இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -81 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 14-07-2024

Total Views: 1367

யுகியின் சத்தம் கேட்டு வெளியே வந்த மணியிடம் கூட அவன் சொல்லவில்லை. 

“யுகி” என அவர் அழைக்க 

அவரின் பக்கம் திரும்பாமலையே “அப்பா என்னையக் கொண்டு வந்து ட்ரையை வைச்சி விடுங்க” என்றான். 

“தம்பி என்கிட்ட கூட சொல்லாம போற” என்ற மணியின் குரல் கம்ம.. 

“ஒரு மகன் நல்லா இருக்கனும்னு இன்னொரு மகனுக்கு விஷம் வைக்கறவீங்க கிட்ட எனக்கு பேச விருப்பமில்லை” என பட்டென்று சொல்லிவிட்டான். 

அந்த வார்த்தை மணியின் இதயத்தை குத்தி கிழித்தது. 

“என்னடா எல்லோரையும் ஓவரா பேசிட்டு திரியுற?”. என நந்தன் யுகியின் சட்டையைப் பிடித்து விட, வீடே களப்போறமாக இருந்தது. 

வீட்டின் உறவுகள் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, யாருக்காவது தெரிந்தால் கண் காது மூக்கு வைத்து பெயரைக் கெடுத்து விடுவார்களே என பயந்த மார்த்தாண்டம் யார் கண்ணையும் உறுத்தாமல் கதவை மூடிவிட்டார். 

“நந்து விடு.. என்ன இது அண்ணன் தம்பி ரெண்டுபேரும் இப்படி அடிச்சிக்கவா நாங்க இவ்வளவு கஷ்டப்படறோம்.?”  

“அடிக்கட்டும்ப்பா விடுங்க, அது மட்டும் தானே எல்லோரும் சேர்ந்து செய்யாம இருக்கீங்க, அதையும் செஞ்சி சாக அடிச்சிடுங்க” என்றவன் குரல் கம்ம நந்தனின் கை தானாகக் கீழே இறங்கிவிட்டது. 

யுகிக்கு நிலாவின் மீது எந்த அளவிற்கு கோவம் இருக்கிறதோ அதே அளவு மணிமேகலையின் மீதும் இருந்தது. அதற்கு காரணமும் இருக்க. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. 

“நகருங்க முதல்ல” என்று அனைவரையும் நகர்த்தி விட்டு யுகியின் அருகில் சென்றவள். 

“போறேன்னு ஆகிடுச்சுல சாப்புட்டுப் போடா, உன்னால பசி தாங்க முடியாது” என அவனிடம் சாப்பாடு தட்டை நீட்டினாள், அவள் கண்களில் சரம் சரமாக கண்ணீர் வடிந்தது. 

இவர்களின் பாசப் போராட்டத்தைப் பார்க்க முடியாமல் நந்தன் பல்லை நரநரவென்று கடித்தான். அந்த பக்கத்தில் இருந்தவர்களுக்கு கூடக் கேட்டது. 

“என்ன?அப்படியே என்மேல பாசம் இருக்கற மாதிரி நடிக்கிறியா..?” 

“ஆமா நான் உங்கிட்ட நடிச்சி நாளைக்கு ஆஸ்கார் குடுக்கறாங்க பாரு,உன் கோவத்தை என்கிட்டக் காட்டு, எதுக்கு சாப்பாட்டு மேல காட்டற” என்றவள் பேசியவாறே இட்லியை பிய்த்து யுகியின் வாயருகே கொண்டு செல்ல. 

அவன் வாங்காமல் முரண்டு பிடித்தான். 

“யுகி” 

“சாப்பாடு வாங்கணுமா..?” 

“ம்ம்ம்” 

“இதுல கொஞ்சம் விஷத்தை வெச்சிக் குடு சாப்பிடறேன்”. 

“யுகி......” என்றவளின் கையில் இருந்த தட்டு கீழே விழுந்து சிதற, அவன் சட்டையைப் பிடித்தவள், “என்ன கையாள்வது தான் என் வாழ்க்கையை பணயம் வெச்சனா? என்னடா பேசற நீ?”என கதறி விட்டாள். 

“என்ன சொல்ற சொல்லு, இவன் என்ன சொல்லி உன்னைய மிரட்டுனான்?”.என்று யுகி கத்த.. சத்தம் கேட்டு வீட்டு கதவு தட்டப் பட..  

“ரூமுக்குப் போங்க, போங்கன்னு சொன்னேன்” என மார்த்தாண்டம் அழுத்தமாகச் சொல்ல. அருகில் இருந்த அறைக்குள் மூவரும் சென்றனர். மார்த்தியும் பின்னாலயே போனவர் மணி “அவங்களை சமாளி” என்று சொல்லிக் கொண்டே கதவை அடைத்துவிட்டார். 

