இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -68 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 28-06-2024

Total Views: 2267

யுகி வளவன் ராஜி மூவருமே படி அதிர நடந்து வருபவளை தான் பார்த்தனர். 

“இந்தா பணம், இது என்னோட பணம் இனி உன் வீட்டுல இருக்குற வரைக்கும் பணம் கொடுத்துடறேன். எப்போடா சனியன் ஒழியும்ங்கற அளவுக்கு நான் உங்களுக்கு வேண்டாதவளா போய்ட்டேன்ல.” 

“என்னடி பெரியதன வேலையில பார்க்கற.. தங்கறதுக்கு பணம் கொடுக்கறவ. பத்து மாசம் இந்த வயித்துல இருந்தியே அதுக்கு எவ்வளவு கொடுப்பா? இந்த கையில சோறு வாங்கி தின்னியே அதுக்கு எவ்வளவு கொடுப்பா.? இவ்வளவு பெருசா வளர்ந்து நிற்கறியே தங்கச்சிக்கு அது புடிக்கும் இது புடிக்கும்னு படிக்கறப்பல இருந்து வேலைக்குப் போய் உனக்கு வாங்கிக் கொடுத்தானே, அதுக்கு எவ்வளவு கொடுப்பா? இப்போ அவன் வந்து பணம் குடுத்ததும் எங்களையே என்ன செய்தின்னு கேக்கற.? இதுதான் வளர்த்துன கெட மார்ல பாஞ்சக் கதைன்னு சொல்லுவாங்க. காசு கொடுக்கணும்ன்னு முடிவு எடுத்துட்டா உன் வாழ்க்கை முழுக்க அவனுக்கு காசுக் கொடுத்தாலும் அடைக்க முடியாதுடி வந்துட்டா காசைத் தூக்கிட்டு.” என்ற ராஜி. 

“இங்கப் பாரு நீ எப்படியோ கெட்டுப் போ. இனி ஏன் பண்ற எதுக்கு பண்றன்னு யாரும் கேக்க மாட்டோம். இன்னும் இரண்டு வாரம் முடிஞ்சுதுன்னா உன்னை தலை முழுகிடுவேன், வந்துட்டா பணத்தை தூக்கிட்டு” என நிலாவைப் பேசிவிட்டு உள்ளே செல்ல, வளவனுக்கு கண்கள் கலங்கி விட்டது. 

அவன் பேசியது தவறு என புரிகிறது அதற்காக நிலா இப்படி பேசுவாள் என நினைக்கவில்லை.  

யுகி அவன் தோளில் கையை வைத்து அழுத்தி ஆறுதல் சொல்லியன், “முத்திப் போய்டுச்சி விட்டுரு இனி யார் சொன்னாலும் கேக்க மாட்டா.” என சொல்ல முகத்தை இருக்கைகளாலும் அழுத துடைத்தவன் அவ்வளவு வலியிலும் புன்னகைத்துக் கொண்டான். 

அறைக்குப் போன நிலாவிற்கு அழுகை வந்தது. தன் வீடே அந்நியமாகி நிற்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 

வளவன் ஏன் இப்படி பேசுகிறான் என புரியாத அளவிற்கு சின்ன குழந்தையில்லை. அவளின் கவலையில் தான் அப்படி நடந்துக் கொள்கிறான் என புரிகிறது. 

இதற்கெல்லாம் காரணம் நந்தன் அவன் நினைத்ததை நடத்திக் கொள்ள யாரை வேண்டுமானாலும் காயப்படுத்துபவன் என்று சிறிய வயதில் இருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள். 

அவன் எவ்வளவு தவறு செய்தாலும் மற்றவர்களைப் போல நிலாவால் அவனை ஒதுக்கி வைக்க முடியவில்லை. அது எதனால் என்பது இன்று வரைக்கும் தெரியாது. 

