இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 32 a) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 27-06-2024

Total Views: 2500

உனக்கென்றே உயிர் கொண்டேன் 32(a)

அஸ்வினும் பூர்வியும் தேவராஜின் இல்லம் வந்திருக்க... தமிழும், வெண்பாவும் சண்முகத்தின் இல்லம் சென்றிருந்தனர்.

வீட்டில் முடிக்க வேண்டிய சம்பிரதாயங்கள் முடிய, அஸ்வின் மற்றும் பூர்வி இலகுவாக வரவேற்பு இருக்கையில் அமர்ந்தனர்.

தேவராஜ் நடந்தவற்றிற்காக மன்னிப்பு கேட்கும் விதமாக பேசிட...

அஸ்வின் எதற்கு இது என்று தன்மையாகக் கேட்டபோதிலும், "வேண்டாதவற்றை தவிர்த்திடுவோம்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டான்.

பூர்வி தான் ஒருவித யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

கவனித்து தனம் என்னவென்று கேட்டிட...

"இனியும் உங்க தங்கச்சி நம்ம வீட்டில் இருக்கணுமாப்பா?" எனக்கேட்ட பூர்வி,

"கூடவே வசிப்பிங்க அப்படின்னா என் தம்பியையும், அவன் மனைவி என் நாத்தனாரையும் தனியா வச்சிடுங்க. உங்க தங்கச்சி இருக்க வீட்டில், வெண்பாவை அவங்க என்ன பண்ணுவாங்களோ... பேசுவங்களோன்னு ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டே இருக்க முடியாது" என்று கூறினாள்.

மணிக்கும், வர்ஷினிக்கு முகம் சுருங்கிவிட்டது. பூர்வியை தப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. மௌனமாக அவளின் பேச்சினை ஏற்றனர்.

இதனை அஸ்வினும் யோசித்தான்... ஆனால் மாப்பிள்ளையான முதல் நாளே தன்னைக்கொண்டு அவர்களது குடும்ப உறவில் விரிசலாக வேண்டாமென்று அமைதியாக இருந்தான்.

இப்போது தன் மனம் புரிந்து, தன் தங்கைக்காக யோசித்து பேசிய தன்னுடைய மனைவியின் மீது அஸ்வினுக்கு காதல் கூடியது. யாருமறியாது பூர்வியின் விரல்களோடு தன் விரல்கள் கோர்த்துக் கொண்டான் அஸ்வின். 

தேவராஜ் எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தார்.

அவரின் இந்த அமைதி அகிலாண்டத்துக்கே அதிருப்தியை கொடுத்தது.

"பூர்விக்கு பதில் சொல்லு ராஜூ?" என்ற அகிலாண்டம், "கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்காமல் விட்ட என்னை தான் நொந்துக்கணும்" என்றவரை தனம் ஆறுதலாக பற்றிக்கொண்டார்.

"வெண்பா இன்னொரு தனமாக அ
இங்கிருக்க வேண்டாம்ப்பா" என்ற பூர்வியின் வார்த்தையில் தேவராஜுக்கு மனதில் அடி விழுந்தது.

தங்கையென்று மனைவியை பொறுமையாக இருக்க சொல்லலாம். அதுவே வீட்டிற்கு வரும் மருமகளிடம் சொல்லிட முடியுமா?

தேவராஜ் ஏற்கனவே முடிவெடுத்துதான் அமர்ந்திருக்கிறார். அதனை செயல்படுத்தக்கூடிய நேரத்தை எதிர்நோக்கி.

"சரிப்பா... நாங்க கிளம்புறோம். அம்மு அங்க கிளம்பும்போது வழியனுப்ப நாங்க அங்கிருக்கணும்" என்றாள். மீண்டும் தன் கணவனின் மனம் புரிந்தவளாக நடந்துகொண்டாள்.

பூர்வியால் தன்னுடைய வாழ்வு வண்ணமயமாக திகழும் என்பதை அஸ்வினுக்கு அவளை அறியாது நொடிக்கு நொடி உணர்த்திக் கொண்டிருந்தாள்.

"சரிம்மா..." என்ற தனம், அவர்கள் புறப்படுவதற்கு தயார் செய்திட...

