இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 32 b) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 27-06-2024

Total Views: 1979

உனக்கென்றே உயிர் கொண்டேன் 32 (b)

அந்நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்ற தனம், வெண்பாவை விளக்கேற்ற வைத்து பால், பழம் கொடுத்த பின்னரே அறைக்குள் செல்ல அனுமதித்தார்.

வெண்பாவின் உடமைகளை தமிழ் கொண்டு சென்று தனதறையில் வைத்துவிட்டு குளித்து இலகுவான ஆடைக்கு மாறி கீழே வர...

நால்வரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவினை முடித்தனர்.

தேவராஜ் வீட்டின் முன்பகுதி தோட்டத்திற்கு செல்ல... தமிழும் சென்றான்.

"நீ மேல போடாம்மா. பால், பழம் எல்லாம் முன்னவே வச்சிட்டேன். நீ போய் இந்த புடவையை மாத்திக்கணும்ன்னாலும் மாத்திக்கோ" என்று அனுப்பி வைத்தார்.

"அத்தை வீட்டுக்கு வரலையாப்பா?"

"பூர்வி சொல்லலையா?"

"நேரமில்லை. அவங்க வந்ததும் நாங்க கிளம்பிட்டோம்" என்ற தமிழிடம் தேவராஜ் நடந்ததைக் கூறினார்.

தமிழ் ம் என்று மட்டுமே சொன்னான்.

அனைவரும் மொத்தமாக தெய்வானை என்ற ஒருவரை தங்களின் வாழ்விலிருந்தே நகர்த்தியிருந்தனர்.

அத்தனை பாரதூரமான விஷயத்தை செய்துவிட்டு இத்தனை இறுமாப்புடன் இருப்பவரால் இதற்கு மேலும் செய்ய முடியுமென்ற எண்ணமே தெய்வானையை முற்றும் முழுதாக வெறுக்க வைத்துவிட்டது.

"மணி ஆகுதுங்க. வெண்பா மேல போயாச்சு." தனம் வந்து சொல்ல...

"இனியாவுது மணி மொத்தமா தலை முழுகிட்டு நிம்மதியா இருக்கட்டும். நீ போப்பா" என்று மகனின் தோளினை தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார் தேவராஜ்.

அனைவரின் மனமும் ஏதோவொரு வகையில் ஆசுவாசம் கொண்டிருந்தது.

தமிழ் அறைக்குள் சென்று கதவினை சாற்றி தாழிட... அப்போதுதான் குளித்து முடித்து மெல்லிய புடவை உடுத்தி குளியலறையிலிருந்து வெளிவந்த வெண்பா, அவன் முன்பு நின்று உள்ளங்கை நீட்டி...

"என் கார்ட் கொடுங்க" எனக் கேட்டிருந்தாள்.

"என்ன கார்ட்?"

"ம்ப்ச்... உங்களுக்குத் தெரியும்?"

"ஏடிஎம் கார்டா... பிஸ்னெஸ் கார்டா?"

"உங்கக்கிட்ட தான் இருக்கு. எனக்குத் தெரியும்."

"அப்படியா?" என்றவன் நீட்டியிருந்த அவளின் கையினை பிடித்து சுண்டி இழுத்தவனாக தன் மடியில் அமர்த்தி இறுக்கிக்கொண்டான்.

இருவருக்குமான முதல் நெருக்கம். அதுவும் அதீத தீண்டல். அவளின் முதுகு மொத்தமும் அவனது மார்போடு ஒட்டியிருந்தது. அவளால் நெளிய மட்டுமே முடிந்தது.

விரல்களோடு விரல்கள் கோர்த்து நெருக்கினான்.

"விடுங்க..."

"வாழ்க்கை முழுக்க அந்த எண்ணமே இல்லை. விட்றதுக்கா கட்டியிருக்கேன்?" என்றான்.

அவனது பேச்சில் நாணம் பொங்க, அதை மறைப்பதற்காக, அவனின் வலது கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தை பார்த்து எப்போதும் கேட்க வேண்டுமென நினைத்ததை கேட்டாள்.

"நான் அன்னைக்கு அவசரத்தில் ரைட் ஹேண்டில் கட்டிட்டேன். நான் கட்டிவிட்டேகிறதுக்காகவா?"

