இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 25-06-2024

Total Views: 2063

அத்தியாயம் 27

"என்ன இயமா அப்படிப் பார்க்கின்றாய். நான் யாரென்று உனக்கு நினைவில் இருக்கின்றதா.. ஆஹ்... உனக்கு நினைவில் எல்லாமே இருக்கும். உன் காதல் மனைவி அவளுக்குத்தானே நினைவு சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டு. அவள் நினைவில்தானே நீயிருக்க மாட்டாய்.." வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சிக் கொண்டிருந்த இந்திரனை பார்த்து "இப்போது என்ன பிரச்சனை இந்திரா. என் நிலையை கண்டு எள்ளி நகையாட வந்தாய் என்றால் தாராளமாக அதைச் செய். எனக்கு அதைப் பற்றின கவலை இல்லை" என்றான் இயமன். 

"ஆம், உனக்கு தான் மிகப்பெரிய கவலை இருக்கிறதே. அதனோடு ஒப்பிடும்போது இதெல்லாம் ஒரு விஷயமாகவே தெரியாது"

"இன்னும் உனக்கு தண்டனை எதுவும் தராமல் விட்டு வைத்திருக்கிறார் ஈசன். இப்போதும் திருந்தாது இதென்ன இந்திரா. இங்கிருந்து சென்றுவிடு"

"சென்றுவிட நான் வரவில்லையே"

"பிறகென்ன செய்வதாய் உத்தேசம்"

"இன்னும் அந்த கணக்கு நேர் செய்யப்படவே இல்லை"

"புரியவில்லை"

"உன் முன்னாள் மனைவி அஞ்சனா.." இந்திரன் சொல்லி முடிக்கும் முன்னரே, "இந்திரா பார்த்துப் பேசு.. அவளென்றுமே என் மனைவி.. என்னவள்" என்று சொல்லியிருந்தான் இயமன். அவன் இப்படிச் சொன்னதும் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் இந்திரன்.

ஏக கடுப்பைக் கிளப்பியது அவனின் சிரிப்பு. முடிந்த மட்டும் பொறுமையாக அவனிருக்க இந்திரனோ சிரித்து முடித்துவிட்டு "உன்னவளா.. அர்த்தமே இல்லாது உளறுகிறாய் இயமா.. அவள் அந்த திருவின் மனைவி. இருவரும் வாழ்ந்த மண வாழ்க்கைக்கு சான்றாக குழந்தையும் வரப்போகிறது. ஓ.‌.. இன்னும் உன்னால் நிதர்சனத்தினை ஏற்க முடியவில்லையா?" பேசியதும் இயமனின் முகம் மாறியது. 

இந்திரன் சொல்வதும் உண்மைதான். அவள் இப்போது என்னவள் இல்லையே வலியோடு எண்ணியவனின் கண்களில் இருந்த அளவிலா சோகம் இந்திரனுக்கு இன்னும் அதீத ஆனந்தத்தினை கொடுத்திருக்க வேண்டும். 

"இயமா இப்போது நான் சொல்ல வந்த விடயமே வேறு. உன் அழுகையை கண்டு அனைத்தும் எனக்கு மறந்து போய்விட்டது. நான் சொன்னது போல் அவளெனக்கு சேவகம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. உன்னையே பலமில்லாது செய்த எனக்கு திருவை ஒன்றும் இல்லாதவனாய் மாற்றுவது அவ்வளவு பெரிய விஷயமே இல்லை. இனி நீங்கள் இருவருமே அவளுக்காக அழுதுக் கொண்டே இருங்கள்.. நான் செல்கிறேன். ஏக வேலைகள் எனக்காக குவிந்துள்ளன.."

"என்ன உளறல் இது" அவனது கையை எட்டிப் பிடித்து நிற்க வைத்த இயமனின் கண்களில் வலியெல்லாம் மறைந்து சினம் துளிர்த்திருந்தது.

"அவள் மீது உன் பார்வை படுவதையே என்னால் அனுமதிக்க இயலாது" இயமன் சிடுசிடுத்தான்.

"ஒன்றை மறந்துவிட்டாய் இயமா. இப்பொழுது நீயொரு சாதாரண மானிடன். உன்னால் தேவந்திரனான என்னை என்ன செய்துவிட முடியும். அவளை என் உலகிற்கு அழைத்து செல்வதை எவனும் தடுக்க இயலாது" சொன்னதும் அவன் சென்றுவிட இயமனுக்கு அடுத்தென்ன அடுத்தென்ன என்பதே மனசுக்குள் ஓடியது.

