Total Views: 4465
கார் இரண்டும் மண்டபத்தை அடைந்து விட்டது. நிலாவின் கண்கள் ஏக்கமாக யுகி இருந்த காரைப் பார்க்க..நந்தன் பிடித்திருந்த கையின் அழுத்தம் கூடியது.
“மேடம்..”
“ஹா..”
“என்னோட பொறுமைக்கும் எல்லை உண்டுன்னு நினைக்கறேன்”
‘எதற்கு சொல்கிறான்?’ எனத் தெரியாமல் கண்கள் படபடக்க..
“உன்னோட கண் இனி என்னைய மட்டும் தான் பார்க்கணும்,வேற எவன் பக்கமாவது திரும்புச்சி சேதாரம் யாருக்கு ஆகும்ன்னு சொல்ல மாட்டான் செஞ்சிடுவேன்” என அங்கும் கூட அவளை மிரட்டி வைக்க..
எரிச்சல் ஆனது நிலாவிற்கு இப்போதெல்லாம் அவன் மீது இருக்கும் பயம் விலகி எரிச்சல், கோவம்,வெறுப்பு, அவ்வவ்ப் போது ரசனை என அனைத்து உணர்வும் தோன்றுகிறது.
இதுதான் காதலுக்கு முதல்படியோ..
எந்த உணர்வும் தோன்றா ஒருவனிடம் இப்போது உணர்வுகள் அணிவகுக்கும் போது அங்கு காதலும் அரங்கேருகிறது என்று தானே அர்த்தம்.
“என்னடி.?”
“ஒன்னுமில்ல”
“கையை பிடி ஆரத்தி எடுக்கிறாங்க பாரு” என்று அவள் கையோடு கைக் கோர்த்துக் கொண்டான்.
செல்வராணியின் முதல்மகள் நந்தன் நிலாவிற்கும், இரண்டாவது மகள், வளவன் ஷாலினிக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்க.. நந்தன் மிடுக்கோடு உள்ளே நுழைந்தான்.
அவன் கம்பீரத்தைப் பார்த்து அங்கிருந்த இளம்பெண்கள் திடீர் ரசிகை ஆனார்கள் என்றால் மிகையாகாது.
“நந்தன் சார் ஹேண்ட்சம் ஓவர் லோடடா இருக்காருடி.. காக்கி சாட்டையில ஒரு மாதிரின்னா கோர்ட் சூட்ல ஆள மயக்கற மாதிரி இருக்காருடி. நாளைக்கு வேட்டி சட்டையில எப்படி இருப்பாரோ.. அவர் பார்வை என் பக்கம் திரும்பாம போய்டுச்சே....திரும்பி இருந்தா இந்நேரம் அவர் பக்கத்துல நான்ல இருந்துருப்பேன்”, என நிலாவிற்கு பின்னால் நான்கு அடி தள்ளி இருந்த பெண் ஒருத்தி சொல்ல அது நன்றாகவே நிலாவிற்கு கேட்டது.
முன்பு இருந்த நிலாவும் அவனை தள்ளி இருந்து சைட் அடித்தவள் தானே, அவன் கம்பீரம் என்ன என்று அவளுக்கு தெரியாமல் இருக்கும்மா என்ன..?
அதை இன்னொரு பெண் சொல்லி கேக்கும் போது உள்ளுக்குள் தகதகவென்று வயிற்றெரிச்சல் உண்டானது.
“இவ யாரு அவனைப் பார்க்க” என்பது போல் முறைத்துப்படியே நந்தனின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
இரு மணமக்களையும் மேடை ஏற்றினர்.
நிலாவைக் காட்டிலும் ஷாலினி அழகில் மிளிர.. நந்தனுக்கு இந்த பெண் சரியில்லை என கல்யாணதிற்கு வந்தவர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.
அதற்கு காரணம் அவள் அழுது வடிந்ததில் முக அலங்காரங்கள் அனைத்தும் கலைந்திருந்தது. லெகங்கா கசங்கி இருக்க அதை சரி செய்ய தான் நந்தன் நேரம் கொடுக்கவில்லையே, கவனித்து சரி செய்யும் நிலையிலும் யாருமில்லை..
ராஜி யாருக்கும் தொந்தரவு தராமல் ஒதுங்கி நின்று தான் குழந்தைகளின் திருமணத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.
‘ராஜி இங்க என்ன பண்ற அங்க வந்து வரவேற்புல நில்லு.” என மணி ராஜியின் கையைப் பற்றி இழுக்க.
