இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 25-06-2024

Total Views: 2633

அத்தியாயம் 23

யாகத்தின் வழியே கொடுக்கும் அவிர்பாகமானது மும்மூர்த்திகளுக்கும் தேவாதி தேவர்களுக்கும் சென்று சேருகின்றது. அந்த அவிர்பாகத்தால் தான் அவர்களுக்கு வலிமை கிடைக்கின்றது. 

இந்த அவிர்பாகத்திற்காய் தானே சிவன் தனது சதியை இழந்தது. தட்சன் நடத்தும் யாகத்திற்கு சிவனுக்கு அழைப்பில்லை. அவிர்பகத்திலும் பங்கு தரவில்லை. அதனாலேயே சதி தன் உயிரை யாகசாலையிலேயே பலி தந்து அதையே சிவனுக்கு அவிர்பாகமாய் அளித்தாள். இந்த இந்திரன் அதில் கைவைப்பான் என்று நாரதர் எதிர்பார்க்கவே இல்லை.

"இந்திரா இது தவறு"

"எது தவறு?"

"அவிர்பாகம் அனைத்து தேவர்களுக்குமே சொந்தமானது. அதில் இயமனை மட்டும் விலக்கி வைப்பது கண்டனத்திற்கு உரிய செயல். அன்று அவிர்பாகம் தர மறுத்ததன் பலனை தட்சன் அனுபவித்தது நீ மறந்துவிட்டயா?"

"எனக்கு இயமன் தோற்று நிற்க வேண்டும்"

"அதற்கு நீ தேர்ந்தெடுத்த இந்த வழி சரியானது அல்ல. முதலில் யாகங்களில் இருந்து கிடைக்கும் அவிர்பாகம் அவனுக்கும் சென்று சேர வழி செய்"

"தங்களது கூற்றினை மறுத்துப் பேசுவதற்கு மன்னித்து விடுங்கள். என்னால் இயமனுக்கான அவிர்பாகத்தினை  தர முடியாது"

"இதுவரை இயமன்தான் விதி மீறியிருந்தான். இன்று நீயும். இருவரும் ஈசனை மறந்து உங்கள் இஷ்டத்திற்கு ஆடுகிறீர்கள். உங்களுக்கான தகுந்த தண்டனையை ஈசன் நிறைவேற்றும் காலம் வரும். அப்போது புரியும் இந்திரா.. நீ புரிந்தது மாபெரும் பாதகம் என்று. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை"

"அட இருங்கள் நாரதரே. எங்களது கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்"

"இதில் நான் பங்கெடுத்தால் உங்களின் பாவத்திலும் பங்கெடுக்க வேண்டும். தேவையில்லை நான் வருகிறேன்" நாரதர் விட்டால் போதும் என்று ஓடியே விட்டான்.

இந்திரலோகம் தாண்டிய பின் நாரதர் "சிவ சிவா... ஒருவன் அப்படியென்றால் இன்னொருவன் இப்படி. ஈசன் திருவிளையாடல் இயமனோடு என்று மட்டும் தான் நினைத்தேன் ஆனால் இந்திரனும் சிக்கப் போகிறான். இதற்கெல்லாம் நான் காரணமில்லை. என்னை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பாவம்" என்று புலம்ப,

"அதெப்படி நாரதா உன்னை விடுவது. நீதானே இந்திரனை தூண்டிவிட்டது. இப்போது திடுமென நல்லவன் வேஷம் போட்டால் நான் உன்னை நம்ப வேண்டுமா?" திடுமென கேட்ட குரலில் நாரதர் கிலி படர்ந்த முகத்தோடு "சர்வேஸ்வரா! தவம் முடிந்ததா?" என திரும்பிப் பார்க்க ஈசன் தெரியவில்லை. 

"பணிகிறேன் சர்வேஸ்வரா" தனக்குள் இருந்த நம்பிக்கையால் நாரதர் பணிய,

"என்ன நாரதா வழக்கம் ஏதும் மாறிவிட்டதா?" என்று கேட்டது ஈசனின் குரல்.

"என்ன வழக்கம் பிரபு"

"வழக்கமாக நீ தான் கலகம் மூட்டி மற்றவர்களை புலம்பச் செய்வாய். இன்று நீயே புலம்புகிறாய். என்ன நேர்ந்தது?"

