இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - நிறைவு அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 29-06-2024

Total Views: 616

நிறைவு அத்தியாயம்

"சுவாமி..! இயமனை வைத்து விளையாடிய திருவிளையாடலில் தங்களின் மனம் குளிர்ந்து போனதா? இப்போதாவது அவனை விடுவிக்க கூடாதா? அவனது பதவியை பறித்து விட்டீர்கள். அதை திருப்பி அவனுக்கே அளித்து அஞ்சனாவோடு அவன் வாழ்வு சிறக்க ஆசி வழங்க வேண்டும்" பார்வதி சிவனிடம் தெரிவிக்க, "அவனது வாழ்வு சிறக்க அவனது காதலே போதும் தேவி" என்றான் சிவன்.

"இப்படி சொல்லி இன்னும் திருவிளையாடல் புரிந்தீர்கள் என்றால் தங்களது காதலின் உண்மைத்தன்மையை நான் பரிசோதிக்க வேண்டி இருக்கும் எப்படி வசதி?"

"வேண்டாம் தேவி.. முதலில் இந்திரன் முழுதாய் தன் தண்டனையை முடிக்கட்டும். பிறகு பார்க்கலாம்" சிவன் சொன்னதும் பார்வதி கேட்டுக் கொண்டாள்.

------------------------------

"திரு! என்னதான் நடக்குது. அவ எங்க" சிவகாமி கேட்க "அந்தகனோட இருப்பா அத்தை" என்றான் சாதாரணமாக.

"இதுக்கு முன்ன இருந்தது சரி. இப்போ அவ உன்னோட மனைவி டா"

"இல்லை அத்தை. எப்பவும் அவ அந்தகனோட மனைவிதான்" என்ன முயன்றும் அவனுக்கு அந்த வார்த்தைகள் தந்த வலியினை மறைக்கத் தெரியவில்லை. 

"என்ன சொல்லுற நீ.. நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க தானே"

"கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னோம் அத்தை. அவ்வளவுதான்"

"அப்படின்னா? அவ அந்த எமனை மறக்கலையா"

"எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எமனை மறக்கவே கூடாதுன்னு நினைச்சா அத்தை. அது படியேதான் எல்லாமே நடந்தது"

"அப்போ என் பொண்ணு இனி இங்க வரமாட்டாளா"

"வருவா அத்தை. எப்போன்னு தான் சரியா சொல்லத் தெரியல"

"நீ ஏன்டா இவ்வளவு நல்லவனா இருக்க. உனக்கு வலிக்கலையா"

"நான் நல்லவன் இல்லை அத்தை. வலி.. ம்ம் என்ன சொல்ல. அதை விடுங்க அத்தை" சோர்வாய் சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

----------------------------

"அம்மாவை பார்க்கணும் போல இருக்கு அந்தகா"

"போயிட்டு வரலாம் அஞ்சுமா"

"திருவையும் பார்க்கணும்" அவன் முகத்தினை கூர்ந்து பார்த்தபடி அவள் பேசினாள். திருவை பற்றி பேசினாளே அவன் எப்படி பதில் பேசுவான் என்று அவளுக்குத் தான் தெரியுமே..

"ம்ம் பார்க்கலாம் அஞ்சும்மா"

"என்ன திருவைப் பத்தி சொல்லியும் ஐயா எகிறிக் குதிக்காமல் அமைதியா இருக்கீங்க"

"திருகிட்ட நான் மன்னிப்பு கேக்கணும் அஞ்சனா"

"ஏன்?"

"அவன் நினைச்சிருந்தால் என் காதலை எனக்கில்லாமலே பண்ணியிருக்க முடியும். பண்ணாம உன்னையும் குழந்தையையும் பத்திரமா பார்த்துட்டு இருக்கான். அதுல இருந்தே தெரியலையா அவன் எவ்வளவு நல்லவன்னு"

"கொஞ்சம்தான் நல்லவன்.. இல்லைன்னா இந்த இந்திரன் கூட எல்லாம் சேர்ந்து ஆட்டம் போட்டுருப்பானா"

"அதை மறந்துடு அஞ்சனா"

"இந்திரனை சும்மாவே விடக்கூடாது. ஏன் அந்தகா இந்திரனுக்கு சிவன் என்ன தண்டனை குடுத்தார்"

"தண்டனை தரவே இல்லை"

"என்ன சொல்லுற அவனுக்கு தண்டனை தரலையா.. ஈசுவரா" அவள் பல்லைக் கடிக்க "கோபம் வேண்டாம் தேவி.. ஈசன் எது செய்தாலும் அதிலொரு நியாயம் இருக்கத்தான் செய்யும்" அவளை சமாதானப்படுத்தினான்.

