இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 25-06-2024

Total Views: 614

அத்தியாயம் 25

"அந்தகா!" வழக்கத்திற்கு மாறாக அதீத மையலோடு குழைந்து வெளிவந்தது அவளது குரல். அந்த குரலில் சர்வமும் மறந்தவனாய் அவன் அவளருகே நெருங்கி வந்தான். வழக்கமாய் அவளை மயக்கம் அவனின் விழியிரண்டும் அன்றும் அப்பணியினை செவ்வனே செய்ய அவள் இன்னும் குழைந்துப் போனாள்.

"அழகிடி நீ! தற்போது இந்த மையலின் வண்ணம் பூசி பேரழகியாய் காட்சி தருகிறாய். இதில் என் மனம் மயங்கி தடுமாறுகிறது.. அஞ்சனா! உன் முன் மட்டுமே இந்த இயமன் இப்படியெல்லாம் மாறிவிடுகிறான். இந்திரலோகத்து அழகியெல்லாம்  இயமனின் அழகியான உனக்கு நேர் கிடையாது. இவ்வொட்டுமொத்த அழகும் எனக்கே சொந்தமாய் இருப்பதில் அத்துனை கர்வம்" அவனும் மோகத்தில் பேசிக் கொண்டிருக்க அவள் அவனை தழுவிக் கொண்டு ஆழ்ந்து அந்த கண்களைப் பார்த்து வைத்தாள். அந்த கண்கள் தான் அஞ்சனாவினை மேலும் மேலும் மயக்கி நிலைகுலைய வைக்கின்றது. ஒட்டுமொத்த காதலையும் கண்களால் காட்டுவதெல்லாம் அவனால் மட்டுமே முடியும். காலனுக்குள் இப்படியொரு காதலன் இருப்பது எல்லாம் ஆச்சர்யம்தான்.

அவளது எண்ணவோட்டத்தினைப் புரிந்தவன் போல், "உன்னைப் போன்ற பெண்ணினைப் பார்க்கையில் காலனாய் மட்டும் எப்படி இருக்க இயலும்?" என்றான்.

"அதனால தான் என்னை சாகடிக்க வந்துட்டு பாவம்னு விட்டுட்டுப் போயிட்டயா.." அவளும் கேட்டுவிட, சத்தியமாக இயமன் இந்த சமயத்தில் அவளின் இந்த கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை.

"அஞ்சனா! என்ன உளறகிறாய்?" 

"எதே நான் உளறுறேனா.. எனக்கு எல்லாம் தெரியும். சித்திரகுப்தன் எல்லாத்தையும் என்ட்ட சொல்லிட்டான்"

அவனது கண்கள் இப்போது வெகு சாதாரணமாக மாறிவிட அவளை விட்டுத் தள்ளி அமர்ந்தான். இருவருக்கும் இடையே மௌனம் மட்டும் அரங்கேறிக் கொண்டிருக்க அவள் அவனை ஒட்டிக்கொண்டு பின் பேசினாள்.

"அந்தகா! எதுக்கு இப்படிப் பண்ண? என்னை சாகடிச்சுருக்க வேண்டியதுதானே. இப்போ நீ கஷ்டப்படப் போறேன்னு தெரிஞ்ச பின்னாடி என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்"

"எனக்கென்ன கஷ்டம் அஞ்சும்மா. உன் மீது காதல் வராது இருந்தால் நீ சொன்னது நிறைவேறியிருக்கும். ஆனால் வந்து தொலைத்துவிட்டதே. பயந்து பயந்து நீ என்னை சிறைப்பிடித்து விட்டபோது அதை மீறி நானென்ன செய்வதாம்"

"இப்போது தண்டனை உனக்குத்தானே"

"அப்படியெனில் ஈசனோடு நீ சண்டை புரிவதாக சொன்னதெல்லாம் பொய்யோ அஞ்சனா"

'நான் உயிரோட இருந்தால் தானே சண்டை போடுறதுக்கு. நான் சாகப்போறேன் எமா' அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.

