இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 25-06-2024

Total Views: 914

அத்தியாயம் 24

அன்று, 

இயமன் வழக்கமாக வழிபடும் இடத்தில் அமர்ந்து ஈசனை நினைத்து தியானித்துக் கொண்டிருக்க அவனை தொந்தரவு செய்யாமல் அஞ்சனா சித்திரகுப்தனைத் தேடி விரைந்தாள்.

அதே இடம்‌. அங்கு சித்திரகுப்தன் பிரம்மச் சுவடியின் மீது தலைகவிழ்ந்து ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, "சித்திரகுப்தா" என்று அஞ்சனாவின் குரல் அதை களைத்தது. 

சலிப்பாய் அவன் பார்க்க அவனிடம் பேசியே ஆகவேண்டிய மனநிலையில் இருந்தவள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

"சித்திரகுப்தா! அந்தகன் என்னைக் காதலிச்சது முதல் தப்பு அடுத்து வேற ஏதோ தப்பு பண்ணியிருக்கான்னு சொன்னயே அது என்ன? என்கிட்ட சொல்லு"

"தேவி! அதுதான் பிரபுவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேனே"

"அந்தகன் என்கிட்ட அது பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கிறார்"

"தேவி! இந்த விஷயம் எல்லாம் தங்களுக்கு எதற்கு?"

"என்னை ஏதோ குற்றவாளி மாதிரி நீ பார்க்குற அதனாலயே அதுக்கான காரணம் எனக்குத் தெரியணும்"

"வேண்டாம் தேவி. அவ்விஷயத்தினைக் கூறினேன் என்றால் தங்களின் நிம்மதி தொலைந்து விடும். தாங்கள் சென்றுவிடுங்கள்"

"என் நிம்மதியைவிட அந்தகனோட நிம்மதி முக்கியம். அவங்களும் தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லுறாங்க. நீயும் இப்படிச் சொல்லுற. எனக்கு உண்மை என்னென்னு தெரியணும்"

"அது தெரிய வந்தால் தாங்கள் என்ன செய்வதாய் உத்தேசம். நடந்த தவறினை மாற்றி எழுதிட தங்களால் இயலுமா? எம் பிரபுவை தண்டனையில் இருந்து தப்புவிக்கத்தான் தங்களால் இயலுமா? கூறுங்கள் தேவி.."

"நிச்சயமா முடியும் சித்திரகுப்தா"

"என்ன? ஈசனை மீறி தங்களால் ஏதாவது செய்ய முடியுமா? வேடிக்கைப் பேச்சு வேண்டாம் தேவி"

"பக்திக்கு கட்டுப்படுபவன் ஈசன். அவன் நான் அந்தகன் மேல வச்சுருக்க காதலுக்கும் கட்டுப்படுவான்"

"வினையே அந்த காதல் தான் தேவி. தாங்களோ அதையேக் காரணம் காட்டி ஈசன் தரும் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறுகிறீர்கள்" சிரித்துக் கொண்டான் அவன்.

"உன் பிரபுவின் மீது நானும் என் மீது உன் பிரபுவும் வச்சுருக்க காதல் உனக்குப் புரியாது. புரிஞ்சுருந்தா நீ அவருக்குத் துணையா தான் இருந்திருப்பயே தவிர பிரிச்சுடலாம்னு கங்கணம் கட்டிட்டு அலைஞ்சுருக்க மாட்ட. உன்கிட்ட அதைப் பத்தின பேச்சு எதுக்கு? எனக்கு நீ இப்பவே நடந்தது என்னென்னு சொல்லணும்" என்றதும் அவன் " இவ்வளவு தூரம் தாங்கள் கேட்கையில் எனக்கென்ன வந்தது. சொல்கிறேன். எம் பிரபு திருக்கடையூர் வந்தது தங்களின் உயிர் பறிக்கவே. ஆனால் தங்களை பார்த்த மறுகணம் காதல் கொண்டு கடமை மறந்து இங்கு வந்துவிட்டார். வந்தவர் உங்களது கணக்கு இருக்கும் பக்கத்தினை பிரம்மச் சுவடியில் இருந்து அபகரித்துக் கொண்டார்" எனும் போதே

"என்ன சொல்லுற அதிர்ச்சியின் உச்சத்தில் அவள் கேட்க, "ஆம் இதைத்தான் நாங்கள் பெரும் பிழை என்று சொன்னோம். பேச்சினைக் கேட்க மறந்துவிட்டார். சொல்லுங்கள் தேவி கடமையை மறக்கச் செய்த, அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்ய வைத்த காதலினை நான் தடுக்க நினைத்தது தவறா தேவி.." என்றான் அவளின் அதிர்ச்சியினை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு.

