இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 25-06-2024

Total Views: 855

அத்தியாயம் 26

எங்கோ வெறித்துப் பார்த்தபடி அவள் அமர்ந்திருந்தாள். நேற்றுதான் ஒருவனை அவள் தெருவில் பார்த்தாள். பார்த்தவன் 'அஞ்சனா' என்று பெயரைச் சொல்லி அழைக்கவும் அவளுக்குப் பயம் வந்துவிட்டது. அதுவும் இல்லாமல் அவன் திடுமென வந்து கையை வேறு பிடிக்க அவள் வெறுப்புடன் அவனை அறைந்து விட்டு வந்திருந்தாள்.

அவன் யார் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை அவளுக்கு. மீண்டும் அவன் முகம் நினைவுக்கு வர வெறுப்பே அவளுக்கு மிஞ்சியது.

இதை அவள் திருவிடம் கூட சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அவனை உண்டு இல்லையென்று ஆக்கியிருப்பான். திருவை நினைத்ததும் அவள் முகம் கனிந்தது. சிரிப்புடன் இப்போது அவனைப் பற்றி நினைத்துக் கொண்டாள். மேடிட்ட வயிறையும் வாஞ்சையுடன் தடவியவள் முகம் தாய்மையினை தத்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் அவள்  நினைத்துக் கொண்டிருந்த திருவே உள்ளே வந்தான்.

"அஞ்சு.." 

"மச்சான் வந்துட்டீங்களா?"

"வந்துட்டேன்ம்மா.. அம்மாவும் புள்ளையும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அப்பாவை நினைச்சுட்டு இருந்தீங்களா?"

"ஆமா நினைச்சுட்டு நான் இருந்தோம்"

"நிஜமாவா அப்பாவை நினைச்சீங்களா?"

"அதுல உங்களுக்கு சந்தேகம் வேறயா?"

"சந்தேகம் எல்லாம் ஒன்னுமில்லை"

"நேத்து கோவிலுக்குப் போகலாம்னு சொன்னீங்க.. "

"அதுதான் சீக்கிரமா வந்துட்டேனே அஞ்சு. வாங்க போகலாம்"

அவர்கள் கீழிறங்கி வர லட்சுமியும் சிவகாமியும் கூடத்தில் அமர்ந்தபடி அவர்களைத்தான் பார்த்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் சந்தோஷம் மீண்டிருந்தது. 

கோவிலுக்கு செல்லும் வழியில் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்த அஞ்சனா திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லாதது போல்தான் இருந்தது. மீண்டும் நடக்க முதுகில் அந்த பார்வை ஊசியாய் இறங்கியது. அது ஒருவிதமான அசூசையாக அவளுக்கு இருந்தது. அந்த அசௌகர்யம் முகத்திலும் வெளிப்பட்டுவிட, "என்ன அஞ்சு உடம்புக்கு ஏதாவது செய்யுதா?.. நாம வேணும்னா ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வரலாமா?" என பதறினான் அவன்.

"இல்லை, ஒன்னும் இல்லைங்க"

"பின்ன ஏன் முகம் ஒருமாதிரி ஆகிடுச்சு. இரு தண்ணீர் குடி" என அவன் எடுத்து குடுக்க அவள் அதை குடித்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

அவளது கரத்தினை அழுத்தமாக பிடித்தவன் "ஒன்னும் பிரச்சனை இல்லையே. கோவிலுக்கு போகலாமா.. இல்லை இன்னொரு நாள் போவோமா?" எனக் கேட்க,

"ப்ச். எனக்குத்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேனே மச்சான். வாங்க கோவிலுக்குப் போகலாம்" அவள் அவன் தோளில் சாய்ந்துக் கொள்ளவும் அவன் அவளை பிடித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான். 

அவர்கள் அந்த இடத்தினை விட்டு நகன்ற பின் மறைவில் இருந்து வெளிப்பட்டான் அந்தகன். அவனிடம் இப்போது எதுவுமே இல்லை. பதவி பறிபோனது. பதவி போனதில் அவனுக்கு வருத்தமே இல்லை. அவள் கைவிட்டுச் சென்றதுதான் அவனை நிலைகுலையச் செய்திருந்தது. 