"மொழிக்கே தமிழ் மனசும், எண்ணமும் புரியுதே" என்றவன் "இப்போ நீ சொல்லு?" என்று குளிப்பதற்காக அவள் கொண்டையிட்டிருந்த கார்குழலை அவிழ்த்து மொத்தமாக அவளின் தோள் வழி முன்பக்கம் சரியவிட்டவன், மெல்ல இதழ் குவித்து அவளின் பின்னங்கழுத்தில் ஊதினான்.

அவளுக்கோ தேகம் தீப்பிடிக்கும் உணர்வு. கண்களை அழுந்த மூடிக்கொண்டாள்.

"என்ன சொல்லணும்?"

"என்ன எடுத்த?" முதல்முறை வீட்டிற்கு வந்தபோது அவள் ஏதோ எடுத்துக்கொண்டதாக சொல்லியதைக் கேட்டான்.

"சொல்ல முடியாது...."

தமிழ் அவளின் கை பையினை எட்டி எடுக்க வேகமாக பறித்திருந்தாள்.

"மொழியாவே சொல்லிட்டா நல்லது" என்றவன் அவளின் வெற்றுத்தோளில் நாடி பதித்து, கன்னத்தில் மீசையால் குறுகுறுப்பைக் காட்டினான்.

"ஷ்ஷ்ஷ்... அது உங்க ஸ்கூல் ஐடி கார்ட். அந்த ஹேங்கரில் மாட்டியிருந்தது." அத்தனை மெல்லிதாக ஒலித்தது அவளின் குரல்.

"ம்ம்ம்... சரி சொல்லு..."

மீண்டும் என்ன என்பதைப்போல் அவள் ஏறிட...

"லவ் யூ!"

"சொல்லிட்டனே" என்று அவன் அணிந்திருந்த காப்பினைத் தொட்டுக் காண்பித்தாள்.

அவள் வாங்கிக் கொடுத்தது. அதிலிருக்கும் ஒற்றை வைரத்தில் 'ஐ லவ் யூ' என்று பொறிக்கப்பட்டிருந்து. அவள் கொடுத்த அன்றே பூதக்கண்ணாடியின் மூலம் கண்டு கொண்டிருந்தான்.

"அப்போ மொழிக்கு தமிழ் மேல காதல் வந்தது" என்றவனின் கைகள் நெருக்கத்தைக் கூட்டியது.

"அது" என்று தடுமாறினாலும், மூச்சடைக்கும் காதலை ஒரே மூச்சில் சொல்லி முடித்திருந்தாள்.

தமிழை கார் மியூசியமில் பார்த்தது, அவனது சிரிப்பை ரசித்தது, பின் தொடர்ந்தது, சாலை கடக்க அவன் உதவியது, ரயில் நிலையத்தில் மீண்டும் பார்த்தது, அங்கு அவனின் அடையாள அட்டை தன் கை சேர்ந்தது, அவன் நினைவால் வதை கொண்டது, அஸ்வினிடம் பேசியது, அடையாள அட்டை வைத்து அவனது படிப்பு, கல்லூரி அறிந்து அவனுக்காகவே அங்கு சேர்ந்தது என எல்லாம் எல்லாம் கூறினாள்.

"அப்போதேவா?" என்று தமிழுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்காக என்ற அவளின் காதலின் அழுத்தம் அத்தனை பிடித்தது. மொத்தமாக காதலை கொட்டிவிட்டதால் வெண்பாவுக்கு இயல்புநிலை அடைந்திருக்க... அவன் முகம் பார்த்தாள்.

இருவரின் மூச்சும் உறவாடி அனல் கூட்டிட... இருவர் ஓர் உயிராய் காதலில் மட்டுமல்லாது... மனதால், தேகத்தால் கலந்து கரை சேர்ந்திருந்தனர்.

****************

ஐந்து வருடங்களுக்குப் பிறகு...

இன்று அஸ்வின், பூர்வியின் பிள்ளைகளுக்கு அவர்களின் குலதெய்வ கோவிலில் வைத்து மொட்டையடித்து, காது குத்தும் விழா, வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொள்ளாச்சியிலிருந்து அரை மணிநேர தொலைவில் தான் கோவில் இருந்தது.