இப்போது சர்வமும் புரிந்து போனது அவளுக்கு. இயமன் செய்தது எத்தகைய குற்றம் நிச்சயம் ஈசன் இதனை சாதாரணமாக விடப்போவதில்லை என்பதன் நிதர்சனம் புரிந்ததில் அவளுக்கு கிலி படர்ந்தது. 

அந்தகன் இல்லாத வாழ்வு அவளைப் பொறுத்தவரை வாழ்வே இல்லை. அந்தகனைக் காக்க அவள் ஏதாவது செய்தாக வேண்டும். ஈசன் தரும் தண்டனையில் இருந்து அவனை பாதுகாக்க வேண்டும். என்ன செய்வது அவள் யோசித்துக் கொண்டிருக்க சித்திரகுப்தன் "தேவி" என்று நிதானமாக அவளை அழைத்தான்.

"ஆங்.. என்ன?"

"தங்களின் மனம் படும் பாடு பற்றி அறிவேன். தாங்கள் இப்போது பிரபுவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். தாங்கள் மனம் வைத்தால் நிச்சயம் அது நடக்கும்"

"நான் என்ன பண்ணனும்னு சொல்லு. அந்தகனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்"

"தங்களின் உயிரை தியாகம் செய்து விடுங்கள் தேவி. அப்படியெனில் பிரம்மச்சுவடியில் தங்களின் கணக்கு நேர் செய்யப்பட்டு விடும். ஈசன் கண்விழிக்கையில் எல்லாமே சரியாகிவிடும். பிரபுவும் தப்பித்து விடுவார்"

"நிஜமாவா.. நான் செத்துட்டா அந்தகனுக்கு ஒன்னும் ஆகாதுல"

"நிச்சயம் தேவி" என்று சொன்ன சித்திரகுப்தன் மனம் இப்போது குரூரத்தின் விளிம்பில் இருந்தது. அன்று ஏற்பட்ட எரிச்சல் முழுமையாக அடங்கியது போன்ற உணர்வு. யாருக்காக தன்னை தண்டித்தானோ அவள் இப்போது இல்லை என்றால் நிச்சயம் அது இயமனுக்கு பேரிழப்புதான். இந்த தண்டனை இயமனுக்குத் தேவைதான் எனவும் நினைத்துக் கொண்டான்.

"சித்திரகுப்தா அந்தகனை மீறி நான் சாக முடியுமா? ஏன் கேக்குறேன்னா மரணத்துக்கான கடவுள் அவர்தான். அப்படியிருக்கும் போது நான் சாகப் போறது அவருக்கு நிச்சயம் தெரியும்ல. அப்போ வந்து தடுத்துடுவார்ல. அதுவும் இல்லாமல் பிரம்மச்சுவடியில இல்லாத உயிரை எடுக்க முடியாது தானே"

"உண்மை தேவி.. அதற்கொரு உபாயம் சொல்கிறேன்.. நான் பிரம்மச்சுவடியில் ஒரு போலி கணக்கு உருவாக்கி விடுகிறேன். சில இடங்களுக்கு எமகிங்கிரர்களை அனுப்பிவிடுவது வாடிக்கை.  அவர்கள் மூலம் தங்களின் உயிரை கவர்ந்து வர ஏற்பாடு செய்கின்றேன். அதற்கான கால நேரம் எல்லாம் நான் கணித்து எழுதி வைத்து தங்களிடமும் சொல்லி விடுகிறேன்.." எனச் சொல்ல அவள் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றாள்.

சித்திரகுப்தனுக்குள் இப்போது மட்டற்ற மகிழ்ச்சி. இயமனுக்கு இடைஞ்சலாய் வந்தவள் உயிர் பிரியப் போகிறது என்பதை நினைக்க நினைக்க தான் அனுபவித்த வேதனைகள் எல்லாம் ஒன்றும் இல்லாது போனது. இது இயமனுக்குத் தெரிய வந்தால் நிச்சயம் சித்திரகுப்தனை விடமாட்டான். அதைப் பற்றின கவலை கிஞ்சித்தும் இல்லாது சித்திரகுப்தன் காரியங்களில் ஈடுபட்டான்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இயமனுக்கோ கோபம் வரவில்லை. மாறாக சித்திரகுப்தனை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. அஞ்சனாவின் உயிருக்கு கவசம் இயமன். அவனை மீறி அவள் உயிர் போகப் போவதில்லை. அதுவுமில்லாமல் அவள் கணக்கினை முற்றிலுமாக அப்புறப்படுத்தியது அவன். அவள் இப்போது அவர்களைப் போலவே சாகாவரம் பெற்றவள். அதை ஏனோ சித்திரகுப்தன் மறந்து போனான். 