சாம்பலில் இருந்து மீண்டு தன் உரு பெற்ற இயமனிடம் "காலன் கடமை தவறிய காரணத்தால் அந்த பதவி வகிக்க அருகதை அற்றவனாய் மாறிவிட்டாய். இனி எமலோகத்தில் உனக்கு வேலை இல்லை. யாருக்காக இதையெல்லாம் மீறினாயோ அவளே உன்னை மறந்தும் போய்விட்டாள். இனி நீயும் அவள் நினைவில் பித்துப் பிடித்து அலைந்து திரிந்துக் கொண்டிரு.. என்ன முயற்சி செய்தாலும் உன்னால் அவளுக்கு நடந்த எதையும் நினைவுபடுத்த இயலாது" எனச் சொல்லவும் இயமன் விரக்தியாய் சிரித்தான்.

அவனது சிரிப்பு அங்கிருந்த எல்லாருக்குமே வலியைக் கொடுத்தது. சனி தன் உடன்பிறந்தவனின் நிலையை வருத்தத்துடன் பார்த்தான். இப்படியெல்லாம் நடக்குமென்று எதிர்பார்த்தது தானே. 

"பரம்பொருளே! இது எத்தகைய கொடிய தண்டனை என்று தாங்களே அறிவீர்கள். தங்கள் முன்னிலையில் தான் மணம் புரிந்தோம். எந்நிலையிலும் எங்களுக்குள் பிரிவு நேரக்கூடாதென்பதே இருவரது வேண்டுதலாகவும் இருந்தது. இருந்தும் இதையே தாங்கள் தண்டனையாக வழங்கியிருக்கிறீர்கள். தாங்கள் எனது பதவியைப் பறித்தது எனக்கு வலிக்கவில்லை. ஆனால் அவள் நினைவில் இருந்து என்னை அகற்றிவிட்டீர்களே அது என்னை உயிரோடு புதைக்கிறது. இந்த கொடிய ரணத்தின் பிடியில் சிக்கி நான் வாழத்தான் வேண்டுமா? வேண்டாம் என்னை மீண்டும் பஸ்பமாக்கிவிடுங்கள். தங்களுக்கு புண்ணியமாகப் போகட்டும்"

"அவளது வேண்டுதலை யாம் மீற மாட்டோம். நீயும் மீறமாட்டாய் அல்லவா?" சொன்ன ஈசன் சென்றுவிட இறுகிப் போய் அமர்ந்தான் இயமன். 

சித்திரகுப்தன் சாஷ்டாங்கமாக அவனது காலில் விழுந்து "என்னை மன்னித்து விடுங்கள் பிரபு. எல்லாம் எம்மால் தான். நான் மட்டும் பாவத்தின் கணக்கில் தங்களது காதலை சேர்க்காது விட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?" என அழுதான்.

பதில் பேசவில்லை அவன். எவ்வளவோ முறை மன்னிப்புக் கேட்டும் அவன் பேசவே இல்லை. அவனது பதவி பறிக்கப்பட்டதால் இனி எமலோகத்தில் அவனால் இருக்க இயலாது.

அதற்கு மேலும் அங்கே இருக்க அவனுக்கு விருப்பமும் இல்லை. அஞ்சனா வேண்டும் என்ற அவன் மனம் அவனை போட்டு பாடாய் படுத்தியது. அவளைக் காணவேண்டும் என்று வீட்டுக்குச் சென்றான்.

இப்போது அவன் சாதாரண மனிதன். அவ்வளவே. அவன் ஆர்வமாய் வீட்டிற்குள் நுழைய உள்ளிருந்து சிவகாமியின் குரல் வெளியே வரைக்கும் கேட்டது. 

"எதுக்கு இங்க வந்த. உன் அம்மா செத்துட்டேன்னு ஏதாவது தகவல் வந்ததா. அதான் பார்க்க வந்தயா..?"

"இதுதானே நம்ம வீடு" அவளுக்குள் பெருத்த குழப்பம்.