"நான் வந்து ரெண்டு நாள் தங்கட்டுமா மாப்பிள்ளை? இந்த மாதிரி நேரத்தில் பூர்விக்கு துணையா இருக்குமே" என்ற அகிலாண்டம்... "தப்பா எடுத்துக்காதீங்க, பெண்ணில்லாத வீடு. இரவு" என்று அவர் சொல்லாது நிறுத்திட...

அதை சண்முகமும் யோசித்து அஸ்வினிடம் பேசியிருந்தாரே! அதற்காக தாங்களே எப்படி அழைக்க முடியுமென யோசித்து,

"செவ்வந்தி அக்கா வைத்து பண்ணிக்கலாம்" என்று சொல்லியிருந்தான்.

இப்போது அவர்களே கேட்கும் போது சரியெனக் கூறினான்.

அஸ்வின், பூர்வி தம்பதி அகிலாண்டத்துடன் கிளம்பிட... வர்ஷினியும் தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு மணியுடன் புறப்பட ஆயத்தமாகினாள்.

தனம் ஏனென்று கேட்டிட,

"நான் அப்பாவோடு அங்கிருப்பது தான் சரி அத்தை" என்றாள் வர்ஷினி.

நால்வரையும் வழியனுப்பி வைத்திட தேவராஜ் மற்றும் தனம் என அனைவரும் வாயிலுக்கு வர, முறைத்த கண்களோடு அடங்காத கோப முகத்தோடு வாயிலில் அடி வைத்தார் தெய்வானை.

தெய்வானையை பார்த்ததும் எல்லோருடைய பார்வையும் ஒரு நொடி மட்டுமே அவரில் படிந்தது.

அடுத்த கணம் அவரை காணதது போல் அங்கு நிறுத்தியிருந்த காரில் அகிலாண்டம் முதல் ஆளாக ஏறிக்கொண்டார்.

அகிலாண்டம் மண்டபத்தில் தன் கோபத்தை கட்டிக்கொள்ளவில்லையேத் தவிர அவருக்கு தெய்வானையின் மீது அதீத கோபம். அவரை ஏன் பெற்றோமென்று மனதில் இந்நொடியும் வருந்துகிறார். அவரின் இந்த குணத்திற்கு தானும் ஒரு காரணமென்று புரிந்த குற்றவுணர்வும் அவருள். ஆனால் சிலவற்றை கடந்து வர வேண்டுமே! முயல்கிறார்.

அகிலாண்டத்தால் ஒரு பெண்ணாக தெய்வானை வெண்பாவுக்கு செய்யததை அத்தனை எளிதாக மன்னிக்க முடியவில்லை. விலகிக்கொண்டார்.

ஆயிரமாயிரம் அறிவுரைகள் வழங்காத மாற்றத்தை சில விலகல்கள் கொடுத்துவிடும். ஆனால் இவர் தெய்வானையாயிற்றே! மாறிவிடுவாரா என்ன? சிலரின் குணங்கள் எப்போதும் மாறாது. மாற்ற நினைத்தாலும், முயற்சித்தாலும் முடியாது.

அகிலாண்டமே தெய்வானையை விலக்கும் போது தங்களுக்கு மட்டும் என்ன என்று அங்கு தெய்வானையை பார்ப்போர் யாருமில்லை.

அஸ்வினும், பூர்வியும் பெரியவர்கள் மூவரிடமும் வர்ஷியிடமும் சொல்லிக்கொண்டு காரில் ஏறி சென்றிருந்தனர்.

அடுத்து மணியும் தாமதிக்காது வர்ஷினியை கூட்டிக்கொண்டு சென்றார். தெய்வானையை கடக்கும்போது இருவரின் பார்வை கூட அவர் பக்கம் திரும்பவில்லை.

தேவராஜ் தன் உறவுகள் சென்றதும் வீட்டிற்குள் செல்ல திரும்பிட... 

"என்னங்க அண்ணி..." என்று இழுத்த தனத்தை ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவு தான். அந்த பார்வையின் பொருள் அத்தனை வலி நிரம்பியதாய்.