"என்ன பெரிய நியாயம்"

"அவன் மீண்டும் என்னை வந்து சீண்டியதால் தானே நான் உன்னைத் தேடி வந்தேன். அதற்காகவே ஈசன் அவனை விட்டு வைத்திருப்பார்"

"தண்டனைன்னு ஒன்று வேண்டாமா அந்தகா.."

"அந்த கலக்கம் தங்களுக்கு வேண்டாம் தேவி.. அவனுக்கான தகுந்த தண்டனை என் மூலம் நிறைவேற்றப்பட்டது..." வந்து நின்ற சனியைக் கண்டதும் அவர்கள் இருவரும் அவனை வரவேற்றார்கள்.

"தமையனே சொன்னது போல் அத்தனை இன்னல்களையும் அடைந்து மீண்டும் காதலியைக் கைப்பிடித்து விட்டீர்கள். நல்ல விஷயம்"

"இந்திரனுக்கு என்ன ஆச்சு?" அவனிடமும் அவள் ஆர்வமாய் வினவ "ஏழரை நாட்கள் அவனை பிடித்துக் கொண்டேன். தங்களுக்குத் தெரியும் சனியின் பார்வையில் உள்ள உக்கிரம் என்னவென்று" பதிலளித்தான் சனி.

அதோடு "மைந்தனை கண்டுவிட்டு போகலாம் என்று வந்தேன்" என சனி சொல்லவும் "உள்ளே வாடா சனி" அழைத்து வந்து அவனுக்கான உபசரிப்புகளை எல்லாம் அளித்துவிட்டு குழந்தையையும் அவனது கையில் கொடுத்தான் இயமன்.

"மைந்தன் தங்களைப் போலவே இருக்கிறான் தமையனே"

"நிஜம் சனி.."

"சரி தாங்கள் எப்போது எமலோகம் வந்து சேரப்போகின்றீர்கள்"

"அங்கெதற்கு? மைந்தன் மனைவியோடு இங்கு நான் மிகுதியான சந்தோஷத்துடன் வாழ்கின்றேன். இது போதும் சனி"

"தங்களின் ப்ரியத்துக்கு உரியவன் எமலோகத்தில் ஒரு கடமையும் சரிவரப் பார்ப்பது இல்லை. எந்நேரமும் வழிமேல் விழி வைத்து வாயிலையே பார்த்துக் கொண்டிருக்கின்றான். பாவம் அவன்.."

அடுத்து என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் அவனிருக்க
"இயமா!" சிவனின் அழைப்பில் அஞ்சனா,இயமன்,சனி மூவரும் இருவரையும் பணித்தார்கள். 

"உனது மையல் அத்தனையையும் உன்னிடமிருந்து பறித்தாலும் அதே மையல் உன்னிடம் அனைத்தையும் இப்போது சேர்த்திருக்கிறது.. அதிலும் அஞ்சனா.. உன்னை மறக்கக் கூடாதென மெனக்கெட்டிருப்பதைக் காண்கையில் நீ கொடுத்து வைத்தவன் என்றுதான் தோன்றுகிறது இயமா"

"உண்மை சர்வேசா.. நான் கொடுத்து வைத்தவன் தான். தங்களின் திருவிளையாடலுக்கு எங்களை தேர்த்தெடுத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி... எனது ரணம் வேதனை அத்தனையும் இதோ இவனை கையில் ஏந்திய கணம் காணாமல் போய்விட்டது"

"அப்போ என்னால இல்லை அப்படியா?" இயமனை இடித்து அவள் சொல்ல, "நீ வேறு இவன் வேறு இல்லை அஞ்சனா" என்று சமாளித்தான் இவன்.