“நான் எதுக்கு அண்ணி..?புருஷன் இல்லாம அமங்கலியா முன்னாடி வந்து நின்னா நாளைக்கு புள்ளைங்க வாழ்க்கை எப்படி சந்தோசமா இருக்கும்.எனக்கு அவங்க நல்லா இருந்தா போதும் அண்ணி, தயவு செஞ்சு முன்னாடி கூப்பிடாதீங்க” என கையெடுத்து கும்பிட்டுவிட. அதற்கு மேல் வற்புறுத்த விரும்பவில்லை மணிமேகலை.
மேடையில் நின்ற வளவனின் கண் அடிக்கடி தன் தங்கையும் பார்த்துக் கொண்டது. நந்தனின் ஆளுமையைப் பார்ப்பவர்கள் நிலா குடுத்து வைத்தவள் என்று தான் பேசிக் கொள்கின்றார்கள் ஆனால் உள்ளுக்குள் அவனுக்கு இருக்கும் அழுக்கை வளவனும் நிலாவும் தான் அனுபவித்துருக்கிறார்கள்.
சிங்கத்தையும் புலியையும் தூர இருந்துப் பார்த்துக் கொள்ளலாம் அருகில் சென்று அதனுடன் வாழ வேண்டும் என்ற ஆசைக் கொண்டால் உயிர் தான் போகும்.
இது வளவனுக்குப் புரிகிறது நிலா எப்போதும் புரிந்துக் கொள்வாளோ.. தாமதமாக புரிந்து என்ன பண்ண..
வரவேற்பு நல்லப்படியாக நடந்துக் கொண்டியிருக்க.. சரஸ்வதியின் போன் அலறியது.
“சரஸ் நீ நந்தன் சார் வீட்டு கல்யாணத்துக்கு வரலையா?” என சரஸ்வதியின் உடன் பணிப் புரியும் கமலா கேட்டாள், அவள் குரலில் ஒரு பதட்டம் இருந்தது..
“இதோ கிளம்பிட்டேன் கமலா கிளம்பும் போது ஒரு கேஸ் வந்துடுச்சு அதான் வர முடியல.இப்போ கிளம்பிட்டேன்”.
“ஏய் நீ வரவே வேண்டாம்டி வந்தா உன் மனசு கஷ்ப்படும் அதை சொல்ல தான் கூப்பிட்டேன்”.
“ஏன் அப்படி சொல்லற?” கேட்டவளின் குரல் கம்மத் தொடங்கியது.போலீஸ்காரிக்கு தெரியாதா? யார் எப்படி எந்தக் குரலில் சொன்னால் விசியம் எப்படிப்பட்டது என்று.
“அது... நீ ,சொன்னா கோவப்படக் கூடாது.”
“நீ முதல்ல சொல்லு.”
“நந்தன் சாரோட தங்கச்சிக்கு மட்டும் இல்லை, அவருக்கும் நாளைக்கு கல்யாணமா..?
கேட்டதும் இதுவாக தான் இருக்கும் என முன்பே யூகித்து விட்டாள் சரஸ்வதி
“பொண்ணு யாரு?”.
“ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கப் போறவரோட தங்கச்சி போல..”
“பேர் நிலாவா?”
“ஹா ஆமா அப்படி தான் கட்டஅவுட்ல போட்டுருக்கு.”
“ஓ”
“உனக்கு எப்போ தெரியும்?”. தனக்கு மட்டும் தான் தாமதமாக தெரிந்திருக்கிறதோ என்று அவசரமாக கேட்டாள்.
“நம்ப டிபார்ட்மென்ட் முழுக்க அவர் தங்கச்சிக்கு கல்யாணம்ன்னு சொல்லி தான் இன்வைட் பண்ணிருந்தாங்க”.
நிலா.. இந்த பெயரைக் கேக்கும் போதே தன் மேல் யாரோ நெருப்பை அள்ளி ஊற்றியது போல் இருந்தது.அன்றே அவள் மீது சந்தேகம் தான்.அடுத்த நாளே வேற ப்ராஜெக்ட்டிற்கு அவசர அவசரமாக மாற்றப் பற்றிருக்க
அதைப் பற்றி அன்றே கமிஷ்னரிடம் கேட்டாள்
சார் நந்தன் சார் விசாரிச்சிட்டு இருந்த கேஸ்ல இருந்து என்னைய எதுக்கு மாத்தினீங்க..