"அஞ்சனா! ஒரு விஷயம் நன்றாக புரிந்துக் கொள். நீ இருந்தால் மட்டுமே இயமன் இருப்பான். இல்லையெனில் மரண தேவன் மரணத்தினை ஏற்றிருப்பான். ஈசன் என்ன எனக்குத் தண்டனை தருவது. நானே தண்டனையே ஏற்றுக் கொள்வேன்"

"என்மேல அந்தளவுக்கா காதல்"

"அந்தகனுக்கு அஞ்சனா வேண்டும். எப்போதும் அஞ்சனா மட்டுமே வேண்டும்"

"எப்பவுமே அஞ்சனா உனக்கு மட்டும்தான் அந்தகா.. எடுத்துக்கோ" அவனிடமே அவள் சரண் புகுந்தாள்.

விதி மீறல்கள் எப்போதும் தண்டனைக்கு உரியவைதான். ஆனால் இவ்விடத்தில் விதிமீறல்கள் எல்லாம் தண்டனைக்கு அப்பாற்பட்டவை. புதிய உலகிற்கு உரித்தானவை.. அப்படிப்பட்ட புதிய உலகில் இருவரும் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்தார்கள். அவள் மனதில் அந்தகனின் காதலும் அவனிடத்தில் அவளும் மட்டுமே நிரம்பியிருந்தார்கள். இந்த காதல் பொல்லாததுதான் என்பதனை நொடிக்கு நொடி இருவரும் உணர்ந்துக் கொண்டு இருந்தார்கள். 

களைப்பிலும் விடாது காதல் செய்யும் இருவரையும் காலம் பிரிக்க காத்திருந்தது என்பது கசப்பான உண்மை. அதனை இயமனும் அறிவான். அதீத காதலோடும் அளவில்லாத காமத்தோடும் அவர்களது கூடல் முடிவுக்கு வந்திருக்க இயமன் வெகுவாக சோர்ந்திருந்தான். கண்கள் சொருகுவதைப் போலிருக்க அவனின் அந்த வினோத நிலையினை கண்ட அஞ்சனா

"என்னாச்சு அந்தகா!" பதட்டத்தோடு வினவினாள்..

"இந்..தி.. ரா.. அவி.. பா..ம்.." திக்கித் திணறிச் சொன்னவன் அவள் மீதே சாய்ந்திருந்தான். 

அங்கோ இந்திரன், இனி என்னை தடுக்க எவனாலும் முடியாது என இறுமாப்புடன் அங்கிருந்து கிளம்பி எமலோகத்தின் வாயிலுக்கு வந்தான். 

"அஞ்சனா" என்று விளித்தவனின் குரலில் அத்தனை கர்வம் இறுமாப்பு விரவிக் கிடந்தது. 

மயக்கமுற்றுக் கிடந்த இயமனையே அதிர்ச்சியோடு தட்டி எழுப்பிக் கொண்டிருந்தவளுக்கு இந்த விளிப்பு திடுக்கிடலை உண்டு பண்ணியது.

சித்திரகுப்தன் இந்திரனின் வருகையை கண்டு அவனைத் தடுத்தான். 

"இங்கே உனக்கு அனுமதி இல்லை இந்திரா"

"ஓஹோ! எனில் அந்த சுந்தரிக்கு மட்டும் உண்டோ"

"தேவி இயமனின் பாதி. அவருக்கு பூர்ண அதிகாரமுண்டு"

"அந்த தேவி இனி என் தேவி"

"தவறு செய்கிறாய் தேவேந்திரா. மரியாதையாக உன் இருப்பிடத்திற்கு விரைந்துவிடு. அதுவே உமக்கு நல்லது"

"நல்லது கெட்டது எதுவென எனக்குத் தெரியும். வழிவிட்டு விலகி நில். வீணாக வஜ்ராயுதத்திற்கு வேலை வைக்காதே"

"எம் பிரபுவை வஞ்சகமாக வீழ்த்தியதால் நீயொன்றும் வீரனில்லை"

"நான் வீரனாக இருக்க விரும்பவில்லை. அஞ்சனாவின் ப்ரியத்திற்கு உரியவனாக ஆசைப்படுகிறேன்"

"தேவி இயமனுக்கு உரித்தானவர். உன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்"

"அவளுக்கு நானே பொருத்தமானவன் விலகி விடு சித்திரகுப்தா. நான் உன் ஆசையையும் தான் நிறைவேற்ற செல்கிறேன். நீதானே இயமனுக்கும் அவளுக்கும் பிரிவு நேர வேண்டும் என்று விரும்பினாய். அதைத்தான் நானும் தர விரும்புகிறேன்"

"முடியாது..."