"நடிக்காத இன்னைக்கு இருக்கு அந்தகா உனக்கு.."

இருவரும் பேசியதை பார்த்தபடியே ஈசன் "அஞ்சனா அவன் நினைவில் இல்லாமல் இருந்தாலும் நீ அவனை நினைவுபடுத்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறாய். இனி என்றும் உன் நினைவில் அவன் இருப்பான்.. உங்களுக்கென் ஆசிகள்‌. இயமா விரைவில் எமலோகத்திற்கு வந்துவிடு. பதவி காத்துக் கொண்டிருக்கிறது.. இந்திரா இப்படி வா" எனச் சொல்லவும் இந்திரன் அங்கே தோன்றினான். 

இந்திரனைப் பார்த்ததும் அஞ்சனா முறைக்கத் தொடங்க "பிரபு! இயமனின் துணைவி என்னை எரித்துவிடுவதைப் போல் பார்க்கிறாள். தாங்கள் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள்" என்று சொல்ல, "அஞ்சனா இவன், நாரதன், சனி, சித்திரகுப்தன் இவர்கள் எல்லாமே எனது திருவிளையாடலில் ஓர் அங்கம்.." சிவன் சொன்னதும்
"புரிகிறது ஈசுவரா.. " என்றவளுக்கு அப்போதும் முழுதாய் கோபம் தணியவில்லை.  இருந்தாலும் இந்திரன் குறுக்கீட்டால் தான் இயமன் தன்னைத் தேடி வந்தான் என்பதால் அமைதியாகி விட்டாள்.

"அவிர்பாகம் இயமனுக்குத் தரமறுத்த குற்றத்திற்காக சனியின் பார்வையில் பட்டு நான் வேதனை அடைந்துவிட்டேன். அந்த தண்டனை போதும் தேவி.. இதனைத்தும்  ஈசனின் திருவிளையாடல்தான்‌ அவனின்றி அணுவும் அசையாது.." இந்திரன் சொல்லவும் அனைவரும் ஈசனை வணங்கினார்கள். 

அவர்களின் வணக்கத்தினையேற்று ஈசன் மறைந்துவிடவும் அவள் நினைவிற்கு அனைத்தும் வந்துவிட  "அந்தகா" என அழைத்தாள் அவள்.

அவனை உருக்குலைக்கும் அதே அழைப்பு..  இதை கேட்டுவிட மாட்டோமா என்று தவித்த தவிப்பு அவன் மட்டுமே அறிவான். அவளிடமிருந்து அவ்வழைப்பு வந்ததுமே அவன் அவளது இதழ்களோடு தன்னைப் பிணைத்துக் கொண்டான். அந்த பிணைப்பில் இருந்து விடுபட முடியாது விடுபட்டவள் "அந்தகா குழந்தை" எனச் சொன்னதும் அவளிடம் இருந்து விலகியவன் குழந்தையை அவளிடமே குடுத்துவிட்டு வெளியே வந்தான்.

குரலெடுத்து கத்த வேண்டும்போல இருந்தது. இந்த இடத்தில் இதற்கு முன்னராக வேதனையோட கதறி அழுதிருக்கின்றான் தான். இன்று அதீத உவகையில் நின்றிருக்கின்றான். 

பார்த்த உடனே அவன் கொண்ட மையலுக்கு பவித்திரத்தினை சேர்த்துக் கொடுத்தவள் அஞ்சனா. நினைப்பில் நிற்காத அந்தகனையும் இழுத்துப் பிடித்து நிற்க வைத்து தொலைய இருந்த வாழ்வையும் சீராக்கி வைத்தவளின் அன்பிற்கு முன் அவன் காதல் கூட மட்டு தான். 

குழந்தையை உறங்க வைத்துவிட்டு வந்தவள் வெளியே நின்றவனை அழைத்தாள். குழந்தையாய் குதூகலித்து ஓடி வந்தவனை அவள் தாங்கிக் கொண்டாள். அவனுக்குத் தருவதற்கு நிறையவும் வாங்குவதற்கு நிறையவும் இருந்தது.

