இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 18 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 26-06-2024

Total Views: 1370

இதயம் - 18

மல்லிகாவும் பொன்னுரங்கமும் தங்களின் வாழ்க்கை முறையை மேலோட்டமாக கூறிய பின் வாசு பெருமூச்சுடன் "நா ஹான்டில் பன்னிப்பன்ப்பா ... நீங்க நாளைக்கு அஞ்சனாவ பாக்க ஓகே தான" என்று வாசு கூற பொன்னுரங்கம் "பாக்கலாம்" என்று கூறி எழுந்துச் சென்று விட்டார். தன் தாயும் தந்தையும் எழுந்து உள்ளே சென்றதும் வேகமாக அண்ணன் அருகில் ஓடிய பரத் "வாவ் ஓகே ஆகிடுச்சா ஹாப்பியா" என்று கேட்டான். "டேய் இன்னும் நாளைக்கு ஒரு டெஸ்ட் இருக்குடா" என்று வாசு டென்ஷனுடன் கூற "அதெல்லாம் அவ பார்த்துப்பா நீ டென்ஷன் ஆகாத அப்பாக்கும் மகளுக்கும் நடிக்கவா கத்து தரனும்" என்று பரத் கூற வாசு முறைத்ததும் அங்கிருந்து ஓடி விட்டான். வாசுவை நான்கு நாட்களாக காண முடியாமல் வெற்று மாடியையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்த ஹேமா வாசுவின் வீட்டிற்குள் நுழைந்தாள். வாசு சோபாவில் அமர்ந்து நடந்ததை அஞ்சனாவிடம் குறுஞ்செய்தி மூலம் கூறிக் கொண்டிருந்தான். வாசுவை காணாமல் வாடி போய் கிடந்த கண்கள் அவனை கண்டதும் ஆசையுடன் ஆனந்தத்துடனும் விரிந்த நிலையில் பரத் "ம்க்கும் ... அண்ணா உன்னோட ஆள்" என்று வாசு அருகில் அமர்ந்து கூறினான். வாசு அஞ்சனாவிடம் பேசியவாறே "என்னடா ஒலர்ர" என்று கேட்டு நிமிர்ந்து ஹேமா ஆடாமல் அசையாமல் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டதும் சலிப்புடன் எழுந்து அவள் அருகில் சென்றான். 

ஹேமாவிற்கு வாசு தன் அருகில் வருவதை கண்டதும் கையும் காலும் நடுங்கி போனது. ஏன் வருகிறான் என்று தெரியாமல் நின்றிருந்தவளிடம் சென்ற வாசு "சின்ன பொண்ணாச்சே ஏதோ வயசு கோளாறுல பாக்கறன்னு பாத்தா நீ ஓவரா போய்ட்டு இருக்க ... இங்க பார் ... தேவையில்லாம படிக்கிற வயசுல ஆசைய வளத்து மனச கெடுத்துக்காத ... எனக்கு ஏற்கனவே கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சி உன் எண்ணத்தை மாத்திகிட்டு வாழ்க்கையில முன்னேற வழிய பாரு" என்று கூறியவன் அங்கிருந்துச் சென்று விட்டான். ஹேமாவிற்கு அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நாளும் அவனை பார்க்கும் நேரங்களில் அவனால் மனதில் பூத்த ரோஜாக்களை அவனே இரத்தம் கசிவதை கூட பொறுத்படுத்தாமல் பிடுங்கி எறித்து சாம்பல் ஆக்கியது போல் வலியும் எரிச்சலும் ஏற்பட்டது. கண்கள் அனுமதியின்றி கலங்கி விட்டது. 