மணி கதவை திறக்க அங்கு வளவனும் ஷாலினியும் தான் இருந்தனர். வீட்டில் சத்தம் கேட்டதால் கிருஷ்ணம்மாள் அனைவரையும் வெளியே தோட்டத்தைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்று விட்டார். 

“வாங்க” 

“என்ன சத்தம் அத்தை?” 

“உள்ள வாங்க” என்றவர் அவர்கள் வந்ததும் அவசர அவசரமாக கதவை மூடினார்.

“என்னாச்சி?” 

“யுகி ஊருக்குப் போறேன்னு சண்டைப் போட்டுட்டு இருக்கான்” 

“போகட்டும் விடவேண்டியது தானே”என்று வளவனும்  

“ஏம்மா அவனை இன்னும் டார்ச்சர் பண்றீங்க? அவன் என்ன சின்னக் குழந்தையா? அவனை பார்த்துக்க அவனுக்கு தெரியும் அவன் போக்குல விட்டுடுங்க” என ஷாலினியும் சொல்ல மணிமேகலை தலையை ஆட்டினார். 

“சொல்லு இவன் என்ன சொல்லி மிரட்டுனான்?”. என மீண்டும் யுகி கேட்டான். அவன் யூகித்தது தான் இருந்தாலும் அவள் வாயால் நடந்தைக் கேக்க வேண்டும் அப்போது தான் அவன் மனம் ஆறும். 

உளறியதை எப்படி மாத்துவது? என தெரியாம நந்தனைப் பார்க்க,அவனோ அவளை வெட்டுவதா? குத்துவதா? என்பது போல் பார்த்தான். 

“என்னம்மா நிலா சொல்ற.?” 

“மாமா.. அது ஒன்னுமில்ல இவன் எங்கயோ போகட்டும் நான் ஏன்னு கேக்க மாட்டேன், விஷம் வை அது இதுன்னு பேச வேண்டாம்னு சொல்லுங்க”, என்றவள் யுகியின் கையைப் பிடித்தாள். 

“எங்க போனாலும் உங்கிட்ட பேசாம என்னாலயும்,என்கிட்ட பேசாம உன்னாலயும் இருக்க முடியாது, பெங்களூரு போனதும் போன் பண்ணு டைம்க்கு சாப்பிடு, கண்டதையும் நெனச்சிக் கவலைப்படாத, நான் சந்தோசமா தான் இருக்கேன்” என்றவளுக்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. கதவை திறந்து கொண்டு வெளியே வர. மணி ஷாலினி, வளவன் மூவரும் நின்றிருந்தனர். 

அவர்களிடம் பேசவில்லை நேராக அறைக்குச் சென்று விட்டாள். 

“யுகி நீ கிளம்பு வா,உன்னைய ட்ரையினுக்கு கொண்டு போய்விடறேன்”  

“எதுக்கு இப்போ தொறத்துறீங்க? அவ ஏதோ சொல்ல வந்துட்டு மென்னு முழுங்கிட்டுப் போறா.. என்னனு சொல்லுங்க இவனை. அப்போதான் போவேன்” என அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான். 

“இங்கப் பாரு அவ என்னோட பொண்டாட்டி இனி அவ இவன்னு மரியாதை இல்லாம பேசுன மூஞ்சு முகரை பேத்துடுவேன்..ஆமாண்டா நான் மிரட்டி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் இப்போ என்னங்கற?” என கெத்தாக சட்டைக் காலரைத் தூக்கி விட்டான் நந்தன். 

“ஒரு பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணிருக்கியே உனக்கு வெட்கமா இல்ல” 

“இல்ல அவளுக்காக எதுவும் செய்வேன்” என்றவன், “இனி அண்ணின்னு மரியாதையா கூப்பிட்டு பழகு” 

“என்ன மிரட்டிருப்பன்னு எனக்கு தெரியும்டா, பாரு உன்னையும் அவளையும் பிரிச்சிக்ல என் பேர் யுகி இல்லடா” என்றவனை மார்த்தாண்டம் அறைந்திருந்தார். 

"அப்பா.' 

“என்னடா என் முன்னாடியே என்ன பேச்சு பேசற. நேத்து தான் கல்யாணமாகி இருக்கு பிரிக்கிறேன் அது இதுன்னு. ச்சை இப்படி தான் பசங்களை நான் வளர்த்துனேனாடா. ஒழுக்கமா இருக்கப் பாருங்க கேவலம் ஒருப் பொண்ணுக்காக எந்த ஸ்டேஜ்ல இருக்கோம்ன்னு கூட இல்லாம தெரு நாய்ங்க மாதிரி ரெண்டுபேரும் சண்டைப் போட்டுக்கறீங்க என மார்த்தாண்டம் நந்தனைப் பார்த்து சத்தம் போட.. நந்தன் வெளியே சென்று விட்டான். 