நிலா பேசியது அனைத்தும் ஷாலினிக்கு ஒன்று விடாமல் போய்விட, அவள் வேறு வந்து ஆடிவிட்டு போயிருந்தாள். 

“இப்போ உங்கிட்ட பணம் இருக்குங்கறதுக்காக கொடுக்கறியே.. மாத்து துணிக் கூட இல்லாதப்ப என்னோட வளவன் இல்லைனா நீயலாம் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பியா..? உன் அப்பன் இருந்த லட்சணத்துக்கு எங்கயாவது பிச்சை தான் எடுத்துருப்பா?” என வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டுப் போனாள். 

அவள் பேசும் போது வீட்டில் நிலாவை தவிர யாருமில்லை. வளவன் வெளியே போயிருக்க, ராஜியோ கடைக்குப் போயிருந்தார். 

“இப்போ உனக்கு என்ன? எதுக்கு இங்க வந்து ஆட்டிட்டு இருக்க?” 

“ஏண்டி சொல்ல மாட்ட.. என் அண்ணன் பண்றது சரியோ தப்போ, அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டும் அடிச்சிக்கிட்டும். நீ எதுக்கு இடையில புகுந்து எல்லார் மனசையும் கஷ்டப்படுத்தற? யுகி சரியா சாப்புட்டு நாலு நாள் ஆச்சிடி. உனக்கு பெரியவன் மூனு நேரமும் நல்லா வக்கனையா வாங்கிக் கொடுத்துட்டுப் போறான்ல. திங்கறில அவங்களா தின்னாங்களா? இல்லைனான்னு யோசிச்சியா..?”

“யோசிக்கல போதுமா விடு.”

“எப்போல இருந்துடி இப்படி மாறுன..”

“எனக்கு சண்டைப் போடற மூடியில்ல ஷாலு, வந்தியா நாலு கத்து கத்துனியா போயிட்டே இரு.”

“நம்ப எப்படி இருந்தோம்னு மறந்துடுச்சா நிலா. எப்படிடி இவ்வளவு ஈஸியா எல்லோரையும் தூக்கிப் போட முடியுது.”

“முதல்ல இருந்து ஆரம்பிக்காத அதான் தூக்கிப் போட்டுட்டேன்ல போக வேண்டியது தானே, இங்க வந்து இம்சைப் பண்ணிட்டு.” என்றவள் தன் அறைக்குள் சென்று கதவை வேகமாக அறைந்து சாற்றினாள்

அது ஷாலினியின் முகத்தில் அடித்ததுப் போல் இருக்க, தோழியாக உடன் இருந்தவளின் நிராகரிப்பில் கண்கள் கலங்கி விட்டது.

நிலாவின் அறைக் கதவை எட்டி உதைத்தவள்.

“பேசிட்டு இருக்கும் போதே போய் கதவை சாத்துற இதுதான் மேனர்ஸா.. நீயா பேச வருவில அப்போ இருக்குடி.. நீ பண்ணதை உனக்கு நான் திருப்பி பண்ணல என் பேர் ஷாலினி இல்லடி” என்றவள் மேலும் இரண்டு எத்து எத்தி விட்டுப் போனாள்.

அனைவரையும் கஷ்டபடுத்தி தான் மட்டும் சந்தோசமாகவா இருக்கிறேன்  என எண்ணி அழுகையில் கரைந்தது தான் மிச்சம்.

நந்தனை தவிர அவர்களின் திருமணத்தை நினைத்தும் யாருக்குமே சந்தோசமில்லை.

இரவு ஆனால் நந்தன் வீட்டிற்கு வருவது வாடிக்கையானது.

“ஏண்டி என்னமோ மாதிரி இருக்க?”

“இல்ல நல்லா தான் இருக்கேன்.”

“சரி ஊட்டு” என அவன் தேவையை முடித்துக் கொள்வான். சாப்புட்டு முடித்ததும் அவள் மடியில் தலை வைத்துப் படுப்பவன், அப்படியே உறங்கி போய்விட.. பல இரவுகள் உறங்காமல் கண்டதையும் நினைத்து வருந்துவாள்.

