இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 28-06-2024

Total Views: 1198

அத்தியாயம் 29

"என்ன வார்த்தை சொல்லுற அஞ்சனா. நான் எப்படி உன்னை போயி அந்த மாதிரி நினைப்பேன். இப்படிலாம் பேச வேண்டாம். எனக்கு ரொம்ப வலிக்குது" என்றபடி கையெடுத்தவனின் வதனத்தில் படர்ந்த வேதனையைக் கண்டவள் மீண்டும் மௌனமாகிவிட்டாள். 

"அஞ்சனா! உன்னை முதன் முதல்ல எப்போ பார்த்தேன் தெரியுமா?" சுவாரஸ்யமாக ஆரம்பிக்கச் சென்றவனை

 "நான் உன்கூட இருக்குறதா சொல்லிட்டேன் அந்தகா. நீ வேற எந்த கதையும் சொல்ல வேண்டாம்" தடுத்து நிறுத்தினாள் அஞ்சனா.

 "இது கதையில்ல அஞ்சனா"

"உண்மையா இருந்தாலும் கூட  தேவையில்லாதது எமா. இப்போ இந்த நிமிஷம் நீ, நான் இவ்வளவுதான்"

"குழந்தையை விட்டுட்ட"

 "நீதான் அஞ்சனா அப்படின்னாலே குழந்தையும் சேர்த்துன்னு சொன்ன. மறந்துட்டயா"

 "இவ்வளவு சகஜமா பேசுறயே கொஞ்சங் கூட என் மேல வெறுப்போ கோபமோ வரலையா?"

"இதுக்கு நான் பதில் சொன்னா நீ ரொம்ப வருத்தப்படுவ அந்தகா. வேற ஏதாவது பேசு"

 "அப்போ மனசுக்குள்ள பெரிய திட்டம் போட்டு வச்சுருக்க அப்படியா அஞ்சனா"

 "நான்தான் வேற ஏதாவது பேசு ன்னு சொல்லிட்டேனே"

 "சரி. வெளிய கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாமா?"

"வா போகலாம். எனக்கும் உள்ளயே இருக்குறது என்னமோ மாதிரி இருக்கு"

"நடக்க முடியுமா அஞ்சனா.. கஷ்டமா ஒன்னும் இல்லையே" என்றவனின் கரங்களை இறுக்கமாகப் அவள் பிடித்துக்கொள்ள அவனது இதயமோ தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

 "இல்லை, அது பிரச்சனை இல்லை போகலாம்" என அவள் சொல்ல அவனோ சிலைபோல் நின்றிருந்தான் பிரச்சனை எல்லாம் அவனுக்குத்தான் என்பது போல.

"அந்தகா! நல்லாத்தானே இருக்க.. கிளம்பலாமா? " அவன் நடக்காமல் அப்படியே இருக்கவும் அவளே கேட்க, ம்ம் தலையாட்டியவனோடு அவளும் இணைந்து நடந்தாள். அவளது ஸ்பரிசம் அவனுக்குள் பலதை கிளப்பிக் கொண்டிருக்க அவளோ அதைப் பற்றின எண்ணமே இல்லாதவாறு அவனோடு கதை பேசிக் கொண்டபடியே நடந்தாள்.

"திடீர்னு யானை சிங்கம் புலி இப்படி ஏதாவது வந்தா என்ன பண்ணுவ அந்தகா"

 "அப்படியே ஓடிட வேண்டியதுதான்"

"நீ ஓடிடுவ. நான் எப்படி ஓடுவேன். எனக்கு நடந்தாலே மூச்சு வாங்கும். புரிஞ்சு போச்சு என்னை அப்படியே விட்டுட்டு நீ மட்டும் ஓடிப் போயி உசுரைக் காப்பாத்திக்குவ. நல்ல எண்ணம் தான்"

 "உனக்கு ஒன்னும் ஆகாது "

"நானென்ன வரம் வாங்கி வந்தவளா எதுவுமே ஆகமா இருக்குறதுக்கு. ஆயுட்காலம் முடிஞ்சா நானும் போய்ச் சேர வேண்டியதுதான்"

அவளது முகத்தினைப் பார்த்தவன் அழுத்தமாக "உனக்கு ஒன்னும் ஆகாது. உன்னை மரணம் எப்பவும் நெருங்காது" என்று சொல்லிவிட, அதன் அர்த்தம் விளங்காதவள் அவனையே குறுகுறுவென்று பார்த்தாள்.