அவன் போனதும் வளவன் ஷாலினி மணி மூவரும் உள்ளே வர. 

“என்னடாச்சி” என யுகியின் தோளில் கையைப் போட்டு வளவன் அழுத்தினான். 

கையை தட்டி விட்டவன் “ஒன்னுமில்ல பிரியா இருந்தா என்னைக்கொண்டு வந்து விடு”.  

“ம்ம்ம் ஷாலு நீ வீட்டுக்குப் போ நான் ஒருமணி நேரத்துல வந்துடறேன்” என ஷாலினியை வைத்துவிட்டு யுகியை அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றான். 

"என்ன யுகி.?" 

“வளவா எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணி தரியா.?” 

“என்னனு சொல்லு”

"நான் அவளை விரும்புவது யாருக்கும் தெரியக் கூடாது." 

“டேய்....” 

“வேண்டா அவ எனக்கு ஒரு அம்மாவா இருந்துருக்கா.. அந்த ஸ்தானத்தை கொச்சைப் படுத்த விரும்பல, நான் விரும்புனேன்னு தெரிஞ்சா கண்டிப்பா அவ பழைய மாதிரி எங்கிட்ட பழக மாட்டா. எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுது, என்னை மாத்திட்டு கண்டிப்பா திரும்ப வருவேன்.அப்போ அவ இப்போ இருக்கற அன்போட என்னைய அரவணைச்சிக்கணும் அதுக்கு எதும் தெரியாம இருக்கனும். ப்ளீஸ்டா” 

“நான் சொல்லமாட்டான் அத்தை சொல்லிட்டா” 

“அவங்க சொல்லமாட்டாங்க” என்றவனுக்கு மணியின் பாரபட்ச அன்பை நினைத்து விரக்தி புன்னகை தான் தோன்றியது. 

“விடுடா அவங்க நந்து இவ்வளவு நாள் பேசலையேங்கற கவலையில செஞ்சிப்பாங்க.நீ குறை சொல்லணும்னா உன் அண்ணன் மேலதான் சொல்லணும். எல்லோர் வாழ்க்கையிலும் விளையாடிட்டான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டான், இவனலாம் உனக்கு எப்படி அண்ணனா பொறந்தானோ?” என வளவன் குறைப்பட்டுக்கொண்டான். 

கார் ரயில் நிலையத்திற்குள் நுழைய. “வளவா நான் சொன்னதை நியாபகம் வெச்சிக்கோ நிலாவுக்கு மட்டும் கடைசி வரைக்கும் தெரியக் கூடாது” 

“நான் சொல்ல மாட்டேன் நீயே சொல்லிடுவ..” 

“நானா” 

“பின்ன பூனை பூனைன்னு கொஞ்சிட்டு சுத்திட்டு இப்போ வார்த்தைக்கு வார்த்தை நிலா நிலான்னு சொன்னா அவளுக்கே சந்தேகம் வந்து நோண்ட ஆரம்பிச்சிடுவா, நீ எப்பையும் போலவே இரு” 

“அதுக்கு தான ட்ரைப் பண்றேன் என்னால முடியலையே.” 

“புதுசா உனக்கு சொல்லணும்னு இல்ல அவ சந்தோசத்துக்காக உன்னோட வாழ்க்கையை விட்டுக் குடுத்துட்டு நிற்கறவன். எதுக்காக அதைப் பண்ணியோ அதை நீயேக் கெடுக்கப் போறப் பாரு.” 

இல்ல அப்படிலாம் பண்ண மாட்டேன்”. 

“அப்போ அவகிட்ட எப்பையும் போலவே இரு. உனக்கு ஒரு லைப் இருக்கு அதை லீட் பண்ணப் பாரு” என்றவன் “சீக்கிரம் வந்துடுடா நீ இல்லாம என்னாலயும் இருக்க முடியாது” என்றான் யுகியை கட்டித் தழுவி  

“ம்ம்ம் சீக்கிரம் வரேன்” என்றவன் பையைத் தூக்கிக் கொண்டுப் போக.. பை கனமாக இருந்தது. 

“என்ன இவ்வளவு வெயிட்டா இருக்கு,?நாலு டிரஸ் தானே எடுத்து வெச்சேன் என்று பையை திறந்து பார்க்க அனைத்து உணவு பதார்த்தங்கள். சண்டை நடந்துக் கொண்டிருந்த இடைவெளியில் நிலா அவன் பையை நிரப்பி விட்டாள்.



Leave a comment


Comments


Related Post