அஞ்சனாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தனக்கு பலமில்லை. ஆனால் தனக்கு பலம் வாய்ந்த ஒருவரின் துணை வேண்டுமே.. யார் நமக்கு துணை வருவார்.. ஈஸ்வரா.. தாங்கள்தான் இதற்கொரு நல்வழி காட்ட வேண்டும் என அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே "நான் வருவேன் தமையனே" என்றவாறு தன் இருப்பிடத்தில் இருந்து கத்தினான் சனீஸ்வரன். அது இயமனுக்கு கேட்காது தெரிந்தும் அவன் பேசினான்.

"விசனம் வேண்டாம். நடந்ததை நான் அறிவேன். அந்த இந்திரனுக்கு தக்க பாடம் புகட்டவேண்டிய காலம் வந்துவிட்டது. ஈசன் அவனுக்கு தண்டனை தரவில்லை தான்.. அதற்குப் பதிலாக இந்த சனீஸ்வரன் பார்வை அவன் மீது படப்போகிறது. அதிலிருந்து அவன் தப்பவே இயலாது தமையனே. நான் இந்திரனை பார்த்துக் கொள்கிறேன். தாங்கள் அஞ்சனாவினைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றவனின் சிந்தனை இந்திரனை பிடிக்கப் போகும் கால நேரத்தினை கணக்கீடு செய்துக் கொண்டிருந்தது. 

-------------------------

அஞ்சனா அமைதியாக வீட்டில் இருந்தாள். உள்ளத்தில் நிம்மதி இல்லை. கோவிலில் பார்த்தவனின் முகம் மீண்டும் மீண்டும் தோன்றி இம்சிக்கத் தொடங்கியது. அஞ்சனா என்ற அழைப்பு அவள் செவிக்குள் எதிரொலித்தது. 

வயிற்றில் இருந்த குழந்தை தன் இருப்பினை உணர்த்த அப்போதுதான் அவளுக்கு உண்ண வேண்டும் என்ற நினைவே வந்தது. எழுந்து சென்று தட்டில் உணவினைப் போட்டுக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். 

திரு வேலைக்குச் சென்றிருக்க லட்சுமி சிவகாமி வீடு வரை சென்றிருந்தாள். மரத்துப் போன நிலையில் அவள் பாட்டுக்குச் சாப்பிட்டுக் கொண்டிருக்க குழந்தையின் அசைவு இன்றேனோ அதிகமாக இருந்தது. 

வயிற்றினை தடவி தடவி தண்ணீர் எடுத்துக் கொடுத்தவள் வாசலில் வந்து நின்ற உருவத்தினைப் பார்த்து பயந்து பட்டென்று எழவும் கண்கள் சொருகி அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள்.

மீண்டும் அவள் விழிக்கும் போது வேறு இடம் அவளது பார்வைக்கு பட்டது. களைப்பில் கண்கள் மீண்டுமாக மூடிக் கொள்ள யாரோ வயிற்றினை மென்மையாக வருடிக் கொடுப்பதை உணர்ந்து சிரமப்பட்டு கண்களைத் திறந்தாள்.

"நீ.. நீயா.." அவள் பேசுவதிலேயே அவளது பலகீனம் புரிந்தது.

"ரொம்ப கஷ்டமா இருக்கா அஞ்சனா.. பேச வேண்டாம். அமைதியா தூங்கு"

"ப்ச்.. நான் எப்படி இங்க.. திரு.. திரு எங்க"

"இனி இங்க நாம மட்டும் தான்.. திருவால நாம இங்க இருக்குறதை கண்டுபிடிக்கவே முடியாது"

"என்ன சொல்லுற?" பயத்தில் நாக்கு உலர்ந்து போனது அவளுக்கு.

"பயப்படாத அஞ்சனா"

"என்னை திருகிட்ட கொண்டு போய் விட்டுடு "

"முடியாது அஞ்சனா" திட்டவட்டமாக மறுத்தவனின் தோற்றத்தில் அவளுக்கு பயம் வந்துவிட்டது. 