"அனைத்தும் அறிந்த தாங்கள் இவ்வாறு பேசுவது விந்தைதான் பிரபு"

"கேட்டதற்கு பதில் சொல் நாரதா"

"இந்த இந்திரன் எல்லை மீறிச் செல்கின்றான். அதுதான் என்னையும் அறியாது புலம்பிவிட்டேன்"

"என்ன செய்தான் தேவர்களின் தலைவன்?"

"அவிர்பாகம் இயமனுக்கு தரவிடாது தடுத்திருக்கின்றான்"

"தடுக்கட்டும்"

"இயமனின் காதலுக்கு குறுக்கே நிற்கிறான்"

"நிற்கட்டும்"

"பிரபு! தங்களின் திருவிளையாடலை ஒரு முடிவுக்கு கொண்டு வரக் கூடாதா? தாங்க முடியவில்லை பிரபு. இயமன் காதல் மயக்கத்தில் இருக்கின்றான். இந்திரனோ பழிவெறியில் இருக்கின்றான் இவர்கள் நடந்துக் கொள்வதை பார்த்தால் என்ன நேருமோ என்று கலக்கமாக இருக்கிறது. தயை கூர்ந்து தாங்கள் இதை தடுத்து நிறுத்துங்கள்"

"அது முடியாதே நாரதா. என்னோடு இயமனின் மனைவி சண்டை போடுவதாக வேறு சொல்லியிருக்கிறாள் அவளுக்காகவாவது நான் இன்னும் திருவிளையாடலை நீட்டிச் செல்வதாக திட்டமிட்டிருக்கின்றேன்"

"பிரபு! பாவம் இயமன்"

"அதிகாரத்தில் இருப்போரெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு விதிகளை மீறிக் கொண்டு சென்றால் அது அழகல்லவே"

"புரிகிறது பிரபு"

"இதில் சித்திரகுப்தன் வேறு அவனது காதலை பாவத்தின் கணக்கில் எழுதி வைத்திருக்கின்றான். அதன் பலனை இயமன் அனுபவிக்க வேண்டுமல்லவா?"

"அனுபவிக்கத்தான் வேண்டும்" என நாரதர் சொன்ன பிற்பாடு ஈசனின் குரல் கேட்கவில்லை.

எமலோகத்தினை நோக்கிச் செல்கையில் அஞ்சனாவிற்கு அத்துனை குதூகலமாக இருந்தது. பூமியில் இருந்து மேலே கிளம்ப கிளம்ப அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. 

அவளது முகத்தில் படர்த்த ஆச்சர்யத்தில் விழுந்த இயமன் அவளைப் பார்த்து "பிடித்திருக்கின்றதா அஞ்சனா" எனக் கேட்கவும் "ரொம்ப.. இவ்வளவு அழகா இருக்கே இந்த இடமெல்லாம். இப்படின்னு தெரிஞ்சுருந்தா நான் கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே வந்துருப்பேன் அந்தகா" என்றாள் அவள்.

"உனக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அஞ்சனா" எனச் சொன்னவன் எமலோகத்தினை நெருங்கும் போதே உடலில் இருந்து எதுவோ வெளியேறியதைப் போல் உணர்ந்தான்.

அந்த களைப்பின் பொருள் அறிந்தவன் முடிந்த மட்டும் தன்னை வெளிக்காட்டாமல் அவளை உள்ளே அழைத்து வந்தான்.

சித்திரகுப்தன் தனக்கே உரிய இடத்தில் அமர்ந்து பாவ புண்ணிய கணக்குகளை விடாது பிரம்மச்சுவடியில் எழுதிக் கொண்டிருந்தான்.

"சித்திரகுப்தா..." இயமனின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்தவன் அனிச்சை செயலாய் "பிரபு" என்று ஓடோடி வந்தான். 

வந்தவன் அவன் அருகே இருந்தவளைப் பார்த்தபின்னரே நடந்த அத்தனையும் நினைவில் நிறுத்தி இயமனை நெருங்காது விலகி நின்றான்.

அதையெல்லாம் பொருட்படுத்தாத இயமன் அஞ்சனாவிடம் "இவன்தான் சித்திரகுப்தன். அனைவரின் ஆயுட்காலம் அவர்களது பாவ புண்ணியம் இதெல்லாம் குறித்து வைப்பவன். எனக்குப் ப்ரியமானவன்" என்றவன் அவனிடம் "இவள் என் மனைவி அஞ்சனா" என்றான். 