"சும்மா சும்மா என்னை இப்படியே பார்த்தா எப்படி? என்னால பேசக் கூட முடியல" அவனது நிலையினை அவன் எடுத்துச் சொல்ல அவள் மென்னகையுடன் பேசாமலே அவனுடன் சென்றாள். மௌனமாக சென்றாலும் அவள் அவனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வந்தாள். அவனது கண்கள் அவனது எதிரி என்று அவளுக்குப் புரிந்தது. அவனது மனநிலையை அப்பட்டமாக அது படம் பிடித்துக் காட்டியதில் அவள் கைகளின் அழுத்தம் கூடியது.

உடனே, அவனும் என்ன என்பதைப் போல் பார்க்க ஒன்னுமில்லை என்று தலையாட்டி அவனது தோள் மேல் சாய்ந்துக் கொண்டாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

 "என்னடி செய்யுது? இப்படி மூச்சு வாங்குற"

 "நடந்தோம்ல அதான்"

 "அப்போ வா இங்க கொஞ்ச நேரம் உக்காரலாம்" என்று ஒரு பெரிய மரத்தின் அடியில் இருந்த பாறையினை காட்ட அவளும் சென்று அவன் கைபிடித்தே தன்னை சமன்படுத்தி அமர்ந்துக் கொண்டாள். அவளுக்கு கீழே அமர்ந்தவன் அவளது பாதங்களை தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டான். இது அவளது கரத்தின் அழுத்தம் கொடுத்த துணிச்சல்.

 "இல்லை அந்தகா. ஒன்னும் வலியில்லை.. காலை விடு"

 "பரவாயில்லை நான் பிடிச்சு விடுறேன்" அவன் இதமாய் பிடித்துவிட மறுக்காமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏதாவது தோணுதா அஞ்சனா" என அவன் ஆர்வமாய் அவள் முகம் பார்க்க, "உன் கை ரொம்ப கடினமா இருக்கு. நிறைய பேரோட உயிரை வாங்கியிருப்பேன்னு நினைக்கிறேன்" என சொன்னதும் அவன் சலிப்பாய் பார்த்துவிட்டு "ஆனால் உன் உயிரை வாங்குறது நீதாண்டி" என்றான் இயலாமையுடன்.

 "அடிக்கடி முகத்துல சோர்வை பார்க்கிறேன். ஏன் இப்படி இருக்க? நான்தான் உன் கூடவே இருக்கேன்னு சொல்லிட்டேனே.‌ ஏன் உனக்கு அதுல சந்தோஷம் இல்லையா?"

 "அஞ்சனா! நீ கூட இருக்குறது சந்தோஷம்தான். கூடவே இருக்கேன்னு சொன்னதும் சந்தோஷம் தான்"

 "அப்பறம் என்ன? "

 "இந்த இடத்துல என் கூட வாழ்ந்த என்னோட அஞ்சனாவையே மனசும் உடம்பும் தேடுது. அந்த அஞ்சனா நீதான். ஆனாலும் நீயில்லை"

 "பையித்தியம் பிடிச்சு உளறிட்டு இருக்கடா நீ"

 "உண்மைதான்.. நான் பையித்தியம்தான் ஆனது உன்னால அஞ்சனா. இந்த இயமன் உன்னை கண்டால் மட்டும்தான் இப்படிலாம் மாறிடுறான். அது உனக்கே நல்லாத் தெரியும்"

 "எனக்குத் தெரிஞ்சது இப்போதைக்கு ஒன்னுதான்.. எமா"

"என்ன? என்ன?" அதீத ஆர்வத்தோடு அவன் கேட்டுவைக்க "பேச்சுவாக்குல நீ என் காலை பிடிச்சு விடுறதை மறந்துட்ட" எனச் சொல்லவும் சப்பென்று போய்விட்ட முகத்தோடு  ஞாபகங்களை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு அவள் கால்களை பிடித்துவிட்டான். அதைப் பார்த்து அவள் சிரிக்க இவன் ரசனையாய் அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

சற்று நேரத்தில், "நான் உன் வயித்துல கை வச்சுப் பார்க்கலாமா?" தயங்கி கேட்ட அந்தகனின் கையை எடுக்கு வயிற்றில் வைத்தவள் "இதெல்லாம் கேக்க வேண்டாம் அந்தகா" எனச் சொன்னாள். 