"யாரு நீ. உனக்கு என்னதான் வேண்டும்"

"அந்தகனுக்கு அஞ்சனாதான் வேண்டும்"

அந்தகன்! அந்த பெயர் நினைவடுக்கில் தேடித் தேடிச் சலித்துப் போனவளாய் அவள் அவனைப் பார்த்து "அந்தகனா! அப்படி யாருமே எனக்குத் தெரியாது. உன்னைப் பார்த்ததும் இல்லை. என்னை ஏன் இப்படித் தொல்லை பண்ணுற. மாசமா இருக்கேன்னு கூட பார்க்க மாட்டயா நீ. அஞ்சனா வேண்டுமா.. நான் இன்னொருவனோட மனைவி.. நீ இப்படி பேசுறதே தப்பு " கோபமாய் பேச முயற்சி செய்தாலும் அவளால் அது முடியவே இல்லை. எதையாவது தூக்கி அவன் மீது வீசிவிட வேண்டும் என்று தோன்றினாலும் அவள் இருந்த நிலையில் அதையும் செயலாற்ற முடியவில்லை.

"இன்னும் பத்து நாள்ல குழந்தை பொறந்துடும்னு சொல்லியிருக்காங்க. என்னை எங்க வீட்டுல கொண்டு போய் விடேன். அதுதான் எங்க இரண்டு பேருக்கும் நல்லது" அதைச் சொன்னாலாவது அவன் மனம் மாறும் என்று நினைத்தால் அவனோ கல்போல் நின்று "முடியவே முடியாது" என்றான்.

"அறிவில்லை உனக்கு. யாருடா நீ.. வர்ற கோபத்துக்கு.."

"என்னை கொல்லணும்னு தோணுதா?" அஞ்சனா கேட்டவனிடத்தில் இருந்த நிதானம் அவளுக்கு மேலும் எரிச்சல் உண்டாக்கியது.

"ஆமாடா.. ஒரு பொம்பளை பிள்ளையை கடத்திட்டு வந்திருக்க. இதுக்கெல்லாம் நல்லா அனுபவிப்ப"

"நான் நிறைய அனுபவிச்சுட்டேன் அஞ்சனா" மீண்டும் அதே நிதானம்.

"மவனே! செய்றதெல்லாம் செஞ்சுட்டு என்னடா ஒன்னுமே செய்யாதவன் மாதிரி பேசுற. உன்ட்ட பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்லை.. நான் கிளம்புறேன்" கட்டிலைப் பிடித்து அவள் மெதுவாக எழுந்து நிற்க "ஒரு அடி என்னை மீறி எடுத்து வைக்க முடியாது அஞ்சனா" அந்தகன் அழுத்தமாக உரைத்தான். 

"இங்க இருக்க எனக்கு பிடிக்கலை. என்னை கட்டுப்படுத்த நீ நினைக்காத"

அவள் அவனை மீறி இரண்டு எட்டு வைக்க அவளது கையினை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

"வேண்டாம் அஞ்சனா. உன்னை காயப்படுத்தக் கூடாதுன்னு பார்க்குறேன். என்னை அந்த மாதிரி பண்ண வச்சுடாத"

நீ என்ன சொல்லுறது நானென்ன கேக்குறதென அவள் கையை உதறிவிட்டு நடக்க இம்முறை அவன் கையை பிடித்து இழுத்து கட்டிலில் வேகமாய் அமர வைத்தவன்.. "குழந்தை இருக்கேன்னு பார்க்குறேன். இல்லைன்னா அப்படியே தள்ளி விட்டுருப்பேன். ஒழுங்கா உக்காரு. என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?" என்று சொல்ல "என் உயிரை எடுக்க வந்த எமன் மாதிரி இருக்குடா" என்று வெறுப்பில் அவள் வார்த்தையினை விட்டாள்.

அவ்வளவு நேரமும் தன்னை விட்டு போகத் துடித்துக் கொண்டிருக்கிறாளே என்று கோபமாக இருந்த இயமனின் இதழ்கள் இப்போது சிரிப்பில் விரிந்தது.

"எதுக்குடா சிரிக்கிற?" 

"நீ என்னை எமன்னு சொன்னேல. அதை நினைச்சேன் சிரிச்சேன்"

"நீ எமன் தானே.."

"எமனே தான் அஞ்சனா. இந்த எமன் சொல்லுறதை கேட்டு சமத்தா இருக்கணும் அப்போத்தான் உனக்கு நல்லது"

"எனக்கு எது நல்லதுன்னு திருவுக்குத்தான் தெரியும்"

திரு பேச்சினை எடுத்த உடனே அவனது வயிறு எரிய ஆரம்பித்தது.