அவனைப் பாவமாக பார்த்தபடி தன்னுடைய நாடகத்தினை நடத்த திட்டமிட்டு உள்ளே வந்தான் இயமன். 
 இப்போது சித்திரகுப்தனும் இயமனும் மட்டுமே அவ்விடத்தில் இருந்தார்கள். இயமனின் மீது பார்வையைத் திருப்பாமல் அவன் வேறுபுறம் பார்த்த வண்ணம் நின்றிருக்க இயமன் "மன்னித்துக் கொள் சித்திரகுப்தா. நான் உன்னிடம் மோசமாக நடந்துக் கொண்டேன். தவறுதான். இருந்தும் என்னால் சினத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை. அஞ்சனாவின் உயிரை எடுப்பதாக நீ வாய் வார்த்தையாய் கேட்க கூட நான் விரும்பவில்லை சித்திரகுப்தா. அதற்காகவே அப்படி நடந்துக் கொண்டேன். மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். மன்னித்துக் கொள்" என்றான் சோகம் ததும்பும் முகத்தினை வைத்துக் கொண்டு. 

"தாங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. தங்கள் விருப்பப்படி தாங்கள் நடந்துக் கொள்வீர்கள். அதில் நான் தலையிட்டது தவறுதான்" முறுக்கிக் கொண்டு பேசினான் அவன்.

"கோபம் வேண்டாம் சித்திரகுப்தா. என்னால் அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அவளால் மட்டுமே இப்போது நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றேன்" உணர்ந்து இயமன் சொன்னதை உணர மறுத்தான் சித்திரகுப்தன்.

மேலும் இயமனே "இந்த உணர்வுகள் உனக்குப் புதிது அல்லவே. ஆதலால் தான் என்னிடம் மறுத்துப் பேசினாய். நீயும் ஒரு பெண்ணைப் பார்த்து மையல் உற்றிருந்தால் தெரிந்திருக்கும் அதில் கிடைக்கும் அதீத உவகை யாதென்று" இவ்வாறு பேச,

"எனக்குத் தெரியவே வேண்டாம் பிரபு. தங்களைப் போல் விதியினை மீற எனக்கு ஆசையில்லை" என்றான்.

"நான் மட்டும் விதியினை மீற வேண்டும் என்றுதான் இவ்வளவும் பண்ணினேனா சித்திரகுப்தா. ஏன் நீ என் நிலைமையினை புரிந்துக் கொள்ள மறுக்கின்றாய்?"

"தாங்கள் தங்களின் பக்கம் மட்டுமே பார்க்கிறீர். நானோ ஒட்டுமொத்தமாக இந்த எமலோகத்தின் நன்மை யாதென்று யோசிக்கின்றேன்"

"எமலோகத்தின் நன்மையை நீ கருத்தில் கொண்டிருந்தால்  எல்லோரிடத்திலும் என் விஷயத்தினை உளறி வைத்திருக்க மாட்டாய்"

"தங்களை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நானிருந்தேன் பிரபு. உடன்பிறந்தவர் சொன்னால் கேட்பீர்கள் என்று நினைத்தேன் பிரபு. எனவே தான் நான் சனீஸ்வரரைத் தேடிச் சென்று தங்களைப் பற்றி கூறினேன். தாங்கள் ஈசன் முன் தலைகவிழ்ந்து நிற்பதினை பார்க்க என்னால் நிச்சயம் முடியாது. அது மட்டுமா தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று மிகவும் அச்சமாக இருந்தது"

"உன் பிரபு பாவம் சித்திரகுப்தா. அவளை பார்த்திராவிட்டால் நான் நானாக இருந்திருப்பேன்தான். ஆனால் இப்போது அவளின் அந்தகனாய் மட்டுமே மாறி நிற்கிறேன். அது தரும் களிப்பிற்கு எல்லையே இல்லை. அவள் முன்னிலையில் அனைத்தும் எனக்கு மறந்துவிடுகிறது"