இதோ கல்யாண நாளும் நெருங்கி விட்டது, இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில் நந்தன் வீடு கோலாகலமாக இருந்தது.

வளவன் வீட்டில் அப்படி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. நிலாவை  ராமனின் தங்கச்சி பையனுக்கு கொடுக்கவில்லை என அவர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று விட்டனர்.

அதை விட்டால் பெரிய சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை தெரிந்தவர்கள் பழகியவர்கள் எல்லாம் திருமணத்திற்கு முந்தைய இரவு தான் வருவார்கள் என்பதால் அன்று மதியம் வரைக்குமே வீடு வெறிசோடிக் கிடந்தது.

மார்த்தாண்டம் தன் வீட்டிற்கு செய்யும் அலங்காரம் அனைத்தும் வளவன் வீட்டிற்கும் செய்ய சொல்லியிருந்ததால் அதற்காகக் கூட அலைய வேண்டிய தேவை இருக்கவில்லை வளவனுக்கு.

மற்ற நாட்களில் எல்லாம் நிலாவுடன் இரவை கழித்த நந்தன். நான்கு நாட்களாகவே அவளைப் பார்க்கவே வரவில்லை. இரண்டு வாரங்களாக அவனை மடியில் தாங்கி பழக்கப்பட்டவளால் அவன் வரவில்லை என்றதும் மனம் சுணங்க தான் செய்தது.

ஆனால் அதை அவனிடம் கேக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க நந்தனுக்கு அழைக்கவேயில்லை. ஆனால் நேரம் ஆனால் வாசலைப் பார்ப்பதும் படியைப் பிடித்துக் கொண்டு அவனுக்காக காத்திருப்பதும் வழக்கம் ஆனது.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது என்ற நிலையில் கூட நந்தன் வரவேயில்லை நிலாவிற்குள் படபடப்பு யாரிடம் கேட்பது? என்னவென்று கேட்பது அவனுக்கு அழைப்பதா? வேண்டாமா? என ஏகப்பட்ட குழப்பம் மனம் அவளையும் அறியாமல் நந்தனின் அருகாமைக்கு ஏங்கியது. ஏங்க வைத்து விட்டான் நந்தன்.

அவன் வேண்டாம் என அழுத காலம் போய் அவன் அருகில் இல்லையே என்ற நிலையில் அழ வைத்து விட்டான்.

மாடியை விட்டு இறங்கி வந்தவள் வாசலில் தோரணம் கட்டிக் கொண்டிருக்க அங்கிருந்த மார்த்தியைப் பார்த்தாள்.

“இவர்கிட்ட கேக்கலாமா.? கேட்டா சொல்லுவாரா..?” என யோசனையில் நிற்க,

பக்கத்து வீட்டுக் கிழவி ஒன்று.

“ஏன்டா மார்த்தி எங்க துரையைக் நாலுநாளா காணல, நாலு நாளைக்கு முன்னாடி பார்த்தது.”

“வேலை விஷயமா பெங்களூரு போயிருக்கான் பெரிம்மா, நாளைக்கு நைட் வந்துடுவான்.”

“நாளைக்கு நைட் தானே வரவேற்பு.”

“ஆமா..”

“பொறவு நைட்டு வந்து..”

“என்ன பண்ண சொல்ற.. அவன் வேலை அப்படி.?”

“ம்ம்.. வாழைமரத்தை இறுக்கி கட்டச் சொல்லி உடைஞ்சி உழுந்துடுச்சின்னா வூட்டுக்கு ஆகாது.” என சரிய இருந்த மரத்தைப் பார்த்து கிழவி சொல்ல.