"அது அவன் கூட போறதுக்கு முன்னாடி வரைக்கும்"

"எவன் கூட போனேன். என்னம்மா சொல்லுறீங்க" அவள் பேசவும், "என்னடி ஆச்சு உனக்கு. அவனை நம்பி போய் இப்படி வந்து நிக்குறயே" என்றாள் சிவகாமி ஆற்ற மாட்டாமல்.

"அம்மா எனக்கு என்னாச்சு. நீங்க எதுக்கு இப்படிப் பேசுறீங்க நான் யாரை நம்பிப் போனேன். அம்மா என்னம்மா ஐயா இறந்ததும் நான் ஆஸ்பத்திரியில தானே இருந்தேன். நீங்க என்ன புதுசு புதுசா சொல்லுறீங்க? எனக்கு ஏதாவது பிரச்சனையா?" சிறுகுழந்தையாய் அவள் குழப்பத்தோடு வினவி வைக்க வெளியே இருந்த அந்தகனுக்கு அவளை அள்ளி இறுக்கி ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. 

அதற்குள் திரு லட்சுமியுடன் உள்ளே வரவும் "நம்ம கல்யாணத்தை பத்தி நீங்க கூட பேசுனீங்களே மச்சான். ஆனால் அம்மா மட்டும்.." என்று சொல்ல "அத்தை ஏதோ மாமாவோட ஞாபகத்துல அப்படிச் பேசிட்டாங்க. நீ வா" என்றான் அவன்.

"எங்கே மச்சான்"

"நாம கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாம்" என அவளை அழைத்துச் சென்றுவிட லட்சுமி சிவகாமியிடம் நடந்ததை எல்லாம் விவரிக்கத் தொடங்கினாள். அதைக் கேட்டதும் "நான் அன்னைக்கே சொன்னேன் அவன் வேண்டாம்னு இவ கேட்கலையே லட்சுமி. இப்போ பாரு இவளுக்கு இப்படியொரு நிலைமை" என்று கண்ணீர் விட்டார். தன் மகள் காதலாய் வாழ்ந்த வாழ்வை தொலைத்துவிட்டு மறந்து போய் வந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

"மதினி இப்போ அழாதீங்க. இனி அவளோட வாழ்க்கையில அந்த எமனோட அத்தியாயம் முடிஞ்சு போச்சு. நடந்ததை நாம கெட்ட கனவா நினைச்சு மறந்துடலாம். திரு இதையெல்லாம் சொல்லிட்டு அம்மா இப்பவாவது எந்த காரணமும் சொல்லாமல் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லுறான்" என்று சொல்ல "அதெப்படி லட்சுமி பண்ணறது. அவ ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணு. அவளை.. முடியாது லட்சுமி. அவ என் பொண்ணா இங்கேயே இருக்கட்டும்" சிவகாமி மறுத்துப் பேச, 

"அவளுக்கு அவனை சுத்தமா ஞாபகம் இல்லை. இனியும் வரவே வராது. அப்படியிருக்கும் போது திருவுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறதுல என்ன தப்பு. மதினி இந்த கல்யாணம் நடக்கணும். அவளுக்கு திருதான் சரியானவன்" என்று முடிவாக சொல்லவும் அவளோ தலையே மட்டும் ஆட்டி வைத்தாள்.

வெளியில் இருந்த இயமனுக்கு வார்த்தையாய் அவர்கள் சொல்லுவதையே தாங்க முடியவில்லை. அப்படியொரு நிலைமை வந்தால் தன்னால் கண்கொண்டு பார்க்க இயலுமா அவன் நடுநடுங்கிப் போனான். 

என்ன செய்தாலும் தன் நினைவு அவளுக்கு வரப்போவதில்லை என்று ஈசன் வேறு சபித்து விட்டார். இப்போது என்ன செய்வது. என்னால் அவளை விட்டுவிட்டு இருக்கவே முடியாது என்றவன் அவர்கள் சென்றிருந்த கோவிலுக்குச் சென்றான்.