தங்கை என்ற ஒரு காரணத்திற்காக தெய்வானையின் விஷியத்தில் அவர் கொண்டிருந்த பொறுமையின் எல்லை அளவற்றது. இனியும் அவரால் முடியாது. மௌனமாகவே தன் முடிவை மனைவியிடம் வெளிப்படுத்திவிட்டார்.

தனத்திற்கும் அவர் செய்ததன் மீது கோபம் உள்ளது தான். அதற்காக வீட்டிற்கு வந்திருப்பவரை வெளிவாசலோடு அனுப்பிட மனமில்லை. இங்கில்லை என்றால் அவர் எங்கு செல்வாரென்று யோசித்த தனம், தேவராஜ் வீட்டிற்குள் செல்வதை பார்த்து...

"நீங்க உள்ள வாங்க அண்ணி" என்று தெய்வானையை அழைத்தார்.

தெய்வானை அப்போதும் தன் தவறுகள் எதையும் உணரவில்லை.

"நீயென்னடி என்ன கூப்பிடுறது? உன் தயவில் நான் தங்கனுமோ?" என ஆங்காரமாகக் கேட்ட தெய்வானை, வாயிலிலிருந்து தெருவில் இறங்கி வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார்.

அவருக்கு மற்றவர்களின் உதாசீனம் புரிகிறது. என்ன செய்தாலும் தன்னை அரவணைத்த குடும்பத்தாரின் விலகல் வலி கொடுக்கிறது. முதல் முறை யாருமற்ற வலி வலிக்க வலிக்கிறது. இருப்பினும் தான் எனும் அகங்காரம் அவரை அவராகவே இருக்கச் சொல்கிறது. கால் போனப்போக்கில் தனக்காக இந்த பரந்த பரப்பில் ஒரு இடம் தேடிச் சென்று கொண்டிருந்தார். எதுவுமில்லை என்றாலும் தெய்வானை தெய்வானையாக மட்டுமே வாழ்வார்.

***********

மண்டபத்திலிருந்த சண்முகத்துடன் பொள்ளாச்சி வந்து சேரும் வரை வெண்பா தமிழிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. தமிழ் அருகிலிருந்தால் ஓயாது சடசடத்துக் கொண்டே இருப்பவள், இன்று அவனுடன் சில இன்ச் இடைவெளியில் அமர்ந்திருந்த பொழுதும் மௌனமாகவே இருக்கிறாள்.

அவளால் நடந்ததிலிருந்து சட்டென்று வெளிவர முடியவில்லை.

அண்ணனின் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்தவளுக்கு தனக்கே இன்று தான் விரும்பிய தன்னவனுடன் திருமணம் நடக்குமென்ற எண்ணமில்லை. ஒருவித ஆச்சரியம் அவளிடம். அந்த சூழலிலும் தமிழ் தாலி கட்டும் தருணத்தை அத்தனை உணர்வாய் உள்வாங்கியிருந்தாள்.

நடந்த திருமணம்... அவள் சொல்லாமலே அவளது காதலை கரம் சேர்த்திருந்தது. மிக்க மகிழ்ச்சி அவளுள். ஆனால் நடந்த நிகழ்வால் மகிழ்வினை உணர முடியவில்லை.

அவளையே பார்த்தபடி வந்த தமிழ், அவளுக்கு பிடித்த சுவை நிரம்பிய கேண்டியை அவள் முன் நீட்டினான்.

தன்னுடைய ஐந்து விரல்களும் தமிழின் உள்ளங்கையில் அழுந்த பதியுமாறு மிட்டாயை எடுத்துவள், கையில் இறுக்கி வைத்தபடி மற்றொரு கரத்தால் அவனது புஜம் கோர்த்து தோளில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.

தமிழ் தன்னுடைய மொத்த காதலையும் சொல்லியதால்... வெண்பாவிடம் மனதின் நெருக்கம் தன்னைப்போல் சிறு செயல்களில் வெளிப்பட்டது.

வெண்பாவின் கையில் அழுத்தம் கொடுத்த தமிழ், முன்பிருந்த ஓட்டுநர் மற்றும் சண்முகத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளின் உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்து விலகியிருந்தான்.