“கட்ட சொல்றேன் டேய் இறுக்கி கட்டுங்கடா.. விழுந்துச்சி நல்லா வாங்கிக் கட்டிக்கிவீங்க பாரு.” என மிரட்டிக் கொண்டிருக்க நிலாவிற்கான தகவல் கிடைத்து விட்டதால் திரும்ப மாடிக்கே சென்று விட்டாள்.

ஷாலினிக்கு மெகந்திப் போட ஆட்கள் வந்திருந்தனர்.

“ஷாலினி”

“அம்மா”

“உனக்கு மெகந்தி போட்டதும் நிலாவுக்கும் போடச் சொல்லு.”

“நானுலா சொல்ல மாட்டேன்.”

“ஏன் ஷாலு இப்படி பண்ற?”

“அம்மா உனக்கு தெரியாது கம்முனு இரு, பெரியவன் அதெல்லாம் ஆள் அனுப்பிருப்பான்.” என்று வாய் மூடவில்லை. அங்கு ஆட்கள் வந்து நின்றனர்.

“மேடம்”

“யார் நீங்க?”

“பொண்ணுக்கு மெகந்தி போடணும்னு சொல்லி நந்தன் சார் அனுப்பி வெச்சார்.”

“மாப்பிள்ளை வூட்டுக்கு வந்துட்டு பொண்ணைக் கேட்டா நாங்க என்ன மடியிலா கட்டி வெச்சிருக்கோம், பொண்ணு வீடு பின்னாடி இருக்கு அங்கப் போங்க.”

“ஷாலு வாயை மூடு, இவங்களை நிலா வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டு வந்து மெகந்தி போட்டுக்கோ.”

“முடியாது வேணும்னா நீங்க போங்க. அன்னிக்கு அவ பேசுனதுக்கு அவ மூஞ்சுலையே முழிக்க மாட்டேன்.” என்றவள். “நீங்க வாங்க நம்ப ரூமுக்கு போய் போடலாம்.” என அவளுக்கு மெகந்தி போட வந்தவர்களை அழைத்துக் கொண்டு அறைக்குப் போய்விட்டாள்.

மணிமேகலையே அழைத்துக் கொண்டு போய் விட்டார்

“பொண்ணு மேல இருக்கு போய் போடுங்க.” என்றவர் ராஜியிடம் பேச ஆரம்பித்து விட்டார்.

“அண்ணி”

“சொல்லு ராஜி”

“கல்யாண ஏற்பாடுலாம் பண்ண சொல்லிட்டு தம்பி நாலு நாளா வீட்டுக்கே வரல. கொஞ்சம் பயமா தான் இருக்கு.”

“அட லூசு.. அவன் தான் இந்த பொண்ணுங்களை அனுப்பி வெச்சிருக்கான்.. பொறவு வராம எங்கப் போகப்போறான். நீ கவனிச்சியா முன்னலா நிலாவை அடிச்சிட்டே இருப்பான் இப்போல்லாம் அவ கூட பாசமா இருக்கான். நம்பள விட நிலாவை அவன் நல்லா பார்த்துப்பான் உனக்கு நம்பிக்கை இருக்கா? இல்லையா?”

“இல்லாம என்ன அண்ணி எப்போமே வராத தம்பி அம்முக்காக இந்த வீட்டுக்கு வந்தப்பையே எனக்கு தெரியும். பிள்ளையை நல்லாப் பார்த்துக்கும்ன்னு. "

“பிடிக்காம அவன் எதையும் செய்ய மாட்டான். நிலாவ புடிச்சிப் போயி தானே இவ்வளவு தூரம் வந்துருக்கான்.”

“எல்லாம் நல்லபடியா நடந்தா போதும் அண்ணி.” என இருவரும் நந்தன் நிலாவின் எதிர்காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“மேடம் மெஹந்தி வைக்கணும். சார் உங்க கையில அவர் போட்டோவை வரைய சொல்லிருக்காங்க.”

