இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 38 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 01-07-2024

Total Views: 831

ஜீப்பில் ஏறி அமர்ந்தவர்களின் பின்னால் ஒரு உருவம் வந்து அமர யார் என தெரியாமலே அறிந்து கொண்டான் இந்தர்.

இதழ்க்கடையோரம் உதிர்த்த புன்னகையை அவன் அறியாமல் மறைக்க முற்பட வாசு "யாரும் அவ்ளோ கஷ்டப்பட்டெல்லாம் சிரிக்க வேணாம்.... நல்லா வாய்விட்டே சிரிக்க சொல்லு..." என்க.

"உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரல... என்னைய ஆள விடுங்க...." என்றான் வாசு.

"சரி விடு... நீ வேற கவலையா இருக்க... உனக்கு தொந்தரவு தரல நான்...." என்றான் அவன்.

"நான் அப்படி சொல்ல வரல சுந்தர்.... இப்ப சண்டை போட்டுக்குவீங்க... அப்பறம் இன்னும் கொஞ்ச நேரத்துல சேர்ந்துப்பீங்க... எதுக்கு வம்பு...." என அவன் முடிக்க அவன் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் இந்தர்.

"போதும் பேசினது வண்டிய கிளப்பு...." என இந்தர் கூற வாசு வண்டியை இயக்கிய சிறிது நேரம் ஆகியிருக்காது யாரோ இருவர் வண்டியை கைக்காட்டி நிறுத்தினர்.

வானம் இருண்டு இருந்ததால் அவர்களின் முகம் தெளிவாக தெரியாமல் சற்று தொலைவில்தான் நிறுத்தினான் வாசு.

கைக்காட்டிய இருவரும் பைக்கில் இருந்தனர்.

அவர்களும் வாசுவை தொடர்ந்து வந்து நிறுத்த இப்போது தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் முகம் தெளிவாகவே தெரிந்தது.

அவர்களை பார்த்து புருவத்தை சுருக்கினான் வாசு.

இந்தருக்கும் சுந்தருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. 

ஆனால் வாசு அவர்களை கண்டதும் "நீங்க எங்க இங்க...?" என கேட்க.

"சக்கரவர்த்தி ஐயா உங்களுக்கு துணையா போக சொன்னாரு...." என ஒருவன் கூற.

வந்ததே கோபம் இந்தருக்கு, "ஏன் எங்கள பார்த்தா எப்படி இருக்குதாம் உங்க ஐயாவுக்கு...?" என கேட்க.

"அத நீங்க ஐயாகிட்டதான் கேக்கனும்..." என்றான் அருகில் இருந்தவன்.

அவனை ஏகத்துக்கும் முறைக்க மட்டுமே முடிந்தது இந்தரால்.

"சுரேன் விடு இதெல்லாம் பழக்கம்தான்...." என்றான் வாசு.

"அப்போ இவரு பன்றது எல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் அப்படித்தான...?" என அவன் கேட்க.

"நிறைய தெரியாது கொஞ்சம் தெரியும்...." என்றான் வாசு.

"சரி பேசி ஏன் நேரத்த கடத்துறீங்க... அங்க சுசிலாவும் அருவியும் என்ன நிலையில இருக்காங்களோ தெரியில.... முதல்ல அவங்கள பார்ப்போம்... அப்பறம் மத்தத பேசிக்குவோம்... வாங்க வண்டியில உக்காருங்க...." சுந்தர் அழைக்க.

"இல்ல நாங்க பைக்கலயே வரோம்.... என்றான் ஒருவன்.

"பைக்குலயா...?" என வாசு கேட்க.

"ஆமாண்ணா.... நாங்க இதுல வரோம் நீங்க முன்னாடி போங்க..." என்க.

வாசு வண்டியை கிளப்பினான்.

சற்று தூரம் சென்றதும்   மேலும் இருவர் இணைந்து கொண்டனர்.

சுந்தருக்கும் இப்போது சக்கரவர்த்தி மேல் சிறிதாக சந்தேகம் வர ஆரம்பித்தது.

இதேபோல் ஒவ்வொரு லைட் கம்பத்திற்கும் இருவராக மொத்தம் பத்துபேர் சேர்ந்த குழு அவர்களை பின் தொடர்ந்து சென்றது.

வாசுவின் ஜீப்பிற்கு முன்னால் இரண்டு பைக்குகளும் பின்னால் மூன்று பைக்குகளும் செல்ல சக்கரவர்த்தியின்மீது இப்போது கோபம் அதிகமாக வந்தது சுரேந்தருக்கு.

தன் தொடையின் மீது குத்தி அந்த கோபத்தை போக்கிக் கொண்டு இருந்தான்.

இன்னொரு கோபமும் உண்டு

அது அருவியின் மீது

அவனிடம் சண்டையிட்டு சென்றவள் எங்கு சென்றாள் என தெரியவில்லை.

வீடு முழுதும் தேடியவன் அவள் எப்போதும் செல்லும் மொட்டை மாடிக்கு ஏனோ இன்று சென்று பார்க்கவில்லை.

ஏன் அங்கு பார்ப்போம் என அவனுக்கு தோன்றவும் இல்லை.. என்பதுதான் விதியின் விளையாட்டு போலும்.

இவளை காணும் என அவன் மனம் எரிமலையாக கொதித்துக் கொண்டு இருக்க அவளோ அவன் பேசியதிலும் அவன் கொடுத்த அடியிலும் அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள்.

அவள் அவனிடம் சண்டையிட்டு வந்ததையோ மொட்டை மாடிக்கு சென்றதையோ யாருமே கவனிக்கவில்லை.