இதயத்தில் இடியின் ஓசையையும், உடலில் மின்னலின் அதிர்வையும் ஒருங்கே பெற்றவள், பட்டென்று இமை திறந்து முகம் உயர்த்தி தமிழின் முகம் பார்த்தாள்.

"என்னவாம்?"

அவனது விழி வீச்சில் அவளின் இமை தானாக குடை கவிழ்ந்தது. தமிழின் மீசை நீண்டு துடித்தது.

வீடு வர, செவ்வந்தி ஆரத்தி எடுக்க உள்ளே நுழைந்தனர்.

"உன் ரூம் கூட்டிட்டுப்போ அம்மு" என்ற சண்முகம், தமிழின் இரு கைகளையும் தன் கைகளுக்குள் பொத்தி வைத்து... "ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை" என கண்கள் பனிக்க நகர்ந்தார்.

சண்முகத்தின் உள்ளம் நிறைந்து கிடந்தது.

தன் பேரன் பேத்தியின் வாழ்வு நல்லபடியாக அமைந்துவிட்டதன் வெளிப்பாடு அவரின் முகத்தில் மிளிர்ந்தது.

"தாத்தா எமோஷனல் ஆகிட்டாரு!"

"புரியுது" என்ற தமிழ், "கொஞ்சம் ரிலாக்ஸ்டா உட்காரனும். உன் ரூம் போகலாமா?" எனக் கேட்டான்.

சண்முகம் அழைத்துப்போ என்று சொல்லிய போதே அவளின் விழிகளில் தென்பட்ட பதட்டத்தை கண்டுகொண்டவன், இப்போதும் அவள் தயங்குவதை கண்டு புருவம் உயர்த்தினான்.

"நீங்க... நீங்க..." என்றவளின் பார்வை உயர்ந்தது. மேல்தளத்தில் உள்ள அவளின் அறை நோக்கி.

"அதுதானா?" எனக் கேட்டவன், மாடிப்படிகளில் கால் வைத்திட, "சீனியர்" என்று வேகமாக ஓடிச்சென்று அவனுக்கு முன் இரு கைகளையும் விரித்து மறித்து நின்றாள்.

"என்ன? போகக்கூடாதா?"

"அச்சோ அப்படியில்லை" என்றவள், "ஒரு டூ மினிட்ஸ்" என்று வேகமாக படியேறி அறைக்குள் நுழைந்திருந்தாள்.

அவளின் வேகமே என்னவோ என்று அவனின் ஆர்வத்தை கூட்டிட, அவள் பேச்சை மீறி அறைக்குள் சென்றிருந்தான்.

வெண்பா வேகமாக அவனுக்கு முதுகுக்காட்டியபடி சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களையெல்லாம் கழட்டி கட்டில் மெத்தையில் குவித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பக்க சுவர் முழுக்க இதய வடிவில் தமிழின் புகைப்படங்கள் நிரம்பியிருந்தன. புகைப்படக் குவியல் இதயமாக அடுக்கி மாட்டப்பட்டிருந்தது. அதில் சிறு அளவு புகைப்படச்சட்டம் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டு இருந்தது.

அந்த இதயத்திற்கு நடுவில் நடுநாயகமாக நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழ் கோவை ரயில் நிலையத்தில் தவறவிட்ட அவனது கல்லூரி அடையாள அட்டை இருக்க, அறைக்குள் வந்ததும் வெண்பா முதலில் கையில் எடுத்தது அதனைத்தான். ஒரு கையில் அதனை மறைத்துப் பிடித்தவளாக மற்றொரு கையால் கழட்டிக் கொண்டிருந்தாள். 

அத்தனை வேகம் கொண்டும் பத்து தான் கழட்டியிருப்பாள். அதற்குள் அறைக்குள் வந்தவன், அந்த இதயத்தை கண்டு விழிகள் விரித்தான்.

தன்மீது வெண்பாவுக்கு விருப்பம் இருக்கிறதென்று தமிழுக்குத் தெரியும். ஆனால் அதனின் ஆழத்தை அங்கு மாட்டியிருக்கும் புகைப்படங்கள் மூலம் உணர்ந்தான். அதிலிருக்கும் பல படங்கள் அவனிடமே இல்லை. பலது எப்போ எடுத்தது என்றும் தெரியாது.

