப் பேசச் சொல்லறேன்.  என்னோட அண்ணன்  சொன்னா  கண்டிப்பா கேப்பான். அதுக்கு அப்புறமா வேணுன்னா நீங்கத் தாராளமா உங்க மாப்பிள்ளை கிட்ட பேசுங்க. சரியா?"
"சரி" இப்போதும் தெளிவின்றியே வந்தது பதில் பூரணியிடமிருந்து.
"அந்த அம்பாள் கிட்ட சொல்லிட்டு வாங்க. அவ பார்த்துக்குவா"
மீனாட்சி சொன்னபடியே  அம்மனிடம் மகளின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வந்தார் பூரணி.
மனதின் பாரம் சற்று குறைந்தது போல இருந்தது. 

தொடரும் ........






Leave a comment


Comments


Related Post