இப்போ போட்டுருக்க கேஸ்ல ஆள் கம்மியா இருக்கு.. ஏற்கனவே இருக்கற ஆளுங்க ஒன்னுத்துக்கும் உதவமாட்டாங்க.. நீ ஏற்கனவே நந்தன் கூட ஒர்க் பண்ணிருக்க அவன் எப்படி யோசிச்சு மூவ் பண்ணுவான்னு உனக்கு நல்லாவே தெரியும். அதுக்காக தான் உன்னைய போட்டுருக்கேன். இதுல நீ தனியா சைன் ஆவ.. என்று தேன் தடவிய வார்த்தைகள் அவரிடம் இருந்து வரவும் சரஸ்வதி நம்பி விட்டாள்.
நந்தனுடன் சேர்ந்து வேலை செய்ய முடியவில்லையே என கவலையாக இருந்தாலும் தனியாக வேறு ஒரு கேஸிற்கு தலைமை தாங்கப் போகிறோமே என மனதை சமன் செய்துக் கொண்டாள்.
இப்போது கல்யாணம் பத்திரிக்கை வைக்கும் போதுக் கூட நந்தனை நேரில் பார்க்க முடியவில்லை. அவள் இல்லாத நேரமாகப் பார்த்து தான் நந்தன் பத்திரிக்கையை எடுத்து வந்ததே.
நேரில் பார்த்துவிட்டால் கோவத்தில் ஏதாவது செய்துவிடுவோம் என சரஸ்வதியை தவிர்த்துவிட்டான்.அவன் நினைத்திருந்தால் திருமணத்திற்கு அழைத்திருக்காமல் விட்டிருக்கலாம், அப்படி விட்டால் ஏன் அவளை மட்டும் அழைக்கவில்லை என கேள்வி எழும் . அது அனைவருக்கும் முன்பு அவனை குற்றவாளியாக நிற்க வைக்கும் எதற்கு தேவையில்லாமல் இதெல்லாம் இழுக்க வேண்டும் என்று தான் சரஸ்வதியை அழைத்தான்.
சரஸ்வதி இதை எல்லாம் யோசிக்கும் போது இப்போது தான் எதோ உறுத்துவது போல் இருந்தது.
“நிலா நான் அவ்வளவு சொல்லியும் நீ அவர் பக்கத்துல போனதும் இல்லாம அவரையே கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு போயிருக்க.. உன்னைய சும்மா விட மாட்டேன்டி.” என திறந்திருந்த பேனாவை ஓங்கி மேஜையில் குத்த.. அது உடைந்து சிதறியது அவள் மனதைப் போல...
நந்தன் மீது தோன்றிய காதலை இவ்வளவு நாள் வெளிப்படுத்தாமல் இருந்தது அவளின் தவறு.
மனதில் இருந்ததை சொல்லிருந்தால் நந்தன் அவனின் எண்ணத்தை சொல்லிருப்பான். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சனையில் நிலாவைக் கொண்டு வந்து அவளை விரோதியாக நினைத்தால் பாவம் அவளும் தான் என்ன செய்வாள்.
யார் என்ன அலப்பறை செய்தால் என்ன நான் திருமணத்தை என்ஜோய் பண்ணுவேன் என அவன் வேலையில் கருத்தா இருந்தான் நந்தன்.
மேடையில் நின்ற நிலாவின் கை விரலோடு வீணை வாசித்துக் கொண்டிருந்தான் நந்தன்.
“ஏங்க..”
“ம்ம்”
“விரலை விடுங்க பார்க்கறவீங்க என்ன நினைப்பாங்க.?”
“திக்காம பேச பழகிட்டப் போல..”
‘நான் என்ன சொல்றேன், இவன் என்ன சொல்றான் பாரு? திமிரு புடிச்சவன் கையை விடுடா பார்க்கறவீங்க ஆல்ரெடி நான் இவனுக்கு ஏத்தவ இல்லைன்னு பேசிட்டு இருக்காங்க, இதுல இதை வேறப் பார்த்தா பொங்கி இங்கையே மர்கையா ஆகிடுங்களே..’என தவிப்புடன் நிலா கையைப் பார்க்க
“விடமாட்டேன்னு தெரியும் தானே”
“ம்ம்”
“அப்புறம் எதுக்கு பார்க்கற?”.
“கடவுளே இவன்கிட்ட என்னைய மாட்ட விட்டு வேடிக்கைப் பார்க்கறியே உனக்கே இது அடுக்குமா?”
“அடக்கலைன்னா நீ போய் அடுக்கிக் குடுக்கப் போறியா.?”
“ஹா இல்ல இல்ல.”
“நீ என்ன நினைக்கிறேன்னு கூட எனக்கு தெரியும் மூடிட்டு இரு” என்றான்.