"அவனை விடு சித்திரகுப்தா" அஞ்சனாவின் குரலில் சித்திரகுப்தன் விலகி நின்றான்.

அவளைக் கண்டதும் இந்திரன் தடம் மாறினான். அவளது அழகு அவனை அந்தளவுக்கு தொல்லை செய்தது. 

"அஞ்சனா"

"என்ன இந்திரா எதுக்கு இங்க வந்த?"

"என்னோடு உம்மை அழைத்துச் செல்ல"

"எதுக்கு?"

"இயமன் தோல்வியுற்று விட்டான். இனி அவன் அவ்வளவுதான். வா சுந்தரி நாம் செல்லலாம்" என்று அவள் கைப்பிடிக்க அவன் வர சட்டென்று நகர்ந்தவள் "பரமேஸ்வரா" என்று கத்தி அழைத்தாள்.

அதில் எமலோகம் மட்டுமல்லாது அங்கிருந்த அத்துனை லோகமும் ஆட்டங் கண்டது. இந்திரனும் ஆடிப்போய்விட்டான். காரணம் ஈசன் இருவருக்கும் இடையே நடுநாயகமாக நின்றிருந்தான். கண்களில் கனல் ஏறியிருந்ததை இந்திரன் அறிந்த உடனே பணிகிறேன் சர்வேஸ்வரா என்று சரணடைந்தான்.

"இயமா" இப்போது ஈசனின் அழைப்பில் இயமன் புத்துணர்வு வரப்பெற்றவனாய் அங்கு வந்தான். அவனும் ஈசனை பணிந்து நிற்க, ஈசனின் கோபமுகம் நன்றாகவே வெளிப்பட்டது.

"சிவபெருமானே..!"

"இயமன் உனக்கு யாம் இட்ட கட்டளை எதுவென்று நன்றாக தெரியுமா? தெரியாதா?"

"அறிவேன் பிரபு"

"அறிந்தும் இப்படியொரு காரியம் செய்ய உனக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது"

அவளிடம் இருந்து என்பதனைப் போல் அவள் புறம் பார்வையைத் திருப்பினான் இயமன்.

"ஓஹோ. மையல்.... மானுடப் பெண்ணின் மீது மையலுறுவது தவறென்று உனக்குத் தெரியாதா?"

தலை குனிந்தான் இயமன். 

"தெரிந்தும் இப்படியொரு காரியம் செய்திருக்கிறாய். அப்படியெனில் ஈசன் என்ன செய்துவிடுவான் என்ற மிதப்புதானே காரணம்"

"இல்லை பிரபு.. அவள் மீது கொண்ட காதலை என்னால் மறக்க இயலவில்லை. அவளோடு இருக்க வேண்டுமென்ற ப்ரியத்தின் அடிப்படையில் நான் இவ்வாறு செய்துவிட்டேன்"

"அதுசரி அவளது ஆயுட்காலத்தினை மாற்றியெழுதும் அதிகாரத்தினை உனக்கு யார் நல்கியது? ஈசனான நான் உனக்கு அளித்த பணி உயிர்களைக் கவர்ந்து வருவது தானே தவிர உயிரைக் காப்பது அல்ல.. பிரம்மச்சுவடியில் இருந்து அவளது கணக்கினை அழித்தது மன்னிக்க முடியாத செயல். கடமையை மறந்த உனக்கு விதியினை மீறிய உனக்கு அதிகாரத்தினை தவறாக பயன்படுத்திய உனக்கு யாம் தரும் தண்டனை மரணம்.." சடுதியில் ஈசனின் நெற்றியில் நெற்றிக் கண் உதயமாகியது..

அதிலிருந்து வந்த நெருப்புப் பொறியில் இயமன் சிக்கி அந்த இடத்திலே சாம்பலாகிப் போனான். 

"அந்தகா!" அனைத்தும் ஸ்தம்பிக்கும் வண்ணம் அலறினாள் அஞ்சனா. அவளால் நடந்ததை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. சாம்பலாகிப் போனவனை கண்டு அவள் நெஞ்சம் வெடித்துப் போனது. எந்த உயிருக்காக அவன் கடமையை மறந்தானோ அந்த உயிர் இப்போது அவளுக்கே பாரமானது. 