இயமனின் முகத்தில் தெரிந்த தனிப்பொலிவில் சித்திரகுப்தன் மனம் யோசனையை தத்தெடுத்துக் கொண்டது. 

"என்ன யோசனை சித்திரகுப்தா"

ஒன்றுமில்லை என தலையசைத்துவிட்டு அவன் இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

அஞ்சனா சித்திரகுப்தனையே புரியாமல் பார்க்க "அவனுக்கு என் பேரில் கோபம் அஞ்சனா. அதுதான் இவ்வாறு நடந்துக் கொள்கிறான். கண்டுக் கொள்ளாதே. நான் அவனிடம் நடந்துக் கொண்டதும் அதிகப்படிதான். பாவம் சித்திரகுப்தன்" என்றான்.

"கோபமா உன் மேலயா. எதுக்கு கோபம்"

"அவனிடமே அதை கேள் அஞ்சனா"

"என்கிட்டதான் பேசலையே அந்தகா"

"அதெல்லாம் அவன் பேசுவான். சென்று பேசு"

அவள் சித்திரகுப்தன் முன் நிற்க அவனோ அவளை கண்டுக்கொள்ளாதவனாய் எழுதிக் கொண்டிருந்தான்.

"அந்தகன் கிட்ட கோச்சுக்கிட்டீங்களா.. ஏன்? அவன் என்ன தப்புப் பண்ணான்"

"பிரபுவை மரியாதை இன்றி என் முன்னிலையில் விளிக்க வேண்டாம் தேவி. என்னை எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள்" என்றான் இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன்.

"நான் எப்பவும் அவனை அப்படித்தான் சொல்லுவேன் சித்திரகுப்தா. எனக்கு அதுக்கு உரிமை இருக்கு"

"உரிமை இருந்தால் தங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். என் முன்னிலையில் அவ்வாறு பேசாதீர்கள். மனம் வலிக்கும்"

"மனம் வலிக்குதா. பார்த்தா அப்படித் தெரியலையே. அந்தகன் பேசுனதுக்கு நீ பதில் பேசவே இல்லையே"

"பிரபுவிடம் நான் பேசாது இருப்பதற்கு காரணம் உள்ளது தேவி. அதற்கும்  இதற்கும் முடிச்சுப் போடாதீர்கள்"

"என்ன காரணம்"

"வேண்டாம் தேவி. அதைப் பற்றி என்னிடம் வினவாதீர்கள். தாங்கள் இயமனின் மனைவி. அந்த மரியாதையை தங்களுக்கு நான் வழங்குவேன்" அவ்வளவுதான் பேச்சு முடிந்தது என்பது போல் அவனிருக்க, "அவர் காதலிச்சதுல உனக்கு விருப்பம் இல்லையா சித்திரகுப்தா.." எழுதிக் கொண்டிருந்தவனின் கரங்கள் அப்படியே தடுமாறி நின்றது.
 இதற்காகத்தான் அவன் எண்ணெய் குளியல் எல்லாம் குளித்து வந்தான். அந்த நினைவில் அவன் பிரபுவை முறைப்பதுப் போல் பார்த்துவிட்டான். 

அதைக் கவனித்தவள்,

"அது தான் உண்மையா சித்திரகுப்தா" என்றதும், "வீண் பேச்சுக்கள் எதற்கு தேவி. தாங்கள் சென்று இருக்கையில் அமருங்கள். உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்" என்றான் இவன்.

"என்னை அவர் காதலிச்சது தப்பா" இதைக் கேட்ட மறுநிமிடம் சித்திரகுப்தன் பொங்கி எழுந்து விட்டான்.