அனைவரும் முதல் நாளே அஸ்வினின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

விடயலிலே கிளம்பிச் சென்றிருக்க... தமிழும், வெண்பாவும் மட்டும் இப்போதுதான் கிளம்புகின்றனர்.

கண்ணாடியில் தலையை சரிசெய்து கொண்டிருந்த தமிழை, கட்டிலில் அமர்ந்தபடி இமைக்காது பார்த்திருந்தாள் வெண்பா.

"என்னவாம் மொழிக்கு?" ஒரு பக்கம் மீசையை முறுக்கியபடி தமிழ் திரும்பிட, இதழ் குவித்து காற்றில் முத்தத்தை பறக்கவிட்ட வெண்பா தன்னிரு கைகளையும் சிறகாய் விரித்திட... அவளை நெருங்கி பக்கவாட்டில் வந்து அணைத்துக்கொண்டான். அவளோ அவனது இடையோடு கைகளிட்டு கட்டிக்கொண்டாள்.

"அத்தை, பாட்டி போகும்போதே சொல்லிட்டுப் போனாங்கப்பா!"

"நான் சொல்லிக்கிறேன்'டா! நீ என்னோடவே இரு. அவங்கிட்ட போகவேணாம்" என்றான்.

"என்னயிருந்தாலும் கோவிலுக்கு புடவை..." என்று அவள் முடிக்குமுன் இதழில் முத்தமிட்டு விலகியவன், 

"அங்கு எவ்வளவு நேரமாகும் தெரியாதுலடாம்மா... பட்டு புடவை, ஹெவி வெயிட். கொஞ்ச நேரத்துல அசௌகரியமாகிடும். உன்னோட அனீசி ஃபீல், உள்ள பேபிக்கும் கஷ்டமா இருக்கும்" என்று வெண்பாவின் ஏழு மாதம் மேடிட்ட வயிற்றில் கை வைத்து குழந்தைக்கு சொல்வதைப்போல் சொல்லியவன் அவளின் உச்சியில் முத்தம் வைத்து பிரிந்தான்.

நொடியில் அவள் முகம் புன்னகை பூசியது.

பிரசவ காலத்தில் அணியும் கௌன் வகை ஆடையை தமிழின் கண்டிப்பால் உடுத்தியிருந்தாள்.

தனம் கோவிலுக்கு செல்லும்போதே...

"தமிழ் என்ன சொன்னாலும் நீ புடவை கட்டிட்டி வரணும் வெண்பா. இல்லை அத்தை ஏதும் சொல்லுவாங்க" என்று சொல்லியிருந்தார். அதனாலே வெண்பாவின் தயக்கம். அவளின் சிறு முக சுருக்கத்தையும் மட்டுமல்ல பெரிய இடர்களையும் அவளது கணவன் தமிழ் நொடியில் சரி செய்திடுவான். இப்போதும் செய்திட்டான்.

"ரொம்பத்தான் மயக்குறீங்கப்பா" என்று சொல்லியவள் எழ, அவளின் காலணிகளை கொண்டு வந்து தானே மாட்டிவிட்டான் தமிழ்.

குனிந்திருந்தவன் நிமிர, தமிழின் முன்னுச்சி கேசத்தை கலைத்து, அவனின் இரு கன்னம் பற்றி முகத்தை தனக்கருகே தாழ்த்தி, அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

எப்போதும் போல் அவளிடம் மயக்கம் கொண்டவனாக, அவளின் ஒற்றை முத்தத்துக்கு தன்னை அவளின் கைச்சிறையில் மொத்தமாக தொலைத்து நின்றான்.

இவர்கள் கோவிலுக்கு வந்த நேரம், அனைத்தும் தயாராக இருந்தது. சிறு குன்றின் மீது கோவில் இருந்தது. ஒரு பக்கம் அருவி, சுற்றி பசுமை, நடுவில் ஒற்றை கோபுரமாய், நீண்ட மண்டபமாக கண்ணுக்கு விருந்தாய், மனதிற்கு குளிர்ச்சியாய் அவ்விடம் இருந்தது.