சித்திரகுப்தன் முகம் சடுதியில் மாறிப்போனது. "பிரபு" என்று கதறியவன் அஞ்சனாவைப் பார்த்தான் அதே குற்றம் சாட்டும் பாவனையில். அதைக் கவனித்த அஞ்சனாவிற்கு நெஞ்சம் இரண்டாக பிளந்தது போல் வலித்தது.

"அந்தகா.. இதுக்காகவா நீ என்னை காதலிச்ச. இதுக்குத்தான் கல்யாணம் பண்ணயா. இப்படி நடந்துருக்க கூடாது. நடக்கக் கூடாது. என்னை விட்டுப் போக மாட்டேன்னு நீ வாக்கு கொடுத்தயே அந்தகா. இப்போ போயிட்ட.. இதுதான் சரியா. எழுந்திரி அந்தகா!" என்று சொன்னவளின் ஆத்திரம் சினம் ஆவேசம் என சகல விதமான உணர்வுகளும் சர்வேஸ்வரன் பக்கம் திரும்பியது.

"என்ன பண்ணி வச்சுருக்க ஈஸ்வரா உன்ட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எந்தவித விசாரணையும் இல்லாமல் நீ எப்படி இவனை இந்தமாதிரி பண்ணலாம். அவன் என்னோட பாதி. அவனுக்கு இந்த தண்டனை தந்தது தப்பு. எனக்கு என்னோட அந்தகன் வேணும். அவனை எழுப்பிக் கொடு"

அதிகாரமாய் கேட்டவளை பார்த்த ஈசன் "முடியாது" என திட்டவட்டமாக மறுத்தான்.

"முடியாதா? அவன் உயிர் எனக்கு முக்கியம்"

"அவன் விதியை மீறியிருக்கின்றான். அதற்குத் தகுந்த தண்டனை வேண்டும். அவன் கடமையை மறந்தது ஏற்புடைய செயல் அல்ல அஞ்சனா"

"கடமையை யார் மறந்தது?"

"இயமன் தான்.. காதல் அவன் கண்ணை மறைத்திருந்தது"

"அப்படின்னா நீ மார்க்கண்டேயனுக்கு உயிரை திருப்பித் தந்தயே அப்போ உன் கண்ணை எது மறைச்சுருந்தது" பட்டென்று கேட்டவளை ஈசன் மெச்சுதலாக பார்க்க,

"தேவி ஈசனிடம் இதென்ன பேச்சு.. வேண்டாம் தேவி ஒட்டுமொத்த தவறும் நம்பக்கம் இருக்கிறது" சித்திரகுப்தன் அவளிடம் வந்து பேச,

"சித்திரகுப்தா.. தப்பு நம்பக்கம் இருக்கா.. என்ன தப்பு இருக்குன்னு நீ கண்ட.. அந்தகன்.. உயிரை எடுக்கணும் உயிரை பாதுகாக்க கூடாது அதுதானே அவனுக்குக் கொடுத்த பணி. அப்படிப் பார்த்தா மார்க்கண்டேயனோட உயிரை எடுத்துட்டு தானே வரணும். எடுக்க வந்தவனை இதோ இங்க நிக்கிற சிவன் என்ன பண்ணார்?" அவள் கண்களில் கனல் ஏறியிருந்தது. ஈசன் என்ன செய்தான் என்றுதான் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியுமே. ஆதலால் அவ்விடம் மௌனத்தின் பிடியில் இருந்தது.

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" அவள் பார்வை ஈசனை குற்றம் சாட்டியது.

"அவனது பக்திக்கான எனது அருள் அஞ்சனா" 

"அந்த இடத்துலயும் கடமையை மீற மாட்டேன்னு சொன்ன அந்தகனை என்ன பண்ண. அப்பவும் சாம்பலாக்கிட்ட தான. ஆக, உனக்குத் தகுந்த மாதிரி அவன் அப்பப்போ மாறிக்கணும். இதெல்லாம் என்ன நியாயம்" விடாது அவள் நியாயம் கேட்க,

"இந்த மானிடப் பெண் அடுத்ததாக சத்தியவான் சாவித்திரியினை எடுத்துக்காட்டாக கூறப் போகிறாள்" அருகே இருந்த அக்கினியின் காதில் வாயு ஒப்பிக்க, "சத்தியவானை அந்தகன் திருப்பிக் குடுத்தான். அது எந்த கணக்குல சேர்த்தி" என்றாள் அவளுமே. 

