இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -67 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 27-06-2024

Total Views: 2571

உடையை வாங்கிக் கொண்டு நிலாவை வீட்டில் விடும்போதே இரவு ஒன்பது மணி. ஒருக் குடும்பத்திற்கே துணி எடுத்தப்போதுக் கூட  இவ்வளவு நேரம் ஆகவில்லை. இரண்டு பேருக்கு துணி எடுக்க ஒருநாள் முழுவதும்   ஆக்கிவிட்டான் நந்தன்.

நந்தனுடன் வந்து இறங்கிய தங்கையை வளவன் முறைக்க, "முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?" என்பதுப் போல் நிலா யாரையும் கண்டுக் கொள்ளாமல் துணிகளைக் கொண்டு போய் அவளது அறையில் வைத்தாள்.

யாருமே பேசுவதில்லை.. பேசுங்க பேசுங்க என்று கெஞ்சும் அளவிற்கு அவள் பக்கம் எந்த தவறும் இல்லை என்பதால் நிலாவாகவே விலகிக் கொண்டாள்.

வெளியே சென்று வந்ததில் கசகசவென்று இருக்க குளித்துவிட்டு அப்போது தான் வந்து படுக்கையில் படுத்தாள்.

அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இவள் மாடியில் இருப்பதால்   அம்மாவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் கதவை திறக்க, அங்கு நந்தன் நின்றுக் கொண்டிருந்தான்.

"இப்போ தானேடா கொண்டு வந்து விட்ட, அதுக்குள்ள வந்துட்ட நிம்மதியா  ஒரு அஞ்சு நிமிஷம் படுக்க முடியுதான்னு நினைக்கிறியா..?" நிலாவின் முகத்தை வைத்தே அவள் நினைத்ததை இவன் செல்லிவிட..

“ஹா அப்படிலாம் இல்ல.” என சமாளித்தாள்.

“வாக்கு கொடுத்தா மாறக் கூடாது.”

“நான் என்ன மாறுனேன்” அவளுக்கே தெரியவில்லை.

“நைட் ஊட்டி விடறேன்னு சொன்னில..”

“ஆமா.. ஆனா இப்போதானே சாப்புட்டு வந்தோம்.”

“பரவாயில்ல நான் சாப்புடுவேன், நீ போய் செஞ்சி எடுத்துட்டு வா..”என்றவன் அவள் அனுமதியை கேக்காமலே அவளது படுக்கையில் படுத்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.

மாடி இறங்கிப் போனவள் என்ன உணவு இருக்கிறது என பார்க்க, அந்தோ பரிதாபம் சட்டி அனைத்தும் கழுவி கமுத்தி  இருந்தது. இட்லி மாவு எப்போதும் பிரிட்ஜில் இருக்கும் அதை திறந்து பார்த்தவள்.

“பொண்ணு வெளியே போனாளே சாப்புட்டாளா இல்லையான்னு கூட நினைக்காம எல்லாத்தையும் கழுவி கமுத்தி வெச்சிருக்கு இந்தம்மா. அவன் சொல்லிருப்பான் அவ வந்தா சோறு போடாதன்னு அதான் மகன் பேச்சை தட்டாம கேட்டு அப்படியே பண்ணி வெச்சிருக்கு. ச்சை இவன் ஒருத்தன் சோறு ஊட்டு சுரைக்காய ஊட்டுன்னு வந்து நிக்கிறான். இப்போ தானே தின்னான் இரண்டு தோசை போதும்." என அளவாக தோசையை ஊற்றி எடுத்துக் கொண்டவள். தொட்டுக்க   தக்காளி தொக்கை எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்.

அவள் வந்ததையும் ராஜி பார்க்க தான் செய்தார். தோசை சுடும் போது அவள் திட்டிக் கொண்டே சுட்டதையும் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு நந்தன் வந்திருக்கிறான் என புரிய.. தாயாக என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை.