வெண்பாவை பார்த்ததும் தனம் தன் மாமியாரை ஏறிட...

"தங்கமா தாங்குறான். நான் என்னத்த சொல்லிடப்போறேன். சந்தோஷமா இருக்கட்டும்" என்று அகிலாண்டம் சொல்லிடவே தனம் ஆசுவாசம் கொண்டார்.

பின்னே அத்தனை முறை வெண்பாவை புடவை கட்டி வரசொல்லி அகிலாண்டம் சொல்லியிருந்தாரே!

"சாரி அத்தை... சீனியர் தான்" என்று வெண்பா சொல்லிட... அவளின் கன்னம் வழித்து கண்ணில் ஒற்றிக்கொண்ட தனம்...

"பூர்வி பொங்கல் வச்சிட்டு இருக்காள். அங்கப்போகாதே. புகை கண்ணில் படும்ன்னு என்கிட்ட கத்துவான்" என்றார்.

பூபேஷ் அவனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்திருக்க... மகேஷும், பூபேஷும், அஸ்வினுடன் நின்றிருந்தனர். அவர்களிடம் பேசிவிட்டு வெண்பாவிடம் வந்த தமிழ்...

"என்னவாம் உன் அத்தைக்கு?" என்று தனத்தின் தோளில் கைப்போட்டான்.

"நான் உன் பொண்டாட்டியை ஒன்னும் சொல்லல... அவள் இன்னும் உன்னை சீனியருன்னு சொல்லிட்டு இருக்காள். அதை மாத்து முதலில்" என்று மகனின் கன்னத்தை இடித்துச் சென்றார்.

தமிழ் வெண்பாவை புருவம் உயர்த்தி பார்க்க...

"உங்கள வேறெப்படிப்பா மத்தவங்கக்கிட்ட சொல்றது. அப்படிதான் வருது" என்றாள் மெல்லொலியில்.

தமிழ் அப்பவும் அப்படியே பார்த்திருக்க...

"தமிழ் சொல்றேன் தானே! அது உங்களுக்கு மட்டுமானது" என்றாள் கோபம் கொண்டவளாக. தமிழ் பட்டென்று சிரித்துவிட்டான்.

"மொழி தமிழை என்ன சொன்னாலும் எனக்கு பிடிக்கும்" என்று மனைவியின் நெற்றி முட்டியவன், அவளின் மூக்கை தன் மூக்கால் இடித்தான்.

"ச்சூ... எல்லோரும் இருக்காங்க" என்று வெண்பா தான் பதறி விலகினாள்.

"வேந்தன் எங்கம்மா?"

"அவன், பிள்ளைகளோட அருவியில் நிக்கிறான். உங்க அப்பாவும், மாமாவும் கூட இருக்காங்க மாப்பிள்ளை" என்று அங்கு மண்டபத்தில் அமர்ந்திருந்த சண்முகம் பதில் வழங்கினார்.

அவரின் அருகில் வெண்பாவை அழைத்துச்சென்று அமர வைத்து தமிழ்... அவள் பருக இளநீர் கொண்டு வந்து கொடுத்து, குடிக்கும்வரை காத்திருந்து அதன் பின்பே அவர்களின் மூத்த புதல்வன் வேந்தனை நோக்கிச் சென்றான்.

தமிழ், வெண்பாவின் முதல் வாரிசு மொழிவேந்தன். மூன்று வயது. அஸ்வின், பூர்விக்கு நான்கு வயதில் இரண்டு இரட்டையர்கள். மித்ரா, நேத்ரா. மகேஷ், வர்ஷிக்கு இரண்டு வயதில் நந்தன். பூபேஷ், அகிலாவுக்கு ஒரு வயதில் நிதிஷா.

குடும்பம் மட்டுமே நிறைந்து விழாவை இனிதாகத் தொடங்கி, மித்ரா மற்றும் நேத்ராவை தமிழின் மடியில் அமர்த்தி மொட்டை அடித்து காது குத்தி முடித்தனர்.

அனைவரும் ஒன்று கூடியிருந்த தருணம், அத்தனை கொண்டாட்டமாகவும், சந்தோஷமாகவும், நிறைவாகவும் அமைந்தது.