"தேவி! வேண்டாம் என்னை பேச வைக்காதீர்கள். தவறா என்று கேட்கிறீர்களே அது தவறென்று தங்களுக்குத் தோன்றவில்லையா? இதோ நிற்கிறாரே எம் பிரபு இவர் இந்த எமலோகத்தின் தலைவன். பாசக்கயிறு வீசி உயிர்களுக்கு மரணத்தினை வழங்குபவன். அப்படிப்பட்ட தலைவன் தன் பதவி மறந்து தனக்கென்று இருக்கும் விதிகளை மறந்து உங்களின் பின் வந்து நின்றிருக்கின்றார். எடுத்துச் சொன்ன எவர் பேச்சினையும் கேட்கவில்லை. அவர் விதிகளுக்கு புறம்பான வேலையை செய்த குற்றத்திற்காக ஈசன் நிச்சயம் தகுந்த தண்டனை வழங்குவார். அந்த தண்டனை பதவியை பறித்துவிடுவதோடு நின்றுவிடாது தேவி. அவர் நலனின் மீது கொண்டுள்ள அக்கறையால் மட்டுமே நான் அவரது காதலுக்கு தடையாய் இருந்தேன். ஆனால் அதை அவர் கண்டுக்கொள்ள மறுத்ததோடு எனக்குத் தண்டனை வழங்கி விட்டார்.  இப்போதும் அவர் நலனின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் தங்களின் மீதுள்ள மையலால் அவர் புரிந்துக் கொள்ள மறுக்கின்றார். இப்போது தங்களையும் அழைத்துக் கொண்டு எமலோகம் வந்தேவிட்டார். இனி சிவனின் சினத்திலிருந்து அவரால் தப்பவே முடியாது. அது மட்டுமா? அவர் செய்த மற்றொரு காரியம் இருக்கின்றதே அதற்கு ஈசன் என்ன தண்டனை வழங்க காத்திருக்கின்றார் என நினைக்கும் போதே என் நெஞ்செல்லாம் நடுங்குகிறது"

"அதென்ன காரியம்"

"அஞ்சனா இங்கு வா" அதற்குள் இயமன் அவளை அழைக்க சித்திரகுப்தன் இயமனை ஆழ்ந்து பார்த்து வைத்தானே தவிர வேறொன்றும் சொல்லவில்லை. 

அவளோ நகர மறுத்து நிற்க "செல்லுங்கள் தேவி. பிரபு தங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்" என்றான் இவன்.

"அது என்னென்னு சொல்லலையே"

"பிரபுவிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு பிரம்மச் சுவடியை ஏந்திக் கொண்டான் அவன்.

இவளோ இப்போதைக்கு அவனிடம் எதுவும் கேட்க முடியாதென்று எண்ணி இயமனிடம் சென்றாள். இயமன் எமலோகத்தினை சுற்றிக் காட்டிக் கொண்டு இருக்க அசிரத்தையாக கவனித்துக் கொண்டிருந்தவள் பின் இயமனின் அருகாமையில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள்.

அவனது கைவிரல்களை தடுத்து நிறுத்தியவள் "அந்தகா சித்திரகுப்தன் வேறொரு காரியம் செஞ்சதா சொன்னான்ல அது என்ன? நீ வேற அன்னைக்கு தப்பு பண்ணிட்டேன்னு சொன்ன. என்ன நடந்ததுன்னு சொல்லு" இப்படிக் கேட்பவளிடம் உண்மையை அவனால் எடுத்துச் சொல்ல முடியுமா? அதனால் 

"இந்த நேரத்துல அது தேவையா?" என்று தன்மையாக மறுத்தான்.

"தேவைதான் சொல்லு அந்தகா"

"அதைப் பத்தி நான் எதுவும் சொல்ல இயலாது. வேண்டாம் இதை பற்றின பேச்சினை விடு.." என்று சொன்னவன் அவளை அங்கேயே ஓய்வெடுக்கும்படி பணித்துவிட்டு சென்றுவிட்டான்.

சித்திரகுப்தன்கிட்ட போய் கண்டிப்பா கேட்டே ஆகணும். ஈசனை கோபப்படுத்துற அளவுக்கு என்ன தப்பு இயமன் பண்ணியிருப்பான்னு தெரியலையே. காதலிக்குறதுலாம் தப்புன்னு தண்டனை வழங்குனா அதுல ஈசனுக்கும் சேர்த்துதான் தண்டனை வழங்கணும். அவர் பார்வதியை காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிட்டார் என குறுக்கும் நெடுக்குமாய் நடந்து நடந்து யோசித்துக் கொண்டிருந்தவள் பேசியதை எல்லாம் கேட்டிருந்த ஈசனின் இதழ்கள் விரிந்தது.

காதலாசை யாரை விட்டது...!




Leave a comment


Comments


Related Post