"அதனால்தான் தாங்கள் கடமையை மறந்துவிட்டீர்கள்"

"மெய்.. நான் மறுக்கவில்லையே சித்திரகுப்தா"

"அதுமட்டுமா? தாங்கள் தேவியின் ஆயுட்கணக்கினை அழித்துவிட்டீர்கள்"

"தவறு. ஒரு காதலனாய் அவள் என்னுடன் இருக்க வேண்டுமென ப்ரியப்பட்டேன்"

"ஈசன் இவ்விளக்கத்தினை ஏற்றுக் கொள்ள மாட்டார். அன்று மார்க்கண்டேயனுக்காக தங்களை பஸ்பமாக்கியவர் இன்று தாங்கள் செய்த தவறுக்காக அதே தண்டனை வழங்குவார் தங்களுக்கு நேரும் இந்த அனர்த்தத்தினை என்னால் காண இயலாது பிரபு. எனவேதான் ஈசனிடமே முறையிடலாம் என்று சென்றேன் நந்திதேவன் விடவில்லை. சரி பரந்தாமனிடம் பேசலாம் என்று செல்கையில் இந்திரன் குறுக்கே வந்தான். வேறு வழியின்றி அவனிடம் நான் நடந்ததை உரைத்துவிட்டேன்"

"அது நீ செய்த மாபெரும் பாதகம் சித்திரகுப்தா. அவனைப் பற்றித் தெரிந்த நீ அவனிடம் அதைச் சொல்லியிருக்கவே கூடாது. அவன் அஞ்சனாவின் மீது பித்தம் கொண்டு நிறையவே செய்துவிட்டான்"

"என்ன செய்தான் பிரபு"

"நீ சொன்னதைத்தான் செய்கிறான் சித்திரகுப்தா.." சொன்னவன் நடக்க ஆரம்பிக்க, "பிரபு பிரபு சற்று நில்லுங்கள். என்ன கூறுகிறீர்கள் நானென்ன செய்யச் சொன்னேன் இந்திரனை" என்றான் இவன்.

"நீதானே என் காதலுக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாய். அதைத்தான் திவ்வியமாக அவன் செய்துக் கொண்டிருக்கின்றான்"

"பிரபு நான் இந்திரனிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கவே இல்லை. இந்த நாரதர் தான்"

"எப்படியோ இந்திரன் காதுக்குள் என் காதல் விஷயம் சென்றது உன் தயவால் தான் சித்திரகுப்தா. அதன் பலனை இப்போது நான் அனுபவிக்கின்றேன். அது மட்டுமில்லாமல் நீயெழுதிய பாவத்தின் கணக்கினையும் சேர்த்துத்தான்" இதைச் சொன்ன பிற்பாடு தான் சித்திரகுப்தனுக்கு தான் செய்து வைத்தது கண் முன் வந்தது.

"எந்த காதலால் எவரையும் மதிக்காது திமிராய் திரிந்தீர்களோ அந்த காதல் உங்களது கைவிட்டு போகும். அந்த காதலால் தாங்கள் அடையப்போவது எக்கச்சக்கமான சாபமும் காயங்களும் மட்டுமே. வரும்.. அந்த நாள் விரைவில் வரும். அன்று தங்களுக்கென இருக்கும் கர்வம் எல்லாம் அழிந்து போகும். தங்களின் பதவி பறிபோகும். தங்களது எல்லாமே பறி போகும். அவளது உயிரை நான் எடுக்க வேண்டாம் என்றுதானே இவ்வளவும் செய்தீர்கள். இனி அவள் உங்களது உயிரை எடுப்பாள். அணுஅணுவாய் எடுப்பாள்..." அது நினைவுக்கு வந்த உடன்,

"பிரபு அது தங்கள் மேல் கொண்ட சினத்தில் புத்தி பிசகி.." மேற்கொண்டு அவனால் சொல்லவே முடியவில்லை. 