எல்லோரும் சற்று ஓய்வெடுத்த பின்னர் வீட்டுக்கு செல்லலாம் என்று ஆசுவாசமாக கோவில் மண்டபத்தில் ஆங்காங்கே அமர்ந்தனர்.

பேச்சும், சிரிப்புமாக அத்தருணமும் ஆரம்பமாகியது. நடுவில் பிள்ளைகள் ஓடி ஆடிக் கொண்டிருந்தனர்.

தமிழ் யாரையும் பொருட்படுத்தாது, வெண்பாவின் காலினை தன் மடியில் தூக்கி வைத்து அவளின் பாதத்தை பிடித்துவிட்டபடி அஸ்வினுடன் பேசிக் கொண்டிருந்தான்.

பூபேஷும், மகேஷும் "மச்சான்" என்று ஒரு சேர கூவிட...

"வர்ஷி, அகிலா கூப்பிடுறானுங்க பாருங்க" என்ற தமிழ் அஸ்வினிடமிருந்து முகத்தை திருப்பவே இல்லை.

"தம்பி எங்களுக்கும் தான் மலை ஏறினது கால் வலிக்குது" என்று பூர்வி தமிழின் தோளில் கைப்போட...

"மாம்ஸ்கிட்ட சொல்லு பூர்வி" என்றான் தமிழ்.

"அடேய்... என்னை ஏன்டா மாட்டிவிடுற" என்று அலறிய அஸ்வின்... "இங்க எல்லாரும் இருக்காங்க பூர்வி" என்று கண்காட்டினான்.

"அன்பு இருந்தால் போதும் மாம்ஸ். எதுக்கு காரணம் காட்டுறீங்க?"

"அச்சோ பூர்வி உன் தம்பி, நமக்குள்ள சண்டை மூட்டிவிட பார்க்கிறான்" என்று அஸ்வின் அலற, "உனக்கு உன் பொண்டாட்டிக்கு செய்யனும்ன்னா என்னவும் செய். எதுக்குடா என் புருஷனை வம்பு பன்ற" என்று தமிழின் கன்னத்தை ஆதுரமாக தட்டினாள் பூர்வி.

"சரிதான்... அப்போவே அப்படி லவ் பண்ண ஆளு நீ. இப்போ கேட்கவா வேணும்" என்று மகேஷும், பூபேஷும் ஒருவரையொருவர் பார்த்து கண்ணடிக்க...

"கண்ணு போடாதீங்கடா" என்று அகிலாண்டம் அதட்டினார்.

பெரியவர்கள் சிறியவர்கள் என்னவும் பேசட்டுமென்று தங்களுக்குள் பேச்சில் மூழ்கினர். தங்கள் பிள்ளைகள் ஒற்றுமையாய், மகிழ்வாய் வாழும் போது அவர்களுக்கு வேறென்ன வேண்டுமாய் இருத்திடப்போகிறது. ஆத்மார்த்த நிறைவு.

தான் மறுத்தால் அடமாக செய்வானென்று தமிழின் செயலை மறுக்காது, கணவனையே கன்னத்தில் கை வைத்தபடி கண்களில் காதலை வழியவிட்டபடி வெண்பா ரசித்திருந்தாள்.

அஸ்வினுடன் பேசியபடி இருந்த தமிழ் என்னவென தலையை வெண்பாவின் பக்கம் திருப்பிட...

ஐந்து விரல்களையும் அழுத்தமாக அவனது கன்னத்தில் குவித்து கிள்ளியவளாக தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள். தமிழின் அதரம் கண்கள் மின்ன நீண்டு விரிந்தது. ஒருவரையொருவர் பார்த்திருந்த நான்கு கண்ணிலும் நேசம் காட்டாற்று ஊற்றாய் கரை புரண்டது.

"நாங்க ஏதும் பார்க்கலப்பா" என்ற மற்றவர்களின் ஒன்றான குரலில் அவ்விடம் அருவியின் ஆர்பரிக்கு நிகராய் சிரிப்பு சத்தத்தில் மூழ்கியது.

உயிரில் சுமக்கும் காதல் என்றும் அவர்களுள் இதயத் துடிப்பாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சுபம்.



Leave a comment


Comments


Related Post