"இந்தா பாருமா தங்கச்சி" என்று பரத் ஹேமாவிடம் பேச அவளோ "நீங்க என்னை தங்கச்சின்னு கூப்டாதிங்க ... உங்களுக்கு நா தங்கச்சின்னா அவர்க்கும் தங்கச்சி ஆகிடுவன் இல்லை" என்று அறியா பிள்ளை போல் பாவமாக விசும்பிக் கொண்டே கூறினாள் ஹேமா. "அட பைத்தியமே அவன் இவ்வளவு தெளிவா சொல்லிட்டு போன அப்பறமும் புரிஞ்சிக்காம இப்படி பேசற" என்று பரத் அதிர்ச்சியுடன் கேட்டான். "என்ன தான் அவர் என்னை வேணான்னு சொன்னாலும் அவரை நா லவ் பன்னிட்டன் இல்லை" என்று ஹேமா கூற "அட ஏன்ம்மா நீ ... போய் அவனை மறக்கற வழிய பாரு" என்று கூறிய பரத் அங்கிருந்து நகர்ந்தான். ஹேமாவும் சோகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள். 

நன்றாக உறங்கி சோம்பல் முறித்தவாறே எழுந்த யாழிசை கீழே வர அங்கு அவினாஷ் அவர்கள் ஜெர்மனியில் கட்டப்போகும் தங்களின் ஹோட்டலுக்கான ப்ளூ ப்ரின்ட்டை வரைந்துக் கொண்டிருந்தான். "குட் ஈவ்னிங் அண்ணா" என்று யாழிசை அவினாஷ்ஷை பின்னிருந்து கழுத்தோடு அணைத்துக் கொண்டு கூற "குட் ஈவ்னிங் டா" என்று அவினாஷ்ஷும் தன்னுடைய வேலையை பார்த்தவாறே பதில் கூறினான். "என்ன அண்ணா பன்ற" என்று யாழிசை கேட்டவாறே அவினாஷ் அருகில் அமர்ந்தாள். "நம்ம ஹோட்டல்கான ப்ளூப்ரின்ட் ரெடி பன்னிட்டு இருக்கன்" என்று கூறினான். "எங்க அண்ணன் எவ்வளவு ஸ்பீட்டா இருக்கான்" என்று யாழிசை கூற அவினாஷ் புன்னகையுடன் "அதெல்லாம் இருக்கட்டும் ... உனக்கென்ன வாசுதேவன் மேல ஒரு கண்ணு" என்று கேட்டான். "ஒரு கண்ணால எல்லாம் பாக்க முடியாதுண்ணா இரண்டு கண்ணால தான் அவனை பாக்கறன்" என்று யாழிசை கூற அவினாஷ் யாழிசையை பார்த்து "ஆஆஆ ஹாஹாஹா" என்று பொய்யாய் சிரித்துக் காட்டி "சிரிச்சிட்டன் இப்ப சொல்லு ... என்ன விஷயம்" என்று சீரியஸாக கேட்டான். 

"உண்மைய சொல்லனுன்னா வாசு பரத்தோட அண்ணன்ற உறவுன்றத விட அந்த அஞ்சனா மேலையும் அவ அப்பா மேலையும் எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை ... வாசு ரொம்ப நல்லவன் ... அவனை எதுக்காக ஏமாத்றாங்கன்னு எனக்கு சுத்தமா புரியல ... அதை கண்டு பிடிக்கனும்" என்று யாழிசை கூற "அதான் டா நானும் கேக்கறன் அவன் மேல ஏன் இந்த அக்கரை" என்று அவினாஷ் கேட்டான். "அதான் சொன்னனே அண்ணா அவன் ரொம்ப நல்லவன்" என்று யாழிசை கூறினாள். "அவனை மாதிரி நிறைய் நல்லவங்கள எல்லாம் நம்ம நிறைய பேர பாத்திருக்கோம் அவங்க யார்க்கும் நீ இப்படி உன்னை நீயே தாழ்த்திகிட்டு ஹெல்ப் பன்னதில்லை ... அவங்க யாரையும் கார்ல கூட்டிட்டு போனதில்லை ... அவங்க யார் கிட்டையும் சிரிச்சி பேசனதில்லை... அவங்க யாரையும் நீ இந்த மாதிரி இர்ரிட்டேட் பன்னதில்லை" என்று அவினாஷ் தன் தங்கையில் நடவடிக்கையை எடுத்துக் கூறி அவளுக்கே அவளை நினைவூட்டினான். "ஸ்ஸ்ஸ் ஆமா இல்லை ... நா அவனுக்கு ஹெல்ப் பன்னனுன்னா நிறைய வழி இருக்கே அப்பறம் நா ஏன் இப்படி பன்றன்" என்று அவளுக்கு அவளேக் கேட்டுக் கொண்டு அவினாஷ்ஷை பார்த்தாள். "எதுவும் தெரியாத குழந்தை இல்லை பாப்பா நீ ... நிறைய விஷயங்கள்ல என்னை விட நீ மெச்சூர்ராவும் அதே சமயம் புத்திசாலித்தனமாவும் முடிவெடுத்து அத முடிச்சும் காட்டி இருக்க ... இந்த சின்ன விஷயத்தை உன்னால புரிஞ்சிக்க முடியலையா" என்று கேட்டான். 