"திருவைப் பத்திப் பேசாத" அன்றும் இன்றும் அவனது காதல் போலவே பொறாமையும் மாறாது இருந்தது.

"என் புருஷனைப் பத்தி பேசாதன்னு சொல்ல உனக்கென்ன உரிமை இருக்கு"

"உரிமையா அது இருக்கு நிறைய. மரியாதையா நான் சொல்லுறதைக் கேட்டு நடந்தால் உனக்கு நல்லது. இன்னொரு தடவை உன் அத்தை மவனைப் பத்திப் பேசுனா..?"

"அத்தை மகனா.. அவன் என் புருஷன்னு சொல்லுறேன். உனக்கு காது கேக்காதா" 

"அதெல்லாம் நல்லா கேக்கும். என்னைப் பொறுத்தவரை அவன் உன் அத்தை மவன்தான். அவனைப் பத்தி பேசாத"

"அப்படித்தான் பேசுவேன். பேசுனா என்ன பண்ணுவ.. சாகடிச்சுடுவயா. அதுக்கு முன்னாடி நான் உன்னைக் கொண்ணுடுவேன்டா"

"முடிந்தால் அதைச் செய். என்னோட சாபம் எல்லாம் விமோச்சனம் அடைஞ்சுடும்" மரத்துப் போன குரலில் பேசியவன் அந்தக் கதவினை அடைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

சாபமா.. இவனென்ன பையித்தியமா என யோசித்தவள் வயிற்றுக்குள் உதைத்த குழந்தையைத் தடவியபடி அங்கிருந்த ஜன்னல் அருகே வந்து நின்றாள். அவளது பார்வை அடர்ந்த மரங்கள் நிரம்பியிருந்த அந்த பகுதியில் ஒரு மரத்தின் மீது தன் மொத்த உடலையும் சாய்த்து வானினையே வெறித்துப்  பார்த்துக் கொண்டிருந்த அந்தகன் தென்பட்டான்.

என்னவோ தெரியவில்லை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வை தன்மீது படுவதை உணர்ந்தும் அவன் திரும்பவே இல்லை. இந்த வீடும் இந்த இடமும் இருவருக்கும் புதிது இல்லை. சொர்க்கத்தில் திளைத்தது போலான மகிழ்ச்சியினை அள்ளித் தந்த இடம் இதுதானே. மனதளவில் அவனை விட்டு தள்ளி நின்றிருக்கும் அஞ்சனாவிற்கு அது புரிய போவதில்லை. அந்த வேதனையினால் அவன் சோர்ந்து போய் நின்றான்.

அவன் தன்னை ஏதாவது செய்துவிடுவான் என்ற பயம் மட்டும் அவளுக்கு இப்போது வரை வரவே இல்லை. அது மட்டும் ஆச்சர்யமாக இருக்க ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதால் அவள் அமைதியாக இருந்தாள்.

வெகுநேரமாய் வெளியவே இருந்தவன் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு உள்ளே வந்தான். அவளோ களைப்பில் கண்ணயர்ந்து போயிருந்தாள். அவள் முகத்தில் இருந்த சோர்வை உணர்ந்து சமைக்க ஆரம்பித்தான் இவன். 

திருமணம் செய்து அவளைக் கூட்டிவந்த நாளில் இருந்து அவள் சமைப்பதை இவன் உடன் இருந்து பார்த்திருக்கின்றான். அவளுக்கு உதவுவதாக சொல்லி நிறைய நாள் இவன் சமைத்திருக்கின்றான். இந்த இடத்தில் சமையல் மட்டுமா நடந்தது அதை நினைத்துப் பார்த்தவன் இதழ்களில் வெட்கப் புன்னகை ஒட்டிக் கொண்டு சடுதியில் அது மறைந்து போய் விரக்தி வந்தாட்கொண்டது.

சட்டென்று, 

"அந்தகா! என்னை விட்டுப் போக மாட்டயே..." அவள் குரல் கேட்க "மாட்டேன் டி.. மாட்டவே மாட்டேன்" நழுவிய கரண்டியினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு எரியும் நெருப்பினைப் பார்த்தடி ஆக்ரோசமாக சொல்லிக் கொண்டான்.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post