"பரவாயில்லை சித்திரகுப்தா. நான் செய்தது தவறுதானே. அப்படித்தானே நினைக்கிறாய். அதனால் அதன் பலனை நான் அனுபவித்துக் கொள்கிறேன். ஆனால் அஞ்சனா..ப்ச் நீ வேறு விதமாய் என்னை பழி வாங்கியிருக்கலாம். நீ நாங்கள் இருவரும் பிரிய வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டாயே.. இதை தடுக்கக் கூட வலுவில்லாதவனாய் நான் மாறிவிட்டேன்"

"பிரபு தாங்கள் மரணதேவன். தங்களுக்கு வலு இல்லை என்று ஏன் சொல்லுகிறீர்கள்"

"இந்த மரணதேவனுக்கு அவிர்பாகம் கிடைக்க விடாமல் அந்த இந்திரன் சதி செய்துவிட்டான். இப்போது என்னால் எதிர்த்து நிற்க இயலாத ஓர் சூழ்நிலை சித்திரகுப்தா"

"அவிர்பாகத்தினை தடுப்பது மன்னிக்க இயலாத குற்றம் பிரபு"

"ஆனாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் இயமன் தான் இல்லையா சித்திரகுப்தா" ஆழ்ந்த குரலில் அவன் கேட்கும் போது சித்திரகுப்தனுக்கு இயமன் மட்டுமா விதி மீறல் செய்தான் என்ற கேள்வி எழாமல் இல்லை. 

"இதற்கெல்லாம் நான்தான் காரணமா பிரபு" கலக்கத்தோடு கேட்டவனை சிரிப்புடன் பார்த்தவன் "ஈசன் இந்த முறை திருவிளையாடலுக்கு என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார் போல சித்திரகுப்தா. நீயும் அதில் ஓர் அங்கம் அவ்வளவே. நீ கலங்காதே. பார்த்துக் கொள்ளலாம்" என்றிட "பிரபு என்னை மன்னித்து விடுங்கள்" என்றான் மீண்டும்.

"எதற்கு இந்த மன்னிப்பு?"

"அது.. நான் தேவியின் மனதினை குழப்பிவிட்டேன். அவரது ஆயுளை முடித்துக் கொண்டால் மட்டுமே தாங்கள் பிழைப்பீர்கள் என்றதில் தேவி உயிர்த்தியாகம் செய்ய..."

"இயமனால் மீட்கப்பட்ட உயிரை பறிக்க முடியும் என்று நீ நம்புகிறாயா.. ?" அவனை பேச விடாது குறுக்கே புகுந்தான் இயமன்.

"அப்படியெனில்?"

"அவளது உயிர் பிரியாது. ஆனால் பிரிவு நேரும். அவளென்னை வதைப்பாள். நிச்சயம் நீ எழுதி வைத்தது போல் எல்லாம் நடக்கும்" இம்முறை அவனது பேச்சில் ஜீவன் தொலைந்து இருந்தது.

"பிரபு! நானெழுதியதை நானே மாற்றி எழுதிவிடுகிறேன் பிரபு. தங்களது உண்மையான சந்தோஷம் எதுவென்று எனக்குப் புரிந்துப் போனது. தங்களது விருப்பத்தினை மதியாதது என் பிழையே. அதை நானே சரிசெய்து விடுகிறேன் பிரபு"

"மீண்டும் விதிமீறலா சித்திரகுப்தா. அதற்கென்ன தண்டனை என்று தெரியுமா?"

"எதுவாயினும் தங்களுக்காக ஏற்றுக் கொள்ள சித்தமாக இருக்கின்றேன் பிரபு"

"சிவன் சித்தத்தினை மீறி எதுவும் நடக்காது சித்திரகுப்தா" சோர்ந்து போய் அவன் அமர்ந்துவிட இந்திரன் மீது அளவில்லா சினம் துளிர்த்தது சித்திரகுப்தனுக்கு.

ஆனால் இந்திரனோ தன் முன்னிருந்த அஞ்சனாவின் சித்திரத்தினைப் பார்த்தபடி, "விடமாட்டேன் அஞ்சனா. அந்த இயமனோடு உன்னைப் பார்க்க பார்க்க உள்ளம் கொதிக்கிறது. அதை குளிரவைக்க நீ என் காலடியில் கிடக்க வேண்டும். விரைவில் இதெல்லாம் நடக்கும்" எனப் பேசிக் கொண்டிருக்க.. திருவோ அன்றைய தினத்தின் யாகத்தினை வளர்த்து அதில் இயமனுக்கு மட்டும் அவிர்பாகம் தராமல் யாகத்தினை முடித்திருந்தான். அவன் மட்டுமா..? அவன் அருகே பூசை செய்து கொண்டிருந்த பலரும் அதையே தான் செய்துக் கொண்டிருந்தனர்.

காதலாசை யாரை விட்டது...!




Leave a comment


Comments


Related Post