"என்ன சின்ன விஷயம்" என்று யாழிசை ஒன்றும் புரியாமல் கேட்க "நீ வாசுவ லவ் பன்ற" என்று அவினாஷ் கூற யாழிசை அதிர்ந்தாள். "ஐய்யய்யோ அண்ணா என்ன நீ இப்படி சொல்லிட்ட அப்படி ஒரு எண்ணமே எனக்கில்லை ... அதும் வேற பொண்ணை உருகி உருகி காதலிக்கிற ஆள நா லவ் பன்றதெல்லாம் சான்ஸே இல்லை ... எனக்கு வாசு மேல ஒரு சாப்ட் கார்னர் தான் அதுக்காக அவன் மேல லவ்ன்னு எல்லாம் இல்லைவே இல்லை ... அன்ட் இன்னொரு முக்கியமான விஷயம் நா வாசு கூட அப்படி பழக காரணம் அந்த மயில்சாமி தான் அவனை தோக்கடிக்க தான் நா வாசு கூட அப்படி பழகறன் மத்தப்படி எனக்கு வாசு மேல இன்ட்ரஸ்ட் கிடையவே கிடையாது" என்று யாழிசை தெளிவாக பதில் கூறினாள். "அப்போ மயில்சாமிய மண்ணு கவ்வ வைக்க தான் எல்லாம்ன்ற அப்படி தான" என்று அவினாஷ் கேட்க "ஆமா" என்று யாழிசை கூறினாள். "ம்ம்ம் பாப்போம்" என்று அவினாஷ் கூற "பாப்ப" என்று யாழிசை கூறி தனது கைப்பேசியை எடுத்து திறந்து பார்த்தாள். அதில் பரத் வீட்டில் நடந்தவைகளை அப்படியே வார்த்தை மாறாமல் குறுஞ்செய்தி மூலமாக கட்டுரை அனுப்பி இருந்தான். அனைத்தையும் படித்த யாழிசை "அண்ணா நாளைக்கு அஞ்சனாக்கு முன்ன நா வாசு வீட்டுக்கு போக போறன்" என்று தான் செய்யப் போகும் விஷயத்தை கூற அவினாஷ் "அவங்களோட பீலிங்க்ஸோட விளையாட்ற மாதிரி இருக்கு பாப்பா ... நீ மயில்சாமியோட பீலிங்க்ஸ் கூட .. அவனுக்கு பீலிங்க்ஸ் இல்லை அது வேற விஷயம் ... அவனோட விளையாடு ... ஆனா வாசு குடும்பத்தோட விளையாடாத ... அவங்க வீட்ல எல்லாருமே நல்ல மனுஷங்களா தெரியிறாங்க" என்று அவினாஷ் தன் தங்கைக்கு அறிவுரைக் கூறினான். 