வெண்பாவின் மூடியிருந்த கைக்குள் என்ன இருக்குமென்று ஆராய்ந்தபடி கட்டிலிற்கு அருகே வந்தவன், மெத்தையில் கிடக்கும் புகைப்படங்களில் ஒன்றை கையிலெடுத்து...

"எதுக்கு கழட்டுற?" எனக் கேட்டுக்கொண்டே அவளை நெருங்கி பின்னால் சிறு இடைவெளியில் நின்று அவளின் கன்னம் உரசியவாறு கையினை முன் நீட்டி எடுத்த படத்தை சுவற்றில் மாட்டினான்.

"போச்சு... போச்சு..." என்று கண்கள் சுருக்கியபடி விலகி அவன் பக்கம் திரும்பியவள்,

"உங்களை கீழவே இருங்கன்னு சொன்னேன் தானே?" எனக் கேட்டாள். அடையாள அட்டை வைத்திருந்த கையினை பின்னால் வைத்து மறைத்தபடியே, பின்னோக்கிச் சென்று மேசையில் இடித்து நிற்பதாகக் காட்டிக்கொண்டு, அதன் இழுவையை திறந்து அடையாள அட்டையை அதற்குள் வைத்து மூடியவளாக ஆசுவாசம் அடைந்தாள்.

"நான் ஏன் பார்க்கக்கூடாது நினைச்ச?" என்றவன், தானே அனைத்தையும் எடுத்து மாட்டியிருந்தான்.

"அது..."

"என்னால் ஃபீல் பண்ண முடிந்தது" என்ற தமிழ், வெண்பாவின் விழிகளை சந்தித்து "உன்னோட லவ்" எனக்கூறி மீண்டும் புகைப்படங்களை மாட்டுவதில் கவனம் வைத்தான்.

"அதனால் தான் நீ எப்படியும் நோ சொல்லமாட்டன்னு, என்கேஜ்மெண்ட் உன்கிட்ட சொல்லாமல் சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் அரேன்ஞ் பண்ண சொன்னேன்" என்றான்.

வெண்பாவிடம் மௌனம்.

"தாத்தா உன் ரூம் வரமாட்டாரா?"

"ம்ஹூம்..."

கல்லூரி நாட்களில் நள்ளிரவில் தைரியமாக அவனது அறைக்குச் சென்றவளுக்கு, அவனது மனைவியாக அவனுடன் ஒரே அறையில் இருப்பது பதட்டமாகவும், படப்படப்பாகவும் இருந்தது. அவனது முகத்தை பார்ப்பதற்கு கருவிழிகள் ஒத்துழைக்கவில்லை.

"என்னவாம் தமிழோட மொழி தடுமாறுறாங்க?" என்றவன் செய்த வேலை முடிந்ததும், கட்டிலில் சென்று அமர்ந்தான்.

"ஆங்... ஒன்னுமில்லையே" என்றவள், "அம்மு" என்று வெளியில் கேட்ட குரலில், "வாங்கக்கா" என்றாள்.

செவ்வந்தி தான் இருவருக்கும் குடிப்பதற்கு, தேநீர் கொண்டு வந்திருந்தார்.

"தம்பி கிளம்பிடுச்சாம் அம்மு. அவங்க வந்ததும் நீங்க கிளம்பணுமாம். உங்களுக்கு வேணுங்கிறதை தாத்தா எடுத்து வைக்க சொன்னாங்க" என்று சொல்லி இருவரிடமும் தேநீரை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

வெண்பா தேநீரை பருகாது குவளையை மேசை மீது வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்திருந்தாள். தமிழின் முன்பு அவளால் சமநிலையில் இருக்க முடியவில்லை. மனதில் உள்ள காதல் பெரும் ஆர்பரிப்பாய் அவளை அழைக்கழித்தது. இனியும் காதலை சொல்லாது தாமதப்படுத்த முடியாது. சொல்லியாக வேண்டும். உன் விருப்பம் தெரியுமென்றும் அவனாக சொல்லிய பின்னரும், தான் நேசத்தை உரைக்காது இருப்பது சரிவராதென நினைத்தவள் முகத்தை அடித்துக் கழுவி, ஓரளவு தன்னை நிதானப்படுத்திகொண்டே வெளியில் வந்தாள்.