பெரிதாய் இருந்த அந்த வயிற்றினை அவன் தடவிப் பார்த்தான். மிருதுவாய் அவன் தடவ தடவ அவளுக்கு சுகமாய் இருந்தது. அந்த இதத்தில் அவள் கண்களை மூடிக் கொள்ள இவனோ வயிற்றின் மீது மென்மையாய் கன்னம் பதித்தான். அவனுக்குள் ஏனென்று விளங்காத பரவசம். இதையெல்லாம் அனுபவிப்பதே தனது பிறவியின் பயன் என்பதை புரிந்து கொண்டான். அவன் ஸ்பரிசம் பட்டதும் குழந்தை அசைய ஆரம்பித்தது. அசைவினை அவன் கன்னமும் கைவிரலும் உணர்ந்தது.

 "குழந்தை அசையுது அஞ்சனா" அவன் குரல் ஆரவாரத்துடன் வெளிவந்தது.

 "ஆமா.."

 "ரொம்ப சந்தோஷமா இருக்கு.." நச்சென்று குழந்தைக்கு இதழ்பதித்தவாறு அவன் சொல்ல அவள் "எனக்கும்" என்றாள்.
அவனது கரங்கள் வயிற்றோடு பிணைந்தபடியே இருக்க, சட்டென்று அவன் முகம் மாறியது.. இவ்வளவு நேரமும் இயல்பாய் இருந்தவன் இப்போது இப்படி ஆனதைக் கவனித்த அஞ்சனா, "அந்தகா! உன் மனசுக்கே இதை எல்லாம் ஏத்துக்க முடியல போல. அதுதான் நீ என்ன செய்யுறதுன்னு தெரியாமல் முழிச்சுட்டு இருக்க. உனக்கிப்போ இரண்டு வழி இருக்கு. ஒன்னு என்னை திருகிட்ட விடுறது. இன்னொன்னு எதைப் பத்தியும் யோசிக்காமல் என்கூட இருக்குறது. முன்னதுல வலி இருந்தாலும் உன் மனசு உன்னை குற்றம் சொல்லாது. பின்னது இரண்டுமே சேர்ந்தது. என்ன பண்ணலாம்னு நீதான் முடிவு பண்ணனும்" எனச் சொல்லி அவன் முகம் பார்க்க, "எனக்கு நீ வேண்டும் அஞ்சனா" முடிவெடுத்திருந்தான் அந்தகன்.


 "அப்போ முகத்தை அப்படி வச்சுக்காத. நியாயமா நான்தான் அப்படி வச்சுட்டு திரியணும். இங்க எல்லாமே தலைகீழா இருக்கு என்ன பண்ணுறது எல்லாம் விதி.." அவள் சொல்லிவிட்டு "கொஞ்சம் எழுந்து இந்தப்பக்கம் வா அந்தகன்" என்றாள். 

மறுப்பேதும் சொல்லாது எழுந்து அவளை நெருங்க அவனது கைப்பிடித்து அவனை நோக்கி இழுத்தவள் நெற்றியில் முத்தமிட்டாள். இதுவரை அவளிடத்தில் இருந்து முத்தங்கள்  கணக்கற்று வாங்கியிருக்கின்றான் தான். ஆனாலும் இம்முத்தம் அவனை அமைதிப்படுத்தியது. அது அவனது முகத்தில் தெரிந்தது. அவனது நெற்றி தொடர்ந்து அவளது இதழ்கள் அவன் கன்னம் வந்து தஞ்சமடைய அவன் மூச்சினை இழுத்துப் பிடித்துக் கொண்டான். 'சோதிக்கிறாளே இந்த நேரத்துல போய்' இப்படித்தான் அவனால் நினைக்க முடிந்தது. திரு என்பவனை மறந்து வயிற்றில் இருக்கும் குழந்தையினை மறந்து இருவரும் முத்தத்தில் திளைத்திருக்க அதைத் தடுத்து நிறுத்த குழந்தை எண்ணியது போல, ஓங்கி அன்னையினை எட்டி மிதிக்க அவளது கண்களில் கண்ணீர் வழிந்து அவன் கன்னம் நனைத்தது. 