"அஞ்சனா அஞ்சனா" என்ற அழைப்பும் "அந்தகா அந்தகா" என்ற குழைவும் அவ்விடம் வெகுநேரம் ஒலித்துக் கொண்டிருந்தது. உண்மையான காதலினை கடவுளின் சாபம் கூட எதுவும் செய்யாது. இந்திரனிடம் சனி சொன்னது போல் அவன் வரும்போது அத்தனையும் நேர் செய்யப்பட்டிருந்தது.

-------------------------

அஞ்சனாவின் வீடு..

அதே சமையலறை.. அஞ்சனா வேர்த்து விறுவிறுத்து சமையல் செய்து கொண்டிருக்க அவளை பின்னோடு அணைத்து கொண்டான் இயமன்.

"அந்தகா.. அங்க போய் உக்காரு. நான் சமைக்கணும்"

"அதெல்லாம் சமைக்கலாம்"

"உனக்கு சேட்டை அதிகமாகிடுச்சு"

அவள் சொல்லுவதை எல்லாம் காதில் வாங்காதவன் "அஞ்சனா" என மையலுடன் அழைத்தான்.

"என்ன?"

"அஞ்சனா"

"என்ன அந்தகா.. டக்குன்னு சொல்லு.. எனக்கு வேலை இருக்கு"

"எனக்கொரு ஆசை"

"விவகாரமா ஏதாவது கேக்கப் போறயா என்ன? பீடிகையே பலமா இருக்கு"

"என்னென்னு கேளுடி"

"சொல்லு அந்தகா"

"இப்படி ஏனோதானோன்னு கேக்காத டி.."

அவள் கையில் இருந்த கரண்டியால் அவன் மேல் அடியை வைத்துவிட்டு அவன் முகம் பார்த்து "இப்போ சொல்லு.." என்றாள்.

"இப்படியும் வேண்டாம். இரு நான் கிட்ட வர்றேன்" சொல்லியபடி அவளை நெருங்கி இடையோடு அணைத்தவன் அவளது கன்னத்தோடு கன்னம் இழைந்தான்.

"அந்தகா.. யாராவது வந்துடப் போறாங்க" அவனை விட்டு விலக முயற்சி செய்ய அவனோ, "என்னைக் கொஞ்சம் பேச விடுடி" என்று தடுத்தான்

"அப்போ இருந்து பேசணும்னு சொல்லுறயே தவிர பேச மாட்டேங்கிறயே டா"

"கொஞ்சம் பொறுமையாய் இரு" எனச் சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துப் பிடித்தவன் அவளது செவியோரத்தில் படர்ந்திருந்த முடிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு தனது இதழ்களை அங்கே கொண்டு போனான்.

"ஷ்ஷ் அந்தகா.. கூசுது.. விடு.." அவள் தன்னை மறந்து கிளர்ந்து கொண்டிருக்க, அவனோ செவியினை உரசிவிட்டு இன்னும் அவளை சிவக்க செய்துவிட்டு "எனக்கு இன்னொரு குழந்தை பெத்துக்கணும்னு தோணுது" என்றான்...

அவனை தன்னில் இருந்து பிரித்தவள் "அதுக்குள்ள இன்னொரு குழந்தையா டா.. ஆசை அதிகம் தான். ஓடிப் போயிடு" என்றதும் "ஏன் பெத்துதர மாட்டயா?" என கேட்டான் அவன்.

"பார்க்கலாம் பார்க்கலாம்"

"பெத்துத் தரணும்"

"அதிகாரம் பண்ணுனேன்னா கிடையாது அந்தகா"

"நானெங்க அதிகாரம் பண்ணேன் என் ஆசையை சொன்னேன்"

"நமக்கு நிறைய வேலை இருக்கு அந்தகா"

"குழந்நை பெத்துக்கத்தானே.. எனக்குத் தெரியும்.. வா போகலாம்"

"ஆ.. கடவுளே இவனோட.. அதைச் சொல்லல. திருவுக்கு பொண்ணு பார்க்கணும். அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுக்கு அப்பறம் தான்... அடுத்த குழந்தை எல்லாம்"

"உன் அத்தை மவனைப் பத்தி பேசுனா நான் அப்படியே கடுப்பாகிடுவேன்"

"நீதான் அவன் நல்லவன்னு சொன்ன"

"அந்த நல்லவன் எனக்கு இடைஞ்சலாவே வர்றானே" சொல்லி முடிக்கவில்லை "அஞ்சும்மா சமையல் முடிஞ்சதா.." என்றவாறு உள்ளே வந்தான் திரு.

