இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 26-06-2024

Total Views: 2584

பாகம்- 20

"அவரோட மனைவியைப் பார்த்துட்டு வந்துருவோமா?"
"அம்மா என்ன பேசற நீ? அது… நாம எப்படி? அவங்களுக்கு நம்மள தெரிய கூடத்  தெரியாது. என்னன்னு சொல்லி அவங்கள பாக்கறது?"
"அதெல்லாம்  நான் பார்த்துக்கறேன். நாம போய்ப் பாக்காம இருக்கக் கூடாது. அன்னையின் வார்த்தையை அதற்கு மேல் மீற  முடியாது… செல்லவே பிடிக்கவில்லை. இருந்தாலும் மூவரும் அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தனர்.
அன்னைக்காக என்பதையும் விட என்ன நடந்தது? எப்படி? என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இருவருக்கும். பிரதீப்பின் வாழ்க்கை  மிக முக்கியம்.
"வணக்கம்! நீங்க?"
அந்தப் பெண்மணிக்கு நல்ல கம்பீரமானத் தோற்றம். காதில் பெரிய வைரத்தோடு மாடலுடன் அணிந்திருந்தார். சின்ன மூக்குத்தி. நெற்றியில் சாதாரணமாக ஒரு ஸ்டிக்கர். கழுத்தில் இன்னும் தாலி கொடி  இருந்தது. லெனின் ரகப் புடவை அவருக்குப் பொருத்தமாக இருந்தது.  
"நான் பூரணி. நான் உங்க வீட்டுக்காரரோட கல்லூரித்  தோழி"
"ஓ! அது நீங்கத் தானா ? என்னோட புருஷன ஏமாத்திட்டு ராஜசேகர்னு ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்டேங்க. சரி தானே?"
"தப்பு. உங்க வீட்டுக்காரறுதான் இவங்க பின்னாடி சுத்தினார்.இவங்க கிடைக்கலன்னு என்னோட..." முதலில் பொரிந்தவள், இறுதியில்  அந்த அசிங்கத்தை சொல்ல முடியவில்லை 
"உன்னோட கல்யாணத்தின்போது உன்னோட ஆபிஸ்ல நெருப்பு வைச்சாரு. அதுக்கப்புறம் உன்கிட்ட வந்து தப்பா  நடந்துக்கிட்டார்.  உனக்காகத் தான் இந்தப் பங்களாவையே வாங்கினார். கரெக்ட்டா?" அவள் தயங்கினாலும் அவர் முடித்து விட்டார். பூரணிக்குத் தான் அதிர்ச்சி. 
"அது..."
"ம் ! நான் அப்படி  பேசினத்துக்கு தப்பா  நினைச்சுக்காதீங்க. அவரு எப்பவுமே அப்படிதான் சொல்லிக்கிட்டு இருப்பாரு. ஒரு மனுஷன் தண்ணி  அடிக்கவும், பொம்பளைங்க பின்னாடி சுத்தவும் இந்த மாதிரி பல கதைகளை வாயில வச்சுக்கறது. அவருக்கு நீங்க  மட்டும் இல்ல. இன்னும் பல பேரு., பல கதைகள்" 
அப்போது இவர்கள் குடிக்க காபி வந்தது. 
"எடுத்துக்குங்க" 
"இல்ல பரவால்ல. வேணாம்"
"பயப்படாத நிரஞ்சனா. விஷம் எதுவும் கலக்கலை. துக்கம் விசாரிக்க வந்துட்டு நாக்கு நனைக்காம போகக் கூடாது"
பூரணி எடுத்துக் கொள்வதைப் பார்த்து மற்ற இருவரும் எடுத்துக் கொண்டார்கள்.
காபி கொடுத்தவள் அங்கே தான் நின்றுகொண்டிருந்தாள். அவளைப் பார்த்தால்   வேலைக்காரி போல இல்லை. மடிப்பு கலையாத சுங்குடி சேலை கட்டி இருந்தாள். பளிச்சென்றிருந்தாள். எந்த ஒப்பனையும் இல்லை. ஆனால்  ஒரு கம்பீரமும் நிமிர்வும் இருந்தது. முகம் செதுக்கி வைத்தது போல இருந்தது. பார்க்கும்போதே ஒரு வித மதிப்பு உண்டு பண்ணியது அவள் தோற்றமும், உடல் மொழியும்.
"இவதான்  சுதா. என்னோட வருங்கால மருமகள்"
மூவருக்குமே அதிர்ச்சி.