திருவுக்கு மனம் உறுத்திய போதும் அவளுக்கான ஆறுதல் தன்னால் மட்டுமே இப்போது தரமுடியும் என்பதை நம்பினான். அவளது வாழ்வில் இயமன் முடிந்து போன அத்தியாயம். அவளுக்கு எப்போதும் இயமனைக் குறித்தான ஞாபகங்கள் வரப்போவதில்லை. தன் வாழ்க்கையிலும் அஞ்சனாவைத் தவிர வேறு பெண்ணிற்கு இடமில்லை. அதனாலே அவளுக்கான வாழ்க்கைத் துணையாய் தான் மாறிவிடுவதே உசிதம் என்று முடிவெடுத்துக் கொண்டவன் அதே ஈசன் முன்னிலையில் தங்களது திருமணத்தினைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

அவளோ எந்தவித பாதிப்பும் இல்லாதவளாய் ஈசனை மட்டும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். 

"அஞ்சனா! நான் உன்கிட்ட நம்ம கல்யாண விஷயம் பேசணும். இங்க வச்சே இதைப் பேசுறது சரின்னு எனக்குத் தோணுச்சு. நீயென்ன சொல்லுற?"

"இதுல சொல்ல என்ன இருக்கு. ஐயாவோட விருப்பமே இதுதானே மச்சான். அதனால எனக்கும் சம்மதம்"

நொறுங்கிப் போனான் கேட்டுக்கொண்டிருந்த இயமன். தன் கண்முன்னாலேயே அவள் வேறு ஒருவனின் மனைவியாக மாறுவதற்கு சம்மதம் சொல்கிறாளே என்ற வலி அவனை உருக்கியது.

அவளிடம் பேசவேண்டும். தன்னை அவள் கண்டுகொள்ள வேண்டும். அவள் கரங்களில் தான் குழைய வேண்டும் என்று ஏகப்பட்ட போராட்டங்கள் அவனுள். 

பிரகாரத்தினை அமைதியாய் வலம் வந்துக் கொண்டிருந்தவளை நோக்கி நிதானமாக அடியெடுத்து வைத்தான் இயமன். திரு சற்று தள்ளி அமர்ந்திருந்ததால் இயமனைப் பார்க்கவில்லை. அவள் இவனைப் பார்த்துவிட்டு வழிவிட்டு ஒதுங்கி பின் நடக்க அவனோ கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். 

தொண்டை கிழிய அஞ்சனா என்று கத்த வேண்டும் போல் இருந்தது. முடியவில்லை. தனக்கான தண்டனையின் ரணத்தினை தனக்குள்ளயே புதைத்துக் கொண்டு ஈசனை ஒரு பார்வை பார்த்துவிட்டு புறப்பட்டுவிட்டான்.

அன்றிலிருந்து இதோ இன்றுவரை அவளைப் பின்தொடர்வது அவனது வேலை. நேற்றுதான் அவளும் பார்த்தாள் அவனை. அதுவே அவளது கரம்பிடிப்பதற்கான தைரியத்தினை அவனுக்குத் தந்திருந்தது. ஆவலோடு அவளைப் பார்த்திருக்க அவள் அவனை அறைந்திருந்தாள். கோபம் வரவில்லை. அவனுக்கு வரவும் வராது. கன்னத்தினை தடவிக் கொண்டு வேகமாகச் செல்லும் அவளின் அழகினைத்தான் அவன் இரசித்துக் கொண்டிருந்தான்.

படபடத்த நெஞ்சினை ஒருகையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கரத்தால் வயிற்றைத் தாங்கிக் கொண்டு அவள் நடக்க அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்.

"சுவாமி இணைந்த இருவரையும் பிரித்து வைப்பது அழகல்ல. பாவம் இயமன் அவன் ஜீவனிழந்து நிற்கிறான். இருவரது வாழ்வும் தங்களது முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டவொன்று. அந்த பந்தம் பாதியிலேயே பிரிந்துப் போய்விட்டதே. தாங்கள் இதற்கொரு முடிவு தரப்படாதா.." பார்வதி நடப்பதை எல்லாம் பார்க்க மாட்டாமல்  காட்டமாக பேச,"என்ன தேவி ஆதரவு பலமாக இருக்கின்றது" என்றான் ஈசன்.