“என்கிட்ட ஒரு போன் போட்டு பேசியிருந்தா என்ன?” என முகம் சுணங்கியவளுக்கு அவனின் கம்பீரமான குரலை ஒரு முறையாவது கேக்க வேண்டும் போல் இருந்தது.

‘அவன் தான் அழைக்கவில்லை நீயாவது கூப்பிட்டு பேச வேண்டியது தானே’ என மனசாட்சி கேள்வி கேட்டது. “கூப்பிடலாம் தான்” ஆனால் அவளாக இதுவரைக்கும் அவனுக்கு அழைத்ததேயில்லை. இப்போது அழைக்க தயக்கமாக இருக்க, “நாளைக்கு நைட் வந்துடுவார்ல அப்புறம் என்ன அப்போ பார்த்துக்கறேன்.” என மனசை தேற்றிக் கொண்டாள்.

“வள்ளு”

“சொல்லு ஷாலு”

“எங்க இருக்க?”

“இங்க மண்டபத்துக்கு வந்தோம் ஏன்?"

“நான் கையில மெகந்திப் போட்டுருக்கேன்.”

“அதுக்கு..”

“உன் பேரை எழுதியிருக்கேன் வந்து கண்டுபிடி.”

“நேரமில்லடி வீட்டுக்கு வரும்போது கண்டுபிடிக்கறேன் அதுவரைக்கும் போய் தூங்கு, அப்புறம் ரெண்டு நாளைக்கு சுத்தமா தூக்கம் இருக்காது.”

“ரெண்டு நாளைக்கு தானா.?”

“நேரம் காலம் தெரியாம கண்டதையும் பேசி தொலையாதடி.. கிடக்கற வேலை கிடக்கட்டும் கெழவியை தூக்கி மனையில வைங்கற கதையா அங்க கிளம்பி வந்துடப் போறேன் ஏற்கனவே உன் அண்ணா மானத்தை வாங்கறான்.”

“சரி விடு நாளைக்கு ஒரு நைட் தானே பார்த்துக்கலாம்.”

“அப்புறம் பார்க்கலாம் நேரம் ஏது?”

“என்ன..?”

“ஹீஹீ நான் நேரத்தை சொன்னேன். உன் அண்ணன் வந்துட்டானா?’

“இன்னும் இல்ல. நாளைக்கு தான் வருவான்.”

“வருவான் தானே....”

“அதுல என்ன டவுட்.?”

“எங்கள அசிங்கப் படுத்தறேன்னு ஏதாவது பண்ணி வெச்சிடுவானோன்னு பயமா இருக்கு.”

“நீ தானே அவன் கூட கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு சொன்ன, அப்போ அவன் வரலைன்னா உனக்கு சந்தோசம் தானே.”

“என்னமோ தெரியல மனசு அங்குட்டும் இங்குட்டும் கடந்து அல்லாடுது.  இவ்வளவு தூரம் வந்துட்டு கல்யாணம் நடக்கலைன்னா அம்மு ஏம்மாந்து போய்டுவா.. இத்தனை நாளா நைட் வீட்டுக்கு வந்ததுல ஊருக்கே தெரியும்ங்கறப்ப இனி கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்?"

“நீ பீல் பண்ற அளவுக்கு ஒன்னும் நடக்காது வந்துடுவான்.”

“ம்ம்” என்ற வளவனுக்கு  மனம் இன்னும் அமைதியாகவில்லை.  நந்தன் பழி வாங்குகிறேன் என ஏதாவது செய்து விடுவானோ என்று பயமாக இருந்தது.

“நந்தா நாளைக்கு உனக்கு கல்யாணம் வீட்டுக்குப் போகாம என்ன பண்ற..?” என கமிஷனர் கத்திக் கொண்டிருக்க, நந்தனின் கால் ரோகனின் வயிறை ஓங்கி ஓங்கி மிதித்துக் கொண்டிருந்தது.



Leave a comment


Comments


Related Post