"என்ன அதிர்ச்சியா இருக்கா? புருஷன் செத்த ஒடனே கல்யாணமான்னு? அவரு இருந்தா அவனுக்குக் கல்யாணமே நடக்காது. அவனையும் ஒரு வியாபார பொருளாத்  தான் மாத்தி இருப்பார்" 
" நிறைய விஷயம் இருக்கு. நானே ஒரு நாள் வந்து உங்கள பாக்கனுன்னு நினைச்சேன். அவருக்குத் தெரிஞ்சா பல வித  பிரச்சைனைகள் வரும். அதுக்காகவே வராம இருந்துட்டேன். முதல்ல அவரு பண்ணது எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். கண்டிப்பா எனக்கு அந்தத் தகுதி இல்லன்னு எனக்குத்  தெரியும். அதுலயும் நிரன்ஜனாவுக்குப் பண்ணது மன்னிக்கவே முடியாது. பொண்ணு வயசுல இருக்கற பொண்ணுங்கள. சீ!"
அவர்கள் மூவரின்  பார்வையும் சுதாவின் மீது தான் இருந்தது.
"இவ பேரு  சுதா. இவ அண்ணன்தான் எங்க வீட்டுக்காரரை கொலை பண்ணது" 
நம்ப முடிலையா? பாஸ்கருக்கும் நிரஞ்சனாவும்,
ஆம்! இல்லை! என்று எல்லா  பக்கமும் மண்டையை ஆட்டினார்கள்.
நடந்தது சொன்னார்.
"அம்மா! என்ன மன்னிச்சுருங்கம்மா. காலைப் பிடித்துக் கொண்டு கதறினான் உமாபதி. 
"அய்யா சொன்ன வார்த்தை தாங்காமா இப்பிடி பண்ணிட்டேம்மா"
பெண் முதலாளியின் பாதத்தில் முட்டிக் கொண்டு அழுதான் 
"வாங்கின கடனைக் குடுக்க துப்பில்லன்னா  தங்கச்சிய அனுப்பி வை. உங்க ஆத்தாளும் நல்லாத்தான் இருக்கா. அவளையும் சேர்த்து அனுப்பி வையின்னு சொன்ன வார்த்தை என்னால தாங்க  முடியலம்மா. நான் ஏழைதான். அய்யாவுக்கு அடியாள் தான். ஆனா சொந்த தங்கச்சியையும், பெத்தவளையும் கூட்டிகுடுக்கற பாவி இல்லம்மா" கேவிக்கேவி அழுதான். அப்போது அவன் தோற்றத்திற்கும் அழுகைக்கும்  சம்பந்தமே இல்லாமல் இருந்தது.
"சரி! நீயே அவரைக் கொன்னுட்டியே  இனிமே உன்னோட குடும்பத்தை யாரு காப்பாத்துங்க? நீ ஜெயிலுக்கு போய்டுவ. உன்னோட தங்கச்சியும் அம்மாவும் எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு யோசிச்சியா?"
"கோபத்துல அவசரப்பட்டு இப்பிடி பண்ணிட்டேன் மா" தலையில் அடித்துக் கொண்டான். அழுதான். புலம்பினான். 
என்ன செய்ய முடியம்?
"சரி இருக்கட்டும். உன்னோட தங்கச்சிய  என்னோட பையனுக்குக் கட்டி குடு. உனக்குக் கேச நானே நடத்தறேன். உன்னோட குடும்பமும் பாதுகாப்பா  இருக்கும்".
கண்ணீரை துடைத்துக் கொண்டவன். "நாங்க ஏழைங்கன்னு எல்லாரும் என்ன பாடு படத்தறீங்கம்மா?"
"அப்படி இல்ல உமாபதி. என்னோட பையனுக்கு மூளை வளர்ச்சி  குறைவு இல்ல. அதுல இருக்கற அறிவு தான் பிரச்சனை. ஆனா  உன்னோட தங்கச்சிக்கு அது அளவுக்கு அதிகமாகவே இருக்கு. எனக்கு அப்புறம் இந்தச் சொத்து எல்லாம் நிர்வகிக்கற திறமை அவளுக்கு இருக்குன்னு எனக்குத் தோணுது. அதுவும் இல்லாம என்னோட பையனும் அவளை விரும்பறான். இதை அவனே எனக்குச் சொன்னான். உன்னோட தங்கச்சியோட எல்லா  தோற்றத்தையும் படமா வரைஞ்சு வச்சிருக்கான். அவளைத் தங்க தாம்பளத்துல  வச்சு தாங்குவான். நீ முதல்ல போலீசுல சரண்டர் ஆகு. அப்புறமா நீயும் யோசி. உன்னோட வீட்டுல இருக்கறவங்களோட கலந்து பேசி ஒரு முடிவெடு"
கணவனின்  பிணம் மருத்துவமனைக்குச் செல்லும் முன் எல்லா முடிவும் எடுத்து விட்டார். அதற்க்கு மனத் தெளிவு காரணமா? இல்லை கணவனின்  செயல்களில் அடக்கி வைத்த  ஆத்திரம் காரணமா?