 "என்னாச்சு அஞ்சனா.." என்றிட அவளோ வயிற்றினை இருகையால் பிடித்துக் கொண்டு "வலிக்குது" என்றாள். 

குழந்தை பிறந்துவிடும் என்று அவள் சொன்னாளே.‌ நான்தான் இந்திரனுக்குப் பயந்து அவளை என்கூடவே வச்சுக்கணும்னு நினைச்சு இங்க கூட்டிட்டு வந்தேன். இப்போ தனியா இங்க எப்படி.. என்று அவன் பரிதவித்துப் போனாலும் அவளிடம், "கொஞ்சம் பொறுத்துக்கோ அஞ்சனா.." என்று தைரியம் சொல்ல ஆரம்பித்தான்.‌

 "ரொம்ப வலிக்குது. எனக்கு முடியல. ஏதாவது பண்ணேன்"

அவனது கைவிரல்கள் மொத்தமும் அவளது வயிற்றில் பதிந்தது. மெதுவாக அவள் வயிற்றினைத் தடவி.. "சீக்கிரம் குழந்தை பொறந்துடும் அஞ்சும்மா.. நீ அழாத.. என்னால தாங்க முடியல" அவனும் அழுதுக் கொண்டுதான் இருந்தான். அவளை விட அவன் தவித்துப் பேனான். அவளை விட அதிகம் அவனே களைத்துப் பேனான். அவனே அழுதும் கரைந்தான். அவளது வலியை விட அவன் வலியைத்தான் அவள் அதிகம் அனுபவித்தாள்.

 "எமா நீ எதுக்கு இப்போ இப்படிக் கத்துற?" தன் வலியை பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டே அவனைப் பார்த்து அவள் சப்தமிட, "வலிக்குது அஞ்சனா" என்றான் அவன் கலங்கிய விழிகளோடு..


 "வலிக்கத்தான் செய்யும். அதுக்குன்னு நீ இப்படி அழுதுட்டு இருந்தால் ஆச்சா.. அமைதியாய் இரு.." அதட்டல் போடவும் அவன் கண்ணீரை துடைத்துக் கொண்டு "எம்பெருமானே உன்னைத்தான் நம்பியிருக்கேன். எங்க இரண்டு பேரையும் பிரிச்சு சித்ரவதை செஞ்சது வரைக்குமே போதும். குழந்தையை நல்லபடியா பொறக்க வை. அவ அழறதை என்னால பார்க்க முடியல" என வேண்டிக் கொண்டிருக்க அவள் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். அவளது கரங்களுடன் தனது கரத்தினைக் கொடுத்தவன் அவள் நெறித்தாலும் தாங்கிக் கொண்டு குழந்தை வெளிவரும் தருணத்திற்காக காத்திருந்தான். அந்த கானகத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு குழந்தையும் வெளிவர குழந்தையை ஏந்திக் கொண்டான் அவன். அவன் முகத்தில் அப்படியொரு பூரிப்பு. 

"ஆண் குழந்தை.. அஞ்சனா" என்று சொல்லி கையில் வைத்திருந்தவனைப் பார்த்தபடியே சோர்வாய் விழி மூடிக் கொண்டாள் அஞ்சனா. குழந்தையின் அழுகை அமுதகாணமாய் அவன் காதில் விழுந்தது. அதையே இரசித்தவன் குழந்தையின் முகத்தினைப் பார்த்துவிட்டு வேகமாய் அஞ்சனாவினைப் பார்க்க அவளோ சோர்ந்த விழிகளை திறந்து "அது நம்ம குழந்தை அந்தகா!" என்றாள்.

இதுவரை இருந்த அத்தனை தடையும் குற்ற உணர்ச்சியும் நொடியில் உடைபட அவன் பெருமகிழ்ச்சியின் உச்சத்தோடு உதிரம் படிந்திருந்த அவன் குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்தான் உரிமையாய். 

காதலாசை யாரை விட்டது..!


Leave a comment


Comments


Related Post