வளவனும் ஷாலினியும் கூட தான் வருடக்கணக்கில் காதலிக்கிறார்கள். இதுநாள் வரைக்கும் இப்படி எதையுமே செய்ததில்லை. நந்தன் செய்யும் அனைத்தும் வயிற்றில் புளியைக் கரைத்தது சாதாரணமாக வந்தப் போதே அக்கம் பக்கத்தினர் தப்பாக பேசினார்கள். இரவில் யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறான் இதெல்லாம் எங்கு போய் முடியுமோ என கவலையாக இருந்தது.

தோசையுடன் மேலே வந்தவள் நந்தன்  படுக்கையில் படுத்திருக்கவும் பல்லை நறநறவென்று கடித்தாள்.

அந்த சத்தத்தில் அலைபேசியை நகர்த்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான் 

“என்ன லுக்கு வந்து ஊட்டு.”

“வெளியே போயிடுவோமா?"

“ஏன் இங்க ஊட்டுனா உள்ள இறங்காதா?“ காவல்காரன் குதர்க்கம் பேசினான்.

“வெளியே நிலாவைப் பார்த்துட்டே..”

“எந்த நிலாவை.”

“ஹான் இல்ல நட்சத்திரத்தை” என்று மாற்ற அவளின் தடுமாற்றதில் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டவன்.

“வா” என அவளது தோளில் கைப் போட்டுக் கொண்டு செல்ல நிலா நெளிந்தாள்.

“இப்படி உக்காரு” என்றவன் அவள் அருகில் அமர்ந்து.

“ம்ம் ஊட்டு என்ன செஞ்ச?”

“தோசை”

“ம்ம் தொட்டுக்க”

“தக்காளி தொக்கு.”

“நீ செஞ்சியா?”

“இல்லை கடையில வாங்குனது.”

“நான் உன்னைய செஞ்சி எடுத்துட்டு வர சொன்னேன்.”

நிலா பேந்த பேந்த முழித்தாள்.

“நாளைக்கு நீயே சமைச்சி எடுத்துட்டு வர.”

“நாளைக்கு வேறையா?“

“நாளைக்கும் வருவானான்னு நினைக்கிறியா?”

“ம்ம் ஹும்ஹும்”

“ம்மா ஹும்ஹும்மா”

“இல்லை.”

“தெனமும் வருவேன் எனக்காக சமைச்சி வைச்சி வெயிட் பண்ற” என்றவன் அவள் கை அந்தரத்தில் நிற்க அதை பிடித்து தன் வாயில் வைத்துக்கொண்டான்.

அவளுக்கு புரிந்து போனது. கல்யாணத்திற்கு முன்பு பொண்டாட்டியாக நடந்துக் கொள்ள ட்ரைனிங் கொடுக்கிறான் என்று.

நந்தன் கேக்காமலே அடுத்த அடுத்த வில்லையை நிலாவே எடுத்து ஊட்டினாள்.

சாப்பிட்டு முடித்ததும். நிலாவைக் கைக் கூட கழுவ விடாமல் அவளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டான்.

“ஏங்க”

“சொல்லுங்க”

“கை கழுவனுங்க” அவன் படுத்திருந்ததில் நெளிந்துக் கொண்டேக் கூற.

“வேணும்னா கொடு நானே கழுவி விடறேன்.” என அவன் நாவை சுழற்ற எப்படி செய்வான் என தெரிந்ததால் வாயை கைக் கொண்டு மூடிக் கொண்டாள்.

“இன்னொரு கை சும்மா தானே இருக்கு இப்படி பண்ணு.” என கையைப் பிடித்து தலையில் வைத்து  கோத சொல்ல.

அவன் சொன்னதை செய்யும் கிளிப் பிள்ளையாக செய்தாள் நிலா. இது நந்தனின் கிளி அவன் சொல்வதை தான் செய்ய வேண்டும்.

இரவு இரண்டு மணி வரைக்கும் அவளை விடவே இல்லை. தூக்கம் வேறு கண்ணை சுழற்ற சுவரில் தலை சாய்த்துக் கொண்டாள்.

விடியும் போது அவளது படுக்கையில் போர்வை கழுத்து வரைப் போர்த்தியவாறு உறங்கிக் கொண்டிருந்தவள் கண் விழித்துப் பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டாள்.