இரண்டாவது தான் காரணமாக இருக்கும் என்பது என்  யூகம்.
"உங்க பையன  நான் கல்யாணம் செய்துக்கறேன் மேடம்"
"உனக்கு அவனைப் பத்தி  தெரியுமா?"
"அவரோட  அறிவு  பத்தி சொல்லறீங்களா? அது  எப்படி இருந்தாலும் கண்டிப்பா குணம்  அவங்க அப்பா மாதிரி இல்லன்னு தெரியும் "
"சரி ! என்கிட்டையே வந்து அவர் பத்தி இப்படி பேசறியே? ஒனக்கு பயமா இல்லையா?"
"எதுக்கு மேடம் பயப்படணும். அவரு தானே  என்னை படுக்கைக்குக் கூப்பிட்டாரு"
"இருக்கட்டும். செத்து போனவர் பத்தி இனிமே பேச வேண்டாம். என்னோட பையனைக் காலம் பூரா சந்தோசமா வச்சுக்க வேண்டியது உன்னோட பொறுப்பு"
"கண்டிப்பா! அது என்னோட கடமை. ஆனா  கடமைக்காக இல்லாம. மனசார அவரை விரும்ப முயற்சி பண்ணறேன்"
"ரொம்ப சந்தோஷம்"
"இவ என்னோட பையன சந்தோஷமா வச்சுப்பா. அதுக்கு பதிலா நான் இவ குடும்பத்தைச் சந்தோஷமா வச்சுக்கணும். டீல் நல்லா  இருக்கு இல்ல?"
அங்கே அமைதி நிலவியது. 
"முதல் காதல், அது இப்படி அது அப்பிடின்னு சினிமால சொல்லும்போது நல்லா  இருக்கு. நேர்ல தாங்க முடியல. அவருக்கு மனசு முழுக்க நீங்கதான். படுக்கைலையும் அவருக்கு  மனசுல என்னிக்கு யாரு இருந்தான்னு எனக்குத் தெரியாது. விளக்கணைச்சா குழந்தை பிறக்கறதுக்கு காதல் தேவை இல்லையே? என்னாலதான் ஆரோக்கியமான குழந்தையைக் குடுக்க முடியலன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தார். ஆனா  அவர் கூட எந்தப் பெண்ணாலும்  நல்ல குழந்தையைக் கொடுக்கவே முடியாதுங்கறது அவருக்கு நல்லவேத் தெரியும். அதுக்காக அவரு  என்னிக்குமே தன்னோட எந்தக் கெட்டப் பழக்கங்களையும் நிறுத்திக்கவே இல்லை. சாராயம், சிகரெட்டு இது எல்லாம் சக்தி இல்லாத குழந்தையத்தானே கொடுக்கும்? கல்யாணம் பண்ணபோது  நல்லவராத தான் இருந்தார். அப்புறம் பணம் சேரவும் மாறிட்டார். இவர பார்த்து மனசு ஒடஞ்சு, எனக்காகவே அழுது அழுது என்னைப் பெத்தவங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க"
அவர் கண்களில் நீர் குளம் கட்டியது. 
"இல்ல மேடம். நீங்க  அப்படின்னு நீங்க  நம்பினீங்க. அல்லது நம்ப வைச்சுருக்கார் காலேஜ்லயும்  அவரு சரி கிடையாது"
"இருக்கலாம். நீங்கத் தப்பிச்சுடீங்க  நான் நம்பி ஏமாந்துட்டேன்" 
பூரணிக்கு முகம் வெளிறியது.