அவனை முறைத்தபடி "இதோ வந்துட்டான் இடைஞ்சல் பண்ணுறதுக்காவே" என்று முணுமுணுக்க அது திருவின் காதில் விழுந்து "மன்னிச்சுடுங்க எமன்.. நான் இதோ உடனே போயிடுறேன்" என்றவாறு ஓடியே விட்டான்.

"திரு மச்சாவையே விரட்டுறீங்களா.. நீங்களும் வெளிய ஓடுங்க"

"அநியாயம் பண்ணுறடி"

"எனக்கு இதுதான் நியாயம் இயமன் அவர்களே"

"நல்லா பேசு.. ஆசையை மட்டும் கிடப்பில போடு"

"கிடப்பில போட மாட்டேன்.. கவலை வேண்டாம் எமா"

"நிஜமாவா"

"ம்ம்.. எதுக்கு உடனே இப்படிக் கேக்குற அந்தகா"

"அது நம்ம பையன் உன் வயித்துக்குள்ள இருந்தது இதெல்லாம் நான் உன் கூட இருந்து பார்க்கவே இல்லை.. குழந்தை பிறக்கப்போற அப்பத்தானே வயித்தையே தொட்டேன். அப்படியில்லாமல் அடுத்த குழந்தையை நான்..." சொல்லுவதற்குள் அவனது நெற்றில் அழுத்தமாய் அவள் முத்தமிட்டாள். அது அவன் ஆசைக்கான அச்சாரமாக இருந்ததில் இயமன் உற்சாகமானான்.

----------------------------

எமலோகமே அல்லல் பட்டுக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் சித்திரகுப்தன் தான். அவன் அனைவரையும் ஒருவழியாக்கி தமது பிரபுவையும் தேவியையும் வரவேற்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டிருந்தான். 

"சீக்கிரம் எமகிங்கிரர்களே! பிரபு வந்துவிடுவார். அவர் வரும் போது எமலோகமே ஜொலிக்க வேண்டும் அவரது வதனத்திற்கு இணையாக எனச் சொன்னவன்" அவ்வளவு பரபரப்பாக இருந்தான்.

அவனது பரபரப்பினை இன்னும் அதிகப்படுத்துவதை போல "என்ன சித்திர குப்தா.. ஏக களிப்பில் இருக்கிறாய் போல" என்றவாறு உள்ளே வந்தான் இயமன் அஞ்சனாவோடு‌.

"வாருங்கள் பிரபு.. தேவி வாருங்கள்... தங்களின் வருகைக்காக மட்டும்தான் எமலோகமே காத்துக் கொண்டிருந்தது. பிரபு குழந்தையை இப்படிக் கொடுக்கிறீர்களா.. நான் கொஞ்சம் கொஞ்சிவிட்டுத் தருகிறேன்"

"நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொஞ்சிக் கொள்" என்று இயமன் குழந்தையை கொடுத்தான்.

குழந்தையின் அழகில் அங்கிருந்த அனைவருமே மயங்கி நிற்க  அவனோ அருகேயிருந்த அஞ்சனாவின் அழகினை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"அந்தகா.. என்ன பார்வை இது"

அந்தகனுக்கு அஞ்சனா வேண்டும் அவளை அழைத்துக் கொண்டு தனிமையை நாடிச் சென்றான்.

அந்தகன் இனியாவது விதிகளை அஞ்சனாவிற்காக மீறாமல் இருப்பானா என்றால் இனியும் மீறுவான். ஆம், அவர்கள் இருவரும் விதிமீறல்கள் செய்யத்தான் செய்வார்கள். என்ன ஒன்று இந்த விதி மீறல்களுக்கான தண்டனையையும் அவர்கள் இருவருமே மாறி மாறி கொடுத்துக் கொள்வார்கள். 

காதலாசை இயமனையும் விட்டு வைக்கவில்லை. 

..சுபம்..



Leave a comment


Comments


Related Post