"ஆதரவு என்பதை விட நான் தங்களின் பேரில் வருத்தம் மட்டுமே கொண்டிருக்கின்றேன்"

"ஏன் தேவி?"

"தாங்கள் இயமனை மட்டும் தண்டித்தீர்களே தவிர அந்த இந்திரனை அப்படியே விட்டுவிட்டீர்களே! அவன்தான் இங்கே நிறைய குற்றங்கள் புரிந்தவன் சுவாமி"

"அவனை விட்டுவிட்டேன் என்று கூறாதே தேவி. விட்டு வைத்திருக்கின்றேன் அவ்வளவே"

"அப்படியெனில்?"

"நேரம் வருகையில் புரிந்துக் கொள்வாய் தேவி"

"தங்களுக்கு மட்டும் ஏன்தான் இப்படியான விபரீத எண்ணங்கள் எல்லாம் தோன்றுகிறதோ"

"தேவி காதல் தவறில்லை. இயமன் காதல் கொண்டதும் தவறில்லை. அந்த காதல் அஞ்சனா மீது வந்ததும் தவறில்லை"

"பின் ஏன் இந்த தண்டனை"

"என்ன செய்வது பிரம்மச்சுவடியில் இந்த சித்திரகுப்தன் இப்படித்தானே எழுதி வைத்திருக்கின்றான். இயமன் அவனிடம் நடந்துக்கொண்ட முறைக்கான தண்டனை என்றும் வைத்துக் கொள்ளலாம். அதற்காகவே இந்த சாபம் இயமனை பிடித்துக் கொண்டது. இந்த கஷ்டங்கள் எல்லாம் இயமனை மிகவும் பக்குவப்படுத்தும். அவனது காதலின் ஆழத்தினை எடுத்துக் காட்டும்"

"அவளுக்கு ஞாபகம் வரவே வராது என்பது தானே தங்களின் சாபம்"

"அந்த சாபத்திற்கு விமோச்சனம் தரும் சக்தி அவர்களின் காதலுக்கு இருக்கிறது தேவி. சொல்லப்போனால் காதலுக்கு மட்டுமே இருக்கிறது. அவர்களின் காதலே அவர்களைச் சேர்த்து வைக்கும்"

"திருவை என்ன செய்வதாக உத்தேசம்" என அவள் கேட்க மௌனமாக ஈசன் விழி மூடிக் கொள்ள தேவி பார்வதியோ ஒருவித முறைப்போடு அங்கிருந்து அகன்று விட்டாள்.

----------------------

"இன்னைக்கு கோவிலுக்கு வந்துருக்கவே கூடாதோ அஞ்சும்மா. நீ என்னமோ மாதிரியாவே இருக்க. ஏதாவது பிரச்சனையா?"

"இல்லைங்க"

"பொய் சொல்லுற அஞ்சு. என்கிட்ட சொல்ல வேண்டாம்னா விட்டுடு"

"அதில்லைங்க. நேத்து ஒருத்தனை பார்த்தேன். அதுல இருந்து ரொம்ப பயமா இருக்கு. அவன் என் பேரைச் சொல்லி கூப்பிட்டு கையைப் பிடிச்சுட்டான். அவனை அடிச்சுட்டேன்தான். ஆனாலும் மனசு அமைதியாக மாட்டேங்குதுங்க"

"யாரவன்? இதுக்கு முன்னாடி பார்த்திருக்கயா?"

"ம்ஹூம் பார்த்ததே இல்லை"

"இப்பவும் அவனைப் பார்த்தயா. அதான் இப்படி இருக்கயா?"

"அவனைப் பார்க்கலை. யாரோ குறுகுறுன்னு பார்க்குற மாதிரி இருந்தது. வேறொன்னும் இல்லை"

அவன் நெற்றிச் சுருக்கி "சரி இங்கே உக்காந்துரு. நான் போய் உனக்கு பிரசாதம் வாங்கிட்டு வர்றேன்" என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்ப, அவள் பிரகாரத்தில் நன்றாக கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தாள். 