“எப்ப இங்க வந்தேன்.. கை” என அதை எடுத்துப் பார்க்க கையும் கழுவியிருந்தது.

போர்வையையும் அறையையும் கண்களால் சுற்றி சுற்றிப் பார்த்தவள்.. குழப்பத்துடன் காலைக்கடனை முடிக்கப் போனாள்.

நந்தன் தான் படுக்க வைத்திருப்பான். அது தெரியும். கழுத்து வரை போர்வை, கையை கழுவி விடும் ரகமெல்லாம் நந்தன் இல்லை.

அவனா வந்தான், சாப்பிட்டான் மடியில் படுத்து உறங்கினான். அவனை மடி தாங்கியது மட்டும் தான் நிலாவிற்கு நினைவில் இருக்கிறது. இனி தினம் தினம் இது நடக்குமோ என தோன்ற குளித்துவிட்டு கீழே வந்தாள்.

வீட்டின் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு டிவிப் பார்த்துக் கொண்டிருந்தான் யுகி.

“இது என்னோட வீடுங்கறதே மறந்துடும் போல..” என முனவிக் கொண்டே சமையலறைக்குச் சென்று காபிப் போட்டாள்.

ராஜி ஒருப் பக்கம் சமையல் செய்துக் கொண்டிருந்தார். அவரிடம் காபி என்று கேக்கவில்லை இவளே சென்று போட்டுக் கொண்டாள்.

காபியை எடுத்துக் கொண்டு சோபாவின் அருகில் வந்தவள், என்ன நினைத்தாளோ யுகியின் அருகில் அமர்ந்து காபியை சத்தமாக உறிஞ்சிக் குடித்தாள்.

அவளிடம் பேச வேண்டும் என ஆசையாக யுகி அவள் முகம் பார்க்க தொலைக்காட்சியைப் பார்த்துக்  கொண்டே அவன் பார்ப்பதைப் பார்த்தாள்.

“அவன் பேசுனாலும் நீ பேசாத நிலா உனக்கு சூடு சுரணை இருக்குல்ல.." என முறுக்கிக் கொண்டிருக்க.

“பூனை“ என யுகி பேச வரும்போதே,  “ச்சை சொந்த வீட்டுல நிம்மதியா ஒரு டீக் குடிக்க முடியல.” என டம்ளாரை மட்டென்று டீப்பாயின் மீது வைத்தாள்.

அவளின் நிம்மதி தானே யுகிக்கு முக்கியம் அதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தள்ளி நின்றுக் கொண்டான்.

“டேய் போலாமா.? உனக்கு அறிவில்ல.. யார் என்ன பேசுனாலும் வேடிக்கைப் பார்த்துட்டு நிப்பியா? அவங்க பண்ணதுக்கு முன்னாடி நீ பேசுனதுலாம் ஒரு பெரிய விஷயமே இல்ல புரியுதா?” என வளவன் கோவமாக கேக்க நிலா இருவரையும் மாறி மாறி முறைத்தவள்.

“எதா இருந்தாலும் மூஞ்சுக்கு நேரா பேசு..”

“அதை தான் பண்றேன், எங்களை விட இப்போ வந்த அவன் உனக்கு முக்கியமா போய்ட்டான். காலையில போய்ட்டு நைட் வரைக்கும் அவன் கூட ஊரைச் சுத்திட்டு வர.. வீட்டுல நானும் அம்மாவும் குத்துக்கல்லாட்டம்  இருக்கோம்ல சொல்லிட்டு போகணும்னு தெரியாதா..? அவன் கூட ஊரைச் சுத்திட்டு வந்தது பத்தாம, நைட் முழுக்க இங்க தான் இருந்துட்டு போயிருக்கான் காலையில என் முன்னாடியே படி இறங்கி வரான் இதென்னா வீடா வேற எதுமா..?”

“அண்ணா வாய்க்கு வந்ததை பேசாத.. அப்புறம் நான் பேசுனா நீ தாங்க மாட்ட..”