"பதி பக்தி.. கற்பின் பெருமையில் சேர்த்தி"

"அப்படின்னா எனக்கு இதெல்லாம் இல்லையா..? ஈஸ்வரா"

எந்த பக்கம் போனாலும் விடமாட்டேன் என்பது போல் நின்றிருந்த அவளை 

"இங்கு பார் பெண்ணே.." என ஈசன் அழைக்க, "பொறு நான் பேசி முடிச்சுக்கிறேன். அந்தகனால சத்தியவான் உயிரைத் திருப்பித் தர முடியும்னா என் உயிரையும் எடுக்காமல் இருக்க முடியும்ல. சாவித்திரியோட உண்மையான காதலுக்காக சத்தியவான் உயிரோட திரும்பி வந்தான். அந்தகனோட தூய்மையான காதலுக்காக நான் இப்பவும் உயிரோட இருக்கேன். இது தப்புன்னா நீ பண்ண எல்லாமே தப்பு. ஏன் உனக்கு பூமியில பிறந்த மானுடப் பெண் மேலதான காதல் வந்துச்சு. அங்கதானே முறைப்படி கல்யாணம் பண்ணி கைலாயம் வந்த. நீ பண்ணால் அதெல்லாம் ஒன்னுமே இல்லை. அதை அந்தகன் பண்ணா மட்டும் விதி மீறலா..?" கண்ணீர் வழிய அவள் அழுகையோடு பேச,

"முடிவாய் என்னதான் சொல்ல வருகிறாய் பெண்ணே?" என்றான் ஈசன்.

"அந்தகனோட உயிர் எனக்கு வேணும். அவ்வளவு தான்"

"இயமனை நான் உயிர்ப்பிக்கின்றேன். ஆனால் ஒரு நிபந்தனை" அவளது பக்தியினை சோதிக்க விரும்பி ஈசன் அவளுடன் விளையாடத் தொடங்கினான்.

"என்னென்னு சொல்லு. எதுவா இருந்தாலும் செய்யுறேன். என் உயிர் வேண்டுமா அதையும் தர்றேன்"

"ப்ச் இயமன் தடுத்து நிறுத்திய உயிர் எனக்கு வேண்டாம். அதற்குப் பதிலாய் உன் காதல் வேண்டும்"

"என்ன" அதிர்ந்த முகத்தோடு அவள் ஈசனைப் பார்க்க, "அவன் உயிரோடு எழுந்த மறுகணம் உன் நினைவிலிருந்து இயமனின் நினைவு அகன்றுவிடும். அவன் நேரில் வந்து அவனைப் பற்றி ஏதாவது சொன்னால் கூட உன்னால் அவனை ஞாபகப்படுத்திக் கொள்ளவே இயலாது. அவன் உயிர் உனக்கு வேண்டும் என்றால் இதற்கு சம்மதம் சொல்வாயா?" சொல்லி முடிக்க, "சம்மதம்" யோசிக்கவே இல்லை. நொடியில் அவள் பதில் சொன்னாள்.

"இப்போதும் நீ இயமனின் உயிரை பறிக்கவே சம்மதம் சொல்கிறாய் அஞ்சனா.." ஈசனின் கேள்வியில் மறைந்திருந்த பொருளை அவள் உணர்ந்தாள்.

"இது அவனுக்கு எவ்வளவு வலிக்கும்னு எனக்குத் தெரியும். ம்ப்ச் ஆனா அவன் உயிரோட இருப்பான்ல. எனக்கது போதும்"

"அது உன்னிஷ்டம். நீ கேட்டதற்கு இணங்க அவனை உயிர்ப்பிக்கிறேன்" சொன்னதும் இயமன் சாம்பலில் இருந்து மீண்டும் கம்பீரமாக எழுந்து நின்றான்.

அவனுக்கு உயிர் வந்த மறுநொடி அவள் தனது வீட்டில் இயமனை சுத்தமாக மறந்த நிலையில் இருந்தாள்.



காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post