வயிற்றில் இருந்த மகவுக்கு அம்மாவின் மனநிலை இப்படி இருப்பதில் விருப்பம் இல்லை போல. அதனால் அவளது வயிற்றினை எட்டி உதைத்தது.

குழந்தை உதைத்த சந்தோஷத்தில் வயிற்றினை தடவிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டாள். இந்தக் காட்சியினைப் பார்த்த அந்தகன் கண்கள் கலங்கியது. 

அவளருகே நடந்தும் வந்துவிட்டான். தன்னருகே யாரோ வருவதைக் கண்டதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். நேற்றுப் பார்த்தவனே நின்றிருக்க பயத்தில் பட்டென்று எழுந்துவிட அவளது வயிறு  பிடித்துக்கொண்டது. 

வயிற்றைப் பிடித்தபடி அவள் உதடுகடிக்க "அஞ்சனா" என்றவாறு அவன் முன்னேறிவிட அவள் தனது வயிற்றில் இருந்து கையை எடுத்து அவன் முன் நீட்டி தடுத்தாள்.

"அஞ்சனா" தவிப்போடு அழைத்தவனைப் பார்த்தவள் "யாருங்க நீங்க? எதுக்காக நேத்து இருந்து என் பின்னாடியே வர்றீங்க. நேத்து அறை வாங்குனது பத்தாதா.. இங்க பாருங்க எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கப் போகுது. என் வீட்டுக்காரர் இப்போ வந்துடுவார். தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்.. கிளம்புங்க" என்று அவள் பொறுமையாய் பேச, அவனோ "அஞ்சனா" என்றவாறு அவளா வயிற்றின் மீது கைவைக்க வந்தான்.

அவ்வளவு நான் பொறுமை இழந்து அவனது கையைப் பிடித்து வெடுக்கென தள்ளிவிட்டவள் மீண்டும் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

அதையும் வாங்கியவன் அவளது வயிற்றினை நோக்கிக் கையை நீட்ட அவள் பின்னால் நகர்ந்தாள். திரு சீக்கிரம் வந்துவிடமாட்டானா என்றிருந்தது அவளுக்கு.

அவளது கண்களில் தெரிந்த அந்நியத்தன்மை இயமனை வெகுவாகச் சோதித்தது. காதல் கொண்ட மனம் காயப்பட்டுப் போனது. நான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்தினாலும் அவள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. உண்மை கசப்பாக இருக்க அவன் அந்த வயிற்றினை மிகுந்த ஏக்கத்தோடுப் பார்த்தபடி வெளியேறிவிட்டான்‌.

---------------------------

அந்த கானகமே இயமனின் ஓலத்தில் அப்படியே அசைய மறுத்து நின்றது. எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்தானோ அதை தவற விட்டுவிட்டு இப்போது யாரோ போல் நிற்கிறான். அவளது தாய்மை அவனை சித்திரவதை செய்தது. அவளது முகம் இதயத்தில் ஒட்டியிருக்க பிடுங்கி எறியும் மார்க்கம் இல்லாதவனாய் கதறிக் கொண்டிருந்தான் அவன். அந்தகா என அவள் அழைத்துவிடமாட்டாளா ஏக்கமாக இருந்தது. மையலோடு தன்னிடம் குழைபவள் வேண்டும் எனவும் தேகம் கேட்டது. அத்தனை உணர்வுகளையும் அடக்கும் வழி அறியாதவனாய் அவன் கதறிக் கொண்டிருக்க பின்னிருந்து, "இயமனுக்குள் இருந்த இறுமாப்பு இருந்த இடம் தெரியாது போய்விட்டதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இயமனை இப்படியான கோலத்தில் பார்க்க என்னாலும் இயலவில்லை" இந்திரனின் நக்கல் குரல் கேட்டது. அத்தனையும் அடக்கிக் கொண்டு திரும்பி நின்றான் இயமன். 

அடித்து துவைக்க வேண்டும் என்ற வெறி இருந்த போதும் அவனுடன் மோதுவது வீண் என்பதால் கல்போல் நின்றான் இயமன். 

காதலாசை யாரை விட்டது...!




Leave a comment


Comments


Related Post