"அண்ணா நா ஒன்னும் என்னை உங்க மகனுக்கு கட்டி வைங்கன்னு அவங்களை கேக்க போறதில்லை ... ஜஸ்ட் பரத்தை பாக்க போற மாதிரி அங்க போய் நா நானா நிக்க போறன் அவ்வளவு தான்" என்று யாழிசை கூறினாள். "நீ வேற ஏதோ மனசுல வச்சிட்டு தான் இப்படி பன்றன்னு தோனுது" என்று அவினாஷ் கூற "அப்படி எல்லாம் இல்லை அண்ணா ... எதாவது இருந்தா உன் கிட்ட சொல்லாம இருப்பனா" என்று யாழிசை கூற அவினாஷ் "இதனால கஷ்டப்பட போறது என்னவோ நீ தான் யாழும்மா கொஞ்சம் யோசி ... அந்த மயில்சாமிய கவுக்க வேற எத்தைனையோ வழி இருக்கும்மா" என்று கெஞ்சலுடன் நிறுத்தினான். "அண்ணா அவன் மனசு வலிக்கனுன்னா அஞ்சனா தான் அண்ணா ஒரே வழி" என்று யாழிசை பிடிவாதமாக கூறினாள். "ம்ம்ம் உன் விருப்பம்" என்று அவினாஷ் பெருமூச்சுடன் இதற்கு மேல் அப்பிடிவாதக்காரியிடம் பேசி பயன் இல்லை என்று அமைதியாகி விட்டான். 

பரத் இரவு விட்டத்தை பார்த்தவாறு படுத்துக் கொண்டு "என்ன நடக்கும் நாளைக்கு ... அம்மா அப்பா பேச்சிலே அவங்களுக்கு அஞ்சனாவ பிடிக்கலன்னு தெளிவா தெரியுது ... அண்ணன் பிடிவாதமா அவளை நாளைக்கு வீட்டுக்கு கூப்ட்ருக்கான் ... மயில்சாமி கண்டிப்பா நாளைக்கு தான் பொண்ணு கூட வருவான் ... அவளை நாளைக்கே அண்ணன் கையால தாலிய கட்ட வச்சி அண்ணனை கூட்டிட்டு போனாலும் ஆச்சரியப்பட இல்லை ... இதுல யாழிசை நடுவுல புகுந்து நாளைக்கு நா உங்க வீட்டுக்கு வரன்னு சொல்ரா  ... அவளை பாத்ததும் எனக்கே பிடிச்சிடுச்சே அம்மா அப்பாக்கு பிடிக்காம போக வாய்ப்பே இல்லை ... ப்ரீத்திக்கு சொல்லவே வேணா ... நாளைக்கு எப்படியும் ஒரு பூகம்பம் அண்ணன் தலையில விழ போது ... எப்படி சமாளிக்க போறானோ ... இந்த யாழிசை எதுக்கு அவங்களை பிரிக்க இவ்வளவு மெனக்கெட்றா ... ஒருவேளை அண்ணனை லவ் பன்றாளோ?" என்று நினைத்தவன் பின் அவளிடமே கேட்போம் என்று அவள் எண்ணிற்கு அழைத்தான். அவளோ தனதறைக்குள் அமர்ந்து ஆர்வமாக படத்தில் மூழ்கிக் கிடந்தாள். கைப்பேசி சத்தத்தில் கவனத்தை திசை திருப்பி அழைப்பை ஏற்றவள் "சொல்லு பரத்" என்று கேட்டாள். "எனக்கு ஒரு சந்தேகம்" என்று பரத் கேட்க யாழிசை மணியை பார்த்தாள். அதுவோ பத்து என்று காட்ட "என்ன உங்கண்ணனை நா லவ் பன்றனான்னு டௌட்டா" என்று கேட்க பரத் ஆச்சரியத்தில் எழுந்து அமர்ந்து விட்டான். "எப்படி எப்படி எப்படி" என்று பரத் கேட்க அவனின் ஆச்சரிய கேள்வியில் புன்னகைத்த யாழிசை "இப்ப தான் எங்கண்ணன் கேட்டான் ... இப்ப நீ கேக்கற ... அவன் கிட்ட சொன்ன அதே பதில் தான் அப்படி எல்லாம் இல்லை ... அவனை அவங்க கிட்ட இருந்து காப்பாத்தனும் அவ்வளவு தான்" என்று கூறினாள்.