தமிழ் பால்கனியில் நின்றிருந்தான்.

மூச்சினை இழுத்து வெளியேற்றியவள், வார்ட்ரோப் திறந்து தன்னுடைய ஆடைகளை எடுத்து மெத்தையில் வைத்துவிட்டு, பெட்டி எங்கென்று தேட, வார்ட்ரோபிற்கு மேலிருந்தது. எட்கி எடுக்க முயல, தமிழ் அவளின் தோள் மீது உள்ளங்கை வைத்து அழுத்தியவனாக எடுத்துக் கொடுத்தான்.

வெண்பா வேகமாக நகர,

"மொழிக்கு மொழி வரலையா?" எனக் கேட்டு மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு மேசையில் சாய்ந்து நின்றான்.

"நெர்வெஸ்ஸா இருக்கு சீனியர்?"

"ம்ம்ம்... ஏன்?"

"உங்களுக்கு இல்லையா? சட்டுன்னு நடந்தது."

"எதுக்கு?" என்றவன், "எனக்கு ரொம்ப பிடித்த பொண்ணு, சட்டுன்னு நடந்திருந்தாலும் ஆசைப்பட்டு எதிர்பார்த்தது தானே. கிடைக்கணும்ன்னு ஏங்கிய கணம். அதனால் எனக்கு இந்த மாதிரி எதுவுமில்லை" என்றான்.

சட்டென்று அவனைத் திரும்பி பார்த்தவள், பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் வாய் வழியாக அவள் கேட்க நினைத்ததையெல்லாம் வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறான் அல்லவா? இதுவரை காட்டிடத் துடித்துக்கொண்டிருந்த காதலை நொடி நொடியாய் காட்டிட நினைத்துவிட்டான் போலும்.

என்ன தான் நிலை பெற்றாலும், அவனின் பார்வையிலும் பேச்சிலும் சட்டென்று துவண்டுவிடுகிறாள். 

அவளின் நிலை புரிந்த தமிழ்,

"ட்ரெஸ் நான் எடுத்து வைக்கிறேன். நீ வேறெதுவும் எடுத்து வை" என்றவன் அவளை இயல்பாக்கிட முயன்றான்.

"இந்த போட்டோஸ்?" அவள் சுவற்றை காண்பிக்க...

"நிஜமே உன் கையில் இருக்கு" என்றான். அவன் சாதாரணமாக சொல்லிவிட்டான். அவளால் தான் முடியவில்லை. முகத்தை சுருக்கியபடி அவன் அடுக்கிக் கொண்டிருந்த பெட்டிக்கு அருகிலே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

"சத்தியமா முடியல பாஸ். புதுசா என்னவோ... ம்ப்ச், சொல்லத் தெரியல" என்றவள், "ஏன் அப்படி பாக்குறீங்க? உங்க கண்ணை, முகத்தை பார்க்கவே முடியல. என்னவோ பன்றீங்க" என்றாள்.

"நான் எப்பவும் உன்னோட அதே தமிழ் தான். முன்ன மாதிரியே இரு. எல்லாம் நார்மல் ஆகும்" என்றவன், "லவ் யூ மொழி" என்றிருந்தான்.

மண்டபத்திலே சொல்லியிருந்தான். காதல் வார்த்தையற்று காதலை. இப்போது நேரடியாக சொல்லும்போது இதயத்தில் இதம் சேர்த்தாள்.

"உங்க கை பிடிச்சிக்கவா?"

பெட்டியை நகர்த்திவிட்டு அவளின் அருகில் அமர்ந்தவன், அவளின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக்கொண்டான்.

"கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம். நார்மல் ஆகற ஃபீல்" என்று வெண்பா சொல்லி முடிக்கும் முன், "அம்மு" என்று அஸ்வின் குரல் ஒலித்தது.

"ம்ப்ச்" என்றவள், "வரேண்ணா" என்று எழுந்து செல்ல தமிழ் அவளின் கையினை விடவில்லை.

வெண்பா என்னவென்று பார்க்க...

"என்னை விட்டுப்போற" என்றான்.