“நீ பேசற அளவுக்கு நான் என்னைக்குமே நடந்துக்க மாட்டேன்.”

“எனக்கு தெரியாதுன்னு நினைக்காத. தங்கச்சியா நான் சொல்லக் கூடாதுன்னு பார்க்கறேன்.” என்றவள். “அப்படி தான் அவர் வருவாரு உனக்கு பிடிக்கலையா என்னைய வீட்டை விட்டு அனுப்பிடு.” என நிலா நந்தனை விட்டுக் கொடுக்காமல் பேச கை தட்டும் சத்தம் கேட்டது. அனைவரும் ஓசை வந்த பக்கம் பார்க்க நந்தன்  தான் நின்றிருந்தான். அவன் கையில் கல்யாணப் பத்திரிக்கை இருந்தது.

“வியா”

“ம்ம்”

“இப்பதான் பிரஷ்காரர் இன்விடேசன் கொடுத்து விட்டார்.”

“ம்ம்”

“உனக்கு எவ்வளவு வேணும்?”

“அம்மாகிட்ட கேளுங்க.”

“அதை அப்பா பார்த்துப்பார் உனக்கு எவ்வளவு வேணும்?” இந்தமுறை வார்த்தையில் அழுத்தம் கூடியிருக்க..

“பத்து போதும்” என அவசரமாக கூறினாள்.

“இங்க பாரு உனக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் முடிவாகிடுச்சில, அப்புறம் எதுக்கு நைட்டுக்கு வீட்டுக்குலா வர, கல்யாணம் முடியற வரைக்கும் இங்க வர வேலை வெச்சிக்காத.”

“ஹா.. அப்படி தான் வருவேன், என்ன பண்ணுவ?”

“அண்ணா..” என நிலா குறுக்கப் போய் விழ..

அவளை கை நீட்டி தடுத்தவன். “உங்கிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்ல இது என்னோட வீடு, இப்படி நடு ராத்திரி யாருக்கும் தெரியாம வீட்டுக்குள்ள வந்துட்டு விடிஞ்சும் விடியாமலும் ஓடறதைப் பார்த்தா நாலுப் பேர் எங்க குடும்பத்தை தான் தப்பா பேசுவாங்க.” என நிலாவிடம் ஆரம்பித்து நந்தனிடம் சொல்ல.

“நீ என்னமோ யோக்கியம் மாதிரி பேசற. ஷாலுக் கூட வீட்டுக்கு பின்னாடி ஒதுங்கும் போது எங்க குடும்பத்தை யாரும் தப்பா பேச மாட்டாங்களா..?” என நிலா சொல்ல தயங்கியதை சிறிதுக் கூட தயக்கமில்லாமல் சொல்லிவிட்டான்.

'தேவையா இது? நான் சொல்லும்போதே அடங்கி இருக்க வேண்டியது தானே..' என்பது போல் நிலா வளவனைப் பார்க்க,

“இது எப்போடா நடந்துச்சி?” என யுகியும் ராஜியும் பார்த்தனர்.

நேற்று இரவு தானே மகனைப் பற்றி ஆஹா ஓஹோ என பேசினார். இன்று மகனின் குட்டும் உடைந்து விட.. எல்லாம் ஒரு குட்டையில் ஊறுன மட்டைகள் தான் என்று தலையில் அடித்துக்கொண்டார்.

யாருக்கும் தெரியாது என நினைத்து செய்தக் காரியம், எப்படி இவனுக்கு தெரிந்தது? என்று முழித்தவன் அதை நியாயப் படுத்த முட்டுக் கொடுக்க ஆரம்பித்தான்.

“நாங்க பல வருசமா லவ் பண்றோம், நீ நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு லவ்ன்னு வந்து நின்னுட்டு, பண்ற காரியம்லா பார்த்தா லவ் மாதிரி தெரியல வேற எதுக்கோ அவகிட்ட அடிப் போடற மாதிரி இருக்கு.” என கோவத்தில் கண்டதையும் பேசினான் வளவன்.