 "அதான் ஏன்" என்று பரத் கேட்க "ஏன்னா அவன் நல்லவன் ... ஒரு நல்லவன் ஏமாறது ரொம்ப கொடுமையானது அதான்" என்று யாழிசை கூறினாள். "அதுக்கும் நீ இப்படி எங்க பேமிலிக்கும் அறிமுகமாகறதுக்கும் என்ன சம்மந்தம்" என்று பரத் கேட்க "டேய் எல்லாம் சம்பந்தம் இருக்கு வைடா ... தேவையில்லாம கேள்வி கேட்டு கடுப்படிக்காத ... அப்பறம் உங்கண்ணனை அவங்க கிட்ட இருந்து காப்பாத்தவே மாட்டன் எப்படியோ அஞ்சனா கையாலே சாவுங்கன்னு விட்றுவன்" என்று யாழிசை கூற பரத் சரி என்று அழைப்பை துண்டித்து விட்டான். "இவங்கெல்லாம் எப்படி தான் ஒரே மாதிரி யோசிக்கிறாங்களோ தெரியல ... அப்படியே நா அவங்க அம்மா அப்பா மனசுல இடம் பிடிச்சாலும் அவங்க வாசு கிட்ட என்னை கட்டிக்க சொன்னாலும் வாசு 'ஐய்யோ எங்கம்மா சொன்ன அழகே ரத்தினமே நீ தான் என் உயிர் நீ தான் என் வாழ்க்கை'ன்னு என் கைய பிடிச்சி கழுத்துல தாலி கட்டி குடும்பம் நடத்த ரெடி ஆகிடுவான் பாரு ... அவனே ஒரு பிடிவாதத்துக்கு பொறந்தவன் அவன் மனசுல நானாவது இடம் பிடிக்கிறதாவது ... அதும் என்னை மாதிரி வேணான்ற வேணுன்னே செய்றவங்களை கண்டாலே அவனுக்கு ஆகாது ... அதை புரிஞ்சிக்காம ஆளாளுக்கு நம்மள லவ் பன்றியான்னு கேக்கறாங்க ... நம்மளோட ஒரே டார்கெட் அந்த மயில்சாமி தான்" என்று புலம்பியவள் படத்தை பார்க்க ஆயத்தமாகினாள். 

அடுத்த நாள் காலை அஞ்சனா தான் கூறியது போல் வருவாளா தான் கூறியது போல் நடந்துக் கொள்வாளா அல்ல தான் சொல்லிக் கொடுத்தது போல் பேசுவாளா என்று பல யோசனைகளை செய்தவாறே அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தான் வாசு. "அண்ணா கீழ" என்று ஏதோ கூற வந்த பரத்தை பேச விடாமல் "வந்துட்டாளா ... எப்படி வந்திருக்கா ... யார் உள்ள கூப்ட்டது .. அம்மா பாத்துட்டாங்களா ... அப்பா என்ன பன்றாரு" என்று கேள்விகளை அடுக்கினான். "வந்துட்டா ஆனா" என்று பரத் முழுதாய் கூறி முடிக்கும் முன்னே "நா போய் பாக்கறன்" என்று வேகமாக கீழே இறங்கி ஓடினான். "நம்ம சொல்ரத காது கொடுத்தே கேக்காம போறானே" என்று புலம்பிய பரத் தன் அண்ணன் பின்னே சென்றான். கீழே பதட்டத்துடன் சென்ற வாசு தன் அன்னை காலடியில் விழுந்து வணங்குவது அஞ்சனா என்று நினைத்துக் கொண்டு அவளுடன் சென்று தானும் விழுந்தான். மல்லிகா தன் பெரிய மகனின் செயலை கண்டு நகைத்தவாறே "டேய் என்னடா பன்ற" என்று கேட்க வாசு "கோச்சிக்காம ஜோடியா ஆசிர்வாதம் பன்னும்மா" என்று கூற "வாசு" என்ற அஞ்சனாவின் கோபக்குரல் வாசலில் கேட்கவும் அதிர்ந்து விலகி நிமிர்ந்து பார்த்தான் வாசு.


Leave a comment


Comments


Related Post