"அந்த ஐடியாவே இல்லை. ஆயுசுக்கும் என்னோடதான் இந்த கை சேர்ந்தே இருக்கும். உங்களுக்குள்ள என் உயிர் இருக்க மாதிரி" என்றவள் "கீழப்போகத்தான் கையை விடுறேன்" என்று சென்றாள்.

'உங்களுக்குள்ள என் உயிர்.' எத்தனை அழுத்தமான, ஆழமான காதலின் வெளிப்பாடு.

அவளுக்கென்று உயிரில் காதல் கொண்டு அவன் காத்திருக்க, அவளோ என் உயிரே உனக்குள் தான் என்றுவிட்டாளே!

இதயத்தில் சில்லு சில்லாய் மின்னல் வெட்டிச்சென்ற இடமெங்கும் பனி படர்வதை கணப்பொழுதில் உணர்ந்து உடல் சிலிர்த்தான்.

கண்களை மூடி, "மொழி" என உயிர் கொண்டு அவன் மொழிந்திட...

"அண்ணா, அண்ணி வந்துட்டாங்க. நல்ல நேரம் முடியப்போகுதாம். இப்பவே கிளம்பணுமாம். கூப்பிடுறாங்க" என்று வந்தாள் வெண்பா.

பெட்டியை எடுக்கப்போக, தானே எடுத்துக்கொண்டான்.

"நான் ஜாப் கன்ட்னியூ பண்ணட்டுமா?"

"உன்னோட விருப்பம்."

தன்னுடைய கை பையினை எடுத்துவள், தனது முக்கிய ஆவணங்கள் யாவற்றையும் எடுத்து வைத்தவளாக, அவன் பார்க்காதவாறு மறைத்து நின்று மேசை இழுவையை இழுத்திட, அவனை அதிர்ந்து ஏறிட்டாள்.

"என்ன?"

"ஹான்... ஒன்னுமில்லையே" என்றவள், "போகலாம்" என்று முன் செல்ல, சின்ன சிரிப்போடு அவளைத் தொடர்ந்தான்.

சண்முகமும், அகிலாண்டமும் தனித்தனியாக ஆசீர்வதித்து,

அஸ்வின் தமிழையும், பூர்வி வெண்பாவையும் அணைத்து விடுவிக்க இருவரும் இன்முகமாகவே வண்டியில் ஏறி பயணமாகினர்.

"இப்போ நீ அழுதிருக்கணுமே! நான் கூட செண்ட்டிமெண்ட் சீன் நடக்குமோன்னு எதிர்பார்த்தேன்" என்றான்.

"பல வருடமா நெனப்புக்குள்ள வச்சி எதிர்பார்த்த நாள். உங்கக்கூட வாழனும்ன்னு நம்ம வீட்டுக்கு போகும்போது ஏன் அழணும். அண்ணா, தாத்தாவை அண்ணி நல்லா பார்த்துப்பாங்க. அண்ணியை அண்ணா நல்லா பார்த்துப்பாங்க. நான் இங்க வரணும் நினைச்சா உடனே கூட்டிட்டு வரமாட்டிங்களா? இல்லை அண்ணா, தாத்தா நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்களா? அப்புறம் எதுக்கு அழணும்?" எனக் கேட்டவளின் தெளிவில் தமிழ் தான் வியந்துப்போனான்.

சற்று முன்னர் வரை தன்னருகில் படபடத்து நின்ற வெண்பாவா இதென்று இருந்தது அவனுக்கு.

"நார்மலாகியாச்சுப் போலவே!"

"என்னோட தமிழ்... இது போதாதா நார்மல் ஆக?" பக்கவாட்டாக அவனது கூர்விழிகளை தன்னுடைய வேல் விழிகளால் சிறை பிடித்தவளாகக் கேட்டிருந்தாள்.

இம்முறை தமிழ் மௌனித்துப் போனான்.

இருவரும் மேட்டுப்பாளையம் வீடு வரும் போது இருள் கவிழ்ந்து விட்டது.


To be continue 32 b... (நெக்ஸ்ட் பார்ட்டும் போட்டாச்சு. விட்டுடாதீங்க.)


Leave a comment


Comments


Related Post