வாசுவும் மற்றவர்களும் ஊரைத்தாண்டி காட்டுக்குள் செல்லும் திசையில் வண்டியை திருப்ப ஒரு பெரிய கல்லில் மோதி வண்டி அப்படியே நின்றது.

அமர்ந்து இருந்த இருவரும் முன்னால் முன் பக்கம் சாய்ந்து தலையில் சற்று அடிபட்டுக் கொண்டனர்.

"பார்த்து போக வேண்டியதுதான்டா...." என சுரேன் கத்த.

"இருட்டுல ஒன்னும் சரியா தெரியல சுரேன்..." என்றான் அவன்.

அவன் முன்னால் சென்றவர்களும் கற்களில் வண்டியை இயக்க முடியாமல் தடுமாற அனைவரும் வண்டியை விட்டு இறங்கி நடந்தே செல்வோம் என முடிவெடுத்து கையில் டார்ச் லைட்டுடனும் மொபைல் லைட்டுடனும் முன்னேறி சென்றனர்.

சற்று தூரம் சென்றிருப்பர் பொத்தென்று ஏதோ ஒன்று விழ அனைவரும் ஒருநிமிடம் அதிர்ந்துதான் போயினர்.

அது ஒரு மலைப்பாம்பு

இவர்கள் பயந்து ஒதுங்கி நிற்க அது அவர்களை கடந்து சென்றது.

அது கடந்து செல்லும் வரை அமைதியாக நின்று பார்த்தனர்.

ஒவ்வொருவரின் இதயமும் துடிக்கும் ஓசை அவர்களுக்கு நன்றாகவே கேட்டது.

இதயத்தில் கையை வைத்தவாறு அது செல்லும் வரை நின்றிருந்தனர்.

அது ஒரு குழியில் இறங்கி சென்ற பின்னரே அனைவருக்கும் மூச்சு சீராக வந்தது.

"காட்..." என இதயத்தை நீவிக் கொண்டான் சுந்தர்.

இப்போது புரிந்தது வாசுவிற்கு ஏன் தனது தந்தை துணைக்கு ஆட்களை அனுப்பி இருக்கிறார் என.

அவன் திரும்பி சுரேனை பார்க்க அவனும் வாசுவைத்தான் பார்த்து கொண்டு இருந்தான்.

இருவரின் பார்வை பரிமாற்றங்களும் பல கதைகளை பேசியது.

மொத்தமாக பதிமூன்று பேர் அந்த காட்டினுள் நுழைந்திருக்க எங்கிருந்தோ ஒரு அம்பு அவர்களில் ஒருவனின் தோளை பதம் பார்த்தது.

இங்கு திகம்பரனின் அன்னையோ அவர்களின் முன்னால் வாழ்க்கை பற்றி தன் இரு மகன்களிடமும் கூற ஆரம்பித்தார்.

அதை கேட்டு கொண்டு இருந்த இருவருக்கும் வஜ்ரவேலுவின் மீது தீராத கோபம் ஏற்பட அவரை தேடி கொல்ல சென்றான் அவன்.

ஆனால் அவனை தடுத்த அவன் அன்னையோ "உன் தந்தைக்கு சாவு என்ற ஒன்று உண்டென்றால் அது சக்கரவர்த்தியின் கரத்தினால்தான்..." என கூற
"அதுவரை தான் பொறுக்க மாட்டேன்..." என கூறினான் திகம்பரன்.

அவன் தம்பியும் அவ்வாறே கூற சிறிது காலம் பொறுமையாக இருக்கும்படி அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறியவர் மறக்காமல் திகம்பரனிடம் "அந்த அருவிய மறந்துடு பெரியவனே... அவ இப்ப இன்னொருத்தன் மனைவி.... பிறன்மனை நோக்காதேன்னு பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க... அதால உனக்கு இன்னும் கஷ்டம்தான் வரும்.... நானே ஒரு நல்ல பொண்ணா பார்த்து உனக்கு கட்டி வைக்கிறேன்...." என்க.

"அம்மா நான் அவ மேல உசிரையே வச்சிருக்கேன்...." என்றான் அவன்.

"ஆனா அவ மனசுல நீ இல்லையேப்பா... உனக்கு சின்னவயசுல இருந்தே அவள தெரியும்தான.... அவ எப்பவுமே சக்கரவர்த்தி மகன் பின்னாடிதான் சுத்திட்டு இருப்பா.... நீ மறந்துட்டியா...?"என கேட்க.

"இல்ல..." என்றான் அவன்.

"அப்பறம் என்ன இப்போதைக்கு நமக்கு ஒரே பிரச்சனைன்னா... அது உன் அப்பாவும் அவரோட ரெண்டாவது பொண்டாட்டியும்தான்.... அவள மாதிரி ஒரு ராட்சசிய இந்த ஊரே பார்த்து இருக்காது.... நல்லவேள அந்த அருவிய அவ மகன் கட்டிக்கில இல்லன்னா அவ பாடு பாவம்...." என்க.

"அப்படி என்னம்மா அந்த பொம்பள அவ்ளோ பெரிய அரக்கியா....?" என திகம்பரன் தம்பி  கேட்க.

"அவ அரக்கி மட்டும் இல்ல சின்னவனே.... பணத்துக்காக பெத்தவங்களையே கொலை பண்ண கொடூரமானவளும் கூட...." என்க.

"என்ன சொல்றீங்க....?" என இருவரும் ஒருசேர அதிர்ந்தனர்....



Leave a comment


Comments


Related Post