நந்தனைப் பார்த்தாலே நிலாவின் வாழ்க்கையை நினைத்து கவலையும் பயமும் வந்து விடுகிறது. அந்த கோவத்தில் என்ன பேசுகிறோம் என்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை.

“இப்போ நான் வரது உனக்கு பிரச்சனையா?”

“ஆமா.”

“சரி நீ வாடி நம்ப வீட்டுக்குப் போலாம்.” என நிலாவின் கையைப் பிடித்து அவன் பக்கம் இழுத்து அவள் தோளில் கைப் போட்டுக் கொள்ள, நிலா நெளிந்தாள்.

“என்னடி வர மாட்டியா?”

“கல்யாணத்துக்கு அப்பறம்...”

“அவன் தான் இது அவன் கட்டுன வீடுன்னு சொல்றான். உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லை. இன்னும் நீ இங்க இருக்கணுமா.?” என நிலாவிடம் சொல்லி குட்டையை குழப்பி விட்டான். குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்.

அவளும் வளவன் சொல்லும் போது கவனித்தாள் தான். சொன்னாலும் சொல்லாட்டியும் இந்த வீட்டை வளவனின் மொத்த சம்பளத்திலும் கட்டியது தானே. அதை அவன் சொல்லிக் காட்டும் போது சுருக்கென்று வலித்தது. அதற்காக நந்தன் கூப்பிடுகிறான் என திருமணத்திற்கு முன்பு செல்வதும் முறையாகாது என குழம்பி நிற்க.

“தம்பி அவன் ஏதோ கோவத்துல சொன்னதை நீங்க ஏன் பெருசாக்குறீங்க. இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம் அதுக்குள்ள அவளை அங்க கூப்பிடறது முறையாகாதுல." என ராஜி சொல்ல. 

“பொண்ணு சாப்புட்டாளான்னு கேக்கறதில்லை, அவ வீட்டுல இருக்காளா? இல்லையானு கூட  கண்டுக்கறதில்ல, இதுல அவ எங்க இருந்தா என்ன? எல்லாமே முறைப் பார்த்தா பண்றீங்க. முறைப் பார்த்துருந்தா உங்க வீட்டுல சம்மந்தமே பண்ணக் கூடாது.“ என முகத்தில் அடித்ததுப் போல் பேசியவன்.

“இதுல நூறு கார்டு இருக்கு யாருக்கு கொடுக்கணுமோ கொடு.” என கவரை நீட்டியவன் மற்றொரு கவரையும் நீட்ட,

“என்ன?” என்பது போல் பார்த்தாள் நிலா.

“சாப்பாடு” என்றவன், "நான் உன்னைய எப்போவோ பொண்டாட்டியா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். இனி நீ சாப்பிடறதுல இருந்து எந்த செலவு பண்றதா இருந்தாலும் அது என்  பணத்துல பண்ணுனா தான் எனக்கு மரியாதை. என் மரியாதைக்கு எந்த பங்கமும் வராம பார்த்துப்பன்னு நம்பறேன்.” என அவள் கையில் சாப்பாடு பார்சலுடன் கிரீடிட் கார்டு இரண்டுயும் கொடுத்தான்.

வேண்டாம் என்று சொன்னாலும் விட போவதில்லை. தன்னை தூக்கி எறிந்து பேசும் இவர்களுக்கு நந்தன் எவ்வளவோ மேல் என நினைக்க வைத்துவிட்டான் வளவன். அதனால் அவன் கொடுத்ததை தயக்கமில்லாமல் வாங்கிக் கொள்ள,

“நைட் பத்து மணிக்கு.” என ஆரம்பித்தவன் வளவனைப் பார்த்துக்கொண்டே, “இல்லை ஒன்பது மணிக்கே வரேன் சாப்பாடு செஞ்சி வை.” என புருஷன் பொண்டாட்டியிடம் சொல்வது போல் சொல்லிவிட்டு சென்றான்.

அவன் போனதும் நிலா அங்கு நிற்கவே இல்லை. அங்கிருந்து  அறைக்குச் சென்றவள். கையில் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.



Leave a comment


Comments


Related Post