"தப்பா  சொல்லல. சாதாரணமாத் தான் சொன்னேன்"
"அவருக்கு என்னோட பணத்துலையும், அழகுலையும்தான் வெறி. என்னோட மனச பத்தி தெரிஞ்சுக்கவே இல்ல. நான் இவ்ளோ அவசர  அவசரமா இந்த முடிவு  எடுக்கறது எல்லாத்துக்கும் காரணமே அவரு மேல நான் வச்ச காதல். எனக்கும் அது தானே முதல் காதல். கெட்டவர் தான். விட முடியல. இருக்கும்போதும், இல்லாத போதும். அவரு ஆத்மா கொஞ்சமாவது கரை சேர வேணாமா? அதுக்குத் தான் ப்ராயச்சித்தமா இந்தக் கல்யாணம். உமாபதி ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம் இந்த ரெண்டு பொண்ணுங்க விடற  கண்ணீர் என்னோட பையனை  நாசமாக்கிடும். மனசுக்குள்ள நிறைய பயம், கவலை எல்லாம் இருக்கு. முடிஞ்சா நீங்களும் அவரை  மன்னிச்சுடுங்க. கை எடுத்துக் கும்பிட்டார்.
"மன்னிக்கறதுக்கு நாங்க யாரு ஆன்டி? ஆனா அவரோட ஆத்மாவுக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்"
"இந்த வயதில் எத்தனை பெருந்தன்மை? நீ ரொம்ப நல்லா  இருக்கணும் நிரஞ்சனா. குடும்பம் குழந்தைங்களோட தீர்க்காயுசா இருக்கணும்" மனதார ஆசிர்வதித்தார்.
"எங்கேர்ந்து நல்லா  இருக்கறது? உங்க புருஷன் பண்ண வேலைல இவளோட வாழ்க்கையே போச்சே. அவராலதான் கல்யாணம்  நின்னு, அப்பவே இவ மணமேடையிலிருந்து கிளம்ப வேண்டியதா போச்சு.இவளோட நிலைமை என்னன்னு புரிஞ்சுக்காம, நீ மாலையை அவிழ்த்து வச்சுட்டு போனதுக்கு  காரணம் உன்னோட பணத்திமிரு. சம்பாதிக்கறேன்னு ஆணவம். தொழிலை விட்டுட்டு வாங்கறாரு புருஷன். புருஷனா? இல்ல பெத்த புள்ளையா இருக்கற தொழிலான்னு முடிவெடுக்க முடியாம அழுதுகிட்டு இருக்கா. என்ன பண்ணறது. அவளுக்கும் இது முதல் காதலச்சே?"
படபடவெனப் பொரிந்தவனை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் எல்லாப் பெண்களும்.
எப்போதுமே பாஸ்கர் இப்படி அவசரப்பட்டுப் பேசுபவன் இல்லை. ஆனால்  அந்தப் பெண் மன்னிப்பு கேட்டதும், அன்று ராஜவேலு இவளிடம் தவறாக நடந்தது, செந்தில் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது இவள் அடித்துக்கொண்டு  அழுதது என்று எல்லா  நினைவுகளும் முட்டி மோதி  நின்றது.இவன் பிரதீப் மாதிரி இவன் கோபத்தை காட்ட மாட்டான். ஆனால்  நீரு  என்றால் இவனுக்கும் பலவீனம் தான். 
"சாரி! நான்  இதெல்லாம் சொல்லி இருக்கக் கூடாது. சட்டெனத் தன்னை நிலைப் படுத்தினான்.
"நான்  வேணுன்னா உங்க வீட்டுக்காரருகிட்ட பேசட்டுமா  நிரஞ்சனா?"
"இல்ல ஆன்டி!. அதெல்லாம் அவ்ளோ ஈஸி இல்ல. என் தலைல என்ன எழுதி இருக்கோ அதுவே நடக்கட்டும். யாரும் எதையும் பேசி ஒன்னும் நடக்காது"
அங்கே சற்று அமைதி.
"அப்ப வேற சமயம் பாக்கலாம்" பூரணி தான் அமைதியை கலைத்தார்.
"இது ஒன்னும் இழவு வீடு இல்ல. சீக்கிரமா கல்யாணம் நடக்கப் போற வீடு. நீங்க  எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துரனும். தம்பி நீங்களும்தான். பாஸ்கருக்குக்கும் தனியே அழைப்பு விடுத்தார் அவர் (பெயர் தேவை இல்லை என்று வைக்கவில்லை)
கைக்கூப்பி கிளம்பினார்கள்.
கிளம்புவதற்கு முன்,
தொடரும் .......


Leave a comment


Comments


Related Post